யாகச்சி நதி வெகு தொலைவில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அவள் பாயும் வழியெல்லாம் பசுமைதான்; அவள் விளைவிக்கிறாள், வளம் பெருகுகிறது, அது மட்டுமா, அவளாலல்லவோ இந்தக் கலைகள்…. இல்லாவிடில் அரசர் அழைத்து இப்படியொரு பொறுப்பைத் தருவாரா? கிரிதாபுரத்தின் ஜகனாச்சாரியின் புகழ் அரச மண்டபம் வரை சென்றுள்ளது. தும்கூரின் ‘மென் சிவப்புக் கொடி மிகக் குறைவாக இடையிடையோடும் கற்கள்’ இல்லையென்றால், என் உளியால் பேச முடியுமா? கற்பாறையைப் போல அழுத்தி வடிவமைக்க வேண்டாம். ஒரு சிறு தட்டல், தாள வாத்தியக்காரர் செல்லமாகத் தட்டுவதைப் போல, சிணுங்கிக்கொண்டே வளைந்து கொடுக்கும் கல். நேர்க்கோடும், இணை கோடும், வளைவுகளுமாய் உளியின் பாட்டுக்கேற்ற நடனம். சிவலிங்கச் செதுக்கில் இரு புறமும் மேலெழும்பி வளைந்து இணையும் தலைப்பகுதி; அவரின் நடனம் போலவே “தீம், தரிகிட, தரிகிட, தத்தளாங்கு தோம், கிடதக தத்தாளாங்கு தோம், ஜொனுதக தோம்” என்ற ஜதி மொழி சொல்லும் உளி. அம்மையோ, எளிதில் வசப்படாதவள். கெஞ்சிக் கொஞ்சி மாமரத் தளிர் போல கற்களில் வருடலாக அவளை வடிக்க வேண்டும். ‘சரிக. ரிகம, கமப, மபத, பதநி, தநிஸ’ உளி, அம்மையின் குழல் கற்றையில் இசைக்கும் கீதம் இப்படிக் கேட்பதாக அவருக்கு மெய் சிலிர்க்கும். இம்முறை ராணி விஷ்ணுவின் கோயில் கட்டுவதாக இருக்கிறாராம். பள்ளி கொண்ட பரமனோ, மலையில் நிற்கும் சீனிவாசனோ, யாரறிவார் அரசியின் உள்ளக்கிடக்கையை? எதற்கும் திரைச்சீலை மாதிரிகளையும், ஏடுகளையும் கையோடு எடுத்துக் கொண்டு போவதுதான் நல்லது. சிற்பி ஜகனாச்சாரி தனக்குள் சிந்தித்துக் கொண்டே தேவையான கருவிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் மனைவி அருகில் வந்து நின்றாள். இன்னமும் ஒரு மாதமாகுமாம், அவர்களின் முதல் குழந்தை பிறக்க. ஆனால், அவரால் பயணத்தைத் தள்ளிப் போட முடியாது. அவளோ அவர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
‘குழந்தை முகத்தைப் பார்த்துவிட்டு பயணப்படலாமே?’
“அது சரி வராது ரேணு, மூன்று நாட்களுக்குள் நான் அங்கே போய்ச்சேர வேண்டும்.”
‘எனக்கு பயமாக இருக்கிறதே? முதல் குழந்தை..தந்தை பார்க்க வேண்டாமா?’
“நான் என்ன ஓடியா போகிறேன்? அரச உத்தரவு, மீற முடியுமா? நிறையப் பொன்னும், பொருளும் கொடுப்பார்கள். பத்து வருடம் பாடுபட்டால் போதும், வாழ் நாள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
‘பத்து ஆண்டுகளா?’ என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.
பத்தென்ன, பதினைந்தும் ஆகலாம் என்று நினைத்துக் கொண்டே அவர் சொன்னார்:
“இடையிடையே வருவேன். எனக்கும் உன்னைப் பிரிந்து இருக்க முடியாது. அம்மா உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். பயப்படாதே.” அவளுக்கு ஆறுதலாகச் சொன்னாரே தவிர தன்னால் பணியை முடிக்காமல் வர முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
‘பெண்கள் உண்டா, உங்கள் பயணத்தில்?’
“அவர்கள் மிகக் குறைந்த பேர்கள். கூட்டு வண்டியில் வருவார்கள்.”
‘அவர்கள் என்னத்திற்கு?’
அவர் சிரித்தார். “இது தான் உன் பயமா? சிலர் நாட்டியமாடுவார்கள், சிலர் பாடல்கள் பாடுவார்கள், சிலர் நாடகம் நடிப்பார்கள். அவர்களை மாதிரியாகக் கொண்டு தானே புறச் சிற்பங்களைச் செய்ய முடியும்?”
‘இத்தனை நபர்களா வேண்டும்?’
“ஆம், பெண்கள் இயற்கைக்கு அணுக்கமானவர்கள். அவர்கள் பல நிற மலர்களைப் போல. ஒவ்வொருவரும் தனித்தனி அழகு, ஒவ்வொரு விதத்தில் அழகு, அதைக் கல்லிலே கொண்டு வரும் ஆண்மகன், அவன் அழகின் உபாசகன். அவளை மூப்படையாமல் காலத்தில் நிறுத்தி வைக்கும் கலைஞன்.”
‘உங்கள் உளிதான் ஓசை எழுப்பும் என நினைத்தேன். ஆனால், சொல்லோசை, நான் பெண் இனம் என்பதால், இனிக்கிறது, மனைவி என்பதால், பதட்டமும் வருகிறது.’
அவர் சிரித்தார். அவளை அணைத்துக் கொண்டு காதோரம் சொன்னார் “உன்னிடத்திற்கு எவருமே போட்டியிட முடியாது. நான் வாக்கு தவற மாட்டேன். நம் பிள்ளையைப் பார்க்க விரைவில் வருவேன்.”
அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் விடை கொடுத்தாள்.
பேலூரே ஒரு கலைக்கூடம் போலிருந்தது. மர ஆசாரிகள், சிற்பிகள், கருங்கல் உடைப்போர், கருவிகளை பழுது பார்ப்போர், திரைச்சீலைகளில் காட்சிகளைப் பதிவு செய்யும் ஓவியர்கள், தலைமைச் சிற்பிகளுடன் அவர்களது சீடர்கள், நடன மணிகள், பாடகிகள், கிராமத்து மரபை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அருகிருந்த கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மனிதர்கள் நகரம் பேணுவோர், கணக்காளர்கள், கண்காணிப்பாளர்கள், சில பாலகர்கள், சமையல் கலைஞர்கள், இரு மருத்துவர்கள், ஜகனாச்சாரிக்கு காணக் கண்கள் போதவில்லை. மதுச்சாலைகள், வெற்றிலை பாக்கு கடைகள் கூட இருந்தன. யாகச்சியிலிருந்து பெரும் வாய்க்காலை வெட்டி அதன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பெருங்கிணற்றிலும் சேமிக்கப்பட்டு பயன் பாட்டில் இருந்ததில் அவர் பிரமித்துப் போனார். சரம் சரமாகத் தொங்கும் விளக்குகள், ஒளியை மட்டும் தருவதில்லை, கண்களை உறுத்தாமல், நிழலாட்டம் தராத கோணங்களில் பொருத்தப்பட்டு, நறுமணத்தையும் பரப்புகின்றன. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் இந்த ஹோய்சாலர்களை நான் நிரந்தரம் செய்வேன். ஜகனாச்சாரியின் உடல் சிலிர்த்தது.
சென்ன கேசவக் கோயிலின் வடிவமைப்பு திகட்டாத ஒன்றாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால், இக் கோயிலின் தலைமைச் சிற்பி நானாக இருந்திருப்பேன்; இப்போது நான் அமைக்கும் கோயில் வடிவமும், மூர்த்தியின் அழகும் சென்ன கேசவ ராயரை விட அழகான ஒன்றாக இருக்கும். அதனாலென்ன, இன்னமும் சென்ன கேசவ மூர்த்தம் முழுதும் வடிக்கப்படவில்லை. தன்னை கர்ப்பக் கிருகத்தின் தெற்கில் இரு மூர்த்தங்கள் வடிக்கப் பணித்திருக்கிறார்கள். அதுவே பெரிய கௌரவம் இல்லையா? அந்தச் சென்ன கேசவனை விட என் சென்ன கேசவன் அழகாக வருவான்.

“என்ன செய்கிறாய், தம்பி? அந்த இடைச்சி கையில் குழைகளில்லை, காதுகளில் பாம்படமில்லை, இடையில் கூடையுமில்லை, அவள் கழுத்தை சுற்றிப் பிடிக்கும் அட்டிகையுமில்லை, இதில் நீ நடனப் பெண்ணை வடிக்க சந்தர்ப்பம் கேட்கிறாய்? கற்பனையே இல்லை, கவனமும் இல்லை.”
இளம் சிற்பியின் முகம் விழுந்து போயிற்று.
‘ஐயா, அவள் கையில் கம்பு இருக்கிறது. வாலும், பின்னங்காலுமாக ஆட்டை வடித்துள்ளேன்.’
“புதுமை செய்கிறாயோ, புதுமை? அந்தக் குழைகள் வளத்தை, பசுமையைக் குறிக்கும்; அவள் அட்டிகை செல்வ நிலையை. கல்லில் அவ்வளவு இடமிருக்கிறதே, முழு ஆடு ஒன்றை செதுக்கலாமே.”
அவன் குனிந்து கொண்டே ஏதோ முணுமுணுத்தான்.
அவனுக்குத் தண்டனையாக இரு வாரங்கள் இரவுச் சோறு நிறுத்தப்படும். ‘பேசாமல் கல் தூக்கியிருக்கலாம், ஆனால், அதற்கும் வலு வேண்டுமே? உணவிற்காகத்தானே இந்தப் பாடு? பொறு மனமே, இந்தச் சிற்பியின் அகம்பாவத்தை நான் அழிக்காமலா போகப் போகிறேன்? ஆனால், அவர் அவனை மட்டுமே உதாசீனம் செய்யவில்லை. மூத்த சிற்பிகளின் படைப்பிலும் அவர் கழுகுப் பார்வை கொண்டு குற்றங்களைச் சொல்வார். அதில் உண்மை இருந்தாலும், அந்த எக்காளத்தை அனைவரும் வெறுப்பார்கள்.
என்னதான் இருந்தாலும், அவர் வடித்துள்ள வேணுகோபாலன் சிலைக்கு ஈடு சொல்ல முடியுமா? மூன்றாய் வளையும் உடல். சுருள் குழலில் அவர் அமைத்திருந்த கொண்டை, அதில் ஒய்யாரமாய் மயில் பீலியுடன், இந்த இடத்திற்கே உரிய செண்பகப் பூ, முத்துச் சுட்டிகள், நிலாத்துண்டு போல நெற்றி, வளைந்த புருவங்கள், இப்போதுதான் பறித்துப் பொருத்திய தாமரைகள் போன்ற கண்கள், மகர குண்டலங்கள் காதுகளில், அதிலும், வலது செவியோரம் காற்றில் ஆடும் முடிக்கீற்று, ஆயிரம் பொருள் சொல்லும் மந்தகாசச் சிரிப்பு, இளம் சிவப்பு இதழ்களில் பொருத்தியுள்ள குழல், அதில் தொங்கும் சிறு பட்டுச் சரம், பற்றியிருக்கும் கைகளில் அபாரமான கங்கணங்கள், கழுத்தில் குவளை மலர் மாலை போல ஒரு ஆரம், பிறைச் சந்திரனின் வளர்ச்சியை இருபுறமும் காட்டி நடிவில் பூரண நிலவாய் பதக்கம் பதித்த சங்கிலி, தங்கக் காசுகள் கோர்த்த ஆரம், இடையணி மணிகள், மடிப்பு மடிப்பாய் செதுக்கப்பட்ட ஆடை, தண்டை, கொலுசு, சதங்கை என கால் அணிகள், இடதின் மீது வலது பாதம் குறுக்காக வரும் பேரெழிலில், இரு பாதங்களிலும், மறைந்தும், தெரிந்தும் வெளிப்படும் நகைகள், நகப் பளீரிடல்கள், உண்மையாக இவர் தெய்வ சிற்பிதான்.
மற்றவர்கள் போற்றுவதும், புகழ்வதும், தன் தலைகனத்திற்காக வெறுப்பதும் ஜகனாச்சாரிக்குத் தெரியும். ‘கலை இருந்தால் கர்வம் இருக்கும், போங்கடா’ என்று அவர் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்வார்.
கோட்டத்தில் வைப்பதற்கு ஐந்து மூர்த்தங்கள் தயாராகிவிட்டன. எந்தச் சிலைக்கு, எந்த தேவதைக்கு அழகில்லாமல் போய்விட்டது?
தொந்தி கணபதி ஓரழகு, வீணை சரஸ்வதி, பேரழகு, இலட்சுமி நாராயணா, லக்ஷ்மி ஸ்ரீதரர், துர்க்கை எவர்க்கும் குறையாத தெய்வீக அழகு!
ஆனாலும், இந்தக் கேசவ மூர்த்தி ஏன் சரியாக வரவில்லை? சுவடிகளைப் பார்த்தாயிற்று, ஓவியத்தின் படி இருக்கிறதா என்றும் ஆய்ந்தாகி விட்டது, கற்றறிந்தோரைக் கேட்டாகிவிட்டது, குறை இருக்கிறது, எங்கே என்று தெரியவில்லை. ஒருக்கால், குறையில்லையோ, மனப் ப்ரமையோ?
ஓரு இளைஞன் சிரிக்கும் ஒலி கேட்டது ஜகனாச்சாரிக்கு. கோபம் வந்தது, அதே சிறுவன், இடைச்சியை வடிக்கத் தெரியாதவன்.
“என்னடா சிரிப்பு?”
‘ஒன்றுமில்லை, ஐயா’
“ஏதோ சொல்ல வருகிறாய், மறைக்கிறாய், நகைக்கிறாய், சொல்லி விடு, மீண்டும் தண்டனைக்கு ஆளாகி விடுவாய்.”
‘நீங்கள் பெரியவர்’
“இப்போ சொல்லப் போகிறாயா, இல்லை இடத்தை விட்டு, வேலையை விட்டு துரத்தட்டுமா?”
‘குறை எனக்குப் புலப்பட்டுவிட்டது. நான் நிரூபித்தால்..’
“என் வேலையில் குறையா? நீ நிரூபணம் செய், என் வலது கரத்தை துண்டித்துக் கொள்கிறேன்.”
‘ஐயா, விபரீதம் வேண்டாம். தவறைச் சரி செய்தால் மட்டும் போதும்.;
“உனக்கு அத்தனை நம்பிக்கையா? இந்த வயதில் இத்தனை ஆணவமா? நீ எப்படியும் தோற்கப் போகிறாய். என் வலது கரம் பத்திரமாக இருக்கும், சொல், என்ன குறை?”
‘ஐயா, உங்கள் சிலையில் சந்தனம் குழைத்துப் பூசப்போகிறேன். அது உலர்ந்தவுடன் உங்களுக்கே தெரியும்.’
சந்தனம் பூசப்பட்டது, உலர்ந்தது ஓரிடத்தைத் தவிர. அது பரமனின் தொப்பூழ் பகுதி.
‘ஐயா, சிறு உளியால் அவ்விடத்தில் தட்டுங்கள்’
ஜகனாச்சாரி தன் கண்களையே நம்ப முடியாமல் தட்டினார். சிறிது நீரும், ஆற்று மணலும், ஒரு தவளையும் வெளி வந்தன. அவர் ஒரு வினாடி அதிர்ந்தார். மறுகணம் தன் கையைத் தானே துண்டித்து விட்டார்.
இளைஞன் துடித்தான், ‘ஏன் இப்படி செய்து கொண்டீர்கள், ஐயா?/ சற்றுப் பொறுங்கள். கையை இந்தத் தண்ணீரில் நனைந்துள்ள துணியில் கட்டுகிறேன், மருத்துவரை அழைத்து வருகிறேன்.’
அப்போது அசரீரி ஒலித்தது. ‘ஜகனாச்சாரி, உன் தொழில் பக்தி சிறப்பு, ஆனால் தலைக்கனம் கூடாது. இவன் உன் மகன் தங்கனாச்சாரி. அவனுடன் கிரிதாபுரா போ, உன் ஊரில் கேசவப் பெருமாள் கோயிலைக் கட்டு. உன் கை மீண்டும் வளரும். இந்த நிகழ்ச்சியைக் காட்டும் வண்ணம் உன் ஊர் இனி ‘கைதாலா’ என்று அழைக்கப்படும். தவளையை இங்கே வயிற்றில் சுமந்த நான் , கேப்பி (கப்பே) சென்னகராயா என்றே துதிக்கப்படுவேன்.’
ஜகனாச்சாரியும், தங்கனாச்சாரியும் இணைந்து பணி செய்ய எழுந்தான் கேசவன். அந்த உளிகளின் மொழி இவ்வாறிருக்க அவனால் வராமலிருக்க முடியுமா?
“தகஜொனு தகஜொனு தகஜொனு திம் தலாங்கு தகஜொனு திம்
தலாங்கு தகஜொனு திம் தலாங்கு தகஜொனு திம் தத்தித் தலாங்கு
தகஜொனு திம் தத்தித் தலாங்கு தகஜொனு திம் தத்தித் தலாங்கு தகஜொனு தாம்.”
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

Sculpting through writer’s nib ably assisted by swarams and jatis, this story in good tamizh made a fantastic reading. The temples and locations are connected by dots weaving story amidst them. The description of Venugopal’s statute is excellent. The conversation between the elder and younger is absorbing. The elder one wants to depict richness and prosperity and the young sculptor befitting his position makes the herd girl simple and suggestive.
நன்றி, மேம்
அற்புதம்
நன்றி, சார்