ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கே தெளிவில்லாத தன் துவக்க நிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொண தொணக்கலாம், அல்லது தன் முன் நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது.
ஆசிரியர்: ஜாஷுவா ராத்மான்
தீர யோசித்தல்
இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.