புடலங்காய்

புடலங்காய் விலை இரண்டு ரூபாய் அதிகரித்த செய்தியைக் கேட்ட நொடியிலிருந்து கணேசனுக்கு சந்தோசத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. உற்சாக மிகுதியால் தனக்குத்தானே சிரித்தும் கொண்டான். முதலாம் ஆண்டு கல்லூரிக்கு தேர்வுக் கட்டணம் கட்ட கடைசித் தேதி தீர்மானமாகி இருந்தது. மனதுக்குள்ளே கணக்கு போட்டுக்கொண்டான். கிணத்துப் பக்கத்துல இருக்கிற சின்ன குண்டுல ஒரு மூட்டை, காக்கேயன் வரப்புக்கு அடுத்தாப்புல இருக்கிற குண்டுல எப்படியும் ஒரு மூட்டை தேத்திடலாம். இரண்டு மூட்டை 80கிலோ வரும். கிலோவுக்கு 10ரூவாயிலருந்து 12ரூவா ஆயிருக்குனு சொன்னானுவ.  எப்படியும் பீஸ் கட்ட ஆயிரம் ரூவா சேந்திரும். சந்தோசத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

கொடியடுப்பில் பருப்பும், சோறும் வெந்து கொண்டிருந்தது. ஆடு தின்று மிச்சமிட்டு காய்ந்துபோய் கிடந்த வேப்பங்குச்சியை அடுப்பின் வாய்க்கு ஏதுவாக முறித்து அடுப்பிற்குள் திணித்துக்கொண்டிருந்தாள் கணேசனின் அம்மா. அந்த சிறிய ஒலைக் கொட்டகைக்குள் புகைமண்ட இருமியவாறே சமையலில் முனைப்போடிருந்தாள்.

“எலே கண்சா! அந்த காக்காச்சி சத்தம் போடுதா என்னனு பாருல.”

”ஏம்மா உயிர வாங்குத?எனக்கு அடுத்த வாரம் பரிச்ச இருக்கு. நீயே போயி பாரு.”

‘முச பிடிக்க நாய, மூஞ்சபாத்தா தெரியாதா?.கழுத மாதி பொட்டலுல நின்னு மட்ட (கிரிக்கெட்) அடிக்கும்போது படிக்கணும்னு ஓர்ம இல்லயோ? ஓன் அப்பன நாலுமணிக்கு வெளிய தூக்கிட்டுப் போனான்வ இன்னும் காங்கல. எங்க கொண்டுபோட்டு மூடுதாவளோ?”என்று வழக்கம்போல புராணத்தை தொடங்கினாள்.

“ஏம்மா எப்ப பாரு அழுதுக்கிட்டே இருக்க?’ என்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, ஆட்டுத் தொழுவத்துக்குள் நுழைந்து காக்காச்சியை தேடினான். காக்காச்சி முதன் முதலாய் வாங்கிய ஆடு.அது குட்டியிட்டு பெருகி 12 ஆடுகளாய் ஆகியிருந்தது.கட்டியிருந்த முளைக்கம்பை சுற்றி சுற்றி கயிறு இறுகி, அசையமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது.மெல்ல தடவி, அதன் பயம் விலக்கி, விடுவித்தான்.மூன்று இடங்களில் வேப்பங்குழையும்,அகத்திக்குழையும் கட்டி தொங்கவிட்டான்.”நறுக் மொறுக்” என்று எல்லாம் தின்ன தொடங்கியிருந்தன. தலையில் ஒட்டியிருந்த நூலாம் படையை துடைத்துவிட்டு வாசல் பக்கம் வந்து தெருவைப் பார்த்தான். பட்டினியோடு கிடந்த நிசப்தம் தெருவை விழுங்கிக்கொண்டிருந்தது.

பண்டாரமும்,முத்துவும் தெருவிளக்கு ஒளியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.இவனுக்குள் அவர்களுடன் சென்று பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்குள், அம்மாவிடம் வாங்கப்போகும் திட்டு எரிச்சலூட்டியது. அதுபோக, குடித்துவிட்டு வந்து வியாக்கியானம் பேசும் தந்தையை நினைத்தால் இன்னும் விரக்தியே மேலோங்கியது. எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு சுகமாக அமர்ந்து பேசமுடிகிறது?

’காலையில் எழுந்ததும் வயலுக்குப் போக வேண்டும். காலைக்கடன் எல்லாம் முடித்து, இரண்டு மணிநேரம் வயல் வேலைகள். எட்டுமணிக்கு வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக கல்லூரிக்கு புறப்பட வேண்டும். எட்டு கிலோமீட்டர் எதிற்காற்றில் சைக்கிள் மிதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சென்றதும் அலிஸ்பாபா மேடம் “பீஸ் கொண்டுவந்துருக்கியால?”என்று கேட்கும் அதட்டலுக்கு பதில் சொல்லவேண்டும். பக்கத்து கிளாஸ் முருகேஸ்வரிக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்கல.(ஒருவேள பாக்க பாக்கப் பிடிக்குமோ என்னவோ). சிடுமூஞ்சி சரவணன் வாத்தியான் வேற பெண்டுலம் கிண்டுலம்னு கிறுக்கு பிடிக்க வைக்கிறான். மாடசாமிக்கும்,பேச்சிக்கும் காவ்யா மேட்டர்ல சண்டை. இதை வேற பஞ்சாயத்து பண்ணணும்.இந்த அக்ரமத்தையெல்லாம் தாண்டி நாலுமணிக்கு வீட்டுக்கு வந்து, பொதிமூட்டயை இறக்கிவிட்டு வயலுக்குப் போகணும். என்னைக்காவது கிரிக்கெட் விளையாடப் போயிட்டா அம்மாவின் ராமாயணம் ஆரம்பமாயிடும். ஏன்னாக்க நான் போயித்தான் ஆட்டை பார்த்துக்கணும். அம்மா வந்து வீட்டுவேலைகள் பார்ப்பாள். ஆட்டுக்கு குழை முறித்து, வீடு வந்துசேர ஏழாயிடும்.அதுக்கு பிறகு வந்து படிக்கலாம்னு உக்காந்தாத்தான் ஆயிரத்தெட்டு பிரச்சினை.”

வெளியே செல்லாமல் வீட்டிற்குள் வந்து படிக்க ஆரம்பித்தான்.ஒருவாறாக மண்டைக்குள் இயற்பியல் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்க சாப்பாடு ரெடியாகியது. குடித்துவிட்டு வந்த அவன் அப்பாவின் சலம்பலும் தொடங்கியது. பசி அதிகரிக்கவே சோறு,பருப்புக்கறி, தயிர் எல்லாத்தையும் ஒன்றாகப் பிசைந்து குழைத்து அடித்தான்.அசதியில் தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டுவர அப்படியே உறங்கிப் போனான்.

Snake_Gourds_Pudalangaai_Vegetables_Shop_Market_Garden_Grow_Plants_Eat

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அப்பாவுடன் எழுந்து வயலுக்குச் சென்றுவிட்டான். அம்மா வீட்டுவேலைகளை முடித்துவிட்டு ஆறுமணிக்கு வந்து சேர்ந்தாள்.கிணற்றடி குண்டிலுள்ள புடலங்காயை முதலில் பறிப்பதென்று தீர்மானித்துக்கொண்டனர். இரண்டு சணல் சாக்குகளை நீரில் நனைய வைத்துவிட்டு, மஞ்சணத்தி குழையை முறித்து நீருக்குள் ஊறபோட்டான்.புடலங்காயின் நிறம் உரியாமல்,முனை உடையாமல் இருக்க இந்த மஞ்சணத்திக் குழையை சாக்கினுள் வைப்பார்கள்.ஒருமணி நேரத்திற்குள் இரண்டு சாக்கும் நிறைந்தன.

“ஏம்பா புடலங்கா ரேட்டு கூடிட்டாம்லா, நேத்து தங்கையா அண்ணாச்சி சொன்னாவ”

“அவன் கடயம் சந்தையில போடுதான்.அவனுக்கு குடுப்பானுவ. நம்ம செட்டியான் கடையில பத்துரூவாதான் எப்பபோனாலும். தாயோளி நாத்து நடமட்டும் அவன்ட்ட துட்டு வாங்காம இருந்திருந்தோம்னா இப்ப நல்ல துட்டுதான் பாத்துக்க. அத அடைக்காம வேற எங்கயும் போடமுடியாதுல்லா.”

“எனக்கு எப்புடியாது நாளைக்கு பீஸ் கட்டணும்பா”

“பாப்பம்ல, இன்னக்கி எவ்ளோ தேறும்னு.”

இரண்டுமூட்டைகளையும் வைத்து கட்ட ஏதுவாக சைக்கிளின் பின்னிருக்கையில் கருவேலங்கம்பு வெட்டி நீட்டித்திருந்தனர்.அடியில் இரண்டு ஈரச்சாக்கு மடித்து இட்டு, ஒன்றின்மேல் ஒன்று வைத்து,கயிறு கட்டும் இடத்தில் மீண்டும் மஞ்சணத்தி குழையை நெருக்கி வைத்து இறுகக் கட்டினர். கிணற்றடிக்கு வந்து மோட்டாரிட்டு குளித்துவிட்டு,பழைய சோறும், தக்காளி பச்சடியும் அமிர்தமாய் இரைப்பைக்குள் இறங்கியது. அப்பா சந்தடி ரோட்டில் பிரிய, கல்லூரிக்கு புறப்பட வீடு நோக்கி சென்றான்.

கல்லூரி விட்டு மாலை வீட்டுக்கு திரும்பியதும் எவ்வளவு ரூபாய் மிச்சமாகியது என்பதறிய ஆவலோடு வயலுக்குச் சென்றான். எப்போதும் சைக்கிள் விடும் கருவேலமர நிழலில் அப்பாவின் சைக்கிள் இல்லாதது அதிர்ச்சியாய் இருந்தாலும், அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணி பம்ப்செட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரப்பில் செழிப்புடன் வளர்ந்திருந்த அருகம்புல்லை காக்காச்சிக்கு அறுக்கவேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான். மேடு ஏறியதும் ஆடுகள் ஆசாரிப்பள்ளத்துக்குள் மேய்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அம்மாவும் அங்குதான் இருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டவனாய் நடக்க எத்தனிக்கும்போது, பம்ப் செட்டில் யாரோ துணி துவைப்பதுபோல் தெரிந்தது.இந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றால் வள்ளியம்மையாகத்தான் இருக்கும்.அருகில் செல்ல செல்ல இடுப்பில் கட்டிய பாவாடையுடன் துவைப்பது வள்ளியம்மைதான் என்பது உறுதியாகியது.அங்கங்கள் அப்பட்டமாய் தெரிய மனதில் பதித்துக்கொண்டான்.

“என்ன அத்த இப்ப குளிப்பு?”

“வெண்டக்கா பறிச்சன் பாத்துக்க அதான் நசநசனு இருந்துது ஒரு முங்கு போட்டுட்டு போலாம்னு வந்தேன்” என்றவாறே பாவாடையை அவிழ்த்து இறுகக் கட்டினாள்.இவனுக்கு நன்றாக வியர்த்துவிட்டது. பலதரப்பட்ட எண்ணங்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததுமனது. காலையில் முறித்துப்போட்ட மஞ்சணத்திக் குழையின் எச்சம் வெயிலில் வதங்கிக் கொண்டிருந்தது.

“எங்க அம்மய பாத்தியளாத்த?”

“ஆட்ட பத்திக்கிட்டு கிழக்கனிக்கி போனாவ. ஆசாரிப்பள்ளத்துக்குள நிப்பாவனு நினக்கென்.”

அவளின் விடைக்கு எதிர்பார்க்காதவனாய் கிழக்குநோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆசாரிப்பள்ளம் சற்று தாழ்வானபகுதி.சுயம்புலிங்க ஆசாரியின் வாரிசுகள் விவசாயத்தில் ஆர்வமற்று,பராமரிக்காமல் விட்டதால் ஆடு,மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாய் மாறியிருந்தது. காக்கேயன் தாத்தாவின் மாடும்,அவர்களின் ஆடும் மேய்ந்துகொண்டிருந்தன. காக்காச்சி வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் தலையை சாய்த்து, கொளிஞ்சி செடியை அரைபாகமாய் கடித்து மேய்ந்துகொண்டிருந்தது.

“அந்த வரப்புல செந்தட்டி செடி நிக்கிடா பாத்துவா” என்று கூறிக்கொண்டே, ’ஒரு மணிக்கு வந்தாரு பாத்துக்க, உரக்கடகாரனுக்கு துட்டு குடுக்கணும்னு போனவருதான் ஒரே போக்கா பேட்டாரு.”

“பரிச்சக்கி துட்டு எதும் தேறிச்சா எப்டிமா?”

’அவருகிட்ட யாருடா பேசமுடியும்? வரும்போதெ ஒருபாட்டிலு போட்டுட்டுதான் வந்தாரு. இனி கருக்கல்ல மூணு ஆளா வந்து நிப்பான் அப்பாயி”உனக்கு நான் வாரவட்டிக்கு வேங்கியாது தாரம்ல நீ பயப்டாத,” என்று கூறும்போதே இருவருக்கும் கண்கள் முட்டிக்கொண்டு நின்றது அழுகை.

“சரிடா, அம்ம ஆட்டபத்திட்டு போறேன்.நீ தெக்கு குண்டுலபோயி கொஞ்சம் அவுத்திக் கொளையும்,ஆமணக்கு கொளையும் நொடிச்சிட்டுவா.ஆமணக்கு கொளைய நல்லா அடிச்சி எடுத்திட்டுவா இல்லனா எருக்க எடுத்துறும் ஆடுவளுக்கு”

“தெரியும்மா நீ களஞ்சியம் ஓடைக்குள்ள பாத்துப்போ. மண்ணு எடுத்து குழியாக்கி போட்ருக்கானுவ” கூறிக்கொண்டே தெற்கு குண்டுபக்கம் நடக்க ஆரம்பித்தான்.

வள்ளியம்மை குளித்துமுடித்து சென்றிருந்தாள்.சோப்பின் வாசம் கிணற்றடி எங்கும் நிறைந்திருந்தது.வாய்க்காலில் தண்ணீர் தேங்கியிருந்தது.அதில் சோப்பு நுரையுடன் அழுக்கு சேர்ந்து,திரள் திரளாய் மிதந்துகொண்டிருந்தது. அவன் மனதும் அன்று அதேநிலையில்.

வீட்டிற்கு வந்து வழக்கமான அட்டவணைக்குள் அடங்கிக்கொண்டான். அன்று சனிக்கிழமை என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது. வழக்கமாக சனிக்கிழமையானால் அடுத்தநாள் பக்கத்து ஊருடன் நடக்கபோகும் மேட்ச் பற்றி விவாதிப்பார்கள். தெருவிற்கு வந்தான்.

பண்டாரம், முத்துவுடன் பட்டாணியும் சேர்ந்து பக்கத்து ஊர்க்காரர்களைக் குறை கூறிக்கொண்டிருந்தனர்.

“எலே கணேசா நீயெல்லாம் மனுசனால்ல?”நாளக்கி மேச்சுக்கு ப்ராட்டிசு பண்ணலாம்னு பாத்தா ஆளயே காங்கல.அப்டி என்னடே விவசாயம் பண்ணுதிய” பட்டாணி பொரிந்து தள்ளினான்.

“உனக்கு என்னப்பா உங்க அய்யா சந்தயில எவன யாமாத்தியாது துட்டு கொண்டுவந்துருதாரு.”

“செரி செரி நாளைக்கு பத்துமணிக்கு மேச்சு. ஒழுங்கா வந்துதொல.பெறவு ஆட்ட பத்துனேன்,புடலங்கா பறிச்சேன்னு தப்பிக்க பாக்காத”

“எல வைக்கதே வைக்கிய மதியத்துக்கு மேல வைக்ககூடாதா? காலைல தண்ணி பாய்க்கணும்டே”

“ஆமா இவரு வந்து சிக்ஸா அடிச்சி தள்ளிறப்போறாரு. ஆளு எண்ணிக்கைக்கி கூப்டா ரெம்பதான் கிலாவுதெ,”பண்டாரம் கணேசனை அடிப்பதுபோல் பேசினான்.

பேச்சு வலுத்துக் கொண்டே சென்றது. அப்பா சைக்கிளில் ஆடி ஆடி வருவது கண்டவுடன் கணேசன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
அவரோ பேசும் மனநிலையிலேயே இல்லை.சட்டையை கழட்டி திரணையில் எறிந்துவிட்டு,முற்றத்திலேயே படுத்துக்கொண்டார்.இவன் மெல்ல சென்று சட்டைபையில் எவ்வளவு காசு இருக்கிறது என்று பார்த்தான்.ஒரு நூறு ரூபாய் தாளுக்குள்,ஒரு ஐம்பது ரூபாயும்,இரண்டு பத்து ரூபாயும் இருந்தன. 3ரூபாய் 50காசுகள் சில்லறையும் இருந்தது.சட்டை முழுவதும் சாராயமும்,வியர்வையும் கலந்த நெடி மனத்தை அமட்டியது. கனத்த மனதுடன்,அடுப்பங்கரையில் இருக்கும் அம்மாவிடம் சென்றான். நைந்து போன இரண்டு புடலங்காயை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

“எம்மா வெறும் நூத்தியெழுவது ரூவாதாம்ப்ள இருக்கு”பீசு கட்ட என்ன பண்ணுவேன். திங்ககிழம துட்டு இல்லனா வரண்டாம்னு சொல்லிட்டா அலிஸ்பாபா. நான் இனிமே அந்த வயலு பக்கமே வரமாட்டேன் போ”என்று சொல்லும் போதெ காய் நறுக்கும் அவளின் கையை நனைத்தது இருவரின் கண்ணீரும். அவள் எதுவும் பேசவில்லை. அவனுக்கோ அழுது துக்கத்தை கரைத்துவிட வேண்டும் என்று தோன்றியது.

அன்று இரவு யாரும் சாப்பிடவில்லை.அம்மா எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் கணேசனால் சாப்பிட முடியவில்லை. அழுதுகொண்டே உறங்கிப்போனான். காலையில் எழும்பியதும் பல்லு கூட தேய்க்கவில்லை. ஆட்டு தொழுவத்துக்குள் பீடிகுடித்தவாறு அமர்ந்திருந்த அப்பாவிடம் சென்றான்.

“எப்புடிப்பா மனசு வருது. பரிச்சக்கி பீஸ் கட்டணும்னு அவ்ளவு சொல்லியும் துட்டபுல்லா குடிச்சி காலிபண்ணிட்டு வந்துட்டியளே..”

“செருப்ப கழட்டி அடிச்சம்னா.எவம்ல புல்லா குடிச்சான்.உரக்கடகாரனுக்கு 500ரூவா குடுக்கலனா உரம் தரமாண்டான்.பெறவு அடுத்த பறிக்கு புடல கொடியதான் அறுக்கணும்”

“குடிச்ச துட்ட கொண்டுவந்துருந்தா கொஞ்சம் கடன் வாங்கியாவது பீஸ் கட்டிருக்கலாம்லா”

“என்னெ என்ன குடிகாரப்பயனு நெனச்சியால? சிவலார் குளத்துக்காரன்ட்ட வாரவட்டி எடுத்துதாரேன்” என்றதும் தொழுவத்தைவிட்டு இறங்கி காலைக்கடன் முடிக்க குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வீட்டிற்கு வந்ததும், “வா தண்ணி பாய்க்க போலாம்”என்பதற்கு பதிலளிக்காமலே சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மனதிற்குள் இதை சாக்காய் வைத்து இன்று கிரிக்கெட் விளையாடச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்திக்கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம்,”ச்ச போய் தண்ணி பாய்ப்போம்.இல்லனா திங்ககிழம ஒருமூடகூடதேறாது,”என்று எண்ணிக்கொண்டே வயலுக்குச் சென்றான்.புடலைக்கொடி வாடிப்போய் கிடந்தது. அதைப் பார்த்ததும் தண்ணீர் பாய்க்கவேண்டும் என்று மோட்டாரை இயக்கினான்.பத்து நிமிடமாய் மோட்டர் மட்டும் ஒடிக்கொண்டிருந்தது.தண்ணீர் வரவில்லை.பதறிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்தான்.தரையும் நீரும் தெளிவாய் தெரிந்தன.ஏர் லாக் ஆகியிருக்க வேண்டும்.இன்னும் ஒருமணி நேரம் தண்ணீர் இறைத்து ஊற்றினால் மட்டுமே மோட்டார் ஓடும். கடுப்புடன் வாளியை எடுத்து நீர் இறைக்க ஆரம்பித்தான்.அதற்குள் அவன் அப்பாவும் வந்து சேர்ந்தார்.இருவரும் சேர்ந்து இறைக்க அரைமணி நேரத்திற்குள் மோட்டார் நீரை தள்ளியது.

தண்ணீர் பாய்த்துவிட்டு கிணற்றருகிலுள்ள வேப்பமர நிழலில் படுத்துவிட்டான்.மனதிற்குள் கற்பனைக்குதிரை தாறுமாறாய் ஒடியது.இந்த புடலங்காய் போட்ட இடத்துல கத்திரிக்காய் போட்டிருந்தா இந்நேரம் லட்சாதிபதியாயிருக்கலாம். கிலோ 28ரூபாயாம்.எப்படியும் மூணு குண்டும் சேர்த்து ஒருநாள் விட்டு ஒருநாள் 200கிலோ காய்க்கும்.ஆனா அதுக்கு இன்னும் பராமரிப்பு அதிகம்.தினமும் புழுவுக்கு மருந்தடிக்கணும்,வாரத்துக்கு ரெண்டுவாட்டி உரம் போடணும், களைவெட்டணும். ஆனா புடலைக்கு கொஞ்சம் ஆட்டாம்புழுக்கையும்,தண்ணியும் போதும். தக்காளியோ,கடலையோ போட்டிருந்தாலும் நல்ல காசு கிடைச்சிருக்கும். இந்த புடலங்காய அப்பிடி யாருதான் சாப்பிடுறானு தெரியல.ஆமால்ல எல்லாத்தயும் கேரளாவுக்குதான கொண்டுபோறாங்க.

“எலே எந்திச்சி சாப்புடுல” அம்மாவின் குரல்கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

கிரிக்கெட் விளையாட ஒரு கூட்டமே சென்று கொண்டிருந்தது.அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டு அவர்களோடு சென்று இணைந்து கொண்டான்.

விளையாட்டு முடிந்து வந்ததும் வார வட்டிக்காரனுக்காக அம்மாவுடன் காத்திருந்தான்.அப்பா ஆடு மேய்த்துகொண்டிருந்தார்.
ஒரு வழியாக பத்து பைஸா வட்டிக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டார்கள்.

கடனை அடைப்பதற்கான ஒரே மூலதனமாய் அவன் புடலங்காயை உணர்ந்தான்.இன்னும் நான்குமுறை பறிக்கும்வரை விலை அப்படியே இருந்தால் சமாளித்து விடலாம்.

அன்று பள்ளிக்கு சென்று பணம் கட்டிவிட்டு வழக்கம்போல வயலுக்கு சென்றான்.சைக்கிளை நிறுத்தும்போதே தூரத்தில் கூட்டமாய் இருப்பது தெரிந்தது.என்னவென்று பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக ஓடினான்.

இரண்டு குண்டுகளிலும் உள்ள புடலைக்கொடி முழுவதும் மாடு மேய்ந்து நாசமாக்கியிருந்தது.

அவன் அம்மா ஒரு வரப்பில் இருந்து அழ, அப்பாவோ மாட்டுக்காரனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.ஆசாரிப்பள்ளத்திற்குள் மாட்டை விட்டு விட்டு உறங்கிப் போய்விட்டானாம். இமைகள் நச நசக்க அம்மாவின் அருகில் மெல்ல சென்று அமர்ந்தான். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

தூரத்தில் பிஞ்சுப் புடலங்காய்கள் மாட்டு கால்மிதிபட்டு வெடித்து வாய் பிளந்து கிடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.