உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?

Gandhi 1914-1948 – The years that changed the World: By  Ramchandra Guha.

பேரிலக்கியங்களை, படித்து முடிக்கையில் மனதில் ஒரு பேரமைதி உண்டாவதை அனுபவித்திருக்கிறேன். கூடவே அதில்  ஒரு வெறுமையும் இருக்கும்.அவற்றைப் படித்து  முடித்தபின் உடனடியாக வேறு எந்த புத்தகத்தையும் எடுத்துப் படிக்க முடியாத ஒரு நிலையும் உருவாவதுண்டு.

   இந்த உணர்வுகள், மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து முடிக்கும் போதும்  நேர்கிறது என்பதை அண்மையில் ராமச்சந்திர குஹா எழுதியிருக்கும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றின்  இரண்டாம் பாகமான,Gandhi 1915-1948 The years that changed the world படித்து முடிக்கும் போது  உணர்ந்து கொண்டேன்.ஆம் காந்தி போன்ற மகத்தான மனிதர்களின் வாழ்க்கையே ஒரு பேரிலக்கியம்தானே.

   இது குஹா எழுதியிருக்கும் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பாகம்.முதல் பாகம், Gandhi before India .குஹா இந்த நூலில் காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 1915ல் தொடங்குகிறார். இதற்கு முந்தைய பாகமான Gandhi Before India காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை விவரிப்பது.இந்த இரண்டாம் பாகத்தைப் படிக்க, முதல் பாகத்தை படித்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

  இந்த நூல் காந்தியின் வாழ்க்கையை  அவர் தென்னாப்பிரிக்காவை நிரந்தரமாக நீங்கி இந்தியா  வந்த  1915ம் ஆண்டு தொடங்கி கோட்ஸேவினால் கொல்லப்பட்ட 1948ம் ஆண்டு ஜனவரி வரை ஒவ்வொரு ஆண்டும் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைக்   கொண்டு விவரிக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் அதைப் பற்றிய கருத்துக்கள் அனைத்துக்குமான  ஆதாரங்களை பின்னடைவில் விரிவாக கொடுத்திருக்கிறார் குஹா.

   இந்த நூலைப் பற்றி மிகவும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம்,காந்தியின் வரலாற்றாசிரியராக காந்தியின் நடவடிக்கைகள் அதன் விளைவுகள் ஆகியவற்றைக் குறித்து குஹா அவரது  விளக்கங்களாக அதிகம் எதுவும்  தருவதில்லை என்பதே. நடந்த  நிகழ்ச்சிகள்,அவை அந்த சமயம் நாட்டில் ஏற்படுத்திய  பாதிப்புகள், அவற்றை பற்றி,இந்தியாவிலும், உலகெங்கும் இருந்த முக்கியமான இதழ்களில் வந்த செய்திகள் மற்றும் எதிர்வினைகள்,அதே போல அன்று உலகின் முக்கியமான அரசியல் தலைவர்கள்,சிந்தனையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை தொகுத்துத் தருகிறார். இதிலிருந்து அக்காலகட்டத்தில்  காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை நாமே உணர முடிகிறது.தவிர அவற்றின் சாதக பாதகங்களையும் நாமே அலசவும் முடிகிறது.1915லிருந்து 1948 வரை, இந்த நாட்டிலும், உலகளாவிய அளவிலும்  காந்தி அடைந்த ஏற்பின், புகழின்  உச்சத்தையும்,வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அவர் அந்த உச்சத்தில் இருந்து நழுவி (இங்கே இந்தியாவில்) தனது நெருங்கிய சகாக்களிடம் இருந்தே  கூட சற்றே தனிமைப்பட்டுப்  போனதையும் இந்த நூல் ஒரு காவியத் தன்மையுடன்  விவரிக்கிறது.

     இனி நூலில் விவரிக்கப்படும் சில முக்கியமான  விஷயங்களை பார்ப்போம். காந்திய போராட்டத்தின் முக்கியமான நேர்மறை விளைவு இந்தியச்சுதந்திரம். அதே சமயம் அப்போராட்டம் காந்தியின் உயிருக்கு உயிரான கொள்கையான இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பதில் தோல்வியை அடைந்து,பாகிஸ்தான் பிரிவினையில் முடிகிறது. அப்பிரிவினையே காந்தி, கோட்ஸே எனும் இந்து வலதுசாரி வெறியனால் சுட்டுக்கொல்லப்படுவதிலும் முடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது என்பது இந்நூலை ஆழமாக படிக்கும் எவரும் உணரும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையின் ஊற்றுக்கண் எங்கே தொடங்கி எப்படி வெற்றிகரமாக முடிகிறது என்பதன் ஒரு கால வரைபடம் (Timeline ) இப்படி அமைகிறது.

இந்து முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை பொறுத்தவரை 1922க்குப் பின்னர் மெல்ல மெல்ல அதில் பின்னடைவு தான் ஏற்படுகிறது. இரு சமூகங்களுக்கும் இடையேயான விலக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.கிலாபத் இயக்கத்தின் போது காந்தியின் சிறந்த சகாக்களாக விளங்கிய அலி சகோதரர்கள் மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகுகிறார்கள்.எப்போதுமே காந்தியி டம் அதிகம் நெருக்கம் பாராட்டாத ஜின்னாவும் இன்னும் விலகியே போகிறார்.

விலக்கம் ஏற்படுவதற்கும் பகை வளரவும் காரணமாக இருப்பவை இன்றும் நாம் வட இந்தியாவில் காணும் அதே விஷயங்கள் தான்.இஸ்லாமியர்களின் பசு வதை,ஹிந்துக்கள் தங்கள் திருவிழாக்களில் இஸ்லாமியர்களின் மசூதிகள் முன்பு இசையை ஒலிக்க விடுவது. இவை இரண்டும் தான் நிறையக் கலவரங்கள் நிகழக் காரணமாக விளங்குகின்றன.இவற்றை தடுக்க காந்தி மற்றும் அலி சகோதரர்களால் முடிவதேயில்லை. 

கிலாபத் அமைப்பு துருக்கியின் கமால் பாட்சாவால் ஒழிக்கப்பட்டு விடும் போது அந்த இயக்கம் ஒரு இயல்பான முடிவுக்கு வநதுவிடுகிறது. ஆனால்,இஸ்லாமிய சமூகத்தின் அன்றைய தலைவர்களான அலி சகோதரர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.அவர்கள் ஏனோ இந்த விஷயத்தில் ஹிந்துக்களும் காங்கிரசும் காந்தியும் தங்களை கைவிட்டுவிட்டதாக நம்புகின்றனர்.இத்தனைக்கும் முகமது அலி ஜின்னா போன்ற இஸ்லாமிய லிபரல் தலைவர்களுக்கே அந்த இயக்கத்தில் நம்பிக்கை இருந்ததில்லை,காங்கிரசில் இருந்த பல தலைவர்களும் ஆதரிக்காத நிலையிலும் கூட காந்தி அதை ஆதரித்தே வருகிறார்.

இந்த விலக்கம் எவ்வளவு தூரத்துக்குப் போகின்றதென்றால், 1930ல் காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தையும்,தண்டி யாத்திரையையும் முஸ்லீம் லீக் ஆதரிப்பதில்லை.(காங்கிரசில் இருந்த முஸ்லிம்களும் தனிப்பட்ட சில முஸ்லிம்களும் ஆதரித்தார்கள் என்பது வேறு விஷயம்)இந்த விஷயத்தில் ஜின்னாவும்,அலி சகோதரர்கள் பக்கமே நிற்கிறார்.ஆங்கில அரசுக்கெதிரான எந்தப் போராட்டத்தையும் அவர்கள் ஆதரிப்பதில்லை என்பதை காண முடிகிறது.முஸ்லிம் லீக் இந்த இயக்கத்திலிருந்து ஒதுங்கி நிற்பதோடு அல்லாமல்,அதன் தலைவர்கள் நேரடியாகவே இதற்கு எதிராகவும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் குஹா பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் யாருமே எதிர்பாராத வண்ணம் உப்பு சத்தியாகிரகமும் தண்டி யாத்திரையும் உலகப் புகழ்பெற்று விடுகிறது.காந்தி மீண்டும் உலகம் முழுவதும் பேசப்படும் தலைவர் ஆகிவிடுகிறார்.அமெரிக்காவின் புகழ்பெற்ற TIME இதழ் அந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதர் எனும் விருதுக்கு காந்தியைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆனால் இங்கே முஸ்லீம் லீகின் தலைவர்கள் அப்படி நினைப்பதில்லை. உப்பு சத்தியாகிரக இயக்கமே முஸ்லிம்களை கலந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட ஒன்று என்றும் அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டு முஸ்லிம்களை அதற்கு ஆதரவாக இருக்கும் படி காந்தி கட்டாயப்படுத்துகிறார் என்றும் சவுக்கத் அலி கடிதமே எழுதுகிறார்.முஸ்லீம் தலைவர்களின் இந்த நடவடிக்கைகளில் காந்தி மீதான பொறாமை நன்றாகவே தெரிவதாகச் சொல்கிறார் குஹா.

1931 ம் ஆண்டுவரை நடந்த சம்பவங்களின் தொகுப்பை படித்ததில், எனக்கு ஆச்சர்யமூட்டிய ஒரு விஷயம், இவற்றில், காந்தி (காங்கிரஸ்) முஸ்லீம் லீக் மற்றும் ஆங்கிலேய அரசு ஆகிய 3 தரப்புகளின் நடவடிக்கைகளை மட்டுமே குஹா ஆவணப்படுத்தி இருக்கிறார் என்பது தான். நான்காம் தரப்பு என்று இருந்திருக்கக்கூடிய ஹிந்து மகா சபா,ஆர்,எஸ்,எஸ், போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகள் பேசப்படவேயில்லை.அதாவது அந்த அளவுக்கு அவர்களுக்கு முக்கியத்துவமிருந்ததாக தெரிவதில்லை.

இந்த 12 ஆண்டுகளின் வரலாற்றில் ஒரே ஒரு இடத்தில் தான் இந்து மகா சபாவின் பெயரே குறிப்பிடப் படுகிறது. சௌக்கத் அலியின் கடிதத்தில் அவர், காந்தியை ஹிந்து மகா சபாவின் கொள்கைகளை ஆதரிப்பவராக நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டும் இடம் தான் அது…அதைத் தவிர இந்து அமைப்புகளின் நடவடிக்கைகள் பதிவாகவேயில்லை. மேலே சொன்னதும் ஆர்ய சமாஜைச் சேர்ந்த சுவாமி ஸ்ரத்தானந்தாவின் கொலையும் விதி விலக்குகள்.

இந்தக் காலகட்டத்துக்குப் பின் தான் அவை முக்கியத்துவம் பெறத் தொடங்குகின்றன.1931ல் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் கவிஞர் அல்லாமா இக்பால் லக்னோவில் நடந்த ஒரு கூட்டத்தில் முதன் முறையாக இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் முஸ்லிம்களுக்கான ஒரு தனி இடமும் அவர்களின் மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் (ஷரியா) அமைந்த ஒரு அரசியல் சட்டமும் தேவை என்று பேசுகிறார்.பாகிஸ்தான் உருவானதற்கான முதல் விதை அங்கே போடப்படுகிறது எனலாம்.அதற்குப் பின்னான இந்திய வரலாறு பிரிவினையை நோக்கிய ஒரு தவிர்க்கவியலாத பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.பின்னர் 1947ல் பிரிவினையில் முடிகிறது.இதைத்தவிர்க்க காந்தி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடிகின்றன.

இது முதன்மையாக காந்தியின் சரிதை என்றாலும், காந்தியோடு அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த, உறவாடிய, இணக்கமாகவும் பிணக்கு கொண்டும் இ ருந்த அனைவரின் சித்திரமும் கிடைக்கிறது.நேரு,பட்டேல்,ராஜாஜி, அம்பேத்கார்,என்று பலரைப் பற்றியும் புரிந்து கொள்ள ஒரு திறப்பாக இந்நூல் அமைகிறது.

பொதுவாக அரசியலில் கொள்கை ரீதியான போட்டி,பகைமை என்பவை வேறு தனிப்பட்ட உறவுகள் வேறு,முன்பு இவையிரண்டும் இப்போதிருப்பதை விட மேம்பட்ட நிலையில் இருந்தன என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அப்படியில்லை என்பதை இந்நூல் மூலம் நாம காணலாம்.

ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். காந்தியின் மனைவி கஸ்தூர் பா மரணம் அடைந்ததற்கு,உலகெங்கிலும்,இருந்து காந்திக்கு இரங்கல் செய்திகளும் ஆறுதல் கடிதங்களும் வந்து குவிந்திருக்கின்றன. ஆனால், ஜின்னா, அம்பேத்கர்,சாவர்க்கர், வைஸ்ராய் லின் லித் கௌ ஆகியோர் காந்திக்கு எந்தவொரு இரங்கல் செய்தியும் அனுப்பியதாக தகவல் இல்லை என்றே தன்னுடைய நூலில் ராமச்சந்திர குஹா பதிவு செய்கிறார்.முஸ்லீம் லீகின் அதிகார பூர்வமான பத்திரிக்கையான Dawn ஒரு இரங்கல் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.ஆனால்,மேலே சொன்ன அனைவருமே காந்தி மீது தனிப்பட்ட முறையிலும் ஒவ்வாமை/ பகைமை கொண்டிருந்தார்கள் என்றே தெரிகிறது. ‘

‘ So far as one can tell there were no messages of condolence from Linlithgow, Ambedkar Savarkar or Jinnah’ என்பதே குஹாவின் சொற்கள்.

காந்தி பற்றிய பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் வீசப்படும் இந்த காலகட்டத்தில் இந்த நூலைப் படிப்பது அவரைப் பற்றிய உண்மையான சித்திரத்தை நமக்கு அளிக்கும்.அவ்வாறான ஓரிரெண்டு நிகழ்சிகளையம் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளையும் இங்கே தருகிறேன்.

ஒரு நீதிபதியும் ஒரு ‘குற்றவாளியும்’

ரௌலட் சட்டங்களுக்கு எதிராக Young India இதழில் எழுதியவற்றுக்காக காந்தி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.விசாரித்த நீதிபதி C .N .Broomfield என்பவர்.காந்தி சட்டத்தை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்டது தனது வேலையை எளிதாகிவிட்டது என்று கூறிவிட்டு காந்தியைப் பார்த்து அவர் கீழே வருமாறு கூறுகிறார்,

// இதுவரை நான் பார்த்த, பார்க்கப்போகும், ‘குற்றவாளிகளில்உங்களை போல ஒருவரை நான் பார்த்ததில்லை பார்க்கப் போவதுமில்லை என்று நினைக்கிறேன். ..கோடிக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு அப்பழுக்கற்ற தேசபக்தர் மற்றும் மகத்தான தலைவர் .அரசியல் கருத்துகளில் உங்களிடமிருந்து வேறு படுபவர்கள் கூட நீங்கள் மகத்தான லட்சியங்களுக்காக போராடும் ஒரு உன்னதமான,புனிதமான மனிதர் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.// 

இப்படிக் கூறிவிட்டு அப்படிப்பட்ட உங்களுக்கு என்ன தண்டனை அளித்தால் அது அநீதியாக இல்லாமல் இருக்க முடியும் என்று வருத்தப்பட்டுக் கேட்கிறார்.பின் இதற்கு முன்னர் பால கங்காதரத் திலகருக்கும் இதே சட்டப் பிரிவுகளின் கீழ் ஆறு ஆண்டுகள் சிறைவாச தண்டனை அளிக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்து அதே ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் காந்திக்கு வழங்குவது அநியாயமாக இருக்காது என்றும் கூறி ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை வழங்குகிறார்.. அதன் பின் அவர் சொல்வதுதான் இந்த வழக்கின் உச்சம். 

// இந்தியாவின் இன்றைய சூழலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து அரசு உங்கள் தண்டனையைக் குறைத்து சிறையிலிருந்து விடுவிக்குமேயானால், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்க முடியாது என்கிறார் //

இது வரலாற்றில் அது வரை வேறெந்த நீதிபதியும் வேறெந்த ஒரு ‘குற்றவாளி’யையும் பார்த்து சொல்லியிருக்க முடியாத வார்த்தைகள் என்று எழுதுகிறார்,நூலாசிரியர் ராமச்சந்திர குஹா..

(நீதிபதி, குஹா ஆகியோரின் சொற்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)

2. 

கஸ்தூர் பாவுக்கு ஆங்கில மருந்துகளை கொடுப்பதைத் தடை செய்து அவரது மரணத்துக்கே காரணமானார், என்று ஒரு குற்றச்சாட்டு காந்தி மீது உண்டு. ஆனால் அது உண்மையல்ல என்றே குஹாவின் நூலிலிருந்து தெரிகிறது. 

பா வின் சிகிச்சைக்காக,அன்றைய காலகட்டத்தில் புதிதாக வந்திருந்த Wonder Drug ஆன Penicillin ஐத் தருவிப்பதற்கு காந்தி இசைந்தே இருக்கிறார்.(அதற்கு முன்னரே கூட மருத்துவர் சுசீலா நய்யாரின் பரிந்துரைகளின் படி சில அல்லோபதி மருந்துகள் பாவுக்கு தரப்பட்டிருக்கின்றன.காந்தி அதையும் தடை செய்யவில்லை) பெனிசிலின் அன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய ஒன்று.பெரும் முயற்சிக்குப் பின் அவை சரியாக 1944, பிப்ரவரி 22ம் தேதி மாலை ஐந்து மணிக்கு புனேவில் காந்தி, பா ஆகியோர் சிறை வைக்கப்பட்டிருந்த ஆகா கான் மாளிகைக்கு வந்து சேர்கின்றன. 

ஆனால் அதற்குள் பா வின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டிருக்கிறது.இவர்களின் புதல்வரும் ராஜாஜியின் மருமகனுமான தேவதாஸ் காந்தியும் அங்கே உடனிருக்கிறார்.அவர் பாவுக்கு பெனிஸிலின் ஊசிகள் போடலாம் என்கிறார்.. காந்திக்கு அதில் விருப்பமில்லை என்பது உண்மைதான்.ஆனால், தேவதாஸ் வலியுறுத்தினால் போட்டுவிடலாம் என்றே சொல்கிறார். பெனிசிலின் ஊசி போடப்பட்டாலும் பா வை அது பிழைக்க வைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையே இருந்திருக்கிறது.

இதற்கும் முன்னரே, பா தனக்கு எந்த மருந்துகளும் வேண்டாம் என்றும், கங்கா தீர்த்தம் மட்டுமே போதும் என்றும் சொல்லி மருந்துகளை உட்கொள்ளாமல், கங்கா தீர்த்தத்தை மட்டுமே அருந்த தொடங்கி விடுகிறார். தேவதாஸிடம் என்றோ ஒரு நாள் போகத்தான் போகிறேன். அது இன்றாகவே இருக்கட்டுமே என்றும் சொல்லியிருக்கிறார். 

பின், காந்தி பெனிசிலின் ஊசிகள் பா வைக் காப்பாற்றுமா என்று தங்கள் குடும்ப மருத்துவர் சுசீலா நய்யாரைக் கேட்கிறார்.அவர் உறுதியாக காப்பாற்றும் என்று தன்னால்,சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார்.ஏனெனில் பாவின் உடல் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.அந்த நிலையில் 4-6 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த ஊசிகளைப் போடுவதும்,அந்த 72 வயதுக்கும் மேற்பட்ட நோயாளியை மிகவும் சிரமப்படுத்துவதே என்பதையும் சுசீலா நய்யார்,உணர்ந்தே இருக்கிறார். எனவே பெனிசிலின் ஊசிகள் வேண்டாம் என்றே அவரால்,முடிவெடுக்கப்படுகிறது.

அவை வந்து சேர்ந்த சில மணித் துளிகளேலேயே பா காந்தியை தனது அருகில் அழைக்கிறார். காந்தி தனது தோள்களில் அவரை ஆறுதலாக சாய்த்துக் கொள்கிறார்.சில நிமிடங்களிலேயே பா வின் உயிர் பிரிந்து விடுகிறது. 

இதுவே பாவின் மரணத்தின் போது நடந்தது..ஆதாரபூர்வமானத் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் ராம் குஹாவின் நூலில் இருப்பது இதுவே.

3.

காந்தி, கஸ்தூர்பா காந்தியின் உதவியாளர் மகாதேவ தேசாய் அவரது குடும்பம் ஆகியோர் ஒரிஸ்ஸாவின் பூரி நகரின் அருகில் தங்கியுள்ளனர்.பூரி ஜகந்நாதர் ஆலயம் அப்போது ஹரிஜனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதால் காந்தியும் அதனுள்ளே போவதில்லை. ஒருநாள் கஸ்தூர்பாவும், மகாதேவ தேசாயின் மனைவி துர்காவும் அவர்களது மகன் நாராயண் தேசாயும் பூரி ஆலயம் இருக்குமிடத்துக்கு பக்கம் செல்கின்றனர். பரம பக்த வைஷ்ணவர்களான அந்தப் பெண்கள் இருவருக்கும் உள்ளே போக வேண்டுமென்று ஆசை.ஆனால், 7 வயது சிறுவனான நாராயண் தேசாய் அங்கே போவது பாபுஜிக்குப் பிடிக்காது அதைச் செய்ய வேண்டாம் என்கிறான்.ஆனால் இவர்களால் உள்ளே போவதை தவிர்க்க முடிவதில்லை. நாராயண் வெளியிலேயே நின்று விடுகிறான்.

பிறகு இவர்களது இருப்பிடம் சென்றதும் இந்த விஷயத்தை காந்தியிடமும் சொல்லி விடுகிறான் சிறுவன் நாராயண்.. காந்தி மிகவும் வருத்தமுறுகிறார். வருத்தம் என்பதை விட கொதிப்படைந்து விடுகிறார் என்பதே பொருத்தமானது. 50 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்தும் பா இப்படியொரு காரியத்தை செய்துவிட்டாரே என்று எண்ணி கொதிப்படைந்து விடுகிறார். அவரது ரத்த அழுத்தம் அதிககரித்து விடுகிறது. மகாதேவ தேசாயை அழைத்து இவர்கள் அந்தப்பக்கம் போகிறார்கள் என்று தெரிந்தும் நீ ஏன் கோவிலுக்குள் போகக் கூடாது,என்றும், அப்படி போவது அதர்மம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவில்லை என்று முன்னெப்போதுமில்லாத வகையில் கடுமையாகக் கண்டித்து விடுகிறார். அந்தப் பெண்களின் இந்தத் தவறான செய்கைக்கு மகாதேவ தேசாயு ம் தானும் தான் காரணம் என்றும் பேசி விடுகிறார்.வழக்கம் போல இந்தத் தவறினை சரி செய்ய உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்கிறார்.

தேசாயின் நிலை மிகவும் சங்கடத்துக்குள்ளாகிவிடுகிறது. காந்தியின் நிலைப்பாடு கஸ்தூர்பாவுக்கு தெரியாதது அல்ல.இவரது மனைவிக்கும் அது நன்றாகத் தெறியும். மேலும் சிறுவன் நாராயண் தேசாய் அதைச் சொல்லி எச்சரிக்கவும் செய்து விட்டு தானும் கோவிலுக்குள் போகாமல் வெளியே நின்று இருக்கிறான். இத்தனைக்கும் பின் காந்தி இந்த பிழை தன்னுடையது, என்று நினைப்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

காந்திக்கு பதிலாக இவர் அந்த உண்ணா நோன்பை மேற்கொள்கிறார். காந்தியின் உதவியாளர் பணியிலிருந்து விலகி விடுவதாகவும் சொல்கிறார்.காந்தி தவறான சிந்தனைக்கும், சிந்தனையற்ற செயலுக்கும் உபவாசம் இருப்பது பரிகாரம் ஆகாது என்று சொல்லிவிடுகிறார்,கூடவே தன்னிடமிருந்து விலகுவது என்பதும் நடக்காத விஷயம் என்று விடுகிறார்.

இந்தச் சம்பவத்தை மகாதேவ தேசாய் ‘ஹரிஜன்’ இதழில் எழுதி வெளியிடுகிறார். ஆனால் இங்கே குஹா ஹரிஜன் இதழில் வந்த தேசாயின் எழுத்துக்கும் அவரது கையெழுத்துப் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடுகிறார்.கையெழுத்துப் பிரதி சபர்மதி ஆசிரமத்தில் கிடைத்திருக்கிறது. அதை காந்தி தணிக்கை செய்து சில இடங்களை ,சொற்களை மாற்றிய பிறகே ஹரிஜன் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முக்கியமான மாற்றங்கள்

தேசாய், கோவிலின் அர்ச்சகர்களை, “Pot Bellied Pandas ” என்றே குறிப்பிட்டிருக்கிறார். காந்தி அதை,’Unscrupulous ‘ என்று மாற்றியிருக்கிறார்.அந்தக் கட்டுரைக்கு தேசாய் தந்த தலைப்பு ‘A Blunder -and an Expiation’,காந்தி அதை A Tragedy என்று மாற்றிவிடுகிறார்.

அந்தக் கட்டுரையில் தேசாய்,கஸ்தூர் பாவும், தனது மனைவியும் ஹரிஜனங்கள் மேல் மிகுந்த பற்று கொண்டவர்கள், எந்த வித்தியாசத்தையும் காண்பிக்காதவர்கள், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் தான் என்றும், கஸ்தூர்பா பெண்ணினத்தின் தூய்மையான பிரதிநிதி அவரும் தனது மனைவியும் ஹரிஜன சேவையில் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர்கள் தான் என்றாலும், காந்தியைப் போல, ஹரிஜனங்கள் உள்ளே நுழைய முடியாத கோவிலுக்குள் செல்வதே அதர்மம் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை, அதனாலேயே கோவிலுக்கு சென்று விட்டனர். அவர்களின் பரிசுத்தமான ஹரிஜன சேவையை பாராமல்,இந்த ஒரு சிறு பிழையை காந்தி இவ்வளவு பெரிதாக்கியிருக்க வேண்டியதில்லை என்றும் எழுதுகிறார். 

இந்தக் கட்டுரையிலேயே காந்தியுடன் இருப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்று. ஒரு கவிதையின் மூலமும் காட்டுகிறார்.. 

To live with the saints in heaven
is a bliss and a glory
But to live with a saint on earth
Its a different story.

நம்முன் எழும் கேள்வி காந்தியைப் போல, தாம் கொண்ட கொள்கைக்கு தம்மை சார்ந்தவர்களையும் மாற்றி அதனிருந்து அவர்கள் வழுவினாலும் அதைத் தனது தவறாக நினைத்து வருந்திச் செயல்படுவது சரியா,அல்லது தற்கால அரசியல் தலைவர்கள் போல வெளியே மத நம்பிக்கைகளையும் சாஸ்திர சடங்குகளையும் இழித்துப் பேசி ஊருக்குப் பகுத்தறிவு உபதேசம் செய்து விட்டு, அந்தக் காரியங்களையே தம் குடும்பத்தார் செய்யும் போது அது அவர்களின் ஜனநாயக உரிமை என்று போலியாக பேசுவது சரியா?

‘Be the change you want to see in the World’ என்பது தானே எப்போதும் சரியானது.

(இந்த நிகழ்ச்சியில் வரும் சிறுவன் நாராயண் தேசாய் நம் காலத்தின் முக்கியமான காந்தியராக விளங்கியவர் 2015ல் தமது 89வது வயதில் காலமானார்)

4. 

ராஜாஜியின் இளைய மகள் லட்சுமிக்கும் காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்திக்குமிடையேயான திருமணம் காதல் திருமணம்.இவர்கள் காதலை தங்கள் பெற்றோருக்கு சொன்ன பிறகு காந்தியின் யோசனைப்படி, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. .அந்த 5 ஆண்டுகளில் இவர்கள் ஒருவொருக்கொருவர் பார்க்கவும் பேசவும் எழுதவும் கூடாது என்ற நிபந்தனை. அப்படியொரு கடுமையான நிபந்தனையை நிறைவேற்றிய பிறகுதான் அவர்களின் திருமணம், 1933ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி நடக்கிறது.

எளிமையான அந்தத் திருமணத்துக்குப் பின் காந்தி தேவதாஸிடம், இன்று நீ ராஜாஜியிடமிருந்து ஒரு அருமணியை பறித்துக் (Robbed என்பது அவரது வார்த்தை) கொண்டுவிட்டாய்.அந்த அருமணிக்கு தகுதியானவனாக நீ உன்னை ஆக்கிக் கொள்.அதைப் போற்றி பாதுகாத்து வைத்துக்கொள்’ என்கிறார். இந்தத் திருமணம் தனக்கும் ராஜாஜிக்கும் ஏற்கனவே இருக்கும் பாசப்பிணைப்பை மேலும் வலுவானதாக ஆக்கும் என்று நம்புகிறேன் என்றும் சொல்கிறார். இது ஒரு கலப்புத்திருமணம் என்று பேசப்பட்டாலும், இந்தத் திருமணத்தால் தர்மத்துக்கு விரோதமாக எதுவும் நடந்து விடவில்லை என்று தான் நம்புவதாகவும் காந்தி சொல்கிறார்.

ஆனால் இதன் பின் பூனாவின் துளசிபாக் கோவிலில் நடந்த ஒரு சனாதனிகளின் கூட்டத்தில், இந்தத் திருமணம் எதிர்மறையாகவும் சனாதன தர்மத்தை அழிக்கும் நோக்கத்துடனும் நடந்தத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.அந்தச் சனாதனிகள் காந்தியை ஒரு இந்துவைப் போல நடிக்கும் கிறித்துவர் என்றே குற்றம் சாட்டி அவர் மகாத்மா அல்ல துராத்மா என்கின்றனர்.

காந்தி இந்தக். குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலே சொல்லாமல்,ஆவற்றைச் அவற்றைச் சட்டை கூட செய்யாமல்,கடந்து செல்கின்றார்.ராஜாஜி இந்தத் திருமணத்தைப் பற்றியோ அது குறித்து,பலரும் தெரிவித்த கருத்துக்கள் பற்றியோ என்ன நினைத்தார்,பேசினார் என்பதும் எங்கும் அறியக் கிடைக்கவில்லை.திருமணத்தை முழு மனதுடன் ஆதரித்தார் என்பது மட்டுமே தெரிய வருகிறது.அதே போல தேவதாசின் மீது மிகப் பெரிய பிரியம் வைத்திருந்தார். 1957ல் அவர் இறந்ததும், பெரிதும் மனமுடைந்து போனார் என்பதும் மட்டுமே தெரிய வருகிறது.

இந்த ஆண்டு பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் ராஜாஜி,மற்றும் அவரது மகள் சம்பந்தப்பட்டு ஒரு புதுப் பொய்த் தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.அது இதுதான்.

//மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வ்யதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம்.எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். அதன் பின் காந்தியிடம் பெரியார் இந்த தகவலை சொல்லி, மறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். காந்தியும் ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தனது பையன் தேவதாஸ் காந்திக்கு (ஹிந்தி பிரச்சார சபையை நிறுவியவர்) ராஜாஜி யின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். அப்போது ராஜாஜி மகளுக்கு வயது 15. தேவதாஸ் வயது 28.5 ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் பெரியார் திருமணம் செய்து வைக்கிறார்.இவர்களுக்கு பிறந்தவர் தான் கோபால கிருஷ்ண காந்தி. (குடியரசு தலைவர் தேர்தலில் எங்களால் நிறுத்தப்பட்டவர்)இப்படி சனாதனிகளுக்கு கூட பெரியார் தேவை படுகிறார்.இன்று பிராமணர் சமுதாயத்தில் சனாதன தர்மத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அதிக அளவில் மறுமணம் நடக்கிறதே அதற்குக் காரணம் இதே பெரியார் தான்.//

உண்மை என்ன? ராஜாஜிக்கு 3 மகன்கள் 2 மகள்கள். வரிசைப்படி 

1.கிருஷ்ணசுவாமி 

2.ராமசுவாமி

3.நாமகிரி 

4.நரசிம்மன்

5.லட்சுமி.

இவர்களில் மூன்றாவதாக சொல்லப்பட்ட நாமகிரி எனும் மகளுக்கு 1921ம் ஆண்டு, அவரது 15வது வயதில் திருமணம் செய்யப்பட்டிருக்கிறது. கணவர் பெயர் வரதாச்சாரி. வரதாச்சாரி, அநேகமாக 1932ல் இறந்து விடுகிறார். அதன் பின் நாமகிரி மறுமணம் செய்து கொள்வதில்லை. ஏன் எதனால் என்ற விபரங்கள் ஏதும் தெரியவில்லை. அது அவரது சொந்த விருப்பமாக இருக்கலாம்.ராஜாஜியுடனேயே அவர் வாழ்ந்து வந்திருக்கிறார்.

காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர், ராஜாஜியின் கடைசி மகள் லக்ஷ்மி.அவருக்கும் தேவதாசுக்கும் இடையே தான் காதல் மலர்கிறது. அப்போது லக்ஷ்மிக்கு வயது 15. தேவதாஸ் காந்தியின் வயது 28.  இந்தக் காதலுக்கு ராஜாஜிக்கும் காந்திக்கும் சாதி ரீதியான எதிர்ப்புகள் ஏதும் கிடையாது. 

ஆனால்,லக்ஷ்மியின் வயதை முன்னிட்டும்,அது உறுதியான காதல் தானா என்பதை பரிசோதிக்கவும் அவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் பார்க்காமலும், கடிதங்கள் கூட பரிமாறிக் கொள்ளாமலும் ஒரு 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னும் தங்கள் காதலில் அவர்கள் உறுதியாக இருந்தால் அதன் பிறகே திருமணம் என்றும் காந்தி நிபந்தனை போட்டு விடுகிறார். ராஜாஜியும், லக்ஷ்மியும் தேவதாசும் ஒப்புக் கொள்கிறார்கள். அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு 1933ல் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. 

இவர்களின் பிள்ளைகள் தான், புகழ்பெற்ற மூன்று மகன்களான, ராஜ் மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி மற்றும் மகளான தாரா காந்தி பட்டாச்சார்யா ஆகியோர்.உண்மை இப்படியிருக்க ராஜாஜியின் 2 மகள்களையும் ஒன்றாக எண்ணி குழப்பிப் பெரியாருக்கு ஒரு பொய்யான பெருமையை சேர்க்க ஏதேதோ கதை கட்டி விடுகிறார்கள் அவரின் இன்றைய ஆதரவாளர்கள். இந்தப் பொய் வரலாறுகளையெல்லாம் தகர்த்தெறிய குஹாவின் இந்த நூல் மிகவும் உறுதுணையாக நிற்கும் 

வலதுசாரிகள் காந்தியை வெறுத்தனர் என்பதும், அவர்களில் ஒருவனே அவரை சுட்டுக்கொன்றான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், காந்தி அதே அளவு இடது சாரிகளாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்பதையும், இந்த நூல்,நக்ஸபாரி எழுச்சியின் முக்கியமான ஒரு தலைவரான கொண்டப்பள்ளி சீதாராமையா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியின மூலம் காட்டுகிறது.

1967ல் மேற்கு வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் ஒன்று தொடங்குகிறது.1969ல் காந்தியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் நக்சல்பாரிகள் பல இடஙகளில் காந்தியின் சிலைகளை உடைப்பதில் ஈடுபடுகின்றனர்.பல அரசு அலுவலகங்களில் புகுந்து அங்கேயுள்ள அவரது உருவப்படத்தைச் சேதப்படுத்துகின்றனர்.

அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த கைது செய்யப்பட்டு சிறையில்,அடைக்கப்பட்டிருந்த கொண்டப்பள்ளி சீதாராமையா உடல்நலக் குறைவு என்று சொல்லியதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.அங்கிருந்து தப்பியோடி சில காலம் தலைமறைவாக இருக்கிறார். பிறகு மீண்டும் பிடிபடுகிறார். இடைப்பட்ட அந்தக் காலத்தில் அவர் எங்கே போனார் என்னவெல்லாம் செய்தார் என்று பின்னர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கேட்கப்பட்டபோது அவர் தான் போர்பந்தர் சென்று அங்கே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருந்த காந்தியின் குடும்ப வீட்டின் அலங்கரிக்கப்பட்ட வாசல் மீது காறி உமிழ்ந்து விட்டு வந்தேன். அதற்காகவே ஹைதராபாத்தில் இருந்து போர்பந்தர் வரை சென்று வந்தேன் என்று கூறுகிறார்.இது நடந்தது 90 களின் துவக்கத்தில். காந்தி இறந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில்.

காந்திக்கும் அம்பேத்காருக்குமான உறவு மிகவும் சிக்கலானது. அம்பேத்கார் காந்தியை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தீண்டாமை ஒழிப்பில் காந்தி எடுத்த முயற்சிகளை அவர் கண்டு கொள்ளவேயில்லை. தீண்டத்தகாதோர் என்று கருதப்பட்டவர்களும் பிராமணர் உட்பட பிற உயர்சாதி இந்துக்களும் எந்தவித பேதமுமின்றி ஒன்றாகக் கலந்து பழகியிருந்த காந்திய ஆசிரமங்களில் ஒன்றைக் கூட அம்பேத்கார் சென்று பார்த்தவரல்லர். ஆனால், காந்தி அம்பேத்கார் மீது அவ்வளவு கடுமையை காட்டவில்லை. அவரை மென்மையாகவே அணுகியிருக்கிறார். மறுக்க வேண்டிய இடங்களில் கறாராகவே மறுத்திருக்கிறார் என்பதும் உண்மை. இந்தியச் சுதந்திரம் வரை காந்தியையும் காங்கிரசையும் மிகக் கடுமையாக எதிர்த்துவந்த அம்பேத்கார், சுதந்திர இந்தியாவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் ஆனதும், இந்திய அரசியல் சாசன நிர்ணயக் குழுவின் தலைவராக ஆனதும், சுவாரஸ்யமான நிகழ்வுகள்.

இதில் காந்தியின் பங்கென்ன என்பது விவாதத்துக்குரியது. காந்தியே நேருவிடம் சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு காங்கிரசுக்கு மட்டுமல்ல அதனால்,அமைச்சரவையில் அம்பேத்கார் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்திச்சொல்லி அவரை இடம்பெறச் செய்தார் என்ற செய்திகள் எல்லாம் உண்டு. ஆனால் நடந்த உண்மையை இந்த நூலில் அறியலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் அம்பேத்கார் அரசியல் ரீதியாக மிகவும் தனிமைப்பட்டுப் போயிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் போர்க்கால (இந்திய) அமைச்சரவையில் ஒரு அங்கத்தினராக அவர் இருந்திருக்கிறார். ஆனால் போர் முடிந்து இந்தியாவும் சுதந்திரம் பெற்றதும் அவர் அதுகாறும் அனுபவித்திருந்த முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. அவர் இதுவரை முற்றிலும் எதிர்த்து வந்த காங்கிரஸோ ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. அவரை அது பொருட்படுத்தவும் இல்லை. இந்த நிலையில் காங்கிரசுடன் சமாதானமாகப் போக அம்பேத்கார் விழைகிறார்.

ஆனால் காங்கிரஸோ காந்தியோ அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்பதே உண்மை. உண்மையில் காந்தி அம்பேத்காரின் இந்த நகர்வு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டாமலேயே தான் இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் குறித்த ஒரு கசப்பு காந்தியிடம் உருவாகியிருக்கிறது என்றே கூடச் சொல்லலாம். 

இந்த நிலையில் அம்பேத்கார் காங்கிரசுடன் இணக்கமாக வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதை சாத்தியப்படுத்தியவர் பஞ்சாப் ராஜகுமாரி அம்ரித் கவுர் தான். இவர்தான் இந்தியாவின் முதல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். இவரது முயற்சிகளை அம்பேத்கார் ஏற்றுக் கொண்டதற்கு இவர் ஒரு கிறித்தவராக இருந்ததும், சாதி இந்துத் தலைவர்கள் மீது இயல்பாகவே அவருக்கிருந்த சந்தேகமும் ராஜகுமாரி, அம்ரித் கவுர் மீது இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் குஹா. 

அம்ரித் கௌரின் முயற்சிதான் காந்தி நேரு ஆகியோரின் மனதை மாற்றி அம்பேத்காரை ஏற்றுக்கொள்ள வழி வகுக்கிறது, என்று தெளிவாகக் காட்டுகிறது இந்நூல். இதில் காங்கிரசின் தலித் தலைவரான ஜெகஜீவன் ராம் அவர்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் குஹா.

காங்கிரஸ் அமைச்சரவையில் சேர்வதற்கு ஒரு நிபந்தனையாக மீண்டும் தலித் மக்களுக்கான தனித் தொகுதிகளையும் இரட்டை வாக்குரிமையையும் முன் வைக்கிறார் அம்பேத்கார். ஆனால்,காந்தி அதை ஏற்பதில்லை. இரட்டை வாக்குரிமை என்பதை மறுத்து பொதுவான தொகுதிகளில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு மட்டுமே தர இயலும் என்பதில் காந்தி உறுதியாக இருக்கிறார். இறுதியில் அம்பேத்கார் வேறு வழியின்றி அதில் விட்டுக் கொடுக்கிறார். 

இதில் இன்னொரு சிக்கலும் எழுகிறது. அமைச்சர் ஆவதற்கு அம்பேத்கார் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் ஆக வேண்டும். ஆனால், அவரது உறுப்பினர் பதவி, கிழக்கு வங்கத்திலிருந்து வந்தது. அது பிரிவினையில் பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறது. அப்போதுதான் பட்டேல், பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.ஜி.கேர் அவர்களை வலியுறுத்தி ஒரு காங்கிரஸ் உறுப்பினரை பதவி விலகச் செய்து அந்த இடத்தில் அம்பேத்கரை தேர்ந்தெடுத்து உதவுகிறார்.அதன் பின்னரே இந்தியாவின் சட்ட அமைச்சர் ஆகிறார் அம்பேத்கார் என்னை மிகவும்,வியப்படையச் செய்த செய்தி இது.

இவற்றைப் போல பல, வியக்க வைக்கும், மன நெகிழ்ச்சி அடையச் செய்யும், பரவசத்தில், சோகத்தில் ஆழ்த்தும் பல நிகழ்வுகளை இந்த நூலில் இருந்து சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு நிகழ்த்சியைச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் திருப்பத்தூரில், காந்தியின் மரணத்துக்குப் பின் அவருக்கான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. அதை தலைமையேற்று நடத்தியவர் ஒரு கிறித்தவ ஆசிரமத்தின் தலைவரான ஒரு பாதிரியார். அந்த ஆசிரமமே காந்தியின் சேவாகிராமத்தை தனது முன் மாதிரியாகக் கொண்டது தான். அந்த நிகழ்ச்சியின் மிகச் சிறந்த உருக்கமான உரையை ஆற்றியவர், அந்த ஊரின் முஸ்லீம் லீக் கட்சியின் செயலாளர். அவர் தனது உரையில் இப்படிக் கூறியிருக்கிறார். ‘மகாத்மா காந்தி தான் இருபதாம் நூற்றாண்டின் இயேசு கிறிஸ்து. அவர் மரித்தது முஸ்லிம்களுக்காக’.

மொத்தத்தில்,காந்தியின் மகத்தான தியாக வாழ்க்கையையும்,1915லிருந்து 1948 வரை இந்தியாவில் நடந்த பல் வேறு வரலாற்று நிகழ்வுகள் குறித்த உண்மைகளையும், அறிந்து கொள்ள விரும்புவோர் தவறால் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இது. மிக முக்கியமாக இன்று பொது வெளியில் காந்தியின் மீது வீசப்படும் அத்தனை அவதூறுகளுக்குமான பதில்கள் இந்நூலில் இருக்கின்றன.

அந்த அவதூறுகளின் அபத்தங்களையெல்லாம் விலக்கி உண்மை வரலாற்றை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். நண்பர்கள் அனைவரும் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?”

  1. எனக்கு என்ன‌ ஆச்சர்யம் என்றால், சமுதாயத்திற்கு இப்படி உதாரண புருஷர்களாக விளங்குபவர்கள், தங்கள் மனைவிக்கு சாதாரண புருஷனாகக் கூட இருந்திடவில்லை என்பதுதான்! ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி முதற்கொண்டு, காந்திஜி, பாரதியார், எழுத்தாளர் சுஜாதா (சுஜாதா அவர்கள் மறைந்த பின், அவரது மனைவியின் பேட்டி என்று பதிப்பிக்கப்பட்டிருந்த ஒன்றைப் படித்தேன். அந்த பேட்டியில் கிட்டத்தட்ட இது போன்றுதான் சொல்லியிருந்தார், திருமதி. சுஜாதா!)

  2. இந்த நீண்ட கட்டுரை பல புது விஷயங்களைச் சொல்கிறது. காந்தியைப் பற்றிய உணமைகளையும் அவதூறுகளையும் முன்வைக்கிறது. காந்தியை ஏன் வெறுத்தார்கள் , ஏன் விரும்பினார்கள் என்ற இரு தரப்புத் தகவல்களையும் ஆதாரத்தோடு சொல்கிறது. காந்தியைப் பற்றி முஸ்லீம் லீக் கட்சியின் செயலாளர் ஒருவர் சொல்லும் செய்தி காந்தியை உயர்த்திப் பிடிக்கிறது. நல்ல கட்டுரை சுரேஷ்.

  3. நல்ல கட்டுரை. உண்மைகளை தரவுப்படுத்தும் புத்தகங்கள் அரிதாகிக் கொண்டுவரும் நிலையில், இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் உணரப்படும். நாட்டு விடுதலைக்கு போராடும் நிலையிலும், மதம் மற்றும் சாதி என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தியவர்கள், அத்தகைய தன்மையினால், விடுதலை பெற்றபிறகும் அதை முழுதாக அனுபவிக்க சுயத்தடையை ஏற்படுத்தி கொண்டுவிட்டவர்களாக பார்கக்வும் இடமிருக்கிறது. அதை பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது என்றாலும்.

    காந்தியின் நோக்கங்கள் நேர்மையானவை என்றாலும் அவர் தனது மதிப்பீடுகளை நம்பிக்கைகளை தன்னுடன் இருந்தவர்கள் மீது திணிக்கும் எண்ணமுடையவராக இருந்திருக்கிறார். (இதிலுள்ல நாரயணர் கோயில் சம்பவம் போல.). இந்த தன்மையை தேய்புரிப்பழங்கயிறு நாவலில் – காந்தியின் உண்மை வாழ்வை ஒட்டி எழுதப்பட்ட நாவல் – கலைச்செல்வி காட்டியிருப்பார். காந்தி ஒரு மனிதர்தான். தனி மனித விருப்பங்களும், பொது வாழ்வின் விழுமியங்களுக்கும் இடையில் காந்தி கொஞ்சம் நசுங்கித்தான் போயிருப்பார் என்று தோன்றுகிறது.

Leave a Reply to Ramachandran SundaresaiyerCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.