
“எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” மனுவின் கண்களில் பீதி.
“ஏன்டா?” லாட்டேயை கீழே வைத்துவிட்டு கேட்டான் சதீஷ். அந்த கஃபேயின் வெளிமுற்றத்திலிருந்து எம். ஜி. ரோடை பார்ப்பது, ஒரு நேரடி நாடகத்தைப் பார்ப்பது மாதிரி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
“நான் நினைக்கறதெல்லாம் நடக்குறதுடா”
கட கடவென சிரித்துவிட்டு “அடப் பாவி! அதுக்கு சந்தோஷம்தானே படணும்! ஏன்டா இவ்வளவு பயத்தோட சொல்றே”
“இல்லை! நான் சரியா சொல்லலை, உனக்கு புரி… அந்தப் பெண் ரொம்ப அழகா இருக்கா இல்லை ?”
“ஸாரிடா! நீ சொல்றதைத்தான் கவனிச்சுட்டு இருக்கேன்” என்று அரை வினாடிக்கு குறைவான நேரம் மறுபடி இரண்டு மேஜைகள் தள்ளி உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்துவிட்டு “இல்லை, இவ்வளவு அழகா இவ இருக்கா. பக்கத்துல அவனைப் பாரு காட்டானாட்டம் இருக்கான்! அவனுங்களுக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்குதுன்னு நினச்சேன். ஹும்… ஸாரிடா! நீசொல்லு, சொல்லு!” என்றான் சதீஷ்.
“நான் ஏதாவது நினைக்கறேன்னு வச்சுக்கோ! ஒரு பத்து வினாடிக்குள்ள அது அப்படியே நடக்குது”
“உதாரணமா?”
“போன வாரம் எங்க பாஸோட பெரிய தகராறு! காச் மூச்னு கத்தல். சொல்றதை காதுலயே வாங்கலை. வந்த எரிச்சல்ல இவன் தலைக்கு மேல இருக்கற மேற்கூரை இவனோட சேர்ல விழுந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சேன். சொன்னா நம்ப மாட்ட! வெரி ஸ்கேரி! அப்படியே மேல்கூரையின் ஒரு பெரிய பகுதி அவன் சேர் மேல தடால்னு விழுந்தது”
“அய்யோ!” லாட்டே கீழே சிதறியது.”என்னடா சொல்றே! ஆள் அவுட்டா?”
” நல்ல வேளையா நான் நினைச்ச அந்த வினாடி அவனுக்கு ஃபோன் வந்தது. எடுத்துட்டு ஜன்னல் பக்கம் போனான் சிக்னலுக்காக. அப்பதான் தடால்னு… சேர் சுக்கு நூறாயிடுத்து! அவன் அப்படியே பேய் அறைஞ்சமாதிரி “ஏய்! ஏய்! என்ன! என்ன? ஐய்யோ ஐய்யோன்னு அப்படியே தலையிலே கைவச்சுட்டு தரையிலே உக்காந்துட்டான்! வெளியில இருக்கிற காபின்லேந்து எல்லாரும் ஓடிவந்து ஒரே ரகளை!”
“மை காட்! அதிர்ஷ்டவசமா நீ பொழைச்ச!ஆனா நம்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கே! இது ஒரு தற்செயலான நிகழ்வாகூட இருக்கலாம் இல்லையா?”
அந்த அழகிய பெண்ணும் , ‘காட்டானு’ம் கிளம்பினார்கள். இவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தனர். சதீஷ் பெருமூச்சுவிட்டான்.
‘காட்டான்’ இரண்டு எட்டு எடுத்துவைத்தவுடன் தடாலென்று கீழே விழுந்தான். நாலாபக்கங்களிருந்தும் கடை ஊழியர்கள் ஓடிவந்தனர். ” ஆர் யூ ஆல்ரைட் சார்?” அவன் எரிச்சலோடும், அவமானத்தோடும் எழுந்துகொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து “கம் க்விக்லி!” என்றான்.
சதீஷ் வாயைப் பிளந்தபடி இவனைப் பார்த்து வாயசைவாக ‘நீயா’ என்றான். மனு தலை அசைத்தான்.
“என்னடா பண்றது?”
“நினைக்கற அத்தனையும் நடக்குதா?”
“இல்லை! சில நாட்கள்ல இரண்டு முறை கூட நிகழும். சில சமயம் ஒரு வாரம் முழுக்க ஒண்ணும் நடக்கறதில்லை. சொல்ல முடியறதில்லை!”
“எனக்குத் தெரிஞ்ச சைகாலஜிஸ்ட் ஒத்தர் இருக்கார். டாக்டர் வெங்கடாசலம்னுட்டு….”
“ஏய்! இதுக்கு எதுக்குடா சைகாலஜிஸ்ட்? இது எதுவும் நடக்கலை, நானா இதை எல்லாம் கற்பனை பண்ணிக்கறேன்னு சொல்றயா?”
“இல்லடா! நானே இப்ப பாத்தேனே! நீ நினைக்கறது நடக்குதுங்கறது, மனசளவிலே உனக்கு பெரிய பாரமான விஷயம். இந்த டாக்டர் எழுவந்தைந்து வயதுக்காரர். அனுபவசாலி. அவரோட நாற்பது நாற்பத்தைந்து வருட அனுபவத்தில அவர் எத்தனையோ வினோதமான கேஸ்களைப் பாத்திருக்கலாம். உனக்கு இதை எப்படி கையாளணும்னு சொல்லித்தருவார்.”
திப்பசந்திரா மார்க்கெட்டுக்கு எதிர்சந்தில் திரும்பி இரண்டாவது இடதில் திரும்பு. பின்னர் நேரே கொஞ்ச தூரம் போனா பார்க் ஒண்ணு வரும். அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் நான்காவது வீடு என்று சொல்லியிருந்தான் சதீஷ். பழங்காலத்து வீடு. கேட்டிலிருந்து உள்தள்ளி இருந்தது. வெளியே “மாத்ரு” என்று கற்பலகையில் பேர் இருந்தது. இதுதான்!
ஒரு நாளைக்கு நாலு பேரைத்தான் பார்ப்பாராம். சாயங்காலம் ஐந்தரையிலிருந்து ஏழரை வரை.
இவன் போகும்பொழுது ஃபோனை நோண்டியபடி ஒரு இளம் அம்மாவும் ஐந்து துறுதுறு குழந்தையும் இருந்தனர்.
வரவேற்பாளினி இவனைப் பார்த்து “மனு?” என்றாள்.
“யெஸ்” என்று தலை அசைத்தான்.
அவனைப்பற்றின விவரங்களை கணினியில் பதிந்தாள்.
“ஆஃப்டர் அஷ்வின், யூ கேன் கோ!” என்றாள்.
தலையில் வழிகிற மயிரும் கண்ணில் குறும்புமாக அஷ்வின் இவனைப் பார்த்து உற்சாகமாக சிரித்தான். டீபாயின் கீழ் இருந்த இடைவெளியில் நுழைந்து இவனிடம் வந்தான். அம்மா ஃபோனிலிருந்து கண்ணை எடுக்காமல் “அஷ்வின்!” என்றாள்.
இவன் அருகில் வந்து அமர்ந்து “உன் பெயர் மனு. ரைட்?” என்று கேட்டான்.
இவன் சிரித்தபடி “ஆம்” என்றான்.
“நைஸ் நேம்”
தன் கால் சட்டைப்பையிலிருந்து ஒரு வண்ணமயமான கனசதுரத்தை எடுத்து அதில் விதவிதமான மூன்று பரிமாண வடிவங்களை உருவாக்கினான். அவன் குட்டி விரல்கள் அதன் மேல் அழகிய நடனம்போல இயங்கியது வசீகரமாக இருந்தது.
“இது பேர் என்ன?” மனு கேட்டான். “ஷஷிபோ” என்றான் அஷ்வின்.
“என்ன ஜப்பானிய பேர் மாதிரி இருக்கே?”
அஷ்வின் அவனைப் பார்த்து சந்தோஷமாக சிரித்து “நான் கூட ஃபர்ஸ்ட் அப்படித்தான் நினைச்சேன்! ஆனா இது ஆக்சுவலா ஷேப் ஷிஃப்டிங் பாஃக்ஸ் அப்பிடிங்கறதோட சுருக்கம்!”
“நான் டிரை பண்ணிப் பார்க்கட்டுமா?”
“ம்!. நிச்சயமா”. தலையை ஆட்டிக்கொண்டே கொடுத்தான்.
மனுவால் அந்த கனசதுரத்தைப் பிரிக்கவே முடியவில்லை.
“ஃப்ர்ஸ்ட் அப்படித்தான் இருக்கும். பழகினா வந்துடும்” என்றான் பெரிய மனுஷ தோரணையில்.
“உங்களுக்கு எந்த காமிக்ஸ் பிடிக்கும்?”
“இப்ப உன்னை மாதிரி குழந்தைங்கயெல்லாம் என்ன படிப்பீங்கன்னு தெரியலையே?” இப்படிச் சொல்லும் அளவுக்கு தனக்கு வயசாகிவிட்டதோ என நினைத்து கவலைப்பட்டான்.
“பரவாயில்லை, நீங்க படித்ததை சொல்லுங்க!”
“ம்……. கால்வின் அண்ட் ஹாப்ஸ்”
“அய்! எனக்குக் கூட பிடிக்கும்” பின் ரகசியம் பேசுகிற குரலில் “என்னோட ஹாப்ஸ் வீட்டுல இருக்கு! அம்மா கொண்டு வர விடலை! அவனுக்கு அதுனால என் மேல கோவம்! என்னோட விளையாட மாட்டேன்னுட்டான்”
“அஷ்வின் கம் ஹியர்! சிட் டைட்!” என்றாள் ஃபோனிலிருந்து தலையைத் தூக்கி.
“ஹி இஸ் எக்ஸ்ட்ரீம்லி ஸ்மார்ட்! இவனுக்கு எதுக்கு இவரைப் பார்க்கணும்” என்றான் மனு.
அவனை ஒரு நிமிடம் முறைத்துவிட்டு “அன்னியர்களிடம் அறிவுரை கேட்கும் வழக்கம் எனக்கில்லை” என்றாள் தெளிவான ஆங்கிலத்தில்.
“ஐ’ம் சாரி”
கொஞ்சம் இடைவெளிவிட்டு “உங்களுக்கு இந்த டாக்டரைத் தெரியுமா?”
“ம்?”
கேள்வியை மீண்டும் சொன்னான்.
“இல்லை! தெரியாது!”
அஷ்வின் ஒருகையால் வாயை மூடி சிரித்தபடி மறுகையின் கட்டை விரலை உயர்த்தினான்.
“என்னடா! கெக்கெ பிக்கேன்னு சிரிப்பு” முதல் தடவையாக தமிழுக்குத் தாவினாள்.
அஷ்வின் அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டு அங்கு கிடந்த பத்திரிகையை எடுத்து தீவிரமாக படிக்கத் தொடங்கினான். பென்சிலினால் அதில் ஏதோ குறித்தான்.
டாக்டர் அறையின் கதவைத் திறந்துகொண்டு ஒருவரை ஒருவர் விரோதமாக பார்த்தபடி ஒரு வயதான தம்பதியர் வந்தனர்.
“நௌ ! அஷ்வின்!யூ கேன் கோ!”
அஷ்வின் மனுவைப் பார்த்து “பை! “என்றபடி டாக்டரைப் பார்க்க உள்ளே
போனான்.
அஷ்வின் போன பிறகு அவன் பிரித்துவைத்துவிட்டு போன இதழின் பக்கத்தை படிக்க ஆரம்பித்தான். ஈர்ப்பு அலைகள்!! அது ஈர்ப்பு அலகளைப்பற்றிய ஒரு கட்டுரை “மை காட்! இந்தப் பையன் உண்மையாக இதைப் படித்தானா?”
2015 செப்டம்பர் மாதம் முதன் முதலாக ஈர்ப்பு அலைகளின் இருப்பை பரிசோதனை மூலம் லூசியானாவிலும், வாஷிங்டன் மாகாணத்தில் ஹான்ஃபர்டிலும் ஒரே நேரத்தில் கண்டறிந்ததைப் பற்றிய கட்டுரை. 1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த இரண்டு கருந்துளைகளின் மோதலினால் விளைந்த ஈர்ப்பு அலைகள் பூமிக்கு 2015ல் அத்தனை வருடங்கள் கழித்து வந்து சேர்ந்தவை எவ்வாறு கண்டறியப்பட்டன என்பதைப்பற்றி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அஷ்வின் 1.3 பில்லியன் வருடங்களை அடிக்கோடிட்டு குழந்தை கையெழுத்தில் ஏதோ எழுத ஆரம்பித்திருந்தான். அதற்குள் அம்மா கூப்பிட்டிருப்பாள் போலிருக்கிறது. மனு அது என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.
மனுவுக்கு தலை வலிப்பது போலிருந்தது. பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போய் டீ குடித்துவிட்டு வருவதாக வரவேற்பாளினியிடம் சொல்லிவிட்டுப் போனான். போய்விட்டு வருவதற்குள் அஷ்வினும் அம்மாவும் போயிருந்தார்கள். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. வரவேற்பாளினி “டாக்டர் இஸ் வெய்டிங்க் ஃபார் யூ!” அவ்வளவாக ஸ்னேகம் இல்லாத குரலில் சொன்னாள். அவள் வீட்டுக்குப் போவது தாமதப்படும் என்ற கவலை போலும் என நினைத்தான்.
அவன் அந்த அறைக்குள் நுழைந்தான். அது ஒரு மேல் நடுத்தர வர்க்க வீட்டு வரவேற்பறை மாதிரி சௌகர்யமான ஒரு இதமான சூழ்நிலையைத் தருவதாக இருந்தது. டாக்டர் ஒல்லியாக உயரமாக இருந்தார். மூக்கு கூர்மையாக நீளமாக இருந்தது. ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் போல இருந்தார். “ஹலோ! மனு எப்படி இருக்கிறீர்கள்? உட்காருங்கள்,” என்று அவர் அமர்ந்திருந்திருந்த ஸோஃபாவிற்கு எதிர் ஸோஃபாவைக் காட்டினார்.
“கம்ப்யூடர் துறையில் இருக்கிறீர்கள் இல்லையா? இப்போ ஒர்க் ஃப்ரம் ஹோமா இல்லை அலுவலம் போக வேண்டியிருக்கா?”
“இல்லை! டாக்டர் ஆஃபிஸ் போக ஆரம்பிச்சாச்சு!”
அப்புறம் இஸ்ரேல் ஹமாஸ் சண்டை, ஐரோப்பாவின் பொருளாதாரம், கடைசி சில வருடங்களாக ஹிந்தி சினிமா அவ்வளவு சுவாரசியமில்லாமல் போனது ஏன் என்று பல பட்டறையாக பேசிவிட்டு சட்டென்று கேட்டார் “சொல்லுங்க! உங்களுக்கு என்னோட என்ன பேசணும்?”
“எனக்கு…. அதாவது நான் நினைக்கறதெல்லாம் நடக்குது” அவர் சிரிப்பார் என்று எதிர் பார்த்தான். அவர் அவன் சொல்வதை ரொம்ப கவனமாகக் கேட்டபடி “சரி” என்றார்.
“சமீபமா நடந்த ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”
அவன் சதீஷிடம் சொன்னதையும் கஃபேயில் நடந்ததையும் சொன்னான்.
“வேற?”
“டாக்டர்! நான் இருபத்தெட்டு வயது இளைஞன். சில சமயங்கள் எண்ணங்கள் அப்பிடி இப்பிடி போகறது நார்மல்தான?”
“நிச்சயமா!”
“அப்படி ஏதாவது இசகு பிசகா நடந்துடுமோன்னு பயமா இருக்கு டாக்டர்”
“அது மாதிரி இது வரைக்கும் எதுவும் நடக்கலையில்லை?”
கொஞ்சம் தயங்கி அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ” பத்து நாளைக்கு முன்னால ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அழகான பொண்ணு வெண்ணிற கலர்ல ஃப்ராக் மாதிரி ஒரு ட்ரெஸ்ல அசத்தலா இருந்தா! யாருக்காகவோ காத்துக்கிட்டிருந்தா. உங்களுக்கு மர்லின்மன்ரோ படத்துல வந்த, செவென் இயர்ஸ் இட்ச்னு நினைக்கிறேன், பிரசித்தமான அந்த வெள்ளை கலர் ஃப்ராக் காட்சி நினைவிருக்கா? அந்த மாதிரி இப்ப நடந்தா எப்பிடி இருக்கும்னு நினைச்சேன்! அதே மாதிரி அந்த டிரஸ் காத்துல பறக்கற மாதிரி பறக்க ஆரம்பிச்சது. அவ தன்னோட டிரஸ்ஸை தன் கைகளால் கட்டுப்படுத்த முயன்றாள். முடியலை. அந்த இடத்துல அப்படி திடீர்னு பெரிய காத்து அடிக்கறதுக்கான சாத்தியமேயில்லாத போது அப்படி நடந்தது அவளுக்கு அதிர்ச்சியா இருந்தது. டக்னு கிளம்பிப் போயிட்டா!”
“ம்.. இப்படி ஏறு மாறா நடந்தா சிக்கல்தான்! ஆனா ஒரு நாளைக்கு லக்ஷக் கணக்கான எண்ணங்கள் வருமே, அவை எல்லாம் நடக்க ஆரம்பிச்சால் பெரிய களேபரமா ஆயிடுமே!”
“இல்ல டாக்டர் ! அப்படி எல்லா எண்ணங்களும் நடப்பதில்லை சில சமயம் ஓரிரு வாரங்கள் அமைதியாக செல்வதுண்டு. சில சமயம் ஒரே நாளில் இரண்டு நடந்து பகீர் கிளப்புவதுண்டு”
“ பொதுவாக நினைத்து கொஞ்ச நேரம் கழித்து நடக்கிறதா? சில சமயம் சில நாட்கள் கழித்து?”
“ இது வரைக்கும் நினத்து ஒரு பத்து வினாடிக்குள் நடந்துவிடுகிறது. இனிமேல் என்ன ஆகுமோ தெரியலை”
“எந்த எண்ணங்கள் நடக்கின்றன? அவை நடக்கும் பொழுது எதேச்சையாக ஏதோ ஒரு பொதுவான விஷயம் அந்த காட்சிகளில் இருந்திருக்கின்றனவா? அதாவது அந்த இடங்களில் எல்லாம் பச்சை சட்டை போட்ட ஒரு மனிதன் அல்லது காதருகில் பறக்கிற குளவி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் என்று இது மாதிரியாக ஏதோ ஒன்று? அல்லது ஏதாவது பாட்டோ அல்லது சத்தமோ?”
“அந்த மாதிரி எதையும் கவனித்தோ யோசித்தோ பார்த்ததில்லை. சொல்லப் போனால் எந்த எண்ணம் நடக்கப் போகிறதென்றே தெரியாததால் …..”
“யெஸ்! யெஸ்! நீங்கள் சொல்வது சரிதான்!”
“அப்புறம் டாக்டர்! நல்லதாக நினைத்தது எதுவுமே நடக்கலை! பொதுவாக கொஞ்சம் ஆபத்தானவை, கெட்டவை என்பனவே நடக்கின்றன.”
“அப்படியா? ஏன் அப்படி நிகழ்கிறது என நினைக்கிறீர்கள்?”
“எதிர்மறையான எண்ணங்களான கோபம், வன்மம், வஞ்சம், துயரம் ஏமாற்றம் போன்றவை தீவிரங்களில் அடைகிற உச்சங்கள், நேர்நிலையான எண்ணங்களான அன்பு, கருணை,மகிழ்ச்சி போன்றவைகளுக்கு கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது”
டாக்டர் ஆமோதிப்பது போல தலையை அசைத்தார்.
” சரி! உங்களுக்கு மட்டும் இந்த சக்தி எப்படி கிடைத்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
“அது எனக்கு என்னுடைய பரம்பரையிலிருந்தே கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது டாக்டர்”
“இன்ட்ரெஸ்டிங்க்! உங்க வீட்டுல வேற யாருக்காவது இந்த சக்தி இருக்கா?”
“இப்ப என் குடும்பத்துல இருக்கிற யாருக்கும் அந்த மாதிரி சக்தி இல்லை! ஆனா என்னோட பாட்டியோட பாட்டிக்கு மாமா ஒத்தர் கவி சிதம்பர பாரதி ன்னு இருந்தாராம். மதுரை பக்கத்துல இருந்த ஒரு ஜமீன்ல அவர் இருந்திருக்கார். அவர்கிட்ட ஒரு விதமான பவர் இருந்திருக்கு!”
“என்ன மாதிரி?”
“சொல்றேன்! ஒரு சமயம் நாட்டுல பெரிய பஞ்சம் ஏற்பட்டிருக்கு! ஜனங்கள் பசியிலும் பட்டினியிலும் செத்திட்டுருக்காங்க! அப்பவும் ஜமீந்தார் குடிகள் தனக்கு செலுத்த வேண்டிய வரியையும், நெல்லையும் செலுத்தணும்னு கொடுமைபடுத்தியிருக்கார். ஜனங்க இந்த கவி கிட்ட வந்து கெஞ்சியிருக்காங்க. ‘நீங்க கொஞ்சம் சொல்லிப் பாருங்க! நாங்க அடுத்த வருஷம் இந்த வருஷத்துக்கும் சேத்து குடுத்துடறோம். இப்ப பசி தாங்க முடியலை அய்யா! குழந்தை குட்டிகள் எல்லாம் பட்டினில சாகுதுங்க! அவரோட களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் குருணை அரிசியாவது கொடுக்க சொல்லுங்க! கஞ்சி காச்சி குடிச்சுக்கறோம்’ னு சொல்லியிருக்காங்க! இவரும் போய் கெஞ்சியிருக்கார். ஜமீந்தார் ‘ என்னய்யா! அவங்கதான் புத்தி கெட்டு சொல்றாங்கன்னா நீயும் வந்து கேக்கறே! அவன் காசு குடுக்கணும், நெல்லு கொடுக்கணும்ங்கறேன்! நீ என்னடான்னா அவங்க தர மாட்டங்க ஆனா உன்னோட நெல்லை அவங்களுக்கு கொடுன்னு என்னைச் சொல்றே! குதிரை குப்புற தள்ளினதும் இல்லாம குழி ஒண்ணும் பறிச்சுதாங்கிற கதையா இல்ல இருக்கு, போய்யா!’
அந்த ஏழை ஜனங்களையும் அவரோட ஆளை வைச்சு அடிச்சு நொறுக்குகிறார்.
இவர் கெஞ்சறார். ‘உங்க கால்ல விழறேன் ஏழை ஜனங்க பசியில சாகறாங்க! கொஞ்சம் தயவு பண்ணுங்க’ன்னு கால்ல விழுந்தார்! அவரை கண்டபடி ஏசி கால்ல எட்டி உதைச்சார். இவர் ரௌத்ரத்துடன் எழுந்தார். உரத்த குரலில் ,
‘ஏழைக்கு இரங்காத நீ உயிருடன் இருப்பதே வீண்’ என்கிறார்.
‘ஓ! அப்ப என்ன பண்ணப் போறே? என்னைக் கொல்லப்போறயா? எப்படி?’ன்னு கேட்டு கடகடன்னு சிரிக்கறார்.
‘என் பாட்டால கொல்லுவேன்’
‘அட இது புதுசா இருக்கே. கொல்லு பாப்போம்’னு இன்னும் பலமா சிரிக்கிறார்.
அந்த பெரு மத்தியான வேளையிலே கசங்கி கிழிந்த கந்தல் உடையோடையும் அவிழ்ந்த குடுமியோடையும், ஒட்டிய வயிறோடையும் கண்கள் சிவக்க உரக்கப் பாடறார்.
அந்தப் பாடலோட கடைசி வரி “வெள்ளிடி வீழ்ந்து மாள்கவே!” பாடி முடிக்கும் போது சுட்டெரிக்கிற மத்தியானவேளையில், ஒரு பொட்டு மேகம் கூட இல்லாத பளீர் வெயில் அடிக்கற பொழுதில், வானத்திலிருந்து ஒரு பேரிடி அண்டசராசரம் வெடிச்சு உடைஞ்ச மாதிரி பெரிய சத்தத்தோட நேர அந்த ஜமீந்தார் தலையில விழுந்து அப்படியே அவர் கருகி சாகிறார். ஜனங்களோட ஆஹாஹாரம்!
இந்த நிகழ்ச்சியை என்னுடைய சித்தப்பா ஒருவர் எங்கிட்ட மதுரை மீனக்ஷி அம்மன் கோவில்ல அக்னி வீர பத்திரர் சிலைக்கு முன்னாடி வைச்சு சொன்னார். எனக்கு அப்போதும் இடி சத்தம் கேட்டா மாதிரி இருந்தது. அந்த தாத்தா வாக்குக்கு இருந்த வல்லமையில கொஞ்சம் என் எண்ணத்துக்கும் வந்திருக்கோன்னு நினைக்கிறேன்”
அவன் எதிரில் வைக்கப் பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
டாக்டர் முழு கவனத்துடன் அவன் சொல்வதைக் கேட்டார்.
பின் நிதானமாக பேச ஆரம்பித்தார்.
“நீங்கsynchronicity ங்கிற பதத்தைக் கேள்விப்பட்டுருக்கீங்களா?”
“ கேள்விப் பட்டா மாதிரி இருக்கு! ஆனா அவ்வளவு தெளிவா தெரியலை”
“கார்ல் யூங்க் என்கிற உளவியல் ஆய்வாளர்தான் அந்த பதத்தை முதன் முதலாக பயன்படுத்தினார். அதாவது ஒன்றோடொன்று தொடர்புடையது போன்று நடக்கிற நிகழ்வுகள் ஆனால் அவைகளுக்கிடையே புலனாகக்கூடிய தொடர்பு எதுவும் கிடையாது என்பதான நூதனமான நிகழ்வுதான் synchronicity.
உதாரணமா சில பேர் வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு சமயங்களில் யதேச்சையாக கடிகாரத்தைப் பார்க்கும் பொழுது எல்லாம் மணி 1.11 , 3.03, 5.55 என்பதாகவே அமைகிறது என்று உணர்ந்திருக்கிறார்கள்.இது ஏதோ ஒன்றிற்கான சமிக்ஞையோ என்பதான சந்தேகம் கூட அவர்களுக்கு.
அப்புறம் கனவில் கண்ட சில மனிதர்களையோ, இடங்களையோ, மிருகங்களையோ நிஜ வாழ்க்கையில் திரும்ப திரும்ப சந்திக்க நேரிடுவது,
நினைக்கின்ற விஷயங்கள் ரொம்ப அதிசயமான முறையில் அப்படியே வாழ்வில் நடப்பது,
அப்புறம் நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் , சிக்கலான பிரச்னைக்கு, ரோடில் நடந்துபோகிற இரண்டு பேரின் சம்பாஷணையில் மிகச் சரியான விடை கிடைப்பது இவையெல்லாம் synchronicityக்கு உதாரணங்கள். இவற்றில் ஒன்றையோ, சிலவற்றையோ, எப்பொழுதாவது ஒரு முறையாவது எல்லோருமே உணர்ந்திருப்பார்கள்.
இதற்கு பல விளக்கங்கள் இருக்கின்றன.
இந்து தத்துவ விளக்கப்படி இது எங்கும் நிறைந்த பிரம்மத்தின் இருப்பை அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கிடையேயிருக்கிற தொடர்பை குறிக்கிறது.
க்வான்டம் இயற்பியல்படி synchronicity உலகளாவிய உணர்நிலையை, பிரக்ஞையை குறிக்கிறது.
மொத்தத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன நம்புகிறோமோ அவையே நாம் உணர்வதை தீர்மானிகின்றன.
நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்.நீங்க ஒண்ணு பண்ணுங்க! இது வரைக்கும் நடந்தது எதுவுமே தற்செயல் இல்லை அப்படிங்கறதை நமக்கு நாமே உறுதி செய்துகொள்ள இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் நடப்பதைக் கவனமாக உற்று நோக்குங்கள். நடக்கும் நிகழ்வுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்புறம் இது உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஒரு நல்ல வாய்ப்பு. எப்படின்னா நம் எல்லோருடைய எண்ணங்களுமே கசடுகள் நிறைந்தவை. ஒரு பெரு முயற்சி செய்து அவை நல்ல எண்ணங்களாக மட்டுமே இருப்பதற்கான ஒரு முயற்சி செய்வதற்கான வாய்ப்பு இது. ஏறத் தாழ நடைமுறை சாத்தியமில்லாததுதான். குறைந்த பட்சம் கெட்ட சிந்தனைகளின் அளவைக் குறைக்க முயற்சிக்கலாம்.
அதற்கு இடையில் உளக்குவிப்பு , ஆழ்நிலை தியானம், யோகா போன்றவற்றை நல்ல குரு ஒருவரிடம் பயிற்சி பெற்று செய்ய தொடங்குங்கள். முடிந்த மட்டும் நல்ல எண்ணங்களையே சிந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். அடுத்த வாரம் என்னை வந்து நிச்சயம் பாருங்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி அபூர்வமான நிகழ்வுகளுக்கான சாத்தியக் கூறுகளை நாம் எப்போதுமே குறைவாகவே மதிப்பிடுகிறோம் – அவை உண்மையில் அவ்வளவு அபூர்வமானவை அல்ல. எனவே அவை சாத்தியமானவையே!
இதை எப்படி கையாளுவது என்பதை இன்னும் சில அமர்வுகளில் நாம் முடிவு செய்து விடலாம் என்றே நினைக்கிறேன். தைரியமாக இருங்கள். அடுத்த வாரம் இதே நாள், இதே வேளை என்னை வந்து பாருங்கள்.” எழுந்து நின்று கை குலுக்கினார்.
அந்த மரங்களடர்ந்த தெருவில் அவன் நடக்க நடக்க இருட்டும், வெளிச்சமும் மாறி மாறி அவன் முகத்தில் அடித்தது. திடீரென்று தோன்றியது தானும் அந்த குழந்தை அஷ்வினும் எக்ஸ் மென் சினிமாவில் வருவது மாதிரி திடீர் மரபணு மாற்றத்தில் அபூர்வமான ஆற்றல் பெற்றவர்களோ? ஒரு வேளை அந்த டாக்டர்தான் பேராசிரியர் எக்ஸோ? ஒரு வேளை சதீஷும் அந்த கூட்டத்தில் ஒருவனோ? இந்த மாதிரி அதீத ஆற்றல் பெற்றவர்களை அரசு கண்டறிந்து தேச நலனுக்காக ரகசிய குழு அமைக்கிறதோ?
தலையை உலுக்கினான்.
‘சரி! எனக்கு வந்த இந்த அதிசய சக்தி என்னை விட்டுப் போகட்டும்! ப்ளீஸ்!ப்ளீஸ்! இல்லாவிட்டால் நான் எங்காவது தொலைந்து போகணும்!’
இன்னும் பத்து வினாடியில் தெரிந்துவிடும்!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

Very good storyline and the style of telling story is very casual..Since we too experience incidents like protagonist Manu, totally engrossed in the story..End of the story is quite impressive..Thanks to the writer for the lovely story..
Very good story and an interesting plot..Like the protagonist Manu , many of us in real life might have experienced the incidents ..I would say the end of the story with its twist is the top notch.Thanks to the writer
Thank you Rajeswari for your lovely comments
மனுவின் பயத்தை நாமும் உணர முடிகிறது… அருமையாக இருந்தது.
உங்கள் அழகான எதிர்வினைக்கு மிக்க நன்றி லதா!
மின்னி மறையும் பாத்திரங்கள் கவி சிதம்பர பாரதி, அஷ்வின் ஏற்படுத்தும் தாக்கமும், மனுவின் தவிப்பும், கதையின் நீட்சியாய், நம் மனதில் நீடிப்பது நிஜம். அருமையான நடை. வாழ்த்துகள்
உங்களின் உற்சாகமளிக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி திரு.தேசிகன்.
உங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி திரு.தேசிகன்!