ரேபிஸ்

அது 1885ம் ஆண்டின் கடுங்கோடைக்காலமான  ஜூலை 4ம் நாள். ஃப்ரான்ஸின்  அல்ஜாஸ் (Alsace) நகரின் பல தெருநாய்களுக்கு  வெறி பிடித்திருந்த மற்றுமோர் கோடை அது. தியோடர் வான் (Theodore Von) என்பவரின் வெறி பிடித்திருந்த  நாய் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த  அடுத்த  வீட்டு சிறுவன் ஜோஸப்  மெய்ஸ்டரின் மீது வேலியைத் தாண்டி பாய்ந்தது. 

அதிகாலையில் ஆளரவமற்ற அந்த சாலையில் நாயைக் கண்டு  பயந்து அலறிய அச்சிறுவனை நாய் வெறியுடன் தாக்கியது. தியோடர் வானும் பிறரும், தகவல் தெரிந்து காவலர்களும் வருவதற்குள் ஜோசப்பை கால் கை தொடை என 14 இடங்களில் நாய் கடித்துக் குதறியது. காவலர்கள் அந்த நாயை சுட்டுக் கொன்றார்கள். காப்பாற்றும் முயற்சியிலிருந்த தியோடரையும் நாய் சட்டைக்கு வெளியே  ஓரிடத்தில் மட்டும் கடித்திருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக நாயின் பற்கள்  தியோடரின் புஜத்தில் பதிந்திருக்கவில்லை.

காப்பாற்றப்பட்ட ஜோசப்பினால் எழுந்து நடக்கக்கூட முடியாத அளவிற்கு கால்களில் ஆழமான காயங்கள் இருந்தன. அக்காலத்தில் வெறிநாய் கடிக்கு சிகிச்சைகளில்லாததால் பெரும்பாலும் வெறிநாய் கடித்தவர்களின் மரணம் வேடிக்கை பார்க்கப்படும்.

ஆனால் ஜோசப்பின் தாய் அவனை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்று காப்பாற்றும்படி கெஞ்சினார். ஆனால் அவனுக்கு எந்த மருத்துவரும் சிகிச்சையளிக்க முன்வரவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட அந்நகரின் இளம் மருத்துவரான வெபெர் (Dr. Eugène Weber) மெய்ஸ்டரின் வீட்டுக்கு தகவலனுப்பி அவர்களை வரச்சொல்லி அவன் வலியில் கதறக்கதற காயங்களை கார்பாலிக் அமிலம் கொண்டு கழுவி மருந்திட்டு முதலுதவி அளித்தார். பழுக்க காய்ச்சிய இரும்பை கொண்டு புண்களை சுட்டு  ஆழமான காயங்களின்  ரத்தப்பெருக்கை நிறுத்தினார்.

 சுமார் 12 மணி நேரம் கழித்து மாலியில் தன் மருத்துவ நண்பர்களுடன் ஒரு கடையில் காபி அருந்தச் சென்றார் வெபெர். ஆனால் அவருக்களிக்கப்பட்ட  காபிக் கோப்பையில் இறப்பை நோக்கி சென்று கொண்டிருந்த மகனை காப்பாற்ற கெஞ்சிய ஜோசப்பின் தாயின் கண்ணீர் நிறைந்திருப்பது போலவே அவருக்கு தோன்றியது. பாரிஸில் ரேபிஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் லூயி பாஸ்டரிடம் அவர்களை அனுப்பும் யோசனை அப்போதுதான் வெபெருக்கு வந்தது. 

மீண்டும் ஜோசப் மெய்ஸ்டரின் வீட்டுக்கு  நேரில் சென்று  பாரிஸில் ஒரு விஞ்ஞானி ரேபிஸுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்திருப்பதாக சொல்லப்படுவதால் அவர்களை பாரிஸூக்கு போகும்படி வலியுறுத்தி  கூடவே இருந்து அனுப்பியும் வைத்தார். 

தியோடர் வான், ஜோசப், ஜோசப்பின் தாய் ஆகிய மூவரும்  400 கி மீ பயணம் செய்து ஜூலை  6 அன்று பாரிஸுக்கு வந்து சேர்ந்த போது ஜோசப்பிற்கு கடும் காய்ச்சல் கண்டிருந்தது  

லூயி பாஸ்டரின் நெருங்கிய நண்பரும் மருத்துவரும் ஆய்வக உதவியாளருமான ராக்ஸ் (Pierre-Paul-Emile Roux -1853-1933)  அவர்களை சந்தித்து லூயி பாஸ்டரிடம் அழைத்துச்சென்றார்.

ராக்ஸ்  தொண்டை அடைப்பு நோயான  டிப்தீரியா  (diphtheria) வுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளையும் மருந்துகளையும் கண்டறிந்தவர். இவர்  காசநோய்,டெட்டனஸ் வெறிநாய்க்கடி உள்ளிட்ட பல முக்கிய நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் லூயியுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

ரேபிஸினால் இறப்பவர்களை காப்பற்றும் முயற்சியின் முதல் கட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த லூயி பாஸ்டரின் குழுவினர்  முயல்களுக்கு ரேபிஸ் தொற்றை உருவாக்கி அவற்றின் முதுகெலும்புகளை காற்றில் உலரச் செய்து அதில் வாழும் ரேபிஸ் நோய்கிருமியின் வீரியத்தை குறைத்தனர்.(Attenuation) 

அந்த வீரியம் குறைந்த பலஹீன கிருமியை தடுப்பூசி மருந்தாக உபயோகித்து ரேபிஸ் தொற்று உண்டாகி இருந்த 50 நாய்களை முற்றிலுமாக அவர்கள் குணப்படுத்தினார்கள். 

உயிருடன் இருக்கும் ஆனால் ரேபிஸ் நோயை உருவாக்கும் வீரியத்தை முற்றிலும் இழந்த அக்கிருமி, ரேபிஸ் நோய்க்கான எதிர்ப்பை உடலில் உருவாக்குவதுதான் ரேபிஸ் தடுப்பூசிகளின் அடிப்படை 

அக்குழுவினர்  அடுத்த கட்டமாக ரேபிஸ் தொற்று இருக்கும் மனிதர்களுக்கும் சோதனை செய்ய நினைத்திருக்கையில் தான் ஜூலை 6 ம் தேதி அவரை சந்திக்க  அம்மூவரும் வந்திருந்தனர்.

லூயி பாஸ்டருக்கு  அந்த ஊசி நாய்களை காப்பாற்றியது என்பது உறுதியாக தெரிந்திருந்தது எனினும் அது மனிதர்களுக்கு உதவுமா, மருத்துவரல்லாத தான்  அதை மனிதர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாமா அது என்ன வகையான நுண்ணுயிரி என்பதிலெல்லாம் அச்சமயத்தில் அத்தனை தெளிவு இருக்கவில்லை. 

ஏனெனில் அவருக்கு முன்பே அம்மைக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னருக்கும் வைரஸை குறித்து தெளிவாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. 1892ல்  தான் டிமிட்ரி (Dmitri Ivanovsky) புகையிலைச்செடிகளில் நோயை உருவாக்கும்   கிருமிகள் பாக்டீரியாக்களை காட்டிலும் சிறிய நுண்ணுயிரிகள் என்பதை கண்டறிந்தார் அப்போது அவற்றிற்கு வைரஸ் என பெயர் இடப்பட்டிருகக்வில்லை

அதன் பின்னரே வைரஸுக்கான அறிவியல் துறையை தோற்றுவித்தவரான மார்டினஸ் பெய்ஜெரின்க் (Martinus Beijerinck) 1898ல்  நஞ்சு என்னும் பொருள் கொண்ட வைரஸ் என்னும் பெயரை அந்த நுண்ணுயிர்களுக்கு வைத்தார்

 ரஜோசப்பின் கவலைக்கிடமான நிலையையும் அவர்கள் தன்னை நம்பி அத்தனை தொலைவு வந்திருப்பதையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ நினைத்தார் லூயி.  அவரது குழுவிலேயே அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

லூயி பிற்பாடு அந்த நிகழ்வை குறித்து இப்படி சொல்லி இருந்தார்

’’அந்த சிறுவனின் நிலை மிகப்பரிதாபமாக இருந்தது. மரணத்தின் வாசலில்  இருந்த அவனை எப்படியும் காப்பாற்ற நினைத்தேன். நான் மருத்துவர் இல்லையென்பதால் அச்சிகிச்சையை நான் மேற்கொள்வதின் அறச்சிக்கலும் எனக்கு தெரியாமலில்லை எனினும் காலம் தாழ்த்தினால் அவனை காப்பாற்ற முடியாமலாகலாம் என்பதால் வெறிநாய்களை குணப்படுத்திய அதே சிகிச்சையை அவனுக்கு அளிக்க முடிவு செய்தேன்’’ .

ராக்ஸ் அந்த சோதனை சிகிச்சை அந்த கட்டத்தில் மனிதர்களுக்கு அளிக்கப்படுவதில் உடன்பாடு இல்லாத்தால் சிகிச்சையில் பங்கு கொள்ள மறுத்துவிட்டார். 

ஜோசப்பின் தாயின் தயக்கத்தை போக்கி அவர் அனுமதியுடன் ஜூலை 6 ம் தேதி இரவு 8 மணிக்கு லூயி பாஸ்டரின்  முன்னிலையில் நண்பர்களும் மருத்துவர்களுமான ஆல்ஃப்ரெட் உல்பியன் மற்றும் கிரேன்ச்சர் (Drs. Vulpian & Joseph Grancher) ஆகியோர் ஜோசப்பிற்கு  அடிவயிற்றிற்கு கொஞ்சம் மேலிருந்த பகுதியில் தோலுக்கு கீழ் ஒரு ஊசியை செலுத்தினார்கள். பிறகு குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் 12 ஊசிகள் ஜோசப்பிற்கு  செலுத்தப்பட்டது.

அந்த தடுப்பு மருந்து ரேபிஸ் தொற்று உருவான முயல்களின் முதுகுத்தண்டுவடத்தில் இருந்து எடுக்கப்பட்டு வீரியமிழக்கச் செய்யப்பட்ட ரேபிஸ் கிருமிகள் அடங்கியது. அப்படி கிருமிகளை செயலிழக்க செய்யும் அந்த முறையை ராக்ஸ் கண்டறிந்திருந்தார்  

வரலாற்றில் தன் பெயரையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த  நோய்க்கிருமி ஒன்றிற்கெதிரான போராட்டத்தில் லூயி பாஸ்டரின் பெயரையும்  நிரந்தரமாக பதித்த ஜோசப் ரேபிஸ் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு உயிர்பிழைத்தான்.

ஜோசப் உலகின் முதல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு குணமடைந்த நபர் என்றே மருத்துவ வரலாறு குறிப்பிடுகிறது.(உண்மை அதுவல்ல என்ற போதும்).

வரலாற்றில் வெறிநாய்க்கடி

ஏறத்தாழ 23 லிருந்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சைபீரியாவில் நாய்களை மனிதர்கள் வளர்ப்பு பிராணியாக வளர்க்க துவங்கி இருக்கலாமென்கிறது வரலாறு அக்காலத்திலிருந்தே வெறிநாய்க்கடியும் அதனாலான மரணங்களும் இருந்திருக்கும் எனினும் நமக்கு கிடைத்திருப்பவை சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் ரேபிஸ் இருந்ததற்கான எழுத்து ஆதாரங்கள்தான்.

இந்திய புராணங்களில் எருமை வாகனத்தில் வரும் இறப்பின் கடவுளான எமனை போலவே பண்டைய பாபிலோனில் மருத்துவத்தின் தெய்வமாகிய குலாதேவி மரணத்தின் தூதுவனான நாயை உடன் அழைத்துவருவாள் என்று நம்பப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெறிநாய்க்கடியும் பின்னர் உண்டான நோய்த்டொற்றும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்த நோய்களில் மிக முக்கியமானதாக இருந்தது. வெறிநாய் கடித்தால் நிச்சயம் மரணமென்பதால் மனிதகுலத்தின் பெரும் அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்தது வெறிநாய்க்கடி தான்.  கிமு 3000த்தில்  உலகின் பல நாகரிகங்களில் இறப்புக் கடவுளின் தூதனாக நாய் கருதப்பட்டது

வேதகாலங்களிலேயே வெறிநாய்க்கடி குறித்த குறிப்புக்கள் பண்டைய இந்தியா, கிரேக்கம், சீனா, எகிப்து, மத்திக கிழக்கு நாடுகளில் இருந்தன. எனினும் ரேபிஸை குணப்படுத்தும் முயற்சிகள் பெரும்பாலும் பிரார்த்தனை மந்திரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளாக மட்டுமே இருந்தன. 

கிபி முதல் நூற்றாண்டில் ரோமானிய அறிஞர் செல்சஸ்  ரேபிஸ்  நோய் வெறிபிடித்த நாயின் எச்சிலிலிருந்து மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் நாய்க்கடியின் மூலம் பரவுகிறது என்பதை குறிப்பிட்டார்.

ஆனால் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சையாக அவர் பரிந்துரைத்தது தான் கொடுமை. நாய் கடித்தவரின் தலையை நீருக்குள்  அழுத்திப் பிடித்துக் கொண்டால் நோய் சரியாகிவிடும் என்ற அவரின் முட்டாள்தனமான பரிந்துரையை கேட்டு பலர் மூச்சுதிணறடிக்கப்பட்டு நீரிலேயே உயிரிழந்தார்கள். அக்காலத்தில் வெறிநாய்க்கடிக்கான சிகிச்சையென்று இப்படி பல கொடூரங்கள் நடந்தன.

கடித்த நாயின் உடல் ரோமத்தை கடிவாயில் வைத்து தைத்து காயத்தை மூடிவிடுவது அல்லது நாயின் ரோமத்தை கடிபட்டவரை கொண்டு விழுங்க வைப்பது என்று பல அநியாயங்களும்  நடந்தன.

இப்போதும் குழந்தை பேறு அற்றவர்களை பிள்ளைப்பூச்சிகளையும், ஆஸ்துமா குணமாக உயிருடன் மீனையும் விழுங்கச் சொல்பவர்களும் இருக்கையில் அக்காலத்தில் இவை நடந்தததில் ஆச்சர்யமொன்றுமில்லைதான். 

கிமு 2300 ல் பாபிலோனின்  வெறிநாய் கடித்து நோய் தொற்று உருவானால் நாயின் உரிமையாளர் அரசுக்கு குறிப்பிட்ட தொகையை தண்டனையாக செலுத்த வேண்டும் என்று ஒரு  சட்டம் இருந்தது. 

அரிஸ்டாட்டில், பிளைனி, ஹிப்போகிரேட்ஸ் உள்ளிட்ட பலர் ரேபிஸ் நோயை குறித்தும் அதன் தீவிரம் குறித்தும் சிகிச்சைமுறைகளையும் எழுதி இருக்கிறார்கள்.  

பொயு 40–90 ல் டயாஸ்கொரிடஸால் எழுதப்பட்ட மருந்துச்சரக்குகளின் நூலான மெட்டீரியா மெடிக்காவின் அராபிய மொழியாக்கத்தில்  வெறிநோய் முற்றிய ஒரு நாய் மனிதனை கடிக்கும் சித்திரம் இடம் பெற்றிருந்தது.

பொயு 60களில்  பல நாடுகளின் ஆட்டிடையர்கள் காவல் நாய்களில்  40 நாட்கள் ஆன இளம் நாய்குட்டிகளின் வாலை  கத்தரித்தால் அவற்றிற்கு ரேபிஸ் தொற்று உருவாகாது என நம்பினர். ரோமானிய அறிஞர்கள் நால்வரால் கிமு 27லிருந்து 234 வரையிலும் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பான  De Re Rustica  என்னும் உலகின் முதல் விவசாய நூலில்   இவ்வழக்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 பிளைனி முதல் நூற்றாண்டில் நாய் ரோஜா செடியின்((Rosa canina) வேர்களில் தாயத்து அணிந்தால் ரேபிஸ் தாக்காது என்று பரிந்துரைத்திருந்தார்.

பாக்தாதிலும் ஈரானிலும் அகழ்வாய்வுகளில் 1945, 1947 ல் கிடைத்த களிமண் கட்டிகளில் சுமார் 4000 வருங்களுக்கு முன்பே ரேபிஸ் தொற்று நாய்களால் பரவியது குறிப்பிடப் பட்டிருக்கிறது

மெசபடோமியாவில்  கிடைத்த 1900–1600   யை சேர்ந்த  தகடுகளில் வெறிநாய் கடித்தால் அதை குணமாக்க மந்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. மந்திரங்களில் சந்திரகிரகணத்தின் போது நாய்களுக்கு வெறிபிடித்து மனிதர்களை கடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது

 ரேபிஸ் அணுகாமல் காப்பாற்றும் மந்திரத்தகடுகள் பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கத்திலும் கிடைத்திருக்கின்றன,  உலகின் அதுபோன்ற அனைத்து சிகிச்சை முறைகளும் முட்டாள்தனமானவை அவற்றால் ரேபிஸை குணமக்க முடியாது  என்று 2ம் நூற்றாண்டின் மத்தியில்  அஸ்கிளிபியட்ஸ் (Asclepiades of Bithynia) குறிப்பிட்டார்.

13 ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகெங்கிலும் ரேபிஸுக்கு அற்புத குணமளிக்கும் தேவாலயங்கள் பெருகின, நாய்களுக்கு சிலுவையால் சூடு வைத்து அவற்றிற்கு வெறி பிடிக்காமல் தடுப்பது பல நாடுகளில் நடந்தது. சிலுவை தாயத்துக்கள் கூட நாய்களுக்கு அணிவிக்கப்பட்டன.

வெறிநாய் கடித்த மனிதர்களின் நெற்றியில் கத்தியால் சிலுவைக்குறியை கீறி அதன்மீது ஜெபிப்பது நோயை குணமாக்கும் என்னும் நம்பிக்கையும் பரவலாக இருந்தது. 19ம் நூற்றாண்டு வரை பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் விரதங்கள் மந்திரங்கள் ஆகியவையே ரேபிஸுக்கான சிகிச்சைகளாக இருந்தன.

டயஸ்கோரிடஸும் செல்சியஸும் நாய்கடிக்காயங்களை பழுக்க காய்ச்சிய  இரும்பை கொண்டு சிகிச்சையளிப்பதை அறிவுறுத்தும் வரை எளிய மருத்துவ சிகிச்சைகள் கூட நடைபெற்றிருக்கவில்லை.

ரேபிஸ் நோய் முற்றியவர்களை சாகும்வரை  பொது இடங்களில் சங்கிலியால் கட்டிவைப்பதும், மெத்தைகளுக்கு நடுவில்  அவர்களை பலர் சேர்ந்து அழுத்தியும் கல்லால் அடித்து கொலை செய்வதும் கூட பரவலாக நடந்தது.

13ம் நூற்றாண்டுக்கு பிறகு நாய் கடித்த காயங்களை சுத்தம் செய்வதின் அவசியம், ஏதோ ஒரு நஞ்சு நாயின் வாயிலிருந்து கடித்த காயத்துக்குள் சென்று உடலை நஞ்சாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது ஆகியவை உலகின் பல நாடுகளில் உணரப்பட்டு எழுதப்பட்டன. ஆனால் வெறிநாய்க்கடியை குணமாக்கும் முன்னெடுப்புக்கள் ஏதும் அப்போது நிகழவில்லை.

வெறிநாய்களின் எச்சில் மனிதர்களின் உடலில் நுழைந்து மரணத்தை உண்டாக்குகிறது என்பதை 13ம் நூற்றாண்டிலிருந்தே பல அறிஞர்கள் சொல்லத்துவங்கி இருந்தனர். வழக்கத்திலிருந்த மூட நம்பிக்கைகளையும் கொடுமையான சிகிச்சை முறைகளையும் பலர் கண்டித்தவாறும் இருந்தனர்.

13 ம் நூற்றாண்டில்  மருத்துவர், இறையியலாளர் மற்றும் ரசவாதியான அர்னால்டஸ் , (Arnaldus de Villanova) நாய் கடித்தபின்னர் நோய் தொற்று உருவாகாமல் இருக்க  காயத்தை நன்றாக கழுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

அதே நூற்றாண்டிலேயே இறையியலாளர் பார்தோலோமியூ (Bartholomew Glanville) வெறி நாய் கடித்த காயங்களில் ஒரு வகை நஞ்சு வளர்ந்து பெருகி உயிரை கொல்கிறது என்றார்.

ஐரோப்பாவில் 1446 ல் வளர்ப்பு நாய்களை கூண்டில் அடைக்கவும் தெருநாய்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது. மேலும் பல நாடுகளில் நாய்களின் வாய்க்கு துணிகளால் மூடிகள் அணிவிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.

1546 ல் இத்தாலிய மருத்துவர், கவிஞர், கணிதம், புவியியல் மற்றும் வானியல் ஆகியவற்றில் அறிஞரான  கிரோலாமோ (Girolamo Fracastoro) நாய்களின் எச்சிலில் இருக்கும் ஒரு நச்சு விதை ரேபிஸை பரப்புகிறது என்றார்

ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் மற்றும் மருத்துவரான மார்ட்டின் லிஸ்டர் 1698 ல் நாய் கடித்த இடத்தை பொறுத்து ரேபிஸ் நோயின் தீவிரம் வேறுபடுகிறது என்பதை கண்டறிந்தார்.

போலந்து நாட்டின் ராணுவ தலைமை தளபதியான Kazimierz Siemienowicz (1600-1651)  எதிரிகளுடனான ஒரு போரின் போது வெறிநாய்களின் எச்சில் அடைக்கப்பட்ட பந்துகளை வீசி போரிட்டார் இதுவே முதல் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

1684 ஜூன் 17 அன்று வெளியான மெடிசினா க்யூரியோசா (Medicina Curiosa) என்னும் உலகின் முதல் மருத்துவத்திற்கான பிரத்யேக சஞ்சிகையின் முதல் பதிப்பில்,  பூனையிலிருந்து மனிதர்களுக்கு  தொற்றிய ரேபிஸுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மரணம்  நேர்ந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜோசப்-இக்னாஸ் கில்லட்டின் ஒரு பிரெஞ்சு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி. இவரே  1766ல் முதன் முதலாக மனிதர்களை கடித்த வெறிநாய்களை தனிமைப்படுத்தி 15 நாட்கள் கண்காணித்து அவை இறந்தால் நோயாளியின் சிகிச்சையை தீவிரமாக்க வேண்டும் என்பதை கூறினார்

கோட்ஃப்ரெட் (Gottfried Freiherr van Swieten) என்பவர் டச்சு நாட்டில் பிறந்த ஆஸ்திரிய தூதர், நூலகர் மற்றும் அரசாங்க அதிகாரி. 1775ல் நாயின் எச்சிலே ரேபிஸ் தொற்றுக்கு காரணம் என்பதை உறுதியாக அறிவித்த அவரது ஆய்வு முடிவுகள் இன்று வரையிலும்  மிக முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ரேபிஸ் தொற்று மிக தீவிரமாக பரவி இருந்தது.  இந்திய பெருங்கடல் மற்றும் கரீபிய கடல் தீவுகளின்  கரும்பு வயல்களில் எலிகளை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட கீரிகளில் ரேபிஸ்  உண்டாகி தீவெங்கும் நோய் பல்கிப் பெருகியது. தென்ஆப்பிரிக்க காலனியாதிக்கத்தின் போது ரேபிஸ் தொற்று அங்கு தீவிரமாக இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

18, 19ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் மற்றுமொரு  நம்பிக்கை இருந்தது. இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளின் வயிற்றில் இருக்கும் முடி மற்றும் கால்சியம் படிவங்கள் சேர்ந்த கல் போன்ற திடப்பொருள் பாம்புக்கடி மற்றும் நாய்க்கடியை குணப்படுத்தும் என்னும் நம்பிக்கை இருந்தது. அப்படியான கற்கள் கிறுக்கு கற்கள் (Mad stones) எனப்பட்டன. 

அக்கற்கள் கிடைத்தால் பெரும் விலை கொடுத்து அதை வாங்கி வைத்துக் கொள்பவர்கள் வெறிநாய் கடித்தால் அக்கல்லை சுத்தமான பசும்பாலில் போட்டு வைத்து அந்த பாலில்  நாய்கடித்த காய்த்தை கழுவினார்கள் கிறுக்கு கற்களை பெரும் விலை கொடுத்து வாங்கிய பல குடும்பங்கள் ஆபரணங்களை போல அதை பேணி பாதுகாத்தார்கள். 1805ல் வர்ஜீனியாவில் ஒரு கிறுக்கு கல் 2000 டாலருக்கு விற்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் 1849ல் அவரது மகன் ராபர்ட்டை வெறிநாய் கடித்தபோது இப்படியான ஒரு கிறுக்கு கல்லை விலைக்கு வாங்கி சிகிச்சையளித்தாரென்றும் ராபர்ட் அதனால் குணமானாரென்றும் சொல்லப்படுகிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இப்படியான பல கதைகள் உலவி கிறுக்கு கற்களின் விலையை ஏற்றின. கடித்த நாய்களுக்கு ரேபிஸ் இல்லாமல் இருந்ததாலும் தொற்று மிகக்குறைவாக இருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக  பிழைத்துக் கொண்டவர்களால் இந்த கல்லின் புகழ் மேலும் மேலும் கூடியது

அதே வருடம் தன் காதலியிடம் காதலை தெரிவித்துவிட்டு ரயிலேறிய அமெரிக்க கவிஞரும் பிரபல எழுத்தாளருமான எட்கர் ( Allen Poe)  மர்மமான முறையில்  பால்டிமோர் தெருவில் மயக்கமுற்று கிடந்தார். அவரது நண்பரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமாவில் ஆழ்ந்து நான்கு நாட்கள் கழித்து இறந்த  அவரின் இறப்புக்கு ரேபிஸ் தொற்றுதான் காரணமாக சொல்லப்பட்டது

ரேபிஸ் என்னும் சொல் வெறி என்பதை குறிக்கும் லத்தீனச் சொல்லான  “rabere”  என்பதிலிருந்து உருவானது. பண்டைய கிரேக்கர்கள் வெறிநாய்க்கடியை ‘வன்முறை’ என்று பொருள்படும்  “lyssa” என்னும் பெயரில் அழைத்தார்கள் அறிவியல் இப்போதும் ரேபிஸ் வைரஸை ’லிஸா வைரஸ்’ என்றுதான் பெயரிட்டிருக்கிறது. கிமு 14 லிருந்து–7 ம் நூற்றாண்டுகளில் இதே பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லான “rabhasa” விலிருந்தே ரேபிஸ் என்னும் சொல உருவானது என்னும் கருத்தும் இருக்கிறது.

அறிவியல் ஆய்வுகள்

ரேபிஸ் குறித்த அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் 19ம் நூற்றாண்டில் தான் துவங்கின.

1804ல் ஜெர்மனியின் ஜார்ஜ் ஜின்க (Georg Zinke) வெறிநாயின் எச்சிலை ஆய்வகத்தில் ஆரோக்கியமான நாய்களுக்கு செலுத்தி அவற்றிற்கு ரேபிஸ் தொற்று உருவாவதை நிரூபித்தார்.

இத்தாலியின்  ஃப்ரான்ஸெஸ்கோ (Francesco Rossi)  1805ல் ரேபிஸ் தொற்றினால் இறந்த பூனைகளின் மூளையின் சிறிய பகுதியை ஆரோக்கியமான நாய்களின் உடலில் இருந்த காயங்களில் வைத்து மூடி அவற்றிற்கு ரேபிஸ் உருவாவதை நிரூபித்தார். மேலும் பலரின் ஆய்வுகள் ரேபிஸ் தொற்று முதுகுத்தண்டுவடம் வழியாக மூளைக்கு செல்வதை ஆதாரங்களுடன் நிரூபித்தன.

1807ல்  ரேபிஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க நரம்புகளை துண்டிப்பது குறித்து ஜோர்ஜ் ஹிக்ஸ் (George Hicks) என்பவர் பரிந்துரைத்தார்

இதே போன்ற ஆய்வு 1813 ல் ஹ்யூகோ (Hugo Altgraf zu Salm-Reifferscheidt)  மற்றும் 1814 ல் ஃப்ரேன்கோயிஸ் மெகந்தி (François Magendie)  ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் ரேபிஸ் தொற்று இருந்த மனிதர்களின் எச்சிலை நாய்களுக்கு செலுத்தி தொற்றை  நிரூபித்தார்கள்

1830களில் லண்டன் தெருக்களில் வெறிநாய்களால் கடிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் காயங்களுக்கு அறுவை சிகிச்சையளிக்கப்பட்டும் மரணமடைந்தனர். 

1865 ஆகஸ்ட் 21-27 வரை வியன்னாவில் நடந்த இரண்டாவ்து சர்வதேச கால்நடை அறிவியல் மருத்துவ கருத்தரங்கில் ரேபிஸை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உயிர்களின் தன்னிசையான தோற்றம் என்னும் கோட்பாடு முழுக்க மறுதலிக்கப்பட்டு நுண்ணுயிர்களின் இருப்பு உறுதி செய்யபட்ட 19 ம் நூற்றாண்டில் தான்  முதல் முறையாக ஃப்ரேன்கோயிஸ் மெகந்தி   1872 ல் நாய்களின் எச்சில் வழியாக பரவி ரேபிஸை உருவாக்குவது ஒரு பாக்டீரியாவை காட்டிலும் சிறிய நுண்ணுயிரியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தார். அதன் பிறகு ஏராளமான ஆய்வுகள் அத்தகைய கிருமியின் இருப்பு குறித்து நடந்தன.

.பிரான்ஸின் மருத்துவரும் ஆய்வாளருமான பியரி ஹென்றி (Pierre-Henri Duboué)  1881 ஜனவரி 12ம் தேதியிட்ட கடிதமொன்றில்  லூயி பாஸ்டரை தொடர்புகொண்டு ரேபிஸ்கிருமியை  ஆய்வகங்களில் செயலிழக்க செய்யும் தடுப்பு முறைகள் குறித்து ஆலோசித்திருந்தார்.

10ம் நூற்றாண்டிலிருந்தே வேரியோலேஷன் என்னும் முறையில் உலர்ந்த அம்மைபொருக்குகளை முகர்ந்து அம்மைநோய்க்கான நோயெதிர்ப்பை உருவாக்குவதில் சீனர்கள் ஈடுபட்டிருந்தனர். 18ம் நூற்றாண்டில் எட்வர்ட் ஜென்னர்  அம்மை நோய்க்கான தடுப்பூசியை வீரியம் குறைக்கப்பட்ட மாட்டம்மை நோய்க்கிருமிகளிலிருந்து உருவாகி இருந்தார்

பாரிஸின் மருத்துவர் ஆல் கிபியர் (aul Gibier)   1883–1884 ல் உலரச்செய்யபட ரேபிஸ் நுண்ணுயிரியின் வீரியம் குறைந்திருப்பதை கண்டறிந்தார். அந்த பலஹீனமாக்கபட்ட நோய்க்கிருமியை கொண்டு மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கலாமென்னும் யோசனையையும் அவர் தெரிவித்திருந்தார்.

லூயி பாஸ்டருக்கு முன்னும் அவரது சமகாலத்திலும் வைரஸ் என்ற அந்த நுண்ணுயிரியை குறித்து பல ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தன.  இத்தனை செறிவான பல ஆய்வுகளும் ஆய்வு முடிவுகளும் ரேபிஸ் தொற்றை குறித்து இருந்த போதுதான்  லூயி பாஸ்டரும் ரேபிஸ் நோய்க்கிருமியின் வீரியத்தை குறைக்கும் ஆய்வுகளில்  1880 டிசம்பரிலிருந்து ஈடுபட்டிருந்தார். 

லூயி பாஸ்டர் வெறிநாய் கடித்த சமயத்துக்கும் ரேபிஸ் நோய் உருவாகும் சமயத்துக்கும் இடைப்பட்ட தேக்க நிலையை  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக சிகிச்சைக்கு பயன்படுத்தினார். ரேபிஸ் தடுப்பூசி லூயிபாஸ்டர் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசி முன்பே அவர் Pig Erysipelas என்னும் பறவை/பன்றி காய்ச்சலுக்கும், ஆந்தராக்ஸ் மற்றும் பறவை காலராவுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்திருந்தார்.

சர்ச்சைகள்

பல மருத்துவர்கள் லூயி பாஸ்டருக்கு முன்பே இந்த சோதனைகளை வெற்றிகரமாக விலங்குகளில் செய்திருந்தார்கள் எனினும் பாஸ்டர் ஒரு நுண்ணுயிரியலாளர் மட்டுமே மருத்துவரல்ல என்பதால் இந்த சோதனைகளின் பேரில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

1881 ஆகஸ்ட் 1 ம் தேதியன்று பியரி (Pierre Victor Galtier) அறிவியல் அகாதெமி க்கு தன் சோதனை முடிவுகளையும் ரேபிஸ்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக அவர் உருவாக்கியதையும் அறிக்கையாக சமர்ப்பித்திருந்தார் அவரது அறிக்கையின் ஒரு பத்தி:

“I injected rabies saliva into the chinstrap of the sheep seven times, without ever getting rabies; one of my test subjects has since been inoculated with rabid dog slime, and for over four months after this inoculation, the animal has always been well; it seems to have acquired immunity. I inoculated it again two weeks ago by injecting it eight cubic centimeters of rabies saliva into the peritoneum, it is still doing well”.

இப்படி சொல்கிறது.

1886,ல்  பியரி ’’மனிதர்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் ரேபிஸ் நோய்க்கான் தடுப்பு மருந்து’’ என்னும் ஆய்வறிக்கையையும் பிரசுரித்திருந்தார்  லியோன் (Lyon) கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பாஸ்டரின் மார்பளவு சிலையுடன்   பியரியின் சிலையும் இருக்கிறது என்றாலும் மருத்துவ அறிவியலில் ரேபிஸ் சிகிச்சைக்கான பியரியின் பங்களிப்பு   மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

பியரி ஹென்றி (Pierre-Henri Duboué)  ரேபிஸ் நுண்ணுயிரி குறித்து தன்னை முன்பே தொடர்பு கொண்டதையும் லூயி பாஸ்டர் மறுத்திருந்தார். 

ஜோசப்புக்கு சிகிச்சை அளிக்கும் முன்னர் லூயி பாஸ்டரின் ரேபிஸ் சோதனைகளில் வெறும் 62% தன் வெற்றியடைந்திருந்தது எனவே  மனிதர்களுக்கு அவர் அளித்த சிகிச்சைகளில் அவருடன் துணையிருக்க அவரின் நீண்ட நாள் நண்பரான ராக்ஸ்  மறுத்துவிட்டார். மற்றொரு மருத்துவ நண்பரான  ஜோஸப் கிரேன்ச்சர் தான்  தடுப்பூசியை ஜோசப்பிற்கு செலுத்தினர்

ஜோசப் மெய்ஸ்டருக்கு முன்னும் மனிதர்களில் சோதனைகள் நடந்திருப்பதை லூயி பாஸ்டரின் மரணத்துக்கு பின்னர் வெளியான அவரது ஆய்வக குறிப்பேடுகள் காட்டுகின்றன.

1885 மே 2ம் தேதியில்   61 வயதான  ஜியார்ஜிஸ் (Dr. Georges Dujardin-Beaumetz) என்பவரின் முழங்காலில் வெறிநாய் கடித்தது. அவர் சிகிச்சைக்காக லூயியை தேடி வந்தார் அவருக்கு லூயி பாஸ்டரின் முன்னிலையில் 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நல அமைச்சகம் இடைப்பட்டு அந்த சிகிச்சையை நிறுத்தினாலும் சிகிச்சை அளிக்கப்பட்ட முதியவர்  ஒருவாரத்தில்  குணமடைந்ததாகவும் ரேபிஸ் தொற்று அவருக்கு உண்டாகவில்லை என்றும்  லூயியின் ஆய்வக குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக  வெறிநாய் கடி காயங்களுடன் 1885 ஜூன் 22 அன்று வந்த 11 வயது சிறுமி  ஜூலியும் (Julie-Antoinette Poughon)   லூயியால் சிகிச்சையளிக்கப்பட்டாள் ஆனால் தடுப்பூசி செலுத்திய மறுநாள் அச்சிறுமி நோய் முற்றி இறந்தாள் சிகிச்சைக்கு கால தாமதமாக அவர்கள் வந்தார்கள் என்று லூயி குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாவதாகத்தான் ஜூலை 6 அன்று ஜோஸப் மெய்ஸ்டர் வந்தான். அந்த வெற்றிகரமான சிகிச்சியினால் ரேபிஸ் தொற்றிலிருந்தும் மரணத்திலிருந்தும் ஜோஸ்ப் மெய்ஸ்டர் மட்டும் தப்பியிருக்கவில்லை பல எதிர்ப்புகள் விமர்சனங்கள் கண்டனங்களுக்கு மத்தியில்  ரேபிஸ் தடுப்பூசியை உருவாக்கிய லூயிபாஸ்டரையும் தான் பிழைத்ததின் மூலம் தப்பவைத்தான்.

 தொடர்ந்த வெற்றிகரமான சிகிச்சைகள்

ஜோசப் மெய்ஸ்டரை தொடர்ந்து  அதே ஆண்டு அக்டோபர் 20 அன்று ழான் பாட்டிஸ்ட் ஜூபிலி (Jean-Baptiste Jupille -1869–1923)   என்னும் 15 வயது சிறுவன் சிகிச்சைக்கு வந்தான். அவனை நாய் துரத்தி வந்து கடித்திருக்கவில்லை வெறிநாய்களிடமிருந்து பல சிறுவர்களை காப்பாற்ற நாயை நோக்கி  ஜூபிலி ஓடி, பலமுறை கடிக்கப்பட்டாலும் கடுமையாக போராடி நாயின் வாயை தன் கையில் வைத்திருந்த சவுக்கு கயிற்றால் கட்டி அதை ஆற்றில் தூக்கி எறிந்து கொன்றான். அச்சிறுவனையும் லூயியின் மருந்து பிழைக்கச்செய்தது. பாஸ்டரின் நிறுவனத்தில் இளம் ஜுபிலி நாயுடன் போரடும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது

பாஸ்டர் இறக்கும் வரையிலும் சுமார்  20 ஆயிரம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் குணமடைந்திருந்தனர்.

ஜோசப் மெய்ஸ்டர், ஜுபிலி இருவருமே நன்றிக்கடனாக பாஸ்டரின் ஆய்வகத்தில் காவலர்களாக பணியாற்றினார்கள். 

1885 அக்டோபர் 26 அன்று லூயி பாஸ்டர் ஃப்ரஞ்ச் அறிவியல் அகாதெமியில் அதன் தலைவர் ஹென்றியின் (Henri Bouley)  முன்னிலையில் தனது ரேபிஸ் தடுப்பூசியின் வெற்றியை அறிக்கையாக சமர்பித்தார். மருத்துவ வரலாற்றின் பொற் தருணங்களில் அதுவும் ஒன்று. மறுநாள் ஃப்ரஞ்ச் மருத்துவ அகாதெமியிலும அதே அறிக்கையை சமர்பித்தார். பிரான்சின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் லூயிபாஸ்டரின் பெயர் பொறிக்கப்பட்டு அவர் அந்நாட்டின் நாயகனாகினார்.

அதன்பிறகு  தூர தேசங்களில் இருந்தெல்லாம் பாஸ்டரை காணவும் ரேபிஸ்க்கு சிகிச்சை பெறவும் ஏராளமானோர் வந்தனர். அப்படி வருபவர்களை வரவேற்க ரயிலடிக்கே அரசு அதிகாரிகள் சென்றனர். பின்னர் நாடு தழுவிய நிதி திரட்டுதல் ஒரு இயக்கமாகவே நடந்து புகழ்பெற்ற பாஸ்டர் ஆய்வகம் நிர்மாணிக்கப்பட்டு அது   1888 நவம்பர்14  அன்று திறக்கப்பட்டது.

லூயியின் ரேபிஸ் சிகிசையில் இறப்புக்கள் நிகழ்ந்தன ஆனால் அவர் வெற்றிகளை மட்டுமே உலகின் பார்வைக்கு கொண்டு வருகிறார் என்னும் குற்றச்சாட்டுக்கள் அதன்பிறகும் அவர் மீது சொல்லப்பட்டன. லூயி பாஸ்டரின் ரேபிஸ் சிகிச்சையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி பல மருத்துவ அறிக்கைகளும் அப்போது வெளியாகின என்றாலும் லூயி அவற்றை முற்றிலுமாக நிராகரித்தார்  

 எத்தனை எதிர்ப்புக்கள் இருந்தாலும் மிக துணிச்சல்காரரென அறியப்பட்ட லூயி பாஸ்டர் மனிதர்களுக்கும் நுண்ணுயிர் நோய்கிருமிகளுக்குமான ஒரு போரில் நிரந்தரமாக வெற்றிபெற்றார்.

’’ரேபிஸ் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய வெறிநாய்க்கடிக்குள்ளான குழந்தைகளை பார்க்கையில் என்முன்னெ  இரு முக்கியவிஷயங்கள் இருக்கும், ஒன்று அவர்களின் கள்ளமற்ற இளமை மற்றொன்று அவர்கள் எதிர்காலத்தில் என்னவாயிருக்கப் போகிறார்கள் எனும் சித்திரம்’’  என்று சொன்ன லூயி பாஸ்டரன் பெயரில் உலகெங்கும் நூற்றுக்கணக்கான பாஸ்டர் ஆய்வகங்கள் இப்போது செயல்படுகின்றன.

நோய் தொற்று உருவான பின்னர் தடுப்பூசி அளிக்கப்பட்டு குணப்படுத்தப்படும் ரேபிஸ்  சிகிச்சை (PEP post-exposure prophylaxis))  150 நாடுகளில் இப்போது புழக்கத்தில் இருக்கிறது 

சிகிச்சையளிக்கப்படாமல் ரேபிஸினால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறந்துபோகிறார்கள். குறிப்பாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ரேபிஸ் இறப்புகளில் 40% 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருப்பது மேலும் வேதனைக்குரியது

வெறிநாய் கடித்தால் உடனே செய்யவேண்டிய முதலுதவி சோப்பினால் காயத்தை கழுவுவதுதான். பின்னர் உடனடியாக தடுப்பூசி செலுத்த படவேண்டும்.

நாய்கள் மட்டுமல்ல  ஓநாய், வவ்வால், ரக்கூன், எலி, பூனை, கீரி ஆகியவையும் ரேபிஸ் தொற்றுக்குள்ளாகி மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோயை பரப்பும்.

நாய்கடிக்கு நிகராகவே வவ்வால்களாலும் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவுகிறது 

நெப்போலியன் படைப்பிரிவில் பணிபுரிந்தவரும் எளிய தோல் பதனிடும் தொழிலாளியுமான தந்தைக்கு பிறந்த லூயி பாஸ்டர் தனது 72ம் வயதில்  இறந்த போது  அறிவியல் உலகம் வியந்து பார்த்த வெகுசிலரில் ஒருவராக இருந்தார். 

வெறிநாய்களை உதவியாளர்கள் அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கையில் அதன் வாயிலிருந்து நேரடியாக எச்சிலை சோதனைக் குழாய்களில் பிடித்த துணிச்சல்காரரும் தனக்கெதிரேயான மிக வலிமையான எதிர்ப்புகளுக்கு ஒருபோதும் பணிந்திராத அச்சமற்றவராகவும் ’’வாய்ப்புக்கள் தயாராக இருப்பவர்களுக்கே கிடைக்கும்’’ என்பதை பிறருக்கு சொன்னது மட்டுமல்லாது தானும் வாழ்நாள் முழுக்க பின்பற்றியவருமான லூயி பாஸ்டரின் உடலுக்கு  பாரிஸ் நகரமே  திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.7 வருடங்களாகி இருந்த அவரது பாஸ்டர் நிறுவனத்தில் அவரது உடலின் மிச்சகள் வைக்கப்பட்டன. மனித குலத்துக்கு அவர் செய்திருக்கும் மாபெரும் உதவி அவர் புகழை என்றென்றும் பாடிக்கொண்டிருக்கும்

லூயிபாஸ்டருக்கு பிறகான 200 ஆண்டுகளில் பல லட்சம்  உயிர்களை அவரின் தடுப்பு மருந்து இன்று வரை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. 

நுண்ணுயிர்களின் ஆய்வில் மிக முக்கியமான பங்களிப்பை செய்திருக்கும் லூயி பாஸ்டர்

“Messieurs, c’est les microbes qui auront le dernier mot.” (Gentlemen, it is the microbes who will have the last word.)” 

‘’உலகில் இறுதியாக நுண்ணுயிரிகளின் கைகள் தான் ஓங்கி இருக்கும்’’

என்று சொல்லி இருப்பது கொரோனா தொற்றில் பல்லாயிரக் கணக்கானோரை பலி கொடுத்த பின்னர் பிழைத்து வந்திருக்கும் நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.

ரேபிஸ் வைரஸ் என்பது என்ன? அது எப்படி உடலில் செயல்படுகிறது என்ன வேகத்தில் மூளையை நோக்கி பயணிக்கிறது,  இப்போது  மருத்துவமனைகளில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் புதிய வகைகள், நீரைக் கண்டால் வெறுக்கும் ரேபிஸின் ஹைட்ரோ போபியா அறிகுறி மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது, நாய்களுக்கு அந்த அறிகுறி இல்லாதது, ரேபிஸ் நோயை கண்டறியும் ஆய்வக சோதனைகள் என்னென்ன, உலக சுகாதார நிறுவனம் எந்த ஊசிகளை மட்டும் மனிதர்களுக்கு பரிந்துரைக்கிறது   ஆகியவற்றை அடுத்த கட்டுரையில் காணலாம்.  

அடுத்த பகுதி:

மேலதிக தகவல்களுக்கு:

  • 1957ல் வெளியான அமெரிக்க திரைப்படம் Old Yeller, ரேபிஸ் தொற்று இருக்கும் ஒரு நாயை குறித்தது.1983ல் வெளியான  Cujo என்னும்  அமெரிக்க  திகில் திரைப்படம் ரேபிஸ் குறித்தது. குஜோ என்னும் நாயை ஒரு வவ்வால் மூக்கில் கடித்தால் ரேபிஸ் தொற்று உருவாகி அதனிடமிருந்து தப்பிக்க ஒரு தாயும் மகனும் படும் பாடும் நடக்கும் பல பயங்கரங்களும் தான் கதை அமேஸான் பிரைமில் இந்த திரைப்படம் காணக்கிடைக்கும்

3 Replies to “ரேபிஸ்”

  1. செறிவான சுவாரஸ்யமான கட்டுரை.

    // உயிர்களின் தன்னிசையான தோற்றம் என்னும் கோட்பாடு முழுக்க மறுதலிக்கப்பட்டு நுண்ணுயிர்களின் இருப்பு உறுதி செய்யபட்ட // இது குறித்து விரிவாக விளக்க முடியுமா?

  2. சிறப்பான கட்டுரை . //உயிர்களின் தன்னிசையான தோற்றம் என்னும் கோட்பாடு முழுக்க மறுதலிக்கப்பட்டு நுண்ணுயிர்களின் இருப்பு உறுதி செய்யபட்ட…// இது குறித்து விரிவாக விளக்க முடியுமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.