சரோஜாதேவி புத்தகம்

பரம்பொருள் அனாதை விடுதி

பெயர்ப்பலகையைப் பார்த்ததும் மகிழுந்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கினேன் நான். முட்டுச்சந்தின் மூலையில் ஒடுங்கி இருந்தது அந்த அனாதை விடுதி. மகிழுந்தைப் பூட்டிவிட்டு மெல்ல, இரும்புக் கதவு திறந்தேன். சோம்பல் கண்ட கதவின் உரத்த ‘கிறீச்’ முனகலில்  நான்கைந்து தலைகள் திரும்பிப் பார்த்தன. 

ஜன்னலினூடாக என்னைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தார் ஒருவர்.

“வாருங்கள்.. நான் தான் விஸ்வநாதன்” என்று சொல்லிக் கை குலுக்கினார். தக்கையாகக் குள்ளமாக இருந்தார்; பாதங்கள் தட்டையாக இருந்தன; அகலமான முகத்தில், கண்கள் உள்ளடங்கி இருந்தது; உடலெங்கும் கரடி போல் ரோமங்கள்.

என்னைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். நான், ……அது வந்து…. சரி, பெயரா முக்கியம்? நான் மனநல மருத்துவத்தில் நிபுணன். எந்த மருத்துவமனையிலும் என்னை இணைத்துக்கொள்ளாமல் தன்னிச்சையாக மனநல மருத்துவம் பார்க்கிறேன். மருத்துவமனைகளை ஏன் தவிர்க்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். மருத்துவமனைகளில் இப்போதெல்லாம் அரைவேக்காட்டு மருத்துவர்களைக் கடக்க நேர்கிறது; கண் முன்னே வைரத்தையே பார்த்தாலும், கல்லென்று கடந்து போய் விடுவார்கள். மருத்துவமே பணக்கிடங்காகிவிட்டது; நோய் அல்லது பக்கவிளைவுகள் தரும் மருந்தையெல்லாம் தான் இக்கால மருத்துவர்கள் பரிந்துரைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

மருந்தே வேறு பல நோய்களை வரவழைக்கும் என்பது தெரிந்தே தான் மருத்துவர்களும் மருந்துகளை எழுதித்தருகிறார்கள். என்ன செய்ய? அவர்களுக்கும் குடும்பம், வாழ்க்கை இருக்க வேண்டுமே?  முன்பெல்லாம் தகுதியானவர்கள் மருத்துவர்களானார்கள்; பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் மருத்துவர்களானால் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

“சரியாக நேரத்துக்கு வந்துவிட்டீர்கள்.. பயணம் …..” என்று அவர் இழுக்க,

“நாம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.. நீங்கள் தொலைபேசியில் ஒரு பையன் குறித்துச் சொன்னதிலிருந்து எனக்கு வேறெந்த வேலையிலுமே கவனம் செல்ல மறுக்கிறது..” என்றேன் நான்.

பேசிக்கொண்டே நாங்கள் ஒரு அறைக்குள் வந்தோம். அங்கே படுக்கையில் ஒரு பதின்ம வயதுப்பையன் உறங்கிக்கொண்டிருந்தான்; அது ஒரு எளிமையான அறை – ஒரு மாணவன் படிப்பதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுவற்றில் இருந்த சுவர்க்கடிகாரத்தின் நெற்றியில் சிகப்பாக ஒளிர்ந்ததை நான் குறித்துக்கொண்டேன்.

“இவன் தான் அந்தப் பையன்; பெயர் மன்சூர். 15 வயதுதான் ஆகிறது. ஆனால், சென்ற வாரம் இந்த விடுதிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்க ஒரு பெண்மணி வந்திருந்தார்; அவருக்கு வயது நாற்பது இருக்கலாம். இந்தப் பையன் அந்தப் பெண்மணியைப் பார்த்த பார்வை இருக்கிறதே?” என்றார் விஸ்வநாதன்.

நான் பையனை ஏறிட்டேன். வயதுக்கேற்ற உயரத்தில் இருந்தான். கேசம் கலைந்திருந்தது; ஆனால், வழுக்கைத் தலைக்காரர்களை பொறாமை கொள்ளச்செய்யும் அடர்த்தியான கேசம். 

“பார்த்ததற்கே என்னை அழைத்துவிட்டீர்களா?” என்றேன் நான் சற்று சலிப்புடன்.

“பார்த்ததற்கே யாரேனும் அழைப்பார்களா? இனிப்பு வழங்க வந்தப் பெண் சென்ற சில நிமிடங்களில் தான் அணிந்திருந்த கால்சட்டையைத் துவைக்கக் கொண்டு வந்தான். நாங்கள் அவனுக்குத் தெரியாமல் சோதித்ததில், ஸ்கலிதம் ஏற்பட்டிருந்தது. அதை வைத்துத்தான்” என்றார் விஸ்வநாதன்.

அவர் எதற்காக என்னை அழைத்தார் என்பதைப் புரிந்துகொள்ள அது போதுமானதாக இருந்தது. 

“உங்கள் கணிப்பு என்ன?” என்றேன் நான்.

“சில பையன்களுக்கு வயது முதிர்ந்த பெண்கள் மீது ஈர்ப்பு வரும்; காம உணர்வு வலுக்கும். அப்படியாக இருக்கலாம் இல்லையா? நானெல்லாம் பதின்ம வயதில் மத்திம வயதுப்பெண் ஒருத்தி மீது ஈர்ப்பு கொண்டு அலைந்திருக்கிறேன். உறவில் அவள் எனக்கு…… சரி..விடுங்கள்.. அந்தக் கதை இப்போது எதற்கு?” என்றார் அவர்.

நான் எனது மெளனத்தை சற்று நீட்டித்தேன்.

“நன்றாகப் படிக்கிற பையன் தான். 90 விழுக்காடு மதிப்பெண் வாங்குகிறவன். எங்கே பாதை மாறிச் சென்றுவிடுவானோ என்று….” என்று சொல்லி இழுத்தவர் அதோடு நிறுத்திக்கொண்டார்.

அப்போது ஒரு தட்டில் தேனீர் கோப்பையுடன் ஒரு செவிலிப்பெண் வந்தாள். பார்க்க சின்னத்திரை நடிகை போல் இருந்தாள். வயது நாற்பது இருக்கலாம். அவள் காதில் சென்று கிசுகிசுத்தேன்; அவள் என்னை கல்மிஷமாய்ப் பார்த்துவிட்டு ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள். பிறகு நானும் விஸ்வநாதனும், விஸ்வநாதனின் அறைக்கு வந்தோம்.

“அந்த அறையின் சுவர்க்கடிகாரத்தில் உள்ளது சலனப்படக்கருவி என்பது அந்தப் பையனுக்குத் தெரியுமா?” என்றேன் வரும் வழியில்.

“இல்லை..எல்லோரையும் கண்காணிக்க இந்த ஏற்பாடு.. ” என்றார் விஸ்வநாதன்.

நான் கண்களை லேசாகச் சுருக்க, 

“அறையில் மட்டும் தான் சலனப்படக்கருவி இருக்கும். குளியலறை, கழிப்பிடம் போன்ற இடங்களிலெல்லாம் வைப்பது இல்லை” என்றார் ஏதோ வலிந்து தன்னிலை விளக்கம் தர எண்ணியவராய்.

நான் கண்ணசைக்க, என் குறிப்புணர்ந்தவராய், விஸ்வநாதன் தனது மடிக்கணிணியைப் பயன்படுத்தி அந்த அறையில் என்ன நடக்கிறது என்பதை எனக்குக் காட்டினார். நான் பணித்தபடியே அந்தப் பெண் தன் ஆடைகளை அந்த சிறுவனின் பார்வைக்கு மட்டும் சற்று தளர்த்திவிட்டு அந்த அறைக்குள்ளாகவே கூட்டுவது, பெருக்குவது, பொருட்களை ஒழுங்கு செய்வது என்றிருந்தாள். அந்தப் பையனோ சத்தம் கேட்டு எழுந்தவன், தொடர்ந்து உறக்கம் வராமல் அவன் போக்கில், தன் பாடப்புத்தகங்களை எடுத்துப் படிக்கலானான். அந்த நாளின் எஞ்சிய நேரத்தில் ஒரு முறை கூட அவன் அந்தச் செவிலிப்பெண்ணைப் பார்த்ததாகக் காட்சிகள் இல்லை.

அப்போது ஒரு சிறுவன் கையில் ஒரு பந்துடன் எங்கள் அறைக்குள் வர, 

“பேராண்டி, தாத்தா வேலையாக இருக்கிறேன். பிறகு விளையாடலாம்” என்று விஸ்வநாதன் சொல்ல, அந்தச் சிறுவன் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு பந்துடன் வெளியே ஓடினான். அந்த சிறுவனின் பாதங்களும் தட்டையாக இருந்தன. உடலெங்கும் ரோமம் இருப்பதை நான் வித்தியாசமாய்ப் பார்க்க, 

“என்னைப் போலவே இருக்கிறான் அல்லவா?” என்றார் விஸ்வநாதன். குரலில் ஓரு பெருமிதம், உள்ளடங்கிய கண்களில் ஒரு மலர்ச்சி. 

“மாமா, உங்கள் பேரனை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். சதா விடுதியே கதி என்று கிடக்கிறான்.. பெற்ற மகனை பொறியியல் வல்லுனர் ஆக்குவேனா? அனாதை விடுதி காப்பாளன் ஆக்குவேனா?” என்று சலித்தவாறு பின்னாலேயே ஒரு பெண் வந்தாள். 

“அவன், அவனது தாத்தாவைப்போல். அதனால், அவனும் பொறியியல் வல்லுனர் ஆகி, பணி ஓய்வு பெற்ற பிறகு தான் விடுதிக்கு வருவான். தாத்தாவின் விடுதியை தலைமுறைகளுக்கு விஸ்தரிப்பான்.” என்று விஸ்வநாதன் கொஞ்ச சிரித்துக்கொண்டே தலையாட்டிபடி அந்தப் பேரன் அறையை விட்டு வெளியேற, 

“மீண்டும் எங்கே ஓடுகிறாயடா?” என்று கூவியபடி பின்னாலேயே அவனது தாயும் வெளியேறினாள்.

பிறகு, எங்கள் பேச்சுக்குத் திரும்பியவராய், 

“ஃப்ராய்டின் புத்தகங்களைச் சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இவனோ அனாதைச் சிறுவன். வயது முதிர்ந்த பெண்ணில் தன் அன்னையைக் காண்கிறானோ என்னவோ? ஃப்ராய்டு என்ன சொல்லியிருக்கிறாரென்றால், ஆண் பிள்ளைகள் தன் தாயிடமும், பெண் குழந்தைகள் தன் தந்தையிடமும்……” என்று சொல்லிவிட்டு சற்று இடைவேளை விட்டு, ஒருவேளை அப்படி ஏதேனும் இருக்கலாமா?” என்றார் விஸ்வநாதன்.

பின்னர் அசடு வழிந்தபடி,

“இதையெல்லாம் ஒரு பிரச்சனை என்று நான் உங்களை அழைத்திருக்கவே கூடாதோ என்று கூட இப்போது தோன்றி வெட்கமாக இருக்கிறது. தொலைக்காட்சிகளில் பின்னிரவுகளில் வரும் பலான மருத்துவருடனான கேள்வி பதில் நிகழ்ச்சி போல.. ” என்று அசடு வழிந்தார் அவர் தொடர்ந்து.

“இனிப்பு தர வந்த பெண்மணி யார்?” என்றேன்.

“அவரா? அவர் ஒரு தொழிலதிபரின் மனைவி. வாசனை திரவியம் தான் தொழில். தொழிலதிபர் இறந்துபோனாதைத் தொடர்ந்து இவர் தான் தொழில்களை ஏற்று நடத்துகிறார். திறமையானவர்தான். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர். பெயர் மல்லிகா” என்றார்.

பார்க்கப்போனால், இது ஒரு எளிமையான வழக்காக இருக்கலாம். பதின்ம வயதில், வயது முதிர்ந்தவர்களுடன் காம உணர்வு கொள்வது அப்படி ஒன்றும் புதிதல்லவே?  இதில் யோசிக்கவோ, பீராயவோ என்ன இருக்கிறது என்று எவரையும் நினைக்கச் செய்யலாம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. எங்கோ உதைப்பதைப் போல் உணர்ந்தேன்.

“நான் சில விடயங்களைச் சரிபார்க்க வேண்டும். எனக்கு இந்தச் சிறுவனின் மரபணுத்தகவல்கள் தேவைப்படும்” என்றேன்.

‘எமரால்டு நவீன மருத்துவமனை’ என்ற மருத்துவமனையின் முகவரி அட்டையை நீட்டி, 

“விடுதியில் உள்ள எல்லாருடைய மருத்துவத் தகவல்களும் இந்த மருத்துவமனையில் கையாளப்படுகின்றன” என்றார் விஸ்வநாதன்.

“மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொல்லி விடை பெற்றுவிட்டு விடுதியை விட்டு வெளியேறினேன்.

அந்தப் பெண்மணி குறித்துத் தகவல் சேகரித்தேன்.

அந்தப் பெண்மணியின் கணவர் பெயர் தஸ்தூர்; நகரத்தின் மிகப்பெரிய பிரசித்தி பெற்ற வாசனை திரவியம் ஒன்றின் உற்பத்தியாளர், விற்பனையாளர், மற்றும் விநியோகஸ்தர். சுருங்கச் சொன்னால் செல்வந்தர். 20 வருட மண வாழ்வில் ஒரே ஒரு பெண் குழந்தை; சுமார் ஒரு வருடத்துக்கு முன் தான் இறந்திருந்தார்.

நான் அவரது மனைவியான மல்லிகா என்ற அந்தப் பெண்மணியை அவரது இல்லத்தில் அவரது பதின்ம வயது மகளுடன் சந்தித்த போது, அந்த வழக்கைத்தொடர்ந்து செல்ல அடுத்தடுத்த அடிகள் எனக்குக் கிடைத்தன.. 

ஐந்தரை அடி உயரத்தில், கோதுமை நிறத்தில், பொலிவான முகத்தில் கன்னக்குழியுடன் அழகாகவே இருந்தார் அவர்; அவரது உடல்வாகில் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத ஏதோ ஒரு நேர்த்தி ஈர்த்தது; செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆஜானுபாகுவான உடற்கூட்டின் மேல், கண்கள், செவிகள், இதழ்கள், கன்னம், கழுத்து, தோள்கள், மார்புகள், இடை என்று அடுக்கி வைத்ததைப் போலொரு உடல்;  அந்த நேர்த்தி அவர் குறித்து யாரையும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாக எவருக்கும் அமைவதாக இருந்ததை நான் குறித்துக்கொண்டேன்; அவரது மகளும் கிட்டத்தட்ட அவரையே உரித்து வைத்தது போலிருந்தாள்.  அந்த மாபெரும் மாளிகை போன்ற வீட்டுக்குள் மல்லிகாவின் வயதில் இன்னுமொரு ஆணையும்  நான் பார்க்க நேர்ந்தது; மல்லிகாவுடன் அவன் இருந்த நெருக்கத்தை வைத்து, மல்லிகா புதிதாகத்தனக்கொரு துணையைத் தேடிக்கொண்டு விட்டாள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

“நீங்கள் அடிக்கடி அந்த விடுதிக்குச் சென்று இனிப்பு வழங்குவீர்களா?” என்றேன் அவரிடம்.

“இல்லை. அது தான் முதல் முறை” என்றார் அவர்.

“உங்களுக்கு ஏன் அந்த விடுதிக்குச் சென்று இனிப்பு வழங்கவேண்டுமென்று தோன்றியது?” என்றேன்.

“எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம்; பெண் குழந்தைகள் எத்தனை பிடித்தமோ அத்தனைக்கு ஆண் குழந்தைகளும் பிடித்தம். என் கணவர் மூலமாக ஒரு ஆண் பிள்ளைக்கு தாயாக நினைத்திருந்தேன். அவரின் திடீர் மறைவு எனக்குள் சோகத்தை ஆழ்த்தியது. என் கணவர் உடல் வலு மிக்கவர். ஆணழகன் போட்டிகளிலெல்லாம் பங்குபெற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். உயிருடன் இருந்த போதில் அவர் தன் உயிர்ச்சத்தை பல்வேறு உயிர்ச்சத்து சேகரிப்பு மையங்களுக்கு தானமாக அளித்திருக்கிறார்.   அவரது உயிர்ச்சத்தின் மூலம் நானறியாமல் அவர் பல பிள்ளைகளுக்கு தந்தை ஆகியிருக்கலாம் தானே? துரதிருஷ்டவசமாக அந்தப் பிள்ளைகள் யாரென எனக்குத் தெரியவில்லை; உயிர்ச்சத்து சேகரிப்பு மையம் அதைத் தெரிவிக்க மறுக்கிறது. இது போன்ற விடுதிகளில் இனிப்பு வழங்குவதன் மூலம் என் கணவரின் பிள்ளைகளுக்கு உணவளித்து விட்ட திருப்தியைப் பெறவே விடுதிக்குச் சென்று இனிப்பு வழங்கத் திட்டமிட்டேன். அந்த அனாதை விடுதி தான் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. அதனால் இனி தொடர்ந்து அந்த விடுதிக்கே நாள் கிழமைக்கு இனிப்பு வழங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்றாள் மல்லிகா.

நான் அவளிடம் வந்தனம் சொல்லி விடைபெற்றுக்கொண்டே நேராக அந்த உயிர்ச்சத்து சேகரிப்பு மையத்தை அடைந்து, மல்லிகாவின் கணவர் தஸ்தூரின் மரபணுத் தகவல்களைச் சேகரித்தேன்; மருத்துவர் என்ற முறையில் அந்தத் தகவலைக் கேட்டுப்பெற எனக்கு உரிமை இருந்தது. பிறகு ‘எமரால்டு நவீன மருத்துவமனை’யை அணுகி அந்தச் சிறுவனின் மரபணுத்தகவல்களுடன் தஸ்தூரின் மரபணுத்தகவல்களைச் சரிபார்க்கப் பணித்தேன். 

ஒப்பீட்டு முடிவுகள் கிடைக்க இரண்டு நாளாகும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் மனதில் தோன்றியதை சரிபார்க்கவும், இந்த இரண்டு நாளை கடத்தவும் ஒரு மார்க்கம் தோன்றியது. 

எனக்குத்தெரிந்த மருத்துவ நண்பர்களை அன்று மாலை என் வீட்டிற்கு வரவழைத்து விவாதிக்க முடிவு செய்தேன். அன்று மாலை விவாதத்தில்,

“அந்த விடுதி காப்பாளர் சொன்னது போல் ஃப்ராய்டு இதைப்பற்றியெல்லாம் எப்போதோ பீராய்ந்துவிட்டார். இதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது?” என்றார் ஒரு மருத்துவர்.

“இதுவெல்லாம் நம்மில் எல்லோருக்கும் நடப்பதுதான். எல்லோருமே அந்த இடத்தைக் கடந்து தானே வந்திருக்க வேண்டும். இதெல்லாம் விடலைப் பருவத்துக்கே சொந்தமானவைகள்.  நம்மில் வகுப்பு ஆசிரியையை பால்ய வயதில் விரும்பிடாதவர்கள் இருப்பார்களா? உறவில் வயது மூத்த பெண் மேல் காமுறாதவர்கள் இருப்பார்களா? இதையெல்லாம் பீராய்வதே வீண்” என்று சலித்தார் இன்னொருவர்.

“அதை பீராய்வதும், அந்தக் காலத்து சரோஜாதேவி புத்தகத்தை வரி விடாமல் தனி அறையில் வாசிப்பதும் ஒன்றுதான்” என்று சொல்லிச் சிரித்தார் வேறொருவர்.

நான் எனக்குத் தோன்றியதை அவர்களிடம் பகிரவில்லை. காரணம் நடப்பது அதுதானா என்பதை நானே ஊர்ஜிதம் செய்ய வேண்டி இருந்தது. அதற்கு அந்த ஒப்பீட்டு முடிவுகள் தேவைப்பட்டன. ஒப்பீட்டு முடிவுகள் கிடைக்கும் வரை பொறுத்திருப்பது என்று முடிவு செய்தேன். அந்த நாளும் வந்தது.

ஆம். 

நான் நினைத்தது சரியாக இருந்தது. அன்றே நான் அனாதை விடுதிக்குச் சென்றேன்; விஸ்வநாதனை சந்தித்தேன். நான் கண்டுகொண்டதைப் பகிர்ந்துகொண்டேன்.

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” என்று அதிர்ந்தார் அவர். சட்டென அவர் முகத்தில் அத்தனை பீதி. தன் எதிரில் மேஜை மேலிருந்த கோப்பை நீரை ஒரே மடக்கில் காலி செய்தார்; அவர் பதட்டம் தனிந்து நிதானிக்கும் வரை பொறுத்திருந்தேன்.

“நீங்கள் சொல்வது உண்மைதானா?” என்றார் நம்பமாட்டாமல்.

“நடந்திருப்பதை எல்லாம் தொகுத்து எந்த உண்மைக்குப் பொருத்தமாக இருக்கிறதென்று பார்த்தால், அது இந்த ஒரு குறிப்பிட்ட உண்மையாகத்தான் இருக்கிறது” என்றேன் நான்.

“இதென்ன கூடு விட்டுக் கூடு பாய்தலா? ஆள் மாறாட்டமா? திடீரென்று ஐம்பது வயதில் மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்ட தஸ்தூர் தான் 15 வயது மன்சூர் என்றால் எப்படி நம்புவது?”  என்றார் அதிர்ச்சி விலகாமல்.

“ஒருவரை மற்றோருவரிடமிருந்து வேறுபடுத்த இருக்கும் பிரம்மாஸ்திரம் என்ன?” என்றேன்.

“மரபணுக்கள் தான்” என்றார் அவர்.

“எனக்கும் உங்களுக்கும் ஒரே மரபணு தான் எனில் நான் தான் நீங்கள். நீங்கள் தான் நான். இல்லையா?”

“ஆமாம்… ஆனால் அதெப்படி சாத்தியம்?”

“உங்கள் பேரனை உங்களுக்குப் பிடிக்குமா?”

“பிடிக்காமலா? என் போலவே அதிகம் இருப்பது அவன் தான்; என் சருமம், கால்கள், சருமத்தில் ரோமத்தின் அடர்த்தி என என் பல அம்சங்களில் அவன் என்னைப்போலவே தான் இருக்கிறான்” 

“ஓருக்கால், இந்த ஒற்றுமைகளோடு, உங்கள் கண்கள், செவிகள், உடல், உடலியக்கம், மூளை இயக்கம் என எல்லா அம்சங்களிலும் அவன் உங்களை ஒத்திருந்தால்?”

விஸ்வநாதன் சற்று யோசித்துவிட்டு,

“நிச்சயம் அவன் தான் நான், நான் தான் அவன் என்று கணிக்கிறேன்” என்றார் விஸ்வநாதன்.

“காட்டில் ஒரு பெண் மான் தன் குட்டியை ஈன்றுகிறது; குட்டி மான் தந்தை மானுடன் உணவு தேடிச்செல்கையில் ஒரு புலியால் கொல்லப்பட்டு இறக்கிறது; இதனால் அனாதையாகும் குட்டி மானுக்கு, அரவம் கேட்டால், சட்டென அமைதி காத்து செவிகளை கூர்மையாக்கி ஓடத் தயாராக வேண்டும் என்ற பாடத்தை புகட்டுவது யார்?” என்றேன் நான்.

“யார்?” என்றார் விஸ்வநாதன் மிரட்சியுடன்.

“மானின் மரபணு நினைவாற்றல் தான் அல்லவா? இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தக் குட்டி மான் வளர்ந்து பெரிதாகிறது; காட்டில் அலைந்து திரிகையில் பெண் மானான தன் தாய் மானைக் காண்கிறது. அதனுடன் கூடுகிறது. தன் பங்குக்குக் குட்டியை ஈணுகிறது.”  என்று சொல்லி நிறுத்தினேன் நான்.

“ஆங்க்.. விலங்குகளுக்குள் அது சகஜம் தானே? குடும்பம் உறவுகள் எல்லாம்  நாமாக உருவாக்கிக்கொண்டவைகள் தானே? இங்குதான் ஃப்ராய்டு எனக்கு நினைவுக்கு வருகிறார்” என்றார் விஸ்வநாதன்.

“இப்படி யோசித்துப் பாருங்கள்.  தந்தை மான், தன் குட்டியின் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்து, தன் இணையை மீண்டும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ததாகத்தானே அர்த்தமாகிறது?” என்றேன் நான்

விஸ்வநாதனின் கண்கள் இடமும் வலமுமாக வேகவேகமாக அலைபாய்ந்தன. 

“அதாவது, குட்டி மான் தன் தாயைப் புணரவில்லை. மாறாக, தந்தை மான் குட்டி மானில் உயிர்த்தெழுந்து தன் இணையை, துணையை அடையாளங்கண்டு அதனுடன் மீண்டும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. போலவே, தாய் மான், தான் ஈன்ற குட்டியுடன் கூடவில்லை; மாறாக உயிர்ச்சத்து வாசத்தில் தன் இணையை அடையாளங்கண்டு தன்னுடன் சேர அனுமதிக்கிறது..அப்படித்தானே?” என்றார் விஸ்வநாதன்.

“ஒரு மான் இன்னொரு மானிடமிருந்து அதிகம் வேறுபடுவதில்லையே. ஏன்? அதன் பொருள் தான் என்ன?” என்றேன் நான்.

“நீங்கள் இந்தக் கேள்வியுடன் எங்கே செல்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால், வேறுபாடுகள் கண்டறியமுடியவில்லை என்பதால் அவைகளின் மரபணுக்கள் ஒன்றே தான் என்று சொல்ல முடியுமா என்ன?” என்றார் விஸ்வநாதன்.

நான் என்னிடமிருந்த மருத்துவ ஒப்பீட்டு முடிவுகளை அவர் முன் வைத்தேன்.

அவர் குழப்பமாகப் பார்க்க, கொஞ்சமாய் முகத்தை எக்கி, அவரது செவிகளில் அந்த வார்த்தைகளைச் சொன்னேன்.

“ஆ..சரியாகக் கேட்கவில்லை.. சற்று சத்தமாகத்தான் சொல்லுங்களேன்” என்றார் விஸ்வநாதன்.

“அட!.. சத்தமாகச் சொல்லிவிட்டால், காப்பி அடித்து படமெடுத்துவிடுவார்கள். எனக்கான வாய்ப்பை நானே களவு கொடுத்தது போலாகிவிடும்,” என்ற நான் மீண்டும் அவரது செவியில் அந்த வார்த்தைகளைச் சொன்னேன். 

“அப்படி ஒன்று இருக்கிறதோ??” என்றார் விஸ்வநாதன் ஆச்சர்யத்துடன்.

“தஸ்தூரின் உயிர்ச்சத்தை தானம் பெற்ற யாரோ மன்சூரைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அவர்களின் காலத்திற்குப் பிறகு மன்சூர் அனாதையாகிவிட்டிருக்கிறான். மன்சூர் தன் மரபணுவின் சில பகுதிகளை தன் தந்தையிடமிருந்தே பெற்றிருக்கிறான். ” என்றேன்.

“மன்சூருக்கு ஏன் மல்லிகா மீது மட்டும் காம உணர்வு எழவேண்டும்? மல்லிகா வயதுடைய அவயங்கள் கொண்ட வனப்பான பெண்கள் இந்த விடுதியிலேயே இருக்கிறார்களே? அவர்களிடமெல்லாம் அவன் காமுறவில்லையே? அது ஏன்? பார்க்கப்போனால், இதே வாதத்தை பெண்கள் மீது காமுறும் ஆண்கள் எல்லோர் மீதும், அதே போல் ஆண்கள் மீது காமுறும் பெண்கள் எல்லோர் மீதும் வைக்கலாம். இல்லையா? ஒரு பெண் மீது காம உணர்வு கொள்பவனுக்கும் பிடிக்காத, அவனால் காம உணர்வு கொள்ள முடியாத பெண்களும் இருப்பது எதைக் காட்டுகிறது? ஆண்களின் காம உணர்வு அதிகம் படிந்திடாத பெண்கள் எப்படி அவ்விதம் உருவாகிறார்கள்? எவையெவைகளை இழந்து அவ்விதம் உருவாகிறார்கள்? அது நமக்குச் சொல்ல வருவது என்ன?”

 “எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், இந்த உண்மைக்குத்தான் நடந்திருப்பவைகள்  பொருந்துகின்றன. மல்லிகா என்ற பெண்ணின் அழகு, அவயங்கள், வனப்பு, அது தரும் கிளர்ச்சி போதை என எல்லாமும் தஸ்தூரின் மரபணுவில் பதிந்திருக்க வேண்டும். மன்சூர் தஸ்தூரின் மரபணுக்கூறுகளை அப்படியே பெற்றிருப்பதால், மல்லிகாவின் அண்மையில்,  அவனுக்குள் தஸ்தூரின் விருப்பங்கள், ஆசைகள், கிளர்ச்சி என எல்லாமும் தஸ்தூரை உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும்.” என்றேன் நான் தொடர்ந்து.

“அப்படியானால், பதின் பருவக் காதல்கள் எல்லாம்?” என்றார் விஸ்வநாதன் அதிர்ச்சியுடன்.

“அப்படி எதுவும் இல்லை. ஈர்ப்புகள் – அவற்றை உருவாக்கும் காரணிகள் – அக்காரணிகளின் மரபணுக்கூறுகள் – அக்கூறுகள் வழியான தலைமுறைகளின் தொடர்ச்சி. அவ்வளவுதான்.” என்றேன் நான்.

விஸ்வநாதன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

“மரபணுக்கூறுகள் ரீதியில், இன்னின்ன அம்சங்களில், நீங்கள் தான் உங்கள் பேரன். உங்கள் பேரன் தான் நீங்கள் என்று தானே அர்த்தமாகிறது. நாளையே நீங்கள் இல்லையென்றாலும், உங்கள் பேரனின் இந்த அம்சங்களில், உணரப்பட இருப்பது நீங்கள்தானே?” என்றேன் நான். 

“‘நீ உன் தாத்தா போலவே இருக்கிறாய்’, என்றும், ‘உன் அப்பாவே மீண்டும் பிறந்தது போல் இருக்கிறாய்’ என்றும் யாரோ யாரையோ சொல்ல நாம் எத்தனை முறை கேட்டிருக்கிறோம்? அதன் பொருள் என்ன? அந்தச் சில குணாதிசயங்களின் வழி, தோற்ற ஒற்றுமைகள் வழி, மரபணுக்கூறுகள் வழி, தலைமுறைகளுக்கிடையே ஒரு சிறிய அளவிலேனும் அல்லது பகுதி அளவிலேனும் ‘எட்டிப்பார்த்தல்’, ‘உயிர்த்தெழுதல்’  நிகழ்கிறது என்பதுதான். இல்லையா?” என்றேன் நான் தொடர்ந்து. 

“நீங்கள் சொல்வது சரி தான். ஆனால்?” என்றிழுத்தார் விஸ்வநாதன்.

“நாம் எல்லோருமே இப்படித்தான் விஸ்வநாதன். நம் மரபணுக்கூறுகளின் வழி, நாம், நம் தாத்தனாகவும், பாட்டானாகும், முப்பாட்டனாகவும் , பூட்டனாகவும், சேயோனாகவும், பரனாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறோம். நாம் என்பது நாம் மட்டுமே அல்ல. நம் மரபணு வாயிலாக மனித இனம் தோன்றிய காலம் தொட்டான தலைமுறைகள் அத்தனையையும் நாம் பொதித்துப் பிறந்திருக்கிறோம். நம் ஒவ்வொரு அம்சங்களும் ஏதோவொரு தலைமுறையில் உருக்கொண்டதாகிறது, ஏதோவொரு தலைமுறையை உணர்த்துவதாகிறது; ஈர்ப்பு என்பது மரபணுக்கூறுகள் ரீதியில் வேலை செய்வதாகிறது.  நாம் அறிந்தோ அறியாமலோ அத்தலைமுறைகளின் தொகுதி நம்மில் உயிர்த்தெழுந்து வாழ்வதாகிறது. ஆக, நாம் என்பது நாமே அல்ல; நாம் காலத்தின் நீண்ட நெடுந்தொலைவின் வழி வெறும் ஒரு தொடர்ச்சி தான்; ஒரு  தொகுப்பு தான் ” என்றேன் நான்.

விஸ்வநாதன் குழப்பமுற்றிருப்பது நன்கு தெரிந்தது; அவரது விழிகள் விரிந்திருந்தன; விரிந்த நோக்கிலேயே அலைபாய்ந்தன.  விஸ்வநாதன் வெகு நேரமாக எதுவும் பேசாமல் யோசித்தபடியே இருந்தார். இறுதியில்,

“என் பால்ய வயதுகளில் சரோஜாதேவி புத்தகங்களில் தான் இது போன்ற கதைகளைப் படித்திருக்கிறேன்… நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது… இத்தனை அர்த்தமுள்ள  சரோஜாதேவி புத்தகங்கள் எத்தனை மலினமான பிரபல்யத்துடன் நம்மிடையே  இருந்திருக்கின்றன… இத்தனை காலமும்… ” என்றார் அவர்.

நான் சற்று யோசித்துவிட்டு,

“அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், ஒருக்கால், அன்று இனிப்பு வழங்க மல்லிகா இடத்தில் மல்லிகாவின் தோற்ற ஒற்றுமையில் வேறொரு பெண் வந்திருந்தாலும் தஸ்தூரின் மரபணுக்கூறுகளால், மன்சூர் கிளர்ச்சியை உணர்ந்திருப்பான். இது தஸ்தூரையோ, தஸ்தூரின் வழி தந்தை-மகன் இடையிலான இந்த மரபணு ஒற்றுமைகளையோ சுட்டியிருக்காது என்பதுதான்.” என்றேன் நான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.