காமத்தில் திளைத்த இரவு

புத்தகத்தை மூடி கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு சோம்பல் முறித்தான்.தனக்கும் அவர் பேசியதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு பார்வையை வீசிவிட்டு தெருவிலிறங்கி வடக்கு குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மனம் முழுவதும் ஒருவித பயமும்,விரக்தியும்,கோபமும் காமத்தை விழுங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.இதயத் துடிப்பின் வேகம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வேகமெடுத்திருந்தது.இடுப்பில் ஒரு குடத்தோடும்,தலையில் ஒரு குடத்தோடும் தெருவிளக்கு மங்கிய வெளிச்சத்தில் தோன்றி மறைந்தாள் தெற்குத்தெரு விஜயா.விளக்கு வெளிச்சத்தில் அவள் கடந்த அந்த நிமிடங்கள் அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது இருட்டிற்குள் பீடியைப் பற்றவைக்கையில்.

புட்டுக்குழல்

“அப்பிடி எந்தா செலவு”
“நல்லா கேட்டிய.நா வாரேன்னு தெரிஞ்சாலே என் வீட்டுக்காரிக்கு மொதல்ல தெங்காசிக்கு போயி சாப்புடணும்.படம் பாக்கணும்.பெறவு பஜார்ல போயி சப்பு சவர்னு அள்ளிக் கெட்டிக்கிடுவா.வீட்டுக்கு வந்ததும் சீட்டு,வாரவட்டி,மஞ்ச மசால் எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கத சரக்கெடுக்க கொண்டு வரலாம்னு பாத்தா ஊர்ல கெடக்க அவ்ள படுக்காளிப்பயலுவளும் குடிக்கணும்பானுவ.வேங்கி குடுக்காம இருக்க முடியுமா? பெறவு சரக்கெடுக்க எவன்ட்டயாது கடந்தான் வாங்கணும்.நல்ல வேளக்கி இந்ததடவ கொஞ்சம் பழய பித்தள கெடந்துது”

செல்லம்மாவின் குறுக்குவலி

ஜன்னல் இடுக்கிலிருந்த சாராயக்குப்பியில் செய்திருந்த மண்ணெண்ணெய் விளக்கை பற்றவைத்துவிட்டு மெல்ல எழும்பி வெளியே வந்தாள்.கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.அடுப்பில் சோற்றை வைத்துவிட்டு “ஏல சோத்தப் பாத்துக்கிடு.இந்தா வாறேன்”என்று கிளம்பினாள்.வடக்கு முனையிலுள்ள அவள் வீட்டிலிருந்து ஊரின் பிரதான தெருவை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டும்.வலிக்கு கடையில் மாத்திரை வாங்கிப் போடலாமா?அல்லது தெக்குத்தெரு மூக்கியிடம் காத்துக்குத்து பிடிக்கலாமா என்று யோசனையில் அருகிலிருந்த முருங்கமரத்தைப் பற்றி நின்றாள்.

மூன்று களவாணிகள்

மூவரும் ஏதோ தீர்மானித்தவர்களாய் குளத்துக்கரை கடந்து செட்டியார் தோப்பு வேலிக்குள் பட்டு நின்ற கள்ளியை முறித்து பாதை செய்து நுழைந்தனர். நுழைந்த இடத்தில் கடலைச்செடிக்கு அப்போதுதான் நீர் பாய்ச்சப்பட்டிருந்தது. பாத்திக்குள் மிதிக்காமல் வரப்பையடைந்து அருகிலிருந்த பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டனர். காட்டுப்பூச்சிகள் நிசப்தம் கலைத்தன.

வள்ளியும் நானும்

ஊருக்கு மேற்குப் பக்கமுள்ள பரும்புக்காட்டில் இந்த நடுநிசியில் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பக்கமுள்ள புளியமரத்திலிருந்து ஆந்தை ஒன்று இப்போதுதான் அலறி முடித்தது. கையில் இரண்டு லுங்கிகளும்,ஒரு மேல்பனியனும், சட்டையும் பொதியப்பட்ட ஜவுளிப்பை உள்ளது.ஊருக்குள் நாய்கள் குரைப்பது கேட்கிறது. கிளம்பி விட்டாள் போலும்.

சீமைக் காரைச் சாலை

“அது என்ன எளவுல?படம் கிடம் எடுக்கானுவளா? மயிறு மாதி கெடக்கத் தெருவ கோட்டிக்காரப்பயலுவ என்ன நோண்டிக்கிட்டு நிக்கானுவ?” நீண்டு கிடந்த சாணி மொழுகிய வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து,பல்குத்திக்கொண்டு நின்றிருந்த காளிமுத்துவிடம் வினவினார் கோளவடியார். எதிர்ப்புற சின்னமணி வீட்டிலிருந்து ஒரு சீரற்ற காட்டாற்றுத் தடம் போல் கருந்திட்டாய் கொசுமொய்த்து நெளிந்துகொண்டிருந்தது சாக்கடை.

ஆவாரங்காடு

மெல்ல எழுந்து சேலையை உடுத்திக்கொண்டாள்.தெருவில் இறங்க தெருவிளக்கு வெட்டிக்கொண்டிருந்தது.ஊளையிட்டு சென்ற நாய் திரும்பி நின்று குரைத்தது.அதோடு இன்னுமிரண்டு நாய்கள் சேர்ந்து கொண்டன.ச்சீசீ என்ற அதட்டலுடன் வடக்கு நோக்கினாள். அடர்கருப்பாய் இருந்தது சாலை.டார்ச்சை அடித்தவாறு நகர்ந்தாள்.அடி வயிறு இளகிவிட்டிருந்தது.இருட்டு மெல்ல விழுங்கிக்கொண்டது.

பொட்டுப்பாட்டி

அப்போதுதான் மூட்டப்பட்ட செங்கல் சூளையிலிருந்து வெளிவரும் கரும்புகையென அந்த சிறிய ஓலைக்குடிசை கரும்புகையை கக்கிக்கொண்டிருந்தது. அதனூடே இருமல் சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடந்தவாரம் நரியங்குளத்துக் கரையில் பொறுக்கிக் கொண்டுவந்த விறகுக் கட்டின் கடைசி சுள்ளிகள்தான் எரிந்துகொண்டிருந்தன. கறிவைத்து முடிக்கும்வரை இந்த விறகு போதுமா போதாதா என்று குழம்பியவளாய் விறகுக் கட்டையும் அடுப்பையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள் பொட்டுப்பாட்டி.

கணக்குப் பரீட்சை

“இந்த கோட்டிக்கார வெள்ளக்கார பய டயருக்கு வெறி எப்புடி இந்த நாயுவ நம்மள எதுத்து போராட்டம் பண்ணுதுன்னு.ஒருனாளு இந்த அமிர்தசரசுல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுனாங்க.இத தெரிஞ்சிக்கிட்டு இந்தபய என்னெஞ்சான்? இவன் ஆளுவ ஒரு நூறு வேர கூட்டிட்டு போயி,துப்பாக்கிய எடுத்து ணங்கு ணங்கு ணங்குனு சுட ஆரம்பிச்சிட்டான்” என்று கையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சொல்லிக் காண்பித்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் அவரின் நடிப்பைக் கண்டு. முருகம்மாளுக்கு சிரிப்பே வரவில்லை.அழுகை வந்துவிடக்கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

ராணியின் பீடிக்கணக்கு

நூறு புகையிலைத்தூளுக்கு,கால் கிலோ புகையிலை கொடுப்பார்கள்.இலையை பணிய வைத்து,பீடிக்கு தகுந்த வடிவில் உருவாக்கப்பட்ட அளவுகோல் கொண்டு இலை வெட்டி,மீண்டும் பணிய வைத்து,நூல் கண்டில் நூல் உருட்டி,தேவையான தூளை வைத்து சரியாக உருட்டி,நூல்கொண்டு கட்டி,பொட்டுக் குச்சி கொண்டு தலைப்பாகத்தை மடக்கினால் பீடி தயார்.நூறு தூளுக்கு 22கட்டுகள்(சல்லிகள்) சுற்ற வேண்டும்.ஒரு சல்லிக்கு 24பீடிகள்.22 சல்லி சுற்றுவதற்கு நூற்றி இருபது ரூபாய் கூலி.ஆறு நாட்கள் சுற்றினால் 720 ரூபாய் லம்பாக கிடைக்கும்.

புடலங்காய்

புடலங்காய் விலை இரண்டு ரூபாய் அதிகரித்த செய்தியைக் கேட்ட நொடியிலிருந்து கணேசனுக்கு சந்தோசத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. உற்சாக மிகுதியால் தனக்குத்தானே சிரித்தும் கொண்டான். முதலாம் ஆண்டு கல்லூரிக்கு தேர்வுக் கட்டணம் கட்ட கடைசித் தேதி தீர்மானமாகி இருந்தது. மனதுக்குள்ளே கணக்கு போட்டுக்கொண்டான். கிணத்துப் பக்கத்துல இருக்கிற சின்ன குண்டுல ஒரு மூட்டை, காக்கேயன் வரப்புக்கு அடுத்தாப்புல இருக்கிற குண்டுல எப்படியும் ஒரு மூட்டை தேத்திடலாம். இரண்டு மூட்டை 80கிலோ வரும். கிலோவுக்கு 10ரூவாயிலருந்து 12ரூவா ஆயிருக்குனு சொன்னானுவ. எப்படியும் பீஸ் கட்ட ஆயிரம் ரூவா சேந்திரும். .