ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்

எம்.டி.வாசுதேவன் நாயர் (1933- 2024)

1950, 60கள் – மலையாள இலக்கியத்தின் பொற்காலம் எனலாம்.  முகமது பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் போன்ற பெரும் எழுத்தாளர்கள் கோலோச்சிய காலம். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னான 1950 களில்  கற்பனை நவிற்சி மேலோங்கிய கவிதைகள், இலக்கியங்களில் மாறுபட்டு தனிமனித, சமூக விகுதிகளை தேடிய மலையாள மனப்பாங்கும்கூட. 

மறுபுறமாக அதுவரையில் கோலோச்சிய வமிசத்தினரான நம்பூதிரி,  நாயர்களின் வீழ்ச்சி தொடங்கிய காலமும். அரண்மனை போன்ற வீடுகளும், வேலையாட்களும் மறைந்ததுமன்றி அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி நடுத்தக் குடும்பங்கள் நலிவுற ஆரம்பித்த காலம். இடதுசாரி சித்தாந்தம் மலையாளிகளை ஈர்த்த காலமும்.

மலப்புரம் அருகில் கூடலூர் என்ற கிராமத்தில் பிறந்தார் எம் டி. எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் பிழையின்றி வாசிக்கமுடிந்தால் பண்டிதன், ஆடு மாடுகள் ஆற்றுக்குச் செல்லும்போது பயிர்களை கடிக்காமல் மேய்க்கத்தெரிந்தால் விவசாயி என்று தன் கிராமத்தைப் பற்றி கூறுகிறார். ஒரு பெரிய, பழைய நாயர் கூட்டுக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எம் டியின் தந்தை குடும்பத்தைப் பிரிந்து இலங்கைக்கு சென்றபின் தாய், பாட்டி மற்றும் குடும்பத்திலுள்ள பெண்களின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர்களிடமிருத்து ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களுடன் நலிந்துபோன நாலுகெட்டு, எட்டுகெட்டு தறவாட்டு வீடுகளின் கதைகளையும் கேட்டு வளர்ந்தார். 

1954ல் பாலக்காடு விக்டோரியா கல்லூரி நாட்களில் நடந்த உலக சிறுகதைப்போட்டியில் பங்கேற்று, ஒரு சர்க்கஸ் கலைஞனின் வாழ்க்கையையொட்டிய ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்காக பரிசை வென்றதன் மூலம் மாடத்து தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர் எனும் எம் டி இலக்கிய உலகுக்கு அறியப்படுகிறார். பின்னாளில் இக்கதை திரைப்படமானது. அன்றைக்கு பிரபலமாக வெளிவந்த, மாத்ருபூமி, கௌமுதி மற்றும் சென்னையிலிருந்து வெளிவந்த வீரகேரளம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதி கல்லூரியிலும், இலக்கிய உலகிலும் மேலும் பிரபலமானார். கல்லூரிப்படிப்பு முடிந்தபின் ட்யூடோரியல் கல்லூரியில் வேதியல் ஆசிரியர், பின் கிராமசேவகர் போன்ற பணிகளில் இருந்தவர் அவற்றினின்று விலகி மாத்ருபூமி வாரஇதழில் 1957ல் துணை ஆசிரியர் பணியிலமர்ந்தார். மாத்ருபூமியில் வார இதழாசிரியராக உயர்ந்து அப்பத்திரிக்கையில் பல பொறுப்புகளை வகித்து கடைசியாக 1999ல் விலகினார்.

1957ல் ஒரு நாயர் குடும்ப இளைஞன், குடும்பத்தை மீறி மணம் புரிந்ததினால் விலக்கி வைக்கப்படும் இவரின் முதல் நாவலான நாலுகெட்டு வெளிவந்து கேரள சாஹித்ய அகாடமி விருதைப்பெற்றது. இவ்வருடத்திலேயே மற்ற புகழ்பெற்ற நாவலான ‘பாதிராவும் பகல்வெளிச்சவும்’ வெளிவந்தது. பின்னாளில் இந்நாவல்கள் திரைப்படமாயின.

கதை வடிவமைப்பில் நாவல்களைக்காட்டிலும் சிறுகதைகளே தனக்கு உகந்ததென்று குறிப்பிடுகிறார். மறு நோக்கில், அவரது நாவல்களில் சில இடங்களில் தொய்வைக் காண்பதை அதன் காரணமாகச் சொல்கிறார். சிறுகதைகள், எழுத ஆரம்பிக்கும் முன்பே கச்சிதமான வடிவமைப்பை கொண்டுவிடுவதால் எக்காலத்திற்கும் அதன் தன்மை குன்றாது நிலைப்பதாகச் சொல்கிறார். எம்டியின்  இலக்கியப்படைப்புகள், 10 நாவல்கள், 23 சிறுகதைத்தொகுப்புகள், ஒரு முழுநீள நாடகம், எண்ணற்ற நினைவுக்குறிப்புகள், பயணக்கட்டுரைகள், 54 திரைக்கதைகள் கொண்ட ஒரு மாபெரும் இலக்கிய உலகம். ஒரு நான்கைந்து தலைமுறை வாசகர்களை ஈர்த்து உள்ளடக்கியது. 

கேரள வள்ளுவ நாட்டிலும், நிளா நதிக்கரையிலும் உலவிய மனிதர்களே அவரது அனைத்துப் படைப்புகளிலும் கதைமாந்தர். ஒரு கதையையோ அல்லது அதன் மாந்தரையோ வேறெங்கும் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. ஒருகூட்டுக்குடும்பத்தில் அன்னையரின் வளர்ப்பில் வளர்ந்த எம்டி, நலிந்த நடுத்தரக்குடும்பங்களின் ஆண்கள் வழியறியாது தவித்து நின்றபோது தைரியமாக நின்று சவால்களை எதிர்கொண்ட பெண்களைக் கண்டும் அவர்களின் கதைகளை அறிந்துமிருந்தார். இப்பெண்கள் அவரின் எல்லாப் படைப்புகளிலும் இடம் பெற்றனர். உதாரணமாக, காலம் நாவலின் சுமித்ரா, நிர்மால்யத்தில் வெளிச்சப்பாடின் மனைவி நாராயணி, ரண்டாமூழத்தில்(இரண்டாம் இடம்) குந்தி என ஒவ்வொரு கதையிலும் காணலாம். மாற்றாக, அவரின் பல கதைகளின் ஆண்பாத்திரங்களும், ரண்டாமூழத்தில் பாண்டவர் குடும்பத்தின் அனைத்து ஆண்களும் போர்க்களத்தில் அபிமன்யு, கடோத்கஜன் போன்ற தம் பிள்ளைகளை பறிகொடுத்து செய்வதறியாது கையறு நிலையிலிருப்பவராக இருப்பதையும் காணலாம்.

கற்பனாவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியலிஸம் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட பாணியிலும் அமையாமல், கதைகளை அவற்றின் ஒழுக்கில் சொல்வது எம்டியின் தனிப்பாணி. சங்கிலியில் பிணைக்கப்பட்டு, ஊரே கண்டு அச்சுறும் பைத்தியமான வேலாயுதன், பசிக்கும்போது சங்கிலியைத் தளைத்து தன் வீட்டின் முற்றத்தில் நின்று அவரது தாயாரிடம் சாதாரணமாக உணவு கேட்டு உண்டு செல்லும் காட்சியைக் கொண்டு பிறந்த இருட்டிண்டே ஆத்மாவையும், கருத்த நிறமுள்ள, மணக்க யாரும் வராத, மீனாட்சி அக்கா தன் காது தோடுகளை கத்தி கொண்டு அறுத்து காதறுந்த மீனாட்சியாக தோன்றும் குட்டியேடத்தியையும் குறிப்பாகச் சொல்லலாம். 

“வாழ்க்கைப்பிரவாகத்தில் கண்டும் கேட்டுமறிந்த சம்பவங்களிலிருந்து தனக்கு வேண்டியதென்னவென்று தேடி அடைந்து தன் சொந்த அனுபவத்தில் எது சரியென்று தோன்றும் தருணத்தில் மட்டும் ஒரு நல்ல கலையும் கலைஞனும் பிறக்கிறார்கள்.” –  எம்டி(1997)”

1995 ல் இந்திய இலக்கிய உச்ச விருதான ஞானபீட விருது தொடங்கி எம்டிக்கு  இலக்கியத்திற்காக அளிக்கப்பட்ட தேசிய, மாநில விருதுகளின் பட்டியல் மிகநீண்டது.

எம்டி எழுத்தில் ஒரு மிகப்பெரிய உலகை உருவாக்கி அளித்திருப்பினும், அதே அளவில் சினிமாவிலும் ஒரு மாபெரும் கதைசொல்லியாக இருப்பது மிகவும் அரிதான ஒன்று. 1973ல் எம்டி தயாரித்து இயக்கிய முதல் படமான நிர்மால்யம் அவ்வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து 2000 வரை மொத்தமாக ஒன்பது படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அவரின் சொந்தக்கதைகள் மட்டுமின்றி எஸ்கே. பொற்றேக்காடு, தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரீரமணாவின் கதைகளும் அடங்கும். இன்றும் மிக முக்கியமாகப் பேசப்படும் நிர்மால்யம், சமூகப்பிரச்சினையை பேசுவதோடன்றி தனி மனித நம்பிக்கைக்கும் அவனது வாழ்க்கைப் போராட்டத்திற்குமான முரணையும் சித்தரிக்கும் படம். இப்படத்தில் பகவதிக்கும் பக்தர்களுக்குமிடையேயான  வெளிச்சபாடு எனும் சாமியாடியாக மிக அருமையாக நடித்திருந்த பி.ஜே.ஆண்டணி, அவ்வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இப்படத்தைப் பலமுறை போற்றியுள்ள நடிகர் கமலஹாசன்,கதைசொல்வதை தனக்கு நன்குணர்த்திய படமாகக் கூறுகிறார்.

மலையாள சினிமாவுக்கு எம்டியின் மாபெரும் பங்களிப்பதென்பது அவர் இயக்கிய படங்கள் தவிர 54 படங்களுக்கு திரைக்கதையெழுதியது. அவை அனைத்துமே மிகப்பிரபலமான, வெற்றியடைந்த படங்கள். எம்டியின் படங்கள் திரைக்கதைக்காக 4 முறை தேசியவிருதும், எண்ணற்ற கேரள மாநில, சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளன.

எம்டியின் கச்சித வடிவுகொண்ட சிறுகதைகள் ஐ.வி.சசி, சேதுமாதவன், சிபி மலயில், சத்யன் அந்திக்காடு, பரதன் உள்ளிட்ட பல மலையாள முண்ணனி இயக்குநர்களின் இயக்கங்களில் வெற்றி பெற்ற திரைப்படங்களாயின. கேரள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ப்ரேம் நசீர், சுகுமாரன்,மம்மூட்டி, மோகன்லால் எம்டியின் கதைகளில் நடித்த பிரபலமான படங்கள் பல. ப்ரேம் நசீர் நடித்த அசுரவித்து, இருட்டிண்டே ஆத்மாவு, சுகுமாரன் புதுமுகமாக நடித்த நிர்மால்யம், பின் எம்டி எழுதி இயக்கிய பந்தனம், வாரிக்குழி படங்களை மிக முக்கியமானதாகக் கூறலாம்.

உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லாலின் பிரபலமான ஆரம்பகால படங்கள் பலவும் எம்டி இயக்கத்திலோ அல்லது அவர் கதை, திரைக்கதையிலோ உருவானவையே. மம்மூட்டியின் சினிமா வளர்ச்சியில் எம்டி ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது மிகையானதல்ல. மம்மூட்டி எம்டியின் மிக உணர்ச்சி மிக்க கதைகளில் நடித்து புகழ் பெற்றார் எனலாம். கருணன் என்னும் மீனவனாக நடித்து 1984ல் எம்டி கதையில் வெளிவந்த அடியொழுக்குகள் மம்மூட்டிக்கு கேரள மாநில விருதினைப் பெற்றுத்தந்தது. இப்படம்  வண்ணக்கனவுகள் என்ற பெயரில் மறுஇயக்கத்தில் தமிழில் வெளிவந்தது. அதே வருடத்தில் எம்டியின் கதை/திரைக்கதையில் மம்மூட்டி நடித்து வெளிவந்த ‘ஆள்கூட்டத்தில் தனியே’ திரைப்படம், குடும்ப சூழலால் படிக்க உதவி செய்து ஆளாக்கிய தன் காதலியை தவிர்த்து, வெளிநாட்டில் மேற்படிப்புக்குச் செல்வதை கனவாகக் கொண்டுள்ள தன் மேலாளரின் மகளை மணந்து, பின் அதே காதலி அவர் வீட்டிலேயே வேலைக்காரியாக வரும் கதை. பிரபல மலையாள கதை/திரைக்கதை/இயக்குனரான லோஹிததாஸ் இப்படத்தை கதை/திரைக்கதைக்காகவே இருபத்தி மூன்று முறை பார்த்ததாகக் கூறுவது இப்படத்தின் சிறப்பு.

1989ல் எம்டியின் கதை, திரைக்கதையில் வெளிவந்த, வட மலையாள நாட்டுப்புறப் பாடல்களின் நாயகப் பாத்திரத்தை ஒட்டி உருவான ஒரு வடக்கன் வீரகதா படம் மாபெரும் வெற்றி பெற்று மம்மூட்டியை கேரள திரை உலகின் உச்சநடிகராக்கியது. 1994ல் எம்டியின் திரைக்கதையில் ரத்தப் புற்றுநோய் பாதித்த பத்திரிக்கையாளராக நடித்து வெளிவந்த ’சுக்ருதம்’ மம்மூட்டியை இந்திய அளவில் அறியப்படவைத்தது. பின் நாட்களில் எம்டியின் திரைக்கதையில் வெளிவந்த ‘கேரளவர்மா பழசிராஜா’ மம்மூட்டியின் பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

1992ல் எம்டியின் கதை இயக்கத்தில் வெளிவந்த சதயம், மலையாள திரை உலகின் மற்றொரு உச்ச நடிகரான மோகன்லாலை ஒரு அருமையான நடிகராக அறியவைத்தது. மனப்பிறழ்வுற்ற ஒரு இளைஞன் நான்கு கொலைகளை செய்து தூக்குக்கயிறுக்கு காத்திருக்கும் கதை. அதே சிறையில் அக்கொலைகளில் கொலையுண்ட தன் மகனின் சாவுக்கான பழிவாங்கலில் அவ்விளைஞனின் சாவை ஆவலுடன் எதிர்நோக்கும் அச்சிறையின் மருத்துவ அதிகாரியின் உட்கதையயும் அடக்கியது.

1991ல் வெளிவந்த ஒரு திறன்மிகு மரத்தச்சனுக்கும், தந்தையின் சாதி நம்பிக்கைகளை மறுத்து, ராஜவம்சத்து நம்பூதிரிப்பெண்ணை விரும்பும் அவரது மகனுக்குமிடையேயான உணர்ச்சிப் போராட்டம். திலகனின் அற்புத நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் தமிழ் நடிகர் பிரசாந்த் மகனாக அறிமுகமானார். இப்படம் அவ்வருடத்திற்கான சிறந்த படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றது.

குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகியபின், தமிழ் நடிகர் கமலஹாசன் 1974ல் எம்டியின் கதையில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் சிற்பம் செதுக்கும் இளைஞனாக கன்னியாகுமரி படத்தில் நடித்து தமிழ் மற்றும் மலையாள உலகின் கவனத்தை வளர்ந்த நடிகராக அறிவித்தார்.

எம்.டி.வாசுதேவன் நாயர் இலக்கிய/திரைத்துறையில் பல புதிய உத்திகளை முன்வைத்தவர். அவரின் அடியொற்றி அவர் பாணியில் உருவானவர் மிகப்பலர்.  தமிழில் எழுத்தாளர்/திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் எம்டியின் அடியொற்றிய ஒரு மிகப்பெரும் உதாரணம். 

எம்டி தன் சொந்த செலவிலும், முயற்சியிலும் கேரளம் திரூரில் மலையாள மொழியின் தந்தை என்று அறியப்படும் துஞ்ஜத்து எழுத்தச்சன் பெயரில் நிறுவிய துஞ்ஜன்பரம்பு எனும் கலாசார மையம், இயல், இசை, நாடக வளர்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கான முக்கிய இடமாக கேரளாவில் அறியப்படுகிறது.

”வாழ்க்கை என்பது ஒரு பெரிய கேள்வி. என்றும் அக் கேள்வியை கேட்டுகொண்டேயிருப்பதென்பதே ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்” – எம்டி 1985

மாபெரும் கதைசொல்லியான எம்டி என்னும் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு அஞ்சலிகள்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.