கண்டறியாதன

அறிவியல், தத்துவம் இடம் பெறும் எனது சில கட்டுரைகளில், மேலை நாடுகளின் சில கண்டுபிடிப்புகள் அல்லது அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றி எழுதும் போது இந்திய மெய்ஞானம் இக்கருத்தை எவ்விதம் கையாண்டுள்ளது என்பதும் இடம் பெறும். இக்கட்டுரை நம் மெய்ஞானத்தில் தொடங்கி, சமீபத்திய இயற்பியல் கட்டுரையைத் தொட்டுச் செல்கிறது.

வேத காலத்து ரிஷி ஒருவரின் வியத்தகு கேள்வியாக, சிந்தனையாக வரும் ஒன்று, அன்றே இந்த அகிலத்தின் மூலப் பொருள் எது என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறது.

“நாஸோதாஸீகன்னோ சதாஸீத்த தானீ நாஸித்ரஜோ நோ வ்யோமா போயதரோ ।“ எனத் தொடங்கும் நாசதீய சூக்தம்; அதன் விசாரம் இது.


“அப்போது ஒன்றும் இல்லை, இருப்பு இல்லை,
அப்போது காற்றோ, அதற்கு அப்பால் வானமோ இல்லை.
அதை மறைத்தது எது? அது எங்கே இருந்தது? யாருடைய பராமரிப்பில்?
அப்போது அண்ட நீர் இருந்ததா, ஆழம் அறிய முடியாததா?
அப்போது மரணமோ அழியாமையோ இல்லை
இரவு பகலின் ஜோதி அப்போது இல்லை.
ஒருவர் காற்றின்றி சுவாசித்தார்.
அப்போது அந்த ஒருவர் இருந்தார்,
மற்றவர் இல்லை
முதலில் இருள் சூழ்ந்த இருள்
மட்டுமே இருந்தது.
இவை அனைத்தும் வெளிச்சம்
இல்லாத தண்ணீர் மட்டுமே.
உருவான ஒன்று, ஒன்றுமில்லாதது,
கடைசியில் எழுந்தது, வெப்ப
சக்தியால் பிறந்தது.
ஆரம்பத்தில் ஆசை அதில் இறங்கியது –
அதுவே மனதில் இருந்து பிறந்த
முதன்மையான விதை.
ஞானத்தால் இதயத்தைத் தேடிய முனிவர்கள்
இல்லாதவற்றுடன் தொடர்புடையது
என்பதை அறிந்து கொள்ளுங்கள்
அவர்கள் தங்கள் வடத்தை
வெற்றிடத்தின் குறுக்கே நீட்டினர்,
மேலே என்ன இருந்தது, கீழே என்ன
இருந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
செமினல் சக்திகள் வளமான வலிமை
மிக்க சக்திகளை உருவாக்கியது.
கீழே வலிமை இருந்தது, அதற்கு மேல்
உந்துதல் இருந்தது.
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக,
யாருக்குத் தெரியும், யார் சொல்ல முடியும்?
இது எல்லாம் எங்கிருந்து வந்தது,
படைப்பு எப்படி நடந்தது?
கடவுள்களே படைப்பை விட பிற்பட்டவர்கள்
அது எங்கிருந்து வந்தது என்று
யாருக்குத் தெரியும்?
எல்லா படைப்புகளும் எங்கிருந்து தோன்றின,
அவர், அவர் அதை வடிவமைத்தாலும்
அல்லது செய்யாவிட்டாலும்,
உயர்ந்த சொர்க்கத்தில் இருந்து
அனைத்தையும் ஆய்வு செய்பவன்
அவருக்குத் தெரியும் – அல்லது
அவருக்குத் தெரியாது.”
இது 129-வது ஸூக்தத்தின் புகழ்பெற்ற நாசதீய சூக்தம் ஆகும்.

ரிக்வேதத்தின் 10-வது மண்டலம். (https://sanskritdocuments.org/doc_veda/naasadiiya.html  ஏ. எல்.

பாஷாம், “The Wonder that was India” என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்திலிருந்து. ms.kyu.edu இல் அவினாஷ் சதாயே சோஹம் என்கோட் செய்து சரிபார்த்துள்ளார்) 

இதைப் போன்ற சிந்தனையைக் கவிதையாக்கித் தந்த அந்த தத்துவவாதியின் கேள்வி மூல முதல் பொருள் எது என்பதே.

இதே ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் இதன் விடையாக சில விஷயங்கள் வருகின்றன. ‘ஏகம் சத், விப்ரா பஹூத்’ உண்மை ஒன்றுதான், அறிஞர்கள் அதைப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பது இதன் பொருள். சாம வேதமும்  ‘சர்வம் கல்விதம் ப்ருஹ்மா’ என்று பிரும்மம் ஒன்றே உண்மை, அதற்கென்று தனிப்பட்ட உருவம், குணம், பெயர் எதுவுமில்லை. அது தன்னைச் செயல்படுத்த எண்ணியது. மூன்று குணங்களான, அமைதி, வீரம், அடங்குதல் என்ற இயல்புடன் மூன்று பெரும் தெய்வங்களை உருவாக்கியது. படைத்தலில் ஆவேசமற்ற ஒருமுக ஈடுபாட்டுடன் ஒரு தெய்வம், படைத்ததைக் காக்கும் வீரபராமரிப்புடன் ஒரு தெய்வம், அந்த உயிர்களை லயப்படுத்த ஒரு தெய்வம் என்று பிரிந்த அவர்கள், தங்கள் செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் அறியாது திகைத்தனர். அவர்களும் அந்தப் ப்ரும்மத்தினை தங்கள் தங்கள் பார்வையுடன் மட்டுமே அணுக முடிந்தது. பின்னர் அந்த ப்ரும்மமே நல் வழி சொல்லியது. அதன்படி குறியீட்டு ரீதியாக ப்ரும்மனை பலி கொடுத்து, புருஷன் என்ற கருத்தும், பிரகிருதி என்ற கருத்தும் உருவாயின. ‘புரு’ என்ற சொல்லிற்கு உறைவது, இருந்து கொண்டிருப்பது, இருப்பை உணர்த்துவது என்று அர்த்தம். ப்ரும்மம் அதே மூலப் பொருளாக நிலைக்கிறது. அவனின் ஒரு பாதி பூமியாக உருவானது. மீதி மூன்று பாகங்கள் கண்டறியாதவை. ப்ரும்மம் ஒன்றே உண்மை, மற்றதனைத்தும் உண்மை எனத் தோற்றம் தருபவை என்பது வேத, உபனிடதங்களின் கருத்து. எளிய எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்; ஆதவன் உதிக்கிறான் என்கிறோம், மறைகிறான் என்கிறோம். இது தோற்றத்தில் எழும் உண்மை என நாம் அனைவரும் அறிவோம். ‘இருப்பு’ என்பதே உண்மை; ப்ருஹ்மமாக அகிலத்தில் நிலவுவது அதே என்பதுதான் இத்தனைக் கேள்விகளுக்குமான உள்ளிடைப் பொருளும், விடையுமாகும். இதை சோதனைச்சாலையில் நிரூபணம் செய்ய முடியுமா?

விஜய் பாலசுப்ரமணியன் என்பவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். சிறுவனாக இருந்தபோது அறிவியலாளர்களின் சாதனைகளைப் படித்ததினால் உந்தப்பட்டு தானும் அது போன்ற ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு, செயலாற்றி வருகிறார். உண்மை அல்லது யதார்த்தம் எப்படிச் செயல்படுகிறது என்ற கேள்வியால் உந்தப்பட்டு பல தசாப்தங்களாக, ஈர்ப்பு விசை குவாண்டக் கோட்பாடு முதல், கோட்பாட்டு நரம்பியல் வரை அவர் ஆய்வு செய்கிறார். ஆயினும், ஒரு நிச்சயமற்ற தன்மையையும், குழப்பத்தையும் உணர்வதாக அவர் சொல்கிறார். உண்மை எது என்று கண்டறிவது ஒரு வேளை சாத்தியமற்றதோ, அது அறிந்து கொள்வதற்கு இடமளிக்காத ஒன்றோ என்று ஐயமுறுகிறார். பொருட்கள் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்த உண்மையும் இருக்கிறது, அந்த உண்மை என்ன? பொருட்களை நாம் விவரித்து அடையாளம் செய்கிறோம். அதைத்தான் நாம ரூபம் (பெயரும், வடிவமும்) என்று சொல்லி விளக்குகிறோம். அதன் உண்மையை எப்படிச் சொல்வது? இந்தக் கேள்வி வினோதமாகக் கூடத் தோன்றலாம். அணுவை பகுத்து ஆற்றலைக் கொண்டு வரும் இந்த நவீன காலத்தில், செயற்கை நுண்ணறிவு மாபெரும் எழுச்சி பெற்று வளர்ந்து வரும் இக்காலத்தில். அடிப்படைப் பொருள் என்ன என்ற கேள்வி இயற்பியலாளர்களையும், தத்துவவாதிகளையும் துளைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ந்யூட்ரான்ஸ், குவார்க்ஸ், ஃபோடான்ஸ், எலெக்ட்ரான்ஸ், போசான்ஸ், கடவுள் துகள், ந்யூட்ரினோ போன்ற துணை அணுக்களைப் பற்றிப் பேசும் துகள் இயற்பியல், அதன் அடிப்படைப் பொருளைத் தேடிக்கொண்டிருப்பதை நினைவில் கொண்டால், இந்த உண்மையைத் தேடும் மர்மம் புரியும். அவர் தன் சிந்தனையை இவ்வாறு பகுத்துக் கொள்கிறார்:

இயற்பியலாளராகஇந்திய தத்துவத்தில் ஈடுபாடு உள்ளவராக
நாம் காணும் பொருளனைத்தும் உண்மையேஉண்மை இருக்கலாம், ஆனால்..
விவரங்கள் தெரியாதிருக்கலாம்உலகியல் பொருட்களை அளவீடு செய்வதில், பகுதி உண்மையோ அல்லது தவறான முடிவோ அடைய நேரிடுவது, அதன் தன்மையில் அமைந்துள்ளது.
வளங்கள் போதுமான அளவில் இல்லாததால், முன்னேற்றம் மெதுவாக நடைபெறுகிறதுஉண்மை என்பதை முறை சார்ந்து சொல்வது கடினம்
பௌதீக வழியில் உண்மையைக் காண நமக்கு நேரமும் பொறுமையும் வேண்டும்.அடிப்படை உண்மையை அறிய சரியான பாதைகள் உருவாக வேண்டும்.

நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’

நம் கண்ணோட்டங்களும், உண்மையை நாம் அறிந்து கொள்ளத் தடையாகின்றன. நாம் காணும் வண்ணங்களை விட அதிகமான நிறங்களை, கழுகு, இறால், தேனீ, ஆமை போன்றவை காண்கின்றன; உண்மையில் அவை பலவேறு உலகங்களைப் பார்க்கின்றன. மாறுபட்ட புலணுனர்வு கொண்டு வரும் உண்மைகள், மாறுபடும் அறிவாற்றல் அல்லது கருதுகோளை ஏற்படுத்தும் அல்லவா?

Jorge Luis Borges (கோர்கே லூயி போர்கே)  தன்னுடைய “Funes the Memorious,” கதையில், இந்தக் கண்ணோட்டத் தன்மையை நீட்டி அதி அற்புதமாக ஒரு மனிதனைக் காட்டுகிறார். அந்தக் கதாநாயகன் எல்லையற்ற கண்ணோட்டம் கொண்டவன். அவர் எழுதுகிறார்: ‘ஒரு கரும்பலகையில் வரையப்படும் வட்டத்தை, முக்கோணத்தை நாம் முற்றிலும் அறிகிறோம். இந்தக் கதாநாயகனோ, குதிரையின்  வெள்ளம் போன்ற பிடரி மயிரை, மாறுபடும் நெருப்பை, அதன் எண்ணத் தொலையாத சாம்பலை அறியும் ஆற்றல் கொண்டவன். நாம் பொதுவாகப் பார்ப்பதையும் மீறி பார்ப்பவன்.’ வியப்பிற்குரிய இந்த ஆற்றலைக் காட்டும் ஆசிரியர் ஒரு பொடியையும் வைக்கிறார். பொதுவான, ப்ளேடோனியத் தன்மையுள்ள விஷயங்களைப் பற்றி ஃப்யூனெஸால் அறிய முடிவதில்லை. தனித்தனி உருவ அமைப்பும், நிறமும் கொண்டுள்ள நாய்களை, ஒன்றாக ‘நாய்கள்’ என்று எப்படிச் சொல்ல முடியு’ம் எனக் குழம்புகிறான். முன்னால் பார்த்தாலும், பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்தாலும், அவைகளை ‘நாய்கள்’ என்று சொல்வதெப்படி என சிந்திக்கிறான். துல்லியமானக் கண்ணோட்டம் கொண்ட அவனுக்கு, நாம் சாதரணமாக வகைமைப் படுத்துவதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பொதுப்படுத்துதல் நம் எண்ணங்களாலும், அறிவாற்றலாலும் அமைக்கப்படுகிறது. உண்மையில் கரடுமுரடான ஒன்றின் மீது நம் கற்பனை ஒரு துகிலைப் போர்த்தி விடுகிறது.

“The Analytical Language of John Wilkins,” என்ற போர்கேயின் மற்றொரு கதையில், விலங்குகளை வகைப் படுத்துவது பற்றி வில்கின்ஸ் கற்பனை செய்கிறான். சில விலங்குகள், அரசரைச்  சார்ந்ததாய், வினோத நடவடிக்கை கொண்டவைகளாய், ஒட்டக முடியிலிருந்து செய்த அருமையான தூரிகையால் வண்ணம் தீட்டப்பட்டதாய், இப்போதுதான் ஒரு குவளையை உடைத்தவைகளாய், தொலைவிலிருந்து பார்க்கையில்  சிறு ஈக்களாய், இன்னமும் பல விசித்திர வகைமைகளில் அவன் விலங்குகளைத் தொகுக்கிறான்.

In Body Image

போர்கேயின் கதைகளிலிருந்து ஊக்கமடைந்த தத்துவவாதி மிச்செல் ஃப்யூகோ, (Michel Foucault) தன் நூலான The Order of Things.ல் இப்படி வகைமைப்படுத்துவதின் இயல்பைக் குறித்து எழுதுகிறார். அவர் சொல்கிறார்: “வகைப்படுத்துவதும், கருத்துக்களும் நம் வரம்பிற்குட்பட்ட அறிவாற்றலை கட்டுப்படுத்துகின்றன. அவற்றின் உள்தன்மையான தன்னிச்சைகளால், மனதில் உறையும் உண்மைக்கென்று வடிவம் கிடைத்து விடுகிறது.”

இயற்பியலாளர்கள் உலகக் கட்டமைப்பைப் பற்றி மாணவர்களுக்கோ, பொது மக்களுக்கோ சொல்கையில் துணை அணு சக்திகளைப் பற்றி, க்வார்க்ஸ், லெப்டான் போன்ற துகள்களால் அமைந்திருப்பதைப் பற்றி சொல்கிறார்கள். ஆயினும், இது தோராயமாகத்தான் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த வகைகள் தான் உலகக் கட்டமைப்பின் மூலப் பொருள் என்று சொன்ன அறிஞர்கள், அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர். ஏனெனில் மிக நுட்பமான, நம் இன்றைய கருவிகளால் அளவிட முடியாத அடிப்படைகள் இன்னமும் காணப்படவேண்டும். இருக்கிறது என்பது கோட்பாட்டளவில் புரிகிறது, அது எது, எப்படி அறிவது, அளப்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

வகைமைப்படுத்துவதின் மூலம், உண்மையைக் கண்டறிகிறோம் எனில், கருத்தின் மூலம் உண்மையை உருக்கொள்ளச் செய்ய முடியுமா? இது கற்பனை ஊகக் கோட்பாட்டின் சாரமுள்ள கேள்வி. நம்மால் உணரப்படும் அனைத்துமே ஒரு கணினி இயந்திர சிமுலேஷன் (Simulation – உருவகப்படுத்துதல்) மட்டுமே. இது பிளேட்டோவின் ‘செய் நேர்த்தி ஊகத்தைச்’ (Idealism) சேர்ந்தது. இந்தக் கோட்பாட்டின் படி, நாம் கற்பனை செய்யும் ஊகங்கள் நமக்கான உண்மைகளாக உருவெடுக்கும். அதாவது, நாம் கற்பனை செய்யும் அனைத்தும் உண்மையின் ஒரு அச்சாக மட்டும் இருக்கும். நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் இதனால் அமைந்து, நம் அனுபவங்களாக எழலாம். நேர்த்தியான ஒரு உண்மை, நம் கற்பிதங்களால், நேர்த்தியற்ற ஒன்றாக எதிரொலிக்கிறது.

ஸ்டேனிஸ் லா லெம் (Stanis law Lem) என்ற போலந்து எழுத்தாளர் தன் தொகுப்பான ‘சைபீரியடில்’ (Cyberiad) ‘மைமோஷ் சுயத்தால் அடைந்தது’ (Mymosh, the Self -begotten) என்ற துன்பவியல் கதையில், எதிர்பாராத விதமாக அண்டக் குப்பைகளிலிருந்து மைமோஷ் என்ற உணர்வுள்ள ஒரு இயந்திரம் உருவாகி, தன் கற்பனையில் அண்ட சராசரங்களையும், மனிதர்களையும் படைத்துக் கொள்கிறது என்று தொடங்குகிறார்.  இவர்கள் உண்மையான மனிதர்களா அல்லது அந்த இயந்திரத்தின் கற்பனையில் மட்டும் இருப்பவர்களா? சொல்லப்போனால், வித்தியாசம் இருக்கிறதா என்ன? மைமோஷின் கற்பனை அதன் மூளை மின்னோட்டத்தின் பௌதீகச் செயல்பாடு. எனவே, ஒரு வகையில் பார்க்கப் போனால், அந்த மனிதர்கள் உண்மையாகவும் இருக்கக்கூடும்.

இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு.

பொருட்கள் இருக்கின்றன, அவைகளைப் பற்றிய உண்மையும் இருக்கிறது, ஆனால், அதை அறியும் வழி நம்மிடம் இல்லை.  இத்தகைய தத்துவக் கேள்விகள் இயற்பியலிலும் இடம் பெற்றுள்ளன. இயற்பியல் தேற்றங்களில் காணப்படும் ‘இரட்டைகளை’ நினைத்துக் கொள்ளுங்கள். இதில் தேற்றம் எனச் சொல்லப்படுவது, நாம் வசிக்கும் உலகைப் புரிந்து கொள்ள கணித வழியில் ஒரு உலகை உருவாக்கிக் கொள்வதாகும். அப்படி உருவகிப்பது அறிதலின் முதற்படியாகும். நாம் கண்காணித்து ஆராயும் ஒன்று, மற்றொரு தியரியில் கண்காணிக்கப்பட்டவைகளோடு இணைந்து போவதை ‘சமம்’ அல்லது ‘இரட்டை’ என்று சொல்கிறோம். அதாவது, ஒரே பௌதீக அமைப்பிலிருந்து மாறுபட்ட விதங்களில் வந்தடைந்த சமமான முடிவுகள்; அந்த அமைப்பை விளக்கி, நம் முடிவுகளை வெவ்வேறு வழிகளில் நாம் அடைந்து அதன் இணைத்தன்மையை அதிசயிக்கும் செயல் முறைகள் என இதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு தியரியில் அடிப்படைத் துகளாக இருப்பது, மற்றொரு தேற்றத்தில் கூட்டு துகள் கட்டிகளாகத் தோன்றும்; அல்லது துகள் கட்டியாகத் தோற்றம் தருவது மற்றொன்றில் அடிப்படைத் துகள் எனக் காட்சி தரும். உதாரணமாக போசானையும், ஃபெர்மியானையும் எடுத்துக் கொள்வோம். இரண்டுமே துகள் வகையைச் சேர்ந்தவை. போசான், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், எந்தவொரு எண்ணிக்கையிலுமாக இருக்கும். ஃபெர்மியான் துகளில், எதுவும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஒன்றாக இருக்காது. இந்த இரண்டின் அறிவியல் குணங்கள் மாறுபட்டவை. எனவே அவை சமமாக இருக்காது என நினைப்போம். ஆனால், போசான் துகள் கட்டிகள் ஃபெர்மியானைப் போல செயல்பட முடியும் என்பதும், ஃபெர்மியான்கள், போசானைப் போல செயல்பட முடியும் என்பதும், அவைகளின் இந்த இரட்டைத் தன்மையும், இயற்பியலாளர்களை இப்படிப் பாட வைக்கிறது “இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு; உன்னையன்றி வேறு யாரோ சொல்லித் தருவார்?”

இதைவிட வியப்பும், குழப்பமும் தருபவை ஈர்ப்பு விசையின் இரட்டைத் தன்மையைப் பேசும் கோட்பாடுகள். ஒரு புறம், ஈர்ப்பு சக்தியைத் தவிர மற்ற சக்திகள் அனைத்தையும், பொருளையும் பற்றிப் பேசும் தியரங்கள். மறுபுறம், ஈர்ப்பு சக்தியையும் உள்ளிட்ட அனைத்து சக்திகள் மற்றும் பொருட்களைப் பற்றி பேசும் தியரங்கள். பார்வையில் மாறுபடும் தேற்றங்கள் இவை. பொருட்களின் பலவகை வடிவங்கள், பலவித சக்தி ஆற்றல்கள், மாறுபட்ட காலவெளி பரிணாமங்கள் என்று ஆடுகளமே வேறானவை. ஆயினும் இவை அடிப்படை இயற்பியலை துல்லியமாகச் சொல்கின்றன. அப்படியென்றால், உண்மை எது, பொய் எது என ஒன்றும் புரியவில்லை எனப் பாட நேரிடுகிறது. இரட்டையர் காட்டும் ஒற்றை உண்மையென எடுத்துக் கொள்வதா? ஒரு தியரி, ஈர்ப்பு விசை செயல் படுகிறது என்றும், மற்றது அது செயல் படவில்லை என்றும் சொன்னால், உண்மையான உண்மை எது? ஈர்ப்பு விசையின் யதார்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது? உள்ளிருக்கும் உண்மை வெளிப்படுமா அல்லது ஊகத்தில், கற்பனையில் பிறப்பதே உண்மை எனக் கருதப்படுமா?

ஓரு ஜென் கவிதை சொல்லும்: பனி பொழிந்து கொண்டிருந்தது; நான் சுவாசித்தேன். என் இறந்த உடல் கிடக்கிறது; நான் பனியைப் பார்த்திருந்தேன்.

இக்கவிதை அளிக்கும் திறப்புகள் ஏராளம். நாம் பேசி வந்த சிக்கலை இன்னமும் ஆழமாக்கும் அறிவியல் ஒன்று உண்டு. அது குவாண்டம். ஒரு அமைப்பின் குவாண்ட இயக்கம், இணைந்ததாக இருக்கலாம், ஒன்றின் மேல் ஒன்றாக ‘சூபர் இம்போஸ்’ நிலையில் மேலும், கீழுமாக  இருக்கலாம். அந்த ஷ்ரோடிஞ்ஜரின் பூனையைப் போல் உயிரோடு இருக்கலாம், அல்லது இறந்து போயிருக்கலாம். இதன் பொருள் தானென்ன? அது இரட்டை நிலையில் இருக்கிறதா, அல்லது எந்த நிலையிலும் இல்லையா? சில இயற்பியலாளர்கள் சொல்கிறார்கள்- அந்தப் பூனையை அல்லது அதன் நிலையை நாம் பௌதீகமாக அளக்க முயல்கையில் அது உயிர் உள்ள நிலைக்கோ அல்லது இறந்து விடும் நிலைக்கோ சரியும். பல உலகங்கள் என்னும் கருத்து கொண்ட இயற்பியலாளர்கள் இந்த இணை நிலை அல்லது மேல் நிலை, காலத்தில் தொடரும் ஒன்று என்று சொல்கின்றனர். தலை சுழற்றும் இனிய வழக்கு இது!

இத்தகைய கேள்விகள் எங்கே நம்மை இட்டுச் செல்கின்றன? லட்விக் விட்கென்ஸ்டெய்ன் (Ludwig Wittgenstein) தன் நூலான ட்ராக்டஸ் லாஜிகோ ஃபிலாசபிகஸ் என்பதில் ஒன்றைச் சொல்கிறார். அது, கீர்கிகார்ட்டின்  முந்தைய சிந்தனையை ஒட்டி அமைந்துள்ளது. அவர் சொல்கிறார்: நம் தேற்றங்கள், கருது கோள்கள் எல்லாம், ஏணிகள், வலைகள் போன்றவை. இலக்கை அடைந்த பிறகு அவை நமக்கு தேவைப்படுவதில்லை. விஜய் பாலசுப்ரமணியன் சொல்கிறார்: “நான், உண்மையை அறியும் முயற்சியில் இயற்பியல், நரம்பியல் போன்ற பல துறைகளை நாடி, உலகையும் அதைக் கட்டமைக்கும் மனதையும் ஆராய்கிறேன். இந்த வழியில் இயல்பான இடர்களான அறிவாற்றலும், கண்ணோட்டத் தடங்கல்களும் எழும், எழுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

அப்படியாவது உண்மையைக் கண்டறிய வேண்டுமா? சாக்ரடீஸ் சொன்னதாக ப்ளேடோ  சொல்கிறார்: ‘ நாம் சோம்பலற்ற, வீரம் நிறைந்த சிறந்த மனிதர்களாக உருவெடுப்பதற்கு, நாம் அறியாததை, அறிந்து கொள்ள முயற்சி எடுக்க முடியும் என நம்புவது சிறந்த வழி; மாறாக, நம்மால் அதை அறிய முடியாது என நம்பி, அந்த நோக்கத்தைக் கைவிடுவது சரியான ஒன்றல்ல. உண்மை இருக்கிறது, அதைக் கண்டறிய முடியும் என நம்புவோம். ஒரு வேளை அதைக் கண்டறிய முடியாவிட்டாலும், நாம் அதற்காகப் பயணிக்கும் பாதைகளில், எதிர் கொள்ளும் இடர்களைத் தாண்டியும், அந்தப் பயணம் நம்மை செம்மைப்படுத்தும் அல்லவா?”

மரபான இயற்பியல் மற்றும் குவாண்ட இயற்பியல் உண்மையைத் தேடுவதை மேலே பார்த்தோம்.  தத்துவங்களும் இதைத் தேடிப் பார்த்து இருளன்று, ஒளியன்று எனச் சொல்கின்றன. ஊக்கத்துடன் தேடுவோம்.

பெருங்குழப்பம், பட்டாம்பூச்சி விளைவு, இவற்றில் என்னென்ன மாற்றங்கள் அல்லது மாற்றமின்மை இருக்கிறது. வரும் தொடரில் பார்க்கலாம்.

காண வந்த காட்சி என்ன கன்னி நிலவே? 

கண்டு விட்ட கோலமென்ன கன்னி நிலவே?

உசாவி:

https://nautil.us/confessions-of-a-theoretical-physicist-787199/ by Mr. Vijay Balasubramanian 19/08/2024


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.