தாரா

“இது சாக்கடை மூடின்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று சார்ஜன் ஹஃபீஸ் கேட்டபோது, சண்முகம் தராசின் மீதிருந்த இரும்பு மூடியைப் பார்த்தார்.

“தெரியும், துவான்.”

“அப்புறம் ஏன் வாங்கினீங்க?”

“ஸ்க்ரேப் மெட்டல்னு சொன்னாங்க.”

“சொன்னா வாங்கிடுவீங்களா?”

சண்முகம் பதில் சொல்லவில்லை. நாற்பத்தேழு கிலோ எடையுள்ள அந்த மூடியின் அடிப்பகுதியில் உலர்ந்த மண்ணும் சிமெண்ட் துணுக்குகளும் ஒட்டியிருந்தன. ஓரத்தில் பதிந்திருந்த எழுத்துகளை ஒரு காவலர் கையுறையால் துடைத்தார். MBI. அருகில் நின்றிருந்த மாநகர மன்ற அதிகாரி ரஹ்மான் குனிந்து பார்த்தார்.

“இது எங்க பண்டாராயா சாமான்.”

“உறுதியாவா?” என்று ஹஃபீஸ் கேட்டார்.

“லோகோ இருக்கே!”

“லோகோ இருக்கிறதெல்லாம் திருட்டுச் சாமானா இருக்க வேண்டிய அவசியம் இல்லையே?”

ரஹ்மான் நிமிர்ந்தார். “அதை நீங்கதான் விசாரிக்கணும், சார்ஜன்.”

ஹஃபீஸ் அவரை மேலும் கவனிக்கவில்லை. “இந்த மூடியை யார் கொண்டுவந்தது?”

சண்முகம் அலுவலகத்திற்குள் இருந்த மகள் ரேவதியைப் பார்த்தார். அவள் ஏற்கெனவே கொள்முதல் பதிவேட்டை எடுத்துவந்து கொண்டிருந்தாள்.

“சேது,” என்றாள்.

“அவன் எங்க இருக்கான்?”

“தெரியல, சார்.”

“அவன் கொண்டுவந்தது ஒரு மூடிதானா?”

இந்த முறை ரேவதி தந்தையைப் பார்க்கவில்லை.

“ரெண்டு.”

சண்முகத்தின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தது.

“அப்ப இன்னொண்ணு எங்கே?”

வெளியே இரண்டு லோரிகள் சரக்குகளுடன் காத்திருந்தன. அவற்றின் ஓட்டுநர்கள் இறங்கி நின்று கடைக்குள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவன் கைப்பேசியில் யாருக்கோ தகவல் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஈப்போவின் ஜாலான் பெண்டஹாரா. 1940களில் இராமநாதபுரத்திலிருந்து வந்து குடியேறிய ஆயிர வைசியச் செட்டியார்கள், பழைய கண்ணாடி போத்தல்களையும் சாக்குகளையும் இரும்புத் துண்டுகளையும் வாங்கி விற்கத் தொடங்கிய இடம் அது. காலப்போக்கில் அந்த வியாபாரம் பழைய இயந்திரங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கனரக இரும்புகள் என விரிவடைந்தது. முதல் தலைமுறையினர் தொடங்கிய தொழிலை அடுத்தடுத்த தலைமுறைகள் தொடர்ந்தன. கடைகளின் பெயர்ப்பலகைகளும் உரிமையாளர்களும் மாறினாலும், தராசுகளின் ஓசையும் இரும்பு ஏற்றி இறக்கும் லோரிகளின் நடமாட்டமும் அந்தத் தெருவைவிட்டு அகலவில்லை. பழைய போத்தாக்கடைகளுக்குப் பெயர்போன அந்தத் தெருவில் சண்முகத்தின் இரும்புக்கடையைத் தெரியாதவர்கள் குறைவு. அன்று காலையிலிருந்து அது காவல்துறை சோதனை நடக்கும் கடையாக மாறியிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, செவ்வாய்க்கிழமை. ஈப்போவின் மதிய வெக்கை பதினொரு மணிக்கே தகரக்கூரையைச் சூடேற்றியிருந்தது. கடைக்குள் இரும்புத் துருவின் நெடியும் பழைய இயந்திர எண்ணெயின் வாசனையும் கலந்திருந்தன.

அந்த வெக்கையிலும் ராஜம்மாளின் வசவுகளால் கடை கலகலத்துக்கொண்டிருந்தது. அறுபத்தைந்தை நெருங்கியிருந்த அவள் தள்ளுவண்டியிலிருந்து பழைய இரும்புக் கட்டில் ஒன்றை இறக்குவதற்குள் பாலனின் ஏழு தலைமுறைகளையும் வசைபாடி முடித்திருந்தாள்.

“இந்தக் கட்டிலை யார் செஞ்சானோ அவன் நல்லா இருக்க மாட்டான்!”

“ஏன் பாட்டி?”

“அறுபது வருஷமா வீட்டுல கிடக்கு. படுத்தவனெல்லாம் செத்துப் போயிட்டான். இது மட்டும் சாகமாட்டேங்குது!”

“இதுக்கு நல்ல விலை கிடைக்கும், பாட்டி.”

“அதுக்கு முன்னாடி இதைத் தூக்கி வைடா. என் இடுப்பு ஒடிஞ்சிடும்!”

புந்தோங்கிலிருந்து வந்திருந்த ராஜம்மாள் முன்பெல்லாம் வீடுவீடாகப் போத்தல்களையும் பழைய செய்தித்தாள்களையும் வாங்கி விற்பாள். இப்போது உடல் வலு குறைந்தாலும், பழைய சாமானை அடையாளம் காணும் கண் மட்டும் மங்கியிருக்கவில்லை. பாலன் கட்டிலைத் தராசில் ஏற்றினான். அதன் இரும்பு மேடை கீச்சென்றது.

“முப்பத்தாறு கிலோ.”

“மறுபடியும் போடு.”

“ஏன்?”

“நீ தூக்கும்போதே பத்து கிலோ குறைஞ்ச மாதிரி தெரியுது!”

“பாட்டி, மெஷின் பொய் சொல்லாது.”

“மெஷினுக்குப் பின்னாடி நிக்கிறவன் சொல்லுவான்டா!”

அலுவலகத்திலிருந்து சண்முகம் வெளியே வந்தார்.

“என்ன ராஜம், காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா?”

“உன் பையன் எடையைக் குறைக்கிறான்.”

“அவன் என் பையன் இல்ல. வேலைக்காரன்.”

“அதான் சொல்றேன். சம்பளம் நீ கொடுக்கிறே. களவாண்டா எனக்குத்தானே நஷ்டம்!”

சண்முகம் எடையை மீண்டும் பார்த்தார். அதே முப்பத்தாறு கிலோ.

“சரிதானே?”

“சரி. ஆனா விலை ஒழுங்கா சொல்லு.”

“இன்னைக்கு ரேட்டு குறைஞ்சிருக்கு.”

ராஜம்மாள் தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தாள்.

“உன் கடையில ரேட்டு கூடுற நாளைப் பார்க்கிறதுக்கு நான் அடுத்த பிறவி எடுக்கணும் போல!”

கடைசியில் ராஜம்மாள் கேட்டதைவிடக் குறைவாகவும் சண்முகம் சொன்னதைவிட அதிகமாகவும் ஒரு தொகை முடிவானது.

ரேவதி பணத்தைக் கொடுத்தாள்.

ராஜம்மாள் அதை மூன்று முறை எண்ணிவிட்டுத்தான் பையில் வைத்தாள்.

“பாட்டி, நான் குறைச்சுக் கொடுக்க மாட்டேன்,” என்றாள் ரேவதி.

“நீ கொடுத்தா எண்ணாம வாங்கிக்குவேன்னு நினைச்சியா?”

“அப்படிச் சொல்லலையே!”

“அப்ப எண்ணிக்கிறேன். நீ பேசாதே!”

அவள் புறப்படுவதற்குள் மோகன் வந்தான்.

அவன் கையில் சில பித்தளைக் குழாய்களும் பழைய மின்மோட்டார் ஒன்றும் இருந்தன.

“அண்ணே, கொஞ்சம் சீக்கிரம் எடை போடுங்க.”

“என்னடா மோகன், இன்னைக்குப் பெரிய வியாபாரமா?”

“ஆமாண்ணே. உங்க கடையையே விலைக்கு வாங்கப் போறேன்.”

“முதல்ல இந்தப் பைப்பை எங்கிருந்து எடுத்தே?”

“பிளம்பிங் வேலைக்குப் போன வீட்டுல கொடுத்தாங்க.”

“இப்ப வேலைக்கெல்லாம் போறியா?”

“போகாமலா இவ்வளவு சொத்து சேர்க்க முடியும்?”

பாலன் பொருட்களைத் தராசில் ஏற்றினான்.

சண்முகம் விலை சொன்னார்.

“பதினாறு வெள்ளி.”

“இருபது கொடுங்கண்ணே.”

“பதினாறு.”

“நாலு வெள்ளிதானே!”

“நாலு வெள்ளிக்கு நான் எங்க போறது? பதினாறுதான். வேணும்னா வாங்கிக்கோ.”

மோகன் பணத்தை வாங்கிக்கொண்டான். நோட்டுகளை எண்ணும்போது அவனுடைய விரல்கள் லேசாக நடுங்கின. அவசரமாகச் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டான்.

“ஏய் மோகன்!”

வாசலில் ராஜம்மாள் நின்றுகொண்டிருந்தாள்.

“இந்த வண்டி ரோதைய கொஞ்சம் பாருடா. மூணு நாளா நொண்டிக்கிட்டே வருது.”

மோகன் குனிந்து பார்த்தான். சக்கரத்தின் நட்டு தளர்ந்திருந்தது. பாலனிடம் ஸ்பேனர் வாங்கி அதை இறுக்கினான். வண்டியை முன்னும் பின்னுமாகத் தள்ளிப் பார்த்தான்.

“இப்ப ஓட்டுங்க.”

ராஜம்மாள் வண்டியை நகர்த்தினாள்.

“பரவாயில்லையேடா, ஒரு நட்டையாவது ஒழுங்கா இறுக்கத் தெரியுதே உனக்கு!”

“ஊப்பா நாலு வெள்ளி கொடு.”

“உன் மூஞ்சிக்கு நாலு வெள்ளியா? நானே அரிசி வாங்க காசு பத்தாம நிக்கிறேன்?”

மோகன் சிரித்தபடி புறப்பட்டான்.

அவன் தெருமுனையில் மறைந்ததும் பாலன் சண்முகத்திடம் நெருங்கினான்.

“அண்ணே, இவன் இன்னும் ஃபிட் அடிக்கிறான்னு சொல்றாங்க.”

ராஜம்மாள் திரும்பினாள்.

“ஏண்டா, அவன் என் வண்டியைச் சரி பண்ணிட்டான். நேத்து உன்னைப் பார்த்து இதே வேலையைச் சொன்னேன். உன்னால முடியல. அதைப் பத்திப் பேசு முதல்ல!”

பாலன் வாயை மூடிக்கொண்டான்.

ராஜம்மாள் தள்ளுவண்டியை நகர்த்தினாள்.

எதிரே வந்த லோரிக்காக வண்டியை ஓரமாக நிறுத்தியபோது சேது இறங்கினான்.

“என்னம்மா, இன்னும் போத்த பொறுக்குறியா?”

“நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?”

“ஏன்?”

“ஒவ்வொரு தடவையும் உன்னைப் பார்க்கிறப்ப கடைசித் தடவைன்னு நினைக்கிறேன்!”

“நல்ல மனசம்மா உனக்கு!”

“நல்ல மனசு இருந்ததாலதானடா இதுவரைக்கும் உனக்கு ஒண்ணும் ஆகலை!”

சேது கடைக்குள் நுழைந்தான். சண்முகத்திற்கு அவனைப் பல ஆண்டுகளாகத் தெரியும். முன்பு அவனுடைய தந்தை இந்தக் கடைக்கு இரும்பு கொண்டுவருவார். அவர் இறந்த பிறகு சேது கட்டடங்களை இடிப்பது, பழைய இயந்திரங்களை அகற்றுவது, தொழிற்சாலைகளில் மிச்சமாகும் இரும்புகளை எடுத்துச் செல்வது என்று கிடைத்த ஒப்பந்த வேலைகளைச் செய்துவந்தான்.

சொந்தமாக லோரி இல்லை. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது வெவ்வேறு லோரிகளில் வந்துவிடுவான். அன்று கொண்டுவந்த சரக்கில் இரும்புக் குழாய்களும் இயந்திரப் பாகங்களும் இருந்தன. அவற்றுக்குக் கீழே இரண்டு வட்டமான இரும்பு மூடிகள் கிடந்தன. பாலன் அவற்றை இறக்கியபோது சண்முகம் அருகில் வந்தார்.

“இதெங்கிருந்து எடுத்தது?”

“பழைய லோங்காங் வேலை, அண்ணே.”

“பண்டாராயா சாமான் மாதிரி இருக்கே?”

“பழையதை மாற்றிட்டாங்க. இதெல்லாம் வேஸ்ட்.”

“யார் கொடுத்தா?”

“கான்ட்ராக்காரன்.”

“சூரா இருக்கா?”

சேது கைப்பேசியில் ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.

சாலைப் பராமரிப்புப் பணிக்கான ஆவணம். ஒப்பந்த நிறுவனத்தின் பெயரும் தேதியும் இருந்தன.

“இதுதானே?”

சண்முகம் கைப்பேசியை வாங்கிப் பார்த்தார்.

“இதுல இந்த இரும்பை உனக்கு விற்கச் சொல்லியிருக்கா?”

“அண்ணே, வேலை முடிஞ்சு கழற்றின சாமான். அங்கேயே போட்டுட்டா யார் எடுத்தாலும் எடுத்துக்கிட்டுப் போவான்.”

“அதுக்காக நீ எடுத்துட்டு வரலாமா?”

“அங்க வேலை செஞ்சதே நான்தான்!”

ரேவதி வெளியே வந்து மூடிகளைப் பார்த்தாள்.

“இது வேண்டாம், அப்பா.”

“ஏன்?” என்றான் சேது.

“பண்டாராயா மார்க்கிங் இருக்கு.”

“அதனால என்ன?”

“அனுமதி இருக்கணும்.”

“உங்கப்பா இத்தனை வருஷமா தொழில் செய்றாரு. அவருக்குத் தெரியாதா?”

“நான் உங்ககிட்ட பேசலை.”

“நானும் அவர்கிட்டதான் பேசுறேன்!”

சண்முகம் குறுக்கிட்டார்.

“சரி, சத்தம் போடாதீங்க.”

“சேது, இதெல்லாம் பிரச்சினை வரக்கூடிய சாமான்.”

“அண்ணே, நீங்க வாங்கலைன்னா வேற கடைக்குப் போயிடுவேன்.”

“போ.”

சேது ஒரு கணம் நின்றான். பிறகு சரக்கைத் திரும்ப ஏற்றும்படி பாலனிடம் சொன்னான்.

அப்போது சண்முகத்தின் கைப்பேசி ஒலித்தது. மெங்லெம்புவில் அவரிடமிருந்து இரும்புச் சரக்கை வாங்கிய வியாபாரி அழைத்திருந்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுப்பிய சரக்குக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை.

“இன்னைக்கு பேமெண்ட் போடுங்க.”

மறுமுனையில் ஏதோ சொல்லப்பட்டது.

“நாளைக்குன்னு மூணு நாளா சொல்றீங்க!”

சிறிது நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார். வாசலில் சேது நின்றுகொண்டிருந்தான்.

“அண்ணே, என்ன செய்யட்டும்?”

“மத்த சாமானை எடை போடு.”

“இந்த ரெண்டும்?”

சண்முகம் சிறிது தயங்கினார்.

“சேர்த்துப் போடு.”

ரேவதி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

“நான் பார்த்துக்கிறேன்,” என்றார் சண்முகம்.

அவள் அலுவலகத்திற்குத் திரும்பிவிட்டாள்.

சரக்கை எடை பார்த்ததும் சேது வழக்கம்போல் பேரம் பேசினான்.

“கொஞ்சம் கூட்டி போடுங்கண்ணே.”

“இவ்வளவுதான்.”

“வேற கடையில இன்னும் அதிகம் கிடைக்கும்.”

“அப்ப ஏன் இங்க கொண்டுவந்தே?”

“பழக்கத்துக்காகத்தான், அண்ணே.”

“பழக்கத்துக்கு விலை இல்ல சேது.”

“இல்லாமலா இவ்வளவு வருஷம் உங்ககிட்ட வர்றேன்!”

கடைசியில் சண்முகம் சொன்ன விலைக்கே சம்மதித்தான்.

பணத்தை வாங்கும்போது வலது கையின் கட்டைவிரலால் நோட்டுகளைத் தேய்த்துப் பார்த்தான். அவனுடைய தந்தைக்கும் அந்தப் பழக்கம் இருந்தது.

சண்முகம் ஒரு கணம் அதைக் கவனித்தார்.

பிறகு கொள்முதல் சீட்டில் கையெழுத்திட்டார். ரேவதி பதிவேட்டில் சேதுவின் பெயரையும் முகவரியையும் எழுதினாள். பொருட்களின் விவரத்தை எழுதும்போது பேனா சற்று நேரம் நின்றது. Besi campur. அடுத்த வரிக்குச் சென்றாள்.

1998ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அந்தத் தொழிலையே விட்டுவிடலாம் என்று சண்முகத்தின் மனைவி வள்ளியம்மை சொல்லியிருந்தாள். அப்போது திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன.

கடையின் ஒரு பகுதி எரிந்துபோயிருந்தது. பழைய டீசல் என்ஜின்களும் இரும்புச் சட்டங்களும் கறுத்துக் கிடந்தன. உருகிய பிளாஸ்டிக் தரையில் ஒட்டியிருந்தது. ஈரமான சாம்பலில் கால் வைத்தபோது இரும்புத் துணுக்குகள் நொறுங்கின.

மூன்று நாட்கள் கழித்துத்தான் சண்முகம் கடைக்குள் நுழைந்தார். வள்ளியம்மையும் உடன் வந்திருந்தாள்.

“இந்தத் தொழிலே வேண்டாம். வேற ஏதாவது பாருங்க,” என்றாள்.

அவர் பதில் சொல்லவில்லை. கறுத்துப்போன அலமாரியைத் திறந்து பார்த்தார். உள்ளே சில பதிவேடுகளும் பழைய ரசீதுகளும் இருந்தன. அவற்றை எடுத்துத் தூசைத் தட்டினார்.

“என்ன தேடுறீங்க?”

“கணக்குப் புத்தகம். இன்னும் நிறைய பேருக்குப் பணம் கொடுக்கணும்.”

“கடை எரிஞ்சிருக்கு. பணம் எங்கிருந்து கொடுக்கப் போறீங்க?”

“அதுக்குத்தான் கணக்கு வேணும்.”

வள்ளியம்மை அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று பிற்பகலே சண்முகம் கடையின் பின்புறத்தில் தப்பியிருந்த பழைய எடைத்தராசைச் சரிசெய்யத் தொடங்கினார்.

வள்ளியம்மை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாள். அதன் பிறகு ரேவதிதான் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தந்தைக்கு வயதாகிக்கொண்டிருந்தது. கடையின் செலவுகள் குறையவில்லை. பழைய ஃபோர்க்லிஃப்ட் பழுதானால் சில நாட்களின் லாபம் அதற்கே போய்விடும். கடையை மூடிவிடலாமா என்ற பேச்சு வீட்டில் அவ்வப்போது எழும். ஒவ்வொரு முறையும் சண்முகம் வேறொரு விஷயத்தைப் பேசத் தொடங்கிவிடுவார்.

புதன்கிழமை காலை சண்முகத்தின் இரும்புக்கடைக்கு நேரெதிரே இருந்த வள்ளியின் தேநீர்க்கடையில் வழக்கத்தைவிடக் கூட்டம் குறைவாக இருந்தது. மழை பெய்துகொண்டிருந்தது.

காலை ஆறு மணிக்கே கடையைத் திறந்துவிடுவாள் வள்ளி. தே தாரேக், கோப்பி ஓ, kuih, nasi lemak என்று கிடைத்ததைச் செய்து விற்பாள். கணவன் இறந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. மகள் சிரம்பானில் குடும்பத்துடன் வசித்துக்கொண்டிருந்தாள்.

“இங்க வந்திருங்கம்மா,” என்று மகள் அடிக்கடி அழைப்பாள்.

“அங்க வந்து என்ன செய்யறது?”

“பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கலாம்.”

“அவங்களுக்கு அம்மா இல்லையா?” என்பாள்.

சண்முகம் வழக்கம்போல் கோப்பி வாங்க வந்தார்.

“ஒரு கோப்பி ஓ.”

“சீனி?”

“கூறாங் மானிஸ்.”

“நேத்து கோசோங் சொன்னீங்க.”

“இன்னைக்கு வேணும்.”

வள்ளி அவரை ஒருமுறை பார்த்துவிட்டு சீனியை எடுத்தாள்.

“உங்க உடம்புக்குத்தான் நல்லது இல்ல.”

“எனக்குத் தெரியும்.”

“தெரிஞ்சும் குடிக்கிறீங்க.”

“கோப்பி தர்றியா, இல்ல நான் கிளம்பட்டுமா?”

வள்ளி கோப்பியை ஊற்றிக் கொடுத்தாள். சண்முகம் பணத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டார்.

“சண்முகம்!” அவர் திரும்பினார்.

“உங்க கடைக்கு முன்னாடி ராத்திரி லோரி நிறுத்துறதைச் சொல்லுங்க. காலையில என் கஸ்டமருக்கு வண்டி நிறுத்த இடமில்லை.”

“சொல்றேன்.”

“மூணு மாசமா அதைத்தான் சொல்றீங்க.”

அவள் மீண்டும் கோப்பைகளைக் கழுவத் தொடங்கினாள். பிற்பகலில் மழை பலமானது. வள்ளியின் தேநீர்க்கடையின் பக்கவாட்டில் இருந்த குப்பைத்தொட்டி கவிழ்ந்துகிடந்தது. வள்ளி அதைத் தூக்கி ஓரமாக வைப்பதற்குச் சென்றாள். மழைநீர் வடிகாலின் ஓரமாகப் பெருக்கெடுத்து ஓடியது. இரும்பு மூடி அகற்றப்பட்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பள்ளம் தெரியவில்லை. வள்ளியின் இடது கால் அதற்குள் சிக்கியது. அவள் நிலைதடுமாறி விழுந்தாள். முதலில் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை. பிறகு அவள் அலறியபோது எதிர்ப்புறக் கடையிலிருந்து இரண்டு பேர் ஓடிவந்தார்கள். பாலனும் ஓடினான். அவளைத் தூக்க முயன்றபோது அவனுடைய சட்டையைப் பிடித்துக்கொண்டாள்.

“மெதுவாடா! கால் ஒடிஞ்சிருக்கு!”

“ஹாஸ்பிட்டல் போகணும், அக்கா.”

“எனக்குத் தெரியும். நீங்க முதல்ல என்னை நேரா உட்கார வைங்க!”

கணுக்கால் வீங்கியிருந்தது. சண்முகம் லோரியை எடுத்துவரச் சொன்னார்.

“உங்க லோரியில வேண்டாம்,” என்றாள் வள்ளி.

“ஏன்?”

“இரும்பு ஏத்துற லோரியில என்னையும் ஏத்தப் போறீங்களா?”

“இப்ப அதைப் பற்றிப் பேசுற நேரமா?”

“நீங்க பேசாம ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க!”

மருத்துவமனையில் பரிசோதித்தபோது கணுக்கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அன்று மாலையே அவளுடைய மகள் சிரம்பானிலிருந்து வந்துவிட்டாள். தேநீர்க் கடை மூடப்பட்டது.

வியாழக்கிழமை காலையில் மாநகர மன்ற அதிகாரிகள் இருவர் வந்து வடிகாலைப் புகைப்படம் எடுத்தார்கள். அவர்களில் ஒருவர் ரஹ்மான். மூன்று மாதங்களுக்கு முன்பு இதே ரஹ்மான் சண்முகத்தின் கடைக்கு வந்திருந்தார். கடைக்கு முன்னால் இரும்புச் சட்டங்கள் குவிக்கப்பட்டு, வடிகாலின் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்தது.

“எத்தனை தடவை சொல்லணும், இன்சேக்?” சண்முகம் உடனே அகற்றிவிடுவதாகச் சொன்னார்.

“உடனேன்னா எப்ப?”

“இன்னைக்கே.”

“நாளைக்கும் இப்படியே இருந்தா?”

“இருக்காது.”

ரஹ்மான் கைப்பேசியில் புகைப்படம் எடுத்தார்.

“சம்மன் போட்டுட்டுப் போயிடவா?”

“அதெல்லாம் வேண்டாம், துவான். பேசி முடிச்சுக்கலாம்.”

“என்ன பேசணும்?”

சண்முகம் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். ரஹ்மான் கிளம்பியதும் ரேவதி விவரத்தைத் கேட்டாள்.

“சம்மன் போட்டிருந்தா இன்னும் அதிகம் போயிருக்கும்.”

“அவர் சம்மன் போடாம இருக்கத்தான் சம்பளம் வாங்குறாரா?”

“நீ இதெல்லாம் பேசாதே. பிசினஸ் நடத்துறது அவ்வளவு சுலபமில்லை.”

ரேவதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

“அதுக்காக அவருக்கு எல்லா மாசமும் காசு கொடுக்க முடியுமா?”

சண்முகம் பதில் சொல்லாமல் வெளியேறினார். மறுநாள் இரும்புகளை உள்ளே மாற்றினார். அதன் பிறகும் ரஹ்மான் இரண்டு முறை வந்திருந்தார். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்துச் சென்றார். அவர் வரும்போதெல்லாம் சண்முகம் முதலில் அலுவலக மேசையின் இழுப்பறையைத்தான் பார்ப்பார்.

பிற்பகலில் காவல்துறை விசாரணையின்போது சேதுவைத் தொலைபேசியில் அழைத்தார்கள். முதல் இரண்டு அழைப்புகளுக்கும் பதிலில்லை. மூன்றாவது அழைப்பில் எடுத்தான்.

“எங்க இருக்கீங்க?” என்று ஹஃபீஸ் கேட்டார். மறுமுனையில் ஏதோ சொல்லப்பட்டது.

“கடைசியாக சண்முகம் கடைக்கு எப்ப சரக்கு கொண்டு வந்தீங்க?” சேது பதில் சொன்னான்.

“உடனே இங்க வாங்க.” அழைப்பைத் துண்டித்துவிட்டு ஹஃபீஸ் சண்முகத்தைப் பார்த்தார்.

“காணாமப் போன மூடிகளைப் பத்தி மஜிலிஸ்ல புகார் வந்திருக்கு. உங்க கடையிலயும் மஜிலிஸ் மூடி இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. இப்படிப்பட்ட பொருளை வாங்குறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டீங்களா?”

“அவன் பழக்கமான பையன், துவான்.”

“பழக்கமானவன் திருட மாட்டானா?”

“கடை இருக்கு. லைசென்ஸ் இருக்கு. கணக்கு வச்சிருக்கீங்க. ஆனா என்ன சாமான் வாங்குறீங்கன்னு தெரியாதுன்னு சொல்றீங்க. அப்ப அந்த லைசென்ஸ் எதுக்கு?”

ரேவதி குறுக்கிட்டாள்.

“நாங்க பதிவு செஞ்சிருக்கோம்.”

“அந்தப் பதிவில என்ன போட்டிருக்கீங்க?”

அவள் புத்தகத்தைத் திறந்தாள். “Besi campur.”

“இந்த மாதிரி மூடி இரண்டை வாங்கியிருக்கீங்க. அதை வெறும் கலப்பு இரும்புன்னு எழுதினா போதுமா?”

ரேவதி புத்தகத்தை மூடவில்லை.

“இல்ல துவான்,” என்றாள் ரேவதி.

சண்முகம் மகளைப் பார்த்துவிட்டு இடைமறித்தார்.

“அவளுக்கு இதெல்லாம் தெரியாது. நான்தான் வாங்கினேன்.”

“அப்ப நீங்க சொல்லுங்க. இன்னொரு மூடி எங்கே?”

சண்முகம் நெற்றியைத் துடைத்தார்.

“நேத்து ஒரு லோடு மெங்லெம்புக்குப் போச்சு. அதுல இருந்திருக்கலாம்.”

“இருந்திருக்கலாமா?”

“இருந்துச்சு.”

ஹஃபீஸ் குறிப்பெடுத்தார். “முதல்லயே சொல்லியிருக்கலாமே.”

சண்முகம் தலையாட்டினார். சிறிது நேரத்தில் சேது வந்தான். சட்டை முழுவதும் வியர்த்திருந்தது. லோரியைக் கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேகமாக நடந்துவந்தான். அவனைக் கண்டதும் ரஹ்மான் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

“இந்தச் சரக்கை எங்கிருந்து எடுத்தீங்க?” என்று ஹஃபீஸ் கேட்டார்.

“லோங்காங் ரிப்பேர் வேலை, துவான்.”

“அந்த லோங்காங் வேலை எங்க நடந்துச்சு?” என்று ஹஃபீஸ் கேட்டார்.

“இந்த ஏரியவிலயும் நடந்துச்சு, துவான். வேற இடத்திலயும் வேலை செஞ்சோம்.”

ஹஃபீஸ் அதைக் குறித்துக்கொண்டார். “எந்த கான்ட்ராக்டர்?”

நிறுவனத்தின் பெயரைச் சொன்னான்.

“அவர் உனக்குச் சரக்கை விற்க அனுமதி கொடுத்தாரா?”

“பழைய சாமானை எடுத்துக்கச் சொன்னாரு.”

“எழுத்துல இருக்கா?”

“இல்ல.”

“அப்ப எப்படிச் சொல்றே?”

சேது தயங்கினான்.

“அங்க இருந்த அதிகாரிகிட்டயும் கேட்டுத்தான் எடுத்தேன்.”

“எந்த அதிகாரி?”

சேது ரஹ்மானைப் பார்த்தான்.

“இவர்தான் அங்க இருந்தாரு.”

ரஹ்மான் உடனே நிமிர்ந்தார்.

“என்ன சொல்றே நீ?”

“அன்னைக்கு வேலை நடந்தப்ப நீங்க வந்தீங்களே, துவான்!”

“நான் வந்தது சைட் இன்ஸ்பெக்ஷனுக்கு. உனக்குச் சாமான் எடுத்துக்க அனுமதி கொடுக்கல.”

“நான் கேட்டப்ப—”

“என்ன கேட்டே?”

சேது நிறுத்திக்கொண்டான்.

ஹஃபீஸ் இருவரையும் பார்த்தார்.

“ஒருத்தர் பேசுங்க.”

ரஹ்மான் அவரிடம் திரும்பினார்.

“சார்ஜன், எனக்கு இவன் யாருன்னுகூடத் தெரியாது.”

சேது சிரித்தான்.

“அப்ப அன்னைக்கு என்னை ஏன் கூப்பிட்டீங்க, துவான்?”

“நான் உன்னைக் கூப்பிடல!”

“சரி, துவான்.”

“என்ன சரி?”

“நீங்க சொல்றதுதான் சரி.”

ஹஃபீஸ் பொறுமையை இழந்தார்.

“போதும். ஸ்டேஷன்ல வந்து ஸ்டேட்மெண்ட் கொடுங்க.”

ரஹ்மான் ஏதோ சொல்ல முயன்றார்.

“நீங்களும்தான்,” என்றார் ஹஃபீஸ்.

சேதுவின் ஆவணங்களை வாங்கிப் பார்த்தார்.

“இந்தச் சரக்கு எங்கிருந்து எடுக்கப்பட்டதுன்னு சரிபார்க்கணும். காணாமப் போன மூடிகளும் இங்கே வந்த மூடிகளும் ஒண்ணுதானான்னு உறுதிசெய்யணும்.”

சேது தலையாட்டினான்.

“உங்களை மறுபடியும் கூப்பிடுவோம். போனை எடுங்க.”

“சரி, சார்ஜன்.”

“இன்னைக்கு மூணு தடவை கூப்பிட வேண்டியிருந்துச்சே!”

“லோரி ஓட்டிக்கிட்டிருந்தேன்.”

வெளியே சென்ற சேது தான் வந்த லோரியின் கதவைப் பிடித்தபடி சிறிது நேரம் நின்றான். பிறகு சண்முகத்திடம் வந்தான்.

“அண்ணே, இவ்வளவு பெரிய பிரச்சினையா ஆகும்னு நினைக்கல.”

“நீ பொய் சொன்னியா?”

“எதைப் பத்தி?”

“இந்த இரும்பை எடுத்ததுக்கு உனக்கு அனுமதி இருந்துச்சா?”

“வேலை செஞ்ச காசே இன்னும் முழுசா தரல, அண்ணே. பழைய சாமானை எடுத்துக்கச் சொன்னாங்க. அதைத்தான் எடுத்தேன்.”

“யார் சொன்னாங்க?”

“அந்தக் கான்ட்ராக்டர்காரன்.”

“அவன் இப்ப எங்கே?”

“போனை எடுக்க மாட்டேங்கிறான்.”

“அப்ப நான் என்ன செய்யறது?”

சேது பேசவில்லை. சண்முகம் இன்னும் அருகில் வந்தார்.

“உன் அப்பா இருந்திருந்தா இந்த மாதிரி சாமானை என் கடைக்குக் கொண்டு வந்திருக்க மாட்டாரு.”

சேதுவின் முகம் இறுகியது.

“எங்கப்பாவைப் பத்திப் பேசாதீங்கண்ணே. அவர் நேர்மையா இருந்தாரு. கடைசியில கடனோடதான் செத்தாரு.”

சண்முகம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார். “அதுக்காகத் திருடுவியா?”

“நான் திருடினேன்னு இன்னும் யாரும் சொல்லலையே.”

“பிறகு ஏண்டா போலீஸ்காரன் உன்ன தேடறான்!”

“உங்க கடைக்கும் வந்திருக்காங்க. அதனால நீங்க திருடனா?”

சண்முகம் கையை உயர்த்தினார். “இங்கிருந்து போடா.”

சேது லோரியில் ஏறிப் புறப்பட்டான். வண்டி தெருமுனையில் திரும்பி மறையும் வரை சண்முகம் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

அன்று மாலை ரேவதி கணக்குகளை முடித்துக்கொண்டிருந்தாள். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. தகரக்கூரையின் மீது விழுந்த மழைத்துளிகள் சீரற்ற தாளத்தில் சத்தமிட்டன. ஓரமாகக் குவித்திருந்த இரும்புத் தகடுகளின் மீது நீர் வழிந்தபோது வேறொரு ஓசை எழுந்தது. பாலன் சரக்குகளைத் தார்ப்பாயால் மூடிக்கொண்டிருந்தான். சண்முகம் ரேவதிக்கு எதிரே அமர்ந்திருந்தார்.

“அந்த இரும்பை வாங்காதீங்கன்னு சொன்னேனே,” என்றாள் ரேவதி.

“அதையே எத்தனை தடவை சொல்லுவே?”

“எத்தனை தடவை சொன்னாலும் நடந்ததை மாத்த முடியாதுதானே?”

“அப்புறம் ஏன் பேசுறே?”

அவள் புத்தகத்தை மூடினாள்.

“நீங்க வாங்கச் சொன்னதாலதான் பதிவுல போட்டேன்.”

“அதுக்கென்ன இப்ப?”

“இரண்டு மூடி இருந்ததைப் பார்த்தேன். தெரிஞ்சும் கலப்பு இரும்புன்னு எழுதினேன். நானும் சரியா நடந்துக்கல.”

ரேவதி ஜன்னலருகில் சென்றாள்.

“அம்மா இருந்திருந்தா உங்ககிட்ட இப்படிப் பேச முடியாது. நீங்க கோபப்படுவீங்க.”

“இப்ப கோபப்படலையா?”

“இப்ப நான் பயப்படறதுதான் அதிகம்.”

சண்முகம் தலையைக் குனிந்தார். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.

“நாளைக்கு என்ன ஆகும்?” என்று ரேவதி கேட்டாள்.

“ஸ்டேஷனுக்குப் போகணும்.”

“அதுக்கப்புறம்?”

“தெரியாது.”

அவள் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள்.

சண்முகம் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்தார். ரேவதி முறைத்தாள். அவர் பெட்டியை மீண்டும் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை காலை சண்முகமும் ரேவதியும் மருத்துவமனைக்குச் சென்றபோது வள்ளி படுக்கையில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தாள். வள்ளியின் மகள் அருகில் இருந்தாள். சண்முகம் பழங்களையும் சில உணவுப் பொட்டலங்களையும் கொண்டுவந்திருந்தார்.

“என்ன சண்முகம், பழ வியாபாரத்துக்கு மாறிட்டீங்களா?”

“எப்படியிருக்கே?”

“நல்லா இருந்தா இங்க படுத்திருப்பேனா?” வள்ளி பழங்களைப் பார்த்தாள்.

“எனக்குப் பழம் வேண்டாம்.”

“சும்மா கொண்டுவந்தேன்.” சண்முகம் பழங்களை மேசையில் வைத்தார். சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

“போலீஸ் வந்தாங்களாமே?” என்று வள்ளி கேட்டாள்.

“வந்தாங்க.”

“சாக்கடை மூடியைக் கண்டுபிடிச்சாங்களா?”

“எங்க கடையில ஒண்ணு கிடைச்சிருக்கு. அது அந்த இடத்திலிருந்ததான்னு இன்னும் தெரியல.”

வள்ளி தலையாட்டினாள். போர்வையின் மடிப்பைச் சரிசெய்தாள்.

“என் கடையை இன்னும் திறக்க முடியல.”

“தெரியும்.”

“மகள் சிரம்பானிலிருந்து வந்திருக்கா. அவளுக்கும் வேலை இருக்கு.”

“மருத்துவச் செலவு ஒரு பக்கம். கடை மூடியிருக்கிறதால வருமானம் இன்னொரு பக்கம் போச்சு. யாரைக் கேட்கிறது?”

“மஜிலிஸ்ல கேளு.”

வள்ளி அவரை நேராகப் பார்த்தாள். “அவங்கதான் நேத்து வந்து போட்டோ எடுத்துட்டுப் போயிருக்காங்க. காசு கொடுப்பாங்களா?”

சண்முகம் அமைதியாக இருந்தார்.

“என்ன முகத்தை இப்படித் தொங்கப் போட்டிருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல.”

“உங்களுக்குத் தெரிஞ்சுதான் வாங்கினீங்களா?”

“பெசி புரோக்னு தான் நினைச்சேன்.”

“அப்படியா?” அவள் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. ரேவதி தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொடுத்தாள். வள்ளி இரண்டு மிடறு குடித்துவிட்டுப் பாட்டிலை மூடினாள்.

“சண்முகம், நாளைக்கு என் கடையைப் பார்த்துக்க யாராவது ஆள் கிடைக்குமா? மகளுக்கு உதவியா இருக்கணும்.”

“நான் பாலனை அனுப்புறேன்.”

“அவனுக்கு வேலை இருக்குமே?”

“பரவாயில்லை.”

“காசு கொடுக்கறேன். சும்மா வேணாம்.”

“அதைப் பத்திப் பிறகு பேசலாம்.” வள்ளி அவரைப் பார்த்தாள்.

“பிறகுன்னு சொல்லாதீங்க. நீங்க காசு கொடுக்கிற விஷயத்தில மட்டும் உடனே பேசுவீங்க. வாங்குற விஷயத்தில நாளைக்குன்னு சொல்லுவீங்க.”

சண்முகம் இப்போது சிரித்தார்.

அடுத்த திங்கட்கிழமை ஜாலான் பெண்டஹாராவில் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. சண்முகம் காவல் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துவிட்டுத் திரும்பியிருந்தார். மெங்லெம்புவிற்கு அனுப்பிய சரக்குகளின் விவரங்களைக் காவல்துறையினர் கேட்டிருந்தார்கள். இரண்டு மூடிகளும் காணாமற்போன இடத்திலிருந்து எடுக்கப்பட்டவையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

சேதுவின் ஒப்பந்த நிறுவனத்திடமும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. ரஹ்மானிடமும் விளக்கம் பெறப்பட்டதாகத் தெரியவந்தது. ஆனால் யார் யாரிடம் என்ன சொன்னார்கள் என்பது சண்முகத்துக்குத் தெரியவில்லை. அன்று பிற்பகலில் ரஹ்மான் தனியாகக் கடைக்கு வந்தார். சண்முகம் அவரை அலுவலகத்திற்குள் அழைத்தார்.

“என்ன துவான், எல்லாம் ஓகேயா?”

“விசாரணை நடக்குது.”

“எனக்கு ஏதாவது பிரச்சினை வருமா?”

ரஹ்மான் நாற்காலியில் சாய்ந்தார்.

“அது நீங்க எப்படிக் கையாளுறீங்கன்னு இருக்கே. நீங்க பிசினஸ் பண்ணுற ஆள். நான் சொல்லத் தேவையில்ல?” அந்த நேரத்தில் ரேவதி உள்ளே வந்தாள்.

“துவான், சாப்பிட ஏதாவது வாங்கி வரட்டுமா?”

“வேண்டாம்.”

அவள் மேசையிலிருந்த கோப்பை எடுத்தாள்.

“அப்பா, லைசென்ஸ் ரினியூவலுக்கான பேப்பர் வேணும்.”

“அலமாரியில இருக்கு.”

“இல்லையே.”

சண்முகம் எழுந்து அலமாரியைத் திறந்தார். ரேவதி மேசையருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். ரஹ்மான் அவளைப் பார்த்தார்.

“நீங்கதான் இப்ப கடையோட கணக்கு பார்க்குறீங்களா?”

“ஆமாம், துவான்.”

“அப்ப எல்லாமே சரியா இருக்கணுமே.”

“அதுக்குத்தான் முயற்சி செய்றோம்.”

ரஹ்மான் சிரித்தார்.

“சரி, நான் போறேன். ஏதாவது இருந்தா கூப்பிடுறேன்.”

ரஹ்மான் புறப்பட்டதும் சண்முகம் மகளைப் பார்த்தார்.

“எதுக்கு உள்ளே வந்தே?”

“பேப்பர் வேணும்னு சொன்னேனே.” சண்முகம் பெருமூச்சு விட்டார்.

ரேவதி அலமாரியிலிருந்து கோப்பை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

மகளின் செயல்கள் சில சமயங்களில் அவருக்குப் புரிவதில்லை. ஆனால் அவள் இல்லாமல் கடையை நடத்துவதும் இப்போது சிரமமாகிவிட்டிருந்தது.

அடுத்த வாரம் ராஜம்மாள் மீண்டும் வந்தாள். இந்த முறை தள்ளுவண்டியில் அதிகம் பொருட்கள் இல்லை. சில இரும்புக் குழாய்கள், உடைந்த மின்விசிறி, பழைய அலுமினியப் பாத்திரங்கள். பாலன் அவற்றை இறக்கினான்.

“என்ன பாட்டி, இந்த வாரம் சரக்கு கம்மியா இருக்கு?”

“ஊர்ல எல்லாரும் குப்பையைக் கூடப் பணமா விக்க ஆரம்பிச்சிட்டாங்கடா. இனிமே எனக்கு வேலை இருக்காது போல.”

“அப்ப ரிட்டயர் ஆகிடுங்க.”

“ஏண்டா, நீ என்னைக் கட்டிக்கிட்டு உன் வீட்டுல வச்சுக் காப்பாத்தப் போறியா?”

“ஐயயோ பாட்டி! நான் வாங்குற சம்பளமே எனக்குப் பத்தல!”

“அப்ப எதுக்குடா எனக்கு ரிட்டயர்மெண்ட் கொடுக்கிறே, படவா ராஸ்கோலே! வாயை மூடிக்கிட்டு எடையைப் போடு!”

பாலன் தராசை இயக்கினான். சண்முகம் அருகில் வந்தார்.

“என்ன ராஜம், நல்லாயிருக்கியா?”

“நான் நல்லாத்தான் இருக்கேன். உங்க கடையிலதான் போலீஸ் வர்றதா சொல்றாங்க.”

“வந்தாங்க.”

“பிரச்சினை முடிஞ்சிடுச்சா?”

“இன்னும் இல்லை.”

“அப்ப கடை திறந்திருக்கீங்களே?”

“விசாரணை நடக்கிறதுக்காகக் கடையை மூட முடியுமா?”

“அதானே! நீங்க கடையை மூடிட்டா நான் எங்கே போறது?”

சண்முகம் பதில் சொல்லவில்லை. பாலன் எடையைச் சொன்னான்.

ராஜம்மாள் வழக்கம்போல் பேரம் பேசத் தொடங்கினாள். சண்முகம் விலை சொன்னார். அவள் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் இரண்டு ரிங்கிட் கூட்டிக் கொடுத்தார்.

“நல்லாயிருப்பே, சண்முகம்.”

பணத்தை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டாள். வெளியே செல்லும்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாநகர மன்ற வாகனத்தைப் பார்த்தாள். இரண்டு தொழிலாளர்கள் வடிகாலின் அருகில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒருவன் புதிய இரும்பு மூடியை எடுத்துவந்தான். மற்றொருவன் பள்ளத்தைச் சுற்றியிருந்த குப்பைகளை அகற்றினான். ராஜம்மாள் அங்கே சிறிது நேரம் நின்றாள். பிறகு தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டாள்.

மாலையில் பெரிய லோரி ஒன்று கடைக்கு வந்தது. பழைய தொழிற்சாலை இயந்திரங்களை ஏற்றியிருந்தார்கள். சண்முகம் சரக்கைப் பார்த்து விலை சொன்னார். ஓட்டுநர் சம்மதிக்கவில்லை.

“Bos, harga naik sikitlah.”

“இவ்வளவுதான்.”

“Besi berat ini.”

“எனக்குத் தெரியும்.”

“Tempat lain boleh dapat lebih.”

“அப்ப அங்கே கொண்டு போங்க.”

வந்தவன் தலையைச் சொறிந்தான். பிறகு விலையை ஒப்புக்கொண்டான். பாலன் லோரியைப் பெரிய தராசில் ஏற்றினான். முழு எடையைக் குறித்துக்கொண்ட பிறகு சரக்குகளை இறக்கினார்கள். காலி லோரியை மீண்டும் தராசில் ஏற்ற வேண்டியிருந்தது. சண்முகம் அலுவலகத்திற்குள் சென்றார். ரேவதி அன்றைய பதிவுகளை முடித்துக்கொண்டிருந்தாள்.

“என்னப்பா?”

“இந்த லோடுக்குத் தாரா எடை போடணும்.”

அவள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். காலி லோரி மெதுவாகத் தராசின் மீது ஏறியது. பாலன் கையசைத்து வண்டியைச் சரியான இடத்தில் நிறுத்தினான். எண்கள் மாறி ஒரு நிலையில் நின்றன. காலி லோரியின் எடையைக் கழித்துக் கணக்கை முடித்தாள். சண்முகம் விலையைக் கணக்கிட்டார். ஓட்டுநர் பணத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

பாலன் தராசில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்தான். எண்கள் சிறிது நேரம் மாறிக்கொண்டிருந்தன. பின்னர் பூஜ்ஜியத்தைக் காட்டின. அப்போது சண்முகத்தின் கைப்பேசி ஒலித்தது. சேது அழைத்திருந்தான். சண்முகம் திரையைப் பார்த்தார். ரேவதி அருகில் நின்றுகொண்டிருந்தாள்.

“எடுக்கலையா?” என்று கேட்டாள். அவர் அழைப்பை ஏற்றார்.

“சொல்லு.”

மறுமுனையில் சேது வேகமாக ஏதோ பேசினான்.

சண்முகம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“எனக்கு எப்படி தெரியும்?”

மீண்டும் சேது பேசினான்.

“சரி. நாளைக்குப் பேசிக்கலாம்.”

அழைப்பைத் துண்டித்தார்.

ரேவதி எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவரே சொன்னார்.

“அந்தக் கான்ட்ராக்டர் கையெழுத்துப் போட்ட பேப்பர் இருக்குன்னு சொல்றான்.”

“அப்ப அதை போலீஸ்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க.”

“அதுக்குத்தான் கூப்பிட்டான்.”

“வேற ஏதாவது சொன்னானா?”

“ஒரு லோடு சரக்கு இருக்காம்.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“நாளைக்குப் பேசலாம்னு சொன்னேன்.”

சண்முகம் மீண்டும் கடைக்குள் சென்றார். இன்னும் சில இரும்புப் பொருட்கள் எடை பார்க்கப்படாமல் கிடந்தன. பாலன் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக்கொண்டிருந்தான்.

வெளியில் மழை தொடங்கியது. அன்று இரவு ஜாலான் பெண்டஹாராவின் கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. வள்ளியின் தேநீர்க் கடை மட்டும் வழக்கத்தைவிட முன்னதாகவே மூடப்பட்டது. அவளுடைய மகள் இரண்டு நாள் உதவிவிட்டு சிரம்பானுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அப்போது பாலன்தான் வள்ளிக்குக் கடையில் உதவியாக இருந்தான்.

வள்ளியின் தேநீர்க்கடைக்கு முன்னால் இருந்த வடிகாலில் புதிய இரும்பு மூடி பொருத்தப்பட்டிருந்தது. மழைநீர் அதன் ஓரங்களில் வழிந்து உள்ளே சென்றுகொண்டிருந்தது. சண்முகம் கடையைப் பூட்டிவிட்டுக் காரில் ஏறினார்.

சாலையின் மறுபக்கத்தில் ரஹ்மானின் மாநகர மன்ற வாகனம் நின்றிருந்தது. அதன் அருகில் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் சேது. சண்முகம் காரின் இயந்திரத்தை இயக்கினார்.

ரஹ்மான் சேதுவின் முகத்துக்கு நேராக விரலை ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தார். சேது சட்டைப் பையிலிருந்து மடித்த காகிதத்தை எடுத்தான். ரஹ்மான் முதலில் அதை வாங்கவில்லை. சேது ஏதோ சொன்னான்.

ரஹ்மானின் முகம் இறுகியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு காகிதத்தை வாங்கினார். வாகனத்தின் உட்புற விளக்கொளியில் அதைப் படித்தார். காகிதத்தில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ கேட்டார். சேது பதில் சொன்னான். அவர்களுடைய பேச்சு சண்முகத்திற்குக் கேட்கவில்லை.

ரஹ்மான் காகிதத்தைச் சேதுவிடம் திருப்பிக் கொடுத்தார். வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு சண்முகத்தின் கடையைப் பார்த்தார். சண்முகம் ஸ்டியரிங்கின் மீது வைத்திருந்த கையை எடுக்கவில்லை. சேது தான் வந்த லோரியை நோக்கி நடந்தான்.

சண்முகம் காரை மெதுவாக நகர்த்தினார். கடையின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மின்விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருந்தது. அவர் காரை நிறுத்தி விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.

அப்போது எதிர்ப்புறத்திலிருந்த வடிகாலின் புதிய இரும்பு மூடியின் மீது ஒரு மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இரும்பு பலமாகச் சத்தமிட்டது. சண்முகம் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தார். மோட்டார் சைக்கிள் சென்றுவிட்டிருந்தது. மூடி அசையாமல் இருந்தது. அவர் காரை இயக்கிப் புறப்பட்டார்.


***

சொற்பொருள்

சொல் / சொற்றொடர்பொருள்
தாரா (Tara / Tare)சரக்கில்லாத லோரியின் எடை.
MBI (Majlis Bandaraya Ipoh)ஈப்போ மாநகர மன்றம்.
பண்டாராயா (Bandaraya)மாநகர மன்றம் / மாநகராட்சி.
ஊப்பாகூலி
துவான் (Tuan)ஐயா / அதிகாரி (அதிகாரத்தில் உள்ளவர்களை அழைக்கும் மரியாதைக்குரிய சொல்).
இன்சேக் (Encik)திரு / ஐயா (பொதுவாக மரியாதையுடன் அழைக்கும் சொல்).
லோங்காங் (Longkang)சாக்கடை / மழைநீர் வடிகால்.
Besi campur (பெசி சம்புர்)கலப்பு இரும்பு.
சூரா (Surat)கடிதம் / ஆவணம் (இங்கு அனுமதிச் சீட்டைக் குறிக்கிறது).
கோப்பி ஓ (Kopi O)பால் சேர்க்காத கருப்பு காபி.
கூறாங் மானிஸ் (Kurang Manis)சீனி (சர்க்கரை) குறைவாக.
கோசோங் (Kosong)சீனி இல்லாத / வெற்று.
Kuihபலகாரம்
Nasi Lemakதேங்காய்ப்பால் சாதம்
ஃபிட் அடிக்கிறான் (Fit)போதைப் பழக்கம் (உள்ளூர் வழக்கு).
ரோதை (Roda)சக்கரம்.
Bos, harga naik sikitlahபாஸ், விலையைக் கொஞ்சம் ஏத்துங்க.
Besi berat iniஇது கனமான இரும்பு.
Tempat lain boleh dapat lebihவேறு இடத்தில் (விற்றால்) இன்னும் அதிக விலை கிடைக்கும்.
பெசி புரோக்பழைய இரும்பு

இடப் பெயர்கள்

இடம்தமிழ் வடிவம்
Ipohஈப்போ
Menglembuமெங்லெம்பு / மகிழம்பூ
Buntongபுந்தோங்
Jalan Bendaharaஜாலான் பெண்டஹாரா
Serembanசிரம்பான்
Perakபேராக்



 

 


 



Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.