ரேமண்ட் வில்லியம்ஸ் – இறுதிப்பகுதி

முந்தைய பகுதி

வேறுபட்டு இருந்தாலும், கல்சர் &சொஸைடி, பார்டர் கன்ட்ரி இரண்டுமே முழுமையானவை. இவைகளைப் போன்றே பூரணத்தைத் தொட முயன்ற இரு புத்தகங்களைப் பின் வந்த முப்பதாண்டுகளில் அவர் எழுதினார். இந்தப் புத்தகங்களின்  மையக் கருத்துகளை விரித்து அவர் நிறைய நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார். 1973ல் வெளியான அவரது ‘த கன்ட்ரி& த சிடி’ என்ற புத்தகம் அவரது கூர்ந்த பார்வையில், கிராமப்புற வாழ்வைப் பற்றிய கருத்துடன், அதன் உண்மை நிலையையும், இலக்கிய மரபுகளில் நாட்டுப்புற இடையர்களுக்கும், அப்படி அல்லாதோருக்கும் நிகழும் பாரபட்சத்தையும், புரட்சிகள் அரசியல் பாரம்பரியமாக கிராமப்புறத்தில் நிலவுவதையும், வளங்களைச் சுரண்டும் ஆதிக்க வரலாற்றையும், கண்ணில் படாத ஏழை மனிதர்களின் அன்பு, துக்கம், நம்பிக்கை, தோற்றுப் போதல் ஆகியவற்றையும் பேசியது. அவரது  கூரிய பார்வையிலிருந்து எதுவும் தப்பவில்லை, ஆயினும் தர்ம சிந்தனையும், பொறுமையான அவதானிப்பும் உயிர் பெற்று வருகின்றன. நிலப்பரப்பென அவர் காட்டுவது இயற்கையை அல்ல, மனிதனைத்தான், அவன் வாழ்க்கையின் மூலம் அந்தப்பரப்பையும், அந்தத் தொகுதியையும் அவர் கவனத்திற்குக் கொணர்கிறார். பல மனிதர்கள் கிராம வீடுகளின் அமைப்பு என்று (டவுண்டன்  மடாலயத்தை நினைவு கொள்ளுங்கள்) எண்ணுவதை மனதில் கொண்டு, அவர் பெரிய வீடுகளைக் காட்டுகிறார்- அவை திருடப்பட்ட உழைப்பின் சின்னங்கள், நிலத்தில் ஜொலிக்கும் ஆபரணங்கள் அல்ல, அதைச் சூழ்ந்துள்ள வாழ்வின் வலி அறியாது காட்டுமிராண்டித்தனமாக, வரைமுறையற்ற அளவீடுகள் கொண்டுள்ளவை எனக் கடுமையாகச் சாடுகிறார். மனிதர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த ஏக்கம், நிலத்தில், ஓரிடத்தில், வசிப்பது என்பது; எல்லைகளால்/தடுப்பான்களால் பிரிப்பது, புதுத் தொழில் நுட்பத்தாலும், புதுச் சந்தைகளாலும் வேரோடு பிடுங்கி எறியப்படுவது என்பது, அந்தச் சாதாரண நிலைகூட நிறைவை அளிக்கக் கூடாது என்று செயல்படுவதாகும். புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கிராமப்புறங்களின் நல்லியல்பை, அவர்களின் கபடமற்ற தன்மை மற்றும் நேர்மையை உயர்த்திப் பேசி, லண்டனின் ஏமாற்றுக்காரர்களுக்கு எதிராக நிற்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக்கொள்ளும் கிராமப் பெருமகன்கள் எப்போதுமே இருந்திருக்கிறார்கள்.  ஆனால் எப்போதுமே இவர்களின் பெருமையுள்ள வாழ்வுகள், “ வலிமிக்க, குறுகிய வாழ்க்கையுள்ள, நிரந்தரமாக ஏமாற்றப்பட்டவர்களை”, அவர்களின் நிலங்களில் பாடுபட்டு உழைக்கும் மக்களை, அகதிகளாக ஆனாலொழிய லண்டனைப் பார்க்காத மக்களையே நம்பியிருக்கும். 

கிராமப்புறத்தின் புரட்சி மரபை, ஒரு உண்மையான மாற்று வழியாக வில்லியம்ஸ் ஏற்கவில்லை. பெரும்பாலும், அது, உணர்ச்சி பூர்வ ஏக்கமான, எப்போதுமே இருந்திருக்க முடியாத, பழுதுபடாத உலகை நினைக்கிறது; அப்படியான ஒரு எதிர்காலமும் இல்லை. ‘மனித உள்ளுணர்வு, சமூகத்தினுடையதிலிருந்து வேறுபட்டது…. எதிர்ப்புகளை, கடந்த காலத்தை விரும்புவதாக ஆக்கி, நம் தேவைக்கேற்ற அவகாசமில்லாமல் மடிபவர்களாக நம்மை ஆக்குவது’ என்று, களவுபோன இனிய, நல்ல கிராமப்புறமென்னும் கருத்தைப் பற்றி எழுதுகையில் சொல்கிறார். நிலவுடைமை சீர்திருத்தவாதிகள், பொது நிலங்களைத் தனியார் சொத்தாக ஆக்கும் பெருவேலிகளை அமைப்பதை எதிர்க்கும் விமர்சகர்கள், இயந்திரத் தொழில்மயமாக்குதலை எதிர்ப்போர் ஆகியோரின் ஒழுங்கான தீவிர அரசியல் அணுகல்கள், (நிலச்சுவான்தார்கள் மேற்கொள்ளும் தார்மீக அறிவுறுத்தல்களைப் போலில்லாமல்), நேர்மையானவையாகவும்,  நெஞ்சுருக்குவனவாகவும் அவருக்குத் தெரிந்தாலும்,  அவை  சுய-முரண்களில் சிக்கியன என்று அவர் நினைத்தார். ஓரிரு தலைமுறையாக தற்காலிகமாக, பண்பார்ந்த வாழ்க்கை அமையப் பெற்ற மனிதர்கள், நிலப்பிரபுத்துவத்திலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும், தாராள விடுதலைக் கொள்கையிலிருந்து சிலதைப் பெற்றும் அதை எப்படியாகிலும் நிரந்தரமாக்குவதற்காகப் பாடுபடுகிறார்கள். ‘ஒரு தற்காலிகச் சூழலில், நிரந்தரமான ஒன்றிற்கான ஆழ்ந்த விருப்பத்தின் அடிப்படையில், பெரும்பான்மையான கிராமப் புரட்சிகள் அமைகின்றன.’  அவை, ‘காலப்போக்கின் முரண்களை மூடி மறைப்பதற்கும், தவிர்ப்பதற்கும் தான்’ உதவுகின்றன. தங்கள் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தைப் பார்க்க மறுக்கும், நினைவேக்கப் பிரமுகர்கள், வாழத்தகுந்த எதிர்காலத்தை அமைப்பதிலிருந்து விலகி இருந்தனர்.

சமூக வரலாற்றை இரத்தமும், சதையுமாக, அதன் அத்தனை உணர்வுகளுடன் வாழ்வில் கொண்டு வர வேண்டும். மேத்யூ ப்ரைஸ் ‘பார்டர் கன்ட்ரியில்’ சொன்ன இலக்கை, ‘த கன்ட்ரி & த சிடி’ ஒரு வகையில் முன்னெடுத்துச் செல்கிறது. தன் மக்களின் முந்தைய வாழ்வு தன்னைத் துயரப்படுத்தியதை, தன் நினைவுப் பெட்டகத்தில் எழுந்து நடமாடிய அந்தப் பாத்திரங்களை, நான் அதில் எழுதினேன் என்று தன் தந்தையின் வயதான தோழரிடம் அவர் சொன்னார். ‘நிலமற்ற, சுரண்டப்பட்ட, அதிக எண்ணிக்கையிலுள்ள, தற்காக்கும் திறனோ அல்லது குறிக்கோளோ நிரந்தரமாக இல்லாத ஏழைகளுடன், தம்மைத்தாமே காவலர்களாக நியமனம் செய்து கொண்ட குரல்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை’ என்று அவர் கண்டுணர்ந்தார். அவர்களுடைய எதிர்காலத்தில் அவருக்கு ஆர்வமிருந்தது, அவர்களது கடந்த காலத்திலும்.

‘பீபிள் ஆஃப் த ப்ளாக் மவுன்டன்’ என்ற நாவலில் அவர் கடந்த காலத்தைப் பற்றி எழுதுகிறார். ‘ஒரு முட்டாளைப் போல,…. அனைத்து மனிதர்களும் மாறும் வரலாற்றை’ எழுத விழைவதைத் தனது பேரார்வமாகக் குறிப்பிடும் மேத்யூ ப்ரைஸ், 1988ல் வில்லியம்ஸ் இறந்த பின்னர் வெளியான இரண்டு தொகுதிகளின் முதல் தொகுதியில் வெளிப்படுகிறார். 25,000 ஆண்டுகளுக்கு முன்னர், கடைசிப் பனியுகத்தின் முதலில் இருந்த குதிரை வேட்டைக்காரர்களுடன், நாவலைத் தொடங்கும் அவர், தான் வளர்ந்த இடத்தின் மாந்தர்களைப் பற்றிய சிறுகதைகளோடு, ரோமானியர்கள், பிரித்தானியார்களை வென்றதை அற்புதமாக இணைக்கிறார். இதிலிருக்கும் கதைகளும், இடைக்கால வேல்ஸில் நடைபெறுவதாக இரண்டாம் தொகுப்பில் சொல்லப்படும் கதைகளும் மனதை உலுக்குவனவாகவும், உயிரோட்டமுடனும் இருக்கின்றன. குளிர்காலத்தில் நடந்த குதிரை வேட்டை வெற்றியடைந்தாலும், கூடாரத்தில் காத்திருக்கும் ஊனமுற்ற குடும்ப நபர் பனிப்புயலில் இறந்து போகிறார். ஒரு குழந்தை, பன்றியை வீட்டு விலங்காகப் பழக்குவதைப் பற்றி சிந்திக்கிறது, ஆனால், வேட்டையாடும் விலங்கொன்று அந்தக் குறிப்பிட்டப் பன்றியை இரவில் கவர்ந்து சென்று விடுகிறது. ‘மெஷரர்’ எனப்படும் மதகுரு வழிமுறையாளர், வானத்தைப் பார்த்து சொல்வதாக வரும் கதை வழியே, பழங்காலத்துக் கல்வட்டங்களுக்கான ஆதாரம், வானத்துப் பொருட்களின் இத்தகைய விசித்திரமான, ஒழுங்கான அமைப்பில் உள்ளது என்று கருதுகிறார் வில்லியம்ஸ். அந்தக் குரு கிராமத்திற்கு வருகிறார். அளவிடும் கலையில்  அந்தச் சிறுவன் தேர்ந்தவன்; அவனுக்கு இப்போது ஒரு குழப்பம்; மரபான நடுக் குளிர்காலக் கொண்டாட்டங்களுக்காக தன் குடும்பத்துடன் இருப்பதா அல்லது அந்தப் புதியவரைத் தொடர்ந்து சென்று, குறைந்தபட்ச ஒளி நிலவும் நாளை அறிவு பூர்வமாக அறிவதா?  இளையவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்; காதல் உணர்வை தங்கள் கதைகளிலும், தங்களைச் சார்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களிலும் சொல்லவும் செய்கிறார்கள், சொல்ல வழி அறியாது திகைக்கவும் செய்கிறார்கள். நிலத்தின் அர்த்தம் மாறுகிறது- ஆடுகளால் பரவும் அதீத (ஆந்த்ராக்ஸ், ப்ளேக் போன்றவைகளாக இருக்கலாம்) நோய்களால், ஆடு மேய்த்தலைக் கைவிட நேர்கிறது. பல தலைமுறைகளுக்கு மேட்டுப்பகுதி மேய்ச்சல் நிலத்தை, அதன் செழிப்பை, ஒரு காலத்தில் கொண்டாடிய மக்களே, தங்கள் நிலைக்காகச் சபிக்கிறார்கள், பயந்து மலைகளின் நிழலில் சுருண்டு கொள்கிறார்கள்.

கல்சர் & சொசைடியில், ‘வாழ்வு தன்னை உருவாக்கிக் கொள்ளும் திறன் பெற்றது’ என அவர் எழுதியதே, அவருடைய சமத்துவ நோக்கு மற்றும் நம்பிக்கையின் சாரம். நிலம் வழியாகவோ, படகுகள் மூலமோ வரும் புது மனிதர்கள் புதுக் கதைகளைக் கொண்டு வருகிறார்கள், புது முறைகளில் நிலத்தில் வாழ்க்கையை அமைக்கிறார்கள். அங்கே ஏற்கெனவே வாழும் மனிதர்கள், குறைந்தபட்ச தர்மமாக, உபசரிப்பையும், பொறுத்துப் போவதையும் மனதில் இருத்திக் கொண்டு, புதியவர்களுக்கு இடம் கொடுத்தாலும், சந்தேகம், குழப்பம், எப்போதாவது பண்பாட்டின் எல்லைகளைச் சொல்லி நடக்கும் கொலை அனைத்தும் இடம் பெறுகின்றன. அவர்கள், பிரபுக்கள் இல்லை, போர் வீரரில்லை, சாதாரணக் குடிகள்.

 கால் நடைகளைக் கடத்தும் தீக்குணம் கொண்டவர்கள், இரத்த வெறியுடன் அட்டகாசம் செய்கிறார்கள்; மலைவெளியெங்கும் பாதுகாப்பின்மையையும், அதி பயங்கரங்களும் உண்டாகினறன; முதல் பிரபுக்களான செல்ட்ஸ், அந்தக் கயவர்களை அடக்குவதாகச் சொல்லி கிராமங்களில் நுழைந்தவுடன், இந்தப் பாமர மக்களின் வீழ்ச்சி தொடங்குகிறது. ‘நீங்கள் எங்களுக்கு அடங்கிப் போவதாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம், ‘ என்று சத்தியம் செய்கின்றனர் அந்தப் பிரபுக்கள். இதுவரை இவர்கள் இதைக் கேள்விப்பட்டதேயில்லை. பிரபுக்களும், சாதாரணர்களுமாகப் பிரிவுகள் ஏற்படுகின்றன. முதலில் உள்ளூர் மனிதர்கள் நன்றியுடைவர்களாக, பின்னர் குழம்புபவர்களாக, பிறகு தங்களைக் கூட்டாளர்களாக, சிதறும் எதிர்ப்பாளர்களாக உணர்கின்றனர். சாமான்ய மக்களாக, விவசாயிகளுடன், கால் நடை மேய்ப்போருடன் இணைந்து எந்த மனிதர்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்களோ அவர்களின் வழி வந்தவர்கள் பனியுகத்தின் பின்னரான காலங்களில் அடிமைகளாக வாழ நேர்ந்தது. பிரபுத்துவம், அரசுடன் பிணைக்கப்பட்ட ரோமானிய வெற்றிக் காலத்தில், படி நிலை அதிகாரத்துடன் சமூக வாழக்கை அவலமான பிணைப்பு கொண்டபோது இரண்டாவது வீழ்ச்சி ஏற்பட்டது. வில்லியம்ஸின் கதைகள் பிரபுக்கள் உங்கள் இனமில்லை என எப்போதுமே எச்சரிக்கை செய்கின்றன. பண்ணை வீட்டைக் கைப்பற்றி, அங்கிருந்த மனிதர்களைப் பிணையாக வைத்து, அவர்களை கொடூரமாக நடத்திய வைகிங் ரவுடிகளை, சாக்சன் பிரபு துரத்தி அடிக்கிறார் என்பதை ஒரு சின்னமாகச் சொல்லும் வில்லியம்ஸ், அந்த மேன்மையான பிரபு சாமான்யர்களுக்கு நீதி எதுவும் வழங்கவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார். இனம் இனத்தோடு சேரும் என்பது போல், பிரபுக்கள், பிரபுக்களை அங்கீகரிக்கிறார்கள். அமைதிக்கு ஈடாக, வைகிங் தளபதிக்கு உள்ளூர் அதிகாரம் தரப்படுகிறது. குடிசைவாசிகள் தங்கள் சிதறுண்ட வாழ்விற்குத் திரும்புகிறார்கள். முடிக்கப்படாத இந்தத் தொகுப்பில், ஜே.ஆர்.ஆர் டோல்கின் அல்லது பிலிப் புல்மேன் ஆகியோரை ஒத்து, ஆனால், தீர்க்கமான சொற்களால், அவர் சொல்வது இதையே. “வரலாறு எழுதப்படும் முன்னரே, பல்லாண்டு பல்லாண்டுகளாகச் சுரண்டப்பட்டு அடிமைகளாகப்பட்டவர்கள் சாமான்ய மனிதர்கள்; அவர்களைக் குறித்த வாழ்க்கைக் காவியமாக, அவர்களின் நிலைகளைப் பற்றிய கதைகளைச் சொல்லும் குறிக்கோளுடன், உபதேசமாக இல்லாமல், உலகை நோக்கி நான் உரக்கச் சொல்வதும், விரும்புவதும், எதிர்காலத்தில் மீண்டும் பிரபுக்கள், சாமான்யர்கள் என எந்தப் பிரிவினையும் கூடாது என்பதே.” 

1950 மற்றும் 60ன் தொடக்கக்காலங்களில், இடது சாரியினர், கருத்தூக்கமின்றி தனிமைப் படுத்தப்பட்டார்கள் என்று வில்லியம்ஸ் சொன்னார். அந்தக் காலக் கட்டத்தில் ஸ்டூவர்ட் ஹால் மற்றும் சிலருடன் சேர்ந்து, 1960ல் வெளிவரத் தொடங்கிய ‘ந்யூ லெஃப்ட் ரிவியூ’யில் எழுதினார். கிட்டத்தட்ட புரட்சி எனச் சொல்லத்தக்க 1968ம் ஆண்டில் யூரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நடந்த நிகழ்ச்சிகளின் போது அவர் ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தார்; சிறுவனாக அவர் இருந்த போது 1926ல் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் புகழ் பெற்ற புரட்சி அவர் நினைவில் மலர்ந்தது. இது புத்துயிர் ஊட்டியது, ஆயினும், பாரிஸ், வாஷிங்டன், ப்ராக் நகரங்களில் போராளிகள் தோற்றனர்- முதலிரண்டில் அது எடுபடவில்லை, மூன்றாவதில் சோவியத் யூனியன் அதை முறியடித்தது. வில்லியம்ஸ், புதிய சமூக இயக்கங்களான, ஆயுத மறுப்பு, பெண்ணியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இளம் போராளிகளுடன் இணைந்து கொண்டார். உண்மையான மக்கள் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்றால், அமைதியான நீள் புரட்சி வழியில், சக்தி மிகுந்த சொற்களால் தாக்கம் உண்டாக்க வேண்டுமென்று அவர் சிந்தனை மாறியது. மாஓ வின் ஆட்சியில் அவர் கொண்டு வந்த வேலைப் பகுப்பைப் பற்றிய நட்புப் புலம்பலாக, ‘இடதின் வழிமுறையில் எதிரிகள் இல்லை’ என்பதையும் சொன்னார். 

1970களில் அவரது நாட்டில், கடுமையான ஆட்குறைப்பு அரசியல் வடிவெடுத்ததும், ‘தாட்சரியத்தின் நீண்ட குளிர்காலமும்’ அவரை இடதின் பால் செலுத்தின. சோஷலிச சமுதாயம் என்ற அவரது நம்பிக்கை வீழ்ந்துபட்டது. சமூக அரசியலில் இப்படியொரு குளிர்காலத்தை 1960களின் தொடக்கத்தில் அவர் கருத்தில் கொண்டிருந்தார். ஆட்குறைப்பு செய்ய நினைக்கும் நிர்வாகத்தின் திட்டம் நிலவரத்தின் குரல் என்றும், வளர்ந்ததன் அடையாளம் என்றும், உலகம் அப்படித்தான் இயங்குமென்றும், சங்கத்தின் கோரிக்கைகளான குறைந்த வார நாட்கள்,, பணியை விட்டு யாரையும் விலக்காதிருத்தல், என்பவை இனிய கனவுகள், மற்றும் வெற்றுப் பேச்சுக்கள் என்றும் தொழிலாளர் சங்கத்தின் அதிகாரி தானாகவே சந்தேகப்படுகிறார் என ‘செகண்ட் ஜெனரேஷன்ஸ்’ (1964) நாவலில் வில்லியம்ஸ் எழுதினார். எதிர்ப்புறத்தில் இருக்கும் நிர்வாகம், சாதாரணமானதாக இருந்தாலும், அவர்கள் நிலவரத்தை அறிந்தவர்கள் என்று ஐயப்படுவதும், நாம் வலிமையற்றவர்கள் என்று முன்கூட்டியே தீர்மானிப்பதும், பெரும் தடைகள் என்றார் அவர். ‘இந்தத் தேவையற்ற இழுபறி எண்ணங்களால், உன் அலுவலான, சங்க அங்கத்தினர்களின் நல உணர்வை நினைக்காமல், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே, மனதளவில் சரணடைந்து விடுகிறாய்.’ இந்த அனுபவத்தை வில்லியம்ஸ் ‘தன் சுயத்துடன் நடக்கும் மேலாதிக்க மோதல்’ என்றார். செகண்ட் ஜெனரேஷன்ஸ் முழுதுமே, தன்னுடனேயே நடைபெறும் இந்த ‘மோதல் அரசியல்’ பெரும்பாலும் தோல்வியில் முடிகிறது என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தது. ‘தோற்கடிக்கப்பட்ட கோட்பாடுகளான சமத்துவம், ஒற்றுமை, நீதி இவைகளைச் சொல்லி உணர்ச்சி எழுப்பிய சங்க முழக்கங்களை ‘வெத்து வேட்டுக்கள்’ மற்றும் ‘வெட்கம்’ என்று கருதி சங்கத் தலைவர் செயல்பட்டால், அவரை அவரே நம்பாத போதும், அவரது துணை அவரை இன்னமும் நம்பும் கொடுமைக்குச் சமம்,’ என்றார். ‘சோஷலிசத்திற்காகப் போராடும் ஒருவர் என்ற வேடத்தில் இருக்கும் அந்த நபர், தன் நெஞ்சைத் தானறியமாட்டாரா, என்ன? அவருக்குத் தெரியும், தனது இலக்கு இன்னதுதானென்று.’  ஆனால், சாதாரண அதிகாரமுள்ள மேலாளரும் ‘உள்ளிழை ஊஞ்சலை’ மட்டுமே கணக்கில் கொள்வதில்லை; உள் நாடு, மற்றும் உலகச் சந்தையின் உண்மை நிலவரத்தையும் அவர் அறிவார். 1940களின் இறுதியில் அல்லது 1950 களில் தொழிலகப் பணிகளை வேலையாட்களுக்குப் பகிர்ந்தளிப்பதோ, ஒட்டு மொத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோ சாத்தியமாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது.  புரட்சிகர ஜனநாயகவாதியாக, சமத்துவத்தை விரும்புவராக இருக்கும் மனிதர்கள், பிரிட்டனின் அரசியல் நிலைப்பாடான இயந்திர முதலாளித்துவத்தில், அழகியல் கவிஞராக இருப்பதற்குச் சமமென்று அவர் உருவகித்தார். எந்தெந்தக் கொள்கைகளால் அவர் வாழ்வை அமைத்துக் கொண்டாரோ, அவைகளைச் சந்தேகப்படத் துவங்கினார். கலாசாரமும், அரசியலும், வடிவமும், சுயமும், புரட்சி உணர்வை நெருக்கின. 

புரட்சி என்பது சிக்கல், மற்றும் சில நேரங்களில் முரண்பாடும் கொண்ட ஒன்று. புரட்சியின் திட்டம் என்பது முழுமையான, ஆழமான மாற்றத்தை  விரும்புவது என்று ஒரு வகையில் சொல்லலாம்;  புரட்சியாளர் மற்றொரு வகையில், இன்றுள்ள நிலையில், சிக்கல்கள், தவறுகள், மாற்றத்திற்கான தடைகள் ஆகியவை பரந்தும், வலுவாகவும் இருப்பதைக் கண்டறிகிறார். புரட்சியின் இந்த இரு வகைமைகளுக்குமிடையே ஒரு இனிய உறவும் இருக்கிறது, மோதலும் உள்ளது. பிரச்சனைகளின் ஆழத்தைப் பொறுத்து, மாற்றத்திற்கான தேவை எழும். பிரச்சனைகள், மற்றும் மாற்றத்திற்கான தடைகள் புரட்சிகரமாகப் பகுப்பாய்வு செய்யப்படும் போது, எந்த புரட்சித் திட்டத்தையும் மூழ்கடிக்கும் அவ நம்பிக்கைகள் உண்டாகலாம்; பகுப்பாய்வு கடுமையாக இருக்கும் பட்சத்தில், அரசியல் மௌனம் எழக்கூடும்; அரசியல் அறிவு இல்லாதவர்கள் கைகளில் புரட்சித் திட்டம் சிக்க நேரிடலாம். இவ்விரு நிலைகளிலும், தனது இத்தனைப் பிரச்சனைகளினூடாக, மற்றொரு மாறுபட்ட உலகிற்கானத் திறப்பையும், அதன் வளர்ச்சியையும் இந்த உலகம் எவ்வாறு கொண்டுள்ளது என்பதைச் சொல்லும் ஒரு புரட்சிக்கான தேற்றம் தேவை. இந்த இரண்டு வகைமைகளையும் இணைப்பதற்காக அவர் முழு மூச்சுடன் பாடுபட்டார். பலவீனமான, அடக்கப்பட்ட, மனிதர்களின் வாழ்வை அறிந்தவர்; அவர்களின் துயரங்களைத் தன் நூல்களில் வடித்தவர், மாறிய உலகில், கௌரவமான, நிம்மதியான வாழ்வை மீட்டெடுக்க இந்தக் கருத்து உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றும், முழுமையற்ற, தற்காலிகத் தீர்வுகள் எந்த நன்மையும் செய்து விடாது எனவும் அவர் நம்பினார். 

1980களில், மனித வாழ்வினையும், சமூகக் கூட்டமைப்பையும், நிலவளங்களையும், சூழலியல்களையும், முதலாளித்துவம் வேகமாக விழுங்குவதை அவர் பார்த்தார். பொருள் உற்பத்திக்காக, இயற்கை வளங்களும், மனித உழைப்பும் சுரண்டப்படுவதைப் போக்கி, அரசியலானது முழுமையான வாழ்க்கைக்கான திறவுகோலாக இருக்க வேண்டும் என்ற ‘புதிய இடதின்’ பசுமை நோக்கத்தைப் பின்பற்றினார். இந்தப் புது இயக்கத்தை ‘மாற்றத்தின் முகவர்கள்’ என்று அவர் குறிப்பிட்டாலும், பெருந்தன்மை மிக்க, அடக்கத்துடன் கூடிய, அனைவருடனும் பூமியில் ஒன்றாக வாழும் சமுதாயத்திற்காக தம்மைத்தாமே யாவரும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழமான கற்பனையான நினைப்பும் கொண்டிருந்தார். ‘கருப்பு மலைகளின்’ 25,000 ஆண்டு சரித்திரத்தில், அவர் அதைத்தான் முயன்றார். தான் கனவினில் எப்போதும் காண்பது அந்த நாவலின் நிலப்பரப்பு மட்டுமே என்றார். 

அவருடைய மரபாக எதைச் சொல்லலாம்? இயந்திரமயச் சூழலிலும், மனிதத் தன்மையுடன் கூடிய பொருள்மயவாதம், அபகரிப்பு கூடாது என்ற நீதி, அனுபவங்களின் உணர்வை அறியும் ஆறாப்பசி ஆகியவற்றை அவருடைய சிறப்பான படைப்புகள் பேசியதால், ஆன்ட்ரூ மார்வெல்லின் கவிதை, ஜான் ரஸ்கினின் கொள்கை அறிக்கை, வேர்ட்ஸ்வொர்த்தின் ப்ரேலூட் போன்ற உன்னதப்படைப்புகளுக்கு இணையாகக் கருதலாம். ‘கல்சர் & சொசைடிக்குப்’ பிறகு வெளியான ‘லாங் ரெவல்யூஷன்’ (1961), ‘த கன்ட்ரி& த சிடிக்குப்’ பிறகு வெளியான ‘மார்க்சிசம் & லிட்ரசர்’ (1977) இரண்டிலும் தன் வாழ்நாள் பணிகளை/சிந்தனைகளை, முறை சார்ந்த இலக்கிய வழியிலும் அவரால் தர முடிந்தது. ஒரே சமயத்தில், சமூகத் தொடர்புகளின் கோட்பாட்டை மனிதர்கள் தத்தம் வழிகளில் அறிவதையும், தாமே உருவாக்குவதையும், ஊடகத் தொழில் நுட்பத்தின் வடிவங்களாகச் செய்வதையும், அதன் உடைமையாளர்களாகத் திகழ்வதையும் சிறப்பாகச் சொன்னது ‘லாங் ரெவல்யூஷன்.’ குறைவான அளவிலேயே நம் கூட்டுச் சுதந்திரம் இருந்தாலும், அந்தச் சுதந்திரத்தின் வரம்புகளை, அதன் விளிம்புகளுக்கு எதிராக அழுத்தும் வரைபடத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் நாம் ஈடுபடுகிறோம்; அதில் நாம் வியப்பிற்குரிய விளிம்புகளையும் கண்டு பிடிக்கிறோம்; இந்த, ‘தட்டைப் பொருள்முதல் வாத எதிர்ப்பு’ என்ற சித்தாந்தத்தை அவருடைய ‘மார்க்சியமும், இலக்கியமும்’ என்ற நூல் அழுத்தமாகப் பேசியது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று வில்லியம்ஸ் இந்த நூல்களில் சொல்ல முயல்வதால், அவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பிட்ட ஆக்கங்களின் ஆற்றல் இல்லையெனில், அவை மறைந்திருக்கக் கூடும். தன் காலத்தை தனியொருவராக அறிந்தவர், மிகக் கூர்மையான நோக்கு கொண்டவர், தயாள குணமிக்கவர், கடப்பாட்டு உறுதி கொண்டவர், இத்தனை அரிய குணங்களையும் ஒரு சேர ஒருவரிடம் பார்க்க இயலாது. அவர் கொண்டிருந்த நட்பு, அவர் வாழ்ந்த காலங்களின் சூழல், செய்ய வேண்டிய வேலையின் ஒருமை பலத்தைக் காட்டிலும் கோட்பாட்டாளாராக உருவாக வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை அவரின் சிறந்த குணக்கலவையின் காரணங்கள் எனச் சொல்லலாம். 

அவரது சிந்தனை இருவிதக் குழப்பங்களை எதிர் கொண்டது. அப்படி ஏதேனும் இருந்தால், அவர் வாழ்ந்த காலகட்டத்தை விட இன்றுதான் அவை கூடுதலாக நிலவுகின்றன. மனித ஆற்றலைப் பற்றிய புரட்சிகரமான நம்பிக்கை ஒரு புறம்; மனிதர்கள் செய்வதைக் குறித்த விரக்தி மறுபுறம். அவர் அனைத்து விதமான துரோகங்களையும், அவ நம்பிக்கைகளையும் பார்த்தவர். ஓர் ஒழுக்கவாதியாக, ‘மலிவான விற்பனையாளர்’, ‘போதையாளர்’, ‘பருமனானவர்’ போன்ற சுய மதிப்பீட்டுக் குறைவுகளை அவர் கண்டித்தார். அவை உருவாவது, ஒருவர் தன்னை திருப்தியின் வாகனமாகவும், பிறரை இலாபம் அல்லது மகிழ்ச்சியாகப் பார்ப்பதனாலும்தான் என்றார். நாம் உண்மையில் அப்படிப்பட்டவர்களே என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மனித வாழ்விற்கு ஆழமான கரிம மூலங்களாக இணக்கம், சுயமதிப்பு, அர்த்தம் ஆகியன தேவை என்று எண்ணிய அவர், கலாசார நொதிகள், பரிசோதனைகள் இவைகளால், புரட்சிகரமான ஜனநாயக சோஷலிசம் உருவாகும் என்று திண்ணமாக நினைத்தார். 

தொடர்புப் பரிமாற்றங்களில் ஆழ்ந்த நல்லெண்ணம் கொண்ட இவரின் தடுமாற்றங்களை, ‘இணையம்’, பின்நோக்கில் கூர் செய்தது. ஒலிபரப்பின் ஒற்றை உரிமைக்கு எதிராக, ‘பல குரல்கள்’ ஒலிக்கும் இணையத்தை அவர் வரவேற்றார். ஒரு விதத்தில் அவர் அந்தச் சேவையில் ஆர்வம் கொண்டு அதை எதிர்பார்த்துக் கொண்டுமிருந்தார்; 1988ல் அவரது மறைவிற்குப் பிறகே இணையம் மக்கள் மனதில் படரத் தொடங்கியது. அடியிலிருந்து கட்டமைக்கப்படுவதற்கு சிற்றலை வானொலிகள் உதவுமென்றும், வெளிப்படையான உரையாடல்கள், ஜனநாயகத்தையும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடன் இருப்பதையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் ஒரு முறை சொல்லியிருப்பதாக நினைவு. இதைப் போலத்தான் ஆரம்ப கால இணைய உரிமையாளர்களும் உத்திரவாதம் அளித்திருக்கக் கூடும்! மனித இனத்தின் மாண்பற்றத் தன்மைகளான மிகை ஆடம்பரம், இனக்குழு பெருமிதம், வெறுப்பு, வதைத்தல் ஆகியவைகளால், இணையம் இன்று அதிக அளவில் சமூகத்தைப் பாழ்படுத்தி வருகிறது. இன்று நாம் காணும், பரவலாக்கப்பட்ட தொடர்பு, ஃப்ரீட்ரைஷ் நீட்சாவின் அவநம்பிக்கையான  ‘கொடுமையற்ற பண்டிகைகள் இல்லை’யை அதிகமும் மெய்ப்பிப்பதாகவும், வில்லியம்ஸின் நம்பிக்கையை ஒத்ததாகவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கதே. 

ஊடகம் யார் வசம் இருக்கிறது, அதை அவர் எவ்வண்ணம் பயன்படுத்துகிறார் என்பது முக்கியம் என்று வில்லியம்ஸ் எப்போதும் சொல்லி வந்தார். வணிகத் தொலைக்காட்சி அமைப்புகளை நிறுத்த வேண்டும் என்று 1962ல் வாதிட்ட அவர், பெரும் வணிகக் குழுமங்கள் அடையும் சாத்தியங்களான, கண்காணிப்பு முதலாளித்துவம், குறிபார்த்து மிகைபடுத்தல், உணர்வுகளைத் தூண்டும் மோசமான கட்டமைப்பு போன்றவற்றையும் அறிந்திருக்கக்கூடும். இலாப நோக்கில் இயங்கும் ஒட்டுண்ணி உலகில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? துணிகரக் கூட்டுமுதல் நிறுவனங்கள், சோஷலிச சமுதாயத்தை உண்டாக்காது என்பதை, மக்கள் ஆட்சி கற்பனாவாதியான வில்லியம்ஸ், உடனடியாக அறிந்து கொண்டார். அவர் இறந்த பல பத்தாண்டுகளுக்குக்குப் பிறகும், அவருடைய இருப்பின் தேவையை நாம் உணர்வதாகத் தோன்றுகிறது. 

அவரது இரண்டாவது தடுமாற்றம், தேசம், தேசியம் பற்றியது. இன்றைய நவீன உலகில், அரசின் கரங்களாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தையும், பெருமளவில் வடிவமைக்கப்படும் அதிகார சக்தியையும் அவர் எப்போதுமே நம்பவில்லை.  அவரது ‘த ஃபைட் ஃபார் மனாத்’ என்ற 1979ம் வருடத்திய நாவல் இதைச் சொல்கிறது. அரசுத் திட்டமான, ‘வெல்ஷ் பள்ளத்தாக்கில் எதிர்கால நகர நிர்மாணம்’ என்பதில், மேத்யூ ப்ரைஸ், ஒரு அங்கமாகிறார்; அவருக்கு வயதும் ஆகி விட்டது; அது ஒரு நில மோசடி என்றும், அதில் உள்ளூர் கயவாளிகளிலிருந்து, ப்ரசெல்ஸ் அமைப்பு மற்றும், முதலாளி- அதிகாரியின் கூட்டிணைப்பினர் வரை பங்கிருக்கிறதென்றும், அவர் தயக்கத்துடன் அறிய நேர்கிறது. தேசியம் என்ற கருத்து அவருக்கு  உகப்பானதாக இல்லை; தன்னை ஒரு அகில உலக மனிதராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவராக, இனக்குழுக்களை ஏற்க மறுப்பவராக தன் வாழ் நாள் முழுதும் கருதியவர் அவர். அரசுகளும், தேசங்களும் ஒன்றையொன்று கரைமீறி தேச-அரசுகள் என எழுகையில், அவைகள், ‘அனைத்து மனிதர்களின் வாழ்வுகளுக்கு’ உருவம் கொடுக்கும் பிரதான வாகனங்கள் ஆகின்றன. உடனடித் தன்னிச்சையுடன், அடிப்படையிலிருந்து தம்மை ஒழுங்குப்படுத்தி அமைத்துக் கொள்ளும் மனிதர்கள், (நிகழ் நிலை?) அரசை மீறுவார்கள் என்று ஒரு அராஜகவாதி கற்பனை செய்யலாம். தாராளக் கொள்கையாளரோ, மனிதக் கூட்டம் என்பதை விடுத்து, எல்லைகளைத் தாண்டிய இணைய வழித் தொடர்புகளின் மூலம் ஒரு தனிப்பட்ட மனிதன் செயல்படுவதில் திருப்தி அடையலாம்.. ஆனால், வில்லியம்ஸ் அனைத்து மனிதர்களின் வாழ்க்கை என்பதில் நம்பிக்கை கொண்டவர். உண்மை நிலை அறிந்த பொருள்வாதியான அவருக்கு, அத்தகைய வாழ்வானது, ஒருங்கிணைக்கப்பட்ட ஆற்றலின் துணை கொண்டு, விருப்புடன் அமைக்கப்படும் கட்டுமானங்களின் வழியே, புது வகையிலும், பன்மைத் தன்மை உடையதாகவும் அமைவது அவசியம் என்றும் தெரியும். அது எத்தகைய இருப்பிடமாக அமையும்? அகில உலகத் தன்மை, மற்றும், உள்ளூர்த் தன்மை இணைந்த கலவையை அவர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. ஆனால், எந்த வழியிலும், வலுவான நிலை இல்லாத இதை, பிரச்சனையைத் தவிர்ப்பதற்கானது என்றே எண்ண முடிகிறது. தங்களது தேச அரசுகளைத் தாண்டிய ஒன்றாக, தங்களின் வாழ்வு இருக்க வேண்டும் என்று விழையும் நவீன மனிதர்களை நாம் காணவுமில்லை, அதை நோக்கிய பாதையும் தெளிவாகத் தெரியவில்லை. (இதற்கு இணை சொல்லவேண்டுமெனில், ஒருங்கமைக்கப்பட்ட மதத்தைச் சொல்லலாம்; அவர் அதைப் பற்றி எதுவும் சொன்னவரில்லை.) 

அவரால் தனது குழப்பங்களை எதிர் கொள்ள முடியாமல் போனதற்கு, அவரை வடிவமைத்த கடப்பாடுகளும், விஸ்வாசமும் காரணமாக இருக்கலாம். காலம் கடந்தது, மற்ற அரசியல் நம்பிக்கைகள் புளித்துப் போயின, இடதின் எதிர் காலத்தின் பக்கம், ரேமண்ட் வில்லியம்ஸாக நிற்பது இச்சூழ்நிலையில் மிக முக்கியமானது. புரட்சிக் கலாசாரமே, நம்பிக்கைகளின் ஆதாரம் என்று எழுதிய அவர், அப்படித்தான் இருந்தார். சுயநலமும், ஆதிக்கப் போக்கும் சிதைத்த இந்த உலகில், வார்த்தைகளால் தன் முன் முயற்சிகளில் சித்திரம் எழுப்பிய அவர், ரேமண்ட் வில்லியம்ஸாகவே இருக்கத் தலைப்பட்டவராக அமைந்தது, சில நேரங்களில், அரசியல் மற்றும் கோட்பாடுகளைச் சொல்லும் அவரது எழுத்து, மெலிதான முரண்களையும், சோகங்களையும் வெளிப்படுத்தத் தவறியது. நம்பிக்கையை விட்டுவிடாமல் தெளிவாகக் கற்பதும், சிந்திப்பதும் தனது பணியெனக் கொண்ட  அவர், அதை வாழ்ந்தும் காட்டினார். 

உசாவி:

https://www.dissentmagazine.org/article/raymond-williamss-resources-for-hope/ Jedediah Britton- Winter 2024


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.