எப்போதும் வேப்ப மரத்தடியில் கிடக்கும் கயிற்று கட்டில், இப்போது வாசலுக்கு நேராகக் கிடந்தது. அதில் பெரியசாமி மல்லாந்து படுத்திருந்தார். அந்த வேப்ப மரத்தில், நேற்று இரவு அவர் தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போனார்.
எலும்பு துருத்தும் வெற்று உடம்பில், இடுப்பில் கட்டிய நாலுமுழ பழுப்பு வேட்டியோடு, எல்லா நாளும் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியசாமி, இப்போது எட்டுமுழத்தில் வெள்ளை வேட்டி கட்டியிருந்தார். மேலே சிவப்பு நிறத்தில் கட்டம் போட்டச் சட்டை. மாப்பிள்ளை முறுக்கோடு இருந்த இளமைக் காலத்தில், சரியான அளவில் தைத்த சட்டை, இப்போது அவருடைய நைந்துபோன உடம்பை போர்வையைப் போலச் சுற்றிக்கொண்டிருந்தது. கழுத்தில் மஞ்சள் சாமந்தி மாலை ஒன்று போட்டிருந்தது. கிழடுகள் சிலது, கட்டிலைச் சுற்றி உட்கார்ந்து, வார்த்தை புரியாத ஒப்பாரியை தீனமாக இழுத்துக்கொண்டிருந்தன.
‘போயி தண்ணிய தொறந்து உட்டுட்டு வரேன்’, ‘மாட்டை கொண்டி கொல்லையில கட்டுணும். போயிட்டு வந்துறேன்’, ’ஏர்காரனுக்கு கொல்லைய காட்டுணும்’ – என்று மாறி, மாறி சொல்லிக்கொண்டு ஆட்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
பெரியசாமியின் வீட்டுக்காரி செல்லம்மாள், திண்ணையில், சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். இளைத்த தேகம், இரண்டு மேற்பற்கள் மட்டும் தடிமனாய்,கீழ் உதட்டைத் தாண்டி வெளியில் வந்து நீட்டிக்கொண்டிருந்தன. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் தலையை கவிழ்த்து கொண்டிருந்தாள். பெரியசாமியோடு கல்யாண வாழ்க்கையை அவள் சந்தோசமாகத்தான் தொடங்கினாள். வாழ்க்கையின் கரடுமுரடான காடு மேடுகளைக் கடந்தபோது, அவர்களின் சம்சார வாழ்க்கை, வழியில் எங்கோ உடைந்து போனது. எங்கே, எப்போது அது நடந்தது என்று அவர்களுக்குக் கவனமில்லை. அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று உணர்ந்தபோது, பெரியசாமி மௌனமாக ஒதுங்கிவிட்டார். செல்லமாளுக்குள் ஏமாற்றமும், விரக்தியும் எரிமலையாய் கொதித்தன. ஆத்திரம் தாளாமல், அவர்மீது எப்போதும் தீக்கங்குகளாய் கொட்டிக்கொண்டிருந்தாள். மனதெல்லாம் வெந்து, இதற்குமேல் அங்கே கருகுவதற்கு ஏதுமில்லாமல் இறுகிப்போனதும், கயிற்று கட்டிலையே வீடாக்கிக் கொண்டு வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து விட்டார்.
பறை அடிப்பவர்கள் பறைகளை நெருப்பில் காட்டி தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். எதிர்சாரி வீட்டின் வாசலில் நின்றுகொண்டு ஒருவன் சங்கு ஊதினான். கையில் கொடுக்க காசில்லை என்றாலும், மனதுக்கு இதமாக நாலு நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்புவார் பெரியசாமி. அதற்கு நன்றி கடனாக அவர்கள் வந்திருந்தார்கள்.
கட்டிலில் பெரியசாமியும், தரையில் மற்றவர்களுமாக, அவரின் மகனும் மருமகளும் வருவதற்காகக் காத்திருந்தார்கள். ஒரே மகன். செல்வராசு. டவுன் பள்ளிக்கூடத்தில் படித்து முடித்தவுடன், ஒரு வாத்தியாரின் ஆலோசனையில், பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்து, சென்னையில் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு, அந்த குக்கிராமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டான். அவனே ஏற்பாடு செய்து கல்யாணமும் பண்ணிக்கொண்டான். பத்து வருடங்களாயிற்று, குழந்தை ஏதும் இன்னும் கொடுத்து வைக்கவில்லை. செல்லம்மாள், தன் மனைவியை மலடி என்று பொசுக்கி விடுவாள் என்கிற பயத்தில், அவளை கல்யாணத்திற்குப் பிறகு இங்கே அழைத்து வருவதே இல்லை. அவனும் இங்கே இரவு வந்தால், காலை விடியும்போதே கிளம்பி ஓடிப்போய் சென்னைக்குள் நுழைந்துக் கொள்வான். ஒரு குழந்தையை தத்து எடுக்கிற முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. செல்லம்மாள், அவளின் தம்பி பெண்ணைத்தான் எடுக்க வேண்டும் என்று அதிகாரம் பண்ணுகிறாள். அதற்கு பயந்து கொண்டு செல்வராசு இங்கே வருவதையே நிறுத்திக் கொண்டான். மாதாமாதம் பணம் மட்டும்தான் அவனிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது.
அன்று காலையில் ஆறுமுகம் கொஞ்சம் பொறுமையாகத்தான் எழுந்தார். வாய்க் கொப்பளித்து, முகம் கழுவிக்கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தார்.
“என்ன, போவுலியா, ஓன் ஆளு போயிட்டாரே..”
என்ன சொல்கிறாய் என்பதைப் போல் அவர் விழிப்பதை பார்த்து,
“பெரியசாமி கெழம் நேத்து ராத்திரி தூக்கு மாட்டிகிச்சே, தெரியாதா?” என்று சொல்லிக்கொண்டே ராசேந்திரன் படியிறங்கி போய்விட்டான்.
ஆறுமுகத்திற்கு நாக்கு வறண்டது. தலை சுற்றியது. அப்படியே திண்ணையில் சாய்ந்து விட்டார். நினைவு தெளிந்து எழுந்தபோது, வெயில் வாசல்படியை தாண்டி வெளியே போயிருந்தது. அவசர அவசரமாக, நடக்க முடிந்த வேகத்தில் அவர் நாவல் மரத்தடிக்கு வந்து சேர்ந்தபோது, பெரியசாமி வேப்பமரத்திலிருந்து இறங்கி கழுத்தில் மாலையோடு கட்டிலில் படுத்து விட்டார். தன் நண்பன் கண்மூடிக் கிடப்பதை அருகில் சென்று பார்க்க அவருக்கு தைரியமில்லை. பெரியசாமியின் வீட்டிற்கு எதிர்சாரியிலிருந்த அந்த நாவல் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பெரியசாமியின் ஆத்ம சிநேகிதர். ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது ஆரம்பித்த அறுபது வருட சிநேகிதம். கருவேல முள்வேலியில் கையைவிட்டு புளியம்பழம் பொருக்கவும், மரத்தில் ஏறி நாவல் பழம் உலுக்கவும், குளம் கண்ட இடத்திலெல்லாம் குதிக்கவும் என்று ஒன்றாகத் திரிந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் அடித்த வெள்ளமும், புயலும், கொளுத்திய அனலும் அவர்களின் சிநேகிதத்தைச் சிதைக்க முடியவில்லை. எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த நேரங்களில், ஒருவர் கையை ஒருவர் இறுக்கிக் கொண்டு கரையேறினார்கள். ஆனால் நகரத்தின் நாகரீகங்கள், அந்த கிராமத்தின் வாழ்க்கையைப் புரட்டி அடித்துக் கொண்டுபோன வேகத்திற்கு அவர்களால் ஓட முடியவில்லை. வயது வழிமறித்து விட்டது. மனதும் உடலும் அயர்ந்துபோய் பின்தங்கி விட்டார்கள்.

வேப்ப மரத்தடியில், திருப்பி போட்ட உரல்கல்லில் ஆறுமுகமும், கயிற்று கட்டிலில் பெரியசாமியும், நாள் முழுதும் உட்கார்ந்து கிடப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டே போனார்கள், யாரும் பேச்சு கொடுப்பதில்லை. இந்த தலைமுறைக்கு அதெற்கெல்லாம் நேரமில்லை. மாரிமுத்துதான் தான் எப்போதாவது சீண்டிப் பார்ப்பான். பனிரெண்டாம் வகுப்பு பெயிலாகி, ஊருக்குள்ளேயே தங்கிவிட்ட பெரிய படிப்பாளி அவன். பள்ளிகூடக் காலத்திலிருந்து அவர்களை பார்க்கிறான். அவனும் வளர்ந்து வாலிபனாகி விட்டான். ஆனால், அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இடம் மாறிகூட உட்கார்ந்ததாகத் தெரியவில்லை. அப்படியே சமைந்துவிட்டார்களோ என்றுகூட அவனுக்கு தோன்றும். அப்படியில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ளத்தான் அவனும் அவர்களிடம் பேசினானோ என்னவோ.
நேற்று மாலை, நிலத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவன், காளை மாடுகளை இழுத்து பிடித்தபடி கேட்டான்
“என்ன, மாமா, சாப்டாச்சா ?”
“இப்பத்தாண்டா கறி வேவுது. கொழம்பு கொதிச்சதும் சாப்பாடுதான். வரியா?”, என்று பெரியசாமி முடிப்பதற்குள் மாரிமுத்து விருட்டென்று நகர்ந்தான். என்னவென்று திரும்பினால், செல்லம்மாள், வாசலில் வந்து நின்று, ‘தூ…’ என்று துப்பிவிட்டு உள்ளே போனாள். எப்போதும் நடப்பதுதான். ஆறுமுகம் தலையை குனிந்து கொண்டார். அவருக்கு இப்படி ஒரு செல்லம்மாள் இல்லை. அவருடைய வளர்மதி, ராசேந்திரனை பெற்று கொடுத்துவிட்டு மேலேறி போய்விட்டாள். மகனை தனியாகவே வளர்த்தார். மறுமணத்தைப்பற்றி பேச்சு வந்தபோதெல்லாம் சிரித்துக்கொண்டே நகர்ந்து விட்டார். பெரியசாமியின் முயற்சிகூட அந்த விஷயத்தில் பலிக்கவில்லை.
இருவரும் பேச்சை தொடர்ந்தார்கள்.
“ராசேந்திரன் சோளம் போட்டானே, பரவாயில்லியா?”
“ஒரு மழ பேஞ்சா தப்பிச்சிக்கும். ஆனா, என்னாலதான் மழ பெய்யிலன்னு சத்தம் போட்றான்.”
“இது என்ன புதுசாயிருக்கு. நீ என்ன பண்ணுண ?”
“அவனுக்கு நான் போய்சேந்துடுனும். போயிட்டா, எல்லாத்தியும் வித்து எடுத்துகிட்டு டவுன்ல மாமனாரு ஊட்டோட போவுலாம்னு பாக்குறான். அங்க ஒரு பொட்டிகட வச்சிகிவானாம்.”
“சரி உடு. நம்ம கையில என்ன இருக்கு. எது நடக்குனுமோ அதுதான் நடக்கும்.” பெரியசாமி பட்டுக்கொள்ளாமல் சொன்னார். ஆறுமுகத்திற்கு இந்த பதில் புதிதாக இருந்தது.
வெளிச்சம் மங்கி, ஊர் அடங்கி கொண்டிருந்தது.
”சரிப்பா, நீ படு. நான் காலையில வரேன்”, பெருமூச்சோடு ஆறுமுகம் எழுந்தார்.
”இரு, ஒரு சேதி பேசுனும் உங்கிட்ட”
பெரியசாமியின் குரலில் அவசரம் தெரிந்தது. ஆறுமுகம் மீண்டும் உட்கார்ந்தார். வேப்ப மரத்தின் இலைகளுக்குள் காற்று நுழைந்துபோகிற சத்தத்தைத் தவிற வேறு அரவமில்லை. ஐந்து நிமிடத்திற்கும் மேலாகியது, பெரியசாமி மீண்டும் வாயை திறப்பதற்கு.
“இந்த வேப்பமரம் தானா மொளச்சது. அம்பது வருஷத்துக்கு மேல இருக்கும். இன்னும் பூக்குது, காய்க்கிது, வளருது. நமக்குத்தான் வயசாவறதும், விதி முடியறதும்.”
ஆறுமுகம் பதில் ஏதும் சொல்லாமல் காத்திருந்தார். அவருடைய நண்பன் வேறு எங்கேயோ இழுத்துப் போகிறான் என்பது மட்டும் புரிந்தது. பெரியசாமி தொடர்ந்தார்.
“இந்த கட்டுல்ல கயிறெல்லாம் நஞ்சிப் போச்சு. புது கவுறு போட்டு இழுத்துக் கட்ட கையில தெம்பில்ல. கண்ணும் மங்கிப் போச்சி. செல்லம்மா வெற ‘எப்ப போவ? போயித் தொலயேன்’ன்னு கத்திக்கிடே இருக்கா… போயிட்டா, இந்த கட்டுலாவது யாருக்காவுது ஆவும். நீயும் இந்த தடிய ஊனிக்கிட்டு இன்னும் எத்தன நாளக்குத்தான் தெனம் இங்க வந்துப் போவ.”
பெரியசாமியின் வார்த்தைகள் அதிசயமாய் இன்றைக்கு வேகமாக வந்து விழுந்ததில் ஆறுமுகத்திற்கு ஆச்சரியமாக இல்லை. இது என்றைக்காவது ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்ததுதான், இன்றைக்கு வந்திருக்கிறது. ஆறுமுகத்தின் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித் தது.
ஆறுமுகத்திற்குத் தாளவில்லை. “இங்க வராம என்னெ எங்க போவச் சொல்ற? நீ போயிட்டா என்னா ஆவப்போவுது. நீ உக்காந்த எடத்த கழுவித் தள்ளிட்டு, வேற வேலயப் பாக்கப் போறானுவ, அவ்வளவுதான். பேசாமத் தூங்கு. காலைல வர்ரேன்.”
பெரியசாமியின் பதிலை எதிர்பார்க்காமல் ஆறுமுகம் எழுந்து நடந்து விட்டார். காலை நொடித்து, கைத்தடியின் ஆதரவில் மெதுவாக நகர்ந்து செல்லும் உருவத்தை, கண்களில் இருந்து மறையும்வரை பெரியசாமி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கண்ணீர் ஊறி வழிந்து வற்றிக்கொண்டிருந்தது.
தப்பட்டையும் சங்கும் திடீரென்று வேகமாக அதிர்ந்தன. அரை மயக்கத்தில் இருந்த ஆறுமுகம் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தார். பெரியசாமியின் மகனும் மருமகளும் வந்து விட்டார்கள் போலிருந்தது. சடங்கு ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. மாரிமுத்து நாவல் மரத்தடிக்கு வந்து அவரின் கையைப் பிடித்து அழைத்தான். அவர் நகரவில்லை. கையை விலக்கிவிட்டு, அங்கேயே இருந்துவிட்டார்.
சடங்குகள் முடிந்து, பெரியசாமியை அவரின் கட்டிலிலேயே தூக்கிக்கொண்டு போனார்கள். எல்லோருக்கும் கடைசி ஆளாக ஆறுமுகம் நொண்டிக்கொண்டே பின் தொடர்ந்தார். சுடுகாட்டிற்கு அவர் போய் சேர்ந்தபோது, பெரியசாமி தகனமாகிக் கொண்டிருந்தார். அவரின் கட்டில், ஒரு ஓரமாக உடைந்துக் கிடந்தது. தகனம் தணிந்து அடங்கும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, ஆறுமுகம் வீடு திரும்பியபோது இருட்டியிருந்தது.
அரைகுறை வெளிச்சமாக இருந்தது. இன்னும் முழுதாக விடியவில்லை. ராசேந்திரனின் வீட்டுக்காரி தேவானை, திண்ணையில் ஏறி, கவிழ்த்திருந்த கோழிக்கூண்டை திறந்து விட்டாள். அலுமினிய வாளியோடு சாணி தெளிக்க வாசலுக்கு வந்தாள். தெளித்து முடித்து, மீதியிருந்த தண்ணீரை எட்டி விசிறிக்கொண்டே நிமிர்ந்தாள். தலையில் ஏதோ தட்டியது. அண்ணாந்து பார்த்தவள், “அய்யோ”, என்று அலறியடித்துக்கொண்டு வீட்டிற்குள்ளே ஓடினாள்.
அரசமரத்தின் கிளையிலிருந்து, ஆறுமுகம் சுருக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.
Discover more from சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
