அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 9

This entry is part 9 of 10 in the series கணினி நிலாக்காலம்
Teradata

90 -களில், கணினிகள் வியாபாரங்களுக்குள் பெருவாரியாக பயனுக்கு வந்த காலம் என்று சொல்லியிருந்தேன். தனிப்பட்ட பயனுக்கு மட்டுமே கணினிகள் வியாபாரத்தில் பயன்பட்டு வந்த காலம் 80 -கள். அதாவது, கணக்கு பார்க்கும் ஒரு துறையில் ஒரு கணினி இருக்கும். அதில், விற்பனை துறைக்கு எந்த பயனும் இருக்காது. அதே போல, சம்பளம் பட்டுவாடா செய்யும் மனிதசக்தி துறையில் உள்ள கணினியால் நிறுவனத்திற்காக பொருட்களை வாங்கும் துறைக்கு எந்த பயனும் இல்லை. இப்படி தனித்தீவுகளாய் இயங்கி வந்தன வியாபாரங்கள். 

90 -களில் வந்த முக்கிய வியாபாரப் பயன், சின்ன நிறுவனங்கள் தங்களது கணக்கு சார்ந்த தேவைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஒரு பெரிய சர்வர் என்னும் சக்தி வாய்ந்த கணினியுடன், பல்வேறு துறைகளின் பயனாளர்கள் தங்களுடைய மேஜைக் கணினியிலிருந்து தொடர்பு வைத்துக் கொண்டு, சர்வரில் இயங்கும் ஒரு மென்பொருள் பல பயனாளர்களின் தேவைகளையும் நிறைவு செய்யும். இன்று இது மிகச் சர்வ சாதாரணமாக எல்லா நிறுவனங்களில் இயங்கினாலும், ஆரம்ப நாட்களில் நடந்த மனித கூத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை.

ஒரு உதாரணம், இதை எளிதில் புரிந்து கொள்ள உதவும், 

  1. சுரேஷ் என்பவரின் வேலை, நம் உதாரண நிறுவனத்தில், பொருட்களை விற்பனை செய்வது. ஒரு வாடிக்கையாளரிடமிருந்து (சில வியாபாரங்களில், வாடிக்கையாளர் இன்னொரு வியாபாரம்) வெற்றிகரமாக விற்ற ஆர்டரை நிறுவனத்திற்குள் கொண்டு வரும் முக்கிய நபர் இவர். இவர் விற்பனை என்ற துறையில் இருப்பதால், நிறுவனத் தலைவருக்கு மிகவும் முக்கியமானவர்
  2. வந்த ஆர்டரை கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஜான் என்பவர், நம் உதாரண நிறுவனத்தில், பொருட்களைத் தேக்கி வைக்கும் பொருப்பில் உள்ளவர். சுரேஷைப் போல பல விற்பனை ஆசாமிகள் இவரை நெருக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் நாடும் பொருட்கள், இன்னொரு விற்பனையாளரின் ஆர்டருடன் போட்டியிடக் கூடும். யாருடைய ஆர்டர் முதலில் வெளியேரும் என்பது ஒரு அரசியல் கட்சியைத் தோற்கடிக்கும் விஷயம். ஆனால், ஜானுக்கு மட்டுமே, தன் கைவசம் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று தெரியும். சுறுக்கமாகச் சொன்னால், ஜான் இந்த ஆலயத்தின் பூசாரி. இவர் மனம் வைத்தால்தான், திரை விலகி தரிசனம் கிடைக்கும்!
  3. நம் உதாரண நிறுவனத்தில், ராதா என்பவர், ஆர்டர்களை கணினியில் பதிவு செய்பவர். சந்தையில், ஆர்டர் கிடைத்தவுடன், இவருக்கு உடனே ஒரு கால் வரும். தயாராக இருக்குமாறு! ஒரே சமயத்தில் வந்த இரு ஆர்டர்களில், எந்த ஆர்டர் முதலில் பதிவு செய்யப்படுகிறது என்பது சில சமயம் விற்பனையாளரின் கமிஷனை முடிவு செய்யும். இதனால், ஜானைப் போல ராதாவும் ஒரு சக்தி மையம்! ராதா ஆலயத்தில் அர்ச்சனை டிக்கட் விற்பவராகக் கொள்ளலாம். இவர் கடையை மூடிக் கொண்டு போனால், பூசாரி உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்!
  4. குமார் என்பவர் நம் உதாரண நிறுவனத்தில் கணக்கர். இந்த அரசியலில் அவரது முக்கிய பணி, மாதத்திற்கு தேவையான பொருட்களை தயாரிப்பாளர்களிடமிருந்து ஆர்டர் செய்வது. இவர், தயாரிப்பாளர்களின் விலை, மற்றும் சந்தையில் எந்தப் பொருட்கள் நகருகின்றன என்று கவனித்து, ஆர்டர் செய்ய வேண்டும். இவருக்கு ஜான் கையிருப்பு பற்றி தெளிவான பட்டியல்களை மாதா மாதம் அனுப்ப வேண்டும். விற்பனைத் தலைவர் ராகவன், அதே போல, என்ன பொருட்களை விற்றோம் என்று ஒரு பட்டியலை குமாருக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆர்டர்கள் ஏராளமான மதிப்புள்ளதால், நிறுவனத் தலைவர் இவரது ஆர்டரை அலசித் எல்லொரையும் தாளித்து விடுவார். தலைவரின் ஏவுகணைக் கேள்விகளுக்கு இவர் தயாராக இருக்க வேண்டும். இவர், உண்டியலைப் பாதுகாக்கும் ஆலய அலுவலர். உண்டியலில் என்ன இருக்கிறது என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம்! எதை ஆர்டர் செய்கிறோம் என்று பொருள் அனுப்பப்படும் வரை யாரிடமும் சொல்ல மாட்டார்! பொருள் வந்து இறங்கியவுடன், ஜானுக்கு மட்டும் தெரியவரும்.

இப்படி இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் அந்த நிறுவனத்தில் சிற்றரசர்களால் தீர்மானமாகியது. எவரும் தன்னுடைய சக்தியை தக்க வைத்துக் கொள்வதைக் குறியாக வைத்திருந்தார்கள். 

இந்தப் பின்னணியில் ஒரு ஒருங்கிணைந்த மென்பொருளை நிறுவி வெற்றி பெற வேண்டிய அபாயமான பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. சிற்றரசர்களையும் சமாளிக்க வேண்டும், தலைவரையும் கைவிடக் கூடாது! மிகவும் லாபகரமான தொழிலை மேலும் லாபகரமாக்க வேண்டும்! இந்த சிற்றரசர்கள் இதற்கு முன் பல முயற்சிகளை தோற்கடித்து வெற்றி பெற்றவர்கள். ஆக மொத்தம், எனது வெற்றி வாய்ப்புகள், மிகக் குறைவு என்று தெரிய வந்தது.

மென்பொருளில் பிர்ச்சினை என்றால் அதனை சமாளிப்பது ஒரு வகை. ஆனால், மனிதப் பிரச்சினைகளை சமாளிப்பது இன்னொரு வகை. முதல் வகையில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தும், இந்தச் சூழலில் அது பயனற்று போனது. ஆனால், மென்பொருளை வாங்கிய நிறுவனம், எப்படியாவது இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று ஏராளமாக செலவழித்தது ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், இதற்காகவே என்னை வேலையிலும் அமர்த்தவும் செய்தது.

இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுகுவதே ஒரே வழி என்று முடிவு செய்து, நிறுவனத் தலைவரிடம் ஒரு சந்திப்பைக் கோரினேன்.

நான்: ஏராளமாக செலவு செய்து மென்பொருளை வாங்கியுள்ளோம். தகுந்த பயனளிக்க வேண்டும்…

த: மென்பொருள் பயனுக்குத் தயாராக உள்ளதா? எனக்கு இந்த வெற்றி மேல் நம்பிக்கை உள்ளது. அதற்காகத் தானே உங்களுக்கு இந்தப் பொறுப்பை அளித்துள்ளோம்.

நான்: மென்பொருளை சோதித்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் பயனுக்கு தகுந்த நிலைக்கு கொண்டு வந்து விடுவோம். இதன் வெற்றிக்கு முக்கியமான பங்கு என்னுடையதல்ல, உங்களுடையது…

த: மேலாண்மை என்னிடம் இந்த முதலீடு பற்றிப் பரிந்துரைத்தது. எனக்கும் இந்த நோக்கத்தில் நிறுவனத்திற்கு நல்லது என்று ஒப்புக் கொண்டேன். அத்துடன் என் வேலை முடிந்தது. இதற்குப் பின், அதை நிறைவு செய்வது உங்கள் கையில் உள்ளது, என்னிடத்தில் இல்லை.

நான்: புரிகிறது. நான் சொல்ல வந்தது, உங்களை அன்றாட கணினி வேலைகளில் ஈடுபடச் சொல்வது என் நோக்கமல்ல. ஆனால், சில முக்கிய strategic முடிவுகளை நீங்கள் எடுத்து எல்லோருக்கும் அறிவித்தால், இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றியடையும்.

த: புரியவில்லை. எவ்வகை strategic முடிவுகள்?

நான்: நம் நிறுவனத்தில் அநாவசிய ரகசியங்களை உடைக்க வேண்டும். ஏன் தயாரிப்பாரர்களிடம் ஆர்டர் செய்த புதுச் சரக்கைப் பற்றி விற்பனையாளருக்குத் தெரியக் கூடாது? ஏன், எந்த ஆர்டர் முதலில் பதிவாக்கப்பட வேண்டும் என்ற போட்டி? எதற்காக ஆர்டரை கணினியில் உள்ளேற்ற ஒரு ஆள் வேண்டும்? ஏன், பொருட்களின் கையிருப்பு பற்றி விற்பனையாளருக்கு முன்னமே தெரியக் கூடாது? சொன்னால் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஏன் விற்பனையாளரே ஆர்டரை கணினியில் பதிவு செய்யக் கூடாது?

த: இதென்ன தடாலடி மாற்றமாக இருக்கிறதே. எனக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். அடுத்த வாரம் என் முடிவைச் சொல்லுகிறேன். 

மென்பொருளை நிறுவச் சொன்னால், இவனென்ன கோயிலையே இடிக்கச் சொல்லுகிறான் என்று தலைவர் நினைத்திருந்தால், அடுத்த வாரம் என் வேலை போயிருக்கக்கூடும். ஆனால், வேறு வழி தெரியவில்லை.

அடுத்த வாரம், தலைவர் அவரைப் பார்க்குமாறு அழைத்தார்.

த: யோசித்ததில், எனக்கு உங்களது தடாலடி மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால், சில சின்ன விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். அந்த மென்பொருளை என்னை ஒரு விற்பனையாளராக நினைத்து, பயிற்சி அளியுங்கள். உங்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்குகிறேன். இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். உங்களது மென்பொருள் சோதனைகள் யாவும் முடிந்த பிறகு, ஒரு பயிற்சி முகாமை அறிவியுங்கள். அனைத்து விற்பனையாளர்களையும் வரவேற்று, நான் அதில் முன்னுரை ஆற்றுவேன் என்று சொல்லி விடுங்கள்

நான்: நன்றி. நாளை உங்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். 

தலைவர் பயிற்சியில் மிகுந்த ஆவலோடு பங்கெடுத்துக் கொண்டதோடு, அடுத்த சில வாரங்களில், புதிய ஆர்டர்களை பதிவு செய்து என்னிடம் பல சந்தேகங்களை அடிக்கடி கேட்டுப் புரிந்து கொண்டார்.

பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டது. எல்லா விற்பனையாளர்களும் வந்தனர். 5 நிமிடம் தலைவர் பேசிவிட்டுப் போய்விடுவார். நாமும் வெளியேறலாம் என்று அங்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி. 2 மணி நேரம், தான் எப்படி ஆர்டர்களைப் பதிவு செய்தார், எப்படி எதிர்கால சரக்கு பற்றித் தெரிந்து கொண்டார், எப்படி விற்பனைக்கு கிளம்பும் முன்னே கையிருப்பைப் பற்றித் தெரிந்து கொண்டார் என்று விளா வாரியாக அந்த மென்பொருள் அமைப்பை விளக்கி விட்டு, “எனக்கே இது சாத்தியம் என்றால், உங்களால் இது நிச்சயம் முடியும்!” என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு கிளம்பி விட்டார்.

இதன் பிறகு, மிகவும் தயக்கத்துடன், உண்டியல் உடைக்கப்பட்டது, பூசாரி தன் சக்தியை இழந்தார். குமார், ராதா போன்றவர்கள், இல்லாததையும் பொல்லாததையும் பெரிது படுத்தி பிகு பண்ண முடியாமல் போனது. இடை ஆசாமிகள் இல்லாததால், விற்பனை, இரட்டிப்பானது. கையிருப்பு விஷயங்களில் நடந்த பல குளருபடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த மென்பொருள் அமைப்பு ஸ்திரத்தன்மை அடைய இரண்டு ஆண்டுகள் ஆகியது. மெதுவாக, அதை எதிர்த்தவர்கள் கட்சி மாறினர். சிலர், சின்ன கோரிக்கைகளை நிறைவு செய்ததில் மாறினர். மற்றவர்கள் சில பெரிய மாற்றங்களால் மாறினர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்திலிருந்து விலகிய பொழுது, மிகப் பெரிய விழா எடுத்தார்கள். தலைவர் வரவில்லை. ஆனால், ஒவ்வொரு பயனரும், எப்படி புதிய மென்பொருள் அமைப்பு அவர்களது வாழ்க்கையை எளிதாக்கியது மற்றும் எப்படி ஒருவரை நம்பி இன்னொருவர் ஒரு குழுவாக இயங்குகிறோம் என்று பலவாறு சிலாகித்தார்கள். அவர்களிடமிருந்த கணினி அச்சங்கள் பற்றியும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள். இதில் பேசிய பலர் முன்னாளைய சிற்றரசர்கள்!

பொதுவாக, அறியாததைப் பற்றிய அச்சம் என்பது, மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நிகழும் விஷயம். நவீன உலகத்தில், வேலை சம்பந்தமான மாற்றங்கள், அச்சங்களை பூதாகாரமாக ஆகி விடுகின்றன. மாற்றங்கள் தான் பார்க்கும் வேலைக்கு உலை வைக்குமோ என்ற அச்சம் மிக எளிதில் பரவுகின்றது. இந்த பயம், கணினி மென்பொருள் நிபுணர்களை ஒருவகை அரக்கர்களாகக் கூட சில சமயம் எண்ணத் தோன்றுகிறது. இதில் மென்பொருள் நிபுணர்கள் பக்கமும் குறை இருக்கின்றது. எந்த ஒரு மென்பொருள் நிறுவும் பொழுதும், அதனால் ஏற்படும் நிறுவன மற்றும் மனிதவியல் மாற்றங்களைப் பற்றிய ஒரு அலசல், இன்றும் பல சூழல்களில் விவாதிக்கப்படுவதே இல்லை. மின்னலைக் கண்டு பயந்தவர்கள் நம் முன்னோர். அது என்னவென்று புரிந்த பின், தகுந்த பாதுகாப்புடன் செயல்படுகிறோம். ஆனால், பயந்து கதை கட்டி விடுவதில்லை. கணினி உலகமும் அப்படியே. 

கணினி நிலாக்காலம்

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8 ”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.