சிப்பிகளின் சிதறல்

எல்லோரும் அவளைப் பைத்தியம் என்றழைத்தார்கள்.  யாருக்கும் அவள் செவி கொடுப்பவளாகயில்லை. தன்னைப் பார்வையால் துளைத்தெடுக்கும் கண்களையும் அருவருப்பால் ஒதுங்கி நடக்கும் கால்களையும் கண்டுக் கொள்ளாமல் நினைவுகளின் சரிந்த அடுக்குகளின் மங்கலான பக்கங்களில்  உலவிக் கொண்டிருந்தாள். அவளுக்கான குரல்களின் நடுவே அவளது தனி உலகம் எந்த குலைதலுமின்றி நகர்ந்துக் கொண்டிருந்தது. 

“ நாலு காசுல கொறைஞ்சிட்டா என்ன, என் புள்ள என்னா அறிவான புள்ளைய படிச்சு மார்க் எடுத்திருக்கு. இன்னும்  நல்ல படிச்சு ராசாத்தி மாதிரி வலம் வரணும்”

மணிக்கட்டில் உரசிக் கொண்டிருக்கும் ஒற்றை சிகப்பு வளையலோடு கற்பூரத்தைச் சுற்றிப் போடும் நீண்ட கையும், மங்கலான முகமும் சிதறிய வார்த்தைகளும் அவளது அந்த நொடியின் துணையாக மாறிப் போயிருந்தன. சிறுசிறு பாத்திரங்களும் பிளாஸ்டிக் பொருள்களும் பிதுங்கி நிற்கிற மூட்டையை இடது பக்கவாட்டில் வைத்துக் கொண்டு எதிரே இருக்கும் கடலை கால் பரப்பி அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“ அப்பா இத நம்ம ஊரு அரசன் குளத்துக்கு எப்படி கூட்டிட்டு போறது.” 

“ அப்படியெல்லாம் கூட்டிட்டு போக முடியாது. இது கடல். அரசன் குளம் தான் இங்க வந்து சேரும்.”

“ அப்ப அரசன் குளம் இதுக்குள்ளயும் இருக்கா”

“ இருக்கலாம்….”

ஆச்சரியத்தில் கண்களை உருட்டியபடி அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தபோது அவளுக்குப் பத்து வயது இருந்திருக்கும். 

அவள் தொலைத்திருந்த அரசன் குளம்  எதிரே விரிந்துக் கிடக்கும் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பதாக கூட அவள் நினைத்துக் கொண்டிருக்கலாம். 

திடீரென சாமி வந்தவளைப்போல வெடுக்கென எழுந்துக் கொண்டவள் கடை வீதியை நோக்கி நடக்கத் துவங்கினாள். நடையின் அத்தனை வேகத்திலும் தண்ணீர் குடத்தை தாங்கிக் கொள்ளும் பத்திர உணர்வோடு அழுக்குகள் பிதுங்கி நிற்கும்  மூட்டையை இடுப்போடு அணைத்துப் பிடித்திருந்தாள். 

ஏதோ ஒரு வேலையை முடிக்க நடந்தே தீர வேண்டியக் கட்டாயம் இருப்பவளைப் போல நடந்துக் கொண்டே இருப்பாள். அவளது யோசனை நரம்புகளில் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் என்கிற வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நினைவு துண்டுகளின் வேகத்தை பொருத்ததாக அவளது நடையின் வேகம் இருக்கும். சில நாட்களில் கடை வீதி காந்தி மண்டபம் எல்லாமும் தாண்டி மெயின் ரோடு பல் ஸ்டாண்ட் வரைக்கும் நிற்காத வேகத்தோடு நடந்து வந்திருக்கிறாள். அவளது வேகத்தைப் பார்த்துக் கெக்கலிக்கும் பற்களை பொருட்படுத்திக் கொண்டதில்லை. அவள் உரத்த சொற்களை உதிர்த்து யாரும் கேட்டதில்லை. அதிகபட்சமாக நறுநறுவென்று வார்த்தைகளை தனக்குள் முனகிக் கொள்வாள். அவ்வளவு தான். உள்ளே சுழலும் நினைவுகளின் வேகம் குறையும்போது நடையின் வேகமும் மெல்லத் தளரும். நினைவுகள் நீர்த்து  இல்லாமல் போகும்போது மீண்டும் அலைகளுக்கு முன்னால் கால்நீட்டி அமர்ந்துக் கொண்டிருப்பாள். நீண்ட கடற்கரையின் விளிம்புகளில் மனித நடமாட்டங்கள் இல்லாத அவளுக்கான ப்ரத்யேக இடங்களுண்டு. அங்கு பெரும்பாலும் நாய்கள் மட்டுமே அவளின் துணைக்கு உலவிக் கொண்டிருக்கும். 

இரவு உறக்கத்துக்கு காந்தி மண்டப ஏறுபடிகளை பெரும்பாலான நாட்களில் தேர்ந்தெடுத்துக் கொள்வாள். தவறும் நாட்களில் முகம் பார்க்கும் சிப்பிக் கண்ணாடிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையின் மூடியிருக்கும் வாசல் முன்பு படுத்திருப்பாள். அவள் எங்கு படுத்திருந்தாலும் தேடிப் பிடித்து அருகில் வந்து படுத்துக் கொள்ளும் ஒற்றைக் கண் பறிப்போயிருந்த கருப்பு நாயை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொள்வாள். காலை அவள் கண்விழிக்கும் முன்பே அது அவளது பிடியிலிருந்து நழுவிச் சென்றிருக்கும். 

அன்று என்ன குரல் அவளுக்குள் கேட்டுக் கொண்டிருந்ததோ தெரியவில்லை. கண்ணாடி கடையின் முன்பு அடமாக நின்றுக் கொண்டிருந்தாள். அத்தனைக்கும் முந்தைய நாள் இரவிற்கு காந்தி மண்டப படிகளில் தான் உறங்கினாள். வானம் வெளுக்கும் முன்பே வெடுக்கென எழுந்தவள் அழுக்கு மூட்டையை கூட உடன் எடுத்துக் கொள்ளாமல் வேகமாக நடந்து வந்தாள்.  தொடை வரை ஏற்றிவிடப்பட்ட அழுக்குப் பாவாடை இடுப்பில் செருகியிருந்தது. மூடிக் கிடந்த கடையை  வேடிக்கைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தவள், பின்பு வாசலில்  குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அவளுக்குள் மட்டும் கேட்கும்படியாக ஏதேதோ முனகிக் கொண்டிருந்தாள். 

கடையை திறக்க வந்த கடைக்காரன் ஒரு சாதரண பைத்தியத்தை விரட்டி விடும் அதட்டலோடு முதலில் விரட்டினான். அவள் அசையாமல் அமர்ந்திருப்பதை பார்த்தபோது குரலை இன்னும் உயர்த்தி அதட்டினான். அவனது குரலின்  அதிர்வில்  எழுந்துக் கொண்டவள் கொஞ்சம் நகர்ந்துக் கடையை வெறித்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். 

“ சொல்ல சொல்ல போகுதா பாரு. அப்பன் வீட்டு சொத்த வெறிக்க மாறிலா அடமா நின்னு வெறிக்கா.”

ஏதோ யோசித்தவளாய் மெல்ல குனிந்து தனது இடது உள்ளங்கையின் ரேகைகளை உற்றுப் பார்த்தாள். ஒரு சிறு பிள்ளையின் தலையை கோதி விடும் நிதானத்தோடு கைகளில் ஓடிக்கொண்டிருந்த ரேகைகளை தடவிக் கொடுத்தாள். மீண்டும் நிமிர்ந்து எதிரே தொங்கிக் கொண்டிருந்த சிப்பிகள் பதித்திருந்த கண்ணாடிகளைப் பார்த்தாள். 

“ இவ இப்படி நின்னுட்டு இருந்தா எவன் கடை ஏறி பொருள் பாக்க வருவான். இதுகலேலாம் ராஜவூர்ல கொண்டு கட்டிப்போடாம இங்கன கொண்டு விட்டுட்டு போறவனுகல. அவனுகள சொல்லணும்.”

“ சிறகு விரிச்சு நிக்க மிக்கேலு தான் இதுகல அணைச்சு பொத்தி வைக்க சரிப்பட்டு வருவாரு. இப்படி நல்லா காத்தோட்டமான கட கரையில அலைய விட்டா இதுக இப்படிதான் அடம் புடிச்சு அலையும்”

கடைக்காரன் ஆத்திரத்தை கடைப்பையனிடம் கொட்டித் தீர்த்தான்.

“ இதைய கெட்டி மேய்க்க தான் உமக்கு வாக்கபட்டு வந்தனா. உங்க அம்மா இருந்த வர சரி. அவளும் போயாச்சு. இனி நான் என் பிள்ளேலுக்கு வாழ்க்கைய பாப்பனா இல்ல இந்த கிறுக்கச்சிய கெட்டி அழுவனா.இத வச்சிட்டு ஒரு இடம் போமுடில வரமுடில. இவள கெட்டி மேய்க்க நேரத்துக்கு நாலு வீட்டுக்கு வேலைக்கு போனாலும் பிள்ளேலுக்கு எதிர்காலத்துக்கு ஆகும்.”

“ ராஜாவூர் மிக்கேல் ஆண்டவர் கோயில்ல தான் எங்கெங்க இருந்தோ பைத்தியங்கள கொண்டு தள்ளிட்டு போறாங்கல்லா. இதையும் அங்க கொண்டு தள்ளிட்டு வாங்க.கட்டிப் போட்டு வச்சா தானா சரியாகும்.”

பெரும் வசவோடு தன் முன்னால் சிதறி சுக்குநூறாகியிருந்த சிப்பிகள் பதித்த கண்ணாடியின் மங்கலான சிதறல்கள் அவளுக்குள் நிழலாட துவங்கியது. கூடவே மனைவியின் ஆலோசனைப்படி தங்கையை மிக்கேல் ஆண்டவர் கோவிலில் சேர்பிக்க மனமில்லாமல் இந்தக் கடற்கரையில்  விட்டுப்போயிருந்த அண்ணன் ராஜேந்திரனின் முகமும்  தெளிவாக  நினைவலைகளில் எழும்பியது.

கடைக்காரனின் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வாசல் சுவற்றின் இடது உள்சுவர் ஓரத்தில் மயில் தோகையின் நடுப்பொட்டு வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிப்பிகள் பதித்திருந்த கண்ணாடியை நோக்கிக் கைகளை நீட்டினாள்.  

“ திமிர பாத்திய. அத இங்க  குடுல.”

கடைப்பையனின் கையில் இருந்த குஷன் துடைப்பானை பிடுங்கினான் கடைக்காரன். 

கண்ணாடியைச் சுற்றிப் பதித்திருந்த அறைச்சிப்பிகளை வருடிக் கொண்டிருந்த அவளது கைகளில் குஷன் துடைப்பானின் பிடி குச்சியால் ஓங்கி ஓர் அடி வைத்தான்.முகம் சட்டென சுருங்க கைகளைப் பின்னிழுத்துக் கொண்டாள். 

“ என்னத்த பாக்க”

“                              “

“முழிக்க முழிய பாரு. மொகத்தில ரோஷம்லா பொங்கிட்டு வருது.”

“ இன்னிக்கு ஏவாரத்த உருப்படாம ஆக்கிராத….ஓடிரு.”

இன்ன இடமென்று குறி வைக்காமல் துடைப்பான் குச்சியால் கடைக்காரன்  வைத்த இரண்டாவது அடி  காற்றில் உப்பிக் கொண்டிருந்த அவளது அழுக்குப் பாவாடையில் பட்டு லேசான சத்தம் எழுப்பியது. 

 இரண்டாவது அடி தந்த பயத்தில் நகரவே மனமில்லாமல் மெல்ல நகர்ந்தாள். பார்வையிலிருந்து மறையும் வரை கண்ணாடியை சுற்றிப் பதித்திருந்த சிப்பிகளை திரும்பி  திரும்பி பார்த்தபடியே நடந்தாள். 

கால் போகிற போக்கில் நடந்துக் கொண்டேயிருந்தாள். 

“ இன்னிக்கு பீச்சுக்கு போவோமா” 

மீண்டும் ஓர் மங்கலான முகம் நினைவலைகளில் எழுந்தது.  

“ ம்கூம்…வீட்டுல தேடுவாங்க. நான் வரல”

அந்த முகத்தின் மூக்குகண்ணாடி துலங்கித் தெரிய ஆரம்பித்தது. 

அலைகளின் முன்னால் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த நான்கு பாதங்கள், அகண்ட தோள்பட்டையில் தலைசாய்த்திருந்த அவளது இருபதுகளின் பொலிந்த முகம், விரல்கள் கோர்த்திருந்த இரண்டு உள்ளங்கைகள் என காட்சிகள் அவளுக்குள் மின்னல் வெட்டி மறைந்துக் கொண்டிருந்தன. 

“ இந்தா.. இது உனக்குத்தான்”

வலம்புரி சங்கினை நீட்டிய ரோமம் அடர்ந்த கைகள் அவளது நினைவலைகளில். 

அவள் கடற்கரை கடைவீதியை தாண்டி வெகுதூரம் நடந்து வந்திருந்தாள்.வாய் முணுமுணுத்தபடியிருந்தது.  உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்த காட்சிகள் நிற்கவில்லை. முகம் மெல்லத் தீவிரம் அடையத் துவங்கியிருந்தது. 

அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்த காட்சி மாற்றத்தினாலான தீவிரம். 

விளையாட்டாக துரத்தி விளையாடிய பாதங்கள்  அவளது வேண்டாமென்ற கெஞ்சலையும் தாண்டி  தீவிரமாக அவளை துரத்திக் கொண்டிருந்தன. கூடவே இன்னும் எட்டுப் பாதங்களும் சேர்ந்திருந்தன. அவளது கதறல்களை பொருட்படுத்தாமல் அவளை நசுக்கிய பாதங்கள்.  ரத்தக் கறைகளை அவள் மீது பதித்துவிட்டு  களிப்போடு கடந்து நடந்த பாதங்கள். 

நடந்துக் கொண்டேயிருந்தவள்  சட்டென அமர்ந்துக் கொண்டாள். கால்களை மடக்கி தனது பாதங்களை வணங்கும் கைகளைப்போலக் குவித்து வைத்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டுப் பாதங்களையும் முகத்துக்கு நேராக தூக்கிப் பிடித்து உற்றுப் பார்த்தாள். முழு பலத்தையும் இறக்கி இரண்டு பாதங்களையும் மாற்றி மாற்றி அழுந்த துடைத்தாள். 

அவளைத் தாண்டி பரபரப்பாக ஓடியவர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் பாதங்களை குவித்து வைத்துக் கொண்டாள் .கூட்டகூட்டமாக பீதியில் சிதறிக் ஓடிக் கொண்டிருந்தவர்களின் கூச்சல் அவளை கொஞ்சமும் சலனபடுத்தியிருக்கவில்லை. சூழ்நிலையின் பரபரப்பிற்கு தன்னை ஒப்புக் கொடுக்காமல் எழுந்து கால் போனபோக்கில் நடக்க ஆரம்பித்திருந்தாள். 

மறுநாள் காலை வானம் வெளுக்கும் வேளையில்  கடைவீதியை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தாள். நிற்காமல் நடந்துக் கொண்டேயிருந்ததற்கான களைப்பு அவளது நடையின் தளர்வில் தெரிந்தது. இரவு உறங்காத முகம் உப்பிப் போயிருந்தது.

 சிதறிக் கிடந்த கடைவீதியை எந்த சலனமுமில்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே நடந்தாள். கடைவீதி வழக்கமான கூட்ட நெரிசல்களை இழந்து பொலிவின்றிக் கிடந்தது. நேற்றைய காலை அவள் வெறித்தபடி நின்றுக் கொண்டிருந்த கண்ணாடி கடை சிதிலமடைந்து பரிதாபமாக சிதறிக் கிடந்தது. சிதறிக் கிடந்த சிப்பிகளை  மிதித்துக் கடந்தாள்.

காந்தி மண்டபத்தை நோக்கி நடந்த அவள், படிக்கட்டுகளில் அவளுக்கான அழுக்கு மூட்டையை தேடிப் பார்த்தாள். அவளின் எதிர்பார்ப்பு பொய்த்தபோது நிதானம் லேசாக கலைய ஆரம்பித்தது. 

வார்த்தைகள் உதடுகளில் நறுநறுக்க ஆரம்பித்திருந்தன. படிக்கட்டுகளை சுற்றிலும் பதற்றத்தோடு துளாவ ஆரம்பித்திருந்தாள். மண்டபம் வழக்கமான ஆள்நடமாட்டம் இல்லாமல் கலையிழந்து கிடப்பதை பற்றியோ, எங்கிருந்தோ வாரி இறைக்கப்பட்ட ஏதேதோ பொருட்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதை பற்றியோ அவளிடம் எந்த புகாருமில்லை. அவளது கவனம் முழுவதும் அவளது அழுக்கு மூட்டையை கண்டடைவதில் இருந்தது. 

ஆவேசம் அதிகரிக்க மண்டபத்தின் முன் விரிந்துக் கிடந்த மணலை இரண்டு கைகளாலும் கிளறி  தூசிப் பறக்கவிட்டாள். ஒரு சின்னக் மணல்குழி எடுத்து முடித்திருந்தவள் முகத்தில் படிந்திருந்த தூசியை மணலேறிப் போயிருந்த உள்ளங்கைகளால்  துடைத்துக் கொண்டாள்.  முகம்  கூடுதல் தூசிப் படலமாக மாறிப் போனது. 

ஏதோ நினைவு வந்தவள் போல கடற்கரையை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.  ஓடும் பாதையில் சிதறிக் கிடந்த சிப்பி அலங்கார பொருட்களைத் தாறுமாறாக மிதித்தபடி வேகம் எடுத்தாள்.  சூழ்நிலையில் கலந்திருந்த சலசலப்பை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாதவளாய். 

எதிரே தூக்கிச் வரப்பட்ட பிணங்களின் முகங்களை பார்த்தபோது லேசாக அதிர்ந்தாள். ஓட்டத்தின் வேகம் குறைய ஆரம்பித்திருந்தபோதும் நிற்கவில்லை. 

“ கலை… … . கலை… .. …”

“ வேண்டா வேண்டான்னு சொன்னனே. இன்னிக்கே ஃப்ரண்டுகளோட போனதான் ஆச்சுன்னு அடம் பண்ணி வந்தியே”

“ கலை… கலை… .”

கடற்கரையில்  அழுதுக் கொண்டிருந்த தாயின் வேதனையை கேட்க அங்கு நின்றுக் கொண்டிருந்த யாருக்கும் நேரமில்லை. 

கொண்டை இழந்திருந்த தென்னைகள் அவற்றின் துயரை யாரிடம் பகிர்ந்து கொள்வதென்று தெரியாமல் தேமேவென்று நின்றுக் கொண்டிருந்தன. நீல நிற சீருடையில் சிலர் கண்ணும் கருத்துமாக மரங்களில் சிக்கியிருந்த பிணங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். கடலை  நெருங்கி யாரும் நடமாடிக் கொண்டிருக்கவில்லை என்பதை தனது பார்வையால் உறுதி செய்தபடியும் பிணங்களை சேகரிக்கும் வேலையை கண்காணித்தபடியுமாக காவலர்கள் கடற்கரை விளிம்புகளில் அங்குமிங்குமாக நின்றுக் கொண்டிருந்தார்கள். கடல் எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதாக அதனின் அலை சுமக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தது. 

“ என் பிள்ளைய கொண்டு போகன்னு எங்கேரிந்து வந்துச்சோ இந்த எழவெடுத்த சுனாமி.”

“ கலை… .. … ..”

மூட்டையின் நினைப்போடு கடற்கரை நோக்கி ஓடி வந்திருந்தவள் இப்போது அழுகிற தாயை நிதானமாக பார்த்தபடி நெருங்கிக் கொண்டிருந்தாள். 

“ கலை… .. … ..”

கண்ணீரின் பிசுபிசுப்போடிருந்த முகத்தில் அறைந்தபடி அந்த தாய் மண்டியிட்டு குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். தாயின் முன்பு அவளும்  சென்று மெல்லமாக மண்டியிட்டு நின்றுக் கொண்டாள். இவளது முகத்தைப் பார்த்தபோது  தாயின் அழுகையின் அழுத்தம் கூடியது. 

அருகில் சிதறிக் கிடந்த முயல் முகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த உடைந்த சிப்பியை கையில் எடுத்துக் கொண்டாள். தொடையில் பதிந்திருந்த தாயின் இடது கையை  விடுவித்து தன்பக்கமாக இழுத்தவள்  உடைந்திருந்த முயல் முகத்தினை அவளது உள்ளங்கையில் வைத்தாள்.  முயலின் காதுகளில் தீட்டப்பட்டிருந்த சிவப்புநிறம் இருவரின் வேதனையையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. 

உதயமாகியிருந்த சூரியன் கிழக்கில்  இன்னும் மேலேறி வந்தது. 

முகத்தை குனிந்து தாயின் மடியினுள் புதைத்துக் கொண்டாள். 

“ கலலல… .. … .. .”

தவித்துப் போயிருந்த தாய் தனது மடியில் கவிழ்க்கப்பட்டிருந்த பின்னந்தலையை தோள்பட்டையோடு இறுக அணைத்துப் பிடித்தபடி  அடிவயிற்றிலிருந்து குரல் எடுத்து ஓங்கி அழுத போது அவளது பிடியிலிருந்த  முயல் முகம் நழுவி  கடற்கரை மணலில்   புரண்டது. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.