எதிர்வீட்டு விடுமுறை
அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்
தன்பால் குவளையில் நீர்முகர்ந்து
ஊற்றிக் கொண்டிருந்தாள் பப்லு….
வருடமெல்லாம் மேமாதங்களாகிப் போன
காலத்தின் களியாட்டத்தில்
மேமாதததின் களி எப்போதோ
தொலைந்து போனதில்,
போவதற்கு இடமிருந்தாலும்
மனிதர்களில்லா அக்னிநட்சத்திர நாட்களில்
இவர்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
*
மாவடு
நாலுநாள் முன்பு
முயற்சி செய்த மாவடு
பூஞ்சையைாய்ப் போனதையே
பார்த்தபடியிருக்கையில்…..
கண்கள்கூசி நிமிர்ந்தேன்,
குன்றுகளின் பின்னே மாம்பழமென
எழுந்திருந்தான் பகலவன்,
ஓசைகேட்டுத் திரும்புகையில்
இணைக்குயில்கள் கீற்றில்
அமர்ந்து கிழக்குப் பார்த்திருந்தன,
துணிக்கொடிக் கம்பியில் காகம்
உன்மத்தமென்றபாவனையில்
தலைகுனித்திருந்தது,
தெருமுனைவீட்டில்
அம்மா ஊருக்குப் போனதால்
வாசல் தெளித்த சிண்டுவிடம்
குவளை வாங்கிக் கொண்டிருந்த தந்தை,
ஊசிப்போனதை என்ன செய்ய?
– கமலதேவி
~oOo~
எழுத நினைக்கும்போதெல்லாம்…
எழுத நினைக்கும்போதெல்லாம்
மேஜை குப்பையாய் இருக்கிறதென்று
நகர்ந்துவிடுவேன்.
ஒவ்வொன்றாக எடுத்து வைத்து,
வீட்டின் இன்னொரு மூலைக்கு
செல்லும்போது,
எல்லாமும் எல்லா பக்கமும்
நகர்ந்துகொண்டிருக்கும்..
மீண்டும் ஒரு முறை…
இன்னும் ஒரு முறை…
ஒரு முறை,
தயாராக இருந்த மேஜைமீது
நகர்ந்துகொண்டிருந்த
காகிதங்களை
எடுத்து வைத்துவிட்டு
நகரும்போதுதான் புரிந்தது,
வீட்டில் இருக்கும்போது
நானும் நகர்ந்துகொண்டேதான்
இருக்கிறேன்!
***

படிக்கும் நேரம்
அலமாரியில்
சாய்ந்து சோர்ந்திருந்தன
புத்தகங்கள்..
அவ்வப்போது கண்ணில்படும்.
இரண்டை, புழங்கும் அறை
நடுவிலும்
இரண்டை, படுக்கை
தலைமாட்டிலும்
இரண்டை, கணினி பைக்குள்ளும்
போட்டு வைத்தேன்.
இருக்கும் இடத்திலெல்லாம்
இரண்டு புத்தகம் என்று..
காற்றடைந்த அலமாரி
அமைதியாக
கொட்டாவி விட்டது.
~oOo~
பார்வைகள் தவிர்த்து
பார்வைகள் தவிர்த்து
அனைவரும் என்னையே பார்ப்பதாய்த் தோன்றிய
எண்ணம் தவிர்த்து
பேருந்து இருக்கையில் அமர்கிறேன்
அலைபேசியின் செவிப்பொறியை
அவிழ்க்கத் தொடங்கி
உள்ளே வெளியே
உள்ளே வெளியே என
சிறிய சிக்கலைப் பிரிக்கப் பிரிக்க
பெரிதாய்ப் பின்னிக்கொண்ட சரடு
ஒரு சிறு பந்தைப் போல் ஆகிறது
அப்படியே கேட்கலாம்
எனக் காதில் செருகும்போது கவனிக்கிறேன்
பேருந்தில் இருக்கும் வேறெவரின் செவிப்பொறியும்
சிக்கலாயில்லை
அது தரும் இசையில் லயித்திருக்கும்
அவனும் அவளும் அதோ அவரும்
ஒரே அலைவரிசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா
அவரவருக்குப் பிடித்த இசை என்னவாக இருக்கும்
மீண்டும் பின்னியிருக்கும் சரடைப் பிரிக்க
முயன்றிருக்கும் போதே
நிறுத்தம் வர இறங்குகிறேன்.
நாளை பார்த்துக்கொள்ளலாம்
பேருந்தில் இடம்பிடிப்பதையும்
சரடை நேராக்குவதையும்
பேருந்துப் பயணத்தில் பாட்டு கேட்பதையும்.
***
பி.எம்.எஸ். நாட்கள்
உலகம் சரியில்லை.
நாடு சரியில்லை.
வீடு குப்பையாக இருக்கிறது.
பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.
துணி துவைக்கத் தெம்பு இல்லை.
நான் மட்டுமே சமைக்க வேண்டுமா.
ஒருவருக்கும் பொறுப்பில்லை.
மனசாட்சியில்லை.
மனிதாபிமானமில்லை.
நள்ளிரவில் விழிக்கிறேன்.
தாரை தாரையாய் அழ வேண்டும்.
தலையணை பிடிக்கவில்லை.
எனக்கென்று யாருமில்லை.
எப்போது சாவேன்.
யார் அழுவார்கள்.
ஆவுடை அழுவாளா.
அவள் புடவை அழகாயிருந்ததே.
அவளும் அழகாக இருந்தாள்.
என்னைவிட.
நாளை எந்தப் புடவை அணியலாம்.
அவனுக்கு அந்நிறம் பிடிக்குமா.
பூ வாங்கி வைத்துக் கொள்ளலாமா.
நான் ஏன் சாக வேண்டும்.
இது யாரின் வாசம்.
யாரின் ஸ்பரிசம்.
என்னை அணைப்பது யார்.
அமிழ்த்துவது யார்.
மூச்சு முட்டுகிறது.
கண்கள் கிறங்குவதைப் போல்..
– சுபத்ரா ரவிச்சந்திரன்