- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
- தெலுங்கில் – ராமா சந்திரமௌளி
- தமிழில் – ராஜி ரகுநாதன்

2016 ஏப்ரல் 17, புதன் கிழமை. காலை நான்கு மணி ஐம்பது நிமிடங்கள். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு பொருள் ஒரு மனிதன், தன்னுடைய பின்னணியில், தன் கண்ணோட்டத்தில், தனக்கிருக்கும் அறிவைப் பயன்படுத்திப் பார்க்கும்போது அந்தப் பொருள் அவனுக்குத் தோற்றமளிப்பது போலவே இன்னொருவருக்கும் தோற்றமளிக்காது அல்லவா?
பார்வையும் கண்ணோட்டமும் ஒன்றா? பார்ப்பது, காட்சி இரண்டும் ஒன்றா? ஒரு பொருள் நமக்கு எப்படித் தென்படுகிறதோ அவ்வாறு அதனை உள்ளது உள்ளபடி பார்ப்பதுதான் பார்வை என்றால் ஒரு பொருளையோ சந்தர்ப்பத்தையோ நமக்குத் தேவையான குறிப்பிட்ட கோணத்தில் பார்ப்பது காட்சி என்று கூறலாமா?
கண்களை மூடி யோசித்தான் நாற்பத்திரண்டு வயதான யோகி. இன்னோவா வேன் ‘தாட்வாயி’ காடுகளின் இடையே சர்ரென்று சென்றது. தாட்வாயி காடுகளைத் தாண்டினால் ‘பஸ்ரா;. அதன் பிறகு ‘மேடாரம்’.
அவன் கையில் ஒரு புத்தகமிருந்தது. அதன் பெயர் ஞான சித்தாந்தம். ஆங்கிலத்தில் எழுதியவர் மாரிஸ் கார்ன்போர்த். தெலுங்கில் மொழிபெயர்த்தவர் பாமுலபர்த்தி சதாசிவராவு. ஆழமான தத்துவம் மற்றும் ஆன்மீகத்தை ஆர்வத்தோடு விளக்கும் ஞான சித்தாந்தம் ஒரு பரிபூரணமான நூல்.
உண்மையில் ஞானம் என்றால் என்ன? ஆராய்ச்சி, தத்துவம், தெளிவு என்றால் என்ன? உடல் மற்றும் ஆத்மா என்றால் என்ன? ஆத்மா வாயு பதார்த்தமா? அல்லது ஒளியால் உருவானதா? சக்தியால் செய்யப்பட்டதா? தேகம் ஜடம் என்றால் தேகத்தின் உள்ளே இருக்கும் ஆத்மா சைதன்யத்தால் ஆனதா? எல்லாம் உயர் கணிதம் போல மிக ஆழமான சர்ச்சை. உண்மையில் தத்துவ சாஸ்திரமே சிக்கலானது. அதிலும் ஞான சித்தாந்தம் மேலும் சிக்கலானது.
சாதாரணமாக அதிக மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடு அது. ஆனால் இப்போது காட்டில் மனிதர்கள் நுழைந்து விட்டார்கள். எங்கு பார்த்தாலும் மனிதர்கள். தேசத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் மனித நீரோட்டம் போல சாலைகளை மூழ்கடிக்கும் மனித அலைகள். கார்கள் பஸ்கள் வேன்கள் மோட்டார் சைக்கிள் ஆட்டோ எந்த வாகனம் கிடைத்தாலும் அதில் ஏறி மனிதர்கள் வந்தார்கள், எல்லா சாலைகளும் மேடாரத்தை நோக்கியே சென்றன. இந்த முறை ஒரு கோடி பேர் வருவார்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. ஆனால் நேராகப் பார்த்து பரிசீலனை செய்தவர்களின் கூற்றுப்படி விழா தொடங்குவதற்குள்ளாகவே ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வனப் பிரவேசம் செய்துள்ளார்கள். மக்கள் கூட்டத்தால் சுற்றிலும் இருபது கி.மீ. பரப்பளவு வரை காடு கிடுகிடுத்து.
கிழக்கில் சூரியன் நெருப்பு அரும்பு போல உதித்தான். இளம் ஒளிக்கதிர்கள் தங்க நூலால் செய்த வெள்ளம் போலக் காட்டை மூழ்கடித்தன.
யோகி தன் கையிலிருந்த ஞான சித்தாந்தம் நூலை மூடி, அருகிலிருந்த தோள் பையில் வைத்துவிட்டு, இந்த பௌதிக உலகிற்கு வந்து சுற்றிலும் பார்த்தான். டிரைவர் பாலு கூர்மையான ஒருமித்த பார்வையோடு வண்டியை நடத்தினான். பின் சீட்டில் சாலினி அமைதியாக அமர்ந்து ப்ளூ டூத் ஹெல் செட் கையில் பிடித்து ஏதோ மியூசிக் கேட்டபடி காட்டை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவள் ஹரிப்ராசத் சௌராசியாவின் புல்லாங்குழலோ, ஈமனி சங்கர சாஸ்திரியின் புல்லாங்குழலோ, எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் கீர்த்தனையோ கேட்டுக் கொண்டிருப்பாள். இன்னோவாவின் பின் சீட்டில் சகல சௌகர்யங்களோடும் நூற்றி இருபது சதுர அடியில் மிக நவீனமான ஒரு கூடாரத்தை பத்தே நிமிடங்களில் அமைத்துக் கொடுக்கக் கூடிய சாமான்களை எல்லாம் பாலு கட்டி வைத்திருந்தான்.
ஒரு தொல்பொருள் ஆய்வாளராக யோகி பயணம் செய்த தேசங்கள் முப்பதாவது இருக்கும். எகிப்து, ரோம், இந்தோனேசியா, வியட்நாம், ஹரப்பா, சில்க் ரூட், சைனா, மானச சரோவரம், நேபாள், அன்கோர்வாட் அவற்றுள் சில.
எத்தனை நாகரிகங்கள், கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள், சம்பிரதாயங்களின் பாதுகாப்புகள், இருப்பிற்கான போராட்டங்கள் என்று எண்ணி வியந்து போனான் யோகி. பலவித மனிதர்களைச் சந்தித்தான். பலரின் அந்தரங்க ஆழங்களைத் தொட்டு சோதனை செய்தான். பல நூல்களை எழுதினான். உலக நாகரிகங்களின் புராதன ரகசியங்களைத் திறந்து பார்த்து ஆராய்ந்தான். ஒரு தொல்லியல் நிபுணராக வெறும் சிதிலமான கட்டிடங்களையும் பொருட்களையும் இடங்களையும் மனிதர்களையும் மட்டுமே அன்றி குறிப்பிட்ட பொருட்களின் ஞாபகங்களிலும் சிலைகளிலும் சிற்பங்களிலும் மனிதர்களிலும் அடையாளமாக எஞ்சியிருக்கும் இதயங்களைத் தொட்டு அந்த ஈரமான ஸ்பரிசத்தை அனுபவித்து ஆனந்தமடைந்து, அந்த மகத்தான அனுபூதிகளை எழுத்தில் வடித்து உலகனைத்திற்கும் பண்டைய மானுட வைபவங்களின் நினைவுகளை கொடையாக அளித்து மிகப்பெரும் புகழைப் பெற்றான் யோகி.
அது ஒரு நிரந்தரமான எல்லையற்ற பரிசோதனை. தொல்லியல் ஆய்வு என்பது மனிதனுடைய உயர்வையும் உன்னதத்தையும் தனிமனித வைபவத்தையும் பரிசோதனையும் பரிசீலனையும் செய்தபடி தீராத தாகத்தோடு செய்யும் பிரயாணம். அதில் எதிர்ப்பட்ட சக பரிசோதனையாளர் சாலினி. வாரணாசியைச் சேர்ந்தவள். 1916 ம் ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திலிருந்து தொல்லியல் விஞ்ஞானத்தில் ‘சிதைந்த அடையாளங்கள்’ என்ற துறையில் ஆய்வு செய்து தங்கப் பதக்கம் பெற்றவள். அவளும் அவனும் இணைந்து எழுதிய தொல்லியல் பரிசோதனைகள் பற்றிய பல நூல்களை உலகப் புகழ்பெற்ற பதிப்பகங்கள் பெருமையோடு வெளியிட்டன. அவற்றிலிருந்து அவர்கள் பெறும் ராயல்டி பல லக்ஷங்களைத் தாண்டும்.
சாலினி கூறுவாள், “தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்”.. சாலினி கடந்த எட்டு வருடங்களாக அவனோடு இணைந்து தொல்லியல் ஆராய்ச்சியில் பணிபுரிந்து வருகிறாள். உடனிருப்பவள். மனைவியல்ல.
பன்முகத்தன்மையான அடையாளம் கொண்ட அவர்கள் இருவரும் இத்தனை விரிவாக உலகைச் சுற்றிவந்த பின் பல முறை நிகழ்த்தும் சுய பரிசோதனைகளில் தீர்மானித்தது என்னவென்றால், பாரத தேசத்தைப் போன்ற விரிவான, சிறப்பான, ஆழ்ந்த தத்துவ, ஆன்மீக, கலாச்சார, ஞானத்தோடு கூடிய அஸ்திவாரம் கொண்ட மிகப் புராதனமான பாரம்பரியம் வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. அந்தக் கணத்தில் அவர்கள் வந்திருக்கும் இந்த ‘சம்மக்கா திருவிழா’ தத்துவ சோதனைக்கோ புரிதலுக்கோ எட்டாத விசித்திரமான சிறப்பான வரலாறு கொண்டது. அதனால்தான் அவர்கள் இருவரும் மீண்டும் மீண்டும் இந்த இடத்திற்கு ‘மேடாரம் ஜாத்திரை’ நடக்கும் சமயத்தில் எட்டாவது முறையாக வந்திருக்கிறார்கள். திருவிழா இல்லாத சாதாரண நாட்களில் மேடாரம் மிகச் சாதாரணமான குக்கிராமமாக மலைகளின் நடுவில் மறைந்து ‘கூடையில் மூடப்பட்ட கோழிக் குஞ்சுபோல’ அடங்கி இருக்கும். அப்போது வந்து இங்கிருக்கும் ஆதிவாசிகளோடு அவர்களில் ஒருவராகக் கலந்து நீரோடு நீராக, நீரோட்டமாக ஆடிப் பாடிய அந்த அனுபவம் வேறு. அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் மேடாரத்திற்கு வரும் அனுபவமும் புதிதாகவே இருக்கும். மொழிக்கு எட்டாத புல்லரிக்கும் அனுபவம் அது. காரணம் புரியாத புதிர் அது. அப்படி என்னதான் உள்ளது இங்கே என்று கேட்டால் ஒன்றுமில்லை என்பது பதிலாக இருக்கும். ஒன்றுமில்லாதது தான் இதன் மகத்துவமா?
ஆதிவாசிகள் நடத்தும் இந்தப் பண்டிகை இன்றும் முழுக்க முழுக்க குறியீட்டு அடையாளமாக நடக்கிறது. சாஸ்திர மொழியில் கூறவேண்டுமென்றால் இந்த வனவாசிகள் செய்யும் பூஜையை நிர்குண உபாசனையாகவே ஏற்கவேண்டும். அல்லது உருவமில்லாத ஆராதனை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவர்களின் அடிப்படை உணர்வு மிகவும் எளிமையானது. இதயத்தோடு தொடர்புடையது. இவர்களுடைய பிரசித்தமான பழமொழி, ‘மிதித்தால் பாறை, தொழுதால் கடவுள்’.
மேடாரம் திருவிழாவில் ஒரு ஆத்மாவை அழைத்து குறியீடாக ஒரு பொருளிலோ மரத்திலோ மற்ற பிற எதிலாவது புகுத்தி பிரதிஷ்டை செய்து ஸ்தாபிக்கும் ஒரு வித்யை உள்ளது. இவ்வாறு இறந்த தம் பூர்விகர் யாருடைய ஆத்மாவையாவது ஆவாஹனம் செய்து பூஜை செய்வது. இதனை ஆன்மவாதம் என்பார்கள். உலக அளவில் உள்ள புராதனமான ஆதிவாசி கலாச்சாரப் பிரிவுகளில் இருக்கும் இந்த பித்ரு, மாத்ரு ஆத்மாக்களின் மூதாதையர் வழிபாடு இங்கும் சுமார் எண்ணூறு வருடங்களாக உள்ளது. சம்மக்கா, சாரலம்மா, பகடிதராஜு, கோவிந்தராஜு ஆகியோருடைய ஆத்மாக்களை ஆவாஹனம் செய்து இங்குள்ள ‘கோய துரைகள்’ எனப்படும் மலைவாழ் தலைவர்கள் தேவதைகளாக ஆராதனை செய்வதில் இந்த விஞ்ஞான அம்சங்களே மறைந்துள்ளதென்று தம் ஆராய்ச்சி மூலம் தெளிவாகக் கண்டறிந்தார்கள்.
எங்குமுள்ள முக்கியமான சம்பிரதாய வழிபாட்டு முறைகளோடு மலைவாழ் மக்களின் வழிபாட்டு முறைகளும் ஒன்று கலந்த ஒருங்கிணைப்பாக இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது என்று நவீன நாரரிக மனிதர் புரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்த சம்மக்கா திருவிழாவை வெளியிலிருந்து பார்த்தால் ஆதிவாசி பிரிவினரின் பித்ரு தேவதைகளின் குறியீட்டு வழிபாடு மட்டுமே. இதனை ஆன்மீக வழிபாடு எனலாம்.
ஆரம்ப நாட்களில் சம்மக்கா தேவியை ஒரு வன்னிமரத்தின் மேல் ஆவாஹனம் செய்து நூற்றாண்டு காலமாக பூஜை செய்து வந்தார்கள். அங்கு வரும் மக்கள் அந்த மரத்தின் பட்டையை பவித்திரமானதாகக் கருதி உரித்து எடுத்துச் சென்றனர். இறுதியில் மரம் பட்டுப் போயிற்று. இன்றும் மிகப் பழமையான அந்த மரத்தை மிகக் குறைவான இலைகளோடு அங்கே பார்க்க முடிகிறது. ஆதிவாசிகளுக்கு மரம் என்பது பூஜைக்குரிய தேவதை. அதனால்தான் அவர்கள் அனாவசியமாக மரங்களை வெட்ட மாட்டார்கள். மரம், மண், பூமி, பூக்கள் ஆகியவற்றை வழிபடும் உயர்ந்த பழக்க வழக்கம் ஆதிவாசிகளிடம் பண்டிகையாக மலர்வது சிறப்பான அம்சம். நாட்கள் செல்லச் செல்ல தேவியாகக் கருதப்படும் வன்னி மரத்தைச் சுற்றி மேடைகளை அமைத்து நவீனமயமாக்கும் அவசியம் ஏற்பட்டது. அரசாங்கங்கள் பக்தர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகளைச் செய்தாலும், வனவாசிகள் உண்மையான அடிப்படை சம்பிரதாயம் மறைந்து விடாமல் காலாச்சாரத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்..
“பாலு, நாம் நேராக ‘கன்னேபல்லெ’ க்குச் செல்வோம். சரியா சாலினி?” என்று கேட்டான் யோகி. வனத்திற்குள் செல்லச் செல்ல அடர்த்தியாகிக் கொண்டே இருந்த ஜன நெருக்கடியைப் பார்த்து அவர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.
“ஆமாம். அங்கேயே செல்வோம். நம் வருகைக்காக லக்ஷ்மிபதி காத்திருப்பார். மீண்டும் பெரியவர் சாரய்யா தான் சாரலம்மாவின் பிரதான பூசாரியாக உள்ளார். ஒரு விஷயம் யோகி, நடுவில் ‘ஜம்பன்னா வாகு’ வில் நான் நீராட விரும்புகிறேன்” என்றாள் சாலினி.
லக்ஷ்மிபதி வாரங்கல்லில் எம்.ஏ. படித்து இப்போது எம்.பில். செய்வதற்காக யோகியிடம் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்துள்ளான். அவர்கள் இங்கு வர ஆரம்பித்த போது லக்ஷ்மிபதி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். யோகி அவனுக்குப் படிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி உதவியும் செய்து வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்று வழிகாட்டி வருகிறான். லக்ஷ்மிபதியை யோகியின் சீடன் என்றே கூறவேண்டும்.
பொழுது நன்றாக விடிந்து விட்டது. அப்போது வரை இளம் இருட்டிலும் லேசான வெளிச்சத்திலும் தெரிந்த வனத்தின் அழகு, உடம்பை விதிர்த்துக் கொண்டு எழுந்த சூரியனின் கிரணக் கூட்டங்களால் பிரகாசமாக மலர்ந்ததை ரசிக்கக் முடிந்தது.
எங்கு பார்த்தாலும் பக்தர் கூட்டம். மனிதர்கள் தென்படாத இடமே இல்லை. ஒரு சாண் இடம் கூட காலியாக இல்லை. அதிலும் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக வந்திருந்தார்கள். மொட்டை அடித்துக் கொண்ட ஆண்களும் இருந்தனர். குடும்பம் குடும்பமாக அனைவரும் சேர்ந்து மனிதர்களின் சமுத்திரம் போல் மேடாரம் காட்சியளித்தது. பெரும்பாலும் கிராமத்து மக்கள். நகர வாசிகள் அதிகாரிகள் போலீசார் வியாபாரிகள் தன்னார்வலர்கள், என்.ஸி.ஸி. மாணவர்கள் என்று ஒரே கலகலப்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் நெருக்கிக் கொண்டும்… அப்பப்பா.
பாலு மிக சாமர்த்தியமாக் வண்டியை ஒரு மூலைக்குத் திருப்பி மரத்தின் கீழ் நிறுத்தினான். அருகில் சாலினி குளிப்பதற்கு ஏற்ற இடமாக அந்த கால்வாய்க் கரை இருந்தது. இத்தனை முறை வந்த போதிலும் இந்த ஒருமுறைதான் சாலினி இந்தக் கால்வாயில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டினாள். அண்மையில் சரளமாகத் தெலுங்கு பேசுவதற்கு கற்றுக் கொண்டதோடு புராதன இலக்கியங்களையும் படிக்க ஆரம்பித்திருக்கிறாள். சட்டென்று காரின் கதவைத் திறந்து கொண்டு கால்வாயில் இறங்கி நீரில் மூழ்கிக் குளித்தாள் சாலினி.
இந்த ஜம்பன்னா வாகுவின் பெயர் முதலில் சம்பங்கி வாகு என்று இருந்தது. வாகு என்றால் கால்வாய். ரெட்டிகூடம், கன்னேபல்லி, நார்லாபூர், பய்யக்கபேட்டை போன்ற ஊர்களின் வழியாக பாபட்லா வரை பாய்கிறது சம்பங்கி வாகு. உண்மையில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க காகதிய அரசர்களின் காலத்தில் ‘லக்னாவரம் குளம்’ என்று பெயர் பெற்றிருந்தது. பஸ்ரா என்ற கிராமத்தில் பேய்க்குளம் என்று இதனை அழைத்தார்கள். பல ஊர்களைக் கடந்து இந்தக் கால்வாய் ‘பூடாரம்’ என்ற கிராமத்தின் அருகில் கோதாவரியில் கலக்கிறது.
ஸ்தல புராணத்தின்படி காகதிய அரசன் பிரதாபருத்திரன், தன் சிற்றரசனான மேடாரம் பகிடிதராஜு கப்பம் கட்டாததால் படையை அனுப்பித் தாக்குதல் நடத்தினான். தொடர்ந்து மழை பொய்த்ததால் உணவுக்கே போராடி வரும் தங்களால் கப்பம் கட்ட இயலாது என்று பணிவோடு செய்தி அனுப்பினாலும் அரசன் கேட்கவில்லை. வேறு வழியின்று போருக்கு இறங்கிய மேடாரத்தின் ஒவ்வொரு படை வீரனும் வீர மரணம் எய்தினர். புலியைப் போலப் போராடி தீவிரமாகக் காயமடைந்த சம்மக்காவின் மகன் ஜம்பன்னா, ரத்தம் வழியும் உடலோடு சம்பெங்கி கால்வாயில் ரத்தத்தை தாரை வார்த்து உயிரைத் தியாகம் செய்ததால் சம்பெங்கி கால்வாய்க்கு, ஜம்பன்னா கால்வாய் என்று பெயர் வந்தது. அதே போல சம்மக்காவின் கணவன் பகடிதராஜு, கணவனின் தம்பி கோவிந்தராஜு, மகள்கள் சாரலம்மா, நாகுலம்மா ஆகியோரும் வீரத்தோடு போர் புரிந்து வீர மரணம் எய்தினர். இறுதியில் சம்மக்கா நூற்றுக்கணக்கான படைவீரர்களை எதிர்த்துப் போராடினாள், எதிரியின் பயந்தாங்கொள்ளி வீரன் ஒருவன் பின்னாலிருந்து முதுகில் கத்தியை வீசி சம்மக்காவைக் காயப்படுத்தினான். ரத்தம் வழிய ‘சிலுகல குட்டா’ என்ற சிறு மலையின் மீது ஏறி மறைந்து போனாள் அன்னை சம்மக்கா. அதன் பின் கிராமத்தார் சம்மாக்காவைக் காணாமல் மலை முழுவதும் தேடினர். ஒரு மரத்தின் நிழலில் மகிமை பொருந்திய கும்கும பரணி ஒன்று அவர்களுக்குத் தென்பட்டது. மூங்கிலால் செய்த அந்த கும்கும பரணியில் குங்குமம் நிறைந்து காணப்பட்டது. காட்டுவாசிகளின் தன்மானத்திற்கு அடையாளமான அந்த குங்கும பரணியை சம்மக்காவின் உருவமாக எண்ணி எடுத்து வந்தனர். மூலிகைகள் நிறைந்தது ‘சிலகலகுட்டா’ மலை. அதனைச் சுற்றிலும் உள்ள பதினான்கு ஊர்களும் மாக மாத பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் உள்ள இரண்டு நாட்களும் முழுமையாக தாய் சம்மக்கா தேவியுடைய கவசம் அருளும் பாதுகாப்பின் நிழலில் இளைப்பாறுகின்றன. வரலாறு செதுக்கிய சாமானியர்களின் நாட்டுப்பாடல்கள் போலத் தோன்றும் இந்த வீரக் குடும்பத்தின் நூற்றாண்டு கால புராதன காதை இன்றைக்கும் அதன் இருப்புக்கும் வீரத்திற்கும் அடையாளமாக திகழ்கிறது.
ஆனால் இது ஸ்தல புராணமா? கட்டுக் கதையா? உண்மையில் நடந்ததா? மனிதனுக்கு ஏற்படும் நம்பிக்கை, கௌரவம், அனுபவம் மட்டுமே சாஸ்திரமாகி மக்களை வழிநடத்துமா? அந்த நம்பிக்கை கோடிக்கணக்கான விசுவாசிகளை இந்தக் காட்டிற்கு வரவழைக்கிறது. எல்லோரும் அந்த அன்னையை தேவதையாக ஏற்று நூறாண்டுகளுக்கும் மேலாக. கை நீட்டி அழைக்கிறர்கள். படித்தவர், பாமரர், மேதாவிகள், அறிஞர்கள், கலைஞர்கள், பாடகர்கள், தலைவர்கள் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றாக நின்று நம்பிக்கையோடு கை கூப்பித் தொழுது வணங்குகிறார்கள். அந்தக் கணங்கள் அற்புதமானாவை.
சாலினி குளித்து முடித்து ஈர உடையோடு வந்தாள். உடை மாற்றும் அறைகள் அங்கு இருந்தும் ஏன் அப்படி வந்தாள் என்று யோகிக்குப் புரியவில்லை. ஈரத்தலையை உதறி முடிந்து கொண்டாள்.
சரியாக அப்போது யோகியின் போன் ஒலித்தது. லட்சுமிபதி பேசினான். “சார் நான் உங்களை எதிர்பார்த்து நிற்கிறேன். இங்கு அன்னை கிளம்ப போகிறாள். நீங்கள் விரைவாக வரவேண்டும். நான் அர்ஜுனா மரத்தின் நிழலில் நிற்கிறேன்” என்றான் பரபரப்போடு.
“இதோ வந்துவிட்டோம். ஒரு நிமிடத்தில் அங்கிருப்போம்” என்று பதிலளித்தான் யோகி.
பாலு புரிந்து கொண்டு மக்களின் இடையே வழி கண்டு பிடித்து வண்டியை வேகமாக ஓட்டினான். ஐந்து நிமிடங்களில் கார் கன்னேபல்லியின் சிறிய ஆதிவாசி ஆலயத்தின் ஒரு புறம் இருந்த அர்ஜுனா மரத்தை அடைந்தது. லட்சுமிபதி வேகமாக அந்து அவர்களை அழைத்துச் சென்றான்.
பரம்பரை வம்சத்தினர் மூன்று மணி நேரமாக ஆலயத்தின் ஆளுயர கர்ப்பாலயத்தில் பூஜைகள் நடத்தி வந்தனர். இன்னும் சற்று நேரத்தில் தேவதைகளை புயலைப் போல் வெளியே எடுத்து வருவார்கள்.
“சார், மேடம் இந்த நிகழ்வைக் காண வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்தார். இந்த கணத்தை மிஸ் செய்து விடுவோமோ என்று அஞ்சினேன்” என்றான் லட்சுமிபதி.
“அப்படியா?” என்று கேட்டு சாலினியின் பக்கம் திரும்பினான் யோகி. கோயிலின் முன்னால் இருநூறு பேருக்கு மேல் பெண்கள் கூடியிருந்தார்கள். திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகி பிள்ளை இல்லாதவர்கள், விரைவில் தாயாக வேண்டுமென்று விரும்பும் பெண்கள் எல்லோரும் ஈர உடையோடு தரையில் பக்தியோடு சாஷ்டாங்கமாக குப்புற விழுந்து வணங்கி வரம் வேண்டினார்கள். படித்த பெண்கள், படிக்காத பெண்கள், அதிகாரிகள், போலீசார் எந்த வேறுபாடும் இல்லாமல் பெண்களிடையே ஒரே தள்ளுமுள்ளு. சில பெண்கள் சாமி வந்து ஆடினர். ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி அனைவரையும் ஆட்கொண்டது போல அவர்களின் முகத்தில் தெய்வீகக் களை குடிகொண்டது.
ஒரு புறம் ஆதிவாசி பூசாரிகளுக்கு சாமி வந்து முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தார்கள். கையில் வேப்பங்கொத்துகளைப் பிடித்திருந்தார்கள். தலையில் சுற்றியிருந்த துணியில் மணிகள் தொங்கின. கால்களுக்கு செப்புத் தண்டையும் வெள்ளிச் சலங்கையும் அணிந்திருந்தார்கள்.
ஆலயத்திலிருந்து வெளிவரும் ஆதிவாசி பூசாரிகள் சாட்சாத் தெய்வ சொரூபங்கள் என்றும் தேவி சாரலம்மாவின் மறுவடிவங்கள் என்றும் பக்தர்கள் நம்பினர். ஒருமுறை படுத்திருக்கும் அவர்களைக் காலால் தொட்டால் போதும் தாம் பிறவியெடுத்த பயனை அடைந்துவிடுவோம் என்று நம்பினார்கள். தேவி தன் பாதங்களால் தம்மைத் தொட்டால் கட்டாயம் தமக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது அந்தப் பெண்களின் நம்பிக்கை.
மின்னல் போல ஒரு கணத்தில் ஐந்து பேர் கொண்ட பூசாரிகளின் குழு வெள்ளம் போல கோயிலின் உள்ளிருந்து வெளியில் வந்தார்கள். யோகி, தன் ஆராய்ச்சிக் கண்களால் எட்டாவது முறையாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் இளம் பூசாரிகளே. தலையில் சிவந்த துணியை சுற்றியிருந்தார்கள். வெண்மையான் பனியன் போன்ற ஆடையின் மேல் உடம்பெல்லாம் மஞ்சளும் குங்குமமும் பூசி கையில் சுரைக் குடுக்கை வைத்திருந்தார்கள். ஒருவர் கையில் முறம் இருந்தது. வெளிப்படாத தெய்வீக மயக்கம் அவர்கள் முகத்தில் குடிகொண்டிருந்தது. அவர்கள் வெள்ளம் போல் அதிவேகமாகப் பாய்ந்து வந்து, வரம் வேண்டி குப்புறப்படுத்திருந்த பெண் பக்தைகளின் முதுகின் மேல் மின்னல் வேகத்தில் அடி வைத்து மிதித்துக் கொண்டு ஓட்டமாக ஓடினார்கள். அப்போது யோகி யூகிக்கவேயில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனருகில் நிருந்திருந்த சாலினி சட்டென்று ஓடி ஈர உடையோடும் அவிழ்த்துவிட்ட ஈரக் கூந்தலோடும் தரையில் குப்புறப்படுத்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே பூசாரிகளின் பாதங்கள் வரிசையாக அனைவரையும் மிதித்துகொண்டே வந்து சாலினியின் முதுகின் மேலும் நடந்து கிடுகிடுவென்று ரயில் வண்டி போல சென்று விட்டன. கைகளை நீட்டி குப்புறப்படுத்திந்த சாலினியின் உடல் நடுங்கியது. உடலைத் திருப்பினாள். அவள் முகத்தில் யோகி ஒரு ஒளியைக் கண்டான்.
இவள் ஏன் திடீரென்று இப்படிச் செய்தாள்? இவளுக்கு என்ன வேண்டுதல்? உண்மையாகவே குழந்தை வரம் கேட்கிறாளா?
“சார், மேடம் அதிர்ஷ்டசாலி. பூசாரிகள் மிதித்துக் கொண்டு சென்றாகள். இந்த முறை மேடத்திற்குக் கட்டாயம் குழந்தை பிறக்கும்” என்றான் லட்சுமிபதி. அவன் குரலில் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது.
எல்லாம் முடிந்தது. பூசாரிகளைத் தொடர்ந்து பக்தர் கூட்டமும் ஒரு கணத்தில் அங்கிருந்து கிளம்பி மேடைகளை நோக்கிச் சென்று விட்டார்கள். பத்தே நிமிடத்தில் அந்த இடம் வெறுமையானது.
*** ****
கன்னேபல்லியிலேயே இருக்கும் லட்சுமிபதியின் வீட்டு தோட்டத்தில் பாலு டென்ட் அமைத்திருந்தான். அங்கு ஓய்வெடுத்த யோகியும் சாலினியும் அங்கேயே படுத்துறங்கினர். இருவருக்கும் உடலை விட மனம் சோர்ந்திருந்தது.
யுக யுகங்களாக தனக்கான நிரந்தர இடத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஆத்மா, நிச்சயமில்லாத ஒரு வட்டத்தில் சுற்றி, ஒரு முறை காடாகவும் மற்றொருமுறை ஆகாயமாகவும் இன்னொருமுறை பாலைவனமாகவும் சமுத்திரமாகவும் ஒரு சின்னசிறு குருவியாகவும் சிலுகலகுட்டா மலையின் மேல் ஒரு சிறிய மல்லிகை இலையாகவும் அலைந்து தன் இருப்பைத் தேடியது.
உண்மையில் மனிதனுக்கு என்ன வேண்டும்? எதற்காக இந்த தேடல்? உண்மையில் மனிதனுக்கு எதுவும் தேவையில்லை என்று தெரிந்து கொள்தற்காகவே இந்தத் தேடல். மனிதனின் தேவைகள் உடல் ரீதியானதா? உடலுக்கு அப்பாற்பட்டதா? நிச்சயமில்லாததும் வெளிப்படாததுமான அந்த வஸ்து என்ன? மனிதன் இன்னொரு மனிதனிடம் எப்போதுமே தன் உள்ளத்தைத் திறந்து காட்டியதில்லை. மூடிவைத்த மனித ஆளுமையே அதிகம்.
அவர்களுடைய படுக்கையின் மேல் இரண்டு புத்தகங்கள் இருந்தன. யோகி படித்து முடித்த ஞான சித்தாந்தம் நூல், வாழ்வின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே வந்து, சுண்டுவிரலைக் கொடுத்து சிறுவனை தன பின்னால் நடத்தி அழைத்துச் செல்வது போன்ற ஒரு அனுபவத்தைத் தந்தது அந்த நூல். இன்னொன்று சாலினியின் நெஞ்சில் பக்கங்கள் திறந்து வைக்கப்பட்ட ‘பறவைகளின் சபை’ என்ற கவிதை நூல். ‘ஃபரீத் உத் தின் அத்தர்’ என்ற பெர்ஷியன் கவிஞர் எழுதியது. சூஃபி தத்துவவாதி எழுதிய முழுமையான குறியீட்டு வாழ்க்கைக் கீதம். டாக்டர் லங்கா சிவராமபிரசாத் தெலுங்கில் மொழிபெயர்த்த அசாதாரணமான நூல். புத்தகங்கள் நம்மைச் சுற்றி நாமே கிழித்துக் கொண்ட எல்லைகளையும் கோடுகளையும் அழித்துவிட்டு நம்மை விரிவாக்குகின்றன. பண்படாத மனிதனை தூய்மை செய்து, மாற்றி, நிரந்தரம் சுத்திகரிக்கும் செயலைச் செய்கின்றன. கடைசியில் டிரான்ஸ்பர்மேஷேன் எனப்படும் மாற்றமே வாழ்க்கை என்று அறிந்து கொள்வதோடு பயணம் முடிகிறது. அறிதலே முடிவு. அவ்வளவுதான்.
நேற்று கன்னேபல்லேயில் பூசாரிகள் சாரலம்மாவை மேடைக்கு எடுத்துச் சென்ற போது கோவில் வாசலில் சட்டென்று சாலினி ஈரத் துணியோடு வரம் வேண்டினாளே. அது எதற்காக? மரத்தின் கிளை துளிர்க்க வேண்டும், பூக்க வேண்டும், மலர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு தானே. உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான் யோகி. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. மனம் காலியாக இருந்தது.
மறுநாள் காலை எட்டு மணிக்கே சம்மக்கா தேவியின் வருகைக்கான திருவிழா தொடங்கியது. அவர்கள் இருவரும் லட்சுமிபதியோடு சிலுகலகுட்டா மலைக்குச் சென்றார்கள். மலை மேல் மக்கள் கடல் போல் திரண்டிருந்தார்கள். பயங்கரமான பிரகாசத்தோடும் தெய்வீக ஆவேசத்தோடும் உன்மத்த அலைகளைப் போல மக்கள் எழுந்து எழுந்து விழுவதை யாரும் எங்கேயும் எப்போதும் பார்த்திருக்க முடியாது. அது மிக அற்புதமான காட்சியாக இருந்தது.
குங்கும பரணியாக மாறிய சம்மக்கா தேவி வருகை தந்தாள். சக்தி சொரூபிணி ஒரு குறியீட்டு அடையாளமாக வந்தமர்ந்தாள். பல கி.மீ. சுற்றளவிற்குச் சுழன்று கண்ணுக்குத் தெரியாத சக்திக் சக்கரமாகப் பரவி நம்பினவர்களிடம் ஆவஹித்து அனைவருக்கும் தெய்வீக அனுபவங்களை அருளிவிட்டு மறுநாள் மீண்டும் சிலுகலகுட்டா மலையின் மேல் மறைந்து போகிறாள் தேவி.
திடீரென்று மின்னலோடு கூடிய பெரு மழை பெய்தது. கோடை மழை. லட்சக்கணக்கான மக்கள் பழக்கமில்லாத காட்டில் ஒதுங்க இடமின்றி நனைந்தனர். வன்னிமரத்தின் நிழலில் நின்றிருந்த யோகியை சாலினி நெருங்கி வந்தாள். தன் வலது கையைத் திறந்து யோகியிடம் காட்டினாள். அவள் கையில் பச்சை நிற மூக்கில் கும்குமச் சிமிழ் இருந்தது. அதின் சிவப்பான குங்குமம் நிரம்பி வழிந்தது. ரத்த வண்ணத்தில் குங்குமம் தகதகவென்று மின்னியது.
அப்போது அவள் அவனைப் பார்த்த பார்வை அவனுக்கு ஆணையிட்டது. அவனிடம் விண்ணப்பித்தது, அவனைக் கெஞ்சியது. யோகி எந்த சிந்தனையுமின்றி குங்குமச் சிமிழிலிருந்து துளி குங்குமத்தை இரண்டு விரல்களில் எடுத்து சாலினியில் நெற்றியில் வட்டமான பொட்டாக வைத்தான். உதயமான சூரியனைப் போல் அவள் நெற்றியைக் குங்குமம் அலங்கரித்தது. மேகம் ஒருமுறை உறுமி இடித்தது. அனைவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர். எதிரில் சிலகலகுட்டா மலை மீது கண்களைப் பறிக்கும்படியாக மின்சாரக் கொடி போல ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.
“யோகி, இந்தக் காடும் இதன் மகிமையும் இந்த மரங்களும் இந்த மழையும் என்னோடு பிணைந்து என்னை ஆவஹித்து விட்டாற்போல் தோன்றுகிறது. என்னால் இதை விட்டு வரமுடியாது. வாழ்நாள் முழுவதும் மானுடத்தில் புராதன அடையாளங்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்று தேடித்தேடி இங்கு வந்த நான், இறுதிச் சத்தியத்தை தரிசித்து விட்டேன். இனி என் நிவாசம். ஜீவிதம், எதிர்காலம், பரிசோதனை எல்லாம் இங்கேதான்: என்றாள் சாலினி. அவள் குரல் மெதுவாக ஒலித்தாலும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது.
யோகி செயலிழந்தவனாக சாலினியின் கண்களைப் பார்த்தான். அவள் முகம் நிர்மலமாக அமைதி நிறைந்து காணப்பட்டது. அவள் நெற்றியில் அவன் வைத்த கும்குமப் பொட்டு சிவப்பாக ஒளிர்ந்தது.
அன்று அப்பெருங்காட்டில் தேவியை தரிசிப்பதற்கு ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேரின் நடுவில் வன்னி மரத்தின் கீழ் சாலினியும் யோகியும் மழையில் நனைந்து உணர்ச்சிவசப்பட்டு உடல் சிலிர்க்க நின்றிருந்தார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
