தோல்பாவைக் கூத்து என்ற கலையையும், அதை நிகழ்த்தும் கலைஞர்களையும் மையமாகக் கொண்டு எழுதிய நாவல் ”ராவண நிழல்” ஆகும். இது முறையான கள ஆய்வுகளை மேற்கொண்டு மூன்று ஆண்டு கால உழைப்பில் உருவானது. இது காவ்யா பதிப்பகத்தின் வெளியீடு ஆகும்.

நாகர்கோவிலைச் சார்ந்த எழுத்தாளர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், பேராசிரியர் திரு. அ. கா. பெருமாள் அவர்கள் இந்த நாவல் எழுத வழிகாட்டியாக இருந்தார்கள். இந்த நாவலில் திரு.அ.கா.பெருமாள் அவர்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
”ராவண நிழல்” நாவல் 2024 ஆம் ஆண்டிற்கான ”சௌமா இலக்கிய விருது” பெற்றுள்ளது.
அத்தியாயம் – 4
தோல்பாவைக் கூத்தில் பயன்படுத்தப்படும் படங்கள் ஆரம்பத்தில் மான், வெள்ளாடு, செம்பிலி ஆடு ஆகியவற்றின் தோலில் வரையப்பட்டன. மான் வேட்டை தடை செய்யப்பட்ட பின் ஆட்டின் தோலில் மட்டுமே படங்கள் வரையப்பட்டன. இப்போது தோலின் பற்றாக்குறையால் அட்டைகளிலும் படங்கள் வரையப்படுகின்றன. ஆட்டுத் தோலில் மெல்லிய மேல் தோல், தசைகளால் ஆன இடைத்தோல், கொழுப்புத் தசையாலான உள்தோல் என மூன்று அடுக்குகள் இருக்கும். இவற்றில் தசைகளால் ஆன இடைத் தோலைப் பதப்படுத்திப் படங்கள் வரையப்படுகின்றன.
அந்தக் கடைசி வெள்ளியின் நள்ளிரவில் மயானத்தின் அமைதி பீதியைக் கிளப்பியது. ஆனால் கணிகர்களுக்கு எவ்வித பயமும் இல்லை.

எல்லோரும் மயானத்தின் ஒரு இடத்தில் கூடியிருந்தனர். அங்கே புல்தரையை வெட்டிச் சமமாக்கித் தளம் அமைத்து அதில் ஓலைப் பாயை விரித்தனர். பாயின் ஓரத்தில் தண்ணீர் நிரம்பிய ஒரு செம்புப் பாத்திரத்தை வைத்தனர். அதை அம்மனாகக் கருதி அதன் முன் மந்திர ஏடுகளையும், உடுக்கைகளையும் வைத்தனர். அம்மனுக்கு கருப்பட்டி கலந்த வேப்பிலை உருண்டைகளைப் படைத்தனர். எல்லோரும் அம்மன் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர்.
ஒரு வயதான கணிகர் வேப்பிலை உருண்டைகளை எடுத்து எல்லோருக்கும் பிரசாதம் போல் கொடுத்தார். அனைவரும் அதைத் தின்று விட்டு தண்ணீர் குடித்தனர். பின்பு அம்மனை வணங்கி விட்டு தங்களின் ஏடுகளையும், உடுக்கைகளையும் எடுத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.
அவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்த சண்முகமும், ராஜுவும் சிவராவைப் பிடித்துக் கொண்டனர்.
“சட்டுவி ஆயி பூசையில உனக்கு என்னல வேலை?” என்று ராஜு கோபமாகக் கேட்டான்.
“அது கெடக்கட்டும். நீங்க இங்க எதுக்கு வந்தீங்க?” என்று சிவராவ் கேட்டான்.
’’நம்ம மண்டிகரு சாதிக்காரங்க சட்டுவி ஆயி பூசையை பண்ண மாட்டாவல்லா. மத்த கணிகருதானே கும்புடுவாவ. ஆனா நீ என்னடான்னா ராத்திரியில சுடுகாட்டுக்கு அவுங்க கூட போற. அதைப் பாத்துட்டுதான் பெறத்தாலயே வந்தோம்” என்று சண்முகம் கூறினான்.
”தெரியும்டே. நம்ம மண்டிகரு கும்புடமாட்டோம்.. கோந்தளா சாதியும், வாகுடரு சாதியும் கும்புடமாட்டாவ. கணிகருல மொத்தம் மூணு சாதிக்காரங்க இந்த அம்மனைக் கும்புட மாட்டாவ” என்றான் சிவராவ்.
“தெரியுதுல்லா.. பெறவு நீ ஏம்ல கும்புடுத?”
”இந்த மூணு சாதிக்காரங்க தவுத்து மத்த கணிகரு கும்புடுவாவல்லா?”
“அது அவுங்க தொழிலுக்கு வேண்டி கும்புடுதாவ. நீயும் கூடச் சேந்து கும்புட்டுட்டு கெடக்க. வேப்பிலை உருண்டை திங்க?. என்னல ராப்பாடியா போலாம்னு பாக்கியா?”என்று ராஜு எரிச்சலாகக் கேட்டான்.
“போனா என்ன தப்புங்கேன்?”
“ஏலேய் நீ மண்டிகன்லா. மத்த சாதிக்காரங்கதான் குறி சொல்லுவாவ. ஜோசியம் பாப்பாவ. உனக்கு எதுக்குல அது?“
“சேரி நான் என்ன செஞ்சி பிழைக்க?”
“வாடே வந்து பாவைக்கூத்து நடத்து. மண்டிகருக்கு அதான் தொழில்”
“நீங்க கொஞ்சம் துட்டு பாக்கீங்க. அதான் தெம்பா சொல்லுதீங்க. எனக்கு வரும்படி பத்தாமத்தான் இவுங்க கூடச் சேந்து ஜோசியம் பாக்கக் கிளம்பிட்டேன்”
“என்னடே இப்புடி சலிச்சிக்கிடுத?” என்று சண்முகம் கேட்டான்.
“நெசமாச் சொல்லு சம்முகம்?. உனக்கு இப்பம் ஆட்டுத்தோல் கிடைக்கா?”
“ஆட்டுத்தோல் கிடைக்கலைன்னா என்னா? அதான் அட்டையில வரைஞ்சிக்கிடுதோம்லா”
“அட்டையிலயா?. ஏலேய் தோல்ல வரையப் போய்தான் அதுக்கு தோல்பாவைன்னு பேரு. என்னமோ அட்டையில வரையுததை இம்புட்டு பெருமையாப் பேசுத. பவுசு கொழிக்க விசயமாடே இது?”
“ஆருடே பவுசு கொழிக்கா?”
”பின்ன போற போக்கைப் பாத்தா மண்டிகரு தோல்ல படம் வரையதை மறந்துருவாவ போலயே”
“வக்கணையா பேசுதல்லா. அம்புட்டு அக்கறை இருக்கவன் பாவைக் கூத்துக்கு வரணும்”
“ஏம்ல நானும் சோத்துக்கு சிங்கியடிக்கவா?”
“இல்லைன்னா அந்தால குறி சொல்லி கோடி கோடியா குமிச்சிருவ”
”ஏலேய் நினைச்சிக்கிட்டியோ. ராப்பாடியா ஆவுதது ஒண்ணும் லேசுப்பட்ட காரியம் கிடையாது”
“பாவைக்கூத்தும் லேசு கிடையாதுல”
“அவுங்களும் அம்மன் கோயிலுக்கு போய் ஆவாகனம் பண்ணி அருள் வாங்கிட்டுத்தான் ஜோசியம் சொல்லுதாவ”
“அதுக்குத்தான் சொல்லுதோம். உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாம எங்க கூட வந்துருல”
“மாட்டம்னா மாட்டேன்”
“ஏம்ல ராப்பாடியாப் போவேன்னு இப்புடி ஒத்தக் கால்ல நிக்க?” என்று ராஜு ஆங்காரத்தில் கேட்டான்.
“அய்யா சாமிகளா கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலை விரிச்சி ஆடிச்சாம். அது கணக்கால்லா இருக்கு நீங்க படுத்துத பாடு. ஆளை விடுங்க”
“சிவராவு சொன்னாக் கேளுடே. பாவைக்கூத்துக்கு வா”
“எங்க அய்யா கொஞ்ச நஞ்சமா கஸ்டப்பட்டாரு’’
”அது அந்தக் காலம்டே”
“அந்தக் காலம்ன்னு சொல்லாத சம்முகம். இப்பமும் என்னல வாழுது?. என்னமோ எனக்கு ஒண்ணுமே தெரியாதது கணக்கா ரெண்டு பயலுகளும் கதை விடுதீங்க?”
“பழசை நினைச்சிப் பேசாதல”
“பழசா.. சின்னப் புள்ளையில நான் பட்ட பாடு எனக்குதாம்ல தெரியும். நான் பேசாம ஜோசியம் சொல்லிப் பிழைச்சிக்கிடுதேன்” என்று கூறிவிட்டு சண்முகம் கூப்பிடக் கூப்பிடக் காதில் வாங்காமல் சிவராவ் சென்றான்.
அப்போது அவன் கண்கள் கலங்கியிருந்தன.
சிவராவின் அப்பா காலத்தில் தோலின் விலை கடுமையாகக் கூடிவிட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. பற்றாக்குறைக்கு ஏஜெண்டுகள் எல்லாக் கிராமங்களுக்கும் சென்று தேடிப் பிடித்து ஆட்டுத்தோல்களை வாங்கிச் சென்று விடுவர். கடைசியில் கணிகர்களுக்கு நோஞ்சான் ஆட்டுத்தோல் மட்டும்தான் கிடைத்தது. இதனால் கணிகர்கள் பலர் மிகவும் துன்பப்பட்டனர். அவர்களில் சிவராவின் அப்பா தோல்பாவைக்கூத்தையே நம்பியிருந்தார். தோல் கிடைக்காததால் கஞ்சிக்கு வழியின்றி செத்தார். இதைக் கூடவே இருந்து பார்த்ததால் சிவராவிற்கு பாவைக்கூத்தின் மேல் இனம் புரியாத வெறுப்பு இருந்தது.
“விடு சம்முகம்” என்று ராஜு சமாதானப்படுத்தினான்.
“என்ன சொல்லுதான் பாரு. அவன் அய்யா எப்பேர்ப்பட்ட ஆளு. என்னமா கூத்து நடத்துவாப்டி. புள்ளை இப்புடி தறுதலையாப் போயிட்டே”
“அவனைச் சொல்லியும் குத்தமில்லடே. பாவைக்கூத்துல வசமா துட்டு கிடைச்சா போவானா?. அவன் வயித்தையும் பாக்கணும்லா?”
“ராசு என்னடே இப்புடி பொசுக்குன்னு சொல்லிட்ட?”
“பாவைக்கூத்து கோயிலோட சேந்து இருந்துச்சின்னா நம்மளை எல்லா விசேஷத்துக்கும் கூப்புடுவாங்க. வருசம் பூராவும் வரும்படி இருக்கும். நம்மாளுங்களும் வேற தொழிலுக்குப் போகமாட்டாவ”
“அதுக்கு?”
”கோயில்ல கூப்புட்டு சொன்னாத்தான் நாலு காசு பாக்க முடியுது. இல்லைன்னா அதுவும் கிடையாது. பொறவு எப்பமாது வெளி ஆளுங்க கூப்புட்டா அங்க போய் கூத்து நடத்திக் காசு பாக்கோம். நிலையான வரும்படின்னு இல்லைல்லா. அதான் ஆளாளுக்கு பிச்சிகிட்டு போறாவ. ஒண்ணும் செய்யதுக்கு இல்லை சம்முகம்”
சண்முகம் எதுவும் பேசத் தோன்றாமல் நின்றான்.
நூல் குறித்த அறிமுகம்:
- நூல்: ராவண நிழல்
- பதிப்பகம்: காவ்யா
- ஆசிரியர்: இரா.சைலஜா சக்தி
- பக்கங்கள்: 491
- ஆண்டு: 2023
- விலை: Rs.540.00
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ராவண நிழல் – புதினம்”