ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போகும் முன் அவர் எழுதிய படைப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது வாசித்துவிட வேண்டும் என்ற எளிய விதிக்கு ஒப்புக் கொடுத்திருப்பதால் – யுவன் அவர்களைப் பார்க்கப் போகும் நாளுக்கு முன் முடித்து விட வேண்டும் என்று “ஊர் சுற்றி” நாவலை 2-3 வாரங்கள் முன் தொடங்கிவிட்டேன். இந்த வருடம் ஆரம்பத்தில் அவரின் “எண்கோண மனிதன்” வாசித்திருந்தேன். சிறந்த கதை என்பது ஒரு எழுத்தாளன் எவ்வளவு திறமையாக “பீலா” விடுகிறான் என்பது ஆசானின் சமீபத்திய வாக்கு. வடிவம் சார்ந்து பல முயற்சிகளைச் செய்து பார்ப்பவர் என்று சொன்னாலும், என்னளவில் அவர் மிகத் திறமையான கதை சொல்லி. வெள்ளி பாத்திரத்தில் வைத்துப் பரிமாறினாலும் சமையல் சரியாக இருந்தால் தான் அதற்கு மதிப்பு. இங்கே, சரியாக மட்டுமில்லை மிகச் சுவையாகவும் படைக்கிறார் – அதுவும் ஒவ்வொரு முறையும். இது இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு முறை இரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் அதே உச்சத்தோடு ஒருவர் ஒன்றை நிகழ்த்தவே, அவர் முன் வரிசையில் தானாக வந்து சேர்கிறார்.
சீதாபதி கிழவரின் பால்யத்தில் தொடங்கும் முதல் அத்தியாயம், அடுத்ததில் அவர் கிழவனாக இருந்து தான் நாடு முழுதும் சுற்றும் கதையைச் சொல்வதாக தொடர்கிறது. சொல்வது மட்டுமல்ல, தேவைப்படும் இடங்களில் கதை கேட்கும் உதவி இயக்குநர் கதாபாத்திரம் மனதில் எழும் கேள்விகள் அடிக்குறிப்பு பகுதியில் கொடுத்தபடி வருகிறார். இங்கே தான் யுவனின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது – எழுத்து என்பது தன்னியல்பாய், நம்மை மீறி நடைபெறும் ஒன்று. அதுவும் நாவல் போன்றவை ஒருவன் தானே ஒரு உலகத்தை உருவாக்கி, அதில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தையும் எழுப்பி, அதில் ஒவ்வொன்றிலும் தானாகவே ஆகி, பேசி – என்று உண்மையில் பிரம்ம வேலை. சீதாபதி சொல்லும் கதையில் தொடர்பற்றவற்றை, விடுபடுதல்களை, தாவிச்செல்லுதலை எல்லாம் மற்றொரு கதாபாத்திரம் வழியாக சொல்ல வைத்துப் படிப்பவனுக்கு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் காட்டுகிறார். எளிய வாசகனின் கேள்விகளை அவரே கேட்டு விடுவதால் அவன் குழம்புகிறான், சமயத்தில் அவன் யோசிக்காத செய்திகளைப் படிக்கையில் அப்படியா என்று வியப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
கடைசி ஒரு வாரம் – இந்தியா தென்னாபிரிக்கா 20-20 இறுதிப் போட்டி போல விறுவிறுப்பாக நகர – ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் என்று மீறா கோட்டை ஒன்று போட்டு, முடிவில் ஒரு நாள் முன்னதாகவே முடித்துவிட்டேன். இந்தியா வெற்றி 🙂 ஒரு வாரம் முன்னரே சௌந்தர் அண்ணா குடும்பத்தோடு நியூ ஜெர்சியில் பழனி அண்ணா வீட்டிற்கு வந்து விட்டதால் -சற்று முன்னதாகவே இலக்கிய ஜமா தொடங்கிவிட்டது. வெள்ளி இரவு அவர்கள் அங்கிருந்து டொரோண்டோ வர, விண்ட்ஸர் ல் இருந்து சென்று அவர்களோடு இணைந்து கொண்டேன். காலையில் நேரத்தோடு யுவன் அவர்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டி, ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு நள்ளிரவு தாண்டி உறங்க சென்றோம்.
பொதுவாகவே, டொரோண்டோ வில் சமயத்தில் எறும்புகள் நம்மை மீறி செல்லும் அதிசயங்கள் நடப்பதுண்டு – அது ஒவ்வொரு நாளும் நடக்கும் என்றாலும் அது அதிசயமே. பேரதிசயம் என்பது எறும்பை வெற்றி கொள்வது. பனிக்காலங்களில் வெள்ளை பஞ்சுகளில் வழுக்கிடாது இருக்க மெதுவாக நகரும் வண்டிகள், கோடை காலங்களில் சாலைப் பணிக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும். மேலும், உலகத்திலே ரஷ்யாவிற்கு அடுத்து நிலப்பரப்பில் பெரியதாக இருந்தாலும், 80 சதவீத இடம் வாழ இயலாத ஒன்றாக இருக்கும் கனடாவில், டொரோண்டோ அதை சுற்றியுள்ள இடங்கள் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் – பழைய பாசமலர் படம் பார்த்த பெருசுகளின் கண்களின் நீரைப் போல. ஒரு வழியாக அவர் வீட்டை அடைந்த எங்களை வாசல் வரை வந்து வரவேற்றார். திறந்து வைத்திருந்த மடிக்கணனியை பார்க்க அடுத்த படைப்பு உலையில் கொதித்து கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. கொஞ்சம் நேரம் அறிமுகங்களுக்கு பிறகு அவர்களின் இல்லத்தில் காலை உணவு. மஹேஸ்வரி அக்கா யுவன் அவர்களின் கடிகாரக் குருவி சிறுகதை ஒட்டி வரைந்த ஓவியத்தை பரிசளித்தார்கள். கிருதிக்கு முன் ஆலாபனையாக யுவனின் பேரன் ஆதவ் அபாரமாக பேசிக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் வடகொரியா, மறுநிமிடம் அவனுடைய கார் சேகரிப்பு, இன்னொரு நிமிடம் வேறொன்று என மாறி மாறி போய் கொண்டிருந்தான். பின் பேரனிடம் தன்னுடைய அடுத்த 36 மணி நேர பயணத்திற்கு அனுமதி வாங்கி எங்களுடன் கிளம்பினார்.
மதியம் முத்துலிங்கம் ஐயாவை பார்க்க இருப்பதால், அவருடைய நேரம் தவறாமை குறித்தும் அறிந்திருப்பதால், அவரை பார்க்கும் இடத்திற்கு 30 நிமிடம் முன்னதாகவே சென்றோம். அருகே இந்த நிழல் அமர்கையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்ப தயக்கங்கள் உடைந்து பேசிக்கொண்டிருந்தோம். தன்னோடு பேச வருபவர்களை ஒரு எளிய சூழலுக்கு கொண்டு வருவதில் வெகு நேர்த்தியானவர். ஒவ்வொரு கருத்தையும் சொன்னாலும் அதற்கு எதிர் கருத்தும் இருக்க முடியும் அதற்கும் இடம் இருக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக பதிவு செய்தபடி இருந்தார். நகைச்சுவை நூற்கள் கோர்த்த உரையாடலை தொடர்ந்து முத்துலிங்கம் ஐயாவோடு மதிய உணவு முடித்து சிறிது ஓய்வெடுக்க விடுதிக்கு வந்தோம். அங்கே எங்களோடு திருலோக சீதாராம் அவர்களின் மகன் சுப்ரமணிய சீதாராம் இணைந்து கொண்டார். தற்செயலாக பாரதி குறித்தே உரையாடல் அமைந்தது. கவிதை அல்லாது பாரதி படைத்த மற்ற படைப்புகளை குறித்து வெகு நேரம் யுவன் பேச பேச அவருடைய உரைநடை பெரிதும் அறியாத எனக்கு இன்னொரு கதவு திறந்து கொண்டது. எந்நேரமும் தேசப்பற்று கவிதை யாத்து சூடேறிய ஒரு தோற்றத்தை வெகுவாக பார்த்த பலருக்கு அவருடைய இன்னொரு முகத்தை காண வாய்ப்பு கிடைத்தது.
பின் வெங்கடரமணன் அவர்கள் இல்லத்திற்கு செல்ல, “காலம்” செல்வம் அவர்களும் அங்கே வந்திருந்தார். மதிய பாரதி உரையாடல் குறித்து அவரிடம் பேசுகையில், ஒரு முறை சிங்கத்தை கண்ட பாரதி அதன் அருகில் போக முயல, தடுத்த செல்லம்மாவிடம் “அது காட்டுக்கு ராஜா, நான் பாட்டுக்கு ராஜா” என்று சொல்லி மேலே செல்ல , செல்லம்மா உடனே “ஆண்டவா,சிங்கத்துக்காவது நல்ல அறிவைக் கொடு” என்று வேண்டிக்கொண்ட நிகழ்வை பகிர்ந்து கொண்டார். காலையில் இருந்து அவரை தொடர்ந்து கவனித்தே வந்ததில் “I don’t own anything and at the same I don’t disown” என அவர் ஒரு முறை சொன்னதை அவர் உரையாடல் முழுக்க காண கிடைத்தப்படி இருக்கிறது. இலக்கியம் உங்களை மாற்றும் மாய மருந்து, எல்லா பிரச்சனைகளை தீர்க்கும் சர்வ லோக நிவாரணி எல்லாம் கிடையாது, மாறுவதற்கான பத நிலையில் நீங்கள் இருக்கையில் அது இன்னும் துரிதப்படுத்தும் அவ்வளவு தான் என்றார். ஒரு பார்வைக்கு அவர் எதனோடும் (இலக்கிய hero worship ஐயும் தான்) சேராது மிக தள்ளி இருப்பது போல் தோற்றமளித்தாலும், தான் நம்பும் ஒன்றை மிக தீவிரமாக அதற்கே உண்டான தரவுகளோடு பேசியே வந்தார். அதே போல் எந்த ஒரு உரையாடலிலும் எதிர் இருப்பவர்கள் எங்கேயும் காயம் பட்டிடாது மிகுந்த கவனத்தோடே பேசினார். அவரை பொறுத்த வரையில், தாட்சண்யமே – பிறவற்றின் மீதான கருணையே முதன்மை, அதனால் சிறு இழப்பை தாங்க வேண்டிருந்தாலும் சரி.

இரவு நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த உரையாடல். யுவன் பிரமாதமான கவிஞர். ஜென் கவிதைகளை “பெயரற்ற யாத்ரீகன்” என்று மொழிபெயர்த்து இருக்கிறார். மதியமே கவிதை குறித்து பேசி இரவு உரையாடலுக்கு முன்னுரை எழுதியாயிற்று. 2019ல் ஜெ அமெரிக்க வந்தபோது, வாஷிங்டன் பயணத்தில் அவரும் மற்ற நண்பர்களோடு வெள்ளை மாளிகை க்கு எதிர்பக்கம் இருந்த பூங்காவில் நடந்துக்கொண்டும் அமர்ந்தும் நடந்த நீண்ட உரையாடலில் யுவன் அவர்களின் கவிதையில் இருந்து ஒரு வரி – “ஜுவாலையின் நடனம்”. அதை தேவதச்சனிடம் காண்பிக்க, அவரை பாராட்டிய நிகழ்வை சொல்லிக்கொண்டிருந்தார். இதை மதியம் நிகழ்ந்த பாரதி பேச்சுக்கு நடுவில் ஞாபகம் வந்து சொன்னேன். அது மோகனுக்கு மிகவும் பிடித்த வரி – ஏழு வருடம் முன் நடந்த ஒன்றை இப்போது ஞாபகம் வைத்து நீங்கள் சொன்னது மிகவும் பெரிய விஷயம் என்றார். “காலையில ஒரு விஷயம் சொன்னேனே , அதுக்குள்ள மறந்து போயாச்சா?” என்ற என் “இதய”த்தின் குரல் ஊடே மறுபக்கத்தை ஒலித்துச் சென்றது.
இரவு உரையாடலில் கவிதை படிப்பது, “புரிந்துக்கொள்வது”, எழுதுவது என்பதைக் குறித்த அடிப்படை சந்தேகங்களை, விடையில் இருந்து மற்றொரு வினா என்று நீண்டு கொண்டிருந்தது. மேலும், தேவதச்சன் கவிதைகள் சிலவற்றை படித்து அது எதனால் சிறந்த கவிதை என்று எங்களுக்கு விளக்கினார். கவிதை இரவாக அது மெல்ல மாறிக்கொண்டே வந்தது. தன்னுடைய நிலவை சுட்டும் விரலில் இருந்து ஒரு உதாரணம் எடுத்தார் – சுவாங் சூ என்ற துறவி தான் கனவில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்து, பின் நினைவுக்கு வந்ததும் ஒரு கேள்வி எழுந்து – தான் வண்ணத்துப்பூச்சியை கனவு கண்ட சுவாங் சூ வா அல்லது சுவாங் சூ வாக கனவும் காணும் வண்ணத்துப்பூச்சியா என்று? இந்த குறுங்கதை சொல்லும் கருத்திலும், சொன்ன விதத்திலும் கவித்துவம் நிறைந்த ஒன்று எனவும், அத்வைத தத்துவத்தை எளிதாக விளக்குகிறது என்றார். உடனே – மெக்ஸிக்க கவிஞர் ஆக்டேவியா பாஸ் அவர்களின் இன்னொரு கவிதை – அதில் நியூயார்க் நகரத்தில் ஒரு சாலையில் வண்டிக்குள் இருந்த போது , இடையில் பறந்து போன வண்ணத்துப்பூச்சியை பார்த்து – இது சுவாங் சூ வாக இருக்கலாம் என்று உள்ளே இருப்பவர் சொல்கிறார் – பதிலுக்கு இவர் “வண்ணத்துப்பூச்சிக்கு தெரியாது – அது தான் சுவாங் சூ வாக கனவு காண்கிறதா, அல்லது வண்ணத்துப்பூச்சியாய் கனவு காணும் சுவாங் சூ வா என்று? ஆனால் வண்ணத்துப்பூச்சி பறந்தது” என்று துவைதம் சிந்தனை தொடுவதை சொன்னார்.
ஒரு முறை தேவதச்சன் இவருடைய தொடக்ககால கவிதை ஒன்றை படிக்க, பின் ஒரு பேனா எடுத்து மேலே 20 வரி, கீழே 20 வரி அடித்து விட்டு, நடுவில் இருப்பதே கவிதை என்று சொன்னதாக பகிர்ந்தார். அதே போல் தேவதச்சன் தன்னுடைய வாழ்க்கை பார்வைகளை எப்படி மாற்றினார் என்று வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து சொல்லிக்கொண்டு இருந்தார். தன்னுடைய முழு வாழ்க்கையை ஒருவர்க்கு சமர்ப்பணம் செய்யவேண்டுமென்றால் சற்றும் யோசிக்காமல் தேவதச்சனுக்கே என்று மீண்டும் பதிவு செய்தார். (“சுழற்பாதை யாத்ரீகன்” ஆவணப்படத்தில் தேவதச்சன் இவரிடம் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று சொல்லிருப்பார்). இசை, ஆனந்த்குமார், லக்ஷ்மி மணிவண்ணன், தேவதேவன், மதார், கல்பற்றா நாரயணன் என பல கவிஞர்களின் கவிதைகளை படித்து படித்து காண்பிக்க அவர் அதை தன் ரசனையில் வைத்து விளக்கினார். இடையில் நான் எழுதிய ஒரு வரியை சொல்ல, கவிதையில் அதை உங்களுக்கு உண்டாக்கிய தோற்றுவாய் எதுவோ அது மட்டுமே எழுத வேண்டும். அது வழியாக நீங்கள் உருவாக்கி கொண்ட கருத்தை எழுத கூடாது. ஒரு கவிதை முழுமையில், தானே அது என்னவென்று உங்களுக்கு காண்பித்து விடும் என்றார்.
ஜெயமோகன், தேவதச்சன், சுந்தர ராமசாமி – இந்த மூன்று பெயர்கள் தொடர்ச்சியாக வந்தபடி இருந்தது. சுந்தர ராமசாமி தங்களுக்கு கொடுத்த சுதந்திரம், ஒரு படைப்பை குறித்த பன்முக உரையாடல், அதை தொடர்ந்து நடக்கும் விவாதம் – இவை எப்படி தன்னை போன்ற இளம் படைப்பாளிகளுக்கு அன்று உதவியது என்று பகிர்ந்தார். மோகன் என்று அவர் அழைக்கும் ஜெயமோகனோடு இருக்கும் ஆழமான நட்பு குறித்து பல நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டார். முதன் முதலில் குற்றாலத்தில் நடந்த இலக்கிய முகாமில் பார்த்து உடனே நட்பால் பீடிக்கப்பட்டது, ஒரு முறை சொல்புதிது இதழுக்காக ஜெயமோகன் இவரை நேர்காணல் எடுத்திருக்கிறார், ஆனால் தன்னுடைய ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு சொல் மட்டுமே ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு, பின் ஒரு வாரம் கழித்து, முழு நேர்காணலையும் எழுதி அனுப்பிருக்கிறார் – அதில் அவர் சொன்ன வரிகள் அப்படியே இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார். இவர்களுடைய ஒரு பயணத்தில், கால் வலியால் ஏற்பட்ட கொப்பளங்களை இரவில் அவ்வப்போது வந்து ஜெயமோகன் அதை பார்த்து பார்த்து சென்றதை நண்பர் தண்டாயுதபாணி சொன்னதை கேட்டு நெகிழ்ந்ததையும் பகிர்ந்தார். பழனி அண்ணாவின் பாடலோடு இரவு உரையாடலை நிறைவு செய்யும் போது மணி இரண்டு.
அடுத்த நாள் கொஞ்சம் நிதானமாக எழுந்து, கிளம்பி, சிறிய காபி வித் யுவன் நிகழ்வு. அப்போது தான் கவனித்தேன் – கண்ணாடி குவளையின் கைப்பிடியை நான்கு விரல்களை மட்டும் பயன்படுத்தி பிடித்து, கட்டை விரலை தனியாக வைத்து குடிக்கும் காட்சியை. பின் தங்கி இருந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். “காலம்” செல்வம் அவர்கள் – யுவனோடு ஒரு உரையாடல் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். மழையால் சற்றே வருகை குறைந்திருந்தாலும்,வந்திருந்தவர்கோளடு ஒரு நிறைவான சந்திப்பு. சௌந்தர் அண்ணா யுவனின் படைப்பில் உள்ள பொதுவான மற்றும் தனித்தன்மையான அம்சங்களை குறித்து பேசினார். பழனி அண்ணா கானல் நதி குறித்து ஒரு சிறு உரை நிகழ்த்தினார். அந்த உரையின் பாதிப்பில் நிறைய பேர் கானல் நதி புத்தகம் வாங்கி சென்றதாக “காலம்” செல்வம் அவர்கள் பின்னர் சொன்னார்.
நிறைவுரையாக,அவரை வீட்டில் விட்டுச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்தது. அதில் இரண்டு நாள் உரையாடலில் கவிதை குறித்த பல திறப்புகளை நான் அடைந்ததும், ஆனால் முழுதாக பெற்றுகொண்டேனா அதை வெளிப்படுத்துவேனா என்று தெரியவில்லை என்றதற்கு, அவமானங்கள் கடந்தே மேலே செல்லவேண்டும், அதனால் தொடர்ந்து வாசிப்பது, பகிர்வது, எழுதுவது மட்டுமே நாம் செய்யக்கூடியது என்றார். வீட்டின் வாயிலில் ஓடி வந்த பேரனிடம், முகம் முழுதும் முத்தங்கள் பெற்று, இருவரும் “சக்தி”களைப் பரிமாறிக்கொண்டனர். காபி குடித்து கிளம்புகையில் கட்டி அணைத்து விடைகொடுத்தார். மனதிற்கு நெருக்கமான எழுத்தாளனின் தொடுகை என்பது எப்போதும் ஒரு மின்சாரத்தை பாய்ச்சக்கூடியது. சிறிய குழந்தையும், கனிந்த ஞானக்கருணையும் சேர்ந்த ஒன்றை நான் உணர்வேன். வீட்டிற்கு போனதும் ஒரு text அனுப்பிடு என்றார்.
மூன்று மணி நேர பயணத்தில் முப்பத்தாறு மணி நேர நிகழ்வை மீட்டிக்கொண்டே வந்தேன். யுவனின் பேச்சிலும் அவருடைய படைப்பிலும் காணும் ஒற்றுமை என்பது – நடு முள் எப்போதும் இரண்டு பக்கமும் போய் போய் வரும் என்பது தான். இது தான் என்று அவை எதையும் நிறுவுவதில்லை அல்லது உறுதியாக நமக்கு உரத்து சொல்வதில்லை, ஒரு பொம்மையை எடுத்து ஒரு குழந்தை அதை எப்படி எல்லா பக்கமும் சுற்றி சுற்றி பார்க்குமோ அது போல் தான் அவரும். எந்த உரையாடலிலும் எதிர் இருப்பவர்கள் ஒரு திரையிட்டு கொள்ளலாகாது மாறாக தொடர்ந்து பேச வேண்டும், இலக்கியம் குறித்த எந்த ஒரு சந்தேகத்தை கேட்கவும் தயங்காதிருக்க பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சில சுமார் கேள்விகள் கேட்பதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா அல்லது நேரமிழ்ப்பு தானே என்ற கேள்விக்கு, ஒரு எழுத்தாளன் என்பவன் இதற்கு எல்லாம் சேர்த்து தான் இருக்கிறான் ஆக இதெல்லாம் அதன் பகுதியே என்பதை மிக எளிய அடங்கிய நடையில் சொன்னார். ஜெயமோகனின் இன்னொரு உருவம் யுவன் என்றும் அல்லது யுவனின் இன்னொரு உருவம் ஜெயமோகன் என்றும் தோன்றியது. இரண்டு பேருடைய சிந்தனைகள் ஏறக்குறைய ஒன்று, இருவர் இருக்கும் இடங்களிலும் வெடித்து சிரிக்கும் நகைச்சுவைக்கு இடம் இருக்கும், ஆனால் ஒரு சில அடிப்படை விதிவிலக்குகளும் உண்டு. சுருங்க சொன்னால் – ஒன்று தத்துவ வழி, மற்றொன்று பக்தி வழி – சென்று சேரும் மெய்யறிவு ஒன்றுதான். இரண்டு நாள் முழுதும் காரின் முன் இருக்கையில் அமர்ந்து அவர் இருந்ததை, அவர் பேசிய விஷயங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன். ஓரத்தில், மெல்லிய ஒலியில், தேவதச்சனின் கீழே இருக்கும் கவிதை உடனிருந்தபடியே.
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
