என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர்

இங்கிலிஷ் மூலம்: ஃப்ரான்ஸெஸ் .W .ஹார்ப்பர்  தமிழாக்கம்: கோரா  

எனக்கொரு சவக்குழி  உம் விருப்பம் போலே, 

எளிய வெளியிலோ அல்லது உன்னத மலையிலோ;

உலகின் மிக எளிய  கல்லறைகளுள் ஒன்றாய் இருக்கட்டும்,

ஆனால்  மனிதர் அடிமையாகும் மண்ணில் வேண்டாம். 

 .

என் கல்லறை சுற்றிலும் நடுங்கும் அடிமையின்

நடை யோசை கேட்டால் தூங்க இயலாது;

அவன் கரு நிழல் படர்ந்தென் நிசப்த சமாதி 

அச்சமும் சோர்வும் தருமிடம் ஆகும். 

வதைக்களம் செல்லும்  பிணைத்த அடிமைக்குழு    

அதிர் நடை கேட்டால்  நான் ஓய்வது எங்ஙனம். 

நிராசையில்  அன்னையர் வீறிடும் சப்தம் 

நடுங்கும் காற்றில் சாப ஓலமாய் எழுகையில் . . .

பெண்டிரின் வெட்டுக்காயம்  பட்டுத் தெறிக்கும்   

குருதி குடிக்கும் கசையடி   கண்டால் கண்ணயராது.  

பெற்றோர்  கூட்டைப் பிரிந்த குருகுகள் போல் அவள்  

மார்பைப் பிரிந்தழும் மழலையர் காணினும்.

தப்பியோடும் மனித இரையைத் தேடிப் பிடிக்கும் 

வேட்டை நாய்களின் குரைப்புச் சப்தமும்,

வெறுக்கும் சங்கிலியில் மீண்டும் கட்டுறும் கைதி 

விடுவிப்பு  இரப்பதும் கேட்டால் திடுக்கென  விழிப்பேன்.  

பருவக் கவர்ச்சி பரிவர்த்தனையாகி விலைபோன  கன்னியர் 

தம் அன்னையர் கைஅகலும் அவலம்  கண்டால்,

என் கண்களில் சோகம்  ஜ்வலித்து மின்னும், 

சாவின் வெளுப்புக்  கன்னங்கள் வெட்கிச் சிவக்கும். 

இனிய  நண்பர்களே, செல்வச் செருக்கினர் தனியொரு   மனிதனின் 

உயிராம்   உரிமை பறிக்கா  இடத்தில் உறங்குவேன்;

சக மனிதன்  அடிமை என்போர் இல்லாத இடத்தில்

அமையும் கல்லறையில் என் ஒய்வு அமைதியாய்க் கழியும். 

உயர்ந்த உன்னத நினைவகம் வேண்டாம் எனக்கு,

வழிப்போக்கர் வியந்து   நின்று உற்றுப் பார்க்க; 

உம்மிடம்   ஆவலாய் என் ஆவி   யாசிப்பதெல்லாம் 

கொல்வோர்   மண்ணில் புதைத்து விடாதீர் என்றே. ***

ஆசிரியரின் வாழ்க்கைக்  குறிப்பு:
பிரான்செஸ் E .W ஹார்ப்பர் 1825-ல்  பால்ட்டிமோர் நகரில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் சுதந்திர கறுப்பின மக்கள் .இவர் அமெரிக்க  கவிஞர் மற்றும் சொற்பொழிவாளர் . 19-ஆம் நூற்றாண்டு ஆப்பிரிக்க -அமெரிக்கன் பெண் எழுத்தாளராகிய  இவரது நூல்கள் முதல் தலைமுறை கறுப்பின எழுத்தென கொண்டாடப்படுகிறது. பொது வெளியில் அடிமைத்தனம் நீங்கப் போராடியவராகவும், சிறந்த கல்வியாளராகவும் அறியப்பட்டவர். 1911-ல் பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகரான ஃபிலடெல்பியாவில் மறைந்த இவர் ஃபிலடெல்பியாவின் புறநகரான காலிங்டேலிலுள்ள ஈடன் இடுகாட்டில் புதைக்கப் பட்டார் . அப்போது குயவர் பூமியாக இருந்த  அந்த நிலம் பின்னர் ஆப்ரிக்க- அமெரிக்கர்களின் இடுகாடாக மாற்றப்பட்டு அவர்களின் சவஊர்வலம் கண்ணியமாக நடை பெறவும் புதைவிடங்கள் நீத்தாரின் கீர்த்தியைப் பறைசாற்றும் நினைவிடங்களாக மாறவும் உதவி வருகிறது 

மூலக் கவிதை :

Bury Me in a Free Land

Make me a grave where’er you will,

In a lowly plain, or a lofty hill; 

Make it among earth’s humblest graves,

But not in a land where men are slaves. 

I could not rest if around my grave

I heard the steps of a trembling slave;

His shadow above my silent tomb

Would make it a place of fearful gloom.

I could not rest if I heard the tread

Of a coffle gang to the shambles led,

And the mother’s shriek of wild despair

Rise like a curse on the trembling air.

I could not sleep if I saw the lash

Drinking her blood at each fearful gash,

And I saw her babes torn from her breast,

Like trembling doves from their parent nest.

I’d shudder and start if I heard the bay

Of bloodhounds seizing their human prey,

And I heard the captive plead in vain

As they bound afresh his galling chain.

If I saw young girls from their mother’s arms

Bartered and sold for their youthful charms,

My eye would flash with a mournful flame,

My death-paled cheek grow red with shame.

I would sleep, dear friends, where bloated might

Can rob no man of his dearest right;

My rest shall be calm in any grave

Where none can call his brother a slave.

I ask no monument, proud and high,

To arrest the gaze of the passers-by;

All that my yearning spirit craves,

Is bury me not in a land of slaves.

—Frances E. W. Harper

2 Replies to “என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.