ஆண்மை

தன் மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார் பீஷ்மர். நதியின் அலைகள் காற்றில் அலைபாய்ந்து கரைகளைத் தொட்டுச் சென்றன. அவைகளின் மேல் ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள் ஆசையுடன் படிந்தன. இவைகளெல்லாம் தன் இயல்பில் இருக்கையில் ஏன் மனிதன் மட்டும் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை வகுத்தான்? வாய் பேச முடியாதவர்கள், சபதம் செய்வார்களா? தங்களுக்குள்ளேயே பொதிந்து வைத்து நிறைவேற்றுவார்களா? எதுதான் உண்மை என நிலை கொள்கிறது? புகழா, பொருளா, அறிவா? இதிலெல்லாம் ஆன்ம நிறைவு என்று ஒன்று கிடைக்குமா? கரைகளுக்குள் அடங்கிச் செல்லும் நதிதான் செழிப்பைக் கொண்டு வருகிறது. அத்தகைய நதி தீரங்களில் தான் நாகரீகம் வளர்கிறது. வேதங்கள் முழங்குகின்றன், யாக சாலைகளில் தீ வளர்த்து அவிஸ் அளிக்கப்படுகிறது. சந்தஸ் என்ற லயத்தில் தான் வேதம் ஓதப்படுகிறது; அந்த சப்த ஒலிகள் தாள கதியில் நல்ல அதிர்வுகளை உண்டாக்குகின்றன. அந்த லயம் என்பதும் ஒரு நெறிமுறைதானே? அப்போதுதானே அதன் இனிமையும், பொருளும் உணரப்படுகின்றன? யாக குண்டங்கள் கணிதத்தின்படிதானே கட்டப்படுகின்றன? அப்படியென்றால், நெறிமுறை என்பது தேவையான ஒன்றுதானோ? அதைப் பின்பற்றி நடப்பவர்களை விண்ணோரும் வியக்கிறார்களே?

தேவவிரதனாக இருந்தவன், பீஷ்மராக வாழ்த்துப் பெற்றது அப்படித்தானே?

“தந்தையே, நான் உங்கள் மனவாட்டத்தை அறிந்து கொண்டேன். ஒரு மகனாக நான் உங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாக மாட்டேன். மச்சகந்தியின் தந்தை அப்படி என்ன கேட்டு விட்டார், தன் மகள் அரசி என்ற அந்தஸ்து பெறுவதும், அவருக்குப் பிறக்கப் போகும் மைந்தனுக்கு அரியாசனமும் தானே? இதனாலெல்லாம் நான் உங்கள் மகன் என்பது மாறப் போகிறதா? காலமெல்லாம், நதியுடனும், படகுடனும், மீனுடனும், தன் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இனம், அரசில் இடம் கேட்பதில் பிழை ஒன்றும் இல்லை, அப்பா. நான் அரியணையை எந்தக் காலத்திலும் பாதுகாப்பேன்; நம் அரசினை விரிவடையச் செய்வேன். என் பௌருஷமே என் பதவி, அதுவே என் கவசம். அதுதான் அரசின் நலனும் கூட. நீங்கள் வருத்தத்தில் பல அரசாங்கச் செயல்களைச் செய்யாதிருக்கிறீர்கள். கங்கையின் இடத்தில் மற்றொருத்தியா என்று குற்ற உணர்வு கொள்கிறீர்கள். காதலும், காமமும் வாழ்வின் அச்சாணியப்பா.”

சாந்தனு மகாராஜா தயங்கித்தயங்கித்தான் சம்மதித்தார். ஆனால், சிற்றன்னை, செம்படவ அரசனான தன் தந்தையையும் மிஞ்சி விட்டாள். மகாராஜாவின் விருப்பத்தைத் தெரிவித்து, அவளைப் பார்த்து வாழ்த்து சொல்லி, தான் ஒரு நாளும் அவளுக்குப் பிறக்கப் போகும் மைந்தர்களுக்கான அரியணையில் பங்கு கேட்க மாட்டேன் என்ற போது, அவள் சிரித்தது இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

“தேவவ்ரதா, நான் உன்னை இளவரசே என அழைக்கப் போவதில்லை. நீ எனக்கும் மகன் தான். உன் அன்னையான எனக்கு உன்னிடம் ஒரு வரம் வேண்டும். கேட்கலாமா?”

‘மகனுக்குக் கட்டளை தான் இடுவார்கள், அவனிடம் வரம் கேட்பார்களா, அன்னையே?’

‘நல்லது, தேவவ்ரதா. நான் உன்னை நம்புகிறேன். நீ ஆட்சி செய்ய விரும்பவில்லை. ஆனால், பின்னாளில் பிறக்கப் போகும் உன் மைந்தர்கள் அதைக் கோராமல் இருப்பார்களா? க்ஷத்ரியக் குருதிதானே அவர்கள் உடம்பிலும் ஓடும்? என் பிள்ளைகள் எவ்விதத்தில் துன்பப்படுவார்களோ?’

தேவவிரதன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். தன்னை மகன் என்று அழைத்த அதே நா தான், இன்னமும் பிறக்காத தன் மைந்தர்கள் என்ன நிலைமையில் இருப்பார்களோ என்று இன்றே பேசுகிறது. அப்பாவிடம் வாக்குக் கொடுத்து வந்துள்ள தேவவிரதனை சாமர்த்தியமாக மடக்குகிறாள் சிற்றன்னையாக வரப் போகிறவள். பெண் என்றும், அரசி என்றும், தாய் என்றும் அனைத்துக் கோணங்களிலும் சிந்தித்து ஒரு அருமையான வியூகம் அமைத்துள்ள அவளை அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

தன் வாயிலிருந்து வந்துள்ள சொல்லை வெற்றுச் சொல்லாக்க விடலாமா? தனக்கு இனி எப்போதோ பிறக்கப் போகும் மகன் இருக்கட்டும், இவளைப் போலவே, அரசியாக என்னுடன் அரியணையில் அமர நான் மணக்கப் போகும் பெண்ணிற்கும் ஆவல் இருக்குமல்லவா? நேரடியாக நீ மணம் செய்து கொள்ளாதே என்று சொல்லாமல் சொல்கிறாள் இவள். இந்தப் பெண்ணும், கங்கையைப் போல, என் அன்னையைப் போல், என் தந்தைக்கு நிம்மதி தரப் போவதில்லை. சிறந்த மதியூகிதான் இவள். ஆனால், அப்பா தேடும் நிம்மதியை இவளால் தர முடியுமா? அதைத் தந்தையிடம் நான் எடுத்துச் சொல்ல முடியுமா? இவளை மணந்து கொள்ளுங்கள் என்று சொன்ன வாயால் மறந்து விடுங்கள், என்று சொல்லலாகுமா? விதி வழி வாழ்க்கை.

“அன்னையே, நான் என் மூலமாக வம்சத்தினை வளர்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். மகாராஜாவும், நீங்களும் மகிழ்ந்து குலாவி வாழ்வது ஒன்றே நான் வேண்டுவது.”

தேவர்கள் வானிலிருந்து பூமாரி பொழிந்தார்கள். ‘பீஷ்ம, பீஷ்ம’ என்று அசரீரி ஒலித்தது.

இன்று ஏன் இந்த வேண்டாத நினைவெல்லாம்? என்றோ முடிந்து போன கதை. அந்தப் பெண், அவள் பெயரென்ன, அம்பை ஆ..ம் அம்பை அவள் சால்யனுடன் இந்நேரம் மணமுடித்திருப்பாள். நன்றாக வாழட்டும்.

ஆ.. இதென்ன அந்தப் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருப்பது யார்? கரை நோக்கி வந்து கொண்டிருப்பது யார்? அம்பையைப் போலவே இருக்கிறதே? ஊகம் சரிதான்; கடும் புயலைப் போல நம் மாளிகையை நோக்கி வருகிறாள். என்ன நடந்திருக்கும்?

பீஷ்மர் கீழே இறங்கி வந்து அவளை வரவேற்றார். அணிந்திருந்த அதே ஆடையுடன், கலங்கிய கண்களுடன், களையிழந்த முகத்துடன், விரிந்த கூந்தலுடன் அவள் மூச்சிரைக்க நின்றாள்.

“வாருங்கள், தேவி. அமருங்கள். உணவு ஏதேனும், அல்லது பழச்சாறு?”

அம்பை அவரை நிதானமாக ஏறிட்டுப் பார்த்தாள். ‘உங்கள் கைப்பட பழச்சாறு தாருங்கள்’ என்றாள். அதைப் பருகிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். 

இவளாகச் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்த பீஷ்மர், “சால்யன் நலமா? உங்கள் சகோதரிகளைப் பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்றார்.

‘அம்பிகா, அம்பாலிகா….. அவர்கள் பெயரை மட்டும் நினைவில் வைத்துள்ளேன்; அன்னை, தந்தையே இல்லையாம், இதில் உடன் பிறப்புகளைப் பற்றி எனக்கென்ன கவலை?’

“அப்படியெல்லாம் பேசாதீர்கள், அம்மா, காசி அரசர் பீமதேவனுக்கும், அரசி புராவதிக்கும் என்ன ஆயிற்று?”

‘இருவரும் என்னை மகளென்று ஏற்க மறுத்து விட்டார்கள். உங்கள் வலிமையில் அத்தனை பயம்; எங்கே எனக்கு அடைக்கலம் கொடுத்து அதனால் சினமுற்று நீங்கள் அவர்களையும் சிறையெடுத்துவிட்டால் என்ற கோழைத்தனம்’ என்று இகழ்ச்சியாகச் சிரித்தாள் அம்பை.

“வீண் பயம். நீங்கள் ஏன் அங்கு போனீர்கள்? சௌப நாட்டு அரசன் சால்யனிடம் தானே உங்களை அனுப்பி வைத்தேன்?”

‘சால்யன்  ஹூம் அவனும் ஒரு ஆண்மகன்! என்னைப் பொருளாகப் பார்த்து விட்டான். நீங்கள் பறித்துச் சென்ற பெண்ணல்லவா நான்? களவாடப்பட்ட பொருள், அவனது உடைமையாக ஆகாத ஒன்று, அதனால் அவனுக்கு வேண்டாமாம். நாங்கள் எப்படிக் காதலித்தோம், அதெல்லாம் நினைவிலில்லை அவனுக்கு. எத்தனை திரைச்சீலை ஓவியங்கள், எத்தனை ஓலைப் பாடல்கள், எத்தனை கனவுகள், கட்டிய மனக்கோட்டைகள்’ என்று சொல்லிக்கொண்டே போன அம்பை ஆவேசத்துடன் எழுந்து நின்று கத்தினாள். ‘அவனை அங்கேயே வெட்டிப் போட்டிருப்பேன். ச்சீ, ஒரு கோழையைக் கொல்வதா என்று விட்டுவிட்டேன்.’

“சால்யனின் பயமும், பதட்டமும் எனக்குப் புரிகிறது.” என்றார் பீஷ்மர்.

‘என்ன புரிகிறது உங்களுக்கு? என்ன புரிகிறது என்று கேட்கிறேன். மனசாட்சி உறுத்தவில்லை உங்களுக்கு? இந்த என் நிலைக்கு நீங்கள், நீங்கள் மட்டுமே காரணமென்று புரியவில்லையா?’

“நான் என்னம்மா தவறு செய்தேன்? உங்கள் காதலனுடன் நீங்கள் சேரத்தானே அனுப்பி வைத்தேன்?”

‘என்ன தவறு செய்தீர்களா? மாற்றாந்தாய் மகன்களுக்காக பெண்களைக் கவர்ந்து வரும் அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது?’

“ராக்ஷச விவாகம் சாத்திரத்தில் இருக்கிறது. அதுவும் நாடாளும் மன்னர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று.”

‘அப்படியா, எனக்கும் விதிமுறைகள் தெரியும். உங்களுக்காகப் பெண்ணைக் கவர்ந்து செல்ல அனுமதி உண்டு, ஆனால், பிறருக்காக, அதுவும் நோயுற்ற இருவருக்காக…. எங்கே இருக்கிறது அந்த விதி? அப்படிப்பட்டவர்களின் வம்சம் ஏன் வளர வேண்டும்? தனக்கானதைக் கூட செய்ய முடியாதவர்களுக்கு திருமணம் ஒரு கேடா? பெண்ணென்ன, உணர்ச்சியற்ற ஜடமா, பிள்ளை பெறும் இயந்திரமா? அயோக்கர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் பிள்ளை பெற்றுத் தரக் கூடாது என்று நீங்கள் சொன்ன அதே சாத்திரம் சொல்கிறதே அது தெரியாதா உங்களுக்கு?’

“அரச தர்மம் ஒன்றிருக்கிறது அம்மா. நான் அரியணையைக் காப்பதாகச் செய்த சபதமும் வீணாகக்கூடாதல்லவா? நான் படை வீரன். கட்டளைகளுக்கும், கடமைகளுக்கும் கீழ்ப்படிபவன். நானாக இந்தச் செயலை செய்திருக்க மாட்டேன்; வியாசரும், என் சிற்றன்னையும் சொல்லாமல் நான் உங்கள் சுயம்வரத்திற்கு வந்து, அதைக் கெடுத்து, உங்கள் மூவரையும் கவர்ந்து வந்திருப்பேனா என்று சிந்தியுங்கள்.”

‘சுயம்வரம். இந்தச் சொல்லிற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? பெண் தானாகத் தேர்வு செய்து மணாளனைத் தேர்ந்தெடுப்பது என்று பொருள். யாருக்காகவோ அல்லது யார் சொல்லியோ நீங்கள் எங்கள் சுயம்வரத்தைத் தடுத்தது, எங்களைப் பிடித்து வந்தது எந்த தர்மத்தில் அடங்கும்.’

“அம்மா, உங்கள் காதல் எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் நான் உங்களை அஸ்தினாபுரிக்கு அழைத்து வந்திருக்க மாட்டேன். நீங்கள் சொன்னவுடன் உங்களை சால்யனிடம் அனுப்பிவைக்கவில்லையா? எங்கேனும், யாரையேனும் மரியாதைக் குறைவாக நடத்தினேனா? இங்கே உங்களுக்குத் தனி மாளிகை, பணியாட்கள் அமைத்துத் தருகிறேன்.  நீங்கள் விரும்புவதைச் செய்யலாம். கலைகள், பயணங்கள், எதற்கும் தடையில்லை; சிறந்த பாதுகாப்பு வீரர்கள் உங்கள் மாளிகையைக் காத்து நிற்பார்கள். யாரும் உங்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள். உங்கள் மனம் தெளிந்தவுடன் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்.”

‘எனக்குத் திருமணம், அதுவும் நீங்கள் செய்து வைக்கப் போகிறீர்கள்! நல்ல கூத்து இது. என்னை நீங்கள் தான் மணம் புரிய வேண்டும். அதற்காகத்தான் மீள வந்திருக்கிறேன்.’

“அம்மா, நான் உங்களை ஏற்க இயலாது. நான் ஒரு நைஷ்டிக ப்ரம்மச்சாரி. என் சபதமும் உலகம் அறிந்த ஒன்று.”

‘என்ன பெரிய சபதம்? அதை மீறும் காலம் இது. எனக்கென ஒரு வாழ்க்கை, அதுவும் மதிப்பு மிகுந்த, தன்னிறைவான ஒன்று. அதை என் வரலாற்றை அறிந்துள்ள உங்களைத் தவிர வேறு யாரால் தர முடியும்? அப்படி ஒருவர் முன் வந்தாலும், அவரை நான் நிராகரிப்பேன். என்னை உங்கள் இல்லத்தரசியாக்குங்கள்.’

பீஷ்மர் அவளை ஏற இறங்கப் பார்த்தார். இயல்பிலேயே அழகி, சினத்தின் எரி தழலில் பேரழகியாக, ஆணைக் கவரும் அச்ச அம்சத்துடன் ஆவேசமாக நிற்கிறாள். காட்டின் வனப்புமிகு வேங்கை இவள். இவளை வழிபடலாம், இவள் என்றென்றும் அந்த நிலையைத்தான் அடைவாள். இந்தக் கொடிக்கு கொம்பெதற்கு? காற்றைப் பற்றிக்கொள்ளும் அனல்கொடி. என் சபதம், என் ஆண்மை, என் வீரம் அனைத்தும் இவளுக்குக் கிடைத்தாலும் நிறைவுறா கருவறை கொண்ட கொற்றவை. மயானத்தில் சிவனுடன் நடனமாடும் பைரவி. தன் உடலின் கீழ் சிவத்தைப் படுக்க வைத்த மனோகரி. பீஷ்மர் தலையை உதறிக் கொண்டார்.

“அம்மா, நான் ப்ரும்மச்சாரிதான்; ஆனால், திருமணமானவன்*.” என்றார்.

அவள் சோழிகள் உருள்வதைப் போலச் சிரித்தாள். ‘கள்ளத்தனம் செய்து கன்னியரைக் கொண்டு வருவீர்கள் எனத் தெரியும்; பொய்யும் சொல்வீர்களா?’

“கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள். என் பிறப்பின் இரகசியத்தை நான் உங்களிடம் சொல்லும் நேரம் வந்துவிட்டது. தேவருலகில் நாங்கள் எட்டு பேர் வசுக்களாக இருந்தோம். வசிஷ்டரின் விருந்தை அவர் இல்லத்தில் சுவைத்த நாங்கள் கிளம்பும் போது என் மனைவி, அவரது நந்தினி என்ற பசுங்கன்றை காமதேனுவிடமிருந்து பிரித்து தனக்குத் தருமாறு வேண்டினாள். இளம் மனைவியின் மோகத்தில் அந்தத் தவறைச் செய்தேன். பலனாக பூமியில் பிறந்தேன். என் மனைவி, ஒரு வறுமையான அந்தணருக்கு மூத்த மகளாக, வாய் பேச முடியாதவளாக, ஏழு தங்கைகளுக்கு மூத்தவளாகப் பிறந்தாள். அவள் பூக்க முடியாதவளும் கூட. அவளுக்கு மணமாகாமல், மற்ற எழுவருக்கும் வழியில்லை. அவளது தந்தை அவளைக் கருணைக் கொலை செய்யக் கோரிய வழக்கில் என் சிற்றன்னையின் தீர்ப்பு என்ன தெரியுமா? ‘தேவவ்ரதா, நீயோ உன் மூலம் வம்சம் வளராது என சபதம் செய்தவன். ஆனால், நித்திய அக்னி ஹோமத்திற்கு மனைவி தான் அக்னி கடைந்து தர வேண்டும். அவளை மணந்து கொள்; நீயும் ஹோமம் செய்யலாம். கருவூலத்திலிருந்து மற்ற ஏழு பேரின் திருமணச் செலவுகளுக்கான நிதி வழங்கப்படும். உன் விரதமும், சபதமும் பங்கப்படாது.’ நான் தயங்கினேன், தடுமாறினேன், வழமை போல பெண் வென்றாள். சிற்றன்னையின் தீர்ப்பு, அந்தப் பெண்ணின் கண்ணீர், நான் கல்யாணம் செய்தேன்; கலவியில்லாத கல்யாணம். ஆனால், அவள் தானே வசுவாக இருந்த போது எனது பத்தினி. தகாத ஆசையினால்தானே அவள் பூக்காத, பேசாதப் பெண்ணாகப் பிறந்திருக்கிறாள்? அவளை துர்மரணத்திலிருந்து காப்பதும் என் கடமையல்லவா?”

அம்பை அதிர்ந்து போனாள். ஆனால், தன் நிலையிலிருந்து வீழ அவள் விரும்பவில்லை. ‘அரசர்கள் பல தாரம் கொள்பவர்கள்; என்னை ஏற்றுக் கொள்ள இதெல்லாம் ஒரு தடையல்ல.’

“அப்படியில்லை தேவி. என்னை மணப்பதால் உங்களுக்கு ஆகக்கூடியது ஒன்றுமில்லை. மேலும், நான் அரசனில்லை. பல தாரங்கள் எனக்குப் பொருந்தாது. நான் சொல்வதைக் கேளுங்கள். நல்ல மாளிகை, நல்ல கணவன், இனிய இல்லறம்….”

‘நிறுத்துங்கள், நான் அன்பை யாசிக்கிறேன். என் தன்மானத்தை விட்டு உங்களிடம் இறைஞ்சுகிறேன். என்னைப் புறக்கணிக்காதீர்கள்’

“அம்மா, என்னால் இயலாத ஒன்றை செய்யச் சொல்லி நீங்கள் வற்புறுத்த முடியாது. நான் கள்வன் என்றால், நீங்கள் ஒரு வேடதாரி.”

‘என்னது?’

“ஆம். நேர்மையுள்ளவரென்றால், சுயம்வரப் போர்வையில் நீங்கள் செய்தது என்ன? உங்கள் காதலை அன்னை, தந்தையிடம் சொல்லி மணம் முடித்திருக்க வேண்டும். அத்தனை அரசர்களின் முன்பாக கைகளில் வரமாலை ஏந்தி, அன்ன நடை நடந்து ஆவலைத் தூண்டி, ஏதோ அப்போதுதான் சால்யனைத் தேர்ந்தெடுத்த மாதிரி நடித்து இதெல்லாம் வேடமில்லாமல் என்ன?”

‘நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு பெண் அப்படித்தான் செய்வாள். அவளின் கட்டுக்கள் உங்களுக்குப் புரியாது.’

“சரியம்மா! இன்று இவ்வளவு பேசுகிறீர்கள், அன்று பெற்றோரிடம் சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. இத்தனைக்கும் பிறகு நான் உங்களின் காதலை மதித்தேனா இல்லையா? உங்களை சௌப நாட்டிற்கு அனுப்பி வைத்தேன் அல்லவா?”

அம்பை கலீரென்று சிரித்தாள். ‘எனக்குப் புரிந்து விட்டது; இன்னொரு ஆணை நினைத்த பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தயங்குகிறீர்கள். நான் உங்களை உங்கள் குருவின் மூலம் போருக்கு அழைக்கிறேன். அவரோடு சண்டையிடுவீர்களா, இல்லை அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வீரமில்லாமல் ஒதுங்குவீர்களா?’

பீஷ்மருக்கு இரத்தமெல்லாம் கொதித்தது. ஆனால், இவள் பெண், உணர்ச்சியால் பீடிக்கப்பட்டு பேசுகிறாள். இப்போதே கூட இவளைச் சிறையில் அடைக்கலாம், ஆனால், அவள் சினம் தார்மீகமானது, அவள் கண்ணீர் சுட்டெரிக்கும் நெருப்பு. தன் குருவுடன் போரிடுவதில் அவருக்கு ஒன்றும் கலக்கமில்லை. தானே விரும்பாதவரை தனக்கொரு சாவில்லை. அப்படியே இறந்தாலும் என்ன குறை? இறுதிவரை, வரைமுறையுடன் வாழ்ந்தோம் என்ற பேறு கிடைக்கும். ஆண்மை நின்று நிலைத்தது, பெண் எனும் பேரெழிலின்  முன்பு. அதுவே வீழ்ந்தும் படலாம் அதே பேராற்றலின் முன்பு.

அம்பை கழற்றி வீசிய காற் சதங்கைகள் மரத் தரையில் ஓசையற்று விழுந்தன.

பானுமதி ந

*திரு. கருணாகராச்சாரியார் தமது ஒரு உபன்யாசத்தில் பீஷ்மர் தினமும் அக்னி ஹோத்ரம் செய்தார் என்று வியாச பாரதத்தில் குறிப்பு உள்ளது என்று சொன்னார். மனைவி இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஆண்மை”

Leave a Reply to Meenakshi BalganeshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.