மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்

கடந்த சில வருடங்களாக செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பற்றிய சர்ச்சைகள் உலகில் உள்ள பல ஊடங்கங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு புறம், மனிதர்களை, எந்திரங்கள் விழுங்கிவிடும் என்ற ஒரு வாதமிருக்க, இன்னொரு புறம், மனிதர்களுக்கு உதவிய பல புதிய தொழில்நுட்பங்களில் இதுவும் ஒன்று, பயப்படத் தேவையில்லை என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த டைப் அடிக்கும் வேலைகள் மறைந்ததால், இன்று மனிதர்கள் வேலையின்றி திண்டாடுகிறார்களா என்ற வாதமும் உண்டு. மாறாக, இன்று எல்லோரிடமும் அச்சடிக்கும் எந்திரங்கள் உண்டு. ஒழுங்காக தேர்வு செய்த வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே அழகாக உருவாக்க முடியும், திறமையிருந்தால்! இப்படி, பல வாதங்கள் நம் முன் வைக்கப்பட்டாலும், நம்மில் பலர், இவ்வித வாதங்களில் பாதி உண்மை இருக்கலாம், மற்ற விஷயங்கள் போகப் போகத் தெரியவரும் என்று சற்று cynical ஆக இருப்பது முற்றிலும் இயற்கை.

செயற்கை நுண்ணறிவுத் துறை சமீப காலமாக, ஜிபிடி போன்ற வஸ்துக்கள் வந்து மேலும் பயத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது. எதைக் கேட்டாலும், ஒரு பணிவான உதவியாளரைப் போல உருவாக்கித் தரும் வல்லமையை இந்த மென்பொருட்கள் பெற்று விட்டன. ஏன், கணினி நிரல்களைக் கூட தப்பில்லாமல் உருவாக்குகின்றன.  இதன் சக்தி எல்லோரையும் கதி கலங்க வைத்தாலும், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஊடங்கங்களில் அதைத் திரித்து, சமாளிக்கின்றன. உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத் தலைவர்களின் உள்நோக்கத்தைப் பற்றி அழகாக கிண்டலடிக்கிறார், அமெரிக்க நகைச்சுவையாளர் ஜான் ஸ்டூவர்ட்.

இக்கட்டுரை என்னுடைய சமீபத்திய சில செயற்கை நுண்ணறிவு (செ.நு.) அனுபவங்கள் சார்ந்தது. என் பார்வையில், இந்த அனுபவங்கள் பல துறைகளுக்கும் படிப்படியாக, இன்னும் சில மாதம்/வருடங்களில் பாதிக்கும் என்பதே. அனுபவத்திற்குள் போவதற்கு முன், சொல்வனத்தில், ”வண்ணமும் எண்ணமும் ஆயிரம்” என்ற கட்டுரைத் தொடர் எழுதியது நினைவிருக்கலாம். வண்ணப் படக் கலை எனக்குப் பிடித்த ஒரு பொழுது போக்கு. இதை எப்படி இணையத்தில் விற்பனை செய்து போராடி, சில படங்களை விற்றேன் என்பதை இந்தக் கட்டுரைத் தொடர் மூலம் விளக்கியிருந்தேன். தயவு செய்து ஒரு முறை அந்தத் தொடரைப் படித்த பின் இந்தக் கட்டுரைக்கு வந்தால், இங்கு சொல்லும் பல விஷயங்கள் தெளிவாகப் புரியும். 

என் போன்ற சாதாரண வண்ணப்படக் கலைஞர்களிடமிருந்து ஆரம்பிக்கும் இந்த செ.நு. பயணம், எப்படி படிப்படியான சமரசங்களுடன் வியாபித்து, கடைசியில் சாதாரண வண்ணப்படக் கலைஞன் என்ற ஒருவன் 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைப் செய்து பிழைப்பு நடத்தியவர் போல வரலாற்றில் ஒரு தூசியாக மாற வாய்ப்பிருக்கிறது. அடுத்த கட்டமாக, இந்த முறைகள் பெரிய கலைஞர்களையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு உண்டு என்பது என் வாதம். என்னுடைய இந்த வாதம், எதிர்காலத்தில் பொய்யானால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது.

முதல் கட்ட குதூகலம்

செ.நு. வண்ணப்பட உலகை முற்றிலும் மாற்றப் போகிறது என்று அறிந்தவுடன், இதனால், இல்லோரும் பயனடைவார்கள் என்று சந்தோஷம். ஸ்டாக் வண்ணப்பட உலகை பெரிதும் எளிமைப் படுத்தப் போகிறது, என் போன்ற பங்களிப்பாளரின் வேலை பளுவைக் குறைக்க உள்ளது என்ற ஒரு மிதக்கும் கட்டம் இது. 2022 -ல் இப்படிப் பட்ட ஒரு எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. பங்களிப்பாளரின் மிகப் பெரிய வேலை பளு, வண்ணப்படத்தைப் பற்றிய விளக்கம் மற்றும் வண்ணப்பட தேடல் சொற்களை பல இணையதளங்களிலும் உள்ளேற்றுவது. 

இரண்டாம் கட்ட சமாளிப்பு

செ.நு. தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில், சில ஸ்டாக் வண்ணப்பட நிறுவனங்கள் மற்றவற்றைக் காட்டிலும் மெதுவாக இருந்தன. மேலும், ஒவ்வொரு நிறுவனமும் தனக்குத் தோன்றியபடி செ.நு. -வைப் பயன்படுத்தத் தொடங்கின. இதில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. பங்களிப்பாளர்களுக்காகவே வாழ்கிறோம் என்பது ஒரு ட்ரம்ப் வாக்குறுதி போல, காற்றில் பறக்க விடப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தில் எப்படி தங்களுடைய வருமானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்பது இவர்களது முதல் நோக்கம். பங்களிப்பாளர்கள் இரண்டாம் பட்சம். இதனால், பங்களிப்பாளர்களின் வருமானத்தில் கை வைத்தார்கள். பல ஏஜன்சிகளும் சன்மானத்தைக் குறைக்கத் தொடங்கின.

மூன்றாம் கட்ட சமாளிப்பு

செ.நு. நுட்பத்தைப் பயன்படுத்துவதால் அனைவரும் நன்மை அடைவோம். இதனால், உங்களது வண்ணப்படங்கள் எங்களுடைய ஒரு முற்போக்கான ப்ராஜக்டில் பயன்படுத்த உள்ளோம். நமக்கிடையே இருக்கும் பங்களிப்பாளர்கள் ஒப்பந்தம் சற்று மாறுபடும் என்று அடர்த்தியான சட்டச் சொற்கள் வழியும் (அதாவது சாதாரணர்களுக்குச் சற்றும் புரியாத) ஒரு ஆவணத்தை ஏஜன்சிகள் அனுப்பத் தொடங்கின. இதில் பங்களிப்பாளரின் ஒப்புதல் எதுவும் கோரப்படவில்லை. இது 2023 -ல் நடந்தது. பங்களிப்பாளர்களுக்கு இருந்த வழிகள் இரண்டு: 1) ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு இருப்பது 2) தன்னுடைய படைப்புகள் அத்தனையும் ஏஜன்சி இணையதளத்திலிருந்து நீக்கி விட்டு, இந்த தொழிலுக்கு முடிவு கட்டுவது. பெரும்பாலர் முதல் வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். அத்துடன், புதிய வண்ணப்படங்களை மேலேற்றுவதைக் குறைக்கத் தொடங்குவார்கள். இதனால் ஏற்பட்ட விளைவுகள்:

  • தரவிறக்க அளவுகள் குறைந்தது. 2021 -ல் 100 வண்ணப்படங்கள் விற்ற ஏஜன்சியிடம், 60 வண்ணப்படங்கள் மட்டுமே விற்றன
  • 2021-ல், சராசரியாக, 40 சென்ட் விற்ற படம், 18 சென்ட்டிற்கு விற்றது

சரி, செ.நு. வளர்ச்சியால். ஏஜன்சிகள் தடுமாறுகின்றன. போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்த பங்களிப்பாளர்களுக்கு மேலும் புதிய திருப்பங்கள் காத்திருந்தன.

நான்காம் கட்ட சமாளிப்பு

ஜூன் 2023 -க்குப் பிறகு, ஏஜன்சியிடம் உள்ள நம் கணக்கில் அவ்வப்பொழுது பார்த்தால், 15 அல்லது 20 சென்ட்டிற்கு விற்பனை ஏதோ நடந்துள்ளது தெரியவரும். இதற்கு எந்த விளக்கமும் இருக்காது. 

இது ஒரு மிகப் பெரிய செ.நு. வளர்ச்சியால் வந்த மாற்றம்! 

அதுவரை, எந்த படம் எத்தனைக்கு விற்றது என்று தெரிந்து கொண்டு, சில படிப்பினைகளை, அதன் மூலம் கற்று, அதற்குத் தகுந்தவாறு இயங்குவது பங்களிப்பாளர்களின் வழக்கம். இங்கு என்ன நடக்கிறது? என்னுடைய புரிதலில் நடந்தது இதுதான்:

  1. முருகன், சிவா, வாணி மற்றும் லதா என்ற நான்கு வண்ணப்பட பங்களிப்பாளர்கள் இருப்பதாகக் கொள்வோம். இவர்கள் நால்வரும், ஒரு ஏஜன்சியின் தளத்தில் தங்களுடைய படைப்புகளை மேலேற்றியுள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
  2. ஏஜன்சியின் ஒரு வாடிக்கையாளர், தனக்கு, கடற்கரையில், ஒரு சின்னப் பையன் தன்னுடைய நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்ற ஒரு வண்ணப்படம், விளம்பரத்திற்கு தேவை என்று அணுகுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
  3. இன்றைய தேதிக்கு, யாரும் எவரையும் அணுகுவதில்லை. எல்லா விஷயங்களும் ஏஜன்சியின் இணையதளத்தில் நடந்து முடிந்துவிடும். ஏஜன்சி, வாடிக்கையாளருக்காக ஒரு மென்பொருளை இதற்காகவே தயாரித்து வைத்துள்ளது
  4. வாடிக்கையாளர், தன்னுடைய தேவையை ஒரு செய்தியாக, ஏஜன்சியின் இணையதளத்தில் உள்ளேற்றுகிறார். செய்தியை உள்வாங்கிய செ.நு. மென்பொருள், பதிலாக, சில வண்ணப்படங்களை வாடிக்கையாளர் பரிசீலனைக்காக முன்வைக்கிறது
  5. அவர் தேர்ந்தெடுத்த படங்கள்: அ) சிவா எடுத்த கடற்கரை வண்ணப்படம் ஆ) முருகன் எடுத்த பலூன்கள் வண்ணப்படம் இ) வாணி எடுத்த சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாடும் வண்ணப்படம் ஈ) லதா எடுத்த பிறந்தநாள் கேக் வண்ணப்படம். (இங்கு உதாரணத்திற்காக சொல்லப்பட்டுள்ளது)
  6. மென்பொருளிடம், இந்த நான்கு வண்ணப்படத்தையும் இணைக்க, வாடிக்கையாளருக்குத் தேவையான அடிப்படை வண்ணப்படம் ரெடி
  7. வாடிக்கையாளர், மேலும் வண்ணப்படத்தை மெருகேற்ற சில மாற்றங்கள், மற்றும், வாழ்த்துச் சொற்கள் இணைப்பது என்று மற்ற வேலைகளையும் மென்பொருள் மூலமே செய்து முடிப்பார்
  8. இந்தச் சேவைக்கு, ஏஜன்சிக்கு $10 விலை கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்
  9. வழக்கமாக, ஏஜன்சி, $8 தனக்கு வைத்துக் கொண்டு, பங்களிப்பாளருக்கு $2 கொடுத்து வந்தது என்று வைத்துக் கொள்வோம். இந்த செ.நு. மாற்றத்திற்குப் பிறகு, அதே $8 -ஐ தனக்கு வைத்துக் கொண்டு, மேலும் $1, செ.நு.  மென்பொருளுக்காகப் பிடித்துக் கொண்டு, பாக்கி இருக்கும் $1 -ஐ நான்காகப் பிரித்து, முருகன், வாணி, சிவா, மற்றும் லதாவிற்கு, தலா $.25 கொடுக்கப்படுகிறது
  10. கொடுக்கப்படும் $.25 ஒரு முழுப்படம் விற்று வரவில்லை. செ.நு. மென்பொருள் பிச்சு பிச்சு, பேருக்கு கொடுக்கப்படும் சன்மானம்! ஏனென்றால், இந்த நால்வரின் வண்ணப்படம் எதுவுமே முழுவதும் பயன்படுத்தப்படவில்லை!

சரி, அவ்வப்பொழுது எந்தப் படம் என்று அதுவும் சொல்லாமல், சில்லரை வந்தால், கசக்கவா செய்யும்? நாய் விற்ற காசு என்ன குரைக்கவா செய்யும்? இப்படி சமரசம் செய்து நகரவும் முடியாது. ஏனென்றால், அதே படங்களுக்கு, முன்பை விட வருடாந்திர வருமானம் குறைவு. சொல்லப்போனால், 50% அடி என்பது சாதாரணம்.

ஐந்தாம் கட்ட சமாளிப்பு

2024 -ல், பெரிதாக, எந்தப் படம் விற்றது என்று தெரிந்து கொள்வதே மிகவும் அரிது. அவ்வப்பொழுது விழும் சில்லரையை மட்டுமே வைத்து எதையும் எடை போடுவது இயலாத காரியம். இவ்வருட விற்பனை, பாதியாக இருந்த 2023 விற்பனையில் பாதியைத் தாண்டுவது கடினம்! என்னுடைய வாழ்வாதாரம் வண்ணப்படக் கலையல்ல. நல்ல வேளை, அது ஒரு பொழுது போக்கு விஷயமாதலால், தப்பித்தேன்.  

செ.நு. பாடங்கள்

  1. செ.நு. சமரசங்கள் எந்த ஒரு துறையிலும் தவிர்க்க முடியாதது. எது நடந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம் – முதல் கட்ட குதூகலம், நிலைக்காது!
  2. உங்களது வாழ்வாதாரம், இன்னொரு நிறுவனத்தை சார்ந்திருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனம், செ.நு. -வை அனுசரித்து மாற்றங்கள் கொண்டு வந்தால், பெரும்பாலும், நிறுவனத்தின் லாபம்தான் முதல் குறி. இதனால், உங்களது வாழ்வாதாரம் பாதிப்பதற்கு வாய்ப்பு அதிகம்
  3. கடந்த 3 ஆண்டுகளாக, என் போன்ற சிறு கலைஞர்கள், தொடர்ந்து செ.நு. சமரசம் செய்து, படிப்படியாக வருமானம் குறைந்த நிலையில் இருப்பது, இந்தக் கட்டுரையிலிருந்து தெளிவாகியிருக்கலாம்
  4. செ.நு. மாற்றங்களின் உந்துகோல் நீங்களாக இல்லாத பட்சத்தில், இந்தத் தொழில்நுட்பம் அனைவருக்கும் லாபகரமாக இருக்கும் என்பதெல்லாம் பூச்சுற்றல்
  5. வண்ணப்படக்கலை விலையுயர்ந்த எந்திரங்கள் மற்றும் உபரிகள் தேவையான தொழில். திருமண, விளம்பர மற்றும் சில வாய்ப்புகள் தவிர, இணையத்தின் மூலம்பொருள் ஈட்டுவது மிகவும் குறைந்துவிடக்கூடிய வாய்ப்புகள் இந்தாண்டிலிருந்தே பார்க்கவிருக்கிறோம்

அடுத்த கட்டம் என்ன?

செ.நு. தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்வதால், அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிப்பது அபாயமானது. ஆனால், இதில் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு, சில சமீபத்திய நிகழ்வுகளும் காரணம்.

  1. எல்லா ஏஜன்சிகளும் ஒரே தொழிலில் சமமானவை அல்ல. சில வண்ணப்பட விற்பனையில் வெற்றி பெறுகின்றன. சில விடியோக்கள் விற்பனையில் வெற்றி. சமீபத்தில், என்றுமே விற்காத சில விடியோக்கள் திடீரென்று விற்றது போலத் தோற்றமளித்தது. சற்று தோண்டியதில் தெரிய வந்தது இது: வண்ணப்பட வெற்றி ஏஜன்சி ஒன்று விடியோ வெற்றி ஏஜன்சியுடன் கைகோர்த்து, செ.நு. தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க, ஒரு முயற்சி எடுத்து, சின்ன அளவில் சன்மானம் கொடுத்தார்கள். இப்படி, ரகசியமான ஒப்பந்தங்கள் நிகழ, என் போன்றவர்களுக்கு இது நல்ல செய்தி – ஆனால், விடியோ விற்பனையை நம்பியிருக்கும் பலருக்கு அடி
  2. அடுத்த கட்டமாக, பங்களிப்பாளர்களின் வண்ணப்படங்கள் ஒரு விடியோவாக பயன்படுத்தப்பட்டு, பெருவாரியாக சன்மானம் குறைய வாய்ப்புண்டு
  3. இதன் இறுதிக்கட்டம், புதிய வண்ணப்படங்கள், செ.நு. நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட வண்ணப்படங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டால், யாருக்கும் சன்மானம் கொடுக்க தேவையில்லாமல் போய்விடும். இன்னும் ஐந்தாண்டுக்குள் இது நிகழ வாய்ப்புண்டு என்று நான் நினைக்கிறேன்

மாற்றி யோசி

மேலே சொன்ன விஷயங்கள், முழுவதும் பிடிபடவில்லை எனில், சற்று மிகைப்படுத்தப்பட்ட இசை உதாரணம் இதோ:

  1. இளையராஜா, வித்யாசாகர், ரஹ்மான் என்ற மூன்று பெரிய இசையமைப்பாளர்களும், தங்களது இசையை வானொலி, டிவி என்று சிடி தவிர மற்ற ஊடகங்கள் மூலம் சன்மானம் பெற்று வெற்றி பெறுகிறார்கள்
  2. அடுத்தபடியாக streaming services என்ற இணையத்தில் சந்தா கட்டி இசை கேட்கும் வழி பிறக்கிறது. இதனால், அம்மூவருக்கும் சன்மானம் கூடுகிறது
  3. செ.நு. தொழில்நுட்பம், விந்தையான ஒரு சேவையை அறிமுகப்படுத்துகிறது. பல்லவியை ராஜா பாடலிலிருந்தும், முதல் சரணத்தை வித்யாசாகரின் பாடலிலிருந்தும், இரண்டாம் சரணத்தை ரஹ்மான் பாடலிலிருந்தும் கோர்த்து, புதிய பாடலை உருவாக்கி வெற்றி பெறுகிறது. வழக்கமான சன்மானத்தில் மூன்றில் ஒரு பங்கை இம்மூவருக்கும் கொடுக்கையில், அவர்களும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறார்கள்
  4. அடுத்த கட்டமாக, செ.நு. இணையதளம், பாடல் தேவையான சினிமா டைரக்டருக்கு, கொடுக்கப்ட்ட கவிதைக்கு, சிலபல இசையமைப்பாளர்களின் ட்யூன்களைப் பொருத்தி ஒரு புதிய பாடலை உருவாக்குகிறது. இதில் பின்னணி இசை, மற்றும் பாடல் மெட்டு என்று 20 இசையமைப்பாளர்களின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். மூன்றில் ஒரு பங்கு சன்மானம் பெற்ற ராஜா, ரஹ்மான் மற்றும் வித்யாசாகர், இதனால், இருபதில் ஒரு பங்கு பெறுவார்கள்
  5. போகப் போக, செ.நு. பாடல்கள் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய செ.நு. பாடல்கள் யாருக்கும் சன்மானம் கொடுக்காமல், இந்தத் துறையை முற்றிலும் அழித்துவிடும்!

நான் இங்கு சொன்ன இசையமைப்பாளர்கள் கெட்டியான சட்ட ஆலோசகர்கள் உடையவர்கள். ஆனால், அதிக வாய்ப்பில்லாத திறமையான இசையாளர்கள் ஏராளம். இணையத்தில் இவர்களது படைப்புகள் எல்லாம் கிடைக்கும். அத்துடன், அதிக வாய்ப்பில்லாதவர்களின் ட்யூன்களை மற்ற ட்யூன்களுடன் இணைத்து புதிய ட்யூன்களை உருவாக்குவது, மிகவும் சல்லிசான செ.நு. விஷயம்.

இதெல்லாம் நடக்கக்கூடாது என்பது என் ஆசை. ஆனால், செ.நு. தொழில்நுட்பத்திற்கு,  இந்த ஆசையெல்லாம் ஒரு பொருட்டல்ல. இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் என்னென்ன சேதங்கள் காத்திருக்கின்றனவோ?

தொடர்புள்ள பதிவு


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.