அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.
