பிரதி

அல்கா  கிருஷ்ணன் சிலை முன் அமர்ந்திருந்தாள். கால் மாற்றி நின்று குழலூதும் ஆளுயர சிலை. நாகமங்களாவில் அவளுக்குப் பிடித்த மிகப் பிடித்த இடம் இவ்விடம்தான். கர்பகிருஹத்தின் முன் மெய்மறந்து அவனையே லயித்தபடி அமர்ந்திருப்பது. போன வருடம் இறந்து போன அவள் மாமி ரமாபாய்தான் முதன் முதலில் அவளை இங்கு அழைத்து வந்தது. அல்காவின் திருமணம் ஜெய்பூரில் நிகழ்ந்தது. உயரமான வயதுக்கு மீறிய முன் நெற்றியுடன் கூடிய மனோஹர் லாலுடன் அவள் கர்நாடகா வந்த போது அவளுக்கு வயது 21. அப்போது மனோஹர் லாலுக்கு ஒரே ஒரு துணிக்கடை இருந்தது. சந்தன் டெக்ஸ்டைல்ஸ். வந்த புதிதில் மனோஹர் லாலின் அம்மா ரமாபாயும் உடன் இருந்தாள். காலையில் ஐந்தரைக்கு எழுகை. குளியல் பின் காலை உணவு. ஒன்பது மணிக்கு சந்தன் டெக்ஸ்டைல்ஸ் திறக்கப்படும்‌. மனோஹர் காலை உணவு சாப்பிட பத்து  மணிக்கு வீட்டுக்கு வரும் முன் அல்காவும் அவள் மாமியாரும் கடைக்குச் சென்று விடுவார்கள். 

அல்காவிற்கு எல்லாம் புதிதாய் இருந்தது. மொழி உணவு மக்கள் தட்ப வெப்பம் மாடுகள் நாய்கள் கொசுக்கள் கூட வேறு மாதிரி இருந்தது. முதல் நாள் கடைக்கு வந்த போது ரமாபாய் நிதானமான சீரான கதியில் கடையை வியாபாரத்திற்கு ஒருங்கமைத்தாள். தரையை ஒருமுறை பெருக்கினாள். அல்கா தான் பெருக்குவதாக முன்வந்தபோது  ‘வேண்டாம்’ என்று விட்டாள். கடைசியாக கல்லாவில் அமர்ந்தபின் ‘நீ என் கூடவே தான் சுத்தியாகனும். மனோகர் சாயும் காலம் ஏழு மணிக்குதான்  கிடைப்பான் உனக்கு’ என சிரித்தபடி சொன்னாள். ரமாபாய் நன்றாகவே கன்னடம் பேசினாள். மிதமான வியாபாரம் இருந்தது அன்று. சாயும்காலம் ஐந்து மணிக்கு மனோஹர் வந்தபோது அல்காவிற்கு கடையில் மனோஹருடன் இருக்க வேண்டும்‌ போலிருந்தது. ஆனால் ரமாபாய் வற்புறுத்திச் சொன்னாள் ‘முதல் நாள். இந்த ஊருக்கு வந்துட்டு இதோட ராஜாவா உட்கார்ந்திருக்க கிருஷ்ண்ன பாக்காட்டி எப்டி?.. என் கூட கோயிலுக்கு வந்துட்டு கடைக்கு வந்துடு நீ. நான் வீட்டுக்கு போய்டறேன்.. சரியா?’

அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும்‌ கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.

அன்றிலிருந்து தினம் அந்தக் குழல் நாதத்தைக் காணாமல் உறக்கமில்லை. வருடத்தில் ஒரு பதினைந்து நாட்கள் தப்பும். அப்போதும் கூட ஜெய்பூரில் வீட்டின் அருகிலேயே இருக்கும் கிருஷணன் கோயிலுக்குச் சென்று இந்தக் கிருஷ்ணனையே மனதில் நிறுத்தியிருப்பாள். முதல் நாள் தனக்கு அப்பேர்பட்ட அழகை காண்பித்ததாலேயே அல்காவிற்கு ரமாபாய் மீது கொள்ளை விருப்பமானது. ரமா பாய் பின்னாலேயே சுற்றத் துவங்கினாள் அல்கா. ரமாபாய் சொல்வதைச் செய்வது செய்தபடியே அவளுடன் பேசிக்கொண்டிருப்பது பின் மேலும் பேசிக்கொண்டிருப்பது. ரமாபாய் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள். கோயிலுக்குச் செல்லும் அந்த மாலை மட்டும் முழு அமைதி நிலவும். அல்கா அந்த அமைதியை இன்னதென்று இனம் காண முடியாமல் இருந்தாள். ரமாபாய் அந்த அமைதி முழுக்க சோகம் இருப்பதாகச் சொன்னாள். ஏன் எதற்கென்று அறியமுடியாத சோகம். அந்த மாலையில் அந்த பழைய கோயிலில் அவன் முன் நம்முள் திரண்டெழும் சோகம்.

ஒரு பொருளைக் கைமாற்றுவது போல அந்தப் பழக்கத்தை, அந்த மாலைப்பொழுதை கைமாற்றினாள் ரமாபாய். பகல் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கும் அல்கா மாலை ஆனால் முழு அமைதி கொண்டாள். தன்னையே அறியாமல் ரமாபாயின் ஒரு நாளை அப்படியே தானும் வாழத்துவங்கினாள். ரமாபாயின் மனவெளி அப்படியே அல்காவினுள்ளும் இருந்தது. ரமாபாய் கதை சொல்வாள். எல்லாம் உண்மையான கதை. வியாபாரமே கதியாய் கிடக்கும் மனோஹர் கதை கேட்கையில் ஒரு குழந்தையைப் போல் இருப்பான். அவனுக்கு ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத கதை லால் சந்தின் கதை. ஜெய்பூரில் இருந்து கொண்டு வந்த அந்த கூண்டுக் கடிகார நொடி முள்ளின் கொடக் கொடக் ஒலிக்கு நடுவில் ரமாபாய் கதை சொல்வாள்,

‘ஒரு நத்த தன்னோட வாழ்நாள்ல எவ்வளவு தூரம் போவும்? ஒரு யான எவ்வளவு தூரம் போவும்? கடல் தாண்டி போற பறவைங்க? ஒரு பெருங்கடல கடந்து முட்ட போடுற ஆமைங்க? கடவுள் படைப்பு அப்டி. நாம் கண்டம் தாண்டி போற பறவ மாதிரி. காலம் காலமா துணில ஓடுற தையல் நூல் மாதிரி இந்தியாவ குறுக்கும் நெடுக்குமா வியாபாரத்தால இணைக்கிறதுதான் நம்ம வேல. லால் சந்த் சாஹிப்ப நான் சின்ன குழந்தையா இருக்கப்ப பாத்திருக்கேன். அவர்தான் முதன் முதல்ல பெங்களூரு வந்து ஒரு துணிக்கடை வெச்சாரு. சம்ஸாரத்துல, லோக வாழ்க்கைல அர்ப்பணிப்பும் நேர்மையும் இருந்தாபோதும்.‌வியாபாரம்னு இல்ல எந்தத் துறையானாலும் சரி உன்னால ஆனதத்தான் பண்ண முடியும். தோக்குறவன் எல்லாம் அவனால ஆனத கூட பண்ணாம போனவந்தான். உன் பாதிய பண்ணினா மீதி பாதி தன்னால நடக்கும். லால் சந்த் தன் பாதிய முழுமையா ஒரு குறையும் வைக்காம பண்ணினவர். இந்நக்கி அவர் பேரங்க காலகட்டத்துல ஒரு டெக்ஸ்டைல் ஃபாக்ட்ரியே இருக்கு. அதுதான் தன் பாதிய பண்ணுறோம்குற ஷ்ரத்தையோட செய்றவன் கை மேல வர பலன்.

அவரோட காலத்துலதான் முதன்முதல்ல ராஜஸ்தானி நிவாஸ் வந்துச்சு பெங்களூர்ல. அவர்தான் ஒவ்வொருத்தாரா இங்க கூப்டுகிட்டாரு. அவரோட மைத்துனன், சித்தப்பா பசங்க அப்டி இப்டின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தொழில் வச்சு கொடுத்தாரு. வியாபாரத்துக்கான முதல் கடனா கொடுப்பாரு. இப்ப இருவத்தஞ்சு பைசா வட்டி. அப்போல்லாம் இன்னும் கம்மி. பெங்களூர் முழுக்க மெல்ல கடைகள் வெச்சாங்க. ஹார்ட்வேர், துணிக்கடை, நகைக் கட, இப்ப இப்ப செல் போன் கட கூட வெக்கிறாங்க. உங்க அப்பா இங்க வந்து வியாபாரம் பண்ணாலாம்னு முடிவெடுத்து லால் சந்த் சாஹிப்புக்கு ஒரு கடிதம் போட்டாரு. ஆனா அப்ப பெங்களூரு முழுக்க நெருங்க கடைகள் வந்திருச்சு. அது ஏன், மைசூருல கூட வந்திருச்சு. லால் சந்த் சாஹிப் போட்ட பதில் கடிதத்துல நாகமங்களால கடை வெக்கலாம்னு எழுதினாரு. முதல் தேவப்பட்டா எழுதவும்னு. அந்தக் கடுதாசி இன்னமும் கூட இருக்கு. அல்கா பாத்ததில்ல. காட்டுறேன். கல்யாணம் ஆன புதுசு. அவர் மட்டும் கிளம்பி போறேங்குறாரு. நான் விடலையே. நான் கூட வரதா இருந்தா நகைங்கள குடுப்பேன் இல்லனா முடியாதுன்னுட்டேன். அப்புறம் நானும் அவருமா பெங்களூர் ட்ரெயின் புடிச்சு வந்தோம். லால் சந்த் சாஹிப்ப பாத்தப்ப, முதல்ல பாண்டவபுரா போய்டச் சொன்னாரு. அங்க ப்ரதாப்னு ஒருத்தர பாக்கச்சொன்னாரு. ப்ரதாப் நாகமங்களால வீடு வியாபாரத்துக்கான இடமெல்லாம் பாத்து உதவினாரு. அப்ப சின்ன கடையா ஆரம்பிச்சது. அப்புறம் அபய் வந்து ஹார்ட்வேர் கட வெச்சான், முகுந்த் ஸ்டேஷனரி வெச்சான்,  ரகுவீர் ஜ்வெல்லரி வெச்சான், அப்புறம் இன்னொரு ஹாட்வேர் வந்துச்சு, அப்டியே பக்கத்து பக்கத்து ஊருங்க பிந்திகனவிலே, பஸ்ராலு, பெல்லூர், பெலகோலா, கதபஹள்ளி, ஹிரிசவே, சன்னராயபட்னா.. தொழில் பண்ணி பண்ணி விரிஞ்சாச்சு. முதல தொலச்சுட்டு ஓடுனவன் கம்மி. லால் சந்த் வந்த மாதிரி தொடர்ச்சியா வந்துட்டே இருக்கோம். உன் கல்யாணத்துல ராதா என்ன பாத்து அவ மகனுக்கு இங்க தொழில் வெச்சு குடுக்க சொல்லுறா. இந்த ஸெராக்ஸ் கட இருக்கே உள்ள ஒரு காகிதத்த வெச்சு மூடுனா ஒரே மாதிரி வெளிய வருது …திரும்ப திரும்ப ஒரே விஷயம்தான் நடக்குது. காலம்தான் வேற வேற. ‘

ரமாபாயின் நாட்கள் எந்த மாற்றமும் இல்லாதது. பெல்லூர் செல்லும் வழியில் இருக்கும் சிறு குன்றுகளை பார்க்கும் போது ரமாபாயை நினைத்துக்கொள்வாள் அல்கா. பதற்றமோ கவலைகளோ பெரு மகிழ்ச்சியோ அண்டுவதேயில்லை. தான் ரமாபாயின் ஒரு நாளை மெல்லப் பிரதி எடுப்பதாகத் தோன்றியது அல்காவிற்கு. ஒரு கட்டத்தில் ரமாபாயின் அல்காவின் நாள் காலம் எல்லாம் ஒன்றென்றே ஆனது. அல்காவிற்கு பயம் , எக்கணமும் ரமாபாய்  நிரந்தரமாக ஜெய்பூருக்கு கிளம்பிவிடுவாள் என்று. அது வழக்கம்தான், முதியவர்கள் தங்கள் கடைசி காலகட்டத்தை சொந்த கிராமத்தில் கழிப்பார்கள். வாரிசுகளுக்கு தொழிலை கைமாற்றிவிட்டு கிளம்பிச் சென்று விடுவது. ஆனால் ரமாபாயால் இந்தக் கிருஷ்ணனை விட்டுச் செல்வது என்பது இயலாது என்று நம்பினாள் அல்கா. எத்தனை யோசித்தாலும் இதுபற்றி ஒரு முறை கூடக் கேட்டதில்லை. ரமாபாயின் மனம் ஸ்திரமாக அப்படியே இருந்தது, ஆனால் உடல் மெல்ல மாறிக்கொண்டே இருந்தது. திருமண ஃபோட்டோவில் இருந்ததை விட சுருக்கங்களும் சிறு கூனும் கூட வந்துவிட்டிருந்தது. திருவிழா முடிந்து மெல்ல மெல்ல கோயில் திடல் காலியாவது போல் ரமாபாயின் உடலிலிருந்து ஏதோ ஒன்று நீங்கிக் கொண்டிருந்தது. 

ஒரு மாலை கோயிலில் அமர்ந்திருக்கையில் ரமாபாய்  சொன்னாள்,

‘அல்கா… நான் ஊருக்கு கிளம்பப் போறேன்’

அல்கா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக கிருஷ்ணனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘என் கிருஷ்ணன் வேற.. நீ காதலால ஆராதிக்கிற கிருஷ்ணன் இல்ல. குழந்தையா களித்தோழனா, காதலனா, ஆசிரியனா கணவனா தந்தையா தமையனா இப்டி எல்லாமாமும் இருந்தவன், இப்ப இல்லவே இல்லன்னுதான் சொல்லனும். அந்த இன்மையே போதுமா இருக்கு’.

காரில் பெங்களூர் வரை சென்று ரயிலேற்றிவிட்டார்கள் மனோஹரும் அல்காவும். ஏறும் முன் அல்காவின் கன்னத்தைக் கையில் ஏந்திக்கொண்டு ‘சுடர் மாதிரி இருக்க. தினம் தினம் அவனுக்காக எரியனும். பத்ரமா இரு’. அல்கா அழுதாள். மனோஹர் அழுகைக்கு சற்று முன் தன்னை தேக்கியிருந்தான். ரமாபாய்  எப்பொழுதும் போல் இருந்தாள். அன்றிலிருந்து மூன்றாவது வாரம் ராதா பாயும் அவன் மகனும் மருமகளும் நாகமங்களா வந்தார்கள். அவர்களுக்கு கரடியா எனும் ஊரில் ஹார்ட்வேர் கடை ஏற்பாடாகியிருந்தது. இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே வீடு. ராதா பாயும் மருமகளும் அல்காவுடன் கோயிலுக்கு செல்கிறார்கள். ராதா பாய் நன்றாக பஜன் பாடக்கூடியவள். ரமாபாய்  கையளித்துச் சென்ற நாளில் பஜனை நேரமும் சேர்ந்துகொண்டது. ரமாபாய் சொன்ன ஸெராக்ஸ் மெஷினை நினைத்துக்கொண்டாள் அல்கா.

ஜூன் மாதம் மழைத் துவங்கும் நாகமங்களாவில். தினம் மாலையானால் மழைதான். ராதா மழைக்கால பஜன்களை பாடுவாள். 

வான் கருமையில் கனிகிறது

காற்றில் மழையீரம்

அடிப்பெண்ணே வெண்பாதம் சிவக்க

எங்கே ஓடுகிறாய்?

அவன் அன்பின் பெருக்கு

முழுக்காட்ட வருகிறது

மாபெரும் அகம் அவனுடையது

கானகமெனும் பெரிய அறையில்

தன் மஞ்சத்தில் சாய்ந்த படி 

பெருக்குகிறான் ஆத்ம இசையை

செவி கொடு கனிந்துருகு

கண்ணீர் விடு

இவ்வாழ்வெனும் ஒரு துளியை

அவன் முன் சமர்ப்பித்துவிடு

அந்த மழை வலுத்த ஒரு மாலையில்தான் ரமாபாய்  இறந்து விட்ட செய்தி வந்தது. மனோகர் லால் தரையில் விழுந்து அழுதான். அல்கா குடையை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு ஓடிச் சென்றாள். கொட்டும் மழையில் கோயிலின் உள்ளெறியும் சுடர் மங்களாய்த் தெரிந்தது. மழைத் திரையினூடே பழங்கோயிலின் கோபுரம் தெரிந்தது. நடை அடைக்க இன்னும் அரை மணி நேரம் இருந்து. குடையை தூணோரம் சாய்த்துவிட்டு படிகளில் ஈரம் சொட்டும் வெண்பாதம் ஒற்றி உள் சென்றாள். சன்னதியில் யாரும் இல்லை. சுடரொளியில்  குழலிசைக்கும் கிருஷ்ணன் முன் அமர்ந்துகொண்டாள். ஒரு கணம் ஒரே ஒரு கணம் மட்டும் இன்மையின் கிருஷ்ணன் தெரிந்து மறைந்தான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.