காமத்தில் திளைத்த இரவு

kiss

முதல் வாளி நீர் அதிசயக்கனியின் உடல் சூட்டைத் தின்று அருகிலிருந்த கொய்யாமர சல்லி வேர்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தது.ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது போலிருந்த  அடிபம்பை அடுத்தாற்போல் நின்ற கொய்யா மரத்தின் பருத்த கிளையில் துவைத்த துணிகள்  நீர் சொட்டிக்கொண்டிருந்தன.இரண்டாவது வாளிக்கு நீர் அடித்துக் கொண்டிருக்கையில் வட்டக் கொண்டையில் மல்லிகைப்பூ சுற்றி இடக்கையை உயர்த்தி கொய்யா மரத்தின் தாழ்ந்த கிளையிலுள்ள இலையைப் பறிப்பதுபோல் நின்றுகொண்டிருந்தாள் சித்ரா.கிளிக்கூட்டம் கொய்யா மரத்திலமர்ந்து எழுப்பிய சத்தத்தை முறியடிப்பதுபோல் இரைந்துகொண்டிருந்தது அடிபம்பு.வெறும் நனைந்த துண்டுடன் நின்ற அதிசயக்கனியின் நமட்டுச் சிரிப்பிற்கும் சித்ராவின் வியர்வை படர்ந்த இடப்புற மார்புக்குமிடையில் நின்றுகொண்டு களியாட்டம் போட்டது அன்றைய இரவுக்கான காமம்.

“நேத்தவிட மினுக்கம் கூடிப்போச்ச.பூசத்தொற இன்னைக்கும் வரமிண்டாம்லா”துண்டின் அசௌகர்யத்தை சரிசெய்துகொண்டே கூறினான்.

“நாளக்கித்தான் வரும் சனியன்”என்றவள் முகத்தை சுளித்துக்கொண்டு “இப்பம் இப்பிடிதான் தெரியும்.பெறவு எல்லாம் முடிஞ்சி கெளம்பும்போது மட்டும் நாத்தம் எடுக்கும் ஒனக்கு”என்றாள்.பின் தோதுவாக கொய்யா மரத்தில் சாய்ந்துகொண்டாள். அவளது வலக்கை துவைத்த துணிகளின் மேல் இருந்தது.ஒரு அணிலை விரட்டியவாறு சரசரவென கொய்யா மரத்தின் உச்சிக்கு சென்றது மற்றொரு அணில்.

“நேத்து சவம் அந்த நாத்தம் எடுத்துது.ஒழுங்கா தேச்சி குளின்னு சொன்னா கோவ மயிறு வந்துறும”சேலை மடிப்பிற்கு மேலே வெடிப்பது போலிருந்த ரவிக்கையை நோக்கிக்கொண்டிருந்தான்.அவளின் முறுவிய இதழ் சுருக்கங்களை தரிசிக்கையில் மூச்சு முட்டிக்கொண்டு வந்தது.

“அதெல்லாம் தேச்சி குளிச்சாச்சு.நீ ஒளுங்கா வந்துதொல.நேத்தமாதி எங்க மாமியா முளிச்சிருக்கும்போது வந்துறாத”

“எல என்ன இதே தொழிலாத்தான் அலையிதியோ”கூறிக்கொண்டே சைக்கிளில் கட்டியிருந்த வெற்றுப் பால்கேனின்  சத்தத்தோடு கடந்தான் ராமர்.தூரத்தில் இரண்டு நாய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

“செரி கெளம்பு நான் பதினோரு மணி பால்காரன் போன பெறவு வாரேன்.இனும நின்னா எவனாது ஒம் புருசன்ட்ட போட்டு குடுத்துறுவான்”

இடுப்பிலிருந்த துண்டை நோக்கியவாறு சிரித்துக்கொண்டே கிளம்பினாள்.

“ரெண்டு கிராம்ப எடுத்து வாய்க்கிள போட்டுக்க”குரல் கேட்டு திரும்பிப் பார்த்து சரியென்பதுபோல் தலையாட்டிக் கடந்தாள்.

அதற்குள் குளிப்பதற்காக ஒரு வாளி நிறைய அழுக்குத்துணியுடன் வந்தாள் மாரியம்மாள்.

“என்ன மைனி இப்பம் அள்ளிட்டு வந்துருக்கிய இவ்வளத்தையும் ”தலையை துவட்டிக்கொண்டே துணிகளை அள்ளி துவைக்கும் கல்லில் போட்டுக்கொண்டிருந்தவளிடம் வினவினான்.

“என்னய்யா செய்ய.நாலு நாளா எளவு எள்ளுக்கா புடுங்க போனேன். அதுக்குள்ள இவ்ளொ துணிய உறிஞ்சிபோட்றுக்குவ வீட்டுல கெடக்க சனியனுவ” என்றவள் பழைய கைலி ஒன்றை இடைக்கு கட்டியவாறு சேலையைக் களைந்துகொண்டிருந்தாள்.கழுத்து மடிப்பிலும்,இடுப்பு மடிப்பிலும் அழுக்கு திரண்டிருந்தது.வெயில் படாத பாகங்களின் கன்னிய நிறம் ஒரு கண நேரம் தோன்றி மறைய,மீண்டும் அதைப் போன்றதொரு தரிசனத்துக்காக ஏங்கி நின்றான்.

“அது என்ன சவம் ஒடம்பெல்லாம் நசநசன்னு இருக்கு”அவளுக்குள்ளே கூறிக்கொண்டாள்.

“நாலு பிள்ள பெத்தாலும் இன்னும் புதுப்பொண்ணு மாதிதான் இருக்கா.ஒரு நாளு மெதுவா பேசிப் பாப்போம்”மனதுக்குள் எண்ணிக்கொண்டே தலை துவட்டிக்கொண்டிருந்தான். முழுவதும் கைலிக்கு மாறியிருந்தாள்.பின்புறத் தொடையை அவனுக்குக் காட்டிய கைலியின் கிளிசலை அவள் அறிந்திருக்கவில்லை”செரி மைனி வாரேன்”என்றவன் அணில் கடித்து விழுந்து கிடந்த ஒரு சிவந்த கொய்யாப்பழத்தை ஒரே வாயில் வைத்துக்கொண்டு,துவைத்த துணிகளை அள்ளிக்கொண்டு கிளம்பினான்.

“எங்குன கெடந்து உருளுவானோ அப்பாயி.ச்சை என்னணி இருக்குபாரு சாரம்”அவனைக் கவனிக்காமல் கைலியிலிருந்த அழுக்கைப்பற்றி தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருந்தாள்.புண்டரீகத்தின் தலை இதழில் தேங்கிய நீர்த்துளிகளாய் மார்பில் பூத்துக்கிடந்தன சில நீர்த்துளிகள்.

வெளித்திண்ணையில் வாளியை வைத்துவிட்டு துவைத்த கைலியையும் உள்ளாடையையும் தொழுவத்தில் காயப்போட்டான் அதிசயக்கனி.

”எந்த நேரம்ல குளிக்கப்போன.அங்க என்ன தூக்கிபோட்டு மூடுனாவளாங்கும்”அடுப்பாங்கரையில் இருந்து சத்தம் வந்தது.”தாயோளி அஞ்சாறு கொளை மொறிச்சிட்டு வந்துருக்கலாம் இந்த குட்டியளுக்கு.அந்த ஆளுதான் வயசான காலத்துல வேலில ஏறி கொள மொறிச்சிக்கிட்டு அலையிதாரு.எவா வாய பாத்துட்டு நின்னானோ”

“எளா இப்பம் பேச்ச நிப்பாட்டுதியா இல்ல அடுப்புக்கிள வச்சி மிதிக்கவா”

“அந்த மனுசன் கூட என்னிய கை நீட்டுனதில்ல.என்னணி பேசுது பாரு.ஆறு வருசம் தவொம் இருந்து இந்த சனியனயா பெக்கணும்”கூறிக்கொண்டே வெளியே வந்தாள்.தலை முழுவதும் வியர்வையில் நனைந்து அப்பிக்கிடந்தது சாம்பல்.

கூடத்தில் காய்ந்து கிடந்த கைலியை எடுத்து கட்டிக்கொண்டான்.ஆட்டுக்குட்டிகள் கைலியை நுகர்ந்துவிட்டு நகர்ந்தன.முதல் அறையின் கதவையொட்டி சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் மீசையை சரிசெய்தான்.மனதிற்குள் நேற்றைய இரவு அனுபவித்த சித்ராவின் சேலை வாசமும்,வியர்வை வாசமும் குறுகுறுத்தது.அடுத்த நொடியே சேலை களைந்துகொண்டிருந்த மாரியம்மாளையும் நினைக்கத் தோன்றியது.

உள் அறைக்குள் சென்று தகரப்பெட்டிக்குள் மடித்து வைத்திருந்த பச்சைக்கலர் கட்டம் போட்ட சட்டையை அணிந்துகொண்டான்.பாச்சா உருண்டை வாசம் வீடெங்கும் வியாபித்திருந்தது.வீட்டை விட்டு வெளியே வந்து கிழக்கு மேற்காக நீண்டு கிடந்த தெருவை ஒட்டினாற்போலுள்ள திண்டில் அமர்ந்துகொண்டான்.”திண்டு லைட்ட போடுளா”அம்மாவை ஏவினான்.ஆங்காங்கே வீட்டு வாசலில் தலைகள் தென்பட்டன.எதிர் வீட்டில் ஏதோ வாய் தகராறு முற்றியிருந்தது.

“நீ வெட்டி மொறிக்க வேலக்கி ஒனக்கு கையாளு வேற வேணுமோ”குரல் மட்டும் வந்தது விளக்கின் மினுக்கத்துடன்.

“இந்த லச்சணத்துல அந்த பொசகெட்ட மனுசன் பொண்ணு வேற பாத்துட்டு அலையிதாரு.ஒளச்சி ஒரு பைசா உண்டாக்க துப்புல்ல அந்த மனுசன் நாயி மாதி அலஞ்சி யாவாரம் பாத்து கொண்டார துட்டல்லாம் மினுக்கிட்டு அலயிதமன்னு கொஞ்சமாது ஓர்ம இருக்கா”குரல் தொடர்ந்தது.

“இப்ப பொலம்பாம இல்லனா சத்தியமா அடுப்புக்கிள வச்சி மிதிச்சிப்புடுவேன் பாத்துக்க”அடுப்படிக்குள் விரைந்து சென்று கால் உயர்த்தி நின்றான்.கரிப்பிடித்த கூரையிலிருந்து அவன் கைபட்டு கருந்துகள்கள் அவள்மேல் விழுந்தன.வியர்வையும்,புகையும் படிந்த முகத்தோடு ஏறிட்டவள் எதுவும் பேசாமல் தீயை அடுப்பிற்குள் கூட்டி வைத்தாள்.கண்ணீர் கன்னத்தில் வடிவமற்று இறங்கி மறைந்தது.

மீண்டும் வெளியில் வந்து அமர்ந்துகொண்டான்.குளித்து முடித்து இடையில் சாரக்கட்டுடன் தோளில் பாதி துணி,ஒரு கையில் மீதி துணியோடு வாளி நிறைய நீரை தலையில் சுமந்து நடக்க முடியாமல் வந்தாள் மாரியம்மாள்.அவன் கண்கள் வாளியைப் பற்றியிருந்த கையின் அரக்கு வளையலிருந்து கீழே நகர்ந்துகொண்டிருந்தன.கருந்திட்டுகளில் பூனைமுடி.அருகிலே அப்பட்டமாய் தெரிந்தன ரவிக்கையின் மறைந்த பிரதேசங்கள்.சிரித்து மட்டும் வைத்தான்.பதில் சிரிப்பில் ஏக்கம்,நெகிழ்ச்சி,சோகம் எல்லாம் கலந்திருந்தது.கடந்து விட்டாள்.உடல் சுற்றியிருந்த ஈரச்சாரம் தோலாகி கசைந்துருகிக்கொண்டிருந்தது.பின்புற சதைத்திரள்ச்சி மூர்க்கத்தனமாய் மனதிற்குள் விசத்தைப் பரப்பியது.எழும்பி நடந்து பார்த்தான்.இருட்டில் மறைந்துவிட்டாள் தெருவின் கடைசி வீட்டிற்குள்.

அவனது வீட்டை ஒட்டினாற்போல் வடிவமற்றுக் கிடந்த சித்ரா வீட்டிற்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் டார்ச் வெளிச்சம் யாரோ அங்கிருந்து வருவதைக் காட்டியது.சித்ராவின் மாமியார் முத்தம்மாள் நிமிர முடியாத கூன் முதுகுடன் கடைக்கு ஏதோ பொருள் வாங்க சென்றுகொண்டிருந்தாள்.வாசலில் சைக்கிளில் கட்டிய வேப்பங்குளையுடன் வந்திறங்கினார் அதிசயக்கனியின் அப்பா.

”எளவு எல்லா மரத்தயும் மொட்டயடிச்சித்தான வச்சிருக்கானுவ பாயிப்பயலுவ”குளைக்கட்டை எடுத்து வாசல் கடந்து தொழுவத்திற்குள் எறிந்தார்.ஆட்டுக்குட்டிகள் ஓடி வந்து மொறுக் மொறுக் என்று நான்கு கடி கடித்துவிட்டு சுவாரஸ்யமற்று திரும்பிச் சென்றுவிட்டன.”புஸ்பம் குடிக்க கொஞ்சம் அன்னப்பால் தாயென்”

கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர் தடத்தோடு அன்னப்பாலைக் கொடுத்துவிட்டு கல்தொட்டியில் கிடந்த குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினாள்.நல்ல காற்று வந்தது.”என்ன கண்ண கசக்கிட்டு நிக்க மாதி தெரியுது”அரைச்செம்பை காலியாக்கிவிட்டு கேட்டார்.

“ஒண்ணும் இல்லய்யா.எளவு அடுப்பாங்கரைக்கிள மண்டிக்கிட்டு வந்துது அதான்”

“அந்த டீவிய போட்டுவுடு.செய்தி சொல்லுவான்.கேப்பம்”.செம்பை காலியாக்கியவர்”எல முப்புலியூர்ல ராசா அண்ணச்சி வீட்டுல பருத்தி வாங்கி போட்டுருக்கென்.காலைல போயி கெட்டிட்டு வந்துருவோம் என்ன”வீட்டிற்குள் சென்றவனிடம் கூறினார்.புஸ்பம் முகத்தைச் சுண்டி இழுத்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.பதிலேதும் பேசாமல் பின்பக்க வாசலுடைய அவனது அறைக்குள் சென்று பாய் சுருட்டி வைத்திருந்த பரணுக்கடியிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்து கால்மேல் கால் போட்டமர்ந்து படிக்க ஆரம்பித்தான்.சித்ரா வெற்றுடலுடன் பாயில் புரள்வதுபோல் கண்முன்னே வந்தது.

“எல கிருமமா நடந்துக்க.பெறவு மேல கை வைக்க வேண்டிய வந்துராம பாத்துக்க.சொல்லுத வேலய செய்யி.இல்லனா அந்த எளவு என்னதோ படிச்சல்லா அதயாது படிச்சி முடி.மெடிக்கல்ல கொண்டுவுடுதென்” செய்தி வாசிப்பவரின் குரலோடு சேர்ந்து வந்தது.

புத்தகத்தை மூடி கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு சோம்பல் முறித்தான்.தனக்கும் அவர் பேசியதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு பார்வையை வீசிவிட்டு தெருவிலிறங்கி வடக்கு குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மனம் முழுவதும் ஒருவித பயமும்,விரக்தியும்,கோபமும் காமத்தை விழுங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.இதயத் துடிப்பின் வேகம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வேகமெடுத்திருந்தது.இடுப்பில் ஒரு குடத்தோடும்,தலையில் ஒரு குடத்தோடும் தெருவிளக்கு மங்கிய வெளிச்சத்தில் தோன்றி மறைந்தாள் தெற்குத்தெரு விஜயா.விளக்கு வெளிச்சத்தில் அவள் கடந்த அந்த நிமிடங்கள் அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது இருட்டிற்குள் பீடியைப் பற்றவைக்கையில்.

முதுகில் சப்பென்று விழுந்த ஒரு அறையில் பதறி திரும்புகையில்,சுதாகர் சிரித்த முகத்தோடு நின்றிருந்தான்.

“மயிராண்டிப்பயல சத்தம் குடுக்க வேண்டியதானல.சட்டையிலலாம் கங்கு உழுந்துட்டு.எங்க அம்ம வேற தொவைக்கும் போது இனும நொய்யி நொய்யிம்பா”சட்டையில் விழுந்த நெருப்பை துடைத்துக்கொண்டே கூறினான்.இரண்டு இடங்களில் சட்டையைத் துளைத்து அடங்கி சாம்பலாகி உடலில் படிந்தது நெருப்பு.

“இல்லனா மட்டும் உம் வண்டவாளம் தெரியாம கெடக்காவளாங்கும். படுக்காளிப்பயல.இன்னைக்கு என்ன மாப்பிள மாதி எங்கயோ கெளம்பினிக்கியெ”

“குளிச்சிட்டு சட்ட போடயும் உடமிண்டியளால்ல.நீ யென்ன காலேஜிக்கி போனியா இல்லனா எப்பவும்போல புளியமரத்து டீக்கட தானா?”

“யப்பா.. ஒன்னியமாதி பொழுதண்ணைக்குமாடே அலையிதோம்.என்னைக்கோ ஒரு நாளு அங்க போறதெல்லாம் கத கெட்டி அடிச்சி வுடுதியல”

“எல உண்மையச் சொல்லு.மேல ஊரு பண்டாரம் தங்கச்சிய பாக்கியாம்லா ராமு சொன்னான்.”

“ஒன்ட்டபோயி சொல்லிட்டானா.எளவு ஒரு நாளு லேசா சிரிச்சாளேன்னு அவன்ட்ட சொன்னேன்.என் ஆளுன்னே சொல்லிட்டானா.இனும அந்த பிள்ளெட்ட பேசுனாதான அடங்குவ நீ”

“பேசி என்னத்தடே சாதிக்கப்போறொம்.நீ சீரியசா இருந்தா சொல்லிருப்பா வெலவிக்கிடுதென்”

“கருமம் பிடிச்சவன.இங்க பாக்கது போதாதாங்கும்.அந்த பிள்ள நல்ல பிள்ள உட்டுறு.நான் சீரியசாவே பாக்கேம்னு வச்சிக்கிடென்”

“அப்பிடி வாயென் வழிக்கி”

பேசிக்கொண்டே இருட்டிற்குள் கருந்திட்டாய் கிடந்த பாறையில் அமர்ந்தனர்.நேரம் கடக்க ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.என்ன பேசினாலும் பேச்சினூடே அதிசயக்கனிக்கு -சித்ரா வந்து சிரிப்பாள்-தலையை முடிவாள்-முந்தானையை சரிசெய்வதுபோல் விலக்குவாள்-சோம்பல் முறிப்பாள்-சேலை களைவாள் -என்று ஏதேதோ தோன்றியது.

”சரில நான் வீட்டுக்கு கெளம்புதென்.நாளக்கி பாப்போம்”

“நான் ஒத்தையில இங்கருந்து மயிறவா புடுங்கபோறேன்.நானும் வாறேன்”

வீட்டை அடைகையில் ஏதோ டிவி சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.அப்பா சேரிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அம்மா தரையிலமர்ந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.நேர்த்தியான சேலைக்கட்டுடன் ஏதோ உருகி பேசிக்கொண்டிருந்த பெண்ணை வெறித்து நோக்கிக்கொண்டிருக்கும்போதே அவள் அழத் தொடங்கியிருந்தாள்.வீட்டிற்குள் சென்று அமர்ந்துகொண்டான்.

சித்ரா வீட்டிற்கு செல்வது முதல் முடிந்து திரும்புவது வரையிலான பொழுதுகளை மீண்டும் மீண்டும் கற்பனை செய்துகொண்டிருந்தான்.நேற்றைப்போல் சீக்கிரமே திரும்பாமல் நீண்ட நேரத்திற்கு செய்யவேண்டும் என்ற கற்பனை இதயத்துடிப்பை இன்னும் தாறுமாறாக்கியது.விளக்கை அணைத்துவிட்டு சாரத்தை உயர்த்திக்கட்டி படுத்தவனை “எல தின்னுட்டு படு”என்ற தந்தையின் குரல் எரிச்சலைக் கிளப்பியது.சற்று நேரம் அப்படியேக் கிடந்தவன் எழும்பி அடுப்பாங்கரைக்குள் சென்று கொஞ்சம் சோறும் குழம்போடு வந்தான்.பிசைந்து முதல் வாய் வைத்ததுமே உணவுக் குழலெங்கும் பற்றி எரிந்து ஏதோ பாரமாய் அழுத்தியது.மேற்கொண்டு சாப்பிட முடியாமல் உடலெங்கும் மின்சாரமாய் பாய்ந்தது பயம்.”எளவு எப்பம் எல்லா சனியனுவளும் தூங்கும்”என்று எண்ணிக்கொண்டே மீந்த சாப்பாட்டைக் கொண்டு கழனித்தண்ணிப் பானையில் தட்டினான்.

“நல்லா கொழுத்துப்போயி அலையிது.இதுலாம் தொண்டைக்கிள இறங்குமோ”என்ற அம்மாவிடம் எதுவும் பேசாமல் வெளியில் வந்தமர்ந்தான்.வாயில் அள்ளிவைத்த சோத்தை விழுங்காமல் அவனுடைய அப்பா அவன் போவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் வெளியில் இருந்துவிட்டு பின் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு அறைக்குள் வந்து படுத்துக்கொண்டான்.மீண்டும் அதே கனவு தொடர்ந்தது.இம்முறை கதவை அவளே திறப்பதுபோல் கற்பனை செய்தான்.அது இன்னும் கிளுகிளுப்பாயிருந்தது.நேரம் கடக்க பால்கேன் சத்தம் தூரத்தில் கேட்டது.சத்தம் பெரிதாகி அடங்கியதும் எழும்பிக்கொண்டான்.முன்பக்க அறையில் குறட்டைச் சத்தம் மெல்லிய லயத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.சத்தமில்லாமல் பின்வாசல் வழி சித்ரா வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

சித்ரா வீட்டிற்குள் செல்வதற்கான ஒரே கதவு திறந்தே கிடந்தது என்பதை உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த மெளுகுவர்த்தி தூரத்தில் வரும்போதே காட்டியது.வாசலுக்கு தெற்கு பக்கமுள்ள தொழுவத்தில் முத்தம்மா கருந்திட்டாய் கிடந்தாள்.வாசலருகிலிருந்த வாதமடக்கி மரம் கடக்கையில் பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது தெருவில் சென்ற நாய்.பதறியவன் வீட்டிற்குள் செல்வதா திரும்பி ஓடுவதா என்று முடிவெடுக்கும்முன் “யாரது.யாருய்யா அது”என்று தொழுவத்தினுள்ளிருந்து சத்தம் வந்தது.

“இந்த எளவு நாயி எங்கருந்து வந்துது”என்று வெறுப்போடு கல்லெடுத்து ஓங்கி எறிந்துவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.வீட்டை அடைகையில் வீட்டினுள் வெளிச்சம் தெரியவே இப்போது இதயத்துடிப்பு இன்னும் எகிறியது.என்ன செய்வதென்று அறியாமல் வழிந்த வியர்வையோடு வீட்டிற்குள் நுழைந்தான்.”எங்கல போன இந்த இருட்டுக்கிள”என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு “ஒண்ணுமில்லப்பா வயத்த கலக்கிட்டு அதான் கொளத்துக்கு பேட்டு வாறென்”

“அதுக்கு வடக்கனிக்கிலால போணும் நீ கெழக்க கெடந்து வாற”

“…..”

“கிருமமா நடந்துக்க.கல்யாணம் முடிக்க வரைக்கும்.இல்லனா எங்கயாது தண்ணில்லாத காட்டுல கொண்டு தள்ளிப்புடுவேன் பாத்துக்க”

விளக்கணைந்தது.

கோபம்,ஏமாற்றம்,பயம்,குற்றவுணர்ச்சி,ஏக்கம் எல்லாம் சேர்ந்துகொண்டு அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.உருண்டு புரண்டு பார்த்தான்.முடியவில்லை.எப்படியாவது சித்ராவைப் பார்த்தேயாகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான்.நாய் குரைத்துக்கொண்டேயிருந்தது.மேலும் நான்கைந்து நாய்களும் எங்கிருந்தோ குரைத்துக்கொண்டே இருந்தன.

உடலெங்கும் தடித்ததுபோல் தோன்றியது.ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பதட்டம் தணியாமல் அப்படியே நெளிந்துகொண்டிருந்தான்.நாயின் ஓலம் படிப்படியாய் அடங்கியது.மனதிற்குள் வேட்டைநாய் வெறிகொண்டு ஓலமிட்டது.

பொறுக்க முடியாமல் எழும்பினான்.இம்முறை வீட்டினுள் குறட்டை சத்தம் பலமாகக் கேட்டது.சாத்தி வைத்திருந்த கதவை சத்தம் வராமல் விலக்கினான்.அது மெல்லிய சத்தத்தை எழுப்பியது.சத்தம் அடங்கும் வரை வாசலிலே நின்றுவிட்டு மீண்டும் அதே வழியில் நடக்க ஆரம்பித்தான்.தூரத்து வெளிச்சத்தில் நாய் நிற்கிறதா என்று அருகிலிருந்த செடி மறைவில் அமர்ந்து நோக்கினான்.நாய்கள் குரைத்துக்கொண்டே மேற்குத்தெரு நோக்கி ஓடியது நினைவுக்கு வந்தது.மெல்ல எழும்பி சித்ரா வீட்டிற்கான திருப்பத்தில் திரும்புகையில் சித்ரா வீட்டுத் தொழுவத்தில் விளக்கெரிந்தது.சைக்கிளை அப்போதுதான் நிறுத்திவிட்டு முத்தம்மையிடம் “செட்ட இப்பதான் அமத்தி போட்டுட்டு வாறேன்.நாளக்கிதான் வரணும்னு பாத்தென்.பெறவு வெறயலு தாங்க முடியாம வந்துட்டேன்”என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றான் பூசத்துரை.

கோபத்தின் உச்சத்தில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.கத்தவேண்டும் போல் இருந்தது.திரும்பி நடந்து வந்து வீட்டயடைகையில் குறட்டை சத்தத்தில் எந்த மாற்றமுமில்லை.

கதவைப்பூட்டி படுத்துக்கொண்டான்.சற்று முன்பு கற்பனை செய்ததெல்லாம் பூசத்துரை செய்துகொண்டிருப்பதுபோல் கண்முன் தோன்றியது.எவ்வளவு சிரமப்பட்டும் மாற்ற முடியவில்லை.இதற்கிடையில் மாரியம்மாள் இடுப்பில் கட்டியிருந்த ஈரக் கைலியைக் கழற்றிவிட்டு சேலை உடுத்துவதுபோல் தோன்றியது.பின் சேலையைக் களைவதுபோல் தோன்றியது.முந்தைய இரவின் வாசம் மாரியம்மாள் மேல் கவிந்து,மெல்ல வாய்பிளந்து விழுங்க கைலி முற்றிலும் நனைந்து போயிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.