நில், கவனி, செ(π)ல்

பானுமதி ந.

மளிகைக் கடைக்கு வந்த சிறுவனிடம் கடைக்காரர் என்ன வேண்டுமென்று கேட்கிறார். அவன் சுக்குமி ளகுதி ப்பிலி என்கிறான். அவர் குழம்பிப் போனார். அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படிக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது, அவனுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி வேண்டுமென்று.  இதைத் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நமக்குச் சொல்லி இருப்பார்கள், கேட்டிருப்போம்.

மகாபாரத நாடகம்; பீமன் மேடைக்கு வந்து விட்டான். அவன் நடிக்க பின்னணியில் பாட்டு வரும்; பாடுபவர் அன்று புதிதாகச் சேர்ந்தவர். பீமன் விழிக்க விழிக்க அவர் பாடினார் “பீமசேன மவராசா, மவராசா, மரத்தபு, டிங்கினானே, டிங்கினானே!” பீமனே மரம் போல் மேடையில் விழுந்து விட்டான்!அது ‘பீமசேன மகராசா மரத்தப் புடிங்கினானே’ என்பது பாட்டு. 

பேச்சிலும் உள்ளே அடங்கிய நிறுத்தல் குறிகளை அறியாது பேசும்போது ஏற்படும் விபரீதங்கள் இவை.நாம் நாள் தோறும் அனுப்பும் பல்வகையான செய்திகளில், முக வரைவுகளில், சிக்கலான உணர்ச்சிகளை, நம் விருப்பம் போல் அமைக்கப்பட்ட நிறுத்தற் குறிகளின் மூலம் சொல்கிறோம்-அது, கமா(காற்புள்ளி), கோலன்(முக்காற்புள்ளி), செமி கோலன்(அரைப்புள்ளி), பிராக்கெட் (பிறை மற்றும் பகர அடைப்புக் குறிகள், சந்தோஷத்தையும், வருத்தத்தையும் சொல்லும் பாதி அடைப்புக் குறிகள்) எனப் பல. ஏதோ இவை இப்போதுதான் நம் சிந்தையில் நாம் சீரமைத்த முத்துக்கள் என நினைக்கலாம்; ஆனால், குதிரைப் பாய்ச்சல் என்னவோ முன்னரே நடந்து விட்டது. 

பாரம்பரியமாகப்  பேச்சுக்களிலோ, எழுத்திலோ இந்தக் குறிகள் முதலில் பயன்படுத்தப்படவில்லை. ’குரங்கு! சாப்பிட வா ’ என்பதை குரங்குசாப்பிட வா’ என்றால் அனர்த்தம் தான். சமூகத்தில் மேனிலையில் இருப்பவர்கள் வாக்கியம் மற்றும் வார்த்தைகளின் உணர்வுகளை அவர்களே வகுத்துக்கொள்வதற்காக உரை எழுதுபவர்கள் எந்தவிதக் குறிகளும் இன்றி எழுதிக்கொடுப்பார்கள். எழுதுவது உரையின் முன்னோடி அல்லது பதிவு என்ற நிலையில் இருந்தது. முதல் பார்வையில் படித்தல் என்பது இல்லை; உரையாற்றும் போது வாக்கியங்கள் மற்றும் வார்த்தைகளுக்கிடையே இடைவெளி தரப்பட்டதுகூட இலக்கணம் சார்ந்து இல்லை; உரையின் சுவைக்காக மட்டுமே. 

மேற்கில், சரியான நிறுத்தற் குறிகளை அறிந்திருப்போர் குறைந்ததால் பின்னர் வந்த பிற்காலத்திலும், நடுக்காலங்களிலும் பாரம்பரியப் படைப்புகளைக் காப்பதும் அறிவதும் பெரும்பாடாயிற்று. அறிஞர்களும், படி எடுப்போரும், சில குறிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு வாக்கியத்தில், மேலும் சொல்ல வேண்டுபவற்றை கமாவால், அதை சிறு வாக்கியமென அமைத்து முதலுக்கும், தொடர்வதற்கும் இடையே செமி கோலனாய், ’இவ்வாறு சொன்னார்’ என்று குறிக்க கோலனையும், வாக்கியம் முடிந்தது எனக்குறிக்க முழுப் புள்ளியையும் உபயோகித்தார்கள். வரியின் கீழே புள்ளி வந்தால் கமா, இடையில் நின்றால் செமி கோலன், மேலே தொங்கினால் முற்றுப்புள்ளி என அறியப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் உரைக்கும், எழுத்துக்குமான கலப்பிற்காக இலக்கண முறையில் இந்த நிறுத்தற்குறிகளை பயன் படுத்தும் முறைமை ஒன்றை இஸிடோர் ஆஃப் செவீய்ய (ஸ்பெயின் நாட்டில் செவீய்ய நகரைச் சேர்ந்த இஸிடோர் என்ற அறிஞர்) கொணர்ந்தார். 

பின்னர் வந்த நூற்றாண்டுகளில், குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக நிறுத்தற்குறிகளில் மாறுபாடுகள் செய்யப்பட்டன. அதே சமயத்தில் எழுதும் படைப்புகளைச் செம்மைப்படுத்திக் காட்ட கேள்விக்குறி பிறந்தது. 15-ம் நூற்றாண்டு நிறுத்தற்குறிகளின் பொற்காலம்; வியப்புக் குறி, செமி கோலன், அடைப்புக்குறிகள் தோன்றின. கடிதம் எழுதும் புதிய ஆவலும், சொல்வதில் பொருட்பிழையற்று இருப்பதும், தொடர்பு சாதனமாக அரசிலும் கூட கடிதங்கள் செயல்பட்டதும், அந்தக் கடிதங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய தேவையும், நிறுத்தற்குறிகளுக்கு சிறப்பான வரவேற்பினைத் தந்தன. இத்தாலியைச் சேர்ந்த கொலூசியோ சலூடாட்டி (Colluccio Salutati)13-ம் நூற்றாண்டில் ‘டெநோபிலிடாட்டே  லெகும்’(De nobilitate legum) என்ற நூலை எழுதினார். அது  அவர் சொல்லச் சொல்ல அவரது செயலரால் கையால் எழுதப்பட்ட ஒன்று. அதில் அவர் தன் கைப்பட சில வாக்கியங்களுக்கிடையே குறிகள் இட்டுள்ளார். 

அல்தஸ் மானூடியொஸ்(Aldus Manutius) வெனிஸ் நகரைச் சேர்ந்த ஒரு பதிப்பாளர். 1494-ல் அவர் பியெட்ரோ பெம்போ(Pietro Bembo) வின் எட்னா மலை ஏற்றம் பற்றி வெளியிட்ட கட்டுரையில் கலப்பின(!) செமி கோலனைக் கண்டுபிடித்து  உபயோகித்தார். இது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நடந்திருக்கிறது. இந்தக் குறிகள் நம்மை நிற்கச் சொல்கின்றன; நுண்ணிய அச்சில் வாக்கியங்களூடே இடம் பெறும் அடைப்புக் குறிகள் உணர்வையும், மேம்படுத்தும் தெளிவையும் அளிக்கும் என நினைக்கப்பட்டன. மூளையும், கண்களும் இத்தகைய அடைப்புக் குறிகளை எதிர் கொள்ளும் போது எப்படிச் செயல்படுகின்றன? அடைப்புக் குறியின் தொடக்கத்தைப் பார்க்கையில் கண் சிமிட்டி அடைப்புக் குறியின் உள்ளே சென்று அதன் முடிவு வரைப் பார்த்து விட்டு பின்னர் வாக்கியத்தின் ஆரம்பத்திற்குச் சென்று, ஏற்கெனவே படித்த வார்த்தைகளை விரைவில் கடந்து வாக்கியத்தின் இறுதிக்குச் செல்லலாம்; அல்லது மீண்டும் தாவாமல் படிக்கலாம்; அல்லது அடைப்புக்குறியின் உள்ளே இருப்பதைப் படித்து விட்டு இங்கே ஒரு தடை என நினைக்கலாம். ஆம், அது மூளையும், கண்களும் உணர்ந்து கடந்த தடையே. நாம் படித்ததை அசை போட உதவும் தடை. செமி கோலனும் இத்தகைய விளையாட்டுக்களின் தோழன் தான்; என்ன ஒன்று அது நேரிழையாகக் கூட்டிச் செல்லும். தொடர்ந்து நீங்கள் போகலாம்-வாக்கியம் முடிந்தாலும், தொடர்ந்தாலும் உங்கள் எண்ணங்கள் பெருக்கெடுக்கும். ஒரு அற்புதக் குறி அது. 

மொழியும், அதன் வடிவழகும் மட்டுமே அச்சுக்கலையினால் பரவவில்லை; கூடவே நிறுத்தற்குறிகளும் உலகெங்கும் சென்றன. சரியான விதத்தில் பயன்படுத்தப்படும் நிறுத்தற் குறிகள் யூரோப்பில் நல்ல கல்வி மற்றும் வளர்ப்பின் அறிகுறியாக அறியப்பட்டன. ஏனெனில் உற்சாகமாக எழுத்தாளர்களும், பிறரும் இவற்றைப் பயன்படுத்தினர். இருந்தும், அதன் விருப்பும் வெறுப்பும் கலந்த நிலை இன்று வரை ஒரு பேசுபொருள் தான். இங்கிலிஷைப் போதிக்கும் ரிச்சர்ட்  மல்காஸ்டர் சொன்னார்:  ‘அடைப்புக் குறிகள் பேனாவின் குழந்தை; உச்சரிப்பிலோ மாறும் தனிப் பெருமை’. சொல்லாட்சியிலும், இலக்கணத்திலும் பற்றுடையவர்களுக்கு இந்த நிறுத்தற்குறிகளின் தீர்மானமற்ற தன்மை பிடித்தமில்லாமல் போயிருக்கலாம். சில நிறுத்தற்குறிகள் எடுப்பானவை, கண்டிக்கத்தக்கவை சில-எவ்வழியிலும் செயல்பாட்டில் நிற்கின்றன; ஆனால், எந்தச் சூழலிலும் அப்படியா? 

18-ம் நூற்றாண்டில் ஆங்கில நிறுத்தற்குறிகள் மிக ஆவேசமாக பல  மாறுதல்களை அணைத்துக்கொண்டு எண்ணங்களை இடை நிறுத்துவதில், மாற்றம் செய்வதில், தயக்கங்கொள்ளச் செய்வதில் பெரும் வெற்றி கண்டன. 

பேச்சு ஒரு தாளில் எப்படி இருக்க வேண்டும்? 20-ம் நூற்றாண்டில் பேச்சுக்கும் குறிகளுக்குமான உறவு புதுப்பிக்கப்பட்டது. நிறுத்தற்குறிகள் உரைகளில்  அவற்றின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. நவீன எழுத்தாளர்களுக்கு மனதையும், அதன் விசித்திர உள்ளுணர்வுகளையும் எழுத உதவியது. வானவில்லின் ஒரு கோடியில் எர்னெஸ்ட் ஹெமிங்வே – புறநிலைப்படுத்தியே செதுக்கி வடிக்கும் அவர் எழுத்துக்களில் எத்தனை எத்தனை முற்றுப்புள்ளிகள்!அதன் மறுமுனையில் வர்ஜீனியா உல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றார், ‘எண்ண அலைபாயல்களைச் சொல்ல குறிகள் எதற்கு?’ என்றவர்கள். யுலிஸீஸ் நாவலில், மாலி ப்ளுமின் மூச்சடைக்கும் அனுபவமான சுய இன்ப உச்சத்தைச் சொல்லும் ‘ஆம். ஆம். ஆமாமாம்’ என்பதை ஜாய்ஸ் நகலெடுத்துச் சொல்வது ஒன்றே போதுமே!

சொல் சுட்டும் உணர்வினைக் குறியின் மூலமாகக் கொண்டுவர மார்டின் ஸ்பெக்டர் முயன்றார். கேள்விக்குறியும், ஆச்சர்யக்குறியும் ஒன்றின் மேல் ஒன்றேறி கலந்து பிறந்தது ‘இன்டெராபேங்க்’ எனும் குறி. இப்படி இருக்கும்- ‽  

இது ஏனோ செல்வாக்குப் பெறவில்லை? ஆனால், இது தெரிவிப்பது ஒன்று உண்டு-வார்த்தைகளின் தொனி புலப்படாமல் போகும் அவலம் தான் அது. குழப்படியான ஒரு செய்தியின் பின்னே பனிச்சரிவுகளென வரும் ‘சிரிப்பு முகங்களாகட்டும்’, ’முரண்’ என்ற எச்சரிக்கைக் கொடி ஏந்தி வரும் எளிதில் புலப்படா சிந்தனைக்கு உகந்த செய்திகளாகட்டும் தன் இலக்கை முழுமையாகஅடைவதில்லையே? ஒன்றைச் சொல்லி மற்றொன்றை பூடகமாக உணர்த்தும் ஜேன் ஆஸ்டினை மறக்கக் கூடுமா? கிண்டலைக் காட்டக்கூட குறிகள்!!

நம் அறியாமையும், சோம்பலும் 20-ம் நூற்றாண்டில்  ‘அபாஸ்ட்ரொஃபி குறிக் குழுவின்’ மூடுவிழாவை நடத்தியிருக்கின்றன. அவைகளை நாம் நிறுத்தற்குறிகளின் அழிவு காலம் எனப் பார்க்க வேண்டாம். தொடர் பரிமாற்றங்களில் இயங்கும் ஊடகங்களில் அவை பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றன. முற்றுப்புள்ளியென்பதை இனி இந்தப் பேச்சுக்கள் தொடரத் தேவையில்லை என்று அறிவிப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. ஒரு புதுக் குறி தேவையோ? 

பழந்தமிழ் பனை ஓலைச் சுவடிகளிலும், கல்வெட்டுக்களிலும் வாக்கிய முடிவில் சுழியம்(0), அல்லது ஒன்று அல்லது இரண்டு சாய்கோடுகள்(/அ//) பயன் படுத்தப்பட்டுள்ளன. 

[ஷெஃபீல்ட் பல்கலையில் ‘மறுமலர்ச்சி இலக்கியத்தில் அடைப்புக் குறிகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் ஃப்ளாரென்ஸ் ஹஸ்ரத் எழுதிய கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது. ]

https://www. historytoday. com/history-matters/pause-and-effect

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.