என் பிறப்பின் ஆண்டுகள்

மொழிபெயர்ப்பு: விஸ்வநாத் சங்கர்

செவிலித்தாய் என் சகோதரனை ஒரு நீல நிற நாரியல் கம்பளியில் போர்த்தி அவன் தாயிடம் ஒப்படைக்கும் பொழுதில் கிசுகிசுத்தாள் – “கடவுளே! இன்னொன்றும் இருக்கிறதே!” என்று. நான் வந்து விழுந்தேன்… பாதி இறந்தபடி! பின் நான் மிகுந்த ஆவலுடன் சாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த நான் ஒரு மந்தமான சாம்பல் வண்ணத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் தருணத்தில், செவிலித்தாய் என்னை அள்ளி விளக்குகளால் சூடேற்றப்பட்ட ஒரு மெத்தையில் வைக்க முயன்று கொண்டிருந்தாள். அப்போது மருத்துவர் என் தலையையும், கால்ககளையும் சுட்டியபடியே அவளைத் தடுத்தார். எனக்கும், என் தாய்க்கும் மத்தியில் வந்து நின்றபடி என் தாயிடம் பேசத் தொடங்கினார்.

“திருமதி. லாஷர்! நான் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல வேண்டும். உங்களுடைய மற்றொரு குழந்தைக்கு ஒரு பிறவி ஊனம் இருக்கிறது. அது இறக்கவும் கூடும். நாங்கள் சில அசாதாரணமான வழிகளைக் கொண்டு அதை மீட்க முயற்சிக்கலாமா?”

முதலில் ஒன்றுமே விளங்காமல் வைத்தியரைப் பார்த்த அவள், பின் அழுதுகொண்டே “இல்லை!” என்றாள்.

மருத்துவரோ முதுப்புறமாகத் திரும்பி நிற்க, செவிலித்தாயோ தன் விரலால் என் வாயை சுத்தம் செய்து, என்னைத் தலைகீழாகக் குலுக்கினாள். பிறகு, இளஞ்சிவப்பு நிற கம்பிளி ஒன்றில் என்னை இறுகச் சுற்றினாள். நான் தீயாய் பெருமூச்சு விட்டேன்.

“சிஸ்டர்!” மருத்துவர் அழைத்தார்.

“ப்த்…ரொம்ப தாமதமாகிவிட்டது” என்று பதிலளித்தாள்.

முகத்தில் ஒரு புட்டியுடன் நான் குழவிகள் காப்பகத்திலேயே விடப்பட்டேன். மாவட்டமோ என்னை என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தது. மாநில அரசின் நிறுவனத்தில் சேர்ப்பதற்கோ நான் மிகவும் சிறியவள். அதே நேரத்தில், திரு. ஜார்ஜ் லாஷரும், அவர் மனைவியும் என்னை அவர்கள் இல்லத்தில் சேர்க்க மறுத்துவிட்டனர். அவர்களுடைய வீடு பக்கத்து ஊரின் எல்லையில் இருந்தது. அங்கேதான், திரு. லாஷர் விவசாயக் கருவிகளை விற்பனை செய்து வந்தார்.

029-US_NativeAmericanWomenVAW_PineRidgeRezSignஅன்று இரவு மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளர், பெட்டி விஷ்காப் என்ற (பழங்குடி அமெரிக்க) ரிசர்வேஷன் பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தன் ஓய்வு நேரத்தில் என்னை ஏந்திக் கொள்ளத் தலைமை மகப்பேறு செவிலியிடம் அனுமதி கேட்டாள். கண்காணிப்பு ஜன்னலில் சாய்ந்து கொண்டு, என்னைத் தாலாட்டியபடியே பெட்டி எனக்கு பாலும் ஊட்டினாள் . அவள் வீட்டில் தன் கடைசி குழந்தைக்கு இன்னமும் பாலூட்டிக் கொண்டிருந்தாள். பாலூட்டிக்கொண்டே அவள் தன் வலிமையான கரங்களால் என் தலையைத் திருப்பி வடித்தாள். அவள் இரவில் எனக்கு பாலூட்டுவதோ, இல்லை என்னைப் பராமரிப்பதோ, இல்லை என்னைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவு செய்ததோ, மருத்துவமனையில் யாருக்கும் தெரியாது. இதெல்லாம் நடந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பெட்டி என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்ட போது அங்கே ஒரு நிம்மதி பிறந்தது. ஆரம்பத்தில் அத்தனை ஆவணங்களும் வேண்டியிருக்கவில்லை. ஆக, நான் காப்பாற்றப்பட்டு விஷ்காபுகளுடன் வளர்ந்தேன். நான் ரிசர்வேஷனில் வாழ்ந்தேன். என் பிற சிப்பெவா சகோதர சகோதரிகளைப் போல நானும் முதலில் ஒரு கத்தோலிக்கக் கிருஸ்தவப் பள்ளியிலும், பின்னர் ஒரு அரசுப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்பட்டேன்.

சுமாராக இரண்டு வயது இருக்கும் போது, முதல் முதலாக நான் எடுத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டேன். நான் இப்போது நம்பிக்கையின்மை என்று சொல்ல நினைக்கிற அந்த தொற்று நீக்கியின் மணம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. அந்த நம்பிக்கையிழந்த தொற்று நீக்கியின் வாசத்துக்கு ஊடே ஒரு இருத்தல் நுழைந்தது. ஏதோ ஒன்று, இல்லை யாரோ ஒருவர் என் கையைப் பற்றிக்கொண்டு என்னுடன் சேர்ந்து வருந்தினார்கள். அந்த இருத்தல் என் வாழ்வின் மற்ற தருணங்களிலும் மீண்டும் நுழைந்தது. இந்தக் கதையே ஒருவகையில் அந்த இருத்தலின் திரும்புதலாகும்.

இரண்டாம் முறையாக, எனக்கு நான்கு வயது இருக்கும் போது ஒரு முந்திரிக்கொட்டை நற்பணி அதிகாரி எனக்குத் தக்கதொரு ஜாகையை கண்டுகொள்ள முடிவு செய்தார். புழுதி பறக்கும் எங்கள் முற்றத்தில் பெட்டி அவருடன் விவாதித்துக் கொண்டிருக்கையில், எங்கள் நாயின் முதுகுப்புற மயிர்கள் எல்லாம் நட்டுக்கொண்டு நின்றன. நான் பெட்டியின் பச்சை வண்ண பருத்திப் பாவாடையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னால் நின்றிருந்தேன். அதன் மெல்லிய நெசவை என் விரலிடுக்கில் அழுத்திக் கொண்டு, அந்த கதகதக்கும் ஆடையின் வாசத்தில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். பிறகு, முடிவில்லாத் திசையை நோக்கி ஓசையில்லாமல் விரைந்து கொண்டிருக்கும் காரின் பின் இருக்கையில் இருந்தேன். தூங்கினேன். இன்னொரு வெள்ளை அறையில் தனியாக விழித்தேன். என் மெத்தை குறுகலாக இருந்தது. விரிப்புகள் அழுத்தமாக மடித்து வைக்கப்பட்டிருந்ததால் எழுவதற்குப் போராட வேண்டியிருந்தது. நான் கட்டிலின் ஓரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன்…. காத்திருந்தேன்!

sign

நாம் குழந்தையாக இருக்கும் போது, எதற்க்காக அழுகிறோம் இல்லை அலறுகிறோம் என்பது எப்போதும் தெரிவதில்லை. நம் உணர்வுகளும் நம்மிடமிருந்து வரும் ஓசைகளும் ஒன்றாகவே இருக்கின்றன. நான் வாயைத் திறந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. பின் பெட்டியிடம் வந்து சேரும் வரை நான் அதை மூடவேயில்லை.

என் பதினோரு வயது வரை, தினமும் காலையில், பெட்டியும் அவள் கணவர், ஆல்பர்ட்டும் என் கால்களை நீவிவிட்டு நேராக்க முயன்றனர். மற்ற குழந்தைகளுக்கு முன்பே என்னை எழுப்பி, சமையல் அறைக்கு அழைத்து வருவார்கள். மர அடுப்புக்கு அருகே இருக்கும் மெல்லிய, நீல நிற பாலைப் பருகுவேன். பின், சமையல் அறை நாற்காலியில் பெட்டி அமர்ந்து கொண்டு என்னைத் தன் மடியில் கிடத்திக் கொள்வாள். ஆல்பர்ட் எங்களுக்கு எதிர்ப்புறம் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்துகொள்வார்.

“டஃப்பி! காலை நீட்டு” என்பார்.

நான் ஆல்பர்ட்டின் கைகளின் என் பாதங்களை வைப்பேன். அவர் ஒருபக்கமாக இழுக்க, பெட்டி மற்றொரு திசையில் இழுப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக, நான் வளர வளர, என் கால்கள் நேராயின. ஆனாலும் ஒன்றை விட மற்றொன்று சற்றே குட்டையாகத்தான் இருந்தது. அவர்களுடைய நான்கு பிள்ளைகளில் நான்தான் கடைக்குட்டி. மருத்துவ மனையில் பெட்டி என்னை கவனித்துக் கொண்ட காலத்தில் ஷெரிலுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய மூத்த மகன் செட்ரிக் தான் எனக்கு டஃப்பி என்ற பெயரைத் தந்தான். நான் பள்ளிக்குச் சென்ற பின் எப்படியும் எனக்கு ஒரு பட்டப்பெயர் வந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். அது என் நொண்டியடிக்கும் நடையையோ, இல்லை என் மண்டையையோ கேலி செய்யாதபடி இருக்க வேண்டும் என்று எண்ணினான். நான் கருவில் இருந்த போது என் இரட்டையால் நசுக்கப்பட்டு என் தலை ஒரு பக்கம் சற்றே தட்டையாகி விட்டது. நான் பிறந்த போது இந்த அரூபத்தைக் கண்ட மருத்துவர் எனக்கு ஒரு பிறவிக்குறை இருப்பதாக அறிவித்தார். ஆனால், பெட்டி அழுத்தியதாலும், பிசைந்ததாலும் அது ஓரளவு உருப் பெற்று, நான் கண்ணாடியைப் பார்க்கும் வயதை அடைந்தபோது அழகாகவே இருப்பதாக தோன்றியது.

பெட்டியும் சரி, ஆல்பர்ட்டும் சரி, ஒருமுறை கூட நான் குறைப்பட்டவள் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை. ஷெரில் தான் அந்த செய்தியைப் போட்டு உடைத்தாள்.

“டஃப்பி! நீ அவ்வளவு அசிங்கமாக இருப்பதால் அழகாக இருக்கிறாய்” என்றாள்.

அடுத்த முறை கண்ணாடியைப் பார்க்கும் போது அவள் சொன்னது சரி என்று தோன்றியது!

நாங்கள் வசித்த வீட்டில் எப்போதும் ஒரு வாசனை ஊடுருவிக் கொண்டிருக்கும். பழைய மரம், வெங்காயம், வறுத்த கோழி, பிள்ளைகளின் வியர்வை நாற்றம் என பலத்தின் கலவை அது. பெட்டி எப்போதும் எங்களை சுத்தமாக ஆக்க முயலுவாள். ஆல்பர்ட்டோ எங்களை அழுக்காக்கிக் கொண்டிருப்பார். அவர் எங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று ஓடுகிற முயலை எப்படிக் கண்டுகொண்டு பொறி வைத்துப் பிடிக்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லித் தருவார். நாங்கள் அணில்களை அவற்றின் குகைகளிலிருந்து கயிற்றில் வளையம் கட்டி இழுத்தோம். வாளி வாளியாக பெர்ரி பழங்களைப் பொறுக்கினோம். ஒவ்வொரு ஆண்டும் பள்ளிச் சீருடைச் செலவுக்காக குட்டிக் குதிரைகளில் சவாரி அடித்தோம், அருகே உள்ள ஏரியில் துடுப்புப் போட்டு மீன் பிடித்தோம், உருளைக்கிழங்குகளைத் தோண்டி எடுத்தோம். பெட்டியின் மருத்துவமனை வேலை ரொம்ப நாளைக்குத் தாங்கவில்லை. ஆல்பர்ட் விறகுக்கட்டை, சோளம், பூசணிப்பழங்கள் எல்லாம் விற்றார். நாங்கள் ஒருபொழுதும் பசியோடு இருந்ததில்லை. சிறுது காலத்துக்கு முன் பீட்டர் ராசார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவரும் என்னைப் போலவே கைவிடப்பட்டு ஒரு நிறுவனத்தில் வளர்ந்தார். ஒரு முறை அவர் கொண்டாடப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார் அது அவர் வாழ்வின் வினோதமான, மற்றும் சந்தோஷமான தருணங்களில் ஒன்று என்று கருதுவதாகவும் சொல்லி இருந்தார். எனக்கோ கொண்டாடப்படுவதெல்லாம் ஒன்றும் சிறப்பானதாகத் தோன்றவில்லை. இது சொல்வதெல்லாம் என்னவென்றால், நான் அத்தனை முறை என் வாழ்வில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்; அந்த உணர்வு என் வாழ்வின் ஒரு அங்கமாக ஆகி, என் உலக நினைவுகளில் ஒன்றிப் போய்விட்டது.

நான் நேசிக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னை நற்பணி ஒருங்கியத்திலிருந்து கோரிப் பெற, பெட்டியும் ஆல்பர்ட்டும் பெரும்பாடு பட்டதே அதற்கு சாட்சி. போதாக்குறைக்கு, நானும் என் முடிவில்லாத அலறல்களால் அவர்களின் முயற்சிகளுக்கு உதவினேன். என் தத்தெடுப்பு பூரணமாவதற்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமானது. அவர்களிடம் அத்தனை பணம் இல்லை. நான் துரத்தப்பட்டு, கைப்பற்றப்படும் வகையான பயங்கரக் கனவுகளால் அச்சுறுத்தப்பட்டேன். எத்தனையோ இரவுகள் நான் அவர்களின் மெத்தைக்கு இடையே இருக்கும் வெதுவெதுப்பான வெடிப்புக்குள் தொற்றிக்கொண்டு, அவர்கள் மீண்டும் உறங்கச் செல்லும் வரை மூச்சைப் பிடித்து கொண்டு அசையாமல் படுத்திருப்பேன். நான் பாதுகாப்பாக உணரும் போது கண்களைத் திறந்து இருட்டில் பார்ப்பேன். ஆனால் இருள் முற்றிலும் கருப்பாக இருந்ததில்லை. நகரும் பச்சைப் பலகைகளாலும், குறுக்கும் நெடுக்கும் ஓடும் உடைந்த சிறு சிறு ஒளிக் கற்றைகளாலும் உயிரோடு இருந்தது. பிறகு நான் மெல்ல ஒரு பாதுகாப்பான, நிம்மதியான தூக்கத்திற்குள் நுழைவதை உணர்வேன். அதே நேரத்தில், அவர்களின் மெல்லிய, சீரான சுவாசம் என்னை ரொம்ப தூரம் போகவிடாமல் ஒரு லேசான கயிறு போலக் கட்டிவைத்தது.

இதெல்லாம் சொல்வதால் அவர்கள் குறையற்றவர்கள் என்று ஆகாது. ஆல்பர்ட் அடிக்கடி குடித்துவிட்டு தரையில் விழுந்து கிடப்பார். பெட்டியின் கோபமோ வெடித்துச் சிதறும். அவள் அடிக்கமாட்டாள். ஆனால் கத்துவாள், பிதற்றுவாள். பயங்கரமாக வைவாள். ஒருமுறை, ஷெரில் வீட்டுக்குள் தன்னைத் தானே ராட்டினமாக சுழன்று கொண்டிருந்தாள். வரவேற்ப்பறையின் ஒரு மூலையில், ஒரு அலமாரி அடக்கமாக வைக்கப்பட்டிருக்கும் அதன் மேல் கண்ணாடிக் குடுவை ஒன்று இருக்கும். பெட்டிக்கு அது ஒரு பொக்கிஷம். நாங்கள் காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டுவரும் போதெல்லாம் அதில்தான் அவள் வைப்பாள். அதை அவள் சவுக்காரம் போட்டு கழுவி, பழைய தலையணை உறை ஒன்றால் துடைத்து வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஷெரிலின் கரம் அந்த குடுவையை அலமாரியிலிருந்து தட்டிவிட அது தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.

பெட்டி அடுப்பில் காரியமாக இருந்தாள். அவள் ஓடி வந்து, கைகளை ஓங்கிக் கொண்டு முறைத்தாள்.

“ஷெரில்! சனியனே! என்னிடம் இருந்த ஒரே ஒரு அழகான பொருள் அது மட்டும் தான்,” என்றாள்.

“டஃப்பிதான் உடைத்தாள்,” என்று ஷெரில் சொல்லிவிட்டு வெளியே விரைந்து ஓடினாள்.

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.

தங்கள் பெற்றோரின் கவனத்தையும், தயவையும் பெறப் பிள்ளைகள் கொடூரமாக மாறுவது உண்டு. ஷெரில் செய்ததையோ, சொன்னதையோ நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. பின்பு நாங்கள் நெருங்கி வந்தோம். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் திருமண செய்து கொள்ளாததால், ஆறு மாதங்களுக்கு முன், என்னை பெற்ற தாய் என்னைத் தொடர்பு கொண்ட போது அதைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் வேண்டியிருந்தது.

பெட்டியும் ஆல்பர்ட்டும் இறக்கும் வரையில், நான் அந்த சின்ன வீட்டோடு ஒட்டிக்கொண்டிருந்த அறையில் வாழ்ந்தேன். அங்கேதான் நாங்கள் எல்லோரும் வளர்ந்தோம். நீண்ட காலம் திருமணமான அனேகத் தம்பதிகளைப் போல அவர்களும் ஒருவர் பின் ஒருவராக, சில மாதங்கள் இடைவெளியில் மறைந்தனர். அதற்குள், மற்றப் பிள்ளைகள் எல்லாம் ரிசர்வேஷனை விட்டு வெளியே சென்றுவிட்டனர், அல்லது அருகே உள்ள ஊரில் வீடுகள் வாங்கிக் கொண்டு குடிபுகுந்தனர். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். இப்போது பெட்டியும் ஆல்பர்ட்டும் போய்விட்டதால், அந்த முழு வீடும் எனக்காக இருந்த போதும் நான் பெரும்பாலான நேரம் என் அறையிலேயே இருந்தேன். ஒரே ஒரு வித்தியாசம். நற்பணி அதிகாரியைப் பார்த்துக் குரைத்த நாயின் சந்ததியான மற்றொரு நாயை என்னுடன் வசிக்க நான் அனுமதித்து இருந்தேன். பெட்டி நாய்களை வாசலோடு நிறுத்தி விடுவாள். நானோ இதை கொஞ்சிக் குலாவினேன். நான் ஒரு புகைப்போக்கியைப் பொருந்தி இருந்தேன். அதற்கு ஒரு கண்ணாடி முகப்பும், முன்னே சில விசிறிகளும் வைத்தேன். அவை வெப்பத்தை எதிரே உள்ள வசதியான வட்டத்துக்குள் வீசிக் கொண்டிருந்தன. மாலை வேளைகளில் அங்கே அமர்ந்துகொண்டு, நாய் என் காலடியில் இருக்க, சங்கீதம் கேட்டபடியே, படித்துக் கொண்டோ, இல்லை பின்னிக்கொண்டோ இருப்பேன்.

பிறகு ஒரு நாள் தொலைபேசி அழைத்தது.

நான் சிக்கனமான ஒரு ஹலோ சொன்னேன். மறுமுனையில் அமைதி. லிண்டா விஷ்காபா பேசுவது என்று ஒரு பெண்மணி கேட்டாள்.

“ஆம்,” என்றேன். பிறகு ஒரு பயம் கலந்த மௌனத்தை நான் அனுபவித்தேன்.

“நான் நான்சி லாஷர்,.” குரல் இறுக்கமாகவும், பதற்றமாகவும் இருந்தது. “நான் உன் அம்மா.”

நான் மூச்சை இழுத்துவிட்டேன். பதில் எதுவும் சொல்லாமல் தொலைபேசியை கீழே வைத்து விட்டேன். பின்னர் அந்தத் தருணம் வேடிக்கையாகப் பட்டது. அது என் பிறப்பின் மறு ஒலிபரப்பு போல இருந்தது. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன். அனால், இந்த முறை இயல்பாகவே என் தாயை நான் புறக்கணித்து விட்டேன்… எப்படி அவள் என்னை விட்டுவிட்டுச் சென்றாளோ.. அதே போல!

நான் ரிசர்வேஷன் அஞ்சல் நிலையத்தில் பணி செய்கிறேன். நான் ஒரு அரசாங்க ஊழியை. எந்த நேரத்திலும் நான் என்னைப் பெற்றவர்களின் விலாசத்தைக் கண்டுபிடித்திருக்கலாம். அவர்களை அழைத்திருக்கலாம், அல்ல வேறு மாதிரியான ஆளாக இருந்தால், குடித்து விட்டு அவர்கள் வாசலுக்குச் சென்று அவர்களை ஏசியிருக்கலாம். நான் கண்டுகொள்ளாதது மட்டுமில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அதெல்லாம் எதற்கு? அவர்களைப் பற்றி நன் அறிந்து கொண்ட அத்தனையும் வலியையே தந்தன. நான் எப்போதும் வலியைத் தவிர்க்கவே பார்க்கிறேன். அதனால்தானோ என்னவோ நான் கல்யாணம், குழந்தை என்று மாட்டிக்கொள்ளவில்லை.

அன்று இரவு, நான் தொலைபேசியைத் துண்டித்தப் பின், தேநீர் பருகிக் கொண்டே குறுக்கெழுத்துப் புதிரில் மூழ்கிப்போனேன். ஒரு புதிர் என்னை மடக்கிப் போட்டது. “இரட்டைப் பயணி” என்ற பன்னிரண்டு இடங்களுக்கான அந்த குறிப்பு ரொம்ப நேரம் பிடித்தது. பின்னர் அகராதியின் துணை கொண்டு “doppelganger” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன்.

ஒரு பெரிய குடும்பத்தின் இடையில் வளர்ந்ததால், நான் தனியாக இருந்த சில அரிதான பொழுதுகளில் வருகை தந்த என் இருத்தல் ஏதோ விநோதமாக எனக்குத் தோன்றியதே இல்லை. பெட்டியிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அந்த வெள்ளை அறையில் அடைக்கப்பட்ட போதுதான் நான் முதல் முறையாக அதை உணர்ந்தேன். அதன் பின், யாரோ என்னோடு சேர்ந்து நடப்பதைப் போலவோ, இல்லை என் பின்னால் அமர்ந்திருப்பதைப் போலவோ, என் ஓரப்பார்வைக்கு அப்பால் இருப்பதைப் போலவோ ஒரு உணர்வு அபூர்வமாக வருவதுண்டு. நான் ஒரு நாயை வீட்டிற்குள் அனுமதித்ததற்கு ஒரு காரணம், அது இத்தனை ஆண்டுகளில், என்னால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு வகையில் ஆர்வமூட்டுகிற, ஒரு பலகீனமான தேவையாக மாறிப்போன அந்த இருத்தலைத் தூரத் தள்ளி வைத்ததால் தான். நான் ஒரு பொழுதும் அந்த இருத்தலை என்னிடமிருந்து ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் வளர்ந்த என் இரட்டையுடன் தொடர்பு செய்து பார்த்ததில்லை. அனால் அன்று இரவு எங்கிருந்தோ வந்த தொலைபேசி அழைப்பும், அந்த பன்னிரண்டு எழுத்து குறுக்கெழுத்துச் சொல்லும் சேர்ந்து என் எண்ண அலைகளைத் தூண்டிவிட்டன.

என் பிறப்புத் தொடர்பான அத்தனையையும் தனக்குத் தெரிந்த வரையில் பெட்டி என்னிடம் சொல்லி விட்டாள். அவள் குழந்தைகளின் நன்மைக்காக எப்போதும் எதையும் மறைப்பதில்லை. உண்மையைத் திட்டவட்டமாக சொல்லி விடுவாள். ஆனால் என் சகோதரனைப் பற்றி அவளிடம் கேட்கத் தொன்றாததால், அவளும் அவன் குறித்தும் ஒன்றும் சொன்னதில்லை. என் பிற சகோதரர்களும் கேட்டதில்லை. அவர்களுக்கு அதிலெல்லாம் அக்கறை துளியும் இல்லை. அவர்கள் என்னை லாஷர்களுடன் சேர்த்துப் பார்த்தார்களா என்பதே சந்தேகம் தான்! நான் என் நினைவுகளை சல்லடைப் போட்டுத் துழாவிப் பார்த்தும் ஒன்றும் அகப்படவில்லை… என் இரட்டை எனக்கு முன்னே பிறந்த ஆண் மகன் என்பதைத் தவிர. அவனுக்கு லாஷர்கள் என்ன பெயர் சூட்டி இருப்பார்கள் என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை. தவிரவும், நாங்கள் உருவம் ஒத்திராத இரட்டையர்கள். ஆக, எல்லா அண்ணன் தங்கைகளையும் போலத்தான். ஒருவழியாக அன்று இரவு விடுபட்டு, அவனை வெறுக்கத் தொடங்கினேன். நான் என்னைப் பெற்ற தாயின் குரலை முதல் முறையாக அன்றுதான் கேட்டேன். அவனோ தன வாழ்க்கை முழுவதும் கேட்டிருக்கிறானே!

அவள் தன்னை வெறுமனே என் அம்மா என்றே கூறிக்கொண்டாள். என்னைப் பெற்ற தாய் இல்லை. மிக கவனமாக ஒதுங்கிப் போகும் விதமாக, என் அம்மா என்றே கூறிக்கொண்டாள். அது முழுக்க முழுக்கத் திமிராக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவள் குரலில் ஒரு கவலை தொனித்தது. என் மூளை அவள் பேசிய எட்டு வார்த்தைகளையும் பதிவு செய்து விட்டிருந்தது. அன்று இரவு முழுவதும், மறுநாள் காலையும் கூட அது ஒரு சங்கிலி போல ஒலிக்கச் செய்தது. இரண்டாம் நாள் அந்த ஓசை கொஞ்சம் மந்தமாகி மூன்றாம் நாள் மொத்தமாக நிற்கவும், நான் நிம்மதி ஆனேன்.

நான்காம் நாள் மீண்டும் அழைத்தாள்.

மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். “தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்” என்றாள். அவள் என்னை எப்போதும் சந்திக்க விரும்பியதாகவும், அதே சமயத்தில் என் இருப்பிடத்தை அறிந்து கொள்ளப் பயந்ததாகவும் சொன்னாள். என் தந்தை ஜார்ஜ் இறந்ததாகவும், அவள் தனியாக இருப்பதாகவும், என் சகோதரன் பிஸ்மார்க்கில் ஒரு அஞ்சல் ஊழியனாக இருப்பதாகவும் சொன்னாள். அப்போது தான் நான் பொறுமை இழந்தேன். அவன் பெயரை கேட்டேன்.

“லிண்டன்” என்றாள். “அது ஒரு பழைய குடும்பப் பெயர்.”

“என் பெயரும் பழைய குடும்பப் பெயரா?” என்று கேட்டேன்.

“இல்லை. ஆனால் அது உன் சகோதரனின் பெயரோடு ஒத்திப்போனது” என்றாள்.

ஜார்ஜ் என் பெயரை பிறப்புச் சான்றிதழில் எழுதியதாகவும், ஆனால் அவர்கள் என்னை ஒரு முறை கூடப் பார்க்கவே இல்லை என்றும் கூறினாள்.ஜார்ஜ் மாரடைப்பால் இறந்ததாகவும், லிண்டனுக்கு அருகே இருப்பதற்காக அவள் பிஸ்மார்க்கு இடம் மாற இருப்பதாகவும், தன வீட்டை விற்க முடியாமல் இருப்பதாகவும் சொன்னாள். நான் இத்தனை அருகில் வசிப்பது தெரியாது என்றும், தெரிந்திருந்தால் எப்போதொ அழைத்திருப்பேன் என்றும் கூறினாள். அவளுடைய இதமான, சலிப்பூட்டாத அந்தப் பேச்சு எனக்கு கனவு போன்ற ஒரு ஞாபக மறதியைத் தந்திருக்க வேண்டும். அவள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி, அந்த வட்டாரத்திலேயே பானங்களுடன் முழு சாப்பாடும் வழங்கும் வேர்ட் சப்பர் கிளப்புக்கு என்னை இரவு விருந்துக்கு அழைத்த போது நான் சரி என்று ஒரு தேதிக்கு ஒத்துக் கொண்டேன்.

இறுதியில் தொலைபேசியை வைத்து விட்டு, நான் புகைபோக்கியில் எரிந்து கொண்டிருந்த ஒரு சின்ன விறகுக்கட்டையையே நெடு நேரம் உற்றுப் பார்த்தேன். அந்த விறகை நான் அழைப்பு வருவதற்கு முன்பே வைத்துவிட்டு, சில சோளங்களைப் பொரிக்கலாம் என்றிருந்தேன். நான் சோளம் போர்க்கும் போதெல்லாம், பருப்புகளை காற்றில் உயர வீசி நாயை விட்டு கவ்வச் சொல்வேன். இப்போது ஒரு பயங்கரமான உணர்வுகளின் அணிவகுப்பால் நான் கவ்வப் பட்டிருக்கிறேன். எதற்கு நான் முதலில் இணங்க வேண்டும்? என்னால் தீர்மானிக்க முடியவில்லை. நாய் வந்து என் மடியில் தலையை வைத்துக் கொண்டது. நான் காட்டும் எதிர்வினை மரத்துப் போதல் என்பது எனக்கு விளங்கும் வரையில் நாங்கள் அங்கே உட்கார்ந்திருந்தோம். பிறகு எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, நிம்மதியாகி, நாயை இறக்கி விட்டு, தூங்கச் சென்றேன்.

அவள் என்னை விட குட்டையாக இருந்தாள். நான் அவளைச் சாலையிலோ, பலசரக்கு அங்காடியிலோ, இல்லை வங்கியிலோ பார்த்திருக்க வேண்டும். இங்கே அவளை ஒரு முறையாவது சந்திக்காமல் போவதற்கு வாய்ப்பு மிக குறைவு. சந்தித்திருந்தாலும் அவள் என் அம்மாவாக இருக்கக் கூடும் என்று நான் நினைத்திருக்க மாட்டேன். என்னோடு தொடர்பு செய்து பார்க்கும் வகையில் அவளிடம் என்னால் எதையும் கண்டு பிடிக்க இயலவில்லை.

நாங்கள் கை குலுக்கவோ, கட்டி அணைத்துக் கொள்ளவோ இல்லை. தோல் இருக்கைகளில் எதிரெதிரே அமர்ந்து கொண்டோம்.

“நீ வந்து…”

“முட்டாளா? முடமா?”

அவள் தன்னை அமைதியாக்கிக் கொண்டாள்.”உனக்கு அப்படியே உன் அப்பாவின் நிறம். ஜார்ஜுக்கு முடி கருப்பாக இருக்கும்” என்றாள்.

நான்சி லாஷர் இருபார்வை மூக்குக்கண்ணாடியுடனும், அதன் பின்னால் சிவந்த ஓரங்களுடன் கூடிய நீல விழிகளுடனும், கூர்மையான மூக்குடனும், சிறிய உதடுகள் இல்லாத வாயுடனும் இருந்தாள். அவளுடைய கேசம் எழுபத்தியேழு வயது பெண்மணிக்கான பொருத்தத்துடன் இருந்தது… அழுத்தி சீவப்பட்டு, நரைகளுடன். இத்தனை கூர்மையான அம்சங்களுடன், ஒரு காலத்தில் இவள் ஒரு அழகியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்போது அவள் கறை படிந்த பல் செட்டும், முத்துக்கள் பதித்த பெரிய தோடுகளும், சாயம் போன நீல வண்ண கால் சட்டையும் அணிந்திருந்தாள். நுழையும் போது அவளுடைய சதுர வடிவ, நாடாவால் கட்டப்பட்ட சிகிச்சை காலணிகளை நான் கவனித்தேன். என்னோடு தொடர்புபடுத்தி சொல்ல அவளிடம் ஒன்றுமே இல்லை. அவள், நீங்கள் அணுக விரும்பாத ஒரு சாதாரண குட்டிக் கிழவி. ரிசர்வேஷன் மக்கள் எல்லாம் இவளைப் போன்று காட்சி அளிக்கும் பெண்கள் கிட்டேயே செல்ல மாட்டார்கள். ஏனோ தெரியாது. தவிர்த்தலுக்கான ஒரு பரஸ்பர இயல்புணர்ச்சியோ என்னவோ!

“என்ன சாப்பிடுகிறாய்?” உணவு வகை அட்டையை தொட்டுக் கொண்டே கேட்டாள். “எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள். செலவு என்னுடையது.”

“இல்லை. பரவாயில்லை. நாம் செலவைப் பகிர்ந்து கொள்வோம்,” என்றேன்.

இதைப் பற்றி நான் முன்னமே யோசித்திருந்தேன். அவள் எதோ ஒரு வகையில் தன் குற்ற உணர்வைத் தணித்துக் கொள்ள நினைப்பாளாயின், இப்படி விருந்து வாங்கிக் கொடுப்பதெல்லாம் ரொம்ப மலிவு! ஆக, நாங்கள் உணவைத் தருவித்து உண்டோம். புளிக்கும் வெள்ளை ஒயினைப் பருகினோம். இடையே அவள் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் குறித்துக் கேட்டாள். புதினங்களில் சொல்வதைப் போல என்னைத் தன் பால் இழுத்தாள். அவள் ஆச்சரியமூட்டுகிற, ஆவலைத் தூண்டுகிற, அனுதாபம் ஏற்படுத்துகிற ஓசைகளை செய்தாள். அவள் என்னை ரசிப்பதாகச் சொன்னாள். அப்படியே, நாங்கள் வாலை மீனையும், பிரியாணியையும் சாப்பிட்டு முடித்தோம். சாக்லேட் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது.

“நீ இப்படி ஒரு சாதாரணமான பெண்ணாக வளருவாய் என்று தெரிந்திருக்கக் கூடாதா? நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேனே!” என்றாள்.

அந்த வார்த்தைகள் என்னைத் தாக்கியதை உணர்ந்து அதிர்ந்தேன். சட்டென கேட்டேன், “லிண்டன் எப்படி இருக்கிறான்?”

அவள் கண்ணீர் கரைந்து போய், முகம் நேராகவும், கூர்மையாகவும் ஆனது.

“அவன் ரொம்ப முடியாமல் இருக்கிறான்” என்றாள். “அவன் சிறுநீரகம் பழுதடைந்து சுத்திகரிப்பில் இருக்கிறான்.” நான் என்னுடையதைத் தந்திருப்பேன். ஆனால் நானோ பொருந்தாமல் போய்விட்டேன். தவிரவும், என்னுடையது பழசு. ஜார்ஜும் செத்துப் போய்விட்டார். நீதான் உன் சகோதரனின் ஒரே நம்பிக்கை.”

நான் கைக்குட்டையை உதட்டின் மேல் வைத்துக் கொண்டு நாற்காலியின் மேலே மிதப்பதைப் போல உணர்ந்தேன். என்னோடு இன்னொருவரும் மிதந்து வந்தார்… ஏனோ தானோவென்று. என்னால் அவருடைய அதீதமான சுவாசத்தை உணர முடிந்தது. இது தான் ஷெரிலை அழைப்பதற்குச் சரியான தருணம் என்று எண்ணிக் கொண்டேன். நான் முன்பே அவளை அழைத்திருக்க வேண்டும். அவள் இதைச் சத்தியமாக நம்ப மாட்டாள். நான் கேட்டதையும், உணர்ந்ததையும் என்னாலேயே நம்ப முடியவில்லை. அவ்வளவு பிரமாதமாக இருந்தது! என்னிடம் ஒரு இருபது டாலர் பணம் இருந்தது. அந்த பணத்தை மேஜை மேலே வைத்து விட்டு நான் வெளியே நடந்தேன். என் காருக்குள் வந்தேன் ஆனால், அதற்கு முன் நிறுத்துமிடத்தைச் சுற்றி வளர்ந்திருந்த புற்களையும், களைகளையும் கடந்து ஓடி வந்தேன். நான்சி லாஷரின் கரம் என் முதுகைத் தட்டிய போது நான் மூச்சிரைக்க அழுது கொண்டிருந்தேன். அதுவே என்னைப் பெற்ற தாய் என்னை முதல் முறையாகத் தொடுவது. அவள் கைகளுக்குக் கீழே நான் அமைதி ஆனாலும், அவளின் முணுமுணுப்பில் ஒரு முட்டாள் தனமான வெற்றி இருப்பதை நான் கண்டு கொண்டேன். இத்தனை நாட்களாக அவளுக்கு நான் இருந்த இடம் தெரிந்திருக்கிறது. பொறியிலிருந்து தப்பி ஓடும் ஒரு விலங்கைப் போல, வெறுப்பால் உந்தப்பட்டு அவளைத் தள்ளி விட்டேன்.

“நான் என்ன செய்யட்டும்?” என்று ஷெரிலைக் கேட்டேன். “நான் செட்ரிக்கைக் கூப்பிடுகிறேன்.” அவன் பிஸ்மார்க்கில் வசிக்கிறான். “இதோ பார் டஃப்பி! நான் செட்ரிக்கை மருத்துவமனைக்கு அனுப்பி அந்த லிண்டனின் குழாய்களைப் பிடுங்கச் சொல்கிறேன். அப்புறம் நீ இந்த கிறுக்குத்தனத்தை எல்லாம் மறந்து விடலாம்,” என்றாள்.

அது தான் ஷெரில்! வேறு யார் என்னை இந்த சூழ்நிலையிலும் சிரிக்க வைத்திருக்க முடியும்?

விருந்துக்கு மறுநாள் காலை நான் கட்டிலில் படுத்திருந்தேன். இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக உடம்பு சுகமில்லை என்று அலுவலகத்தில் விடுப்பு சொன்னேன்.

” நீ நிஜமாகவே அதைப் பற்றி யோசிக்கவில்லைதானே?” என்று ஷெரில் கேட்டாள். நான் பதில் பேசாத உடன், “யோசிக்கிறாயா?”

“தெரியவில்லை.”

“அப்படி என்றால் நான் செட்ரிக்கை கூப்பிடத்தான் போகிறேன். அவர்கள் உன்னைக் கைவிட்டு விட்டார்கள். உன்னிடம் முதுகைக் காட்டி ஓடினார்கள். உன்னைத் தெருவில் சாகக் கிடக்க விட்டார்கள். நீ என் சகோதரி. உன் சிறுநீரகங்களை தானம் செய்ய நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஹே! என்றைக்காவது உன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்று எனக்குத் தேவைப்பட்டால்? அதைப் பற்றி யோசித்தாயா? உன் சிறுநீரகத்தை எனக்காக பாதுகாத்து வை.”

“சரி,” என்றேன்.

“என் செல்லம். ஐ லவ் யூ,” என்றாள். நானும் அதையே திரும்பச் சொன்னேன்.

“டஃப்பி! அதை செய்யாதே!” என்று எச்சரித்தாள். அனால் அவள் குரல் கொஞ்சம் பலஹீனமாக இருந்தது.

அவள் தொலைபேசியை வைத்தவுடன், நான் என் அம்மா தந்த சீட்டில் உள்ள எண்ணை அழைத்து சோதனைகளுக்கான முன்பதிவு செய்து கொண்டேன்.

நான் பிஸ்மார்க்கில் செட்ரிக்குடனும், அவன் மனைவியுடனும் தங்கினேன். அவள் பெயரும் ஷெரில் தான்…’சி’ உடன் தொடங்கும் ஷெரில். அவள் அமைதியானவள். அவள், காட்டு விலங்குகளின் உருவங்கள் பதித்த துவாலையைத் தந்தாள். அத்துடன் பயண-விடுதியிலிருந்து சுட்டுக் கொண்டு வந்த சின்ன சின்ன சலவைக்கட்டிகளும். அவள் எனக்கு படுக்கை அமைத்தாள். குடும்பத்தில் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், என் செயல்பாடுகளைத் தான் அங்கீகரிக்கும் விதமாக அவள் காட்ட முயற்சித்தாள். அவள் ஒரு தீவிர கிறித்துவள். ஆனால் இதெல்லாம் ஒன்றும் “ஒரு கன்னத்திற்கு மறு கன்னம்” மாதிரியான விஷயம் இல்லை. நான் ஏற்கனவே எனக்கு வலியை நாடிச் செல்லப் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறேன். மாற்றுப் பாதை இதை விட மோசமானதாக இருக்கும் பட்சத்தில், நான் இதையே தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.

என் வாழ்க்கை முழுவதும் தெரிந்தோ தெரியாமலோ இது நடக்குமா என்று நான் காத்திருந்து இருக்கிறேன். என் பார்வைக்கு அகப்படாமல் என்னுடன் இருந்தது என் இரட்டையெ! தான் அங்கு இருந்திருக்கிறோம் என்று அவனுக்கும் தெரியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். நான் பெட்டியிடமிருந்து களவாடப் பட்டு, வெண்மையில் தனியாக இருந்த போது, அவன் என்னருகே அமர்ந்து, என் கைகளைப் பற்றிக் கொண்டு, என்னோடு சேர்ந்து கவலைப் பட்டது அவனுக்கே தெரியாது. இப்போது அவன் தாயை நான் சந்தித்த பின் இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டேன். சிறு ஊர்களில் உள்ள மக்களுக்கு எல்லாம் தெரியும். அவள் என்னைக் கைவிட்டுச் சென்றதும் தெரியும். அவள் தன் கோபத்தை தன் மீதும், தன் அவமானத்தை இன்னொருவர் மீதும் திருப்பிக் கொண்டாள். அந்த இன்னொருவர், தான் தேர்ந்தெடுத்த தன் குழந்தை. அவள் லிண்டன் மீது பழி சுமத்தினாள். அவளுடைய ஸ்பரிசத்தில் இருந்த வெற்றியையும், வெறுப்பையும் என்னால் உணர முடிந்தது. சம்பவங்கள் இப்படி நடந்தமைக்கு நான் இப்போது சந்தோஷப் படுகிறேன். நாங்கள் பிறப்பதற்கு முன், என் இரட்டை என் மீது கருணை கொண்டு என்னை நசுக்கினான். என்னை முடமாக்கி முன்னேற்றினான். நானோ தப்பித்துக் கொண்டேன்.

என்னை விசாரித்து, என்னுடைய பரிசோதனை முடிவுகளை எனக்குத் தந்த அந்த பெண் மருத்துவர் பேச ஆரம்பித்தார், “நான் சொல்வதை கவனமாகக் கேள். நீ ஒரு நல்ல போருத்தம். ஆனால் எனக்கு உன் கதை தெரியும். மேலும், லிண்டன் லாஷரின் சிறுநீரகக் கோளாறுக்கு அவனே காரணம் என்றும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதிக அளவில் அசிடோமினாஃபின்னும், ஆஸ்பிரினும், ஆல்கஹாலும் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறான். அதுதான் சிறுநீரகச் சுத்திகரிப்பில் இருக்கிறான். நீ உன் முடிவை எடுக்கும் போது இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”

பின்பு அன்று, நான் லிண்டனுடன் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருக்கையில், “நீ இதைச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. நீ ஒன்றும் யேசுநாதராக இருக்க வேண்டாம்” என்றான்.

“நீ என்ன செய்தாய் என்று எனக்கு தெரியும். நான் ஒன்றும் விசுவாசி இல்லை,” என்றேன்.

“ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குள் அப்படி ஒன்றும் உருவ ஒற்றுமை இல்லை.” என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டே லிண்டன் சொன்னான்.

அது ஒன்றும் பாராட்டு இல்லை என்று நான் புரிந்து கொண்டேன். அவன் அழகாக இருந்தானே! அவன் தன் தாயின் சிறப்பான அம்சங்களை எல்லாம் கொண்டிருந்தான். கூடவே இன்னொன்றும் இருந்தது. அவனுடைய விழிகள் அறையில் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவன் தன் நகங்களை கடித்துக் கொண்டும், சீட்டி அடித்துக் கொண்டும், போர்வையை விரலிடுக்கில் சுருட்டிக் கொண்டும் இருந்தான்.

“நீ அஞ்சல் ஊழியையா?” என்று கேட்டான்.

“நான் பெரும்பாலும் முகப்பில் வேலை செய்வேன்.”

“எனக்கு ஒரு நல்ல விநியோகப் பாதை இருந்தது,” என்றான் கொட்டாவி விட்டுக் கொண்டே. “வழக்கமான பாதை. நான் தூங்கிக் கொண்டே கடந்து விடுவேன். ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் என் வாடிக்கையாளர்கள் வாழ்த்து அட்டைகளும், காசும், இனிப்புகளும் வழங்குவார்கள்.”

“உன் பக்கத்திலோ, இல்லை உன் பின்னாலோ யாராவது உன் கூடவே உன் பாதையில் நடந்து வருவதைப் போல நீ எப்போவாவது உணர்ந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். “யாராவது நீ கண்களை மூடும் போது தோன்றி, திறக்கும் போது மறைந்து இருக்கிறார்களா?”

“இல்லை. உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டான்.

“நான்தான் அது,” என்றேன்.

நான் அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன். அவனோ அதை தளர விட்டான். நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தோம். சற்று நேரத்திற்கு பின் அவன் தன் கையை என்னிடமிருந்து விலக்கிக் கொண்டான். என் பிடி அவனைக் காயப்படுத்தியதைப் போல அதை மெல்லப் பிசைந்துக் கொண்டான்.

“எனக்கு உன்னை பிடிக்கவில்லை,” என்றான். “இதெல்லாம் என் அம்மாவுடைய யோசனை. எனக்கு உன்னுடைய சிறுநீரகம் வேண்டாம். உன்னுடைய ஒரு பாகமும் என்னுள் இருக்க வேண்டாம். அதற்கு பதில் நான் செத்தே போவேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நீ ஒரு அருவெறுப்பூட்டும் பெண். மன்னிக்கவும், ஆனால் இதை நீ முன்பே கேட்டிருக்கக் கூடும்.”

“இல்லை. யாரும் இதை என்னிடம் சொன்னதில்லை,” என்றேன்.

“நீ நாய் வைத்திருக்க வேண்டும்,” என்றான். “நாய்கள் தாள் யார் சோறு போடுகிறார்களோ அவர்களிடம் அன்பு காட்டும். நீ ஒரு பையை உன் தலையின் மீது கவிழ்த்து மூடிக் கொள்ளாத வரையில் உனக்கு ஒரு கணவன் கிடைப்பான் என்பது சந்தேகம் தான். அப்பவும் இரவில் அது விழுந்து விடும்.”

“என்னைத் துரத்துவதற்காகத் தானே இதை எல்லாம் சொல்லுகிறாய்?” என் குரல் தொண்டையிலியே கவ்விக் கொண்டது. நான் எச்சிலை விழுங்கிக் கொண்டேன். என் உடலில் ஏற்படத் தொடங்கிய நடுக்கத்தை நிறுத்த நான் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். “நீ சாக வேண்டும். உனக்கு காப்பாற்றப் படவேண்டாம் இல்லையா? நான் உன்னை ஒரு காரணத்திற்காகவும் காப்பாற்றப் போவதில்லை. நீ எனக்கு எந்த கடனும் பட வேண்டாம்.”

“கடனா? உனக்கா?”

அவன் நிஜமாகவே ஆச்சரியப்பட்டான். அவன் பல்வரிசை மிகவும் சீராக இருந்தது. அவன் கண்டிப்பாக சிறு வயதில் பற்களை சீரமத்திருக்க வேண்டும். அவன் இப்போது சிரிக்கத் தொடங்கினான், அவனுடைய அழகான அத்தனை பற்களையும் காட்டிக் கொண்டு. அவன் தலையை ஆட்டினான். அவனுடைய விரலை என்னை நோக்கி அசைத்தான். தன்னையே விஞ்சி விடும் அளவிற்கு அதிர்ந்து சிரித்தான். என்னுடைய கைப்பையை எடுக்க நான் திடுதிப் என்று குனிய, அவனோ மூச்சே அடைந்து போகும் அளவுக்கு ஆரவாரத்துடன் சிரித்தான். நான் அவனிடமிருந்து விலகி வாசலுக்கு செல்ல முயற்சித்தேன். ஆனால் சுவற்றில் ஒட்டிக் கொண்டு அந்த வெள்ளை, வெள்ளையான அறையில் சிக்கிக் கொண்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.