அறிவிப்புகள், வாசகர் கடிதம்

காலம் மாறிப் போச்சு

ரவி நடராஜனின் ’மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்’ வாசித்தேன்.

செயற்கை நுண்ணறிவைக் குறித்து செயற்கை நுண்ணறிவே நூறு கற்பனைகளைச் சொல்லும் காலத்தில், அசலான அனுபவத்தின் அடிப்படையில் முக்கியமான கட்டுரை.

ஆசிரியரின் கருத்துடன் பெரிதும் வேறுபாடில்லை. அதன் தொடர்ச்சியாக சில எண்ணங்களும், கேள்விகளும்

1. மின்னணுத் தட்டச்சுப் பொறி வந்தவுடன் ஸ்டெனோ வேலை காலி என்றார்கள். அது நடந்தது. எனினும், இன்றும் தட்டச்சுகிறோம். நாம் பேசுவதை, அப்படியே கணினி ஒலியாகவோ, எழுத்து வடிவிலோ, பிறருக்குத் தருகிறது. மூல உத்தியோகம் போகும்; வரும். எனினும், வருங்கால நுட்பத்தின் உபயோகமான பிரயோகம் துவங்கும். எவ்வாறு?

2. மாற்றம் ஒன்றே நிரந்தரம். இன்றைக்கு இயற்றறிவு (genAI) எல்லாவிடங்களிலும் நுழைகிறது, கலை, கல்வி, கற்பனை என்று எங்கும் வியாபிக்கிறது. அதற்கேற்றபடி நம்மை மாற்றி, மறு உருவாக்கம் அரங்கேற வேண்டும். எவ்வாறு?

3. இணையம் வந்தவுடன் வால் மார்ட், ஸ்பென்சர்ஸ் போன்றவர்கள் காணாமல் போவார்கள் என்றார்கள். ஓரளவு உண்மை. கே-மார்ட், பார்டர்ஸ் புத்தகக் கடை என்று பல்லாயிரணக் கணக்கான கடைகள் மூடப்பட்டன. ‘வாலு போச்சு… கத்தி வந்தது!’ கதையாக, ‘கடை போச்சு… சேவை உருவாகியது!’. உடற்பயிற்சி, உணவகம், அகவுணர்வை உற்சாகப்படுத்தும் விஷயங்கள் பல லட்சங்களாகப் பெருகியுள்ளது. அது போல் இயற்றறிவு எவ்வாறு சினிமாவையும், பத்திரிகையையும், வருங்காலத்தில் மாற்றும்?

4. அந்தக் காலத்தில் எல்.பி. இசைத்தட்டுக்கள். அது இருந்தால் மட்டுமே கச்சேரி. அதன் பின் எல்லோருக்கும், எங்கேயும் கேசட். அதில் சில பல சிக்கல் உண்டு. எனவே, சிடி. இன்னும் துல்லியம் தேவை. ப்ளூ ரே. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்; வீடியோ மட்டும்தான் வாசகைக்கு விடுவேன் என்று முரண்டு பிடிவாதங்கள் போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார். இன்றைக்கு, எப்படி ஏ.ஐ. இடம் பேச்சைத் தூண்டி நமக்கு வேண்டிய விஷயத்தை வரவழைப்பது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அத்துப்படியான சமாச்சாரம். புத்திசாலித்தனமான பதிலையும் வரவழைக்க வேண்டும்; அதற்கு காசும் அதிகம் செலவாகக் கூடாது; டக் டக்கென்று விஷயங்களைக் கக்க வைக்க வேண்டும் – இந்த மூன்றையும் (அறிவு + காசு + காலம்) தன் வாடிக்கையாளர் எவருக்கும் சுளுவாகத் தரும் வித்தை உணர்ந்திருக்க வேண்டும். இதை ஒழுங்காகச் செய்தால் நீங்கள்தான் அடுத்த மார்க் ஜக்கர்பெர்க் + ஜெஃப் பீசோஸ் + ஸ்டீவ் ஜாப்ஸ்!

5. உங்கள் வாடிக்கையாளரின் திருமண நாள் வருகிறதா? அதற்கு உரிய வாசகங்களோடு, நானே பிரத்தியேகமாக எழுதிய மாதிரி வசனங்களை உருவாக்கி, நீங்களும் நானும் இணைந்து எடுத்த நினைவுகளை விநோதமாக மீட்டெடுத்து, நம் உறவை பலப்படுத்தி, அடுத்த விற்பனையை ஊக்குவித்து, திருப்திகரமான அனுபவமாக மாற்றுவது எவ்வாறு என்று யோசியுங்கள். கல்லா கட்டுவீர்கள்.

மேலே சொன்னதெல்லாம் இன்றைய தேதியில் நேரடியாக இயற்றறிவால் இன்றைய நிலையில் செய்ய இயலாது. கூடிய சீக்கிரமே அதற்கு அந்தத் திறமை வரலாம். எனினும், இன்னும் இருபதாண்டுகளுக்காவது இதையெல்லாம் செய்து முடிக்க இடைத்தரகர் தேவை என்று கணிக்கிறேன். அந்தத் தொழிலுக்கு உங்களை மாற்றிக் கொள்வது ‘கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்; காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்’ எனத் தப்புக் கணக்கைப் போடாமல் சமயோசிதமாக செயல்படுவது ”எவ்வாறு?” என்னும் சூட்சுமம்!

வாழ்க குண்டலி! வளர்க குசலபுத்தி!! 

வாழ்த்துகள்

சக்தி மசாலா நிறுவனம், ஈரோடு வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா நிகழும் பகைக்கேடு ஆண்டு ஆவணி மாதம் 30 ஆம் நாள் 15.09.2024 ஞாயிறு அன்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். மகாதேவன் அவர்கள் தலைமையில் நிகழ்முறைப்படி நடைபெற இருக்கிறது.

15.09.2024
ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 மணி
பூ.சா.கோ.பொறியியற் கல்லூரி ‘D’ அரங்கம் பீளமேடு, கோவை – 641 004.

90470 87053, 9047087058

மனித வாழ்வு தரும் வலிகளையும் வேதனைகளையும் அதே சமயம் அவர்களின் கிருமித்தனங்களையும் கண்டு முறையே இரக்கமும் கோபமும் கொண்ட நாஞ்சில் நாடனின் எழுத்துக்களைத் தமிழ் மரபின் வழி சொன்னால் அறத்தின் குரல் என்று சொல்லலாம். இவரது படைப்புகளை வாசிக்கிறவர்கள் கவனமாக இல்லாவிட்டால் பகடி உள்ளிட்ட பலவற்றைத் தவற விட்டு விட நேரும். நாஞ்சில்நாடனை வாசிப்பது என்பது அவரது படைப்புகளைப் படிப்பது மட்டுமன்று, தமிழக கலாச்சாரப் பண்பாட்டின் சில அத்தியாங்களைப் படிப்பதும் ஆகும்.

அதிகாரத்திற்கு அஞ்சாத, தன்மானம் செறிந்த எழுத்து அவருடையவை. வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் இலக்கியத்தின் பல கிளைகளாய் பரந்து விரியும் அவர் எழுத்தின் மேன்மையை நுட்பமான வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆறு நாவல்கள், பன்னிரண்டு சிறுகதைத் தொகுதிகள், இருபது கட்டுரைத் தொகுதிகள், ஆறு கவிதைத் தொகுதிகளென இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களித்த இவரைச் சொல்லாய்வுச் செல்வர் என்றும், சொற்பொழிவாளர் என்றும் கடந்த 50 ஆண்டுகளாக உழைத்துத் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்ட பன்முக ஆளுமை என்றும் சொல்ல வேண்டும்.

சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா. விருது 2024

நிகழ்முறை

இறை வணக்கம்: செல்வி கெளரி (எ) ஞானநாயகி
வரவேற்புரை: திரு. மு. வேலாயுதம்
தலைமையேற்று விருது வழங்குபவர்: மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.ஆர்.மகாதேவன் அவர்கள்; உச்சநீதிமன்றம், டெல்லி
வாழ்த்துரை: டாக்டர் திரு. பி.சி. துரைசாமி அவர்கள் டாக்டர் சாந்தி துரைசாமி அவர்கள் (சக்தி மசாலா நிறுவனங்கள், ஈரோடு
எழுத்தாளர் திரு. ஆத்மார்த்தி அவர்கள்

ஏற்புரை: எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள்

நிகழ்ச்சித் தொகுப்புரை: திரு. இல. சிவசக்தி வடிவேல்

2024 இலக்கியத்திற்கான JCB பரிசு நெடும்பட்டியல்:

பட்டியலில் ஐந்து மொழிபெயர்ப்புகளும், நான்கு முதல் நாவல்களும் இடம்பிடித்துள்ளன:

  1. Chronicle of an Hour and a HalfSaharu Nusaiba Kannanari, Context/Westland
  2. Hurda, Atharva Pandit, Bloomsbury India
  3. Of Mothers and Other Perishables, Radhika Oberoi, Simon and Schuster India
  4. Lorenzo Searches for the Meaning of Life, Upamanyu Chatterjee, Speaking Tiger Books
  5. The Distaste of the EarthKynpham Singh Nongkynrih, Penguin India
  6. Talashnama: The Quest, Ismail Darbesh, translated from the Bengali by V Ramaswamy, HarperCollins India
  7. Maria, Just Maria, Sandhya Ramesh, translated from the Malayalam by Jayasree Kalathil, HarperCollins India
  8. SanatanSharankumar Limbale, translated from the Marathi by Paromita Sengupta, Penguin India
  9. Leaf, Water and FlowAvadhoot Dongare, translated from the Marathi by Nadeem Khan, Ratna Books
  10. The One Legged, Sakyajit Bhattacharya, translated from the Bengali by Rituparna Mukherjee, Antonym Collections

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.