கீதா முகூர்த்தம்

பகவத் கீதை ஒரு மனிதனின் குடும்ப மற்றும் சமூகக் கடமைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், தன் உணர்ச்சிப் போராட்டங்களையும், அற விஷயங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ஒரு சாதகன் நேர்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. உபநிஷத்துக்கள் நேரடியான, அருவமான, குணங்களற்ற பிரம்மத்தைப் பற்றிப் பேசுகின்றன. துவக்க நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு எல்லையற்ற அந்தப் பிரம்மத்தை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், மனதில் கிரகித்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்

முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது.  ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.