தீர யோசித்தல் – இறுதிப் பாகம்

This entry is part 3 of 3 in the series தீர யோசித்தல்

ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கே தெளிவில்லாத தன் துவக்க நிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொண தொணக்கலாம், அல்லது தன் முன் நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது.