ரா.கிரிதரன் குறுங்கதைகள்

இதயத்துடிப்பு தூரம்

மரணத்துக்கும் உயிர்ப்புக்கும் ஒரே ஒரு இதயத்துடிப்புத்தூரம் தான் உள்ளது என என் தாத்தா கூறுவார். உப்பளம் திடலுக்கு அருகே இருந்த மயானத்தில் நாளை மதியம் மூன்று மணிக்கு அடக்கம் செய்யப்போகிறோம். சொந்தங்களும் நண்பர்களும் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த வேண்டும். அதை அவர் மிகவும் விரும்புவார்.  அவர் முந்தாநாள் இரவு பதினொறு மணி அளவில் இறந்தார். எல்லாரும் வீட்டருகேயே இருந்தது வசதியாகப் போனது. அவர் காலை எட்டு மணிக்கு  மீண்டும் இறந்தார்.  அப்போது அவர் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும் நேரம் கூட ஆகவில்லை என பக்கத்து வீட்டு பாத்திமா சொன்னாள். அவள் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிவிட வாசலுக்கு வரும்போது தாத்தா எப்போதும் முழுவதுமாகப் போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருப்பாராம். இன்று காலை அவர் மீது எவ்விதமான போர்வையும் இல்லை.  மூச்சும் இல்லை என்றாள். பத்தரை மணி அளவில் அவர் மீண்டும் இறந்துவிட்டதாக பாவாடை சாமியார் தெருவிலிருந்து வரும் இஸ்திரி போடுபவர் கூறினார். இஸ்திரி வண்டியோடு அவர் தெருவுக்குள் நுழையும்போது எப்போதும் முதல் ஆளாக டீ குடித்தபடி நலம் விசாரிக்கும் தாத்தா அன்று படுக்கையிலேயே இருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் முன்னாடி பாத்திமாவுடன் பேசியதாகச் சொன்னாராம். இஸ்திரி போட்டுவிட்டுத் திரும்பும்போது தாத்தா மூச்சில்லாமல் கிடந்தார் எனக் கூறினார்.

மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு முறையும் ரெண்டு மணிக்கு ஒரு முறையும் இறந்ததாக நர்சரி பள்ளிக்கூடத்து டீச்சர் மாலினி சொன்னாள்.  எப்படி ரெண்டு தடவை ஒருவர் இறக்க முடியும் எனக் கேட்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. ரெண்டரை மணிக்குள் குழந்தைகளை வீட்டில் சேர்க்காவிட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ஓடிவிட்டாள். ரெண்டு தடவை பிறக்க முடியும் என்பதை நர்சாக இருக்கும் அவளது அக்கா முன்னர் கூறியிருந்தாள். குழந்தைகள் முதுகில் அடித்து காலைப்பிடித்து தலைகீழாக்கியதும் அழும் குழந்தைக்கு ரெண்டு பிறப்பாம். 

எதுவாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் தாத்தாவை மயானத்தில் பார்க்கலாம். மூன்று மணிக்கு ஒரு முறை சிதைமூட்ட அவரது பிள்ளைகள் வந்துவிட்டனர். மீண்டும் அவர் இறக்கும்போது அடுத்தடுத்து சிதையைத் தயார் செய்துவிடலாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஆறு மணிக்கு மேல் மயானம் பூட்டப்பட்டுவிடும், அடுத்த நாள் பள்ளிக்கு மாலினி தயார் ஆக வேண்டும், இஸ்திரி போடுபவர் கரி வாங்க அடுத்த ஊருக்குப்போகணுமாம்.  சமையலறையில் எல்லாவற்றையும் ஒழித்துப்போட்டுவிட்டு விளக்கை அணைக்கும்போது பாத்திமாவுக்கு தாத்தா நினைப்பு வந்தது. நிச்சயம் அடுத்த நாளும் அவர் இறப்பார் எனும் நினைப்பில் நிம்மதியாகத் திரியைப் பின்னுக்கு இழுத்தாள்.


என்றும் எப்போதும்

நம் சுயவிருப்புத் தேர்வுகள் எப்போதும் நமக்கு முழுமையாகப் பிடிபடாது இருக்க வேண்டும் என நான் திடமாக நம்புகிறேன். அதில் ஒரு மாயத்தன்மை இருக்க வேண்டும்; நம் அடையாளத்தைப் போல, நம் எதிர்காலம் போல.  இப்படி ஒரு வரியை சிந்தித்தபடி வாசக்கதவுக்கு வெளியே குவிந்திருந்த கடிதங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன். பல நேரங்களில் இப்படித்தான் நல்ல வரிகள் மனதுக்குள் ஓடும்போது உடனடியாகக் குறிப்பு எடுத்துக்கொள்ளத் தோன்றும். அதன்படி ஒரு கடிதத்தின் பின்பக்கம் திருப்பி எழுதத்தொடங்கும்போது நான் நினைத்திருந்த வரி மறந்துவிட்டது. எல்லா கடிதங்களையும் மேஜை மீது வீசிவிட்டு சமையலறையில் மிச்சம் வைத்த காப்பி கோப்பையை எடுத்து சோபாவில் உட்கார்ந்தேன்.

சிகப்பு நிறத்தில் இருந்த ஒரு கடிதம் என்னை மீண்டும் எழச் செய்தது. அரசு நிறுவனத்திலிருந்து வந்திருந்த கடிதம்.

எங்கள் முதல்தரமான தொழிலாளிக்கு,

உங்கள் விருப்ப ஓய்வு நாட்களை மகிழ்வாகக் கழித்துக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்.  பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். 

நம் அரசு சில புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அனைத்தும் தொழிலாளிகளுக்கு அத்தியாவசியமானவை என்பதை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இப்போது ஓய்வில் இருந்தாலும் உங்கள் நலனில் நாங்கள் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்; அதுதான் எங்கள் தாரக மந்திரம். 

நாங்கள் புதிதாக உருவாக்கியிருக்கும் திட்டப்படி நம் அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த அனைத்துத் தொழிலாளிகளையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க ஆசைப்படுகிறோம். இதன்படி வேலை சார்ந்த உங்கள் மூளை, நினைவுகள், திறமைகள் எல்லாமும் சாகாவரம் பெற்றவை ஆகிவிடும். உங்கள் ஞாபகங்கள் நிரந்தரமாக சேமிப்பதன் மூலம் வருடத்துக்கு மூன்று முறை உங்களால் அவற்றை மீட்டுப்பார்த்து மகிழ முடியும். எங்கள் புது தொழில் முனைவோர்கள் உங்கள் திறமையைப் படித்து மிக விரைவாக உங்களைப் போன்ற திறமையான தொழிலாளியாக உருவாகிவிடுவர். அது மட்டுமல்லாது  உங்கள் நினைவுகள் அழிவில்லாத இடத்தில் சேமிக்கப்படுவதால் உங்கள் சந்ததியினரால் எப்போது வேண்டுமானாலும் உங்களோடு உரையாட முடியும். எதிர்காலத்தில் வீட்டு விசேஷங்களுக்கு உங்கள் முப்பரிமாண வடிவை நாங்கள் அனுப்புவதன் மூலம் நீங்கள் நேரடியாக பங்குபெற முடியும். இது நிரந்தர மகிழ்வுக்கு வழிவகுக்கும்.  உங்கள் நண்பர்களோடும் குழுவினரோடும் நிரந்தரமாகப் பேசி மகிழ முடியும்.

இந்த புது சேவை இப்போது  தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த வருடத்திலிருந்து இது அனைவருக்கும் கட்டாயமாக்கும்படி சில சட்ட நிபுணர்களுடன் எங்கள் தலைமைக்குழு பேசி வருகிறார்கள்.  அந்த மகிழ்வான நாளுக்காக உங்களைப் போல நாங்களும் காத்திருக்கும்.

நன்றி

டிஜிட்டல் அரசு

கடிதத்தை மடித்து வைத்தபின்னர் என் மடிக்கணினியைத் திறந்தேன். கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் எங்கோ எதிரொலிப்பது போலத் தோன்றியது. என் கணினியில் சேமித்து வைத்திருந்த குடும்பப்படங்களைப் பார்த்தேன்.  என் முதல் நாய் டெடி, இறந்துபோன மனைவி, எங்கள் ஐம்பதாவது திருமண நாள் பார்ட்டி, பெண்ணின் திருமணப்படங்கள் என ஒவ்வொன்றாய் என் முன்னே வந்துபோனது. மனம் மிகவும் இலகுவானது. இவை அனைத்தும் எப்போதும் நிரந்தரமாக என்னுடனேயே இருந்துவிடும் நாட்கள் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தேன்.  இறக்கும் போது என்னையே பார்த்திருந்த மனைவியின் முகம் நிழலாகத் தோன்றியது.

என்னுடைய சுயத்தேர்வில் ஒரு மாயத்தன்மையேனும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் விரும்பியவனான நான் என் மூளையிலிருந்த ஞாபகங்களை நிரந்தரமாக அழித்துவிட்டு என் மீளுருவாக்கப் பொத்தானை அழுத்திவிட்டு காத்திருந்தேன்.


இயற்கைக்குத் திரும்புதல்

டாக்டர் சிவகடாஷம் அறையில் இருந்த குறைவான வெளிச்சத்தையும் தாண்டி அந்த பொன்னிற மாத்திரை ஜுவளித்தது.

‘இதை சாப்பிட்டா உடனடியா ஆங்கிலம் மறந்திடுமா?’

‘ஆங்கிலம் மட்டும் இல்லை பஞ்சு உன்னோட தாய் மொழி தவிர எல்லாமே மறந்திடும்’

சிவகடாஷத்தின் ஆராய்ச்சியை ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து வந்தாலும், பஞ்சு என்ற பஞ்சாபகேசனால் அதை நம்ப முடியவில்லை.

‘அது எப்படி டாக்டர்?’

‘இன்னுமாடா என் மேல ஒனக்கு நம்பிக்கை வரலை. உன்னோட சுயம் முழுக்க தாய்மொழியினால மட்டுமே உருவானது. அப்பப்ப கொஞ்சம் புறச்சூழலும் உதவியது. சின்ன வயசுல அம்மாகிட்ட பால் குடிக்கத் தொடங்கினது முதல் பத்து மாசம் வரை தாய் மொழி, அதன் சத்தம், சந்தம், ஒலி அளவு அதையெல்லாம் கொண்டு தான் நம்மோட ஆழ் பிரக்ஞை உருவாகுது.’

‘இதெல்லாம் நிரூபணம் செஞ்சுட்டாங்களா என்ன?’

‘பின்ன? நானா இதெல்லாம் சொல்லல. மொழி ஆய்வாளர்கள் குழந்தையின் சுயம் உருவானதை ரொம்பவே நுணுக்கமா ஆய்வு செஞ்சு இதைக் கண்டு பிடிச்சாங்க’

‘அப்ப நீங்க இதையெல்லாம் கண்டுபிடிக்கலியா?’, குஞ்சுவின் முகம் தொங்கியது.

‘உங்க அப்பனை மாதிரியே இருக்கியே! நான் மேல் நாட்டு மொழியியலாளர்கள் செஞ்ச ஆராய்ச்சிக்கு ஒத்துப்போறா மாதிரி ஒரு மாத்திரை செஞ்சிருக்கேன். ஹைதராபாத் ரெட்டி லேபில் சக்ஸஸ்ஃபுல்லா சோதனை செஞ்சுட்டாங்க. ஆனால் நம்ம நாட்டு மெடிக்கல் பாலிசிபடி ரெண்டு வருஷம் சோதனை செஞ்ச பின்னாடிதான் மார்கெட்டுக்கு வரும்’

‘அப்ப அதுவரை?’

‘அந்த ரெண்டு வருஷம் ஒரு கண்துடைப்புடா. மாத்திரைல ஒண்ணும் மாத்த மாட்டாங்க. எப்படி இத வெச்சு பணம் பண்ணலாம்னு தனியார்கிட்ட கேட்டு டெண்டர் விடுவாங்க. அதப்பத்தி நமக்கென்ன?’

‘இனிமே எல்லாமே தனியார் மயமாகிடும்னு சொல்றாங்களே, அதுதான் நரசிம்மராவ் திட்டமாம்’

‘இருக்கலாம். ஆனால் அப்படி ஆச்சுன்னா எனக்கு வர்ற கொஞ்ச பணமும் வராது. நிறைய ஷரத்துகளைப் போட்டு தனியார் கம்பெனி என்னோட பேடண்டை வாங்கிடுவாங்க. அது வரும் போது பார்த்துக்கலாம்.’

‘அது சரி டாக்டர், இது எப்படி வேலை செய்யும்னு சொல்லுங்களேன்’

‘ரொம்ப சிம்பிள். நாம தமிழ் தவிர ஹிந்தி, இங்கிலிஷ், தெலுங்குனு நிறைய கத்துகிட்டதால புறச்சூழல கவனிச்சதால அனுபவங்களாலையும், நம்ம ஆழமான பிரக்ஞை மேல பல மாயை பூச்சு இருக்கு. கசடுகள் மாதிரி. இப்ப நீ ஒரு எழுத்தாளன் இல்லையா? நல்லா ஆழ்மன உணர்ச்சிகளை எழுதணும்னா பல மொழிச் சிடுக்குகள் தாண்டி வரணும். அப்படி வர்றத்துக்குள்ள பலவித குழப்பங்கள் உருவாகி நீ எழுத நினைச்சது பேப்பரில் வராது’

‘ஆமாம் டாக்டர்’

‘என்ன ஆமாம்? இப்ப உனக்கு ஒரு சாக்கு கெடைச்சதில்லை. இந்த பிற மொழியெல்லாம் அழுக்குன்னு வெச்சிக்கோ. உன்னோட பிரக்ஞையோட நேரடியா ஒரு பைப் போட்டா ஆழமான இருக்கிற வடிவங்களுக்கு அழகா ரூபம் கொடுக்கலாம். நீ பெயிண்டர்னு வெச்சிக்கோ, மிக தத்துரூபமா படம் வரைவ. இசைக்கலைஞன்னா இயற்கைக்கு ரொம்ப நெருக்கமான கணக்குகளை இசையில் போடுவே. கவிதை எழுதறவன்னா சொல்லவே வேண்டாம்….அப்படி தடையே இல்லாம பிரவாகம் மாதிரி வருண்டா!’

என் மனம் எங்கெங்கோ சென்றுவிட்டிருந்தது. இனி எதுவும் என்னைத் தடை செய்ய முடியாது. இஸ்மாயில், பெருமாள், கிருஷ்ணன், ஸில்வியா என எல்லா எழுத்தாளர்களையும் தாண்டிச் சென்றுவிடுவேன்.

‘டாக்டர் உடனடியாகக் கொடுங்க. இதைக் கேட்கும்போது டானிக் குடிச்சா மாதிரி இருக்கு’

‘இதோட சைட் எஃபெக்ட் எல்லாம் கேட்க மாட்டியா? அப்பா மாதிரியே! ‘

‘சைடு எஃபெக்டா?’

‘ஆமாண்டா, முதல்ல ஒரு 72 மணிநேரம் கும்பகர்ணன் மாதிரி தூங்குவ, அப்புறம் உடம்புல எல்லா நீரும் வத்திப்போகும், நரம்பெல்லாம் இழுக்கறா மாதிரி ஆகும், பார்வை கொஞ்சம் மங்கும், சில பேருக்கு கால் முட்டி ஒரு பக்கமா மடங்கலாம், நாக்கு உலரும். ஆனால் இதெல்லாம் அஞ்சு நாளைக்குத்தான். அப்புறம் புது ரத்தம் பாய்சினா மாதிரி பிரஷ்ஷா ஆயிடுவே!’

‘உடனே கொடுங்க டாக்டர்.’

‘இந்த ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்து போடு, அப்புறம் இதை வாயில போடு’

குளிர் காற்று பட்டது போல மெல்ல உடல் சிலிர்ப்பதை உணர்ந்தான் பஞ்சு. டாக்டரின் அறை மங்கலாகத் தெரிந்தது. கட்டிலோடு சேர்ந்து அறையும் பறப்பது போலவும்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு புட்டிப்பாலை விடுத்து தாய்ப்பால் மட்டுமே எதிர்பார்க்கும் வளர்ந்த குழந்தையாக சதா அழுதபடியே படுக்கையில் கிடந்தான் பஞ்சு.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ரா.கிரிதரன் குறுங்கதைகள்”

Leave a Reply to Aekaanthan ஏகாந்தன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.