தமிழாக்கம்: ந.பானுமதி
இறுதி பகுதி
தனது இத்தனைப் பிரச்சனைகளினூடாக, மற்றொரு மாறுபட்ட உலகிற்கான திறப்பையும், அதன் வளர்ச்சியையும் இந்த உலகம் எவ்வாறு கொண்டுள்ளது என்பதைச் சொல்லும் ஒரு புரட்சிக்கான தேற்றம் தேவை.

தொழிலாளர்களின் புரட்சி பற்றிப் பேசுவதற்கு. அனைத்துத்தரப்பிலிருந்தும், சுரங்கத் தொழிலாளர்கள், அமைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் கூடியிருந்த அந்த வெல்ஷ் கிராமப்புறத்தில் அன்று, முக்கியமான ஒரு நபர் இல்லை. கேம்ப்ரிட்ஜ் பல்கலை அறிஞரும ், சோஷலிசத்தின் கலங்கரை விளக்கு எனக் கருதப்பட்டவருமான ரேமண்ட் வில்லியம்ஸ், ஒரு கடிதத்தின் மூலம் அந்த நிகழ்வில் உரையாற்ற ஒப்புக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய காரில் வருவார் என்ற வதந்தி நிலவியது. கார் நிறுத்தத்தில் எந்தவொரு பெரிய காரும் இல்லை என்ற சங்கடமான செய்தியை ஒருவர் சொல்லும்போது, உயரமான, கரடுமுரடான தோற்றம் கொண்ட ஒருவர் பார்வையாளர் பகுதியிலிருந்து எழுந்து மேடைக்கு வந்தார். அன்று, நாள் முழுதும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருந்த அவர், தன் கருத்துகளைச் சொல்லாமல், தன்னை அதுவரை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவர் கருத்து சொல்லத் தேவையேயில்லை; அந்த இடத்தில் இருப்போர் ஒவ்வொருவருக்கும் அவர் பெயர் தெரியும்.
ஜேடி ஸ்மித், தான் 1990ல் இளங்கலை பயிலும் மாணவியாக கேம்ப்ரிட்ஜில் இருந்த போது, சமூக மற்றும் இலக்கிய வாதிகளான மிஷெல் ஃபூக்கோ, ரோலோன் பார்த்ஸ் போன்ற முக்கிய ஆளுமைகளுடன் வில்லியம்ஸ் இருந்தார் எனக் குறிப்பிடுகிறார். வில்லியம்ஸ், ஸ்டூவர்ட் ஹாலின் நண்பர் மற்றும் கூட்டாளி, இ பி தாம்ப்ஸனின் அருகாமையில் இருந்து, அவருடன் சச்சரவிடும் ஒருவர், டெர்ரி ஈகில்டனின் ஆசிரியர், பெர்ரி ஆண்டர்ஸனுடன் இணைந்து பணி செய்தவர், எனச் சொல்கிறார் ஜேடி. பிரித்தானிய இடதுசாரியின் தீவிரமான, சீரான, அதிகாரமுள்ள குரலாக ஒலித்தவர் இவர் என்று ‘ந்யூ லெஃப்ட் ரிவியூவில்’ 1988ல் வில்லியம்ஸ் இறந்த போது ராபின் ப்ளாக்பர்ன் எழுதினார்.
தன்னைப் பற்றிய அறிமுகமாக அவர் சொல்வது ‘நான் பான்டி என்ற வெல்ஷ் கிராமப்புறத்திலிருந்து வந்தவன்,- அந்தக் கிராமம். இங்கிலாந்து எல்லையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில், வயல்கள் நடுவே கரு மலைகளின் விளிம்போரத்தில் இருக்கும் ஒன்று. பள்ளத்தாக்கின் வயல்களிலிருந்து இக்கிராமத்தின் அருகே இருக்கும் மலைச் சிகரங்கள் 1000 அடிகளுக்கு மேலே தென்படும். நீண்ட, உள்ளடக்கிய காட்சிகளைக் காண மேலே செல்லலாம். 1920 மற்றும் 30 களில், சிறுவனான, இளைஞனான வில்லியம்ஸ், மேல் உச்சியிலிருந்து இரும்புப் பட்டறைகளிலிருந்தும், நிலக்கரிக் குழிகளிலிருந்தும் தெற்கிலும், மேற்கிலுமாக குறைந்தது 20 மைல்களுக்கு புகை பரவி இருப்பதைப் பார்த்திருக்கிறார். இரவில் தொழிற்சாலைகளிலிருந்து எழும் புகை, கரும் அடிவானத்தை செம்மையாக்கும்.
நிலச்சுவான்தார்கள் நிரம்பிய இங்கிலாந்திற்கு நேர்மாறாக பான்டியில் இருந்த மக்களிடம் பணமில்லை, சிறிது நிலம் இருந்தது. நிலமற்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்; பெரும் பண்ணைகளில் குறைந்த கூலிக்கு பெரும் பாடான வேலையைச் செய்து வந்தனர் நிலமற்றவர்கள். இவரது தந்தை ஹாரி, தெற்கில், ரயில்வேயில், நிலக்கரி சுரங்கங்களில் சிறிது காலம் வேலை பார்த்த பிறகு, பான்டி அருகே ஒரு ரயில் நிலையத்தில் சிக்னல்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். வயல்களில் வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த க்வென் என்பவரை மணந்தார். இவர்களது குடிசை இருட்டும், ஈரமும் நிரம்பியதாக இருந்தது. சோஷலிச வாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகியோரிடமிருந்து தான் கற்றுக் கொண்ட புரட்சிச் சிந்தனைகளை நிலக்கரிச்சுரங்க தொழிலாளர்கள், கருமான்களிடம் ஹாரி பரப்பினார். அந்த நொடியிலிருந்து அவர்கள் கூலிகள் இல்லை, உழைப்பாளர்கள், ஒருங்கமைக்கப்பட்ட வகுப்பினர், பிரித்தானியத்தில் தங்களுக்கான அதிகாரத்திற்காகப் போராடுபவர்கள்.
வில்லியம்ஸ் 20ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட புத்திசாலி. கிராமப் பள்ளியில், படிப்பில் மிகவும் முன்னிலையில் இருந்த இவர், கற்பதில் வெறி கொண்டவர். மேலே பள்ளியில் படிப்பதற்காக சில மைல்கள் தொலைவில் உள்ள ஆபெர்காவென்னியில் பரீட்சை எழுதிய சமயத்தில், இவரைக் கலந்தாலோசிக்காமல், இவரது பள்ளி ஆசிரியர், ட்ரினிடி கல்லூரி, கேம்ப்ரிட்ஜுக்கு ‘இந்தக் குழந்தை அறிவாளியை’ அங்கே படிக்க அனுமதிக்க வேண்டுமென எழுதி, அவர்களும் இடம் கொடுக்க, புது அத்தியாயம் பிறந்தது. கிழக்கு ஆங்கிலியாவின் வேலிகளைக் கடந்து, அடைகாக்கும் அந்தக் கல்லூரிக்குச் செல்லும் பயணம் தொடங்கியது.
தப்பித்தல், முன்னேறுதல், வேரோடு பிடுங்கப்படுதல், நினைவேக்கம் என்று எதை வேண்டுமானாலும் இதில் பொருத்தி விடலாம். படிப்பும், பள்ளியும் தவிர. இவரது அறிவின் செழுமைக்கு, அவர் பிறந்த இடத்தின் தொழிலாளர் புரட்சியும் ஒரு முக்கிய காரணம். 1926ல் அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது, பிரிட்டன் முழுதும் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மற்ற தொழிலாளர்களின் சங்கங்களும், இவர்களுக்குத் துணையாகப் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு சற்றுக் கூடுதலாக அது நீடித்தது. ஹாரி, உள்ளூரில் நடை பெற்ற வேலை நிறுத்தத்தில் தளபதியாகச் செயல்பட்டார். ஆபெர்காவென்னி ரயில் நிலையத்தை செயற்பட முடியாமல் செய்தனர். தேசிய வர்த்தகக் கூட்டின் சங்கத் தலைமை, ஒரு இரகசிய ஒப்பந்தத்தின் படி, வேலை நிறுத்தத்திலிருந்து விலகினர். சுரங்கத் தொழிலாளர்கள் தனியே போராடினார்கள். சில மாதங்களுக்குப் பிறகு அது தோல்வியுற்றது. தங்களது பான்டி குடிசையில், வில்லியம்ஸ் குடும்பத்தினர், கூட்டுத் தலைவர்கள், சாதாரணத் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறைத்துவிட்டனர் என்று நம்பினார்கள். வீடும், கிராமமும், வேறெந்த தேசிய அதிகார மையத்தைவிட புரட்சிகரமாக இருந்தன; இதில் பிற்போக்கான கல்வித் திட்டம் கொண்டுள்ள கேம்ப்ரிட்ஜைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ஹாரி முதல் உலகப் போரில் பங்கேற்றவர்; போரையும், இராணுவத்தையும் வெறுத்தவர். ரேமண்ட், கேம்ப்ரிட்ஜில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பொது உடைமைக் கொள்கைகளை எதிர்ப்போருக்கு எதிராகப் போராடுவதற்காகத் தன் இளங்கலைப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். தானாக முன்வந்து, ஆபத்தான ஆயுதங்கள் கொண்ட வண்டிகளை இயக்கும் பொறுப்பை ஏற்றார். பெல்ஜியம், ஃப்ரான்ஸ் நாடுகளின் இருள் காடுகளில், நிலங்களில், அரை இருளில், தப்பான ஒரு திருப்பம் உயிருக்கு உலை வைக்கும் என்ற நிலையில், எரி பொருளும், நாசம் விளைவிக்கும் ஆயுதங்களும் நிரம்பிய இராணுவ ஊர்தியை இயக்கினார். ‘சிறு வதை முகாம்’ என்று அவர் அழைக்கும் ஒன்றின் விடுதலைக்கான போரில் இணைத்துக் கொண்டு, எஸ் எஸ் பான்ஸர் பிரிவைச் சிதைத்தார். இந்த வகையில் அவர் பாசிசத்தை தோற்கடித்தார். ஆனால், பின்னர் சொன்னார் ‘போர் அராஜகமானது; திகைப்பைத் தருவது.’ பிரித்தானிய அதிகாரிகளின் ஆணைகளுக்கேற்ப ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில், (குறிப்பாக உக்ரேனியர்கள்) நாஜிக்களின் கட்டாய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டதைப் பற்றிய எண்ண அலைகளில் மூழ்கி அவர் சொன்னார்: ‘பிரித்தானிய அதிகாரிகள், தங்களின் கீழுள்ள வெல்ஷ் கம்யூனிஸ்ட்டை விட தங்களது இணை வரிசையில் உள்ள ஜெர்மானிய அதிகாரிகளிடம் அதிக இரக்கம் கொண்டிருக்கக் கூடும்.’ மாலைகளில், அந்தப் போர் நேரத்தில், இந்தப் பிரச்னையை அணுக, அவர் ரஷ்யக் கூட்டின் நிலை பற்றிய வானொலிச் செய்திகளைக் கேட்டார். (அருகில் நெருங்கினால், அந்தக் கூட்டும், இதைப் போலவே பயங்கரமான ஒன்றாகத்தான் இருந்திருக்கும்). தன் இராணுவப் பணிகளைப் பற்றி அவர் பெருமை எதுவும் கொண்டாடவில்லை- ஆனால், அதைச் சொல்லி அவர் கொரியன் போரில் இணையவில்லை. இராணுவ ஆட்சேர்ப்பு மையமும், அவர் தன் பங்கை முன்னமே செய்து விட்டார் என்று ஏற்றுக் கொண்டனர்.
அவர் கேம்ப்ரிட்ஜுக்குத் திரும்பிய பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை; ஜனநாயக இடது சாரியின் மிகப் பெரும் மைல்கல் என்று அவர் ஒரு போதும் சொல்லிக் கொள்ளவில்லை. மாலை நேர முதியோர் கல்வியில், கேம்ப்ரிட்ஜ் படிப்பிற்குப் பிறகு, அவர் தன்னை ஏதோ ஒரு வகையில், சொல்லித்தருவது, இணைப்பது போன்றவைகளில் 15 வருடங்கள் ஈடுபடுத்திக் கொண்டார். ஆசிரியராக கேம்ப்ரிட்ஜில் அந்த முதியோர்களுக்கு அவர் அளித்த கல்விப் பயிற்சி, பின்னாளில் மீண்டும் அவருக்கு எழுதும் குரல், சிந்திக்கும் விதம், என்ற வரமாக அமைந்தது. முக்கியமாக, அறிவுப் பசி கொண்ட தொழிலாளர்கள், நடுத்தர வர்கத்தினருடன் பகிரப்பட்ட சோஷியலிச சிந்தனைகள், அதன் வழியே உண்டான பிணைப்பு இவையெல்லாம், கல்லூரி வளாகத்தின் வெளியே அவர் பெற்றது. தனது பிற்கால எழுத்துக்களில், இத்தகைய பொது மக்கள் அவர் எழுத்துக்களில் இடம் பெற்றனர்.
தன் முப்பதுகளில் அவர் 2 புத்தகங்களை வெளியிட்டார். அவை அவரது குடிசை வாழ்வு, மற்றும், அவரது வகுப்பறைகள் பற்றிய சிந்தனைகளை ஒட்டி அமைந்தன. 1958ல் வெளியான அவரது ‘கல்சர் & சொசைடி: 1780-1950’ என்ற புத்தகம், இரண்டு நூற்றாண்டு ஆங்கில இலக்கியம் மற்றும் அறிவின் வரலாற்றை மாற்றி அமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான நாவலான “பார்டர் கன்ட்ரி’, வில்லியம்ஸை, மேத்யூ ப்ரைஸ் என்ற கற்பனைக் கதாபாத்திரமாகப் புனைந்தது; இறக்கும் நிலையிலிருக்கும் தன் தந்தையைப் பார்க்க வருகிறார்ப் மேத்யூ ப்ரைஸ். 1926ன் பொது வேலை நிறுத்தம் பற்றி, தந்தையும், முக்கிய கதாபாத்திரமுமான ஹேரி ப்ரைஸின் பார்வையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது, மேத்யூ அவரது வாழ்வைப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்.
கல்சர் & சொசைடி, முப்பது ஆண்டுகளாக அவர் எதைப் பற்றியெல்லாம் சிந்தனை செய்து கொண்டிருந்தாரோ அதனின் வெளிப்பாடு எனலாம். அனுபவங்கள், மற்றும் கூர்ந்து அவதானித்தல் மூலமாக, புரட்சிகரமான அதே சமயம் மனிதத்தன்மையுடன் கூடிய சமூகக் கட்டமைப்புகளை அவர் படைப்பு சொன்னது. நமக்கு சமூகம் என்பது என்ன? சுருக்கமாகச் சொல்வதென்றால், இயந்திரத் தொழில்மயமாக்கல், நகர்ப்புறங்களைச் சிதைத்து நகரங்களாக்குதல், பெருகிப் பரவும் தொடர்புகள், அரசியல் ஆகியவை. அப்படி நிகழ்ந்ததைக் கொண்டு நாம் எதை வடிவமைக்கிறோமோ அதை கலாசாரம் என்று சொல்கிறோம்: என்றுமே தீர்விற்கு வராத, சிக்கலான, இணைந்து வாழ்வதற்கான தினசரி முயற்சிகள். அரசியலுக்கு, கலாசாரம் தேவைப்பட்டது- நல்லிணக்கம், ஒற்றுமை, உலகப் பொது நோக்குப் பார்வை, ஒன்றாக ஒன்றுக்கொன்று சார்ந்து செயல்படுதல், அதை எதிர்கால நோக்கிலும் அறிதல்; கலாசாரமும், அரசியல் தான்- கூட்டு வாழ்வின் பொருளை உணர்தல் .
பண்பாட்டை ஒரு ‘சிறுபான்மை உயரடுக்கு’ விஷயமாகக் கருதுவதை வில்லியம்ஸ் எப்போதும் எதிர்த்தார். அதனைப் பெருவாரியான பொது மக்கள், அசுத்தப்படுத்திவிடுவார்கள், களவு செய்து அதன் மாண்பைக் குறைப்பார்கள் என்றெல்லாம் எண்ணிய கேம்ப்ரிட்ஜ் உயரடுக்கு மனிதர்கள், பொது மக்களுக்கு பண்பாடு பற்றிய நடைமுறைகளைக் கற்பித்தல் தங்கள் கடமை போலச் செயல்பட்டதை அவர் அனுபவத்தில் கண்டார். கற்பனை அழகியல் என்று பெருமைப்படுத்தப்பட்ட சுதந்திரம், உத்வேகம், அறிவுஜீவித்தனம் போன்றவை, தனிப்பட்டவர் தன் முயற்சியால் அடைந்தவை என்றும், அவரின் உடமை என்றும், எங்கு சாத்தியமோ அங்கு, அந்த மொத்த சமூக உலகத்திலிருந்து பெறப்பட்டவை என்றும் சொல்வதை அவர் விமர்சித்தார். மாபெரும் இயக்கப் புரட்சியாளர் என்றெல்லாம் அவர் அறியப்படவில்லை. உயரடுக்கு சீர்திருத்த வாதியான மேத்யூ அர்னால்ட் போன்றவர்களை, கற்பனாவாத அழகியல் சார்ந்த புரட்சிக் கவிஞர்களாகிய ஜான் கீட்ஸ், ஷெல்லி போன்றவர்களை, இயந்திரத் தொழிலாக்கங்களுக்கு எதிரான மரபு சார்ந்த புரட்சியாளர்களான தாமஸ் கார்லைல், வில்லியம் காபெட் ஆகியோரை, குழப்பமுள்ளவர்களாகவோ, அல்லது வர்க்க எதிரிகளாகவோ மட்டும் பார்க்காமல், உண்மையான, அவசரமான கேள்விகளைத் துண்டு துண்டாக அணுகுபவர்களாகக் கருதினார். என்ன பண்பாடு, எது ‘முழு வாழ்க்கையை’ மனிதர்கள் வாழ்வதற்கு மனிதத் தன்மையுடன் சாத்தியமாக்கும்? விரைவாக மாறும், குழப்பம் தரும், எளியோரைப் பந்தாடும், தரக்குறைவாக நடத்தும், தன்னையே இழிவு செய்து கொள்ளும் உலகில், சுதந்திரமாகவும், மகிழ்வோடும் மக்கள் இணைந்திருக்க வழி இருக்கிறதா என்ன? கற்பனை அழகியல் தனிமை கொண்டு எவரும் அதை அடைந்ததில்லை; உயர் தட்டு மக்களின் உடமையாக அதைச் சொல்வது அதர்மம், முடிவில் சுய வீழ்ச்சி தான் நிகழும்.
ஆனால், இன்று வரை அந்தப் ‘பொது கலாசாரம்’ என அவர் குறிப்பிடுவது எது என்பதில் யாருக்கும் தெளிவில்லை.
ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் அவசியம் என்று அவர் சொன்னார். அவர் ‘இருப்பின் சமத்துவத்தை’ வலியுறுத்தினார். ஒவ்வொரு கோணத்திலும், அடையாளத்திலும், மதிப்பைக் கண்டுணர்ந்து தொடர்புகளையும், இணைந்து செயல்படுவதையும் தழுவி, சில மனிதர்கள், சில நிறுவனங்கள் மட்டுமே ஓங்கி ஒலிப்பதை நிறுத்த வேண்டும் என்றார் அவர். மாறுபடும் ஒன்றில், ஒற்றுமையின் அடிப்படை அவசியம் என்றார். தாராளமயவாதிகள், ரொமான்டிக் சார்பாளர்கள், புரட்சியாளர்கள் அனைவருமே தங்களின் இலக்கினைப் பல வழிகளில் அடையும் முயற்சியில் மும்முரமாகத் தான் இருந்தார்கள். சமூகக் கட்டுமானங்களைத் திருத்தி அமைக்காமல், இந்தக் குறிக்கோளை அடைவது எளிதல்ல என்பதை பழமைவாதிகளும், சோஷலிஸத்தாரும் அறிந்திருந்தனர். தாராளமய முதலாளித்துவத்தை அனுமதிப்பதில் உள்ள வீழ்ச்சி என்பது, உறவுகளை இலாபம் ஈட்டும் ஒன்றாக, தொடர்புகளை விளம்பரப்படுத்தும் ஒன்றாக, குணாதியசங்களை வெற்றுக் கணக்கீடுகளாகச் செய்து முடிவில், ஊதிப் பெருக்கப்பட்ட ஒன்றாக, குறிப்பிட்ட வகையினர் மட்டுமே ஓங்கி வளர வழி விடுவதாகச் செய்துவிடும் எனவும் சொன்னார்.
ஜனநாயக நற்தன்மை, அனைவரையும் சமமாகப் பார்க்கும், உணரும் ஒன்று அவர் வாதிட்டார். மனிதர்களை, வெகுஜனக்கும்பல் என்று பார்க்காமல், சமூக நிலைமைகளின் ஒரே மாதிரியான அறிகுறிகள் என்றோ அல்லது ‘குணமே அப்படித்தான்’ என்றோ சொல்லாமல் இருப்பது அனைத்து மனிதர்களின் தர்மம் என்றார். மற்றவரை கும்பல் என்று சொல்வதும், நினைப்பதும், தன்னை அதிலிருந்து பிரித்துக் கொள்ளூம் செயல் தான்: ‘நான் மனிதன், அவர்கள் சமூகக் குவியல்’ என்பது சரியல்ல. ழான் பால் சாத்ரேயின் ‘நோ எக்சிட்டிற்கு’ முரண் எதிரொலியாக அவர் எழுதினார்- ‘வெகுஜனக் கும்பல் என ஒன்றுமில்லை, அவர்களை அப்படிப் பார்க்கும் மனோ நிலையைத் தவிர.’ அப்படியான பார்வை ஜனநாயக சாத்தியங்களை சிதைத்துவிடும்.
கருத்தில் நேர்மையாகவும், கபடமற்றும் தன்னைப் பொருத்திக் கொண்டு, ஜனநாயக வழியில் உரையாடுதல் /தொடர்பு கொள்ளுதல் சிறந்தது. மற்றவை மிகைப்படுத்தலேயாகும். இந்தக் கருத்தை தனது ‘கல்சர் & சொசைடி என்ற புத்தகத்தில் அவர் வலியுறுத்தினார். உண்மையாக நம்புவனவற்றிற்கும், சொல்லுக்கும், அதே போல அனுபவங்கள், மற்றும் அவற்றை வெளியாக்கும் விதத்திற்கும் இருக்கும் உறவை மறுப்பது, தனி நபருக்கும், பொது மொழிக்கும் தார்மீகக் கெடுதலை உண்டாக்கும். 12 வருடங்கள் கழித்து இந்தக் கருத்தை அவர் தனது ‘இங்கிலீஷ் நாவலில்’ மீண்டும் சொல்லி எச்சரித்தார்: சமூகத் தன்மையில், பார்வையாளர் ஒருவருக்கென்று மட்டும் தனிப் பங்கில்லை; கொடுக்கப்பட்ட வாழ்வு, உருவாக்கப்பட்ட வாழ்வு, எங்கே இருக்க வேண்டுமோ, அதை விடுத்து எங்கேயோ இருப்பதால், நாம் அனைவரும்,விமர்சகர்களாக, தீர்ப்பாளர்களாக, அப்படி இருக்க முடிந்தவர்களாக உருவெடுத்து விடுகிறோம். இலகுவான கருத்தியல் கண்டனங்கள், சந்தைப்படுத்துதல் இவை இரண்டும் தார்மீக சரணாகதியின் வடிவங்கள். அது ஆபத்திலிருந்து காக்கும் என நினைக்கிறோம். அதற்கு மாறாக, ஆதிக்கத்தையும், சுரண்டலையும் மீறி உருவாகும் எதிர்காலத்திற்கான விதை, மனம் திறந்த உரையாடலில் இருக்கலாம். இந்தச் சிந்தனையையே, ஒரு புரட்சி இடது சாரியினரின் கவர்ச்சிகரமான, மேலும் வில்லியம்ஸிற்கே உரித்தான, தார்மீக எண்ணமாகக் கருதலாம்.
அதே சமயத்தில், தனதேயான அரசியல் மற்றும் இலக்கிய மரபை அவர் உருவாக்கினார். தன் பான்டி அனுபவங்களை, பார்டர் கன்ட்ரியில் அவர் மிக இன்பகரமாக க்ளென்மாவர் என்ற வெல்ஷ் வாழ்வு குறித்த பெருமிதத்தை முன்வைத்தார். இரு தேசங்களின் எல்லைகளில், தொழிலகங்களின் மாறுபாட்டில், வர்க்க பேதத்தில், அந்தக் காலங்களில் அமையும் வாழ்வை, முக்கியமாக 1926 பொது வேலை நிறுத்தத்தைச் சொன்ன நாவல் அது. யாரோ ஒருவரின் மகனாக, தன்னைப் பெற்றவர்களின் சிக்கல் நிறைந்த முழு வாழ்க்கையை, அவர்களின் உலகை அறிய முனையும் வளர்ந்தவனாக, முதன் முதலாக, அவர்களை அறியாமல் உன்னை நீ அறிய முடியாது என்ற கருத்தை அறிந்தவனாக, அவர்கள் உனக்கு என்ன கொடுத்தார்கள், அவர்களால் கொடுக்க முடியாதது என்ன, உன்னிடம் என்ன எதிர்பார்த்தார்கள், நீ என்ன செய்யப் போகிறாய் என்றெல்லாம் யோசிப்பவனாக அவர் இருப்பதைப் பற்றி அந்தப் புத்தகம் பேசுகிறது. மற்றவர்களை முழு மனிதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது எப்படி, அது எவ்வளவு கடினமாகவும், விரும்ப முடியாததாகவும் இருக்கும், இருந்தும் வாழ்வில் அதன் பங்களிப்பு என்ன ஆகியவற்றை ‘கல்சர் & சொசைடி’ சொன்னதல்லவா? அந்தச் செய்தியினை வலியுறுத்தி நீட்டித்த ஒன்று என இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ளலாம்.
க்ளென்மாவரில் இருக்கும் குடும்பமும், அக்கம்பக்கத்தாரும், தன்னம்பிக்கையற்றவர்களாக, ஏழைகளாக, வேலை நிறுத்தம் செய்வோர் எதிர் கொள்ளும் மிரட்டல்களைத் தமக்காகவும், பிறருக்காகவும் சந்திப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், மிகவும் உயிர்ப்புள்ள நிகழ்வுகளால், அவர்களிடம் நிலவிய மென்மையான ஒற்றுமை, மன்னிக்கும் குணம், தம்மளவில் உறுதியாக இருப்பது போன்றவைகளும் சித்தரிக்கப்படுகின்றன. ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கையில், பராமரிக்கும் பணியில் இருக்கும் ஒருவர், பூச்செடிகளை ரயில் நிலையத்தில் நடுவதற்குக் கொண்டு வருகிறார்; இல்லையெனில், அவை நீரின்றி வாடிவிடும். வேலை நிறுத்தத்தின் போது எந்தப் பணியும் கூடாது எனத் தீவிரமாக ஒருவர் எதிர்க்கும் போது, கதை சொல்லியின் தந்தையான ஹேரி ப்ரைஸ் ‘நாம் அனைவரும் இணைந்து இந்தச் பூச்செடிகளை நட்டுவிட்டு பின்னர் வேலை நிறுத்தம் செய்வோம்.’ என்று சொல்கிறார். இதைச் செய்த பிறகு அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அனுபவமற்ற ஒருவர், யூனியனுக்கு எதிராக இருந்து, அந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் திரும்பப் பெற்ற பிறகு, சிலரை நிர்வாகம் வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபோது, தன் எதிர்ப்பை, தான் செய்யும் வேலையை இழுத்திழுத்து நீட்டித்து, தன் வழியில் நிர்வாகத்தினரை கலங்கடிக்கிறார். விளைவு, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுகிறார்கள். இதை ஒற்றுமையுணர்வு எனச் சொல்லலாம். ஆனால், கோட்பாடுகளின்படியோ, வியூகங்களின் வழியோ, இன்னதென உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், சக மனிதர்களிடம் கொள்ளும் பரிவு, அவர்களிடமிருந்து பிரிந்து செல்லாத தன்மை, எப்போதும் அவர்களை அதிகாரம் செய்வதற்கு தனக்குத் தானே ஓர் உத்தியைக் கடைப்பிடிக்காத குணம் என்று அறியலாம் தானே? இந்த நிகழ்வுகள், பான்டி, ஆபெர்காவென்னியில் நடந்த பொது வேலை நிறுத்தத்தில் காணப் பெற்றவை என வில்லியம்ஸ் குறிப்பிட்டார். நமது அச்சம் கலந்த ஆடம்பரம், அக்கம்பக்கத்தாரை விட அல்லது மற்றொரு தொழிலாளியை விட நாம் உயர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் ஆறாப்பசி, இவைகளுக்கு எதிராக, தினசரி ஒற்றுமையைப் பேணுவது கடினம். அந்தக் குடும்பத்தினரால் இழக்க முடியாத ஒரு பவுண்ட் நாணயத்தை, சிறுவனான மேத்யூ ப்ரைஸ் தொலைத்து விட்டதாகக் கருதப்பட்ட போது, அவனது அம்மா ஏலன், மேத்யூவின் மீது கரிசனம் கொண்ட, ஏழையான எல்வின் தான் அதை எடுத்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். ‘அந்தக் குடும்பம் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்று அவர் கேட்கையில், பணம் தொலைந்ததை விட இத்தகைய அவசரக் குற்றச்சாட்டு, ஹேரிக்குத் துன்பம் தருகிறது. “அவர்கள் ஏழைகள் என்று எனக்குத் தெரியும்.. நாமும் தான்” என்கிறார். (அந்தப் பணம் பக்கத்து வீட்டுக்காரர்களால் தவறுதலாக எங்கோ வைக்கப்பட்டு பின்னர் கிடைக்கிறது.)
லண்டனில் ஆசிரியராகப் பணியாற்றி தன் கிராமம் திரும்பும் மேத்யூ, தனக்கு இப்போது வேர்களில்லையா, மிகப் பெரும் உயிர்ப்புள்ள வாழ்வை நோக்கிய முன்னேறுதலா என தன்னையே கேட்டுக் கொள்கிறான். தன் தந்தையுடன் பணிபுரிந்த வயதான ஒருவரை புத்திசாலித்தனமாக நாவலில் கொண்டுவந்து, அவரிடம் கேட்கிறான்: ‘ஹாரி எனக்கு அப்பா; இன்றைய புது உலகில், என் வாழ்க்கைக்கான முன் மாதிரி அவரில்லை; இந்த உலகை மாற்றிய எவருக்கும் ‘சமூகத் தந்தை’ என ஒருவரில்லை.’ ‘இது தவறு’ என்று சொல்கிறார் பக்கத்து வீட்டு நபர். ‘இது தவறென்று எனக்கும் தெரியும்’ தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் படுக்கையிலிருந்து எழும் ஹாரி, தன் வழியில், சொல்கிறார்: ‘சமூகத் தந்தை என எவருக்கும் இல்லை; எந்தவொரு தந்தையும் தனிப்பட்டவருக்காக மட்டுமே இல்லை. என்னையும், உன் தாத்தாவையும் நீ அறிவாய். நாங்கள் மாறுபட்டிருந்தோம். எத்தனை பேர், தங்கள் தந்தையைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள்? தங்கள் தாத்தாக்களைப் போல வாழ்ந்தவர் எவருமில்லை.’ இந்த மாறுபாடுகளெல்லாம் மேற்பரப்பில் தென்படுபவை, தவிர்க்க முடியாத அகந்தையினால், ஒன்றின் தொடர்ச்சியாக உணர முடியாமல் செய்பவை. ஆனால், ஆழமான, நுட்பமான தொடர்ச்சிகள் இருக்கின்றன, அவை தவிர்க்க முடியாதவை என்று வில்லியம்ஸ் இந்த உரையாடலை நிறைவு செய்கிறார்.
எந்தக் குடும்பத்தினர் தங்கள் வேலையால் வாழ்ந்தார்களோ, அதிலே இறந்துபட்டார்களோ, அவர்களின் சீர்மையான கருத்து ஒன்று உண்டு; அதை மேத்யூ ப்ரைஸ், ஹாரியிடமிருந்து இறுதியில் பெறுகிறார். “உங்களுக்கென்று ஒரு வேலையை அமைத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்து முடியுங்கள்; அந்த வேலை ஏற்றதல்ல என்பதை ஒத்துக் கொள்ளலாம், நீங்கள் இன்னமும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்க முடியும்; அதை நிறுத்துவது கடினம், வேறெங்காவது செல்லலாம் என்ற பழக்கம் ஏற்படுமானால், அது வேலையின் குறைபாடில்லை, உங்களிடம் தான் குறை, நீங்களேதான் குறையுள்ளவர். ஒருமுறை ஒதுங்கலாம்; உங்கள் பலத்தை நீங்கள் ஒரு மாற்றேனும் குறைத்தால், நீங்கள் உங்களையே குறைத்துக் கொள்கிறீர்கள்.” இது நம்மை நெகிழச் செய்கிறது, சுமையாகவும், வரமாகவும் அமைந்து விடுகிறது. பலருக்கும் நடப்பதைப் போல, தனது தந்தையின் நிறைவடையாத பசியின் துண்டு போல, மேத்யூவின் தொழில் வாழ்க்கை அமைகிறது- தன் முயற்சியால் கல்வியறிவைப் பெற்ற கிராமத் தொழிலாளியின் ஏக்கத்தை அவன் கொண்டுள்ளான்- தன் உலகை முழுமையாகப் பார்க்க வேண்டும், அதை எப்படி மாற்ற வேண்டுமென அறிய வேண்டும் என்ற தவிப்பில் இருக்கிறான். வில்லியம்ஸின் கதா மாந்தர்கள், இதை உறுதியான விஸ்வாசம் எனக் கொண்டு, வாழ்க்கைக்குச் சமமாகவே பார்க்கிறார்கள். ‘அதில் வாழுங்கள்’ என்பது, தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தேடும் ஒரு முழக்கமல்ல, தடுமாற்றங்களைத் தவிர்க்கும் முயற்சி, வாழ்விற்கு உயிரூட்டும் உள்ளுணர்வு.
(அடுத்த இதழில் முடியும்)

Raymond Williams’s Resources for Hope – Dissent Magazine – Jedediah Britton- Winter 2024
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள்”