தத்தாரிகள்

லூஸியா பெர்லின்

பேட்டன் ரூஜிலிருந்து ஆல்புகெர்க்கிக்கு வந்தாயிற்று. காலை இரண்டு மணிபோல இருக்கும். சுழற்றி அடிக்கிற காற்று. ஆல்புகெர்க்கியில் காற்று அப்படித்தான் வீசும். நான் க்ரேஹௌண்ட் பஸ் நிலையத்திலேயே தாமதித்தேன், கடைசியில் ஒரு டாக்ஸி ட்ரைவர் வந்தார், அவர் மீது ஏராளமாக இருந்த சிறைச்சாலைப் பச்சை குத்திய அடையாளங்களைப் பார்த்ததும், இங்கே எங்கே தங்கலாம் என்று இவர் சொல்வார், அங்கு பலானது கிடைக்கும், ஒரு பாட்டம் போடலாம் என்று தோன்றியது.[1] அவர் என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டார், தங்க ஓரிடத்துக்கு அழைத்துப் போனார், அந்தத் தெற்கு பள்ளத்தாக்குப் பகுதியில் அதை ‘நோரியா’ என்று அழைத்தார்கள்.[2]

என் அதிர்ஷ்டம்தான், அவனை, நூடில்ஸை நான் சந்தித்தேன். தப்பித்து ஓட அல்புகெர்க்கியை விட மோசமான ஓர் இடத்தை நான் பிடித்திருக்க முடியாது. சிக்கானோக்கள் நகரத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[3][4] மய்யாட்டேக்கள் [5] இங்கு எந்த போதைப் பொருளையும் வாங்கி விட முடியாது, கொல்லப்படாமல் இருந்தால், அதுவே அதிர்ஷ்டம் என்று வைத்துக் கொள்ள வேண்டும். சில வெள்ளையர்கள், சிறையில் பல காலம் கழித்து, நன்கு சோதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஏதோ வாங்க முடியலாம். வெள்ளைப் பெண்களா, சுத்தம், கொஞ்சமும் வாய்ப்பு இராது, அவர்களால் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. அதற்கு ஒரே வழி, இதிலும் எனக்கு நூடில்ஸ்தான் உதவினான், யாராவது ஒரு பெரும்புள்ளியோடு ஜோடியாவதுதான், நான் நாச்சோவோடு சேர்ந்து கொண்டதைப் போல. அதற்குப் பிறகு யாரும் என்னைத் தொல்லை செய்ய முடியவில்லை. நான் இப்ப சொன்னதுதான் என்னவொரு அற்பமான விஷயம், நாச்சோ ஒரு புனிதமான ஆள், இதை நம்புவது கடினமாக இருக்கலாம். அவர் பழுப்புத் தொப்பி அணிக்கு நிறைய செய்தார், இளைஞர்களோ, முதியவர்களோ, யாரானாலும் மொத்த சிக்கானோ சமூகத்துக்கும் உதவினார். அவர் இப்போது எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பிணையில் விடப்பட்டபோது தப்பிப் போய்விட்டார். நான் என்ன சொல்கிறேனென்றால், அது பெரிய தொகை செலுத்திக் கிட்டிய பிணை. அவர் ஒரு போதைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, மார்க்விஸ்ஸை, ஐந்து முறை, முதுகில் சுட்டிருந்தார். ஜூரி குழுவினர் [6] அவரைப் புனிதர் என்று கருதவில்லை, ஆனால் ராபின் ஹூட் [7]போல என்று கருதி இருப்பார்கள், ஏனெனில் அவர் செய்தது திட்டமிடாத கொலை என்று தீர்ப்பு சொன்னார்கள். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லையே என்று இருக்கிறது. அதே சமயத்தில் நானும் அகப்பட்டுக் கொண்டேன், என் மீது போதை ஊசி குத்தல் வடுக்கள் இருந்தன.

இதெல்லாம் நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டன, இல்லையென்றால் இப்போது இவற்றைப் பற்றி நான் பேச முடிந்திருக்காது. அந்த நாள்களில் ஒரு சிறு துண்டு தூள் பொட்டலமோ, அல்லது ஊசி குத்திய காயக் குறிகளோ இருந்தால் ஐந்திலிருந்து பத்து வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டிருப்போம்.

அப்போது முதலாவதாக மெதடோன் சிகிச்சைத் திட்டங்கள் துவங்கி இருந்தன.[8] இந்த முன்னோடித் திட்டங்களில் ஒன்றிற்கு நான் அனுப்பப்பட்டிருந்தேன். ”லா பின்டா” என்று அழைக்கப்படும் ஸாண்டா ஃபே நகரிலுள்ள மாநிலச் சிறையில் பல வருடங்கள் வாடுவதற்குப் பதிலாக,  ‘லா வீடா’ வில் ஆறு மாதங்கள்.[9] அந்த பஸ்ஸை அனாதை நாய்களின் கூட்டமொன்று சூழ்ந்து கொண்டு ஊளையிட்டும், வெறி கொண்டாற்போலக் குரைத்துக் கொண்டும் வரவேற்றது, பின் அது புழுதிப் படலத்துக்குள் ஓடி மறைந்தது.

ஆல்புகெர்க்கி நகரிலிருந்து முப்பது மைல்கள் தள்ளி இருந்தது லா வீடா. பாலைவனத்தின் நடுவில். சுற்றி எதுவும் இல்லை, ஒரு மரமோ, ஒரு புதரோ கூட இல்லை. நெடுஞ்சாலை 66 நடந்து போய்ச் சேரும் தூரத்தில் இல்லை. லா வீடா முன்னாளில் ரேடார்கள் இருந்த இடம், இரண்டாம் உலகப் போரின் போது அது ராணுவ முகாமாக இருந்தது. பிறகு அது கைவிடப்பட்டிருந்த இடம். நிஜமாகவே சொல்கிறேன், முழுதும் கைவிடப்பட்ட இடம். நாங்கள் அதைப் புதுப்பிக்க அனுப்பப்பட்டோம்.

சுழலும் காற்றில் நின்றோம், கண்ணைக் குத்தும் சூரிய ஒளியில். அந்த இடம் மொத்தத்திலும் பிரும்மாண்டமான ரேடாரின் பெரும் தகடு ஒன்றின் நிழல் மட்டுமே இருந்தது, வேறு நிழலே இல்லை. சிதிலமான பாசறைக் கட்டடங்கள். கிழிந்தும் துருப்பிடித்தும் போயிருந்த ஜன்னல் திரைத் தகடுகள் காற்றில் சடசடத்தன. சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கவர்ச்சிப் படங்கள் கிழிந்து தொங்கின. ஒவ்வொரு அறையிலும் மூன்று நான்கு அடி மணல் மேடுகள். ஓவியப் பாலை என்றழைக்கப்பட்ட பாலைவனத்தின் படங்களைத் தாங்கிய தபாலட்டைகளில் இருப்பது போன்ற அலையலையான படிவுகள் கொண்ட மணல் மேடுகள்.

எங்களின் மீட்சிக்கு உதவ வேண்டியன என்று பல விஷயங்கள் இருந்தன.  அவற்றில் முதலாவது, எங்களை தெருக்களின் சூழலில் இருந்து அகற்றுவது. இதை ஆலோசகர்கள் சொல்லும்போதெல்லாம் நாங்கள் விழுந்து புரண்டு சிரித்தோம். நாங்கள் இருந்த இடத்தில் தெருக்கள் மட்டுமில்லை, எந்தச் சாலையுமே இல்லை, அந்த முகாமில் இருந்த சில தெருக்களும் மணல் முட்டுகளால் மூடப்பட்டிருந்தன. முகாமின் சாப்பாட்டறைகளில் சில மேஜைகள் இருந்தன, அவையும் மணலில் புதைந்திருந்தன. கழிப்பறைகளின் பீங்கான் குடுவைகளில் செத்துக் கிடந்த மிருகங்களும், கூடுதலான மணலும் மட்டுமே இருந்தன.

அங்கு சுற்றிக் கொண்டிருந்த நாய்களின் குரைப்பொலியும், சுழல் காற்றின் ஒலியும் மட்டும்தான் கேட்க முடிந்தது. அந்த மௌனம் நன்றாக இருந்தது, ஆனால் அந்த ரேடாரின் தகடுகள் இரவிலும் பகலிலும் காதைத் துளைக்கும் முனகல் ஒலியோடு திரும்பிய வண்ணம் இருந்தன. முதலில் அது எங்களுக்கும் பெரும் தவிப்பைக் கொடுத்தது, ஆனால் பழகிய பிறகு அதுவே,காற்றில் ஒலிக்கும் மணிகளின் ஒலி போல, ஆறுதலாக ஆகி விட்டிருந்தது. ஜப்பானியத் தற்கொலை விமானிகளைத் தடுக்க அந்த ரேடார்கள் உதவின என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் அதைப் போல பல விபரீதமான விஷயங்களைச் சொன்னபடியே இருந்தார்கள்.

சொல்லவும் வேண்டுமா, எங்கள் மீட்புக்குப் பெரிதும் உதவுவதாக எதிர்பார்க்கப்பட்டது நேர்மையான உடல் உழைப்புதான். ஒருவரோடு ஒருவர் பழகக் கற்பது. குழுவாக இயங்குவது. காலை ஆறு மணிக்கு மெதடோனைப் பெற நாங்கள் வரிசையில் நின்ற போதே குழுவாக வேலை செய்வது துவங்கி விடும். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மதிய உணவு வரை நாங்கள் வேலை செய்தோம். மறுபடி இரண்டிலிருந்து ஐந்து மணிவரை குழுவாக வேலை செய்தோம். மாலை ஏழுமணியிலிருந்து இரவு பத்து வரையும் குழுக்களாகச் சேர்ந்தோம்.

இப்படிக் குழுக்களாக ஆவதன் நோக்கம் எங்களை உடைப்பதுதான். எங்களுடைய முக்கியமான பிரச்சினைகள் எங்களிடம் இருந்த ஆத்திர உணர்வு, திமிர், எதிர்ப்புணர்வு. நாங்கள் பொய் சொன்னோம், ஏமாற்றினோம், திருடினோம். ஒவ்வொரு நாளும் குழுக்களில் யாராவது ஒரு நபருக்கு அவருடைய குறைகளுக்காகவும், தவறுகளுக்காகவும், கடும் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டன, மொத்தக் குழுவும் அவரை நோக்கிக் கத்தினார்கள்.

ஒவ்வொருவரும் இப்படி நொறுக்கப்பட்டனர், விட்ருங்க ஐயா என்று கதற வைக்கப்பட்டனர். யார் அந்த கேடுகெட்ட ஐயா? பார்த்தீங்கள்ள, நான் இன்னும் ஆத்திரமாய்த்தான் இருக்கிறேன், திமிராகத்தான் இருக்கிறேன். நான் குழுக் கூட்டத்துக்குப் பத்து நிமிடம் தாமதமாகப் போனேன், என் புருவங்களை மழித்து விட்டனர், என் கண்ணிமை முடிகளைக் கத்தரித்தனர்.

குழுவினர் ஆத்திரங்களை எதிர்கொண்டனர். நாள் பூராவும் ஒரு பெட்டியில் நாங்கள் யாரிடம் ஆத்திரம் கொண்டிருக்கிறோம் என்று துண்டுக் காகிதங்களில் எழுதிப் போட்டுக் கொண்டிருந்தோம், பிறகு குழுக் கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசினோம். பெரும்பாலும் நாங்கள் சும்மாக் கத்தினோம், எப்படி மற்றவர்கள் ஒவ்வொருவரும் தோற்றுப் போனவர்கள், கேடுகெட்டவர்கள் என்று பழி சாட்டினோம். ஆனால் பாருங்கள், நாங்கள் எல்லாரும் பொய் சொன்னோம், ஏமாற்றினோம். பாதி நேரம் யாருமே நிஜத்தில் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, சும்மா கோபம் கொண்டது போல நடித்தோம், குழுக் கூட்டத்தில் நடந்த நாடகத்தைத் தொடர்வதன் மூலம் அங்கே லா வீடாவில் தொடர்ந்து இருக்க முடிந்தது, சிறைக்குப் போகாமல் தவிர்க்க முடிந்தது. இப்படிப் போடப்பட்ட துண்டுக் காகிதங்களில் பெருமளவும், பாபி பற்றியே இருந்தன, அவர்தான் முகாமின் சமையற்காரர், வெளியில் சுற்றிய நாய்களுக்கு அவர் சாப்பாட்டு மிச்சங்களைப் போட்டார் என்று விமர்சனங்கள். அல்லது க்ரேனாஸ் பூண்டுகளை வெட்டுவதில்லை, சும்மா முள் கொத்தால் புதர்களை இங்குமங்கும் தள்ளுகிறான் என்பது போல விமர்சனம்.

நாங்கள் எல்லாருமே அந்த நாய்களை வெறுத்தோம். விடியற்காலை ஆறுமணிக்கு வரிசையில் நிற்போம், மறுபடி மதியம் ஒரு மணிக்கும், மாலை ஆறுமணிக்கும் வரிசை. காலையில் குளிரில் உறைந்து போவோம், பகலில் சூட்டில் வதங்குவோம்.

பாபி காத்திருப்பார், கடைசியில் தன் தளத்தில் நீள நடந்து போய், தற்பெருமை கொண்ட வங்கி அதிகாரியைப் போல, பூட்டைத் திறந்து கதவைத் திறப்பார். நாங்கள் காத்திருக்கையில், சில அடிகள் தள்ளி, சமையலறையின் வாயிலருகே, அந்த நாய்களும் காத்திருக்கும், அவர் சமையலறைக் கழிவுகளை அவற்றுக்கு வீசுவதற்காக. அழுக்கான, விகாரமான, பல வகை நாயினங்களின் கலப்பாக இருந்த அவை மலை முகடுகளில் வசிக்கும் மக்களால் கைவிடப்பட்டவை. அவற்றுக்கு பாபியைப் பிடிக்கும், ஆனால் அவை எங்களை வெறுத்தன, எங்களைப் பார்த்து பற்களைக் காட்டி உறுமி, குரைத்து வந்தன, ஒவ்வொரு சாப்பாட்டின் போதும், தினம் தினம் இதேதான் நடந்தது.

நான் சலவை செய்யும் வேலையிலிருந்து சமையலறைக்கு மாற்றப்பட்டேன். சமையற்காரருக்கு உதவுவதும், பாத்திரங்களைக் கழுவுவதும், தரையைப் பெருக்கித் துடைப்பதும் வேலை. கொஞ்ச நாள்கள் கழிந்த பின் நான் பாபியை வெறுக்கவில்லை. நாய்களை வெறுப்பது கூடக் குறைந்து போயிற்று. அவர் அவை எல்லாவற்றுக்கும் பெயரிட்டிருந்தார். அசட்டுப் பெயர்கள். ட்யூக், ஸ்பாட், ப்ளாக்கி, கிம்ப், ஷார்ட்டி. மேலும் அவருடைய செல்லமான லீஸா. தட்டையான தலையும், வௌவால் போல பெரிய காதுகளும், மஞ்சள் நிறத்தோடு கண்களும் தங்க மஞ்சள் நிறமுமாக இருந்த ஒரு வயதான சொறி நாய். சில மாதங்களுக்கு அப்புறம் அவருடைய கையிலிருந்து சாப்பிட வந்தது. “லீஸா என்னோட மஞ்சள் கண் சூரியனே, செல்லமே!” என்று அதைப் பார்த்துப் பாடுவார். கடைசியில் தன் கோரமான காதுகளுக்குப் பின்னாலும், அதனுடைய கால்களுக்கு நடுவில் தொங்கிய எலி வால் போன்ற வாலிற்கு சற்று மேலேயும் சொறிந்து விட அவரை அது அனுமதித்தது. “என்னோட இனிப்பான சூரிய வெளிச்சமே” என்று அவர் கொஞ்சுவார்.

அரசாங்கப் பணம் தொடர்ந்து எங்களோடு பல வகை செயல்பட்டறைகளை நடத்தும் நிபுணர்களை அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு பெண்மணி குடும்பங்களைப் பற்றி ஒரு பட்டறை நடத்தினார். எங்களில் ஒருத்தருக்காவது குடும்பம் என்று ஒன்று இருந்ததா என்ன? ஸினெனானி[10]லிருந்து வந்த ஓர் ஆள், எங்களுடைய பிரச்சினையே எங்களுடைய சுய பெருமைதான் என்றார். அவருக்கு ரொம்பப் பிடித்த வசனம், “நீங்க பார்க்க ரொம்ப ஜாலா இருக்கறதா நினைக்கிறபோதுதான் நீங்க ரொம்ப கேவலமாத் தெரியறீங்க,” ஒவ்வொரு நாளும் அவர் எங்களை, எங்களுடைய சுய பிம்பத்தை ”சுக்குச் சுக்காக நொறுக்க”ச் செய்தார். அது என்னவென்றால் நாங்கள் எல்லாரும் முட்டாள்களைப் போல நடப்பதாக இருந்தது.

எங்களுக்கு உடற்பயிற்சிக் கூடம் ஒன்றும், பளு தூக்கும் கருவிகளும், குத்துச் சண்டைப் பயிற்சிக்கான குத்துப் பைகளும் கொடுக்கப்பட்டன. குழிப் பந்தாட்ட மேஜை ஒன்றும் கிட்டியது. ஒரு கூடைப்பந்து விளையாட்டுத் தடல், ஒரு டென்னிஸ் தளம், கனமான உருண்டைப் பந்தை வீசி தூரத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்குகளைத் தட்டி வீழ்த்தும் அரங்கு ஒன்று எல்லாம் கிட்டின. ஜ்யார்ஜியா ஓ’கீஃபின் ஓவியங்களுடைய பிரதிகள் சட்டமிட்டவை சுவர்களில் ஏறின. மோனேயின் நீரில் மிதக்கும் அல்லிப் பூக்களின் ஓவியம் வந்தது. கூடிய சீக்கிரம் ஒரு ஹாலிவுட் திரைப்படக் குழுவினர் வரப்போகிறார்கள் என்ற செய்தி வந்தது. அந்தக் களத்தில் ஓர் அறிவியல் புனைவுக் கதையைப் படமாக்கப் போகிறார்களாம். நாங்கள் அதில் துணை நடிகர்களாக வந்து போகலாம், அதற்குக் கொஞ்சம் ஊதியம் கிட்டும். அந்தப் படக்கதை அங்கிருந்த ரேடார் தகட்டை மையமாகக் கொண்டிருக்கும், அந்தத் தகடு ஆஞ்சி டிக்கின்ஸனுக்கு என்ன செய்தது என்பது கதை. அது அவள் மீது காதல் கொண்டு விடுகிறது, அவள் கார் விபத்து ஒன்றில் இறக்கும்போது அவளுடைய ஆன்மாவைக் கைப்பற்றி விடுகிறது. லா வீடாவில் குடியிருக்கும் பிறரின் ஆன்மாக்களையும் அது கைப்பற்றும். நான் நள்ளிரவு நேரத் தொலைக் காட்சியில்  அந்தப் படத்தை இருபது தடவைகள் போலப் பார்த்திருக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக, முதல் மூன்று மாதங்கள் எல்லாம் நன்றாகவே நடந்தன. நாங்கள் எல்லாரும் ’சுத்தமாக’, ஆரோக்கியமாக இருந்தோம்; கடுமையாக உழைத்தோம். அந்த முகாம் நல்ல நிலையில் இருந்தது. நாங்கள் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் நெருங்கி வந்தோம், கோபப்படுவது நின்றது. ஆனால் அந்த முதல் மூன்று மாதங்கள் நாங்கள் முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம். தொலைபேசி அழைப்புகள், செய்தித்தாள்கள், தபால், தொலைக் காட்சி எதுவும் இல்லை. அந்த தனிமைப்படுத்தல் முடிந்தபோது எல்லாம் மறுபடி சிதையத் தொடங்கின. அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு பலரும் வெளியே போனார்கள், திரும்பி வரும்போது அவர்களின் சிறு நீரில் போதைப் பொருள் எச்சங்களின் அழுக்கு சேர்ந்திருந்தது, அல்லது அவர்கள் திரும்பி வரவேயில்லை. புது நபர்கள் வசிக்க வந்தபடி இருந்தனர், ஆனால் எங்களிடம் அந்த இடத்தைப் பற்றி இருந்த பெருமை உணர்வு அவர்களுக்கு இல்லை.

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கூட்டம் போடப்பட்டது. பகுதி அதில் குறைகளைத் தெரிவிக்கவும், பகுதி கோள் சொல்வதற்கும் என்று இருக்கும். நாங்கள் எல்லாரும் பேச முறை போட்டுக் கொண்டு பேசினோம், வெறுமனே ஒரு ஜோக் சொல்வதானாலும், ஒரு பாட்டுப் பாடுவதானாலும் செய்யலாம். ஆனால் யாருக்கும் எதைப் பற்றியும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை என்றானதால், வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களில் லைல் டானர் பாடுவார், “இராப் பறவையொன்றைப் பார்த்தேன் என நினைத்தேன்” என்ற பாட்டைப் போல ஒன்று. “எல் ஸாப்போ” (என்றழைக்கப்பட்டவர்) சுவாவா நாய் வகைகளை எப்படி வளர்ப்பது என்று உரை ஒன்றை நிகழ்த்தினார், அது கேட்கவே அசிங்கமாக இருந்தது. ஸெக்சி இருபத்து மூன்றாவது விவிலியப் பாடலைப் பாடிய வண்ணம் இருந்தாள். அவள் அதன் சொற்களை வருடி வருடிப் பாடிய விதம் சிறிது ஆபாசமாக இருந்ததால் எல்லாரும் சிரித்தார்கள், அவளுடைய உணர்வுகள் புண்பட்டன.

அவளுடைய பெயரே ஒரு ஜோக் போல. மெக்ஸிகோவிலிருந்து வந்த ஒரு மூத்த வேசி அவள். அவள் நாங்கள் வந்த முதல் குழுவில் சேர்ந்து வரவில்லை, பிற்பாடு, ஐந்து நாள்கள் தனிமைச் சிறையில் சாப்பாடு இல்லாமல் கிடந்து தண்டனை அனுபவித்துவிட்டு வந்தாள். பாபி அவளுக்குக் கொஞ்சம் கஞ்சியும், பன்றி மாமிசம் சிறிதும், முட்டைகளையும் சமைத்துக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு வேண்டி இருந்ததெல்லாம் ரொட்டி மட்டும்தான். அவள் அங்கு அமர்ந்து மூன்று முழு ரொட்டிகளை, அதுவும் பஞ்சு போன்ற இலகுவான ஒண்டர் ரொட்டிகளை, மெல்லக்கூட இல்லை, அப்படியே விழுங்கினாள், அத்தனை பசித்துக் கிடந்திருந்தாள். பாபி அவளுக்குத் தயாரித்த சூப்பையும், பன்றி மாமிசத்தையும், முட்டைகளையும் நாய் லீஸாவுக்குக் கொடுத்து விட்டார்.

ஸெக்ஸி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள், கடைசியில் நான் அவளை எங்கள் அறைக்கு அழைத்துப் போனபோது அவள் அப்படியே விழுந்து கிடந்தாள். லிடியாவும் ஷெர்ரியும் அடுத்த அறையில் படுக்கையில் சேர்ந்து படுத்திருந்தனர். அவர்கள் இருவரும் பல வருடங்களாகக் காதலர்களாக இருந்தவர்கள். அவர்களுடைய மெதுவான சிரிப்புகளை வைத்து அவர்கள் எதையோ கொண்டு போதையில் இருந்தனர் என்று நான் ஊகித்தேன், ரெட்ஸ் ஆகவோ லூட்ஸாகவோ இருக்கும்.[11] நான் சமையலறைக்குத் திரும்பிப் போனேன், அங்கு சுத்தம் செய்ய பாபிக்கு உதவ வேண்டி இருந்தது. கேப், அந்த முகாமின் ஆலோசகர், அங்கு வந்தார், அவர் இரவில் வந்து கத்திகளை எடுத்துப் போய், இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விடுவார். அதை ஒவ்வொரு இரவும் அவர் செய்து வந்தார்.

“நான் நகரத்துக்குப் போகிறேன். நீங்கதான் இப்ப இங்கே பொறுப்பாளர், பாபி.” இப்போதெல்லாம் இங்கு ஊழியர்கள் யாரும் இரவில் தங்குவதில்லை.

பாபியும் நானும் சீனநெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து காஃபியை அருந்தச் சென்றோம். மேட்டு நிலத்தில் நாய்கள் எதையோ துரத்தி தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன.

“ஸெக்ஸி வந்தாள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவள் நல்லவளாக இருக்கிறாள்.”

“அவள் பரவாயில்லை. அதிக நாள் தங்க மாட்டாள்.”

“அவளைப் பார்த்தால் லீஸாவைப் போல இருக்கிறது.”

“லீஸா ஒன்றும் அத்தனை கோரம் இல்லை. ஓய், டீனா, சும்மா கிட. அது இதோ வந்து விட்டது.”

சந்திரன். நியூ மெக்ஸிகோவின் இரவில் தோன்றும் சந்திரனுக்கு இணையான சந்திரன் வேறெங்கும் இராது. அது ஸாண்டியாஸ் மலைகளின் மேல் எழும், மைல்களாக நாற்புறமும் பரவிக் கிடக்கும் வறண்ட பாலைவனத்தை முதல் தடவை வீழும் பனி மழை போலவிருக்கும் தன் சத்தமே இல்லாத வெண்மையால் அது அமைதிப்படுத்தும். லீஸாவின் மஞ்சள் கண்களிலும், சீனநெல்லி மரத்திலும் விழும் நிலவொளி.

உலகம் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது. எதுவுமே முக்கியமில்லை, தெரியும் இல்லையா? நான் என்ன சொல்றேன்னா, எதுவும் அத்தனை எல்லாம் முக்கியம் கிடையாது. ஆனால் எப்பவோ சில நேரம், சும்மா ஒரு வினாடிக்கு, நமக்கு இந்த அற்புத எழில் கிடைக்கிறது, இது முக்கியம்ங்கிற ஒரு நம்பிக்கை, இது ரொம்பவே முக்கியம்னு தோணுது.

அவரும் அப்படித்தான் உணர்ந்தார். அவருடைய தொண்டையில் ஒரு பிடிப்பு வந்தது, அது எனக்குக் கேட்டது. சில பேர் இப்ப ஒரு பிரார்த்தனை செய்திருப்பாங்க, மண்டி இட்டிருப்பாங்க, இந்த மாதிரி ஒரு கணத்துல. நாங்க என்ன செய்தோம்னா, கலவி செய்தோம். “எல் ஸாபோ” எங்களைக் கண்டு பிடிச்சுட்டார். ஆனா அது நேரம் கழிச்சுத்தான் நடந்தது, அப்போ நாங்க இன்னும் பிறந்த மேனிக்குக் கிடந்தோம், அதனாலெ.

இது காலையில் குழுக் கூட்டத்துல வெளிப்பட்டது, நாங்க தண்டனையை ஏற்க வேண்டியதாச்சு. மூணு வாரம், சமையலறையைச் சுத்தம் செய்த பிறகு, அறையைச் சுற்றி எல்லா இடத்திலேயும், பிறகு சாப்பாட்டு அறை ஜன்னல்களையும்: எல்லா இடத்திலும் உப்புத்தாளை வைச்சுத் தேய்ச்சு பழைய பெயிண்டை எல்லாம் எடுக்கணும். அதுவே மோசம், ஆனா அப்போது பாபி தன்னைக் காப்பாத்திக்கறத்துக்குன்னு, எழுந்து சொல்றார்: ‘நான் டீனாவோட படுக்கணும்னு ஆசைப்படல்லை. எனக்குச் சுத்தப்படணும், என் தண்டனை காலத்தை முடிக்கணும், பிறகு வீட்டுக்குத் திரும்பிப் போய் என் வீட்டுக்காரி டெப்பியோடவும், குழந்தை டெப்பி-ஆனோடவும் இருக்கணும். அதுதான் வேணும்.” அந்த இரண்டு ஜைவ் டான்ஸ் பெயர்களைப் பத்தியும் ஒரு துண்டுத்தாளை பெட்டியில போடணும்னு நினைச்சேன்.

அது ரொம்ப கஷ்டப்படுத்தியது. அவர் என்னை அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு, என் கிட்டே பேசி இருந்தார். நிறைய ஆம்பிளைங்க மாதிரி இல்லாம, கலவி செய்யறத்துக்கு முன்னாடி நிறைய முயற்சி செய்து என் கிட்டே அன்பு காட்டினார், அதனால சந்திரன் மேலே எழுந்து வரும்போது நான் அவரோட மகிழ்ச்சியா இருந்தேன்.

நாள் பூராவும் அவர் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருந்தது, அதனால பேசவே நேரம் கிடைக்காது. ஆனால் எப்படியுமே அவர் அப்படிச் சொன்னது எனக்கு எத்தனை மனசைப் புண்படுத்தியதுன்னு அவர் கிட்டே நான் சொல்லி இருக்க மாட்டேன். நாங்க ரொம்ப களைச்சுப் போயிருந்தோம், ஒவ்வொரு ராத்திரியும் அப்படித்தான் களைச்சுப் போவோம், நாள் பூராவுமே அப்படித்தான் களைப்பா இருக்கும்.

முக்கியமா நாங்க அதிகம் பேசாதது என்னன்னா, அது நாய்களைப் பத்தித்தான். அதுங்க மூணு நாட்களா வரவே இல்லை.

கடைசியா நான் கேட்டேன். “இந்த நாய்ங்க எங்க போயிருக்குன்னு நினைக்கிறீங்க?”

அவர் தோளைக் குலுக்கினார். “மலைச் சிங்கம். துப்பாக்கி வச்சிருக்கிற சின்னப் பசங்க.”

நாங்க மறுபடி உப்புத்தாளால தேய்க்க ஆரம்பிச்சோம். தூங்கப் போகிற நேரமெல்லாம் தாண்டிப் போயிடுத்து, அதனால மறுபடி புதுசா காஃபி போட்டோம், அதை எடுத்துகிட்டு, மரத்தடியிலே போய் உட்கார்ந்தோம்.

ஸெக்சி இல்லாம எனக்கு ஏக்கமா இருந்தது. அவள் பல் டாக்டரைப் பார்க்கணும்னு நகரத்துக்குப் போன இடத்துல, போதை மருந்தை எங்கேயோ பிடிச்சுருக்கா, மாட்டிகிட்டா, மறுபடி ஜெயிலுக்குப் போயிருக்கான்னு சொல்லல்லை, மறந்து போயிட்டேன்.

”ஸெக்ஸி இல்லையேன்னு இருக்கு. பாபி, காலைல கூட்டத்துல நீங்க சொன்னது ஒரு பெரிய பொய். நீங்க என்னோட படுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டீங்கல்லே.”

“ஆமாம், அது பொய்தான்.”

நாங்க ரெண்டு பேரும் மாமிசம் எல்லாம் வைக்கிற ஐஸ் அறைக்குள்ளே போய்க் கதவைத் தாளிட்டோம். அணைச்சுகிட்டோம், மறுபடி கலவி செய்தோம், ஆனா ரொம்ப நேரம் செய்யல்லை, ஏன்னா அங்கே ரொம்ப உறைஞ்சு போற மாதிரி குளிர். மறுபடி வெளியில வந்தோம்.

நாய்கள் மறுபடி வர ஆரம்பிச்சுதுங்க. ஷார்ட்டி, ப்ளாக்கி, ஸ்பாட், ட்யூக்.

அதுங்க ஒரு முள்ளம்பன்றியைத் தாக்கி இருக்கு. பல நாட்கள் ஆகி இருக்கணும். ஏன்னா, அதுங்க பூராவும் காயம்பட்டு அதெல்லாம் அழுகிப் போக ஆரம்பிச்சிருந்தது. முகமெல்லாம் வீங்கி பெரிய காண்டாமிருகத்து முகம் போல ஆகி இருந்தது. சீழ் பச்சையா வடிஞ்சது. அதுதான் பயங்கரமா இருந்தது, அதுங்களால சரியா பார்க்கக் கூட முடியல்லை. அதுங்களோட தொண்டை எல்லாமும் வீங்கிப் போய் ஒரு சத்தமும் போட முடியல்லை.

ப்ளாக்கிக்கு ஒரேயடியா இழுப்பு வந்தது. ஒரு எம்பு எம்பிக் குதிச்சு, கொர கொரன்னு சத்தத்தோட விழுந்தது. உதைச்சுகிட்டு, உதறி, காத்துல மூத்திரம் பீச்சி அடிச்சது, எம்பி மூணு நாலு அடி குதிச்சு, கீழே ஈரத்தில விழுந்து, செத்துப் போய் புழுதில கிடந்தது. லீஸா கடைசியா வந்தது, அதால நடக்கக் கூட முடியல்லெ. பாபியோட கால் வரைக்கும் தவழ்ந்து வந்தது, அங்கே நெளிஞ்சுகிட்டுக் கிடந்தது, அதோட காலால அவரோட கால் பூட்ஸைத் தட்டித்து.

“எனக்கு அந்த பாழாப் போன கத்திங்களைக் கொண்டு கொடு,” என்றார்.

”கேப் இன்னும் திரும்பி வரல்லியே.” ஆலோசகர்கள்தான் அந்த சேமப் பெட்டகத்தைத் திறக்க முடியும்.

லீஸா பாபியோட காலை மறுபடி தட்டியது, மென்மையாக. அவரை ஒரு பந்தைத் தூக்கிப் போடுன்னு கேட்கற மாதிரியோ, இல்லை என்னைத் தடவிக் கொடுங்கற மாதிரியோ இருந்தது.

பாபி அந்த குளிர் அறைக்குள்ளே போய் ஒரு துண்டு மாட்டு மாமிசத்தை எடுத்து வந்தார். ஆகாயம் கத்திரிப்பூ நிறமா இருந்தது. அது கிட்டத்தட்ட காலை ஆகி விட்டது.

நாய்களிடம் அவர் மாமிசத்தை முகர்ந்து பார்க்கச் செய்தார். அதுங்களை அன்பா அழைச்சு, சாலையைத் தாண்டி எதிரே இருக்கற எந்திரப் பட்டறைக்கு அழைச்சுப் போனார். நான் மரத்தடியிலேயே இருந்தேன்.

அவர் உள்ளே போன பிறகு, கடைசில அதுங்களை எல்லாம் உள்ளே வரவழைச்சுக்கிட்டார். ஒரு சம்மட்டியால அதுங்க மண்டையில அடிச்சுக் கொன்று விட்டார். நான் பார்க்கவில்லை, ஆனால் அது எனக்குக் கேட்டது, நான் இருக்கிற இடத்துலேருந்து ரத்தம் தெறிக்கறதும், அது சுவருலேயெல்லாம் வழிஞ்சு ஓடறதும் தெரிஞ்சது. அவர் “லீஸா, என்னோட இனிப்பான சூரிய ஒளியே”ன்னு ஏதாவது சொல்வாருன்னு நினைச்சேன். ஆனா அவர் ஒரு வார்த்தை கூடப் பேசல்லை. அவர் வெளியில வந்த போது மேலெல்லாம் ரத்தம், என்னைப் பார்க்கக் கூட இல்லை. முகாமுக்குள்ளே போய் விட்டார்.

நர்ஸ் காரை ஓட்டிக்கிட்டு வந்து சேர்ந்தார், மெதடோன் மருந்தை எடுத்து வைக்க ஆரம்பிச்சார். நாங்க எல்லாம் காலை உணவுக்கு வரிசைல நின்னோம். நான் தோசைக் கல்லை அடுப்புல வச்சு, மாவைக் கரைக்க ஆரம்பிச்சேன். நான் சாப்பாட்டைத் தயாரிக்க ரொம்ப நேரம் எடுத்துகிட்டேன்னு எல்லாருக்கும் ஒரே கோபம்.

சினிமாக்காரங்களோட தொடர் வண்டிங்கள்லாம் வர ஆரம்பிச்சபோது இன்னும் முகாம்ல வேலை செய்யறவங்க யாரும் வந்திருக்கல்லை. அவங்க உடனடியா வேலையைத் துவங்கிட்டாங்க, எந்த இடங்களெல்லாம் படமெடுக்கத் தோதானவை, யாரெல்லாம் துணை நடிகரா இருக்கச் சரியானவங்கன்னு பார்க்க ஆரம்பிச்சாங்க. வாக்கி-டாக்கிகளோடவும், மெகஃபோன்களோடவும் பலபேர் எங்க பார்த்தாலும் ஓடிக்கிட்டிருந்தாங்க. எப்படியோ, யாரும் அந்த எந்திரப் பட்டறைக்குள்ளே போகவே இல்லை.

ஒரு காட்சியை உடனேயே படமாக்கத் துவங்கிட்டாங்க…ஒரு ஸ்டண்ட் ஆளு, அவர் ஆஞ்சி டிகின்ஸனுக்குப் பதிலா இருந்தார், ஜிம் லேருந்து காரை ஓட்டிகிட்டுப் போகிறார், மேலே ஒரு ஹெலிகாப்டர் அந்த ரேடார் தகட்டுக்கு மேலே சுத்திகிட்டிருக்கு. கார் ரேடார் தகட்டு மேலே மோதணும், ஆஞ்சியின் ஆவி தகட்டுக்குப் பறக்கணும்னு காட்சி. ஆனா கார் சீன நெல்லி மரத்துல மோதிடுத்து.

பாபியும் நானும் மதிய உணவைத் தயார் செய்தோம், நாங்க ரெண்டு பேரும் அத்தனை சோர்வா இருந்தோமா, மெதுவா ஸ்லோ மோஷன்ல நடந்தோம், அங்கு ஜாம்பி போல இருக்க வேண்டிய துணை நடிகர்களெல்லாம் எப்படி நடக்கணும்னு சொன்னாங்களோ அதே மாதிரி நடந்தோம். நாங்க பேசிக்கல்லை. ஒரு தடவை, சூரை மீன் போட்ட கீரைக்கலவையைத் தயார் செய்யறப்ப, நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டேன், “ஊறுகாய் ரெலிஷா?”

“என்ன சொன்னே?”

 “ஊறுகாய் ரெலிஷ்னு சொன்னேன்.”

“க்ரைஸ்ட். ஊறுகாய் ரெலிஷா!” நாங்கள் வாய்விட்டுச் சிரித்தோம், நிறுத்த முடியாமல் சிரித்தோம். அவர் என் கன்னத்தைத் தொட்டார், இலேசாக, ஒரு பறவையின் சிறகு படுவதுபோல்.

படக் குழுவினர் இந்த இடம் பிரமாதமான ஒன்று என்றனர், ஆகப் பெரிசாம். ஆஞ்சி டிகின்ஸனுக்கு என்னுடைய கண்ணிமையின் சாயம் பிடித்திருந்தது. அது வெறும் சாக்கட்டிப் பொடி என்று நான் அவரிடம் சொன்னேன், மேஜைப் பந்தாட்டத்தில் குச்சிகளுக்கு நுனியில் தடவும் பொடி. “அந்த நீலம் இருக்கே, அது கிடைக்கணும்னு உசிரையே கொடுக்கலாம்,” என்றார் என்னிடம் அவர்.

மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு வயதான ஓவர்சீயர் என்னிடம் வந்து, கிட்டத்தில் என்ன மதுக்கடை இருக்கிறது என்று கேட்டார். காலப்புக்குப் போகிற வழியில் சாலையில் கொஞ்ச தூரத்தில் ஒன்று இருந்தது, ஆனால் நான் ஆல்புகெர்க்கியில்தான் இருக்கிறது என்று சொன்னேன். நகரத்துக்கு என்னை அழைத்துப் போனால், நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொன்னேன்.

“அதைப் பத்திக் கவலைப்படாதே. என்னொட ட்ரக்ல ஏறி உட்காரு, நாம போகலாம்.”

திடும், மளார், டமார்..

“அட எழவே, அது என்னது?” அவர் கேட்டார்.

“கால்நடைகள் முகாமுக்குள்ளே நுழையாமல் இருக்கத் தடை.”

“ஏசுவே, இது நிஜம்மாவே வீணாப் போன இடம்தான்.”

கடைசியாக நாங்கள் நெடுஞ்சாலையை எட்டினோம். அது அருமையாக இருந்தது, சிமெண்ட் சாலையில் கார் டயர்களின் சத்தம், காற்று வண்டிக்குள் வீசினது, எல்லாம். அரை ட்ரக்குகள், பம்பரில் ஒட்டிய ஸ்டிக்கர்கள், பின் இருக்கைகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள். நெடுஞ்சாலை எண் 66.

உயரும் சாலையின் உச்சிக்குப் போனோம், அகன்ற பள்ளத்தாக்கும், ரியோ க்ராண்டே நதியும் கீழே, ஸாண்டியா மலைகள் எழிலோடு மேலே.

“மிஸ்டர், எனக்கு வேணுங்கறதெல்லாம் பேடன் ரௌஜுக்குப் போக ஒரு டிக்கெட்டுக்கான பணம். எனக்கு அறுபது டாலர்கள் கொடுக்க முடியுமா?”

 “அவதிப்படாதே. உனக்கு ஒரு டிக்கெட் வேணும். எனக்கு ஒரு மடக்கு குடிக்கணும். எல்லாம் நடக்கும்.”

***

(தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஃபிப்ரவரி 2020

இங்கிலிஷ் மூலம்: லூஸியா பெர்லின்.  மூலக் கதை: Strays.

இந்தக் கதை அவருடைய சிறுகதைத் தொகுப்பான, ‘A Manual for Cleaning Women: Selected stories’ என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. பல பதிப்புகளைப் பெற்ற இந்த நூலின் 2015 ஆம் வருடப் பதிப்பிலிருந்து எடுத்த கதை.)


[1] இங்கு பலானது என்ற சொல்லை, ஸ்கோரிங் என்ற இங்கிலிஷ் சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தி இருக்கிறேன். போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்துவதற்கு ஸ்கோரிங் என்ற சொல் உபயோகமாகிறது.

[2] நோரா என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இந்தியாவில் ஏற்றம் என்பதாலும், சக்கரம் போன்ற உருளையில் வாளிகளை இணைத்து, சக்கரத்தைச் சுழற்றி வாளிகளில் கிணற்று நீரை இறைக்கும் முறையாலும் வயல்களுக்கு நீர் இறைப்பார்களே, அதைப் போன்ற நீரிறைக்கும் முறைக்கு நோரா என்று பெயர்.

[3] சிக்கானோ என்ற சொல் பொதுவாக மெக்ஸிக வம்சாவளியினரைக் குறிக்கும்.

[4] ப்ரௌன் பெரேஸ் (பழுப்புத் தொப்பி அணி) 1960களில் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக கலிஃபோர்னியா, அரிஜோனா போன்ற மாநிலங்களில் மெக்ஸிக அமெரிக்கர்களும், இதர சில ஸ்பானிஷ் வம்சாவளியினரும் இணைந்து துவக்கிய போராட்டக் குழு. பிற்பாடு அமெரிக்காவின் பல மாநகரங்களுக்குப் பரவி நாடு தழுவிய இயக்கமாயிற்று. மெக்ஸிக அமெரிக்கர்களின் வாழ்வுரிமைகள் அரசுகளாலும், அரசு ஊழியர்களாலும் மதிக்கப்பட வேண்டும் என்பதும், அடிப்படை வாழ்வுத் தர உயர்த்தலுக்கும் போராடினர். இடையில் இது கலைக்கப்பட்டாலும், 1995 இல் மறுபடி உயிர்ப்பிக்கப்பட்டு இன்று இன்னமும் செயலில் இருக்கிறது.

[5] மய்யாட்டே என்ற சொல், மெக்ஸிகர்களால், கருப்பு நிறத் தோலைக் கொண்டவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

[6] ஜூரி= சான்றாயர், தீர்ப்பாயர்

[7] மேலை நாடுகளில், பணக்காரர்களைக் கொள்ளை அடித்து ஏழைகளிடம் பகிரும் நபர்களைப் பொதுவாக ராபின் ஹூட் என்று அழைக்கிறார்கள். ராபின் ஹூட் என்பது புனைவான வரலாற்று உரு என்று கருதப்படுகிறது.

[8] போதையடிமையாகத் தவிப்போருக்கு மெதடோன் மாத்திரைகளும், ஊசி மருந்தும் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவையும் ஒரு வித அபின் வகை மருந்துகள்தாம். ஆனால் இவை போதைப் பொருட்கள் அளவு மதிமயக்கத்தைத் தராமல், ஓரளவு உடல் வலியைக் குறைக்கும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோர் திடீரென நிறுத்தினால் சகிக்க முடியாத அளவு உடல் வலியும், மன வலியும் ஏற்படும், அவற்றைக் குறைப்பதன் மூலம் போதை மருந்திலிருந்து படிப்படியாக விடுபட முடியலாம். அந்த சிகிச்சை முறையே கடந்த பத்திருபது ஆண்டுகளாகத்தான் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

[9] லா விடா என்பது பாலைவனத்தில் இருக்கும் ஒரு தனித்த முகாம். பின்டா என்பது சிறைக்கு ஸ்பானிஷ் மொழியில் உள்ள சொல்.

[10] Synanon- ஒரு வகை உளவியல் சிகிச்சை முறை. குழுக்களாகச் சேர்த்து பல நபர்களின் கலந்துறவாடுதல் மூலம் சிகிச்சை தரப்பட்டது.

[11] ரெட்ஸ் என்பது ஸெகனல் எனப்படும் ஒரு வகை தூக்க மருந்து. உதட்டுச் சாயம் போல இந்த மாத்திரைகள் சிவப்பு நிறம் என்பதால் ரெட்ஸ் என்று தெரு மொழியில் அழைக்கப்படுகின்றன. அதே போல லூட்ஸ் என்பவை க்வலூட் எனப்படும் அமைதிப்படுத்தும் மருந்து வகை. இரண்டு இந்தியர்களால் 60களில் உருவாக்கப்பட்ட ரசாயனப் பொருள், பிற்பாடு ஹிப்பிகளால் போதை மருந்து ஆகப் பயன்படுத்தப்பட்டு உலகெங்கும் பரவியதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.