ஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது?’ என்று சத்தம் போட்டாள்.
“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட? கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா?”
“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது?”
ராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா?
