எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி

கட்டாரி வாசு – வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இருபுறமும் சட்டைக்கைகளை சுருட்டி விட்டுக் கம்பீரமாக நடந்து வரும் ஒரு அசலான தறவாட்டு நாயர்!  “பிரியத்திற்குரிய பஷீருக்குக் கொஞ்சம் மறை கழண்டிருந்த காலம். உடைகள் ஏதுமணியாமல் கையில் கத்தியுடன் இபிலீஸைக் குத்தி மல்லாத்தப் புறப்பட்ட பஷீரைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரே ஆள் கட்டாரி வாசு மட்டுமே” என பஷீரின் ஒரு நாவலின் முன்னுரையில் வரும் இந்தச் சித்திரம் மூலமாகவே எம்.டி.வாசுதேவன் நாயரைப் பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது எனக்கு. அதே முன்னுரையில் காணக்கிடைக்கும் நூலன் வாசுவைப் பற்றி அப்போது ஏதும் கவனிக்கத் தோன்றவில்லை. பின்னாளில் ஜெயமோகன் எம்.டி.யைக் குறித்து எழுதிய கட்டுரைத் தொடரில், யாராலும் கவனிக்கப்பெறாத, அவமதிப்பும் வன்மமும் கசப்பும் மட்டுமே கிடைக்கப் பெற்ற நூலன் வாசு, அந்தக் கசப்பினாலாயே ஊதிப்பெருக்கிக் கொண்ட ஈகோவினால் கட்டாரி வாசுவாக மாறிய பரிணாமத்தில்தான் அவரது அனைத்துப் படைப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன என்று குறிப்பிட்டார். சிறுமைப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டு ஓடும் எளிய மனிதர்கள், அந்த வன்மத்தை நெஞ்சில் என்றென்றைக்குமாக ஏற்றிக்கொண்டு தான் அவமதிக்கப்பட்ட அந்த இடங்களுக்கு ஒரு பெரிய கட்டாரியுடன் திரும்பி வந்து நிரூபிப்பதற்காகப் புறப்பட்டுச் செல்பவர்கள் தான் எம்.டி.யின் முதன்மைக் கதாபாத்திரங்கள் என்று படிக்கும்தோறும் அந்த கூற்று உண்மையென உணர்கின்றேன். அவரது கதாபாத்திரங்களின் அசல் வடிவம் எம்.டி.யே தான். எந்த பீடத்தின் முன்பாகவும், எந்த அதிகாரத்தின் முன்பாகவும் தனது கட்டாரியைக் கீழே வைக்காத அவரது நிமிர்வும் ஆணவமும் எந்த எழுத்தாளனையும் வாசகனையும் எண்ணிப் பெருமிதம் கொள்ளச்செய்பவை.

கேரளமாநிலத்தில் கூடல்லூர் என்னும் சிற்றூரில், ஜூலை 15, 1933-ல் புன்னயூர்க்குளம் டி.நாராயணன் நாயருக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு அம்மாளு அம்மாவுக்கும் பிறந்த மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர், மலையாள இலக்கியத்தின் முதன்மை முகம். இலக்கியம், இதழியல், திரைக்கதை, திரைப்பட இயக்கம் எனத் தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர். தனது உணர்ச்சிகரமான சிறுகதைகளுக்காகவே போற்றப்படும் எம்.டி. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். மாத்ருபூமி அறிவித்த சிறுவர் இலக்கியப்போட்டியில் தன் 14 வயதில் விருது பெற்றார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ரக்தம் புரண்ட மண்தரிகள்” 1953ல் அவரது இருபதாம் வயதில் கல்லூரி மாணவனாக இருந்த போதே வெளிவந்தது. 1954ல், மலையாளத்தில் மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் சர்க்கஸ் கலைஞர்களைப் பற்றிய “வளர்த்து மிருகங்கள்” என்னும் சிறுகதைக்காக முதல்பரிசு பெற்றார். ‘ஸ்வர்கவாதில் துறக்குந்ந சமயம்’, ‘ஓப்போள்’ முதலிய சிறுகதைத் தொகுதிகள் கேரளசாகித்ய அகாதமி விருது பெற்றவை. நாவலாசிரியர் எம்.முகுந்தனோடுடனான ஒரு உரையாடலில் எம்.டி. தன் எழுத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், “நான் புத்தகங்களை எழுதுவது, நானும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் அனுபவித்த வலிமிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக… என்னைச் சந்திக்க அந்த மக்கள் காத்திருந்தது போல் இருந்தது, நான் வெறுமனே அவர்களின் கதைகளை காகிதத்தில் எழுத வேண்டியிருந்தது”.

வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல். எழுத்தாளர் இரா.முருகன் எடுத்த நேர்காணலில், யசோதராவும் அப்புண்ணியும் உண்மைக் கதாப்பாத்திரங்களா என்ற கேள்விக்கு, நாலுகெட்டு நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான்.  யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?” என்று பதிலளிக்கிறார் எம்.டி.

அவரது முதன்மைப் படைப்பாகக் கருதப்படும் நாவல் அசுர வித்து. நாலுகெட்டு நாவலின் அதே சமூக கலாச்சார பின்புலமும், உடைந்து விழுந்து கொண்டிருக்கும் நாயர் தறவாட்டு கதைக்களமும் கொண்ட இந்த நாவல், நாலுகெட்டு நாவலின் தொடர்ச்சி என்று சொல்லிவிடக்கூடியது. மாறிவரும் சமூகக் கலாச்சாரச் சூழலால் ஏற்கனவே சரிந்து விழுந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் அசுரனின் விதையன பிறக்கும் கோவிந்தன்குட்டி என்ற இளைஞனின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. எம்.டி. தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் வரலாற்று வீழ்ச்சியின் அவலத்தையும் அதன் விளைவாக உருவான அவநம்பிக்கைகளையும், யதார்த்தமான சித்தரிப்புகள் மற்றும் அவருக்கே உரிய துன்பியல் கலந்த நடையில் படைத்திருக்கிறார். 

குறுநாவலான ‘மஞ்சு’ அதன் கவித்துவமிக்க செறிவினால், வாசகர்களாலும் விமரிசகர்களாலும்  ஒருங்கே பாராட்டப்பெற்ற படைப்பு. எம்.டி.யின் மற்ற நாவல்களைப் போலன்றி, மையக் கதாப்பாத்திரமாக விமலா எனும் பெண் வரும் ஒரே படைப்பு இந்த நாவல். தனிமையும் ஏக்கமும் நினைவுத்துயரும் கொண்டு தன் காதலனுக்காகக் காத்திருக்கும் விமலா, தான் ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் கொண்ட தன் தகப்பனுக்காகக் காத்திருக்கும் புத்து, தன் மரணத்திற்காகக் காத்திருக்கும் சர்தார்ஜி என   யுகயுகமாய்த் தொடரும் காத்திருப்புகளின் கதை இது.      

எம்.டி.யின் நாவல்களில் என் மனதிற்கு மிக நெருக்கமானது பீமனை கதைநாயகனாகக் கொண்டு எழுதப்பெற்ற இரண்டாமூழம் நாவல். எப்போதும் இரண்டாமிடத்திலேயே இருக்க வைக்கப்பட்ட பீமனின் பார்வையில் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து எழுதப்பெற்ற நாவல் இது. பாண்டவர் ஐவரிலும் வலிமையானவனும், துரியோதனன் உள்ளிட்ட நூற்றுவரைக்  கொன்றவனும் பீமன்தான். அன்றைக்கிருந்த நெறிமுறைகளின்படி உண்மையில் அரியணைக்கு உரிய அரசனாக வேண்டியவன் எப்போதும் அண்ணனுக்குக் கட்டுப்பட்ட தம்பியாக இரண்டாமிடத்தில் இருக்கிறான். பாண்டவர்களிலே மற்ற எவரையும் விட பாஞ்சாலியை உயிருக்குயிராக விரும்புவனும் அவன்தான். அவள் கனவிலே மணம் கண்ட கல்யாண சௌந்திகத்தைக் கொண்டு தந்தவனும், வாழ்வின் இறுதியில் முக்தியைத் துறந்து அவளுக்காகவே திரும்பி வந்தவனும் அவனே. ஆனாலும் கணவனாகவும் அவனுக்கு இரண்டாமிடமே. புறக்கணிக்கப்பட்ட வாழ்வும் தனிமையும் தோல்விகளும் கர்ணனுக்கு மட்டுமேயுரியவை என நினைப்பவர்களுக்கு பீமனின் பக்க நியாயங்களைத் தனக்கேயுரிய துன்பியல் அழகோடு இந்த நாவலில் காட்டிச் செல்கிறார் எம்.டி.

1993ல் வெளிவந்த சிறுகதையான ஷெர்லாக், எம்.டி.யின் வழக்கமான கதைப்பின்புலம், காலம் மற்றும் யதார்த்தமான பாணியைக் கடந்த ஒரு மாய யதார்த்தப்  படைப்பாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸை, அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பே மலையாளி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியம் மட்டுமின்றி மலையாள இதழியலிலும் பெரும் மலர்ச்சியை உருவாக்கிய முன்னோடியாக எம்.டி. கருதப்படுகிறார். மாத்ருபூமி இதழின் துணையாசிரியராக இளம் வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய அவர், பின் அதன் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். கேரளத்தின் புகழ்பெற்ற படைப்பாளிகளான ஓ.வி.விஜயன், பால் ஸகாரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா, முகுந்தன்  போன்ற பலர் அவரால் உருவாக்கப்பட்டவர்கள். 

மலையாளத் திரைப்படத்துறையிலும் எம்.டி. ஒரு மாபெரும் சாதனையாளர். தனது சிறப்பான திரைக்கதைகளால் கேரளத்தின் திரை ரசனையையே அவரால் மாற்றியமைக்க முடிந்தது என்று குறிப்பிடப்படுகிறார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ள எம்.டி. தனது ‘பள்ளிவாளும் கால்சிலங்கையும்’ என்னும் சிறுகதையை ‘நிர்மால்யம்’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து இயக்கினார். 1973ல் வெளிவந்த அந்தத் திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருதை வென்றது. மலையாளத் திரையுலகில் எம்.டி.யின் வருகை திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு இயக்குனராக முத்திரை பதித்த அதே வேளையில், மலையாள சினிமாவிற்கு அவரது மிக முக்கியமான பங்களிப்புகள் திரைக்கதை வாயிலாகவே வந்தன. அவரது திரைக்கதைகள் பொழுதுபோக்கு மற்றும் வணிக வெற்றியை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், கலைப்படங்களுக்குரிய  தனித்துவமான ஆழத்தையும், பல அடுக்குகளில் கதையைச்  சொல்லும் முறையையும் கொண்டு வந்தன. ஆரம்பகட்ட திரைப்படங்களில் கையாளப்பட்ட வழக்கமான தொடக்கம், பின் கதையின் மையம், இறுதியில் ஒரு முடிவு என இருந்த திரைக்கதை அமைப்பை, தனது இலக்கிய படைப்புகளுக்கு நிகரான ஒரு நுண்கலை வடிவமாக எம்.டி. மாற்றிக் காட்டினார். அவரது கதைக்கூறுகள் ஒவ்வொரு காட்சிக்கும், முழு கதைக்கும் குறிப்பிடத்தக்க ஆழத்தையும் பரிமாணத்தையும் ஊட்டின.

எம்.டி. ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக மூன்று முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றதுடன் கதை, திரைக்கதைக்காகவும் இருபது முறை விருதுகள் பெற்றிருக்கிறார். ஏழு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். திரைத்துறைச் சாதனையாளர்களுக்கான கேரள மாநில அரசின் உயர்ந்த விருதான ஜே.சி. டானியல் விருது இவருக்கு 2013இல் வழங்கப்பட்டது. ஆயினும் எம்.டி. இலக்கியவாதியாகத்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். “சினிமாவுக்குள் அரிதாகக் குறுக்கிடும் என்னை எழுத்தாளனாகவே நான் கருதுகிறேன். இரண்டோ மூன்றோ ஆண்டுகளுக்கு ஒருமுறை படத்தை இயக்கவோ திரைக்கதை எழுதவோ செய்கிறேன். சினிமா என்னுடைய முழு நேரத் தொழில் அல்ல. இந்த இரண்டையும் – திரைப்படத்தையும் இலக்கியத்தையும் வேறுபடுத்தியே வைத்திருக்கிறேன். எனது முதன்மையான கவனம் இலக்கியத்தில்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இலக்கிய உலகின் மிக உயரிய ஞானபீட விருது, இந்திய அரசின் பத்மபூஷண் விருது உட்பட பல வெற்றிகளையும், விருதுகளையும் தன் வாழ்நாள் முழுதும் பெற்றவர் எம்.டி. இலக்கியத்திலும், இதழியலிலும் உச்சத்தை அடைந்தவர். மம்மூட்டி, மோகன்லால் போன்ற திரை நட்சத்திரங்களை உருவாக்கியவர். அவரது தாக்கம் மலையாள இலக்கிய உலகிலும், திரைத்துறையிலும் ஆழ்ந்த செல்வாக்குடையது. எம்.டி.யின் படைப்புகளின் மேல் வைக்கப்படும் முதன்மையான விமர்சனம் அவை தத்துவார்த்தமான மேலதிகத் தேடல்கள் இல்லாதவை என்பது.  ’சுருதி சுத்தமான ஒரு ஊடகமாக தன்னை ஆக்கிக்கொள்ளுதல் வழியாக கலைஞன் தன் காலத்தை மொழிக்கு கொண்டு வருகிறான். எம்.டி. கேரள பண்பாட்டை, இந்திய பண்பாட்டை அறுபது எழுபதுகளின் அனலை மொழிக்கு கடத்திய முதல்தரக் கலைஞர்களில் ஒருவர். அதற்கப்பால் சென்று மானுடத்தின் குரலாக ஒலிப்பதற்கு சற்று முன்னரே நின்றுவிட்டவர்’ என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

தனது நுண்ணிய சித்தரிப்புகளாலும் ஆழமான உணர்வுக்கொந்தளிப்புகளாலும் ஆன நடை கொண்டு, கேரளத்தின் சமூகக் கலாச்சார மாற்றங்களைத் தன் எழுத்தின் வாயிலாக என்றென்றைக்குமாக நிலைபெறச் செய்த எம்.டி., அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் காலம் கடந்து இங்கு நின்றிருப்பார். எம்.டி.யின் புகழ்பெற்ற வரியென இதை வாசித்திருக்கிறேன். அவரது அத்தனை படைப்புகளின் ஒற்றைச் சாரமெனவே இது ஒலிக்கின்றது, “போகிறேன்- வருவதற்காக”.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி”

  1. சாரதியின் அஞ்சலி கட்டுரை எம்.டி. வாசுதேவன் நாயரின் பங்களிப்பினை துல்லியமாக எடுத்து நம் முன் வைக்கின்றது.

    1. செறிவான பாத்திர அறிமுகம்

    “காட்டாரி வாசு” என நம்மை உள் இழுக்கும் விவரிப்புடன் அஞ்சலி தொடங்குகிறது. இது எம்.டி.யின் இலக்கிய வலிமையைக் குறிக்கும் சக்திவாய்ந்த சொல்.

    கூடுதலாக சாரதி முதன்முதலில் எம்.டி.யின் படைப்புகளைச் சந்தித்த விதம் என்னவென்பதையும் நமகக்கு சொல்லிவிடுகின்றது. என்பதை இப்பாத்திர விவரிப்பின் வழியே திறம்பட நிறுவுகிறது

    2. முழுமையான வாழ்க்கைப் பயண விவரிப்பு

    14 வயதில் குழந்தை இலக்கியப் போட்டியில் வென்றதிலிருந்து அவரது ஆரம்பகால பயணத்தைத் தடம்பிடிக்கிறது
    பல்வேறு துறைகளில் அவரது சாதனைகளை விவரிக்கிறது:

    * இலக்கியம் (ஞானபீட விருது பெற்றவர்)
    * பத்திரிகையியல் (மாத்ருபூமியின் ஆசிரியர்)
    * திரைப்படம் (திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கத்திற்கான தேசிய விருதுகள்)
    * அரசின் அங்கீகாரம் (பத்மபூஷண்)

    3. இலக்கியக் கருப்பொருள்களின் ஆழமான பகுப்பாய்வு
    அவரது பாத்திரங்கள் எப்படி அவர்களின் சமூக மாற்றத்திற்கு எரிபொருளாக ஆழமான குரோதத்தைச் சுமந்து திரிந்தனர் என்பதை விவாதிக்கிறது.

    4. படைப்புகளுடனான தனிப்பட்ட தொடர்பு

    “நானும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் அனுபவித்த வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே நான் புத்தகங்களை எழுதுகிறேன்” என்ற அவரது மேற்கோளை நம் முன் வைக்கின்றது.

    * நாலுக்கெட்டு”, “அசுரவித்து” போன்ற படைப்புகளில் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வாறு அவரது கதைகளை வடிவமைத்தன என்பதைக் காட்டுகிறது

    5. கலாச்சார தாக்கம்

    * மலையாள பத்திரிகையியலின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பை முன்னிலைப்படுத்துகிறது

    * இயக்குநராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் மலையாள சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கிறது

    * காப்ரியல் கார்சியா மார்க்கெஸ் போன்ற எழுத்தாளர்கள் சர்வதேச அங்கீகாரம் பெறும் முன்பே மலையாள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்பை குறிப்பிடுகிறது

    6. அழகான முடிவு

    * மலையாள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் அவரது தடத்தை திறம்பட காட்டும் “போகிறேன் – திரும்பி வருவதற்காக” என்ற அவரது சக்திவாய்ந்த மேற்கோளுடன் முடிவடைகிறது

    எம்.டிக்கு ஒரு பொருத்தமான அஞ்சலியாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.