புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்

ஒரு கதை அதனை எழுதியவரை விட்டு வாசகனை நோக்கி நகரும் வெளியில், அக்கதையின் ஆத்மா தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்கிறார் நகுல்வசன்.  கேட்பதற்கு ஏதோ புரிவது போலவும், அதே சமயத்தில் புரியாதது போலவும் இருக்கிறது.  மேற்பட்ட வாசகம், இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘கடவுளும் கேண்டியும்’ என்கிற கதையில் இடம்பெற்றிருக்கிறது.  பார்த்தவுடன், வாசகர்கள் தாவிக் குதித்து தாண்டி ஓடும் பாண்டி ஆட்டத்து கட்டங்கள் போலத்தான் நகுல்வசனின் புனைவுகள் சுவாரசிய முகப்புகளைக் கொண்டிருக்கின்றன.  ஆனால் அவை சட்டென முப்பரிமாண தோற்றம் கொண்ட புதிர் பாதைகளென (Mazes) நம்மை வெவ்வேறு திசைகளில் செலுத்துகின்றன.  திரும்பும் இடங்கள் எல்லாம் புதிய வாசல்களைக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் புதிர்பாதைகள்.

கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது.  ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார். 

அவ்வளவே ஆன விவரணையுடன் புதுமைப் பித்தனுக்கு தனது புனைவு வெளியில் கடவுளை ஒரு கதாபாத்திரமாக்கி விட முடிகிறது. அதை வாசகர்களாகிய நாமும், அப்படியே ஏற்றுக் கொண்டு கதைக்குள் புகுந்து விடுகிறோம். நம்பிக்கை மாறுபாடோ, பாரபட்ச கண்ணோட்டமோ எதுவுமில்லாமல் பிள்ளையவர்களின் அனுபவத்திலிருந்து, அவருடைய கடவுள் பிம்பத்தை நாமும் ஒற்றியெடுத்து அனுபவித்து, ரசித்து சிரித்து வைக்கிறோம். 

“உங்களுடனெல்லாம் கூட இருந்து வாழ முடியாது” என்று ஒட்டுமொத்த மனிதர்களைப் பற்றியும் அங்கலாய்த்து விட்டு மறைந்து போன கடவுளை விட, அவருடன் சமத்காரமாக பேசி ஜீவிய சந்தாவை வசூலித்து விடும் கந்தசாமியை விட, ஊருக்குப் போய்விட்ட தாத்தாவைக் கேட்டுக் கொண்டே எழுந்திருக்கும் குழந்தையிடம் ஒரு மகத்தான உணர்வுப் புள்ளியை பொதிந்து வைக்கிறார் புதுமைப்பித்தன். பிள்ளைக்கு வரும்படி ஒரு ஜீவிய சந்தா என்றால், நமக்கு வரும்படி அந்தக் கதையின் அங்கதமும், வாசிப்புச் சுவையும், தத்துவப் புலங்களும், இது போன்ற உணர்வு மையங்களும். 

1940-களில் கட்டிய ஆயுள் சந்தாவிற்கு இன்றுவரை ஒரு சஞ்சிகையும் கிடைக்கப் பெறாத கடவுள், கந்தசாமி பிள்ளையின் ஆயுர்வேத கட்டுரை ஒன்றைத் தேடி, பிள்ளையவர்களின் பேரனின் முன்பு, அதே பிராட்வே, எஸ்பிளனேட் சந்திப்பில் பிரசன்னமாகிறார். இம்முறை, இந்த எஸ்பிளனேடு சந்திப்பு, பாஸ்டனில் இருக்கும் எஸ்பிளனேடு ஆற்றின் ஓரமாக இருக்கிறது. பேரப்பிள்ளையான கந்தசாமி (அமெரிக்க சூழலுக்கென ‘கேண்டி’), மெய்நிகர் கணிணியியல் சஞ்சிகை நடத்துகிறான். படைப்புக் கடவுளுக்கென புதிய படைப்புலகங்கள் திறக்கின்றன. 

கதாசிரியர் நகுல்வசனை நாம் சென்றடையும் முன்னர், ஓர் இலக்கிய விரிவுரையாளரின் பெருநிழலை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. நுட்பங்கள், உத்திகள், பாணிகள் என்று திறமைமிக்க இலக்கிய வித்தகரின் உலகு அது. புதுமைப் பித்தனின் மூன்றாம் தலைமுறை கதைசொல்லிகளென செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சினாப்டிக் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக விவரித்து கணிணியையும் கண்ணீர் மல்க வைக்க முடியும் என்கிறார் நகுல்வசன். 

நியூரோ மேப் வழியே கடவுளின் நினைவு அடுக்குகளை படம் பிடித்து அவருடைய உயிர்த்தெழலை, அதன் வழியே அவர் கொள்ளும் விழைவை காட்சிப்படுத்துகிறார் கதாசிரியர். தாத்தா கந்தசாமி பிள்ளையுடன் தத்துவ விசாரம் நிறைவு கொள்ளாது, விடைபெற்றுச் சென்ற கடவுளுக்கு, பேரன் கேண்டியின் வி ஆர் (Virtual Reality) சோதனைகள் வழியே அவருடைய விழைவுகள் நிறைவு கொள்கின்றன.  கேண்டி ஜாக்கிரதையாக, தாத்தாவின் நண்பருக்கென ஆண்டு சந்தாவை மட்டும் பற்று வைத்து, கடவுளுக்கு நல்ல மனுஷன் என்று சான்றிதழ் அளிக்கின்றார். 

தமிழ் இலக்கியத்தின் ஒரு சிறந்த புனைவை அதன் உணர்வுபுள்ளிகளின் தாக்கங்களை அடையாளப்படுத்தி, அறிவியல் புனைவு வெளியில் அதற்கென ஒரு நீட்சியை உருவாக்கியவர், அடுத்து, செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் கொண்டு “இறைவர்க்கோர் பச்சிலை” சிறுகதையில் தி. ஜானகிராமனை பற்றிக் கொள்கிறார்.  

செவ்வியல் சங்கீதத்திற்கான அடிப்படைகளை கணிணிமயமாக்குவதோடு, பாடகரின் மனோதர்ம கூறுகளை இணைத்து கச்சேரி செய்யும் ஏஐ பாடுகள் (AI Bots) என்று சுவாரசியக் களம். மெள்ள மெள்ள மணி ஐயர், அரியக்குடி ராமானுஜர், முசிறி சுப்ரமணியம், மகராஜபுரம் விஸ்வநாதையர் என்று பிரபலங்களின் பிரத்யேக நுணுக்கங்களை, திஜாவின் பாணியில், ஆங்காங்கே அலாதியான வர்ணனை வடிவங்களில் தூவிக்கொண்டு வருகிறார்.  காருகுறிச்சியாரின் பிர்காவைப் பற்றிய குறிப்புடன் கணிணியுடனான விவாதம் அப்படியே அறிவியல் புனைவு வெளியில் நம்மை நேரடியாக இறக்கி விட்டுவிடுகிறது.  நல்ல குரல்வளமும், திடமான சாகித்ய பாடமும், ஸ்வரபிரஸ்தாங்களில் தீர்க்கமும், ராக லட்சணங்களின் பூரண ஞானமும், இன்னமும் பல சங்கீத நுணுக்கங்கள் கைவரப் பெற்றிருந்தாலும், பிரவாகமென நிகழும் பாடலுக்கென ஒரு தருணம் அமைய வேண்டியிருக்கிறது.  சங்கரனின் பிலச்சுடேவையும், வதஸி யதி அஷ்டபதியையும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆசிரியர் அமைத்து வைத்திருந்ததை வாசிக்க நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அந்த மனோதர்மத்தைத் தேடிச் செல்கின்ற சிஷ்யனுக்கு ஒரு சிறு உபதேசமென மோகமுள் பாபுவை உதாரணமாக காட்டுகிறார் சங்கரன்.  பாரம்பரிய செவ்வியல் கலைக்கும், முன்னேறிப் பாய்ந்து செல்லும் தொழில்நுட்ப பிரவாகத்திற்கும், யாவர்க்கும் ஒரு பச்சிலை கொண்டு பூஜிக்க வேண்டும் என்ற திருமூலரின் கூற்றைக் கொண்டு வழிபடுகிறார் ஆசிரியர்.  சங்கரன் தன் அகத்தில் ஒலிக்கும் ஆதார ஸ்வரத்தின் ரீங்காரத்துடன், இசைக்கு நெக்குருகி நிற்கும் மனைவியிடம் திருமந்திர வரிகளை முணுமுணுத்தபடி அமைதி அடைகிறார்.  அந்தக் கதையில்,  ஒரு சிறிய வரியில் ‘கைகளால் கடிதம் எழுதுவதில்’ இருக்கும் அலாதியான சுகம் பற்றி வருகிறது.  

அந்தப் புள்ளியை அப்படியே விவரித்துக் கொண்டு “அரூ அறிபுனைப் போட்டி #500” சிறுகதையில்.  நான்கு பகுதிகளாக, அறிவியல் நுட்பங்களின் கார்னிவெல் ஒன்றை நிகழ்த்துகிறார் நகுல்வசன்.  அதிவேக கணிணித் திறன் மானுடத்தை விஞ்சி, பூமியைக் கையகப்படுத்திய ஒரு காலத்தில், நுண்கிருமி தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட போதிலும், ஓர் எதிர்பாராத அபாயம் ஒன்று கனன்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.  அதிவேக கணிணிகள் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்ட காலத்தில், மூளைத்திறன் எனும் நுட்ப வேறுபாட்டிற்காக மானுடத்தனத்தை ஓர் அடையாளமாக மட்டும் கொள்ள, அதன் பக்கவிளைவாக பரந்து விரியும் கற்பனை வெளி எனும் வழுவை சீர் செய்வதாக  முடிகிறது அந்தக் கதை.

பாரம்பரிய கர்நாடக சங்கீத மரபு, தமிழிலக்கிய நுகர்ச்சியின் கிளர்த்தல்கள், இவற்றின் பின்னணி கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அறிவியல் புனைவு வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நம்மை, முற்றிலுமான வேறொரு அனுபவத்திற்குள் ஆழ்த்துகிறது “வூப்பிங்-பை’.  ஓர் அமெரிக்கக் குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு அசலான, யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான பதிவாக அமைந்திருந்தது.  நேரடி இந்தியப் புனைவுகளில் இதொரு குறிப்பிடத்தக்க முயற்சி.  பெக்மென் தம்பதியரின் வாழ்வில் ஒரு முக்கியமான காலக்கட்டம் அது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் மகனுடனான அவர்களுடைய நினைவு தொகுப்பு.  மகனுடைய பதினெட்டாவது பிறந்தநாளை சாக்காக வைத்து, தனக்குப் பிடித்த இசைத்தட்டுகளை, ஆடம்பரமான விலைக்கு தந்தை வாங்கி வருகிறார்.  இப்படித்தானே, பிள்ளைகளை முன்னிறுத்தி, அவர்களை மையப்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை சக்கரத்தை சுழல விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  டிம்மிக்கு பிடித்தமான வூப்பிங்-பை சமைக்கும்போது, அது சரியாக வரவேண்டும் என்று சாரா தெய்வங்களிடம் வேண்டுதல் வைக்கின்றார்.  ஏனோ,  அவருடைய வேண்டுதல்களுக்கு அவை செவிசாய்க்கவில்லை.   கதையின் இறுதியில் சாராவிற்கே உண்டாகும் வூப்பின் பை-க்கான ஏக்கத்தையாவது அந்த தெய்வங்கள் மனமிரங்கி தீர்த்து வைக்கட்டும்.  

ஒரு கொடூர வன்புணர்வு அசம்பாவித்த மனநெருக்கடியிலிருந்து மீண்டெழும் மனப்போராட்டத்தில், நிஜக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் உறுதியுடன் தன்னை நடத்தி செல்லும் ஜென்னியின் அனுபவ பயணமாக இருக்கிறது ‘நிஜத்தின் நிழல்’.  எதிர்பாரா தருணத்தில் தன் மீது பாய்ந்து மிருகபலத்துடன் ஆக்கிரமிக்கும் ஒருவனை எதிர்த்து நிற்கும் அந்த தருணத்திலேயே ஜென்னியின் போராட்டம் தொடங்கிவிடுகிறது.   மோசமாக தாக்கப்பட்டு நினைவை இழப்பதற்கு முன்பு, அந்தக் குற்றவாளியின் அடையாளங்களை நினைவில் தொகுத்துக் கொள்ள முயல்கிறாள். அந்தக் கோரச் சம்பவத்தின், அருவெறுப்பான மனப்பாதிப்புகளையெல்லாம் கடந்து, போலிசார், வக்கீல்கள், கோர்ட்டார் என்று பல அமைப்புகளின் சட்ட நடைமுறைகளில் திடமான பங்கெடுத்து, குற்றவாளிக்கான தண்டனையை பெற வைக்கிறார்.  ஆனால் ஜென்னியின் பயணம் அங்கே முடியாமல், மற்றுமொரு திருப்பத்துடன் தொடர்கிறது.  இம்முறை, குற்றவுணர்ச்சி மிகுந்த மனப்போராட்டத்தின் வழியே.  ரயில்கள் ஓடாத, பழைய இருப்புப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் ஜென்னியின் பாதையின் இறுதியில் என்றாவது ஒரு விளக்கொளி எழக்கூடும்.  அந்த விளக்கொளியின் பின்னரும் ஒரு கரிய நிழல் படிந்துக் கொண்டிருக்கக் கூடும்.  

காந்தியின் வாழ்வனுபவங்களைப் பற்றி நாம் அறிமுகமாவதற்கு முன்பே அவரைப் பற்றிய மகாத்மா என்கிற பிம்பம் நம்மைப் பற்றிக் கொண்டு விடுகிறது.  ஆனால், அவரை ஒரு மனிதனாக அணுகி, அந்த வாழ்வனுபவங்களை நாம் உன்னிப்பாக படிக்கும்போது, சராசரி நிலையிலிருந்து உன்னதத்தை எட்டிப் பிடிக்கும் ஓர் இலட்சியவாத தத்தளிப்பைக் காண முடியும்.  தன் அன்னைக்கும், மனைவிக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் மனிதன், அந்த எளிய வாக்குறுதிகளிலிருந்து பிறழாமல் இருக்க அவர் கடைபிடித்த நிலையுறுதியின் வீச்சு, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆணி வேராக நிலைபெற்றது.  டாக்குமென்டரி தரவுகளைக் கொண்டு, அகப் போராட்டப் புள்ளிகளை கட்டமைத்து எழுதிய  நுட்பமான வரலாற்றுப் பதிவு “இவன் மனிதன்’.  

ஒரு புனைவின் நீட்சியாக, அல்லது பக்கவிளைவாக மற்றொரு புனைவை உருவாக்கும் புதிர்பாதை விளையாட்டின் இன்னுமொரு வடிவம் ‘வழியனுப்புதல்’.  பதாகை பத்திரிகையில் ‘சம்பவம்’ என்கிற குறுங்கதை சட்டகத்தில், சிகந்தர்வாசி என்கிற எஸ். சுரேஷ் எழுதிய ‘ஹௌடா’ கதையின், இணை கோடாக நிகழ்கிறது வழியனுப்புதல்.  ‘ஹௌடா’விற்கு முற்றிலும் வேறான சூழல்களின் பின்னணி, கதை மாந்தர்கள், மனநிலைகள் என நிகழ்கிறது ‘வழியனுப்புதல்’.  இடையில் ஒரு புள்ளியில் இரு கதைசொல்லிகளும், இரயில் ப்ளாட்பாரத்தில் நிகழும் ஒரு அசந்தர்ப்ப சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தைத் திருப்புகிறார்கள்.  ஆனால் அந்த சம்பவத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருவேறு மனநிலைகளை அளிக்கிறது.  

சமூக ஊடகங்களில் தங்கள் சுய அனுபவங்களை, சுவாரசிய துணுக்குத் தெறிப்புகளிலிருந்து, ஒரு கேம்ப்ஃபயர் களியாட்டக் கூடலில் சுற்றியமர்ந்து கொண்டு சேர்ந்து உருவாக்கும் கேளிக்கை புனைவுகள்வரை பலவகையில் உருவாகி வருவதைக் காண முடிகின்றது.  மேலும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் கொட்டிச் செல்லும் அரைகுறை பிரதிகள் மலிந்த நவீன காலத்தில், புனைவெழுத்தின் எல்லைகளை நகுல்வசன் அநாயசமாக விரித்துக் கொண்டு செல்கிறார்.  வருங்கால குவாண்டம் கணிணிகளின் அதிவேக செயல்பாடுகளின் நுணுக்கங்களை புதிய கலைச்சொற்கள் கொண்டு அழகுதமிழில் விவரிக்கும் ஒரு கோடியிலிருந்து, ஒரு நவீனக் கவிதையைத் திறக்கும் நுண்ணிய புள்ளியை விளக்கிக் காட்டும் மற்றொரு கோடியின் படைப்பூக்க நிலைக்கு பாயும் நகுல்வசனின் விஷய ஞானம் அபரிமிதமானது.  ஏழு கதைகளைக் கொண்ட இந்த சிறிய தொகுப்பு, நகுல்வசன் அமைக்கும் புதிர்பாதைகளூடே, ஒரு சிறந்த  புனைவுப் பயணத்தை நமக்கு அளிக்கின்றது.

  • நூல்: கடவுளும் கேண்டியும் & பிற கதைகள்
  • விலை: ₹140
  • Author: நம்பி கிருஷ்ணன்
  • Publisher: யாவரும் பதிப்பகம்
  • Published on: 2024
  • 📞90424 61472

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.