- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
தடைகள், சுமைகள், சவால்கள், சோதனைகள் – இவற்றை நாம் அன்றாடம் வாழ்வில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. காலையில் தூக்கம் விழித்தவுடன் இவை தொடங்கிவிடுகின்றன. இவற்றை நாம் பொறுமை, தாங்குதிறன், மனவுறுதி கொண்டு நேர்கொள்கிறோம். இவையும் நம்மைத் தொடர்ச்சியாகச் சோதித்துக்கொண்டே இருக்கின்றன. சபலங்களும் சஞ்சலங்களையும் கடத்தல் எளிதானதல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தினசரி இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டு இருந்தாலும், பல சமயங்களில் நாம் எரிச்சலடைகிறோம். செய்தாகவேண்டிய இலக்குகளில் நாம் கவனத்தைக் குவிக்க முயன்றாலும் சில சமயங்களில் தொடர்ச்சியான பல்முனைத் தாக்குதல்களால் நம் மனம் அடைசலாகி நாம் குழம்பிப்போகிறோம். அளவிற்கு அதிகமான சோதனைகள் ஒருசேர நேரும்பொழுது, நம் நம்பிக்கைகள் எளிதில் அற்றுப்போகின்றன. சராசரி வாழ்வின் சோதனைகளே இப்படி நெருக்குபவையாக இருக்குமென்றால், வாழ்வின் அதியுயர் நோக்கங்களை நாடிச்செல்லும் துறவிகளுக்கும் மேதைகளுக்குமான சவால்கள் எப்படிச் சிக்கலானவை என்று ஓரளவுக்கு ஊகிக்க முடியும். அவற்றின்று மீண்டு தங்கள் இலக்குகளை அடைய அவர்களுக்கு அசாத்திய மனவுறுதி தேவைப்படுகிறது.
புத்தராக உன்னதம் பெற்ற சித்தார்த்தருக்கு சபலங்களையும் சஞ்சலங்களையும் உண்டாக்க மாரா எனும் அரக்கன் தொடர்ச்சியாக முன்றான். போதி மரத்தடியில் தவத்திலிருந்த சித்தார்த்தரிடம், “உனக்குத் தீய சிந்தனைகள் தோன்றும்பொழுது நான் அதனை அறிவேன், அப்பொழுது உன்னை வெற்றிகொள்வேன்” என்று அறைகூவல் விடுத்தான். அவனுடைய நோக்கங்களையும் வழிகளையும் நன்றாகத் தெரிந்த சித்தார்த்தர் இவ்வாறு கூறுகிறார்:
உன் முதலாம் படை, உணர்ச்சிகள் எழுப்பும் ஆசைகள்
இரண்டாவதன் பெயர் சலிப்பு,
பசியும் தாகமும் மூன்றாமவை,
ஏக்கம் நாலாமிடத்தில் இருக்கிறது,
ஐந்தாவதாக சோம்பல்,
கோழைத்தனம் ஆறாவதாக அணிவகுக்கும்,
நிச்சயமின்மை எழாவது; எட்டாவதாக
தீயெண்ணம் பிடிவாதத்துடம் சேர்ந்துவரும்,
இலாபம், மரியாதை, தவறான புகழ்,
சுயபுகழ்ச்சி, பிறரைத் தாழ்த்திச் சொல்லல்,
இவ்வாறே, நமூச்சியே, உன்படைகள் போர்தொடுக்கின்றன.– குத்தக நிக்காயா நியமன சூத்திரம், தேரவாத பௌத்தத்தின் குறுந்தொகுப்பு.
நமூச்சி என்பது அரக்கன் மாராவின் மறுபெயர். சித்தார்த்தரை சலனப்படுத்தும் அவன் முயற்சிகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பழமையானவை அஜந்தா குகைகளில் இருக்கின்றன. புத்தரின் துறவறத்தின் இந்தக் கட்டத்தை மிக நேர்த்தியாக வடித்த சிற்பம் காந்தாரத்தில் (தற்பொழுதைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்) கண்டெடுக்கப்பட்டன. காந்தாரச் சிற்பங்களில் இந்து, பௌத்த மதங்களின் கதையாடல்கள் கிரேக்கத்து சிற்ப நுட்பங்களுடனும், உடற்கூறு துல்லியங்களுடன் செதுக்கப்பட்டன. அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப்பின் காந்தாரக் கலையும் கிரேக்கச் சிற்ப நுட்பங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தன. இன்றைக்கு நாம் புத்தரின் திருவுருவம் என்று அறிவது, பெரிதும் கிரேக்கத்து உடற்கூறுகளைக் கொண்ட வடிவமே. (கிரேக்க பாதிப்பிற்கு முன்னர் இங்கே புத்தருக்கு உருவம் கிடையாது. தாமரையும், தர்மச்சக்கரமும், பொற்பாதங்களுமே புத்தரின் வெளிப்பாடுகளாக வடிக்கப்பட்டன). இப்பொழுது ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் இனவியல் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த களிப்பாறை சிற்பத்தில், தவத்தில் இருக்கும் சித்தார்த்தரின் கவனத்தைச் சிதைக்க வரும் மாராவின் படைகள் அரக்கர்களாக உருவகம் பெற்றிருக்கிறார்கள். இவற்றினால் சற்றும் சலனமடையாத புத்தரின் அமைதித் திருவுரு அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிக்கிறது.

கிறிஸ்தவ மதவரலாறுபுனிதர்களால் நிறைந்தது. அவர்களில்ஒவ்வொருவரும் பல தடைகளையும், சலனங்களையும், சஞ்சலங்களையும் கடந்தே புனிதத்துவத்தை அடைந்திருக்கிறார்கள். புனித அந்தோனியாரின் கதை அவற்றுள்ளே மிகப் பிரபலமானது. அவருடைய கதையாக நமக்குத் தெரிய வருவது பொது யுகம் 360 வாக்கில் கிரேக்கத்தில்அலக்ஸான்ரியாவின் அத்தானாசியஸ் (Athanasius of Alexandria) என்பவர் எழுதிய புத்தகம் வழியாகத்தான். எகிப்து நாட்டில், பொ.யு251-ல் செல்வக் குடியில் பிறந்த அந்தோணி, தன் இளவயதில் பைபிளைக் கற்கத் தொடங்கினார்.
“அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உன் உடமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடு, அப்பொழுது உனக்குப்பரலோகத்தில்பொக்கிஷங்கள் கிடைக்கும்; பின்பு என்னைத் தொடர்ந்து வா என்றார்.” (மத்தேயு19:21)
என்ற வசனத்தால் விழிப்படைந்த அவர், தனது 21-வது வயதில் சொத்துக்களைத் தானம் செய்துவிட்டுப் புனித யாத்திரை மேற்கொண்டார். கிறிஸ்துவ புனிதர்கள் வரலாற்றில் இப்படி அனைத்தையும் துறந்து தனியாகத் துறவியான முதலாமவர் என்று அந்தோணியார் அறியப்படுகிறார். தேவனின் வழியைத் தேடிச் சென்ற அவரைப் பல சாத்தான்களால் சோதனைகள் நெருக்கின. அவர் முழுமையான சாந்தத்துடன் அவற்றின் சலனங்களைக் கடந்தார் என்று வரலாறு சொல்கிறது. அவருடைய மறைவுக்குப் பின் பலருக்குக் கனவில் தோன்றி அவர்களின் தீராத நோய்களைக் குணப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. பாலைவனத்தில் தேவனின் இராச்சியத்தைத் தேடியலைந்த அந்தோணியாரை இழிசெயல்களுக்குத் தூண்டிய பேய்களின் செய்கைகள் பல ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தோணியாரின் சித்திரவதை முதன்முதலாக பதினைந்தாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஷோன்காவர் (Martin Schongauer ) என்பவரால் செதுக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் ஹைரோனிமஸ்பாஷ் (Hieronymus Bosch,) , மத்தயாஸ் க்ரூண்வால்ட் (Matthias Grünewald) இருவரும் அதை ஓவியங்களாக வடித்தார்கள். இந்த நூற்றாண்டிலும் கூட முதன்மை கலைஞர்கள் இதை இன்னும் ஓவியங்களாக வரைந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றில் இரண்டு ஓவியங்கள் மிக முக்கியமானவையாகக்கருதப்ப்படுகின்றன.

மைக்கலாஞ்சலோ புவானரோட்டி Michelangelo di Lodovico Buonarroti Simoni, 1475-1564) ஒரு மிகச் சிறந்த ஓவியர், சிற்பி, மற்றும் கட்டிடக்கலை நிபுணர். இந்த மூன்று துறைகளிலுமே அவர் முதன்மைக் கலைஞராகப் பலராலும் போற்றப்படுகிறார். மறுமலர்ச்சி கலை இயக்கத்தில் மைக்கலாஞ்சலோவின் பங்கு மிக முக்கியமானது. நமக்குத் தெரிந்த வகையில் மைக்கலாஞ்சலோவின் முதல் ஓவியம் ‘அந்தோணியாரின் சித்திரவதை’. இந்த ஓவியம் இப்பொழுது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலித்திலிருக்கும் ஃபோர்ட் வொர்த் எனும் சிறிய நகரின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. 47 செ.மீ × 35 செ.மீ அளவே இருக்கும் இந்தச் சிறிய ஓவியம் இரண்டு மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அப்பொழுது இது அவருடைய ஓவியமா என்று தீர்மானமாகத் தெரியாது. பின்னர் பல விற்பன்னர்கள் நவீன அறிவியல் சோதனைகளுக்குப் பிறகு இது மைக்கலாஞ்சலோ வரைந்ததுதான் என்று தீர்மானித்தனர் (எனவே இப்பொழுது இதன் மதிப்பு பல மடங்குகளுக்குக் கூடியிருக்கும்). முட்டையின் மஞ்சள்கருவை நீரில் நன்றாகக் கலக்கி அதனுடன் நிறமிகளை (pigments) சேர்ப்பதால் உருவாகும் வண்ணக்கலவையால் வரையப்பட்டது. இந்த உத்திக்கு டெம்பெரா (Tempera) என்று பெயர். முட்டைக்கரு சேர்ப்பினால் ஓவியம் பளபளப்பாக இருக்கும். ஆனால் விரைவாகக் காய்ந்துவிடும். எனவே வேகமாக வரையவேண்டும். பிற்கால குப்தர்களின் காலத்தில் (4 முதல் 6-ஆம் நூற்றாண்டுவரை) ஒரிஸாவில் வரையப்பட்ட ராவணச்சாயா பாறை ஓவியங்கள் இந்த முறைகொண்டு வரையப்பட்டவை. பெங்காலி ஓவியப்பள்ளியைச் சேர்ந்த கங்கேந்த்ரநாத் தாகூர், நந்தலால் போஸ், யாமினி ராய், கணேஷ் பைன் போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டில் இந்த உத்தியைப் பிரபலமாக்கினார்கள்.

ஓவியத்தைப் பார்த்தவுடனேயே தூய அந்தோணியாரின் அவஸ்தைகள் நம்மைத் தாக்குகின்றன. கூரான பாறைகள், பெருங்கடல் இவற்றுக்கு இடையே அந்தரத்தில் ஒன்பது பேய்களின் தாக்குதலில் அவர் சிக்கித் தவிக்கிறார். அவை பாறைகளின் மீதிருந்த அவரை இழுத்துச் செல்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பேய்கள் ஒவ்வொன்றும் தனிவகையானதாக இருக்கின்றன. எல்லாவற்றுக்குமே பறக்க இறகுகள் இல்லை, ஆனாலும் அவை அந்தோணியாரைப் பிணைத்துத் தாக்குகின்றன, சில ஆயுதங்களைக் கொண்டு தாக்குகின்றன. ஒன்று அவருடைய ஆடையைப் பிடித்து இழுக்கிறது, இன்னொன்று, கிட்டத்தட்ட அவரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முனைவதைப் போல இருக்கிறது. எல்லா பேய்களுக்கும் கூரிய நகங்களும், கோரப் பற்களும், கூரிய கொம்புகளும், முள்ளைப் போன்ற இறகுகளும் முதுகெலும்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கிடையே அந்தோணியாரின் முகம் சாந்தமே உருவானதாக இருக்கிறது. அவர் இந்தச் சித்திரவதையினால் பெரிதும் பாதிக்கபட்டவரைப்போலத் தெரியவில்லை. அவர் முகத்தில் உறுதியும், கருணையும், நம்பிக்கையும் தெரிகின்றன. அந்தோணியாரின் உடல் கீழே விழுவதிலிருந்து தன்னைச் சமநிலைப் படுத்திக்கொள்ள முயல்வதைப் போல இருந்தாலும் அவருடைய முகத்தில் சலனஙகள் இல்லை, பயமும் இல்லை.
இந்த ஓவியத்தை மைக்கலாஞ்சலோ அவருடைய 12, 13 வயதுகளில் வரைந்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியம். தற்பொழுது இதுவே அவரால் வரையப்பட்ட முதல் ஓவியம் என்று மதிப்பிடப்படுகிறது. அந்த வயதுக்கு மீறிய கலை முதிர்ச்சி இந்த ஓவியத்தில் காணப்படுகிறது. இந்த ஓவியத்திற்கு மைக்கலாஞ்சலோ, ஜெர்மனியின் மார்ட்டின் ஷோன்காவர் (Martin Schongauer, c. 1470–75) என்பவர் வடித்த செதுக்குச் சிற்பத்தை முன்மாதிரியாகக் கொண்டார். ஓவிய அமைப்பின் அந்தரத்தில் மிதக்கும் அந்தோணியார், பேய்களின் உருவங்கள் போன்றவ ஷோன்காவரின் கற்பனையைப் பிரதியெடுத்தவை. ஆனால் அந்தோணியாரின் சாந்த முகம் மைக்கலாஞ்சலோவின் அற்புதமான கற்பனை. துல்லியமான வடிவ அமைப்புகள், இழைந்தோடும் வண்ணக்கலவைகள், என்று, மைக்கலாஞ்சலோவின் பிற்காலக் கலைச் சாதனைகளுக்கு முன்னோட்டம் கூறுவதுபோல இந்த ஓவியம் அமைந்திருக்கிறது.

இரண்டாவது முக்கிய ஓவியம், சால்வடார் டலியால் (Salvador Dalí) வரையப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவரான டலி, சர்ரியலிஸம் (Surrealism) என்று அழைக்கப்படும் ஆழ்மன வெளிப்பாட்டியல் முறை ஓவியர். இயல்பு கடந்த பிரக்ஞையற்ற நிலையின் (unconscious) சக்தியை ஒருமுகப் படுத்தும்பொழுது தோன்றும் கற்பனை ஆகக்கூடி மிக உன்னதமானதாக இருக்கும் என்று சர்ரியலிஸ்ட்கள் நம்பினார்கள். டலி ஸ்பெயின் நாட்டின் பார்ஸலோனா நகருக்கருகில் இருக்கும் ஃபிக்வாரஸ் எனும் சிறு ஊரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய அண்ணன் மிகச் சிறுவனாகவே இறந்துவிட சால்வடோரின் பெற்றோர்கள் அவரிடம் “நீ செத்துப்போன உன் அண்ணனின் மறுஅவதாரம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இது அவருடைய ஆழ்மனத்தில் பலவிதமான கற்பனைகளை விதைத்தது. தன்னுடைய பத்தாவது வயதிலேயே டலி வரையத் தொடங்கினார். பிக்காஸோ (Picasso ), யோவான் மிரோ (Joan Miró), ஈவ் டாங்கீ (Yves Tanguy) போன்ற மாபெரும் க்யூபிஸ, சர்ரியலிஸ ஓவியர்களால் கவரப்பட்ட டலி, விரைவிலேயே முதன்மைக் கலைஞரானார். பின் கவிஞர் ஃபெரெட்றீக்கோ கார்ஷியா லோர்க்கா (Federico García Lorca), திரைப்படக்கலைஞர்கள் லூயி பனுவல் (Luis Buñuel), ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஓவியம், சிற்பம், திரைப்படம் என்ற பலதுறைகளில் மிக முக்கியமான ஆளுமையாக உருவானார்.
1946-ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஓவியம் இப்பொழுது பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸல்ஸின் ராயல் நுண்கலை அருங்காட்சியகத்தில் காட்சியில் இருக்கிறது. எகிப்தின் பாலைவனத்தில் தேவகுமாரனுக்காக யாத்திரை மேற்கொண்ட புனித அந்தோணியாரின் கஷ்டங்களைத் தன்னுடைய தனித்துவமான பானியால் டலி வடித்திருக்கிறார். டலியின் கற்பனை பைபிளை ஒட்டிய அந்தோணியாரின் நேரடியான கதையைத் தாண்டியது. இது நம்மனதில் தோன்றும் வார்ப்புகளையும் கற்பனைகளையும் தாண்டி காலத்துக்கும் மாறாத பல வடிவங்களை முன்வைக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால் அந்தோணியாரின் கதையாகத் தோன்றும் இந்த ஓவியம், அதைக் கடந்து காண்பவர் மனதில் அவர்களுடைய தனிப்பட்ட அனுபங்களுக்கும் கற்பனைக்கும் ஏற்றாவறு விரிவடைகிறது. அந்த வகையில் இது வெறும் கதை என்பதைத் தாண்டி நம் ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாக உருவெடுக்கிறது. அன்றாட வாழ்வில் நாம் காணும் விலங்குகள், கட்டடங்கள், நமக்குத் தெரிந்த கதைகள், போன்றவற்றை விரித்தெடுக்கும் பெரும்கலைஞர் சால்வடார் டலி, சர்ரியலிஸத்தின் கூறுகளை அற்புதமாகக் கையாண்டு நம் மனதின் ஆழத்தில் பொதிந்துகிடக்கும் உள்ளுணர்வுகளை அறியச் செய்து நம் ஆன்மாவைத் தட்டியெழுப்புகிறார்.

ஓவியத்தில் அந்தோணியாரை சோதனைகள் பலவழிகளில் தாக்குகின்றன. முதலாவதாகச் சீறிப்பாயும் குதிரை அதிகார வெறியை உருவப்படுத்துகிறது. துறவறம் நாடுபவர்கள் முதலில் துறக்க வேண்டியது அதிகார வேட்கை எனும் சாத்தானைத்தான். தொடர்ந்து வரும் யானைகளின் அணிவகுப்பு பலவிதமான பாவங்களுக்கு அவரைத் தூண்ட முயல்கின்றன. முதல் யானையின் மீது ஒரு கோப்பையில் அரைநிர்வாண மங்கை அவரைக் காம இச்சையில் ஆட்கொள்ள விழைகிறாள். இரண்டாவது யானையின் மீதிருக்கும் நெடிதுயர்ந்து நிற்கும் கற்கோபுரம் அதிகாரத்தினால் வரும் பலத்தையும் ஆணவத்தையும் சுட்டகின்றன. தொடர்ந்துவரும் இரட்டை யானைகள் ஒரு மாபெரும் மாளிகையைத் தாங்கி இருக்கின்றன. இது மனிதனின் படைப்பு, அதன் உச்சத்தில் எழும் அகங்காரம் இவற்றின் குறீயீடுகளாக இருக்கின்றன. தொலைவில் இன்னொரு யானையின் மீது மேகங்களால் மறைக்கட்ட உயர கோபுரம் ஆண்குறியின் வடிவை ஒத்திருக்கிறது. இது மீறி எழுந்துவரும் காம இச்சையை உருவகப்படுத்துகிறது. இவற்றின் முன்னே மண்டியிட்டு சிலுவையை உயர்த்தித் தடுக்கிறார் புனித அந்தோணியார். எல்லாவிதமான தாக்குதல்களையும், இச்சைகள் எழுப்பும் சபலங்களையும் தன்னுடைய இறைநம்பிக்கை கொண்டு அவர் எதிர்கொள்கிறார். படத்தின் பெரும்பகுதியை மிருகங்களும் அவற்றிமீதிருக்கும் பாவச் சின்னங்களும் நிறைத்திருக்கின்றன. இவை காண்பவர்கள் பார்வையை முற்றாக நிரப்பி, ஓவியத்தின் மைக்கருவின்பால் அவர்களின் கவனத்தைக் குவிக்கின்றன. அந்தோணியாரின் நிர்வாணம் அவருடைய எழ்மை, எளிமை, மற்றும் சக்தியின்மைகளுக்குக் குறியீடாக அமைகின்றது, அவரிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவர் தாங்கி நிற்கும் சிலுவைதான்.
சால்வடர் டலி இந்த ஓவியத்தை ஒரு போட்டிக்காக வரைந்தார். 1946-ஆம் ஆண்டு புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் கீ தெ மாப்பசான் (Guy de Maupassant)-இன் பெல் அமி என்ற நாவல் ஹாலிவுட்டில் The Private Affairs of Bel Ami என்ற திரைப்படமாக உருவாக்கம் பெற்றுவந்தது. அதில் இடம்பெற அந்தோணியாரின் சோதனைகளை ஓவியமாக வரைய ஒரு போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டிக்காக 90 செ.மி × 119.5 செ.மி அளவில் தைலவண்ணம் கொண்டு திரைச்சீலையில் வரைந்த இந்த ஓவியத்தை டலி சமர்ப்பித்தார். ஆனால் அதில் அவருக்குப் பரிசு கிடைக்கவில்லை. திரைப்படம் எதிர்பார்த்தபடி பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான போட்டியில் வென்ற மாக்ஸ் எர்ன்ஸ்ட் என்ற ஜெர்மானிய சர்ரியலிச ஓவியமும் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் டலியின் இந்த ஓவியம் காலத்திற்கும் நிலைத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கதையைக் கடந்து வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அதிகாரம், ஆணவம், காம இச்சை, போன்றவற்றை நம் மனதின் ஆழத்திலிருந்து அடையாளப்படுத்தும் அவருடைய கலை மேதைமைதான். அதற்கு சால்வடார் டலிக்கு சர்ரியலிச உத்திகள் அற்புதமாக உதவுகின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
