அடுத்த பாகம்
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ।
निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ॥ ३० ॥
ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன:
நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ (1:30)
எனது சருமம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. ஊசலாடும் என் மனம் குழப்பத்தில் சுழல்கிறது. என்னால் இனி என்னை நிலையாக வைத்திருக்க முடியவில்லை. ஓ கிருஷ்ணா, நான் துரதிருஷ்டவசமான சகுனங்களை மட்டுமே பார்க்கிறேன்.

ஒரு பாடல்
நானாட்டி படுகு (నానాటి బదుకు) என்னும் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை அகஸ்மாத்தாக காதில் விழுந்தது. அர்த்தத்தைத் தேடுமளவு எம்.எஸ். உருக்கமாகப் பாடியிருந்தார். ஆங்கிலம் வழியாக, கூடிய வரையில் தெலுங்கு அசல் வார்த்தைகளைக் கொண்ட மொழியாக்கம்:
பல்லவி
அன்றாட வாழ்க்கை நாடகம்
கண்ணாடி உதிர் கானல் பிம்பம் கைவல்லியம்
சரணம் 1
பிறப்பதும் உண்மை, செல்வதும் உண்மை
இடையில் பணி நாடகம்
கண் முன் இப்பிரபஞ்சம்
கட்டக் கடைசியில் கைவல்யம்
சரணம் 2
குடிக்க அன்னம், சுற்றப் புடைவை
இடையில் பணி நாடகம்
ஓடி கரைகண்டு உபய கர்மங்கள் தாண்டி
கடைவழிக்கும் அப்பால் கைவல்யம்
சரணம் 3
அறாது பாபம், தீராது புண்ணியம்
சிரிப்பும் சிரிக்கப்படும் காலமும் நாடகம்
மேலே ஒருவன் எல்லாவற்றுக்கும் உயர்
ககனம் மீதிது கைவல்யம்

ஒரு பயணம்
இதுவரை ஜெர்மனியில் விமான நிலையம் தவிர்த்து எங்கும் சென்றதில்லை. இம்முறை, வந்த விமானத்திற்கும் செல்லும் விமானத்திற்கும் இடையில் பத்து மணி நேரம் இடைவெளி. ஃபிரான்க்ஃபர்ட் ஊருக்குள் நுழைந்தோம்.
வாடகை வண்டி ஓட்டுனருக்கு ஆங்கிலத்தில் நான்கைந்து வார்த்தைகள் மட்டுமே வந்தது.
‘அமெரிக்கா நல்ல நாடு?’
‘ஆமாங்க… நன்றாக இருக்கிறது!’
‘இந்தியா நல்ல நாடு!’
‘ஆமாங்க… இந்தியா நன்றாக இருக்கும்.’
‘ம்ஹ்ம்… அமெரிக்கா… ஆஃப்கானிஸ்தான். தப்பு.’
நான் கண்ணாடி பக்கம் திரும்பி ஊரை வேடிக்கை பார்க்கத் துவங்கி விட்டேன். சாதாரண அமெரிக்கனை பார்த்தவுடன், ‘இப்படி சண்டை போடறீங்களே?’ எனக் கேட்குமளவு ஜெர்மானியர்கள் மனதில் ஆறாவடுக்கள் நிறைய இருக்கின்றன. புவி வெப்பமாதல் குறித்து அதை விட உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறார்கள்.
எந்தக் கட்டிடத்தில் நுழைந்தாலும் எவ்வாறு கரிம அடித்தடத்தை சரிக்கட்டுகிறோம் என விலாவாரியாக பொறாமைப்படுமளவு சொல்கிறார்கள். பெருந்தலைகளுக்கு மட்டும் பெரிய அறை என்னும் அமெரிக்க முதலியத்திற்கு பதிலடியாக அனைத்து சிப்பந்திகளுக்கும் சூரிய வெளிச்சம் விழும் அறையும் விசாலமான பிரகாசமும் கிடைக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி நடைமுறையாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இதெல்லாம், ‘பைத்தியக்கார ஐரோப்பா! பிழைக்கத் தெரியாத அரசியல்!!’ என்று ஒபாமா முதல் டிரம்ப் வரை சமத்துவபுரத்தை செல்லாக்காசாக்கி வைத்திருக்கிறார்கள்.
பார்சிலோனா மாதிரி இத்தாலி மாதிரி வருகையாளர்களை வரவேற்கும் ஊர் ஜெருமனி அல்ல. அதுவும் ஃப்ரான்க்ஃபர்ட் வர்த்தக நகரம். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் ஓரளவு சிரமம். பியர் பிரியர்களுக்கு இரண்டே தெரிவுகள். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே சுவை. எங்கும் ரெயிலில் செல்லலாம். இரண்டாம் உலகப் போரில் பெரும்பாலும் தகர்க்கப்பட்ட நகரம். ஊரின் நடுவில் ஆரம்பித்து நாலா திக்கிலும் நீண்டு தொடரும் பூங்கா. அவற்றில் சீனா, ஜப்பான், கொரியா என்று பூந்தோட்டம். இந்திய உணவகங்கள் எக்கச்சக்கம் என்பதிருக்கட்டும்; ஆஸ்திரேலியாவிற்கு என்று உணவு உண்டு என்கிறார்கள். தெரு முக்கில் இசைக் கச்சேரி. அரங்கில் பெருங்கச்சேரி. பாவாடைகளைப் பார்த்தால், ‘எமிலி இன் பாரிஸ்’ போல் தோன்றினாலும், பாரிஸ் மாதிரி திருட்டு பயம் இல்லை.
மொத்தத்தில் சுற்றுலா போக வேண்டிய ஊர் இல்லை. சுற்றுலா போனால் சுவாரசியத்திற்கு குறைவும் இல்லை.

ஒரு படம்
படங்கள் இருவகைப்படும்: விமானத்திற்கான படங்கள்; வீட்டிற்கான படங்கள்.
விமானத்திற்கான படங்கள் வசனம் நிறைந்தவை. நாடகம் போல் செல்பவை. அசலாக நாடகமாக இருந்தால் இன்னும் சிறப்பு. அந்த நாடகம், புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மேலும் சிறப்பு. மூன்று அல்லது நான்கு நடிகர்கள். விவாதம், சர்ச்சை, சிந்தனை கொண்டு உரையாடல் கொண்டவை. அப்படிப்பட்ட படம் – ”ஃபிராய்டின் கடைசி அமர்வு” (Freud’s Last Session).
உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா? தற்பாலுறவிற்கு மூல காரணம் – பெற்றோரா? வளர்ப்பு முறையா? மரபணுவா? மூளைச் சிக்கலா?
இவை எல்லாமே பட்டிமன்றங்களாக இல்லாமல், விவாதப் பொருளாக, பார்வையாளரின் அனுபவத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப உணரப்படுவதாகவும் திறந்தவெளியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கையாளர் தோற்கடிக்கப் படுவார் என்று நம்பியோ, பிராய்ட் ஒரு பிராடு என்று நிறுவுவார்கள் என்று விரும்பியோ, படத்திற்குள் வந்தால், உங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். வலியும், பச்சாதாபமும், மனிதநேயமும், ரத்தமும் சதையுமாக ஆழ்மனித உணர்வுகளை இழையோடும் நகைச்சுவை கொண்டு திரைக்கதையில் தைக்கப் பட்டிருக்கிறது.
ஃபிராயிடு போலி எனக் கருதப்படுவதற்குக் காரணங்கள் என்ன? அவர் அறிவியலாளர் அல்ல. சான்றுகளோ, பலனோ இல்லாத சிகிச்சை முறையை நிறுவினார். ப்ளெசீபோ என்று கூட எண்ணப்பட முடியாத சிகிச்சை அவருடையது. அவரை ஒரு இலக்கிய விமர்சகர் என்று கருதி மேலைச் சிந்தனையின் இலச்சினையாக ஆக்கி இருந்தால் ஃப்ராடு என்று சொல்லத் தேவை இராது. மற்றபடி ‘வலியும், பச்சாத்தாபமும்’ இத்தியாதிகளுக்கும் அறிவியல் துறைக் கண்டு பிடிப்பு என்று சொல்லப்பட்டு பிராபல்யம் தேடும் போக்கிற்கும் சிறிதும் தொடர்பு இல்லை.
ஃபிராயிடு என்னும் மனிதர் எப்படிப்பட்டவர்? அவரின் சொந்த வாழ்க்கையில் என்ன சிக்கல்களை எதிர் கொண்டார்? எப்பொழுது மனைவியை இழந்தார்? உலகப் போர்களின் போது அவர் எங்கே இருந்தார்? பேரன் இழப்பு, மகள்கள், பாசம் எல்லாம் கொண்டு அவரின் தத்துவங்களும் முரண்களும் வெளிப்படுகின்றன.
சி.எஸ். லூயிஸ் எவ்வாறு கடவுள் நம்பிக்கையாளன் ஆனார்? அவருக்கும் அவரின் உற்ற தோழனுக்கும் இடையே என்ன ஒப்பந்தம்? நண்பனின் அம்மாவின் மீது எப்படி பரிவு கலந்த ஆதுரம் கொண்டிருந்தார்? ஓரினச்சேர்க்கையாளர் குறித்து கிறித்துவம் என்ன நினைக்கிறது என்று மதபோதகர் எண்ணினார்?
உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறைகளும் அதற்கான அறிவியல் பின்புலங்களும் இருக்கட்டும். கண்மூடித்தனமான கடவுள் பின்பற்றலும் மதவெறியும் இருக்கட்டும். அந்த மனிதர்கள் ஏன் அவர்களின் சித்தாந்தத்திற்குள் புகுந்தார்கள்? எவ்வாறு அதில் அடைபட்டார்கள்? அதற்கான காரண காரியங்கள் என்ன? இது இந்தப் படத்தின் குறிக்கோள்.
வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம்; அதற்கான நியாயங்களை எப்படி தத்துவம் ஆக்கி உலகப் பொதுமறை ஆக்குகிறோம்; உளக்கிடக்கையையும் உள்முரணையும் ஆழ்மன சந்தேகத்தையும் எப்படி உளப்பிணியாகவோ மார்க்கமாகவோ வகுக்கிறோம் – சிந்தனைக்கான திறவுகோல் இந்தக் கற்பனை ஆக்கம்.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமை! மனிதமனம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் பல செய்திகள் அந்த மனம் மட்டுமே. உணரும் கோர்வையானவை. ஒரு ச்லோகம், ஒரு பாடல், ஒரு படம், ஒரு பயணம் எனத் தொகுத்து பிரமாதப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்ததுகள.
“சகுனங்களும், சம்பவங்களும்” என்ற கவர்ச்சியூட்டும் தலைப்பு என்னைக் கட்டுரைக்குள் ஈர்த்தது. கீதையிலிருந்து மேற்கோள், ஐம்பதுக்கு வருடங்களுக்கு மேல் எம் எஸ் குரலில் கேட்டு ரசித்த அன்னமாச்சாரியார் கீர்த்தனையின் தமிழ் மொழிபெயர்ப்பு, இடைப்பட்ட பயணத்தில் சுற்றுலா பயணியாக இல்லாமல் ப்ராங்பர்ட் நகரத்தின் பார்வை சிலமணி நேரத்துகள்களில்…இத்தொகுப்பின் முற்றுப் புள்ளி ப்ராய்டு பட விமர்சனம். அருமையான கலவை
அருமையான கட்டுரைக் கதம்பம்! ரசித்தேன். – இராய செல்லப்பா