புலரியின் பேரழகும் போர்க்களமும்

நூல் வாசிப்பு அனுபவம் :
Sadness Of Geography – My Life as a Tamil Exile – by Logathasan Tharmathurai

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்காக நான் பணிபுரிந்த நிறுவனம் ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருந்தது; பலவகை விமான நிலைய முறைமைகள் பற்றிய விளக்கங்கள், அதில் எந்த ஆவணங்களை எங்கே காட்டவேண்டும், அங்கே போய் சேர்ந்தவுடன் எப்படி டாக்ஸி அழைக்க வேண்டும், எப்படி அடுக்கடுக்காக குளிராடை அணியவேண்டும், மனிதர்களிடம் ஒன்றரையடி விலகி நின்று பேச வேண்டும் என்றெல்லாம் துவங்கி சிறு விவரம் விடாமல் அட்டவணை போட்டிருந்தார்கள்.

அதற்கும் மேல் நிறுவனத்திலிருந்து ஏற்கனவே அந்தப் பயணத்தைச் செய்தவர்கள் இதற்கான இணையக் கையேட்டுப் பக்கத்தையும் பராமரித்து வந்தார்கள். சென்னையில் ஏறும்போதே, நீங்கள் இறங்கி ஏறப்போகும் எல்லா விமானங்களுக்கும் நுழைவுச் சீட்டுகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்; தொலைபேசி அழைப்பு அட்டைகளைப் பைசா மிச்சமில்லாமல் சரியாக உபயோகிப்பது எப்படி? அங்கே எந்த உணவகங்களில் சைவ உணவு கிடைக்கும் (இது மிக முக்கியம்) என்று துவங்கி எல்லா விஷயங்களும் அதில் இருந்தன.

இத்தனை விவரங்கள் தெரிந்திருந்தும், பிறர் பயணிக்கும் தேதிக்குக் காத்திருந்து குழுவாகவே பெரும்பாலும் பயணிப்பார்கள்; ஒன்றாகவே தங்குவார்கள். அந்தப் பயணம் என்பது ஏதோ சாதனை மாதிரி; அங்கே போய்ச் சேர்ந்ததும் வீட்டுக்கு அழைத்துப் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததைச் சொல்வார்கள்.

அப்படியல்லாமல் தனியாகவே போவது, தனியாகத் தங்குவது, போய் ஒரு வாரம் கழிந்து வீட்டுக்கு அழைத்து “இப்படி வெளியே வந்திருக்கிறேன்” என்று தகவலை மட்டும் சொல்வது எனக் கும்பல் சேராமல் இதைச் செய்ய முடிந்ததில் எனக்கு என்னைப்பற்றிய “கெத்து” இருந்தது.

முதல்முறை ஜெர்மனி சென்று சேர்ந்து சில வாரங்களுக்குப்பின், ஒரு ஞாயிறு மதியம் வித்தியாசமான மனிதரை எதிர்கொள்ள நேர்ந்தது. நானும் ஒரு நண்பரும் பொருள்கள் வாங்கச் சென்ற பேரங்காடி முன், கொத்திறைச்சி விற்றுக்கொண்டிருந்த வண்டியில் உதவியாளராக இருந்தார் அவர்.

உணவையும் பியரையும் என் கையில் தந்துவிட்டு, காசு வாங்கும்முன், “இஞ்சயே இருந்து சாப்பிட்டா இரண்டு யூரோ கூடக் குடுக்கோணும். ஏன் இவையளுக்குச் சும்மா குடுக்கிறியள்? அங்கால கொண்டுபோய்ச் சாப்பிடுங்கோ” என்றார். பரவாயில்லை என்று அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்து, நான் அவருடைய ஊர்க்காரர் அல்ல என அறிந்து விசாரிக்கத் துவங்கினார். நானும் திருப்பி விசாரித்தேன். அறிமுகம் செய்துகொண்டோம்.

அவர் ஈழ அகதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊரிலிருந்து கிளம்பியிருக்கிறார்; நீண்ட பயணம் செய்து அங்கே Stuttgart நகரில் வந்து சேர்ந்திருந்தார். இதுவொரு வழித்தங்கல் மட்டுமே; அடுத்த நகர்வு எங்கே என்று தெரியாது. திட்டங்கள் இருந்தன, ஆனால் எதுவும் நிச்சயமில்லை.

அவர் பயணப்பட்டு வந்த விதத்தை விவரிக்க விவரிக்க, ஒரு நிழல் நிகருலகம் என் கண்முன்னே விரிந்தது. ஒரே புகைப்படத்துடன் பல பெயர்களில் பல கடவுச்சீட்டுகள் வைத்திருந்தார். முதல் கடவுச்சீட்டு விமானப் பயணங்களுக்கானது; குடிவரவு சோதனை அதிகாரிகள் வைத்திருக்கும் ஒளிவருடியில் தேய்த்தால் பச்சை நிறம் காட்டும் அளவுக்குக் கச்சிதமானது. பிற கடவுச்சீட்டுகள் அவ்வளவு தரமானவை அல்ல; விமானப் பயணங்களுக்கு உபயோகிக்க முடியாது. ஆனால் கெடுபிடிகள் குறைந்த, கணிப்பொறி புழக்கத்துக்கு வராத நிலஎல்லைச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது பல இடங்களில் உபயோகிக்கலாம்.

இவற்றை உபயோகித்து எல்லையைக் கடப்பவர்களுக்கு என்ன ஆகிறது என்பதைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம், இவற்றில் எது எங்கே தற்சமயம் செல்லுபடியாகிறது என்கிற அறிவு தொடர்ந்து சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படி அங்கீகரிக்கப்படாத ஊடுவழிகளாலான நிலவரைபடத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் மனித வலைப்பின்னலில் தானும் ஒரு கண்ணி என்றார். ஆனால் இன்று எல்லாமே விரைவாகக் கணிப்பொறிமயமாகி வருகின்றன; Camouflage பாஸ்போர்ட்களின் உபயோகம் குறைந்துகொண்டே வருகிறது என்று கவலைப்பட்டார்.

கொழும்பில் சரக்குக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்து, சூயஸ் கால்வாய் வழியே மத்திய கிழக்குப் பகுதியைக் கடந்து, பிரான்சின் மார்சேய் நகரில் இறங்கித் தப்பித்து, எல்லைகளைக் கடந்து இங்கு வரை வந்திருக்கிறார். எப்படியாவது கனடாவுக்குச் செல்வதே இறுதிக் குறிக்கோள். கதை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, என்னைப்பற்றி வைத்திருந்த “கெத்து” உடைந்து பொடியானது.

என்னுடன் இருந்த நண்பர் படிப்பாளி; நேர்மையாளர். அப்போது ஈழத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் நிலவியிருந்தது. “உங்களால் எங்களைப்போன்ற விதிகளை மீறாத பயணிகளுக்கு எவ்வளவு கெடுபிடிகள் உருவாகின்றன தெரியுமா? நீங்கள் ஏன் திரும்பிப் போகக்கூடாது?” என்று கேட்டார். பதிலுக்குத் தரமான ஈழத்துக் கெட்டவார்த்தையைச் சொல்லி உரையாடல் முடித்துவைக்கப்பட்டது. கேட்கக்கூடாத கேள்விதான் என்றாலும், விடையறியாத அந்தக் கேள்வி பல வருடங்கள் என்னுடன் இருந்தது.

“Sadness Of Geography – My Life as a Tamil Exile” – ஒரு புத்தகத்துக்கு எப்படித் தலைப்பு வைக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.

தலைப்பைக் கண்டால், கனடாவிலோ அமெரிக்காவிலோ வசதியாக வாழ்ந்துகொண்டு “சிதைந்த சுவரில் தான் துப்பிய எச்சில் வழிவதைப் பார்த்துக்கொண்டே வெகுநேரம் நின்றிருந்தான் அவன்; சுவரின் கீழே கிடந்த அழுகிய செண்பகப் பூக்களின் மேல் நெளியும் புழுக்கள் தன் ஆன்மாவின் நகலாகவே தோன்றின” என்றெல்லாம் அர்த்தமற்ற இருத்தலியல் கதைகள் எழுதும் தீவிர இலக்கியவாதி எழுதிய புத்தகமோ என்கிற சந்தேகம் வரலாம். ஆனால் ஜேம்ஸ் பாண்ட் கதைகளைப்போல் அதிரடியாக ஆரம்பிக்கிறது புத்தகம்.

யாழ்ப்பாணத்தை ஒட்டிச் சாவகச்சேரி அருகே ஒரு கிராமம். விடிவதற்கு முன், இன்னும் இருள் இருக்கிற வைகறை நேரத்தில், தூங்கிக்கொண்டிருக்கிற 16 வயது லோகதாசனை அவரது அப்பா “எழும்பு, எழும்பு” என எழுப்பி, ஓடி ஒளியச் சொல்கிறார். சிங்கள ராணுவத்தினர் வரும்போது பெரிதாக ஓசை எழுப்புவதில்லை; பூட்ஸ் கால்கள் தெருவில் கிடக்கிற சரளைக் கற்களை நொறுக்கும் ஒலியை வைத்து அவர்கள் நெருங்குவதை உணரலாம். அப்புறம், அவர்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பையன்களைப் பிடித்து இழுத்துச் செல்லும்போது, அவர்களைப் பெற்றவர்கள் எழுப்பும் அழுகையும் ஓலமும் காட்டிக்கொடுக்கும். பெரிய வாகனங்களைக் கிராமத்துக்கு வெளியே யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

எழுந்து வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியேற முயல்கிறார் லோகு. உயரம் தாண்டும் வீரரைப்போல் கம்புடன் ஓடிவந்து ஊன்றி, அவர் வீட்டுப் பின்பக்க வேலிச் சுவரைக் கடக்க முயல்கிறார்; முடியவில்லை. முன்வாசல் வழியாக வெளிவந்து, அடுத்த வீடுகளின் தோட்டங்களுக்குள் புகுந்து, தாவி ஓடிக் கடந்து செல்கிறார். எப்படியாவது கொஞ்சதூரம் ஓடி வயல்வெளிகளுக்குள் புகுந்துகொண்டால் தப்பித்துக்கொள்ளலாம். நெஞ்சு படபடக்க நீண்ட தப்பியோட்டத்தை நிகழ்த்தி, ராணுவத்தின் கண்ணில் படாமல் வயல்வெளிகளுக்குள் புகுந்து மூச்சுவிடுகிறார். அந்தச் சமயம் பார்த்துத் தூரத்தில் இடி முழக்கம்போலப் பெரும் சத்தம் கேட்கத் துவங்குகிறது. அந்தச் சத்தம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

ராணுவம், இப்படி வயல்வெளிக்குள் ஒளிந்துகொள்வார்கள் என முன்கூட்டியே ஊகித்து, ஹெலிகாப்டர்களையும் இறக்கியிருக்கிறது. எழுந்து ஓடும்போது தடையாக இருக்கிற கைலியை வீசிவிட்டு, இன்னும் ஆழமான வயல்வெளியை நோக்கி உள்ளாடையுடன் ஓடுகிறார். மேலே ஹெலிகாப்டர்கள் வேட்டைக் கழுகுபோலத் துரத்துகின்றன. எப்படித் தப்புகிறார் என்பதை “வெள்ளித்திரையில் காண்க”.

இப்படி ரெய்டு நடந்து முடிந்தபின், அந்தக் கிராமத்தின் நிலை, பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களின் நிலை, அந்த ஊரின் தினசரிக் கோயில் முறைமைகள் எப்படிப் பாதிக்கப்படும், நோயுற்ற உடல்போல அந்தக் கிராமம் எப்படித் தன் ஆத்மாவை இழக்கத் துவங்குகிறது என்பதைத் தொடர்ந்து கோட்டோவியமாக வரைகிறார். ராணுவ முகாமுக்குப் போய்ப் பிள்ளைகளைப் பார்க்க முயலும் பெற்றோரிடம், அவர்கள் அப்படியொரு ரெய்டு நடைபெற்றதையே ராணுவம் ஒப்புக்கொள்வதில்லை. “முறையாகப் புகார் எழுதி அளியுங்கள்; சிங்கள ராணுவம் என்ற பெயரில் இந்த அநியாயத்தைச் செய்தது யார் என நாங்கள் விசாரிக்கிறோம்” என்பார்கள். இப்படிப் பிடித்துச்செல்லப்பட்ட பையன்களை மறுபடி பார்ப்பது அரிது.

இந்த நூலை எழுதிய லோகதாசன் தருமதுரை எந்த விடுதலை இயக்கத்துடனும் தன்னைப் பலமாக அடையாளப்படுத்திக்கொண்டவரல்ல; ஆனால் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் அவருடைய வாழ்க்கை வழியே இந்த நூலில் சொல்லப்படுகின்றன. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, அருகிலுள்ள உறைவிடப் பள்ளியில் படிக்கும் 15 வயது லோகதாசன் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணீர் வாளிகளுடன் தீயை அணைக்கச் செல்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது கிராமம் நோக்கிய ரயில் பயணத்தில் சிங்கள ராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், புரட்சி உணர்வுடனும் புலிகள் இயக்கத்தில் சேர்கிறார். அங்கு சில மாதங்கள் போஸ்டர் ஒட்டுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது என நாட்களை ஓட்டுவது அவருக்குச் சோர்வளிக்கிறது; அத்துடன் சக விடுதலை இயக்கங்களுக்கிடையே நிகழும் மோதல் அவரை நம்பிக்கையிழக்கச் செய்கிறது.

நான் பிற ஈழத் தன்வரலாற்றுப் புத்தகங்களை வாசித்ததில்லை; ஆனால் இந்தப் புத்தகத்தை வாசிக்க வைப்பது இதில் வரும் புனைவுநுட்பம் கொண்ட நுண் சித்திரங்களே! இயக்கத்துக்குப் பணம் திரட்டும்போது பலரும் பணமாகத் தருவதில்லை; தேங்காய்களைக் கொடுப்பார்கள். பணம் வசூலிப்பவர்கள் அவற்றைக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்றுக் காசாக்கி இயக்கத்தில் சேர்ப்பார்கள் என்கிற சிறு தகவல், ஒரு கோட்டுச்சித்திரம்போல மக்களுக்கும் இயக்கத்துக்குமான உறவைச் சொல்லிவிடுகிறது.

இவருடைய குடும்பத்தைப்பற்றிய விரிவான சித்திரம் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்க நகை வியாபாரம் செய்யும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர் இவருடைய அப்பா. அழகர், செல்வாக்கு மிகுந்தவர், நண்பர்களுக்காகப் பணத்தை வாரி இறைக்கிறார். பல பெண் தொடர்புகள்; சொந்த மனைவியின் தங்கையைக் கடிதம் எழுதி வரவழைத்து வீட்டில் தங்க வைக்கிறார். குழந்தை பிறக்கிறது; இரு குடும்பங்களும் ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றன. நிறையப் பிரச்சினைகள். தந்தைக்கும் லோகதாசனுக்குமான உறவு சிக்கல்களும் பிணைப்பும் நிறைந்ததாக உள்ளது.

போருக்கு முந்தைய காலகட்ட வாழ்க்கையை, ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை மாலையை எப்படிக் கழிப்பார்கள் என்பதைச் சித்தரிப்பதன் மூலம் சொல்லிவிடுகிறார். காரை ஓட்டுநர் ஓட்ட, யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு முதலில் போவார்கள்; அது முடிந்ததும் வண்டி உயர்தர உணவகத்தில் நிற்கும். வழக்கமாக வீட்டில் அம்மா எல்லோருடனும் உண்பதில்லை; ஆனால் உணவகத்தில் எல்லாரும் ஒன்றாக உண்பார்கள். உணவு முடிந்து “சுபாஷ் ஐஸ்கிரீம்” பார்லரில் சண்டே. அதற்கப்புறம் சினிமா; சினிமா பார்க்கும்போது நிலக்கடலை, சோடா, சாக்லேட் எல்லாம் வந்தபடியே இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்பவர்தான் தந்தை எனச் சொல்கிறார் லோகதாசன்; ஆனால் அது கடமையுணர்வு மட்டுமே, உணர்வுரீதியான பிணைப்போ பாசமோ அவருக்குத் தெரிந்ததல்ல என்கிறார்.

இந்த நூலின் பெரும்பகுதி, லோகதாசன் தன் கிராமத்திலிருந்து துவங்கிக் கனடா வந்து சேரும் சாகசமும் திருப்பங்களும் நிறைந்த பயணத்தைச் சொல்கிறது. கொழும்பு, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து என நீண்ட பயணம். சிறை, கடற்கரை, அண்ணனின் அறை, அகதி முகாம் எனப் பல இடங்களில் தங்க நேர்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் செல்லும் இடங்களிலெல்லாம் அவனை வரவேற்கிறார்கள்; விலையுயர்ந்த கார்கள், கருவிகள் எல்லாமே அவனுக்காகத் தயாராக நிற்கின்றன. சட்டத்துக்குப் புறம்பான உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஊடுவழிகளால் ஆன பாதையிலேயே அவன் பயணிக்கிறான். அவன் பணக்காரன்; அவனை எல்லாரும் வரவேற்கிறார்கள். அகதிகளை யாரும் வரவேற்பதில்லை, விரும்புவதில்லை; ஆனால் ஊடுவழிகளும் சாகசமும் திருப்பங்களும் இணையானவை. ஒருவகையில் தலைகீழ் ஜேம்ஸ் பாண்ட் வாழ்க்கை என இந்த நூலைப் படிக்கும்போது தோன்றியது. ஓர் உதாரணம் கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

பிரான்சில் இருக்கும்போது பிரெஞ்சு பாஸ்போர்ட்டைக் கள்ளச் சந்தையில் வாங்கிக்கொள்கிறார்; பிரெஞ்சு கற்றுக்கொள்கிறார். அங்கிருந்து இங்கிலாந்து, அப்படியே அயர்லாந்தின் டப்ளின் நகரம், அங்கிருந்து கனடாவுக்கு விமானம் ஏற முயல்கிறார். அவர் போட்டிருக்கும் வேடம் பிரெஞ்சு கனவானுக்கு உரியது.

குடியேற்ற வரிசை அருகே நிற்கும் இவரை, துணை அதிகாரி ஒருவர் கேள்வி கேட்கத் துவங்குகிறார். இவர் தனக்குத் தெரிந்த உடைந்த பிரெஞ்சிலேயே பதில் சொல்கிறார்; ஆங்கிலம் தெரியாது எனச் சாதிக்கிறார். பிரெஞ்சு தெரியாத அயர்லாந்து அதிகாரி மொழித்தொல்லையால் பின்வாங்கிவிடுவார் என எதிர்பார்ப்பு; ஆனால் அவரோ கேள்விமேல் கேள்வி கேட்கிறார். எல்லா உரிமைகளும் கொண்ட பிரெஞ்சு குடிமகனாகப் பாவனை செய்துகொண்டே, “என் தோல் நிறம் காரணமாக என்னைப் பிரெஞ்சுக்காரனாக நீங்கள் கருதவில்லை, அப்படித்தானே?” என்கிறார். இது நிகழ்வது எண்பதுகளில்; அப்போதெல்லாம் இந்தக் கேள்வி பெரிய குற்றச்சாட்டு. துணை அதிகாரி முகம் சிவந்து மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிரெஞ்சு நன்றாகத் தெரிந்த உயர் அதிகாரியைக் கூட்டிக்கொண்டு வருகிறார். அவர் வந்த இரண்டாவது நொடியே இவருடைய உடைந்த பிரெஞ்சைக் கண்டுபிடித்துவிடுகிறார். பிரெஞ்சுக் கனவான் என்கிற வேடம் கலைகிறது; உடனே அடுத்த சீட்டை இறக்குகிறார் லோகதாசன். தான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து பிரான்சில் குடியேறியவர் என, தன் தோல் நிறத்துக்கும் மொழியின் தரத்துக்கும் ஏற்ற அடையாளத்தை முன்வைக்கிறார். அதிகாரியும் சளைத்தவரல்ல; சரி, பாஸ்போர்ட்டை மட்டும் கொண்டுபோய் எங்கள் சர்வதேச ரெக்கார்டுகளில் சோதனை செய்துவிட்டு வருகிறேன் எனக் கிளம்புகிறார். லோகதாசனுக்கு வேர்க்கிறது. எங்கோ பணம் கொடுத்து வாங்கிய பாஸ்போர்ட் இது; பாஸ்போர்ட்டைக் களவு கொடுத்தவர் பதிவுசெய்த புகார் பற்றிய விவரங்கள் கண்டிப்பாக இவர்களிடம் இருக்கும்; அவ்வளவுதான், திட்டம் தோற்றுவிட்டது என நினைக்கிறார். நீண்ட சில நிமிடங்களுக்குப் பின் இறுகிய முகத்துடன் வரும் அதிகாரி, பாஸ்போர்ட்டைத் திருப்பி அளித்துவிட்டு எல்லாமே சரியாக இருக்கிறது என்கிறார். தான் வைத்திருப்பது திருடப்பட்டதல்ல, விற்கப்பட்ட கடவுச்சீட்டு என லோகதாசன் அறிந்துகொள்கிறார்.

இந்த நூல் அவருடைய வாழ்க்கையில் வெறும் ஐந்து வருடங்களை மட்டுமே விவரிக்கிறது. அந்த ஐந்து வருடங்களுக்குள் வேறு மனிதராக மாறிவிடுகிறார்; அவர் மட்டுமல்ல, மொத்தக் குடும்பமும் மாறிவிடுகிறது. பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்தவர், மொத்தக் குடும்பத்தையும் கனடாவுக்கு வரவழைத்துக் காத்து வழிநடத்தும் பொறுப்புள்ளவராக மாறுகிறார். அப்பாவைத் தவிர அனைவரும் பாதுகாப்பாகக் கனடா வந்து சேர்கின்றனர். ராணுவத்தால் சுடப்பட்டு இறக்கிறார் அப்பா. இறப்புச் செய்தி கேட்டுக் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் லோகதாசன்; குற்றவுணர்விலிருந்து மீள, அப்பாவின் மேல் இருக்கும் வெறுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்.

ஐந்து வருடங்களைப் பற்றி முழுப் புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன; ஆனால் கனடா வந்து சேர்ந்தபின் அவர் வாழ்ந்த முப்பது வருட வாழ்க்கையை இரண்டு பத்திகளில் சொல்லிவிடுகிறார். Stuttgart நகரில் நான் சந்தித்த நபர் ஏன் ஊர் திரும்பவில்லை என்பதற்கான விடை இதில் இருக்கிறது.

கொழும்பில் பணத்தையும் கடவுச்சீட்டையும் இழந்து, கடற்கரையில் பிச்சைக்காரர்களுடன் தூங்கிச் சில நாட்களைக் கழிக்கிறார். அப்போது மதியம் பத்து ரூபாய்க்குப் பொதிச்சோறு வாங்கி, முதல் பாதியை உண்டுவிட்டு, மீதியைப் பத்திரமாக இரவு உணவுக்கு எடுத்து வைக்கிறார். வாழை இலையில் பொதியப்பட்ட அந்தச் சூடுசோறும் கறியும் அதன் சுவையும் இன்னும் இவர் நினைவில் மிகத் தெளிவாக இருக்கின்றன; ஒவ்வொரு கவளத்தையும் அனுபவித்து உண்டதை நினைவுகூருகிறார்.

ராணுவம் துரத்த, வயல்வெளிகளை நோக்கி மூச்சுமுட்டத் தப்பி ஓடும்போது ஒன்றைக் கவனிக்கிறார்: பச்சை வயல்கள் நீல வெளியைச் சென்று முட்டிநிற்கும் தொடுவானம் தீப்பற்றிக்கொண்டது போலச் சிவப்பாக இருந்தது என எழுதுகிறார். அதிலிருந்து சூரியன் எழுந்து வந்தது. அந்த வைகறைப் புலரியின் அழகை அவர் மனம் அன்று முழுதாகக் கண்டது, ஒரு துளிகூட மிச்சமில்லாமல்.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.