சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்

வளர்ந்து வரும் சிறந்த பத்து தொழில் நுட்பங்கள் – பகுதி 8

அகிலத்தில் உயிர்கள் வேறெங்கிலும் இருக்கிறதா என்ற கேள்வி நம்மிடையே நிலவுகிறது. செவ்வாய்க் கோளில் உயிரினங்களைத் தேடியும் நம் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், நம்மைப் போன்ற பல்வகை உயிரினங்களைக் கொண்டுள்ள கோள் ஒன்றை இதுவரை நாம் அறியவில்லை. இப்புவியைப் போற்றிப் பாதுகாக்காமல் நாம் வளர்ச்சி என்ற பேரிலும், முன்னேற்றம் என்ற செயலிலுமாகச் சூழல் சீர் கேடுகளைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறோம்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் என்பவை அடிப்படைத் தேவைகளே. இவை அனைத்திலும் நாம் செயற்கை முறைகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம். காங்க்ரிட் கட்டடங்கள் நம்முடைய வசிப்பிடத்தின், அலுவலகங்களின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. காங்க்ரிட்டின் முக்கியப் பொருளாகிய சிமென்ட் உற்பத்தி, உலகக் கரிவளி வாயு உமிழ்வில் 8% என லண்டனைச் சேர்ந்த அறிவுச் சிந்தனை கூடமான ‘சாத்தம் ஹவுஸ்’ (Chatham House) சொல்கிறார்கள். சிமென்ட் உற்பத்தியை ஒரு நாடென உருவகித்தோமானால், அது சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் கரி உமிழ்விற்கான மூன்றாவது இடத்தில் இருக்கும்! ஒவ்வொரு ஆண்டும் 4 பில்லியன் டன் சிமென்ட் உற்பத்தியாகிறது. நகரமயமாக்கலின் விளைவாக எதிர்வரும் முப்பது ஆண்டுகளில் அதன் உற்பத்தி 5 பில்லியன் டன் ஆக அதிகரிக்கும் என அனுமானித்துள்ளார்கள். சிமென்ட் உருவாகத் தேவையான வெப்பத்தை உண்டாக்குவதற்கு உபயோகிக்கப்படும் தொல்லெச்ச எரி பொருட்கள், மற்றும் சுண்ணாம்புக் கல்லை சூளைகளில் கரிய ஓடென்று மாற்றும் வேதியல் செயல்பாடு, இவற்றால் சிமென்ட் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் கரி உமிழ்கின்றன.

இந்த ஆலைகள், சூழல் சீர்கேடுகளில் தங்களின் கரி உமிழ்வின் அபாயங்களை உணர்ந்துள்ளபோதிலும், பல காரணங்களுக்காக, குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையைக் கோடிட்டு மாற்றங்களை எதிர்கொள்ளத் தயங்கினாலும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக சிமென்ட் மற்றும் காங்க்ரிட் குழு (Global Cement and Concrete Association) என்ற அமைப்பில், உலக சிமென்ட் உற்பத்தியாளர்கள் 30% அங்கம் வகிக்கிறார்கள். இது முதன் முறையாக 2018-ல் ‘நிலை நிறுத்தும் வழிகாட்டி முறைகள்’ (Sustainability Guidelines) என்பதை வெளியிட்டது. இந்த அறிக்கை, செயல்பாடுகளில் முன்னேற்றத்தையும் வெளிப்படைத் தன்மையையும் காட்டும் முகமாக, கரி உமிழ்வுப் பதிவுகளும், தண்ணீர் பயன்பாடும் அளவீடுகளாகக் காட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இடையே குறைந்த பட்ச கரி உமிழ்விற்கான சாத்தியங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளவை, போன்றவை கவனத்தில் வந்தன. ந்யூ ஜெர்ஸி, பக்ஸ்காடவேயில்(Piscataway) உள்ள தொழில் தொடங்கு நிறுவனமான ‘சாலிடியா’,(Solidia) ரட்கஸ் பல்கலையிலிருந்து(Rutgers University) உரிமம் பெற்று பயன்படுத்திய வேதியியல் முறையால் கரி உமிழ்வு 30% வரை குறைந்தது. வழக்கமான முறையை சற்று மாற்றி அதிகக் களிமண், குறைந்த அளவில் சுண்ணாம்புக் கல், குறைந்த வெப்பமூட்டல் முறையில் உற்பத்தி நடக்கிறது. நோவா கோஷா, டார்ட் மவுத்தில் உள்ள ‘கார்பன் க்யூர்’, தொழிற்சாலைகளில் காங்க்ரீட் உற்பத்தியில் வெளிவரும் கரிவளியினை, வளி மண்டலத்தில் கலக்க விடாமல் சிறைபிடித்து, ஒரு உபப் பொருளாக, (தாதுப் பொருளென) மாற்றுகிறது. மான்ட்ரீயாலிலுள்ள ‘கார்பிக்ரீட்’, சிமென்ட்டை காங்க்ரீட்டில் முழுவதுமாகப் புறந்தள்ளி,எஃகு உற்பத்தியின் உபப்பொருளான எஃகு கசடினைப் பயன்படுத்துகிறது. நார்வேயிலுள்ள மிகப் பெரும் சிமென்ட் உற்பத்தியாளரான ‘நார்செம்’, தன் ஒரு தொழிற் சாலையில், கரி உமிழ்வு ஏற்படாமல் செயல்படத் தேவையான முனைப்புகளை முன்னெடுத்துள்ளது. இந்த, ‘மாதிரித் தொழிலகத்தில்’ கழிவுகளிலிருந்து எரி பொருள் எடுத்து அதை சிமென்ட் உற்பத்தியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முழுதும் கரி உமிழ்வை 2030க்குள் அகற்றும் முகமாக, கரியை வளி மண்டலத்தில் கலக்க விடாமல் பிடித்து சேகரிக்க அவர்கள் நினைத்துள்ளனர்.

காற்றின் தரத்தை மேம்படுத்தவும், அதில் கலந்து விடும் கரி உமிழ்வை உறிஞ்சும் திறனுடைய பாக்டீரியாக்களை காங்கிரீட் உருவாக்கத்தில் இணைத்து அதன் செயல் திறனை மேம்படுத்தவுமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வாழும் கட்டுமானப் பொருட்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல தொழில் தொடங்கு நிறுவனங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில் ரெய்லீயில் (North Carolina, Raleigh) உள்ள ‘பயோ மேசன்’ சிமென்ட் போன்ற செங்கற்களை, பாக்டீரியாவையும், ‘அக்ரிகேட்’ என்ற துகள் பொருட்களையும் இணைத்து உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்துடன் களத்தில் உள்ளது.

மேம்பட்ட இராணுவ ஆய்வுத் திட்டக் குழுவின் (Defense Advanced Research Projects Agency) நிதி உதவியுடன் கோலராடோ போல் டா (Colorado Boulder) பல்கலை ஒரு புதுமைப் பொருளை படைத்துள்ளது. அது பற்றி ‘நேச்சர்’ இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஆய்வாளர்கள் ‘சைனோ பாக்டீரியா’ (Cyano Bacteria) எனப்படும் ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர்களைக் கொண்டு குறைந்த கரி உமிழ்வில் காங்க்ரீட்டை உற்பத்தி செய்துள்ளார்கள். அவர்கள் மணல் – நீர்க்களிம்பில் பாக்டீரியா தடுப்பூசியைச் செலுத்தி, தன்னைத்தானே விரிசல்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் செங்கற்களை வடிவமைத்துள்ளார்கள்.

இன்றைய நடைமுறையில், இத்தகு கற்கள், சிமென்ட் மற்றும் காங்க்ரீட் பயன்பாட்டினை உடனடியாக மாற்ற இயலாது. ஆனால், தற்காலிகமானக் கட்டுமானங்கள், கட்டிட முகப்புகள், நடை பாதைகள் ஆகியவற்றில் குறைந்த எடையும், நிறைந்த வலுவும் கொண்ட இவை பயன்பாட்டிற்கு வரும் காலம் நெருங்கும் எனச் சொல்லலாம்.

அங்கு தூணில் அழகியதாய், நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தர வேண்டும்.’-பாரதி.

இந்தியாவின் பழம் நகர்களில் உள்ள பழம் பெரும் வீதிகளில் ஒரு பக்கச் சுவர் மட்டுமே உரிமையாளரின் பெயரில் இருக்கும், அவ்வீட்டின் மறுபக்கச் சுவர் இதைத் தொடரும் உரிமையாளருக்கு. அவ்வமைப்பு வெப்பத்தால் ஏற்படும் கதிர் வீச்சினைத் தடுப்பதாகவும், குறைப்பதாகவும் கட்டுமானத் துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். பனையோலை, தென்னையோலை, களிமண் போன்ற கட்டுமானப் பொருட்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்புவரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன.

Series Navigation<< மின்சக்தி விமானங்கள்குவாண்டம் உணர்தல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.