பர்வீன் ஷாகிர் கவிதைகள்

“பர்வீன் ஷாகிரின் முத்திரையின்றிப் புதிய கவிதை உலகம் முழுமையாடையாது” – கோபி சந்த் நாரங் (1931-2022), ஆய்வாளர், விமர்சகர், பத்மபூஷன் (2004), சாகித்திய அகாடமி (1995) விருது பெற்றவர்.

நறுமணத்துக்கென்ன காற்றுடன் கலந்துவிடும்
கேள்வி மலருக்கல்லவா
மலர் எங்கு போகும் (1)

= பர்வீன் ஷாகிர்

பர்வீன் ஷாகிரின் கவிதைகள் பெண்ணியம் பேசும். குறிப்பாக, ஆணால் பெண்ணுக்கு உண்டாகும் மனவலிகளைப் பேசும். காதல் தோல்வி, பிரிவு, மனங்கள் இணைதல் இவற்றைப் பெண்ணின் பார்வையில் கவித்துவமாகத் துயரத்தையும் தொட்டு எழுதப்பட்டவை அவை. சொல்லாமல் சொல்லிய வார்த்தைகள் கவிதையில் உரக்க ஒலிப்பது இவருடைய கவிதைகளிலும் நிகழும்.

பர்வீன் ஷாகிர், 1952ஆம் ஆண்டு கராச்சியில் பிறந்தவர். அவருடைய தந்தை ஷாகிர் உசைன் பீகாரைச் சேர்ந்தவர். இந்தியப் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தவர். பர்வீன் ஷாகிர் கராச்சியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அங்கு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அரசுப் பணித் தேர்வெழுதி வெற்றி பெற்று, இஸ்லாமாபாத் நகரின் இணை ஆணையர் பதவி வரையில் உயர்ந்தவர். தன்னுடைய 25ம் வயதில் முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர்.

நான் நறுமணத்தின் பிம்பம்
பரவுவதை யாரும் தடுக்காதீர்
பரவிவிட்டால்
மீண்டும் என்னை ஒன்று சேர்க்க முயலாதீர் (2)

பிம்பம், ‘அக்ஸ்’ என்னு உருது வார்த்தையின் பொருள் பிம்பம். இந்தப் பெயரில் அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய் நடித்த திரைப்படம் ஒன்றும் உள்ளது. இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக ஒருவரின் ஆவி இன்னொருவரின் உடலில் புகுந்து தன்னைப் போலவே அவரையும் மாற்றும் கதை. கொலையாளியின் ஆவி காவலரின் உடலுள் நுழைந்து காவலரையும் கொலையாளியாக்குவது போன்ற கதையமைப்பு. கொலையாளியின் பிம்பமாகக் காவலர் செயல்பட்டதால் திரைப்படத்தின் பெயர் ‘அக்ஸ்’ என்னும் பிம்பம்.

அக்ஸின் பொருள் புகைப்படம், நிழல், கண்ணாடியில் தோன்றும் இடவலமாற்றம் எனவும் விரியும்.

கண்களுக்குப் புலப்படும் பொருளைக் குறிப்பிடும் வார்த்தையான பிம்பத்தைக் (அக்ஸ்) கண்களுக்குப் புலப்படாத நறுமணத்துக்குச் சொல்லி, நறுமணம் ஓரிடத்தில் நின்றுவிடாமல் காற்றுடன் கலந்து பரவுவதையும் வாசகனைக் காணச் செய்தவர். அவருடைய கவிதைகளைக் குறிப்பிடும் பலரும் தவறாமல் சொல்லும் ‘ நறுமணத்துக்கென்ன காற்றுடன் கலந்துவிடும்’ கவிதையில் இருக்கும் அந்த இன்னொரு நறுமணத்துக்கு இந்தக் கவிதை உருவத்தைக் கொடுக்கிறது.

மலரைப் புத்தகத்துக்கு இடையில் வைத்து நினைவுகளைச் சிலர் சிறைப்பிடிப்பதுண்டு. நினைவுகளைச் சிறைப்பிடிப்பது தடைசெய்யப்பட்ட போது ஏற்பட்ட நடுக்கத்தைக் குறிப்பிடும் அடிகள் ‘ நறுமணத்தின் பிம்பம்’ என்னும் கஜலில் உள்ளன.

உலர்ந்த மலர்களைப் புத்தகத்தின் இடையில் வைப்பது

தடைசெய்யப்பட்ட நாளிலிருந்து நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் (3)

நறுமணத்துக்குக் கவிதையில் மட்டும் உருவம் கொடுக்காமல், தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கும் நறுமணம் (குஷ்பூ) என்றே பெயரிட்டார். 1976ஆம் ஆண்டு வெளியான இத்தொகுப்பில் அவருடைய நூற்றுப்பதினாறு கவிதைகள் இடம்பெற்றன. 177 பக்கங்கள் கொண்ட அதில் உள்ளவை அனைத்தும் மரபுக் கவிதைகள்.

மரபுப்பா தொடர்பான அணுகுமுறையில் தன்னுடைய சமகாலக் கவிஞர்களைப் போல பர்வீன் ஷாகிரும் உருது யாப்புக்குட்பட்ட கஜல்களும், விருத்தங்களும், யாப்புக்கு உட்படாமல் ‘ஆசாதி ஷாய்ரி’ என உருதுவில் அழைக்கப்படும் புதுக்கவிதைகளும் எழுதினார்.

ஆயினும் அவனுக்குத் தெரியாது
தன்னுடைய தற்கொலை ஒப்பந்தத்தில்
தானே சுயநினைவுடன் கையொப்பம் இட்டிருக்கிறான்
தனக்கு எரியூட்டத் தானே விறகானான் (4)

காதலர்களின் பிரிவும் சேர்தலும் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டிருப்பதைப் போல உருதுக் கவிதைகளிலும் பாடப்பட்டிருக்கின்றன. வஸ்ல் (wasl) என்னும் உருது வார்த்தை இணைவதையும், ஹிஜ்ர் (hijr) என்னும் உருது வார்த்தை பிரிவையும் குறிக்கின்றன. ஹஸ்ரத் மோகானி எழுதி, குலாம் அலியால் பாடப்பட்டு கஜல் ரசிகர்களை இன்றும் ஈர்க்கும் ‘சுப்கே சுப்கே ராத் தின்’ என்னும் கஜலிலும் ஒரு கண்ணி காதலர்கள் இணைவதையும் பிரிவதையும் பாடும். இணையும் இரவு ‘வஸ்ல் கி ஷப்’ என அந்த வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். வஸ்ல் – இணைதல், ஷப் (shab) – இரவு.

‘முழுத்துயரம் அரை நிலவு’ எனத் தொடங்கும் கஜலிலும் பர்வீன் ஷாகிர் பிரிவைச் சொல்கிறார்.

முழுதும் துயரம் பாதி நிலவு
பிரிவின் இரவில் இப்படி நிலவு (5)

எந்தப் பலிபீடத்தைக் கடந்திருக்கும்
இப்படி நடுங்குகிறது நிலவு

இத்தனை அடர்த்தியான மேகங்களுக்குப் பின்னால்
எத்தனைத் தனிமையாக இருக்கும் நிலவு

இப்படியாக அனைத்துக் கண்ணிகளிலும் நிலவைப் பாடிவிட்டு முத்தாய்ப்பாக,

‘இரவு மணி ஒன்றாகியிருக்கும்

என் நிலவு உறங்கியிருக்கும்’ – என முடிக்கையில், கஜலின் தொடக்கக் கண்ணியில் சொன்ன பிரிவின் துயரம் தனக்கும், தன் முன்னே இருக்கும் இந்தப் பாதி நிலவுக்கும் மட்டும்தான் என்பதும், தான் நிலவாக நினைத்துக் கொண்டாடியவன் இந்நேரம் பிரிவின் துயரம் எதுவும் இன்றி உறங்கச் சென்றிருப்பான் என எள்ளலாகக் கூறுவதும் பர்வீன் ஷாகிரின் முத்திரை.

நான் பூக்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன்
எனக்குச் செய்தி தெரியாது
அவன் என் நகரத்துள் வந்து வெளியேறிச் சென்றுவிட்டான் (6)

யாருக்காக மாலை தொடுக்கப் பூக்களை அவள் தேர்ந்தெடுத்தாரோ, அவன் வந்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை, அவன் அவளுடைய நகரத்தை நீங்கிய செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.

சில நேரங்களில் சில காதல்கள் சொல்லப்படுவதில்லை, சொல்லப்படாததால் அவை தோன்றிய தடயமும் இன்றி வாழ்க்கையின் ஓட்டத்தில் மறைந்துவிடும். ஆனால், சொல்லப்படாத காதல் கவிதையாக வடிக்கப்படும்போது நிரந்தரமாகிவிடுகிறது. வாசிக்கும் உள்ளத்தின் கற்பனைக்கும் அனுபவத்துக்கும் ரசனைக்கும் ஏற்ப கவிதையில் கலந்திருக்கும் காதல் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டிக் கவிஞரின் மனதைத் திறப்பதான போக்கில் வாசிப்பவரின் மனதைத்  திறக்கும் திறன் உள்ளது. பர்வீன் ஷாகிரின் மேற்சொன்ன கவிதைக்கும் அப்படி மனதைத் திறக்கும் திறன் உள்ளது.

பெண்ணியக் கவிதைகளில் காதல் தோல்வியின் வலிகளை எழுதியிருப்பினும் சில கவிதைகளில் காதல் தோல்வியை எதிர்கொள்ளும் மனநிலையையும் எழுதியிருக்கிறார்.   

நானும் பொறுமையின் எல்லைக்குச் செல்வேன்
என் கைகளால் அவனுடைய மணப்பெண்ணை அலங்கரிப்பேன் (7)

கண்ணீராலும் கேள்விகளாலும் நிறையும் காதல் தோல்வி வழக்கத்துக்கு மாறாக, எதையும் மறக்காவிட்டாலும் தோல்வியை வெளிக்காட்டாமல் தானே முன் நின்று மணப்பெண்ணை அலங்கரிக்கப் போவதாகக்கூறும் திடமான முடிவு அவருடைய கவிதைகளைத் தனியாகக் காட்டுகிறது. மேலும் இந்த கஜலின் மற்ற கண்ணிகளில் இந்தத் தோல்வியால் தனக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை, இடையில் கிடைத்த இந்தக் கணங்களின் மகிழ்ச்சி விலகிய பின்னர் தன்னுடைய வழமையான உலகுக்குச் செல்லப்போகிறேன் என்னும் கருத்து வெளிப்படும். கஜலின் கடைசிக் கண்ணியும் அவர் இன்னொரு காதலைத் தேடும் முடிவில் இருப்பதாக அமைந்து வழமையான காதல் தோல்விக் கவிதைகளிலிருந்து மாறுபட்டு ஒலிக்கும்.

கடைசிக் கண்ணி:
புதிய காதலை நியாயப்படுத்த
காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவனை மறந்துவிடுவேன் எனப் பழைய காதலன் சொல்கிறான் (8)

இன்னொரு நீண்ட காதல் கவிதையிலும் கவிதையின் கடைசியில் காற்றிடம் தன் பழைய காதலன் எப்படி இருக்கிறான் என வினவுவதாக முடியும்.

கவிதை:
கடந்த ஆண்டு பெருநாள் இரவு எத்தனை அழகாக இருந்தது
பிறையைப் பார்த்தவன் திரும்பி என் முகத்தைப் பார்த்தான்
அந்தப் பொழுதில் கீட்ஸின் மொழியின் மென்மை இருந்தது
நிர்மலமான இதயம் ஃபாயிஸின் கவிதையாக இருந்தது
ஒலியில்லாத வேண்டுதல்களால் அந்தக் கணம் நிறைந்திருந்தது
அவன் இறைவனிடம் கையேந்தி
என்னை அவனுக்காய்க் கேட்டதை உணர்ந்தேன்
பிறகு அவன் என் முகத்தைத் தன் கைகளால் உயர்த்தி
நெற்றியில் முத்தமிட்டான்.

காற்றே!
இன்றைய இரவின் செய்தியையும் நான் அறியத் தா
அவன் தன் மாடத்தில் தனித்திருந்தானா?
என்னைப் போல் யாரும் அருகில் இருந்தார்களா?
அவன் பிறையைப் பார்த்த பின் அவள் முகத்தைப் பார்த்தானா? (9)

1975இல் தனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டு உருதுக் கவிதை உலகில் தடம் பதித்த பர்வீன் ஷாகிர் மிகக் குறுகிய காலமாகப் பதினெட்டு ஆண்டுகளில் தன்னுடைய ஆழமான பெண்ணியப் பார்வையாலும், சமகாலப் பெண் கவிஞர்கள் தொடத் தயங்கிய தலைப்புகளிலும் துணிச்சலாகக் கவிதைகள் எழுதியதால் பலராலும் பாராட்டப்பட்டவர்.

அவருடைய ‘காலம் கடந்துவிட்டது’ என்னும் கவிதையில் பழைய காதலனைச் சந்தித்தது குறித்துப் பேசுகிறது.

காலம் கடந்துவிட்டது

இத்தனை வயதுக்குப் பின் அவனைச் சந்தித்தேன்
கண்களில் ஆயிரம் கேள்விகள்
இதழ்களில் அதே புன்னகை
முகத்தில் எழுதப்பட்ட கவலை
குரலில் பிரிவின் எதிரொலி
ஒலிப்பில் கொஞ்சம் விதியின் குடியிருப்பு
அவனருகில் நின்று
நீண்ட நேரம் யோசித்தேன்
எந்த நடுக்கத்தால் நான் முறிந்த கிளையானேன்
என்னால் எந்த நிழல் நிறைவுறவில்லை
நான் அவனுடைய அணைப்பில் இருந்தேன்
அவன் என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்
ஆனால்
காலம் கடந்துவிட்டது (10)

மிகக் குறுகிய காலமே உருது இலக்கியத்தில் தன் பங்களிப்பைச் செய்திருப்பினும், அழகியல் சார்ந்த கவிதைகளைக் கடந்து பெண்ணின் நினைப்பை சுதந்திரமாக எழுதியவர். ‘நறுமணம்’ (குஷ்பூ) முதல் கவிதையில் தொடங்கி ‘மறுப்பு’ (இங்க்கார்) வரையில் நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்துத் தொகுப்புகளையும் ஒன்றாக்கி முழுநிலவு (மாஹ்-ஏ-தமாம்) என்னும் நூல் வெளியானது.

பர்வீன் ஷாகிர் 1994ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவருடைய இறப்புக்குப் பின், நோட்டுப்புத்தகத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்த கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘கண்ணாடி முனை’ (காஃப்-ஏ-ஆயினா) என்னும் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.

நான் இறந்தாலும் எப்படி இவர்கள் என்னை மறப்பர்?
என் சொற்கள் நான் நானாக இருந்ததற்கு சாட்சி சொல்லும்

= பர்வீன் ஷாகிர்

இளம் வயதில் மணவிலக்கு பெற்று, வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு, அரசுப் பணியில் உயர்ந்து, மரபை உடைத்துப் பெண்ணியப் பார்வையில் கவிதைகள் எழுதியதற்காக உருதுக் கவிதை உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்ற பர்வீன் ஷாகிரின் வாழ்க்கையை அவருடைய நாற்பத்திரண்டாவது வயதில் ஒரு சாலை விபத்தில் விதி எழுதி முடித்தது. அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம், விதி இத்தனை அவசரப்பட்டிருக்க அவசியமில்லை.

*
குறிப்புகள்:

  1. கவிதை: வோ தோ குஷ்பூ ஹை
  2. கவிதை: அக்ஸ்-ஏ-குஷ்பூஹூன்
  3. கவிதை: மைன் உஸ் தின்சே ஹிராசான் ஹூன்
  4. கவிதை: வோ ஜான்தா நஹீன்
  5. கவிதை: பூரா துக் அவுர் ஆதா சாந்த்
  6. கவிதை: மைன் ஃப்ஹூல் சுன்திரஹி
  7. கவிதை: கமால்-ஏ-ஸப்த் கோ
  8. கவிதை: ஜவாஸ் டூண்ட் ரஹாதா
  9. கவிதை: சாந்த் ராத்
  10. கவிதை: லேக்கின் படிதேர் ஹோச்சுக்கி

One Reply to “பர்வீன் ஷாகிர் கவிதைகள்”

  1. குலாம் அலி பாடிய கஜல் போல் எத்தனை அருமையான கவிதைகள், பர்வீன் ஷாகிர் எழுதியவை. கட்டுரை ஆசிரியர் அபுல் கலாம் ஆசாதின் எழுத்து ஒற்றை இருப்பில் வாசித்து அனுபவிக்க வைப்பது. வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.