தத்தெடுக்கப்பட்ட சீனப் பெண்

கட்டுரை ஆசிரியர் -ஐரிஸ் ஆண்டர்சன்

தமிழாக்கம்-கோரா

நான் பிறந்த உடனே சீனாவுக்கு  அதன் தொலைந்துபோன குழந்தைகளில் ஒருத்தியாக ஆகி விட்டேன்.பின்னர் என் தாயின் கரங்களில் இருந்து எடுத்துச் சென்று அருகில் இருந்த ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் வெறும் புள்ளி விவரமாக   மட்டுமே அறியப்பட்டேன் – நான் சீனத்தின்  “ஒரே குழந்தை” கொள்கையின்படி களையெடுக்கப்  பட்ட மற்றொரு பச்சிளம் குழந்தை.  பதினோரு மாத குழந்தையாக இருந்தபோதே சீன அரவணைப்பில்  இருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு என் புதிய  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டேன்.அயல்தேச  மண்ணில் என் வாழ்க்கை  வேரூன்ற ஆரம்பித்தது.  

 என் பின்புலம் பற்றிய உண்மையின் கடுமையை கிரகித்துக் கொள்ளும் வயது எனக்கு வந்ததும், என்(வளர்ப்பு) பெற்றோர் என்னை அருகில் இருத்தி நான் சீனாவில் இருந்து தத்தெடுக்கப் பட்டவள் என்ற உண்மையைக் கூறினார்கள் .அவர்கள் பின்விளைவுகளை எண்ணிக் கலங்கியவாறு  எடுத்துரைத்த (நான் ஏற்கனவே அறிந்திருந்த) ரகசியம் என் அன்றாட வாழ்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  என் உருத்தோற்றம் சுற்றிலும் இருந்தவர்களைப்  போல் (குறிப்பாக என் வளர்ப்பு பெற்றோர் சாயலில் ) இருக்கவில்லை என்று எனக்கு  குழந்தைப்  பருவத்திலேயே எளிதில் புலப்பட்டு விட்டது  நெடிய  வரலாறு மற்றும் பண்பாட்டுப் பெருமிதங்கள் கொண்ட நாட்டில் இருந்து வந்த வேற்றாளாய் இங்கே  இருப்பது எனக்கு உண்மையில் அற்புதமான  உணர்வை அளித்தது.  வெண் தோலினர் ஆதிக்கம் உள்ள நகரங்களில், பெரும்பாலான நகர்வாசிகள் அனைத்து வெள்ளையர் அல்லாத  வேற்றினத்தவரையும் ஒதுக்கி வைப்பது நிச்சயம். நான் பிற குழந்தைகளுடன் இணைந்து கொள்ள அவநம்பிக்கையை மீறி   முயற்சி செய்து வந்தேன். ஆனால் என் பெற்றோர் வெள்ளையராக இருந்த போதிலும், என் சீனத் தோற்றம் எப்போதும் என்னை வேற்றாளாய்க் காட்டிவிடுகிறது என்று  வெகு விரைவில் தெளிவடைந்தேன்.

வளரிளம் பருவத்தில் என் நண்பர்கள் தமக்குள் எந்த பெற்றோருடன் தத்தம் தோற்ற ஒற்றுமை இருக்கிறது என்ற கலந்தாய்வு மேற்கொள்ளும் போது அதில் நானும்  பங்கேற்க    ஆசைப்பட்டு அது எழுபிய குற்றவுணர்வைப் போராடி  சமாளித்தேன். அவர்கள் என்னை உன் மொழியில் பேசு எனச் சொல்லிவிட்டு பிறகு  இதோ நாங்களே உன்மொழியில் பேசுகிறோம் என்று மாண்டரின் மொழியைக் கிண்டல் செய்யும் விதமாக  பிதற்றலாகப் (gibberish ) பேசிச் சிரித்தபோது அவர்களுடன் சேர்ந்து நானும் சிரித்தேன். ஆண்டுகள் சில கழிந்த பின்பும்  சில தருணங்களில் எப்படி உணர்வது என்றோ எழும் உணர்வுகள் நியாயமானவையா என்றோ நான் அறியாமல் இருந்திருக்கிறேன். வெளித்தோற்றத்தில் அற்பமானதாக தெரியும்  வம்பிழுப்புச்  செயல்பாடுகள் உண்மையில் இனவாத அடிப்படையில் உருவாகின்றன என்றும் அவையே வருங்காலத்தில் இன வெறுப்பாக  மாறும் என்கிற புரிதலின்றி இருந்தேன்

என் வளர்ப்பு பெற்றோருடன் சீனா திரும்பியபோது எனக்கு 9 வயது.என்னைப் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் நிறைந்த இடத்தைக் காணும் பேரவாவுடன் இருந்தேன், என்னை உருவாக்கிய தேசத்தைப் பற்றிய பிரமிப்பால்  முழுமையாக ஆட்கொள்ளப் பட்டிருந்தேன். மேலும் முதன்முதலாக அப்போதே சீனப் பண்பாட்டைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன்.ஆனால் அது கிட்டத்தட்ட இயலாத காரியம். ஏனெனில் நான் சீனாவில் வாழும் எவருக்கும் சொந்தமானவள் அல்ல என்பது தெளிவான உண்மை.  உடுத்தி இருக்கும் முறையிலிருந்து பேசும் (அல்லது அவர்களுடன் பேச முடியாத ) மொழி வரைக்குமாக  நான் முழுக்க முழுக்க அமெரிக்கன் ஆகியிருந்தேன். 

இப்பயணத்தின்போது சீனா மற்றும் அதன் பண்பாட்டில் இருந்து மேலும் மேலும்  நான் பிரித்து  வேறாக்கப்பட்டு விட்டதை  கண்டு கொண்டேன். இது என் நாடு  என்றே 

உணர்ந்திருப்பேன் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக  வந்திறங்கிய நாட்டில் நான் அயல்நாட்டவளாக உணர்ந்தேன்  நான் எங்கு சென்றாலும் இனங்களுக்கு-ஊடே தத்து எடுக்கப் பட்டவள்(transracial  adoptee)  என்ற அடையாளமே என்னை விவரித்ததாக  எனக்குத் தோன்றியது . என் வாழ்க்கைப் பாதை மாறியதால் தான் இப்படி நேரிட்டது: இதுவே  நான் புதிதாக அறிந்துகொண்ட உண்மை. அமெரிக்காவில் அமெரிக்கராகக்   கருத முடியாத அளவுக்கு  சீனத் தோற்றமும் சீனாவில் சீனராக கருத முடியாத அளவுக்கு அமெரிக்க பண்பாட்டுத் தாக்கமும் கொண்டவளாக மாறி இருந்தேன்.

நான் வளர்ந்து வரும் போது, வயது வந்தவர்கள் என்னைக் கேட்கும் வழக்கமான  கேள்வி: “சீனத்திலிருந்து தத்து எடுக்கப்பட்ட நீ உன் நல்லூழ்(அதிர்ஷ்டம்) பற்றி எவ்வாறு உணர்கிறாய்?”. இக்கேள்வி என்னை வியாபாரப் பொருளாக கருதுவதை(commodify) எண்ணி ஆத்திரம் அடைந்தேன். தத்து எடுத்ததற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக என்  பதில் அமையா விட்டால், அவர்கள்  மனதில் உடனே  ஒரு சொடுக்கி (சுவிட்ச்) இயங்கி, “இவள் சுயநலக்காரி; யாவற்றுக்கும் தான் வளர்ப்பு பெற்றோருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டு இருப்பதைப்  பேச மறுக்கிறாள்” என்று பதிவு செய்து விடும். எனவே  ஏராளமான வார்த்தைகளை  நான் சொல்லாமல் இருந்து விட்டேன். ஆனால்  இந்த விடயத்தில் இவர்களுக்கு அழுத்தம் திருத்தமான பதில் வேண்டியிருக்கிறது:ஏதோ ஒரு சீன   ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நான் தத்தெடுக்கப் பட்டேன். என்னுடைய வளர்ப்பு பெற்றோரின் பெருந்தன்மைக்கு நன்றி சொல்லவேண்டும்- உண்டி,உறையுள் தந்து உயிர்ப்பித்து வளர்த்து வருவதற்காக.      

தெள்ளத் தெளிவாக என் வளர்ப்பு பெற்றோரை நான் நேசிக்கிறேன். அவர்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்க முடியாது.  ஒரே நேரத்தில் என் பெற்றோரை நேசிக்கவும், என்  சொந்த இழப்பிற்கு வருந்தவும் நான் அனுமதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது என் திடீர் புலப்பாடு. இனங்களுக்கு ஊடே தத்தெடுக்கப் பட்டவர்கள், அற்புதமாக அன்பு காட்டும் குடும்பங்களில் நல்ல நிலையில் வைக்கப்பட்டு இருந்தாலும், அவர்களின் பண்பாடு திருடப்பட்டது என்ற உண்மையை யாரும்  மறுக்க முடியாது.

 சீனர்களும் வெண்தோலினரும் வெவ்வேறு விகிதத்தில் வாழும்  ஒரு வித இடைப்பட்ட வாழிடத்திலேயே நான் எப்போதும் வசித்து வந்தேன். குறிப்பாக வட அமெரிக்காவில் இனங்கள் ஊடே தத்தெடுக்கப் பட்டவர்களுக்குரிய  புறவெளிகளும் வசதிகளும் (spaces and resources) போதிய அளவில் அமைக்கப் படவில்லை  இனத்தின் மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், புறவெளிகளும் வசதிகளும் .வெகு குறைவாக, தொலை தூரத்தில் இங்கும் அங்குமாக, பயன்படுத்திக் கொள்ள  முடியாத வகையில் அமைந்துள்ளன. என் பெற்றோர் நான் சீனப் பெண் என்னும் உண்மையை ஒருபோதும் மறைக்கவில்லை. மேலும் அவர்களால் முடிந்த அளவுக்கு,  சீனப் பாரம்பரியங்களை நான் கண்டறியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கும் வரம்பு இருந்தது. இருப்பினும் பிறந்த நாட்டுடன் நான் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகிற, தூண்டுகிற , அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி உதவுகிற பெற்றோர்களைப் பெற்றிருப்பது என் நல்லூழ்.

நான் சீனம், மற்றும் சீனப் பண்பாட்டுடன் அதிக தொடர்பில் இருக்கிறேன் என்று உணரக் கூடிய  வாய்ப்பை பெற்றுத் தருமாறு பெற்றோரை அணுகியதும்,அவர்கள்  உடனே எனக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியரைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.  கெடுபேறாக(unfortunately), பல ஆண்டுகள் முயன்றும்  சீனமொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைக்கவில்லை. இதற்கு மாற்றாக ஆதார சீன மொழிக் கல்வியை சுயமாக  கற்றுக் கொண்டேன். என் பெற்றோர் கூடிய விரைவில்   என்னை மீண்டும் சீனாவுக்கு அழைத்துச்  செல்வதாக உறுதி கூறினார்கள்.ஏனெனில் தற்போது நான் வளர்ந்த பெண்ணாக இருப்பதால்,இப்பயணத்தின் முக்கியத்துவத்தை சற்று அதிகமாகப்  புரிந்து கொள்ள முடியும். தற்போது என் இரு அடையாளங்களையும் சமாதானப் படுத்தி ஒத்துப்போக வைக்க போராடி வருகிறேன் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் ஆதரவு எப்போதும்  எனக்கு உண்டு என்று கருதும்  அளவுக்கு அவர்கள் அதை அவ்வப்போது  உறுதிப் படுத்தி வந்தார்கள்.பிறரைப் போலன்றி, என் பெற்றோர் என் மனக் கிளர்ச்சிகள் (emotions) அனைத்தும்  தமக்கு எதிரானவை எனக் கருதவில்லை. அவர்கள் என் ஆதரவுத்  தூண்களாக(pillars of support) இருந்தார்கள் -இன்றும் இருந்து வருகிறார்கள். 

இரண்டாவது தடவை சீனா சென்ற போது எனக்கு 15 வயது. என் மனவெழுச்சிகளுடன் (emotions) அதிக தொடர்பு வைத்திருந்தேன். என் போன்ற பிற தத்தெடுக்கப் பட்டவர்களுடன் தொடர்பு வைத்து அவர்களின் கதையைக் கேட்க விரும்பினேன்.ஒரே முகமையின் ஏற்பாட்டில் தத்தெடுக்கப் பட்டவர்களில், வெண்தோலினரால் தத்தெடுப்பட்டோருடன்  சிறிது நேரம்  உரையாட இப்பயணம் உதவியது. 

அனைவரும் இணைந்து  எங்களுக்கு   பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொண்டோம்.  பிறரின் கருத்தைப் பற்றிய பயமில்லாமல்  எங்கள் அனுபவங்களைப் பற்றி பேசவும் கோபதாபங்களை எடுத்துரைக்கவும் அது உதவியது. இந்த சீன வருகை எனக்கு மாறுபட்டதாக இருந்தது. நான் அனுபவித்த மனக்கலக்கத்தையே  தாமும் அனுபவித்திருந்தோர் முன்னிலையில் நான்  பேசிப் பழகியதை மகிழ்ச்சியுடன்  உணர்ந்தேன். அனைவரும் ஒருசேர சிரிக்கவும்  அழவும்  எப்படி எல்லாம் ஆகியிருக்கக்கூடும்  என்று புலம்பவும் செய்தோம்  அடுத்த பிறவியில் இதுபோல சந்தித்துப் பேசிக் களிக்கும் ஒரு வேறுபட்ட  சந்தர்ப்பம் கிட்டுமா?

அது முக்கியமில்லை என்று பதில் அளித்தோம். நாங்கள் தெளிவாக அறிந்துகொண்டது:  பொருட்படுத்த வேண்டியது  நாம் பெற்றிருக்கும்  உருத்தெரியாத துணுக்கு இறந்த காலமும்  அத்துடன் முழுதாகக்   கலந்துவிட்ட  கண்டெடுத்த  குடும்பமும் தான். சீனாவுக்குத் திரும்புவதில் எங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், குற்ற உணர்விலும்(guilt,) பேரார்வத்திலும்(curiosity) ஒருமை காண வேண்டும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு இருந்தது. அன்றைய சீனாவின் நிலை மற்றும் ஒரே குழந்தை கொள்கை ஆகியன பற்றி நான் அறிந்திருப்பதால், பெற்றெடுத்த தாய்

கை விட்டதற்காக அவள் மீது எனக்கு  கோபம் ஏதுமில்லை. ஆனால் எங்கிருந்து, யாரிடமிருந்து கொண்டுவரப்பட்டேன் என்பது பற்றி அறியும் பேரார்வம் 

எனக்கு இருந்தது. அநேகமாக எப்போதும் அது இருக்கும். பயணம் முடிவுக்கு வந்த போது, என் இலக்குகள் முழுமையாக  நிறைவேறின என்று கூற முடியவில்லை.ஆனால் தத்தெடுக்கப் பட்ட அனைவரும் ஒருவரை ஒருவர் முழுதாக அறிந்து கொண்டோம்.  அதுவே எங்களுக்கு ஆரம்ப இலக்குகளைவிட அதிக  மதிப்புடைய சொத்து. (இது உங்களுக்கு பொருளிழந்து போன சொல்லாட்சி -cliche -யாகத் தோன்றலாம்) 

அமெரிக்கா திரும்பிய பின்,  உயர்நிலைப் பள்ளி நுழைவின் போது இருந்ததற்கு மாறான நோக்குநிலையில் (perspective ) பள்ளிப் படிப்பை முடித்தேன். என்னால் என்  இடைநிலை அடையாளத்தை தழுவிக் கொள்ளவும் என் முரண்படும் பகுதிகளை ஒத்துப் போக வைக்கவும் முடிந்தது. இன்னும் அதிகமாக என் பயணத்தில் கிடைத்த நண்பர்கள்  மீது ஆதரவுக்காக சாய்கிறேன். மற்றும் என்னை முழுமையாகக் கண்டுகொள்ள  உதவப் போகிறவர்களுக்கான தேடலைத் தொடர்கிறேன்.

இனங்களுக்கு ஊடே தத்தெடுக்கப் பட்டவர்கள் அனைவரும்  தங்கள் மனவெழுச்சிகளில் இருந்து விடுபடவும் தத்தம்  சமூக உணர்வை பெருக்கிக் கொள்ளவும் ஒரு பிரத்யேக இடம் அமைத்துக் கொள்ளும் தகுதி பெற்றவர்கள்.

இனங்களுக்கு ஊடே தத்தெடுக்கப் பட்டவர்களில்  ஒருசிலர் மட்டுமே பிறந்த நாட்டிற்குத் திரும்ப விரும்புவராகவோ   அதற்கான வசதி, வாய்ப்பு பெற்றவராகவோ இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். அவர்கள் தங்கள் பிறந்த நாடு திரும்பி அங்குள்ள தன் போனறோரைத் தொடர்பு கொண்டு  அவர்களின் பகிரப்பட்ட அனுபவங்களைக் கேட்டறியலாம்.  பிறர் உள்ளூர் குழுக்கள் அல்லது நிகழ் நிலை(online) தேடல்கள் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.  சிந்தித்தும்,உணர்ந்தும்  எதிர்கொண்டும் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கும் என்  சிந்தனைகள், மனவெழுச்சிகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை என் போன்றோருடன் பகிர வாய்ப்பு கிடைத்ததாலேயே  என் வாழ்க்கை மேம்பாடு அடைந்தது.

சீனப்பெண்,அமெரிக்கன் அத்துடன் தத்தெடுக்கப் பட்டவள் என்று  மூன்றுமாகிய   எனக்கு இதமான உணர்வளிக்கக் கூடிய இடம் தேடிக்கொள்வது கடினமான சாகசச் செயலாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அந்த முயற்சியே  என் வேர்களை ஸ்திரப்படுத்தி இருப்பதுடன் இன்று என் வாழ்க்கை வளமடைந்து  பூத்துக் குலுங்கவும் உதவியிருக்கிறது. 

கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ஐரிஸ் ஆண்டர்சன் கொலம்பியா பல்கலையில் உயிரியல் மற்றும் மனவியல் பட்டப் படிப்பு மாணவர். எழுதுதல் அவருடைய மனதிற்கினிய பொழுதுபோக்கு  

சுட்டி: 

https://www.msn.com/en-us/lifestyle/lifestyle-buzz/i-was-adopted-from-china-people-ask-if-i-feel-lucky-and-my-answer-isn-t-what-they-expect/ar-AA1btxGx?ocid=msedgdhp&pc=U531&cvid=16e8b17718114d64908df044e6082e42&ei=13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.