ரேபிஸ் தொடர்ச்சி

முந்தைய பகுதி

விஸ்கான்சின் தேவாலயமொன்றில் செப்டம்பர் 20, 2014 அன்று நடைபெற்ற   அந்த திருமணத்தில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாயிருந்தது. மணப்பெண் ஜீனாவின் (jeanna giese-frassetto) அலங்காரமான வெள்ளை உடை அவரது தோள்பட்டைகள் திறந்திருக்கும்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரது புஜத்தில் ஒரு பெருக்கல் குறியின் மீது பறக்கும் வவ்வாலும் அதற்கு கீழே ’’அற்புதங்கள் நிகழும்’’  செப்டம்பர் 12, 2004   என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள், ஜீனாவுக்கு  10 வருடங்களுக்கு  முன்னர்   கோரமான ஒரு நிகழ்வு நடந்த மற்றொரு தேவாலயத்திலும், ஜீனாவின் மறுபிறப்புக்கு காரணமாயிருந்த  மருத்துவர் ரோட்னியுடனும புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருமண தேதியும் செப்டம்பர் 12க்கும் உலக ரேபிஸ் தினமான செப்டம்பர் 28 க்கும் இடையில் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தது.

 திருமண விருந்தில் மிக சுவாரஸ்யமான விளையாட்டுகள் இருந்தன. முதலாவது ’முத்த நன்கொடை’, விருந்தாளிகள் 1 டாலர் செலுத்தி சீசாவுக்குள்ளிருந்து  ஒரு அட்டையை தேர்ந்தெடுப்பார்கள். அட்டையில் இருக்கும் எண் 6 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் மணமக்கள் முத்தமிட்டுக் கொள்வார்கள். 6 க்கும் குறைவான எண் இருந்தால் விருப்பப்பட்ட தொகையை நன்கொடையாக அவர்கள் அளிக்கலாம்.

இரண்டாவது’டாலர் நடனம்’.1 டாலர் செலுத்தியவர்கள் மணமக்களுடன் நடனமிடலாம். வந்திருந்த அனைவரும் தொகை செலுத்தி நடனமிட்டனர் . இரண்டு விளையாட்டுக்களிலும் சேர்த்த கணிசமான தொகையை பிற  மணமக்களை போல அவர்கள் தேனிலவுக்கு செலவழிக்கவில்லை மாறாக  அதை ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அளித்தார்கள். தேனிலவுக்கு  மிச்சிகனில் நடைபெற வவ்வால் திருவிழாவுக்கு சென்று அங்கு கூடியிருந்தோரிடம் ஜீனாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு என்ன நிகழ்ந்தது என விளக்கினார்கள்.

2004 செப்டம்பர் 12, ஞாயிறு அன்று அதிகாலை பள்ளியில் வாலிபால் விளையாடிவிட்டு வந்து குடும்பத்தினருடன் தேவாலயத்துக்கு சென்ற ஜீனாவுக்கு ,அந்த நாள் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகிற,  மருத்துவ வரலாற்றில் தன்பெயரை அழுத்தமாக பதிக்கப்போகிற நாள் என்று தெரிந்திருக்கவில்லை

குடும்பத்தினர் அனைவருமாக காலை தேவாலயத்துக்கு சென்றார்கள். ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தேவாலயத்தின் உள்ளே மாட்டிக்கொண்ட ஒரு வவ்வால் ஜன்னல்கள் வழி பறக்கமுயற்சி செய்து கீழே விழுந்துகொண்டிருப்பதை ஜீனா கண்டாள்.   அந்த வவ்வாலை காப்பாற்ற அதன் இறகுகளின் நுனியை பிடித்து தூக்கி சென்று வெளியில் இருந்த ஒரு பைன் மரத்தில் விடப்போன அவளை அது  கட்டைவிரலில் கடித்துவிட்டு நழுவிப் பறந்தது.

அந்த காயத்திற்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பலரும் அப்போது ஜீனாவின் தாயிடம் தெரிவித்தாலும் அவர் வவ்வால்களில் ரேபிஸ் தொற்று இருப்பது வெறும் 1 சதவீதம்தான் இது மிகச்சிறிய காயம், எனவே மருந்திட்டால் போதும் என்றார்.

 ஆனால் ஜீனாவை கடித்த அந்த வவ்வால் துரதிர்ஷ்டவசமாக அந்த 1% ல் இருந்த ரேபிஸ் தொற்றுக்குள்ளானதுதான்.

ஜீனாவுக்கு 3 வாரங்களுக்கு பிறகு கைகளில் வலியுண்டானபோது அது வாலிபால் விளையாட்டினால் என்றே அவள் நினைத்துக்கொண்டாள். அக்டோடரில் மிக சோர்வான ஜீனா அடிக்கடி குமட்டலையும் கொண்டிருந்தாள். ஒருநாள் வாலிபால் விளையாடுகையில்  காட்சிகள் இரண்டிரண்டாக தெரிந்து மைதானத்திலேயே  மயங்கி விழுந்த ஜீனா மருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர் கண்விழித்த போது  நினைவுகள் பலவற்றை இழந்திருந்தாள்.

 மருத்துவமனையில் நைல் வைரஸ் உள்ளிட்ட பல சோதனைகளின் முடிவும் ஜீனாவுக்கு எதுவும் இல்லையென்றே சொன்னபோதுதான் ஜீனாவின் தாய் வவ்வாலின் கடியை மருத்துவர்களிடம் தெரிவித்தார். ஆனல் அதற்குள் ஜீனாவுக்கு வலிப்பு உண்டாகி நினைவு தப்பியிருந்தது.  

ஜீனா உடனே மில்வாக்கி குழந்தைகள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச்செல்லப்பட்டாள். (Children’s Hospital – Milwaukee)

ஜீனாவின் கேசம், சருமத்தின் சிறுபகுதி  மற்றும் எச்சில் ஆகியவற்றின் சோதனைகள் ஜீனாவுக்கு ரேபிஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தின.

 ஜீனாவை மரணம் வரை மருத்துவமனையில் வைத்துக்கொள்ளலாம் அல்லது வீட்டுக்கு கூட்டிச்செல்லலாம் என்னும் இரு வாய்ப்புக்கள் ஜீனாவின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது.

 அப்போது அந்த மருத்துவமனையில் 3 மாதங்களுக்கு முன்னர் பணியில் சேர்ந்திருந்த  மருத்துவர் ரோட்னி (Dr. Rodney Willoughby), மூன்றாவதாக ஒரு வாய்ப்பை குறித்து சொன்னார். அதுதான் பிற்பாடு அந்த மருத்துவமனை இருந்த நகரின் பெயரில் அழைக்கப்பட்ட, ஜீனாவை காப்பாற்றிய மில்வாக்கி சிகிச்சைமுறை.(The Milwaukee Protocol)

 தடுப்பு மருந்து அளிக்கப்படாத  தொற்று  தீவிரமாக உண்டாயிருந்த ஜீனாவின் மூளையை மருந்துகள் மூலம் செயல்படாமல்   செய்து, செயற்கையாக அவளை கோமாவில் ஆழ்த்தி,  ரேபிஸ் வைரஸ் மூளைக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டது. படிப்படியான சிகிச்சைகளில் ஜீனா 2 வாரத்தில் குணமாகி கோமாவிலிருந்து மீட்கப்பட்டாள். 

முற்றிலும் குணமாகி 75 வது நாள் வீடு திரும்பிய  ஜீனாவை வரவேற்க ’’ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து ஜீனா பிழைக்கவேண்டும்’’ என்னும் வாசகம் எழுதப்பட்ட நீல நிற பிரார்த்தனை பட்டையை கைகளில் கட்டிக்கொண்டிருந்த  ஏராளமான உறவினர்களும் நண்பர்களும்   காத்திருந்தார்கள். அதன்பிறகே ஜீனா அற்புதம் நிகழ்ந்தது என்று பச்சை குத்திக்கொண்டார்

 இந்த சிகிச்சை குறித்த கண்டனங்களும், விமர்சனங்களும்   அன்றிலிருந்து இன்றும் இருக்கின்றன என்றாலும் தடுப்பு மருந்தளிக்கப்படாமல்  ரேபிஸ் தொற்றிலிருந்து ஜீனா மீண்டு வந்தது  ஒரு அற்புதம்தான். இத்தனை நூற்றாண்டுகளில் ரேபிஸை  நம்மால் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை எனினும் ஜீனா தடுப்பூசி அளிக்கப்படாமல்  ரேபிஸ் தொற்றிலிருந்து மீண்ட  உலகின் முதல்  பெண்ணாகியது ஒரு பெரும் சாதனைதான். 

இன்னுமே உலகின்  ஆண்டுக்கு 60 ஆயிரம் மரணங்களுக்கு ரேபிஸ் தொற்று காரணமாக இருக்கிறது.

பொதுவாக வெறி பிடித்த நாய், பூனை, வவ்வால் போன்றவற்றின் கடியிலிருந்துதான் ரேபிஸ் பரவும் என்றாலும் அரிதாக நாய்களின் தும்மல், பிறாண்டல் மற்றும் நாக்கால் நக்குதலாலும் ரேபிஸ் பரவும்.  வெறி பிடித்த விலங்குகளினால் உண்டாகும் தொற்று ரேபிஸ் எனப்படுவது போல அதை உருவாக்கும் வைரஸின் பெயரும் ரேபிஸ்தான். zoonosis எனப்படும் விலங்குகள் வழி மனிதனுக்கு தாவும் நோய்களில் ரேபிஸ்  மிக பழமையானது, மிக முக்கியமானதும் கூட . 

 ரேபிஸ் பரவல்

பலர் நினைப்பது போல ரேபிஸ் தொற்று வளரும் / ஏழைநாடுகளில் மட்டும் நிகழ்வதல்ல, அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் ரேபிஸ் தொற்று இருக்கிறது. 

அமெரிக்காவில் ஹவாய் மட்டுமே முற்றிலும் ரேபிஸ் இல்லாத பகுதி. ஹவாயை போலவே ரேபிஸ் இல்லாத பிற பகுதிகளும் பெரும்பாலும் தீவுகளாகத்தான் இருக்கின்றன. தீவுகள் போன்ற தனித்த சிறிய நிலப்பரப்புகளில் விலங்குகளின் ஆரோக்கியம், மனித விலங்கு உறவுகள் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுப்பது எளிதாக இருக்கிறது

வளர்ப்பு நாய்கள் தடுப்பூசி போடப்படுவது சட்டபூர்வமாக முறைப்படுத்தப்பட்டிருப்பதால்  அமெரிக்காவில் நாய்களினால் உண்டாகும் ரேபிஸ் தொற்று  அரிதினும் அரிதாகி இருக்கிறது.  ஆனால் ஃப்ளோரிடா, அரிஸோனா பகுதிகளில் வவ்வால் மற்றும் சாம்பல் நரியினால் உண்டாகும் ரேபிஸ் தொற்று மிக அதிகமாக இருக்கிறது.  டெக்ஸாஸில் ஸ்கங்க்ஸ் மற்றும் வவ்வால்களால் ரேபிஸ் தொற்று இருக்கிறது.

 கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் 23 ரேபிஸ் தொற்றுக்கள் இருந்தன அதுவும் வவ்வால்களால் உண்டானதுதான் நாய்களால் அல்ல.

ஆஸ்திரேலியாவின் சில தீவுகளிலும் ரேபிஸ் இல்லை. சுமார் 50 நாடுகளில்  விலங்குகளால் பரவும் ரேபிஸ் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. நாய் மூலமாக பரவும் ரேபிஸ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மேற்கு ஐரோப்பா,ஜப்பான் மற்றும் சில பசிபிக்  தீவுநாடுகளில்  முற்றிலும் இல்லையென்றே சொல்லலாம். இந்நாடுகளில் காடுகளின் விளிம்பில் இருக்கும் பகுதிகளில் மட்டும் வனவிலங்குகள் மூலம் அரிதாக ரேபிஸ் தொற்று உண்டாகிறது.  

ஐரோப்பாவில் மிக அரிதாகவே ரேபிஸ் தொற்று இருக்கிறது

ஸ்விட்சர்லாந்தில் நரிகள் மூலம் பரவும் ரேபிஸ், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வைக்கப்பட்ட ரேபிஸ் தடுப்பு மருந்து தடவப்பட்ட கோழி இறைச்சித்துண்டங்களால் தடுக்கப்பட்டது. இத்தாலியிலும் 2011 க்கு பிறகு ரேபிஸ் தொற்று கண்டறியப்படவில்லை.

ஐக்கிய நாடுகளில் ரேபிஸ் மிக மிக அரிது. ஸ்வீடன், நார்வே போன்ற பகுதிகளில் 1886 லிருந்தே ரேபிஸ் இல்லை. மெக்சிகோ 2019 லிருந்து ரேபிஸ் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசியாவில் மட்டும் உலக ரேபிஸ் மரணங்களில் சுமார் 59.6%  நிகழ்கிறது, ஆப்பிரிகாவில் 36 %.

இந்தியாவில் ரேபிஸின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. லட்ச தீவுகள், அந்தமான் நிகோபர் தவிர இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திலும் ரேபிஸ் தொற்று இருக்கிறது.

இந்தியாவில் ரேபிஸ் மரணங்களுக்கு 96% வெறிநாய்க்கடி தான் காரணம். அரிதாக அணில், குதிரை, கழுதை, குரங்கு, கரடி,எலி, கீரி, பூனை ஆகியவற்றாலும் ரேபிஸ் பரவுகிறது. இந்தியாவில் நாகாலாந்திலும், இலங்கையிலும் மட்டும் வவ்வால்களினால் ரேபிஸ் தொற்று உண்டானது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் மிக உயரிய அறிவியலுக்கான விருதுகள் பெற்றவரும் பாக்டீரிய ஆய்வாளருமான ஜோஸப் ( Joseph Lennox Donation Pawa) வவ்வால்கள் மூலம் ரேபிஸ் பரவுவதை 1932 ல் கண்டறிந்தவர்.

பறவைகள், மீன், பாம்புகளுக்கு ரேபிஸ் உருவாவதில்லை. பறவைகளுக்கு செயற்கையாக ரேபிஸ் தொற்று உருவாக்கப்பட்டபோதும் அவை அதிலிருந்து உடனே மீண்டன.

 ரேபிஸ்தொற்றினால் இறந்த விலங்குகளின் உடலை உண்ணும் பறவைகள் உடலிலும்  ரேபிஸுக்கான் நோயெதிர்ப்பு உடனே உருவாகிறது.

ரேபிஸ் தொற்று மிக குறைவாக இருக்கும் பிரதேசங்களிலிருந்து இந்தியா போன்ற ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கும் பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மருத்துவர்களின் அனுமதியுடன்  முன்னெச்சரிக்கையாக  மஞ்சள் காய்ச்சல், மலேரியாவுக்கு எல்லாம் போட்டுக்கொள்வதை போல ரேபிஸ் தடுப்பூசியை முன்பே போட்டுக்கொள்ளலாம்

நோய் கண்டறிதல்

ஆய்வகங்களில்  மனிதர்களுக்கான ரேபிஸ் தொற்றை Direct Fluorescent Antibody Test (DFAT) and Direct Rapid Immunohistochemistry Test (DRIT)  ,ELISA போன்ற சோதனைகளின் மூலம் கண்டறியலாம்

நோய் அறிகுறி

விலங்கு கடித்த இடத்திலிருந்து எச்சில் மூலம்  உடலில் நுழையும் ரேபிஸ் வைரஸ், மனித உடலின் பக்கவாட்டு நரம்பு மண்டலம் வழியாகவோ அல்லது தசை வழியாகவோ நகர்ந்து  முதுகு தண்டுவடத்தை அடைந்து அங்கிருந்து முன்னைக் காட்டிலும் வேகமாக மூளையை நோக்கி நகரும்.

நாய் கடித்த சமயத்திலிருந்து  நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி  30 லிருந்து 90 நாட்கள் வரை இருக்கும் எனினும் அரிதாக  2-6 வருடங்களுக்கு பின்னர் கூட நோய் அறிகுறி தோன்றியிருக்கிறது. குழந்தைகளிலும்,  கடித்த இடம் கழுத்துக்கு மேலே என்றாலும் அறிகுறி மிக விரைவில் தோன்றும்.

 2லிருந்து 10 நாட்களுக்குள் உண்டாகும் ரேபிஸ் தொற்றின் நோய் முற்குறி  பொதுவான தலைவலி, காய்ச்சல், பசியின்மை போன்றவைகளாகவே இருக்கும். வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தில் இணைந்த பின்னர் பிற அறிகுறிகளும் தோன்றும்.

தடுப்பூசி  சிகிச்சை அளிக்கப்படாத போது ரேபிஸ்க்கான பிரத்யேக அறிகுறிகளான தொண்டக்கமறல், எரிச்சல், விழுங்குவதில் சிரமம் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஆகியவை உருவாகும்.

அடுத்தடுத்து ஜீரணக்கோளாறுகள், செரிமானமின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். தொடர்ந்து படபடப்பு இயல்பு மாற்றம், தூக்கமின்மை,   ஒளியைக்கண்டால் எரிச்சலடைவது ஆகியவை உண்டாகும். அரிதாக ரேபிஸ் தொற்றுக்காளான ஆண்களுக்கு கட்டுப்படுத்த முடியாத பாலியல் இச்சை உண்டாகும், மனித மூளையை தன்கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் வைரஸ் சமயங்களில் இப்படி ஒரு நிலையை உண்டாக்குகிறது. 

கடிவாயில் கடுமையான வலியும் வைரஸ் மூளையை அடைந்த பின்னர் மனநல பாதிப்புக்களும் உருவாகும்

மூளை பாதிப்படைவதால்  உடல் எரிச்சல், வலிப்பு மற்றும் அதிக அளவில் உமிழ்நீர் சுரப்பு ஆகியவையும் இருக்கும். 

கடிவாயிலிருந்தபடியே வைரஸ் தன்னை பெருக்கிக்கொண்டே மத்திய நரம்பு மண்டலத்தை நோக்கி பயணித்து மூளையை அடையும்.  பல்கிப்பெருகும் வைரஸ்  உமிழ்நீர் சுரப்பிகளில் ஏராளமாக காணப்படும்.

அதிக உமிழ்நீர் சுரப்பால் உடலின் நீரளவு குறைந்து பெரும் தாகமுண்டாகும் ஆனால்  தொண்டைச்சதை அடைத்திருப்பதால் திரவங்களை  விழுங்க முடியாமலாவதால்  ஹைட்ரோபோபியா என்னும் நீரைக்கண்டால் வெறுக்கும் குணமும்  கூடவே இருக்கும். 

நீரைக்கண்டால் அச்சப்படும்  ஹைட்ரோபோபியா  என்பது மனிதர்களுக்கு மட்டுமேயான நோயறிகுறி. விலங்குகளில் இந்த அறிகுறி இருக்காது. ரேபிஸ் குறித்த பல கட்டுரைகள், நூல்கள், ஹாலிவுட் திரைப்படங்களில் விலங்குகளுக்கும் நீரைக்கண்டால் வெறுக்கும் அறிகுறி இருப்பதாக தவறாக  சித்தரிக்கப்பட்டிருக்கும்.  

தீவிரமான இதுபோன்ற அறிகுறிகளுக்கு பின்னர் பக்கவாதம் அதைச்தொடர்ந்து சுவாச அடைப்பினால் இறப்பு அல்லது கோமா நிலை உண்டாகும். ரேபிஸ் தொற்று  உண்டானபின்னர் சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் மரணத்துக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் ரேபிஸ் நிலவரம்

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை   உலக ரேபிஸ் மரணங்களில் இந்தியாவின் பங்கு மட்டுமே 36% என்கிறது

ஆனால் ரேபிஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவில் வெறிநாய் கடிக்கு பிறகு ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் 2.3 மில்லியனாகி இருக்கிறது.

 நாடு தழுவிய ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளும் இந்திய அரசால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டாலும் ரேபிஸின் பயங்கரம் இன்னும் குறைந்தபாடில்லை.

சமிபத்திய உலக சுகாதார அறிக்கை இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 20,562  ரேபிஸ் மரணங்கள் நிகழ்வதாக சொல்கிறது.

நாய்களில் நோய்த்தொற்று

ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய்களில் இருவகையான நோய் அறிகுறிகள் உண்டாகும்  furious எனப்படும் வகையில்  நாய்களுக்கு வெறிபிடித்திருக்கும்.  அரிதாக  dump எனப்படும் வகையில் ரேபிஸ் தொற்று உண்டான நாய்கள் மிக அமைதியாக உணவின்றி ஒரே இடத்தில் படுத்திருக்கும்.  பெரும்பாலும் சிறுகுட்டிகளே இவ்வகையில் அதிகம் பாதிப்படைகின்றன.

தொற்றுக்குள்ளான நாய்களின் குரைப்பு வித்தியாசமாக இருக்கும், உணவு உண்பதில் வேறுபாடு இருக்கும், உணவை மறுக்கும் நாய்கள் உணவல்லாத பிற பொருட்களையும், கடிக்க முயற்சி செய்யும்.   இவற்றுடன் காய்ச்சல், வாந்தி கீழ்த்தாடை பக்கவாதம் (lock jaw), ஏராளமான எச்சில் வடிதல் ஆகியவையும் இருக்கும். 

வைரஸ் மூளைக்கு சென்று நாய்க்கு கடிக்கும் வெறியை உருவாக்கி  தனக்கு மற்றுமொரு புதிய உடல் கிடைக்கும் பொருட்டு ஏராளமாக வழியும் எச்சிலில், புத்திசாலித்தனமாக கோடிக்கணக்கில் காத்திருக்கும், அந்த வெறியை தாளமுடியாத நாய்கள் கற்பனையில் வெற்றிடத்தை கூட கடிப்பதை பார்க்கலாம்

 அறிகுறிகள்  துவங்கி 5 லிருந்து 7 நாட்களில் வலிப்பும் பக்கவாதமும் உண்டாகி  நாய் மரணமடையும். பூனைகளிலும் ஏறக்குறைய இதே போன்ற அறிகுறிகள் காணப்படும், நோய் கொண்ட பூனைகளால் பிறாண்டப்படும் எலிகளும் ரேபிஸ் ஆபத்தை உண்டாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடுவது இன்றியமையாதது.

நாய்களின் இயல்பில் வேறுபடு தோன்றினால் உடனே கால்நடை மருத்துவரை அணுகுவதும், அவை வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம். 

வளர்ப்பு நாய்களை மிக நெருக்கத்தில் கொஞ்சுவது தவிர்க்கப்படவேண்டும். சருமத்தில் இருக்கும் வெடிப்புகள் வழியாகவும் ரேபிஸ் வைரஸ் உடலுக்குள் நுழையும் என்பதால் நோயுற்ற நாய்கள் தும்முகையில் அருகிலிருப்பதையும் தவிர்க்கவேண்டும்.

ரேபிஸ் தொற்றுக்காளாகி வெறிபிடித்திருகும் நாய் உள்ளிட்ட விலங்குகளின் ரத்தம், சிறுநீர், மலம் ஆகியவற்றில் ரேபிஸ்  வைரஸ் இருக்காது. எச்சிலில் மட்டுமே இருக்கும்.

 சிகிச்சை 

வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தொற்று அறிகுறிகள் உண்டான பின்னர் அவற்றை குணப்படுத்த முடியாது. அவற்றின் இறந்த உடலிலிருந்தே ரேபிஸ் கிருமியை அடையாளம் காணமுடியும்.

வெறிநாய் கடித்த மனிதர்களுக்கு ரேபிஸ் சிகிச்சை உடனே துவங்கப்பட வேண்டும். கடித்த இடத்தை சோப்பிட்டு 10-15 நிமிடம் நன்றாக கழுவுவதன் மூலம் இந்த நோய்த்தொற்றை பெரிதும் தவிர்க்க முடியும்.

 வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்துக்கு செல்லும் முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக பாதுகாப்பானது 

கடிவாய்ப்புண்களை  தடுப்பூசி போடுமுன்பு தையலிட்டு மூடுவதும் ஆபத்தை வரவழைக்கும். மிக ஆழமான் காயமென்றால் தளர்வான தையலிடலாம்.

புண் செப்டிக் ஆகாமல் இருக்க டெட்டனஸ் ஊசிபோடுவதும், காயங்களை அயோடின் திரவம் கொண்டு சுத்தப்படுத்துவதும் நல்லது.

நாட்டுவைத்திய முறைகளான மஞ்சள் தூள், காபித்தூள், எலுமிச்சைசாறு, மிளகாய்த்தூள்  தூவுவது ஆகியவை நிச்சயமாக  தவிர்க்கப்பட வேண்டும்.

ரேபிஸ் தொற்றுக்கான இயற்கையான நோய் எதிர்ப்பு நம் உடலில் வைரஸ் நுழைந்தவுடனே உண்டாகிறது என்றாலும் மிக புத்திசாலியான ரேபிஸ் வைரஸ் அந்த நோயெதிர்ப்பை பலவழிகளில் தவிர்த்து தன்னை மறைத்துக்கொண்டு மத்திய நரம்பு மண்டலத்துக்குள் நுழைந்துவிடுகிறது. எனவே தடுப்பூசி மிக அவசியமாகிறது.

ரேபிஸ் தடுப்பூசி 

1885ல் புழக்கத்துக்கு வந்த ரேபிஸ் தடுப்பு மருந்து பின்னர் 1908ல் மேம்படுத்தப்பட்டது. 

ரேபிஸ் தடுப்பூசி, வெறிநாய் கடித்த பின்னர் தான்  பொதுவாக போடப்படும் (Post exposure prophylaxis (PEP)) என்றாலும், கால்நடை மருத்துவர்கள், வனக்காவலர்கள், ஆய்வாளர்கள், நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பிற்காக  முன்னரே 3 ஊசிகள் மட்டும்  போட்டுக் கொள்ளலாம்.(pre-exposure prophylaxis (PrEP))

ரேபிஸ் தடுப்பூசி சிகிச்சை  குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. தடுப்பூசிக்கு பிறகும் வெறிநாய் கடித்தவர்கள் மேலும் இரண்டு ஊசிகள் போட்டுக்கொண்டால் போதும்.

மிகப்பெரியதும் நீளமானதுமான ஊசியில் தொப்புளுக்கு அருகில் 20 ஊசிகள் மிக வலியுண்டாக்கும் படி ரேபிஸ்க்கு போடப்படுகிறது என்று  இப்போதும் பலர் நம்புகிறார்கள்.

1980க்கு பிறகு வயிற்றில் ஊசி போடுவது, 20 அல்லது 30 பெரிய ஊசி போடுவதும் அறவே இல்லை. வெறும் நான்கு சாதாரண அளவிலான ஊசிகளில்  மட்டுமே தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது. அதுவும் வயிற்றில் அல்ல தோள்பட்டை சதையில்  அல்லது சருமத்தில் மட்டும்தான் போடப்படும்.

மிக பலவீனமானவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒன்று என ஐந்து தேவைப்படலாம். இந்த நான்கு என்னும்  ஊசியின் எண்ணிக்கை குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவானது.

வெறிநாய் கடித்த உடன் போடப்படும் ஊசி 0 என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  அடுத்த ஊசி 3, 7 மற்றும் 14 நாட்களில் போடப்படும். கூடுதலாக ஐந்தாவது ஊசி தேவைப்பட்டால்  அது 28ம் நாள் போடப்படும். 

 0-3-7-14-28,இந்த இடைவெளியை கட்டாயம் மிக சரியாக பின்பற்றினால் மட்டுமே ரேபிஸ் தொற்றிலிருந்து 100 % விடுபடமுடியும்

 நாய் கடித்தவுடன் முதல் ஊசியுடன் சேர்த்து  அங்த காயத்தில்  HRIG எனப்படும்  Human Rabies Immune Globulin கொடுப்பது மிக முக்கியம்.தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 10லிருந்து 14 நாட்கள் கழித்தே வேலை செய்ய தொடங்கும் என்பதால்  கடிவாய்ப்புண்ணில் அளிக்கப்படும் இந்த HRIG அதுவரையிலான நோய்க்கட்டுப்பாட்டுக்கு மிக அவசியமாகின்றது. HRIG ஊசியாக அளிக்கப்படுவதில்லை காயத்தில் தடவப்படுகிறது

ரேபிஸ் தடுப்பு மருந்து சிகிச்சை எந்த வயதினருக்கும் ஏற்றது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 30 லிருந்து 45 % க்கு மட்டுமே ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் சிவந்து வலி உண்டாகும். 5- 15%ருக்கு காய்ச்சல், குமட்டல், தலைவலி ஆகியவை இருக்கும். வேறெந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை.

 உலக சுகாதர நிறுவனத்தின் உயிர்காக்கும் மருந்துகளின் பட்டியலில் ரேபிஸ் தடுப்பு மருந்து இருக்கிறது.

ரேபிஸ் வைரஸ்

சுமார் 100 வைரஸ்களை  கொண்டிருக்கும் Rhabdoviridae குடும்பத்தின்  Lyssavirus பேரினத்தை சேர்ந்த RABV என்று குறிப்பிடப்படும்,  ரேபிஸ் வைரஸ்  அனைத்து பாலூட்டிகளிலும் ரேபிஸ் நோயை பரப்புகிறது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 60,000 மரணங்கள் அதாவது  10 நிமிடங்களுக்கு ஒரு மரணம் ரேபிஸால் நடக்கிறது. 

துப்பாக்கி தோட்டா வடிவில் இருக்கும் இந்த வைரஸ்  ஐந்து புரதங்களையும் ஐந்து ஜீன்களையும்  ஒரு  RNA  இழையையும்,  புரத உறையும் கொண்டிருக்கும்.

70 nm அகலமும் 170 nm நீளமும்  மட்டுமே கொண்ட ரேபிஸ் வைரஸை  சாதாரண ஒளி  நுண்ணோக்கியில் பார்க்க முடியாது. எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளால் மட்டுமே காணமுடியும் அளவிற்கு இவை நுண்ணியவை.

உடலுக்குள் நுழைந்ததும் மத்திய நரம்பு மண்டலத்தை நோக்கி ரேபிஸ் வைரஸ்  நாளைக்கு 12-14 மிமீ என்னும் வேகத்தில் நகர்கிறது. ஆனால் மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மூளையை நோக்கி  ஒரு நாளில் 200-400 மிமீ (7-15 இன்ச்) வேகத்தில் நகரும் இந்த நுண்ணுயிரின் புத்திசாலித்தனத்தை எண்ணிப்பார்க்கையில் இதன் அசாதாரண தன்மையையும் தீமையையும் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியும். 

ஐந்தே புரதம், ஐந்து ஜீன் கொண்டுள்ள ஆகச்சிறிய ஒரு உயிரி,  பல்லாயிரக்கனகான ஜீன்களையும் மேம்பட்ட நோயெதிர்ப்பையும் கொண்டிருக்கும் மனித விலங்கு உடல்களில் கொண்டிருக்கும் செல்வாக்கும், கோடிக்கணக்கான நியூரான்களையும், மிகச்சிக்கலான நரம்பிணைப்புக்களும் கொண்டிருக்கும் மூளையை அதன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதும், அதன் தீமைகளும் பிரமிப்பேற்படுத்துகிறது. 

இருநூற்றாண்டுகளாக இந்த நுண்ணுயிரியில் ஆய்வுகள் நடக்கின்றன. தடுப்பு மருந்து  19ம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டது எனினும் இன்னும் ரேபிஸினால் 60 ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் இறக்கிறார்கள்

இத்தனை நுண்ணிய ஓருயிர் தனது பரவலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதி செய்து கொண்டிருக்கிறது, மனித  மூளையை தனக்கேறபடி மாற்றியமைக்கிறது என்றால் மனிதகுலத்தின் மாபெரும் தோல்வி என்றுதான் இதைக் கருதவேண்டும். கொரோனா, எய்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ் தொற்றுக்களுமே மிக மிக புத்திசலிகளான வைரஸ்களால் தான் உண்டாகின்றன.

ஜெர்மனியில் 2005ல் விபத்தில் மூளைச்சாவடைந்த ஒருவரின் உடல் உறுப்புக்களை தானமாக பெற்ற 6 பேரில் நால்வர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்தனர். உடலுறுப்புக்களை தானம் செய்தவருக்கு விபத்தில் சிக்கி உயிரிழக்கும் முன்னர் வெறிநாய் கடித்திருந்தது. ரேபிஸின் தாக்கம் எத்தனை பயங்கரமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

 பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னும் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ரேபிஸ் தொற்றை பழைய மூடத்தனமான நம்பிக்கைகள் அலட்சியபோக்கு இவற்றால் மேலும் தீவிரமாக்காமல் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்வது  நல்லது. ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும்.

ரேபிஸ் குறித்த சர்வதேச விழிப்புணர்வின் பொருட்டு உலக ரேபிஸ் தினம் 2007லிருந்து  லூயி பாஸ்டர் இறந்த தேதியான செப்டம்பர் 28 அன்று உலகெங்கிலும் கவன ஈர்ப்பு பெற்றிருக்கிறது. அந்நாளில் உலநாடுகளில் அரசு சார்ந்த, சாராத பல அமைப்புகள் ரேபிஸ் ஒழிப்பிற்கான முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றன.

கட்டுரையின் துவக்கத்தில் வந்த ஜீனா இரட்டை குழந்தைகள் உட்பட இப்போது மூன்று குழந்தைகளுக்கு தாய். உலக ரேபிஸ் தடுப்பு அமைப்பின் தூதராக இருக்கும் அவர்  ரேபிஸ் விழிப்புணர்வுக்காக நிதி திரட்டியும், வானொலி, தொலைக்காட்சி, பொது மேடைகள்  என தொடர்ந்து உரைகளாற்றி ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டுமிருக்கிறார்.  

 ஜீனாவுக்கு பிறகும்  மில்வாக்கி சிகிச்சை பலருக்கு அளிக்கப்பட்டு சிலர் உயிர்பிழைத்திருக்கிறார்கள் 

 மில்வாக்கி மருத்துவ சஞ்சிகையில்  “Soul Survivor” என்னும் பெயரில் வெளியான ஜீனாவின் வாழ்க்கை குறித்த தொடர்  2005ல் புலிட்சர் பரிசின் இறுதிச்சுற்று வரை வந்தது

வவ்வாலினால் ரேபிஸ் உண்டாகி  வாழ்வா சாவா என்னும் கடுமையான போராட்டத்துக்கு பிறகு மறுபிறவி எடுத்து பிழைத்து வந்திருக்கும் ஜீனாவுக்கு வவ்வால்கள் மீது எந்த விரோதமும் இல்லை. ’’வவ்வால்கள் அற்புதமான உயிரினங்கள் அவற்றால் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது அவை சூழலுக்கு மிக முக்கியமானவை’’ என்கிறார் அவர்.

 ஜீனாவிடம் மற்றுமொருமுறை 2004 செப்டம்பர் 12 நாள் உங்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது  ’’அந்த நாள் எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டால் நான் அந்த வவ்வால் கடித்த நிகழ்வை மாற்றி அமைக்க மாட்டேன் ஏனெனில் அதன்பிறகே எனக்கும் உலகிற்கும் நம்பிக்கை தரும் பல விஷயங்கள் நடந்தன, அதன்பிறகுதான் நான் இப்போதிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான பொருள் நிறைந்த வாழ்வு எனக்கு கிடைத்திருக்கிறது, எனவே மீண்டும் நான் அந்த வவ்வாலை காப்பாற்றவே செய்வேன்’’ என்றார்.

 ரேபிஸ் விழிப்புணர்வு மட்டுமல்ல  ஜீனாவிடமிருந்து நாம்      வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்வதையும் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு:

One Reply to “ரேபிஸ் தொடர்ச்சி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.