- மெளனத்தில் ஒலித்த குரல்
- நுஷூ(Nushu): பெண்களுக்காக பெண்களால் உருவான எழுத்து வடிவம்
- ஜப்பான்: பெண்களின் மொழி, பெண்களின் இலக்கியம்
ஜப்பானிய இலக்கியத்தின் தொடக்கப் புள்ளியில் பெண்களின் பங்கும் இருக்கிறது. ஆனால், ஜப்பானியச் சமூகத்தின் இன்றைய அதிகாரப் படிக்கட்டுகளில் அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த முரணே இந்தக் கட்டுரையின் மையக் கேள்வி. எதனால் இந்த மாற்றம், ஏன் இந்தத் தொய்வு என்பதைக் காண இருக்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பானின் இலக்கிய மொழியை அரண்மனையில் வசித்த பெண்களே வடிவமைத்தார்கள். உலகின் முதல் நாவல்களில் ஒன்றையும் பெண்களே எழுதினார்கள். அதற்குப் பின் வந்த சாமுராய் யுகத்தில் பெண்கள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார்கள்; இலக்கியச் சூழலில் அவர்களின் பங்கு மிகக் குறைவு. நவீன காலத்தில் மீண்டும் எழுதத் தொடங்கினார்கள். இன்று ஜப்பானியப் புனைவுலகின் முன்னணிக் குரல்கள் பலவும் பெண்களுடையவை.
பெண்கள் எப்படிப் பேச வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வியே எஞ்சுகிறது. உலகெங்கும் “பெண்களின் மொழி” என்று நாம் கொண்டாடுவது பெண்களே உருவாக்கியதா, அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டதா?
இந்தக் கட்டுரை பல முக்கிய வினாக்களை முன்வைக்கிறது. ஜப்பானியப் பெண்கள் எப்படிப் பேசிக்கொண்டார்கள், எப்படித் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக்கொண்டார்கள்? இலக்கியத்துக்கு அவர்களின் பங்களிப்பு என்ன? இன்று அவர்களின் நிலை என்ன?
ஹெய்யான் (Heian Period) கால ஜப்பானில் (794–1185) எழுத்து வடிவங்களே பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. ஆண்களுக்கு ஒருவகை எழுத்து; பெண்களுக்கு இன்னொன்று.
ஜப்பானுக்கு எழுத்துமுறை சீனாவிலிருந்து வந்தது. அரசு ஆவணங்கள், சட்டங்கள், புத்த சமய நூல்கள், உயர்ந்த கவிதைகள் எல்லாம் சீன மொழியில் சீன எழுத்துகளைக் கொண்டே (கஞ்சி) எழுதப்பட்டன. இது ஒதோகொதே (男手), அதாவது “ஆண்களின் கை” என்று அழைக்கப்பட்டது.
சீன மொழி அறிவு அதிகாரத்தின் அடையாளம். அரசவையில் பதவி பெற, சீன இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும். அதைக் கற்கும் வாய்ப்பு ஆண்களுக்கே இருந்தது.
ஜப்பானிய மொழியின் ஒலிகளைச் சீன எழுத்துகளால் எழுதுவது கடினம். அதனால் சீன எழுத்துகளைச் சுருக்கி, எளிமைப்படுத்தி, ஒலி எழுத்துகள் உருவாயின. அவை ‘கானா’ (Kana) என்று அழைக்கப்பட்டன.
வளைந்து நெளியும் கானா எழுத்தான ஹிரகானாவுக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது: ஒன்னாதே (女手), அதாவது “பெண்களின் கை”. அன்றாட வாழ்க்கை, உணர்வுகள், காதல் கடிதங்கள், கவிதைகள் எல்லாம் இந்த எழுத்தில் எழுதப்பட்டன.
இந்தப் பிரிவு கடுமையான சட்டத்தினால் வந்தது அல்ல. அது ஒரு சமூக மரபு.
முராசாகி ஷிகிபு தன் சகோதரனை விட வேகமாகச் சீன நூல்களைக் கற்றார். ஆனால், அரண்மனையில் இருக்கும்போது அது தெரியாவண்ணம் மறைத்தார். மிக எளிய சீன எழுத்தைக் கூட வாசிக்கத் தெரியாது என்று ஆண் அதிகாரிகள் முன் நடித்தார். ஆனால் பேரரசி ஷோஷிக்கு ரகசியமாகச் சீனக் கவிதைகளைக் கற்பித்தார். ஆக, தடை கல்வியின் மீதோ கற்பதன் மீதோ அல்ல; அதை வெளிப்படுத்துவதன் மீதே இருந்தது.
ஆண்கள் கவிதைகளை (வாகா) கானாவில் எழுதினார்கள். கி.பி. 935-இல் கி நோ சுராயுகி என்ற ஆண் கவிஞர் ‘தோசா நாட்குறிப்பு’ என்ற பயண நூலை எழுதினார். அதைக் கானாவில் எழுத, ஒரு பெண்ணின் குரலில் எழுதுவதாக நடித்தார். அதன் தொடக்க வரியின் கருத்து: “ஆண்கள் எழுதுவதாகச் சொல்லப்படும் நாட்குறிப்பைப் பெண்ணான நானும் எழுதிப் பார்க்கிறேன்.”
இதிலிருந்து ஒரு முக்கியமான உண்மை தெரிகிறது. கானா என்பது பெண்களுக்கு மட்டுமான எழுத்து அல்ல. அது உணர்வுகளுக்கான எழுத்து. அதிகாரபூர்வமற்ற, தனிப்பட்ட, மனதின் மொழி. அந்த மொழி “பெண்மை” என்று அடையாளப்படுத்தப்பட்டது. அதனால் ஓர் ஆண் உணர்வுகளை எழுத விரும்பியபோது, பெண்ணின் முகமூடியை அணிய வேண்டியிருந்தது.
கி.பி. 1000-ஐச் சுற்றிய காலத்தில், ஜப்பானின் நிலைத்து நிற்கும் உரைநடை இலக்கியத்தின் பெரும்பகுதியை அரண்மனைப் பெண்களே எழுதினார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வு.
ஹெய்யான் அரண்மனையில் பெண்கள் திரைகளுக்குப் பின்னால் வாழ்ந்தார்கள். ஆண்கள் அவர்களை நேரில் பார்ப்பதே இயலாத செயல். அப்படிப்பட்ட உலகில் பேச்சு என்பது பெரும்பாலும் கவிதைதான்.
ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்பினால், 31 அசைகள் கொண்ட வாகா கவிதை ஒன்றை அனுப்புவான். அவள் பதில் கவிதை அனுப்புவாள். காகிதத்தின் நிறம், கையெழுத்தின் அழகு, கடிதத்தோடு இணைக்கப்பட்ட பூ, பதிலின் வேகம் எல்லாமே பொருள் பொதிந்தவை. கவிதை எழுதத் தெரியாதவளுக்குக் காதலும் இல்லை, திருமணமும் இல்லை, எனவே மரியாதையும் இல்லை.
ஆக, ஹெய்யான் பெண்ணுக்கு எழுத்து என்பது பொழுதுபோக்கு அல்ல; அவசியம். அது சமூக வாழ்வின் கருவி. மணவாழ்க்கை, நட்பு, அரசியல் கூட்டணிகள் எல்லாம் கவிதைப் பரிமாற்றத்தில் தீர்மானிக்கப்பட்டன.
இந்த இலக்கிய மலர்ச்சி தற்செயலானது அல்ல. ஃபுஜிவாரா குடும்பம் அரசைக் கட்டுப்படுத்தியது. தங்கள் மகள்களைப் பேரரசர்களுக்கு மணமுடித்து அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
ஒவ்வொரு பேரரசியைச் சுற்றியும் திறமையான பணிப்பெண்கள் கொண்ட ஒரு “சபை” இருந்தது. அந்தச் சபையின் இலக்கியப் புகழ் பேரரசியின் கௌரவமாகக் கருதப்பட்டது. முராசாகி ஷிகிபு பேரரசி ஷோஷியின் சபையில் இருந்தார். அவருடைய போட்டியாளர் சேய் ஷோனாகோன் பேரரசி தெய்ஷியின் சபையில் இருந்தார். இரண்டு அறிவார்ந்த பெண்கள், இரண்டு சபைகள், அவற்றின் இடையே நடக்கும் இலக்கியப் போட்டி என்றுதான் வாழ்க்கை முறை இருந்தது.
மிச்சிட்சுனாவின் தாய் (Fujiwara no Michitsuna no Haha) எழுதிய ‘காகேரோ நிக்கி’ (Kagerō Nikki) என்ற கவிதைகளும் நாட்குறிப்பும் மிகப் பரவலாக அறியப்பட்டவை. இவர் கி.பி. 974 காலகட்டத்தில் வாழ்ந்தவர். பெண்ணின் அக உலகை முதலில் எழுதியவர் இவரே. கணவரின் புறக்கணிப்பு மற்றும் மன உளைச்சல் நிறைந்த தனது திருமண வாழ்க்கையைப் பற்றித் தனது நாட்குறிப்பில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். இவருடைய எழுத்தே, பின்னாளில் வந்த ‘கெஞ்சியின் கதை’க்கும் மூலாதாரம்.
சேய் ஷோனாகோன் (Sei Shōnagon) ‘தலையணைப் புத்தகம்’ என நிறைய தனிப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை எழுதினார். அதன் பிறகு கி.பி. 1000 காலகட்டத்தில், முராசாகி ஷிகிபு எழுதியதுதான் ‘கெஞ்சியின் கதை’. இது ஒரு புதினம்; ஐம்பத்து நான்கு அத்தியாயங்கள் கொண்டது.
‘கெஞ்சியின் கதை’ இளவரசர் கெஞ்சியின் காதல்களையும் அவருக்குப் பின் வந்த தலைமுறையையும் சொல்கிறது. இந்தக் கதையின் சுவாரஸ்யம், அது கதாபாத்திரங்களின் மனதுக்குள் நுழைந்து எழுதப்பட்டிருப்பதால்தான். நிலையாமையின் மெல்லிய சோகத்தை (மோனோ நோ அவாரே) அது பேசுகிறது.
ஆனால், இதையும் விமர்சனக் கண்ணோடு பார்க்க வேண்டும். ‘கெஞ்சி’ “உலகின் முதல் புதினம்” என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. “புதினம்” என்பது ஐரோப்பிய இலக்கிய வகை. கெஞ்சிக்கு முன்பே ஜப்பானில் ‘மூங்கில் வெட்டியின் கதை’ போன்ற கதை மரபுகள் இருந்தன. நீண்ட கதையில் கதாபாத்திரங்களின் அக உலகைத் தொடர்ந்து ஆழமாகச் சித்தரித்த உலகின் தொடக்ககாலப் படைப்புகளில் இது ஒன்று.
‘கெஞ்சியின் கதை’யை வாசித்த பதின்ம வயதுப் பெண்ணின் மனநிலையைக் காட்டும் ‘சராஷினா நிக்கி’ எனும் நூலை சுகவாரா நோ தகசுவேவின் (Sugawara no Takasue no Musume) மகள் எழுதினார். ஆசிரியைகளின் பெயரே இன்னாருடைய தாய் அல்லது மகள் எனக் குறிப்பிட்டதில் இருந்தே அக்காலத்திய ஆணாதிக்க மனப்பான்மையை அறிந்துகொள்ளலாம்.
இது ஒரு கசப்பான உண்மை. இந்தப் பெண்களில் யாருடைய உண்மையான பெயரும் நமக்குத் தெரியாது.
“முராசாகி” என்பது அவருடைய கதையின் நாயகியின் பெயரிலிருந்து வந்த புனைப்பெயர். “ஷிகிபு” (Murasaki Shikibu) அவர் தந்தையின் அரசுப் பதவியைக் குறிக்கிறது. ‘காகேரோ நிக்கி’ எழுதியவர் “மிச்சிட்சுனாவின் தாய்” என்று மட்டுமே அறியப்படுகிறார். ‘சராஷினா’ என்ற நூலை எழுதியவர் “தகசுவேவின் மகள்”.
அந்தப் பெண்கள் யார் என்பதை ஆண்களுடனான உறவுகளே வரையறுத்தன.
ஜப்பானியப் பெண்கள் எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் தனிச் சொற்களை உருவாக்கினார்கள். ஆனால், “பெண்களின் மொழி” என்று இன்று கொண்டாடப்படுவதில் பெரும்பகுதி மிகச் சமீபத்தியது; அதுவும் ஆண்களால் வடிவமைப்பட்டது.
ஹெய்யான் காலத்திலேயே சாதாரண உரையாடலில் கூடப் பாலின வேறுபாடு இருப்பதை மக்கள் உணரத் தொடங்கினார்கள். இசே பெருங்கோயிலில் பணியாற்றிய பெண் பூசாரிகள் தீட்டு அல்லது அபசகுனம் என்று கருதப்பட்ட சொற்களை நேரடியாகச் சொல்லவில்லை. “மரணம்” என்பதற்குப் பதிலாக “குணமாதல்” என்று சொன்னார்கள்.
தமிழில் “பாம்பு” என்று சொல்லாமல் “நல்ல பாம்பு” என்று சொல்வதும், தாலியைக் கழற்றுவதைத் “தாலி பெருக்குதல்” என்பதும் நினைவுக்கு வரலாம். மங்கல வழக்கு எல்லா மொழிகளிலும் உண்டு.
முரோமாச்சி (Muromachi Period) காலத்தில் (1333–1573) அரண்மனைப் பணிப்பெண்கள் தங்களுக்கென்று ஒரு குழு மொழியை உருவாக்கினார்கள். அதன் பெயர் நியோபோ கொதோபா (女房言葉), “அரண்மனைப் பெண்களின் சொற்கள்”.
இது பெரும்பாலும் உணவு, உடை, வீட்டுப் பொருட்கள் தொடர்பான சொற்களால் ஆனது. இரண்டு முறைகளில் புதிய சொற்களை உருவாக்கினார்கள்: “ஒ-” என்ற மரியாதை முன்னொட்டைச் சேர்த்தல் (நம் “திரு” போல), அல்லது சொல்லின் ஒரு பகுதியை வெட்டி “-மோஜி” (எழுத்து) என்று சேர்த்தல்.
இந்தச் சொற்களில் பல இன்று பொதுவான ஜப்பானிய மொழியின் பகுதியாகிவிட்டன. ஆண்களும் இன்று அவற்றைப் பேசுகிறார்கள், அவற்றின் தோற்றம் தெரியாமலேயே. கீழே உள்ள அட்டவணையில் சில சொற்களைப் பார்க்கலாம்:
| அரண்மனைப் பெண்களின் சொல் | பொருள் | மூலச் சொல் |
| ஒனாகா | வயிறு | நாகா (“நடு”) |
| ஒகொவா | செம்பயறு சோறு | கொவாமேஷி |
| ஒஷாமோஜி | சோறு அள்ளும் கரண்டி | ஷாகுஷி |
| ஒகாகா | உலர்ந்த மீன் துருவல் | கட்சுவோபுஷி |
எடோ காலத்தில் (Edo Period, 1603–1868) கேளிக்கை மாவட்டப் பெண்களுக்கும் தனிப் பேச்சு வழக்கு இருந்தது. குறிப்பாக, வாக்கியங்களை முடிக்கும் விதத்தில் அது வேறுபட்டது.
இன்று “ஜப்பானியப் பெண்களின் மொழி” (ஒன்னா கொதோபா) என்று ஒரு பேச்சு நடை அறியப்படுகிறது. வாக்கியங்களை “-வா”, “-நோ யோ”, “-கஷிரா” என்று மென்மையாக முடிப்பது; அடக்கமான, மரியாதையான, உறுதியற்ற தொனி. இது பழங்கால ஜப்பானிய மரபு என்றும் பெண்மையின் இயல்பான வெளிப்பாடு என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.
ஆனால் இந்த நம்பிக்கையை, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மானுடவியலாளர் மியாகோ இனோவே (Miyako Inoue) உடைத்தார். அவருடைய Vicarious Language (2006) என்ற நூல் ஒரு வியப்பான வரலாற்றைச் சொல்கிறது.
அதன்படி, 1880-களிலிருந்து முதல் உலகப் போர் வரை, மெய்ஜி கால ஆண் அறிவுஜீவிகள் ஒரு புதிய ஒலியைக் கேட்டு எரிச்சலடைந்தார்கள். புதிதாகத் திறக்கப்பட்ட பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளின் மாணவிகள் வாக்கியங்களை “-தேயோ”, “-நோயோ”, “-தாவா” என்று முடித்தார்கள். ஆண்கள் அதை “தேயோ-தாவா பேச்சு” என்று கேலி செய்தார்கள். அது கொச்சையானது, கீழ்த்தரமானது என்று கண்டித்தார்கள். அதைத் தடுக்கும்படி பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தூண்டினார்கள்.
அந்த மாணவிகள் அப்போது பள்ளி வயதுப் பெண்களில் 0.1 சதவீதத்துக்கும் குறைவு. ஆனாலும் அவர்களின் குரல் எல்லா இடத்திலும் மேற்கோள் காட்டப்பட்டது.
அந்தப் பரவலான கவனம் ஒரு வியப்பான மாற்றத்தை ஏற்படுத்தியது. நாவலாசிரியர்கள் அந்தப் பேச்சை “நவீனப் பெண்ணின் குரலாக” நாவல்களில் பயன்படுத்தினார்கள். 1890 முதல் 1930 வரை பெண்கள் இதழ்கள் அதைப் பரப்பின. இழிவாகக் கருதப்பட்ட பேச்சு, மதிப்புக்குரிய “பெண்களின் மொழியாக” மாறியது.
“ஜப்பானியப் பெண்களின் மொழி” ஒரு பழங்கால மரபு அல்ல. அது நவீன தேசம் உருவாக்கிய ஒரு கட்டமைப்பு. பெண்கள் எப்படிப் பேச வேண்டும் என்பதை ஆண் அறிவுஜீவிகள் “கேட்டு”, பெயரிட்டு, வரையறுத்தார்கள். பெண்களின் பெயரால் பரவலாகப் பேசப்பட்டது, ஆனால் பெண்களால் அல்ல.
இன்று பல ஜப்பானிய இளம்பெண்கள் இந்த “பெண் மொழி” முடிவுகளை அன்றாடப் பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் அது முற்றிலும் மறையவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் திரைப்பட வசனங்களிலும் அனிமே கதாபாத்திரங்களிலும் அது இன்னும் வலுவாக வாழ்கிறது. ஒரு வெளிநாட்டுப் பெண் நடிகையின் வசனத்தை ஜப்பானியத்தில் மொழிபெயர்க்கும்போது, நிஜ ஜப்பானியப் பெண்கள் பேசாத அளவுக்குப் “பெண்மையான” மொழி பயன்படுத்தப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆக, “பெண்களின் மொழி” இன்று பெரும்பாலும் பெண்கள் பேசுவது அல்ல; பெண்கள் இப்படித்தான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது.
ஹெய்யான் பொற்காலத்துக்குப் பின் போர்வீரர்களின் யுகம் வந்தது. அரண்மனைச் சபைகள் மங்கின. அவற்றோடு பெண்களின் இலக்கியக் குரலும் மங்கியது.
12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சாமுராய் போர்வீரர்கள் ஜப்பானை ஆளத் தொடங்கினார்கள். அரசவைக் கவிதைப் பரிமாற்றங்களுக்குப் பதிலாக வாளும் விசுவாசமும் மதிப்பு பெற்றன. பெண்கள் இலக்கியப் படைப்பாளிகளிலிருந்து குடும்ப நலன் காக்கும் கருவிகளாக மாறினார்கள்.
ஹெய்யான் பெண்களைப் போல ஒரு முழுத் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மீண்டும் ஜப்பானில் தோன்ற ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகள் ஆயின.
டோக்குகாவா ஷோகுன்களின் (Tokugawa Shogunate) காலத்தில் (1603–1868) கன்பூசிய அறம் அரசின் கொள்கையானது. அந்தக் காலத்தின் மிகச் செல்வாக்கான பெண் கல்வி நூல் ‘ஒன்னா தய்காகு’ (女大学), “பெண்களுக்கான பெருங்கல்வி” என்பதாகும்.
‘ஒன்னா தய்காகு’ (Onna Daigaku), புகழ்பெற்ற அறிஞர் கய்பாரா எக்கென் (Kaibara Ekken) எழுதியது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைய ஆய்வாளர்கள் அதை வேறுபலர் எழுதியதாகக் கருதுகிறார்கள். ஒசாகா பதிப்பாளர் கஷிவாயா சேயேமோன், எக்கெனின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கல்விநூலை 1716-இல் வெளியிட்டதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அது 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபதிப்பானது; புதுமணப் பெண்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
அதன் மையக் கருத்து ஒரே வரியில் அடங்கும்: பெண்ணின் வாழ்நாள் கடமை கீழ்ப்படிதல் ஆகும்.
‘ஒன்னா தய்காகு’ (Onna Daigaku) கணவன் மனைவியை விவாகரத்து செய்ய மாமனார் மாமியாருக்குக் கீழ்ப்படியாமை, குழந்தையின்மை, ஒழுக்கக்கேடு, பொறாமை, தொழுநோய், அதிகமாகப் பேசுதல், திருடும் பழக்கம் என்ற ஏழு காரணங்களைப் பட்டியலிட்டது.
ஆறாவது காரணத்தைக் கவனியுங்கள். ஹெய்யான் காலத்தில் பெண்ணின் சொல்திறன் அவளுக்குக் கௌரவம் தந்தது. எழுநூறு ஆண்டுகளுக்குப் பின், அதே சொல்திறன் அவளைக் குடும்பத்திலிருந்து வெளியேற்றப் போதுமான காரணமானது.
இந்த நூல் கன்பூசியச் சீனாவின் “மூன்று கீழ்ப்படிதல்களை” எதிரொலிக்கிறது. இந்தத் தொடரின் நுஷூ பற்றிய பகுதியில் பார்த்த அதே சிந்தனை, கடல் கடந்து ஜப்பானுக்கும் வந்தது.
இதில் ஒரு முரண் உண்டு. ‘ஒன்னா தய்காகு’ (Onna Daigaku) பெண்கள் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே பரப்பப்பட்டது. அதாவது, அக்காலத்தில் ஜப்பானில் கணிசமான பெண்களுக்கு வாசிக்கத் தெரிந்திருந்தது.
பெண்கள் அடக்கப்பட்டார்கள், ஆனால் எழுத்தறிவற்றவர்களாக வைக்கப்படவில்லை. கல்வி அவர்களைக் கீழ்ப்படியச் செய்யும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இது சீனாவின் “திறமையற்ற பெண்ணே நற்பெண்” கொள்கையிலிருந்து நுட்பமாக வேறுபட்டது.
எடோ காலத்திலும் சில பெண் கவிஞர்கள் தனித்துத் தெரிந்தார்கள். ஹைக்கூ கவிஞர் காகா நோ சியோ (1703–1775) அவர்களில் புகழ்பெற்றவர். ஆனால் அவர்கள் விதிவிலக்குகள்; ஹெய்யான் போன்ற ஒரு இயக்கம் அல்ல.
1868-இல் மெய்ஜி மறுசீரமைப்போடு ஜப்பான் மேற்கு நோக்கித் திரும்பியது. பெண்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வியின் நோக்கம் ஒரு முழக்கத்தில் அடங்கியது: ர்யோசாய் கென்போ (良妻賢母), “நல்ல மனைவி, அறிவுள்ள தாய்”. இதுவே பெண்களுக்கான மாண்பு என்ற முழக்கம்.
பெண் படிக்கலாம். ஆனால் தேசத்துக்கு நல்ல குடிமக்களை வளர்ப்பதற்காக மட்டுமே. இந்தக் கட்டுக்குள் இருந்தே பெண்கள் மீண்டும் பேனாவை எடுத்தார்கள்.
ஹிகுச்சி இச்சியோ (Higuchi Ichiyō, 1872–1896) நவீன ஜப்பானின் முதல் முக்கியப் பெண் எழுத்தாளராகக் கருதப்படுகிறார். தந்தையை இழந்த பின் குடும்பம் சரியான வருமானம் இன்றி வறுமையில் வாடியது. எழுதுவதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றார்.
அவருடைய சிறுகதைகள் டோக்கியோவின் வறுமை மிகுந்த பகுதிகளில் வளரும் சிறுமிகளின் வாழ்க்கையைச் சித்தரித்தன. பெண் வாழ்வின் கசப்புகளை மென்மையாக, ஆனால் கூர்மையாகப் பேசின. காசநோயால் 24 வயதிலேயே மறைந்தார்.
2004 முதல் ஜப்பானின் 5,000 யென் பணத்தாளில் அவருடைய முகம் இடம்பெற்றது. பணமில்லாமல் வாழ்ந்து மறைந்த ஒரு பெண், ஒரு நூற்றாண்டுக்குப் பின் பணத்தாளில் தோன்றினார். 2024-இல் வெளியான புதிய பணத்தாள்களில் அவருக்குப் பதிலாக இன்னொரு பெண் இடம்பெற்றார்: 1900-இல் ஜப்பானின் முதல் தனியார் மகளிர் கல்லூரிகளில் ஒன்றை நிறுவிய கல்வியாளர் சுடா உமேகோ.
யோசானோ அகிகோ (Yosano Akiko, 1878–1942) 1901-இல் ‘மிதரேகாமி’ (கலைந்த கூந்தல்) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். பெண்ணின் உடல், காதல், ஆசை பற்றி அவர் வெளிப்படையாக எழுதியது அக்கால ஜப்பானை அதிர வைத்தது.

1904-இல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் தன் தம்பி போர்முனையில் இருந்தபோது, “நீ சாகாதே” என்ற கருத்தில் ஒரு கவிதை எழுதினார். பேரரசருக்காக உயிர் கொடுப்பதே பெருமை என்று கருதப்பட்ட காலத்தில் அது தேசத் துரோகம் என்று விமர்சிக்கப்பட்டது. ஒரு சகோதரியின் தனிப்பட்ட அன்பு, தேசத்தின் போர் முழக்கத்தை எதிர்த்து நின்றது.
1911 செப்டம்பரில் ஐந்து பெண்கள் சேர்ந்து ‘சேய்தோ’ (青鞜, “நீலக் காலுறை”) என்ற இதழைத் தொடங்கினார்கள். முழுக்கப் பெண்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ஜப்பானின் முதல் இலக்கிய இதழ் அது. அதன் ஆசிரியர் ஹிரட்சுகா ராய்ச்சோ (Hiratsuka Raichō, 1886–1971).
முதல் இதழின் “தொடக்கத்தில் பெண் சூரியனாக இருந்தாள்” என்ற தொடக்க வரி ஜப்பானியப் பெண்ணிய வரலாற்றின் மிகப் புகழ்பெற்ற வாக்கியமானது.
“இன்று அவள் நிலவு. பிறரைச் சார்ந்து வாழ்கிறாள். பிறரின் ஒளியைப் பிரதிபலிக்கிறாள். வெளிறிய, நோயுற்ற முகம் கொண்டவள். மறைக்கப்பட்ட நம் சூரியனை நாம் மீட்க வேண்டும்” என்பதுதான் அந்தத் தொடரின் பொருள்.
“சூரியன்” என்ற உருவகம் தற்செயலானது அல்ல. ஜப்பானியப் பேரரசு குடும்பம் தன் மூதாதையாகக் கொள்வது அமாதேராசு என்ற சூரியப் பெண் தெய்வத்தை. தேசத்தின் தொடக்கமே ஒரு பெண் என்று ராய்ச்சோ நினைவூட்டினார்.
முதல் இதழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றது. உச்சத்தில் மாதம் ஏறக்குறைய 3,000 பிரதிகள் விற்றன. ஆனால் அரசு கொடுத்த அழுத்தத்தாலும் ஊடகங்களின் அவதூறுகளாலும் 1916-இல் இதழ் நின்றது. ஐந்தே ஆண்டுகள். ஆனால் அது விதைத்த விதை ஜப்பானியப் பெண்ணிய இயக்கமாக வளர்ந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1946 ஏப்ரலில் நடந்த தேர்தலில் ஜப்பானியப் பெண்கள் முதன்முறையாக வாக்களித்தார்கள். புதிய அரசியல் சட்டம் ஆண்-பெண் சமத்துவத்தை உறுதிசெய்தது. சட்டத்தில் சமத்துவம் வந்தது; சமூகத்தில் அந்தச் சமத்துவம் மலர இன்னும் காத்திருக்கிறது.
இன்றைய ஜப்பானில் ஒரு விசித்திரமான இரட்டை நிலை நிலவுகிறது. இலக்கியத்தில் பெண்கள் முன்னணியில் நிற்கிறார்கள்; சமூகத்திலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருக்கிறார்கள்.
ஜப்பானின் மிக மதிப்புமிக்க இலக்கிய விருதான அகுதாகாவா பரிசு, 2000-களின் தொடக்கத்திலிருந்து பெண் எழுத்தாளர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று உலகம் வாசிக்கும் ஜப்பானிய எழுத்தாளர்களில் பலர் பெண்கள். எடுத்துக்காட்டாக, பனா யோஷிமோட்டோ ‘கிச்சன்’ என்ற நூலை எழுதினார். இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். யோகோ தவாதா The Emissary நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்; The Emissary-க்கு அமெரிக்க தேசிய புத்தக விருது கிடைத்தது. யூ மிரி (Yu Miri) எழுதிய Tokyo Ueno Station ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது; இதற்கு 2020-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய புத்தக விருது வழங்கப்பட்டது. யோகோ ஒகாவா எழுதிய The Memory Police சர்வதேச புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. சயாகா முராதா (Sayaka Murata) எழுதிய ‘கன்வீனியன்ஸ் ஸ்டோர் உமன்’ 2016 அகுதாகாவா பரிசு (Akutagawa Prize), சர்வதேச அளவில் அதிக விற்பனையான நூல் என்ற பெருமைகளைக் கொண்டது. மியேகோ கவாகாமி (Mieko Kawakami) எழுதிய Breasts and Eggs, Heaven ஆகிய நூல்களும் அகுதாகாவா பரிசை வென்றன; சர்வதேச புக்கர் இறுதிப்பட்டியலிலும் தேர்வாகின.
2024-இல் பிரிட்டனில் அதிகம் விற்ற 40 மொழிபெயர்ப்புப் புனைவுகளில் 43 சதவீதம் ஜப்பானிய எழுத்தாளர்களுடையவை என்று ‘தி கார்டியன்’ குறிப்பிட்டது. அந்த அலையின் முன்னணியில் பெண்கள் இருக்கிறார்கள்.
இந்தப் பெண்களின் எழுத்து மன ஆறுதலைத் தருவதற்காக எழுதப்பட்டது அல்ல. முராதாவின் நாயகி சமூகம் எதிர்பார்க்கும் “சாதாரணப் பெண்” ஆக மாற மறுக்கிறாள். கவாகாமியின் பாத்திரங்கள் தாய்மை, உடல், வறுமை, வன்முறை பற்றி நேரடியாகப் பேசுகிறார்கள். ‘ஒன்னா தய்காகு’ (Onna Daigaku) “அதிகம் பேசுவதை” குற்றம் என்றது. இன்றைய ஜப்பானியப் பெண் எழுத்தாளர்கள் உலகம் முழுக்க அவர்கள் குரல் எதிரொலிக்கும் வகையில் பேசுகிறார்கள்.
இந்த வெற்றிக்கும் ஒரு நிழல் உண்டு. 2008 முதல் அமெரிக்காவில் வெளியான 225 ஜப்பானிய நாவல் மொழிபெயர்ப்புகளில் 65 மட்டுமே பெண்கள் எழுதியவை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. ஜப்பானுக்குள் ஆண்-பெண் எழுத்தாளர்கள் சமநிலையில் இருந்தாலும், உலகுக்குச் செல்லும் வழியில் ஆண்களே அதிகம்.
2025 அக்டோபர் 21 அன்று சனே தகாய்ச்சி (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார். 1885-இல் தொடங்கிய பிரதமர் பதவியின் 140 ஆண்டு வரலாற்றில் இது ஒரு மைல்கல்.
ஆனால் அந்த வெற்றியும் முரண்கள் நிறைந்தது. தகாய்ச்சி தீவிரப் பழமைவாதி. அவருடைய 19 பேர் கொண்ட அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மூன்று பெண்கள் மட்டுமே. பெண்கள் பேரரசியாக அரியணை ஏறுவதை அனுமதிக்கும் வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தை அவர் எதிர்க்கிறார். ஜப்பானின் முன்னணிப் பெண்ணியவாதி சிசுகோ உவேனோ (Chizuko Ueno), பெண் பிரதமர் தரவரிசையை உயர்த்துவார், ஆனால் அரசியல் பெண்களிடம் கருணையாக மாறும் என்று அர்த்தமில்லை என்று உரைத்தார்.
2026 செப்டம்பர் 16 அன்று உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட உலகப் பாலின இடைவெளி அறிக்கையில், ஜப்பான் 145 நாடுகளில் 117-ஆவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டு 118-ஆவது இடம். ஜி7 நாடுகளில் தொடர்ந்து கடைசி இடம். சீனா (96), தென் கொரியா (101) ஆகிய நாடுகளை விடவும் பின்னால் உள்ளது.
பல அளவீடுகளின் அடிப்படையில் ஜப்பானுக்குக் கிடைத்த மொத்த மதிப்பெண் 0.670 (1 என்பது முழுச் சமத்துவம்). பெண் பிரதமர் பதவியேற்றது “வரலாற்று நிகழ்வு” என்று அறிக்கை பாராட்டியது. ஆனாலும் பெரிய முன்னேற்றம் இல்லை. வீட்டு வேலையும் குழந்தை வளர்ப்பும் பெரும்பாலும் பெண்களின் தலையிலேயே இருப்பதால், அரசியலிலும் தொழிலிலும் தலைமை ஏற்கும் வாய்ப்பு அவர்களுக்குக் குறைவாக உள்ளது.
கல்வியில் ஜப்பானியப் பெண்கள் ஆண்களுக்கு இணையாக இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கல்வி அதிகாரமாக மாறவில்லை. மெய்ஜி (Meiji) காலத்தின் “நல்ல மனைவி, அறிவுள்ள தாய்” முழக்கம் இன்னும் முழுமையாக மறையவில்லை.
ஜப்பானியப் பெண்களின் இலக்கிய வரலாறு பெரும்பாலும் வெற்றிக் கதையாகச் சொல்லப்படுகிறது. அது பாதி உண்மை. மீதிப் பாதியைப் பார்க்க நான்கு கேள்விகளைக் கேட்க வேண்டும்.
இந்தக் குரல்கள் யாருடையவை? ஹெய்யான் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பிரபுக் குடும்பப் பெண்கள். அரண்மனையில் வாழ்ந்தவர்கள். பணிப்பெண்கள் இருந்தவர்கள். நேரமும் காகிதமும் கல்வியும் இருந்தவர்கள்.
வயலில் உழைத்த பெண்கள், மீன் பிடித்த பெண்கள், நெசவு செய்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன பாடினார்கள் என்பது நமக்குத் தெரியாது. “ஜப்பானியப் பெண்களின் இலக்கியம்” என்று நாம் கொண்டாடுவது ஒரு சிறு உயர்குடிப் பெண்களின் இலக்கியம். இதை மறந்தால் வரலாற்றை மீண்டும் ஒரு வர்க்கத்தின் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம்.
“பெண்களுக்குச் சீனம் மறுக்கப்பட்டதால் கானாவில் எழுதினார்கள்” என்பது எளிமையான கதை. ஆனால், உண்மை சிக்கலானது.
முராசாகி சீனம் அறிந்திருந்தார்; ஆனால் அதை ஆண் அதிகாரிகள் முன் மறைத்தார். சுராயுகி ஆண்; ஆனால் பெண் முகமூடி அணிந்து கானா எழுத்துவடிவத்தைப் பயன்படுத்தினார். கானா பெண்களுக்கு மட்டுமான எழுத்து அல்ல. அது உணர்வுகளுக்கான எழுத்து; “பெண்மை” என்று முத்திரை குத்தப்பட்டது.
ஆக, இது அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டதன் கதை மட்டுமல்ல; ஒரு “தாழ்ந்த” மொழியைப் பெண்கள் உயர்த்தியதன் கதை. ஆனால் அந்த மொழி தாழ்ந்த, அடக்கப்பட்ட குலம் பேசுவதாக முதலில் தீர்மானித்தது ஆண்களின் அதிகாரம்தான்.
மியாகோ இனோவேயின் (Miyako Inoue) ஆய்வு இந்தக் கட்டுரையின் மிக முக்கியமான பாடத்தை வலியுறுத்துகிறது. ஒரு மொழி வடிவம் “பெண்மையானது” என்று கொண்டாடப்படும்போது, அது பெண்களைக் கட்டுப்படுத்தும் கருவியாகவும் மாறுகிறது. “பெண் இப்படித்தான் பேச வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.
அரண்மனைப் பெண்களின் நியோபோ கொதோபா பெண்களே உருவாக்கியது. மெய்ஜி (Meiji) கால “பெண்களின் மொழி” ஆண்கள் பெயரிட்டு உரையாடும் விதிகளை வரையறுத்தது. முதலாவது படைப்பு; இரண்டாவது கட்டுப்பாடு. இரண்டையும் ஒன்றாகக் கொண்டாடுவது தவறு.
ஜப்பானில் பெண்கள் அடைந்த இலக்கிய வெற்றி ஏன் சமூகத்தின் வெற்றியாகவில்லை?
இதுவே மிகக் கடினமான கேள்வி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் ஜப்பானின் இலக்கிய மொழியை வடிவமைத்தார்கள். இன்று உலகம் வாசிக்கும் ஜப்பானிய நாவல்களில் பலவற்றைப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் பாலின இடைவெளியில் ஜப்பான் உலகில் 117-ஆவது இடத்தில் இருக்கிறது.
பெண்களின் எழுத்து எப்போதும் “அகம்” சார்ந்ததாகவே அனுமதிக்கப்பட்டது. உணர்வுகள், காதல், குடும்பம், தனிமை. “புறம்” சார்ந்த அதிகாரம்—அதாவது அரசு, பொருளாதாரம், சட்டம்—ஆண்களிடமே இருந்தது. பெண்கள் அகத்தின் அரசிகளாகக் கொண்டாடப்பட்டார்கள்; புறத்தின் கதவுகள் மூடியே இருந்தன.
தமிழ் வாசகருக்கு இந்த அகம்-புறம் பிரிவு நன்கு பழக்கமானது. சங்க இலக்கியம் அதே பிரிவைக் கொண்டது.
கீழே இருக்கும் அட்டவணை சீன நுஷூ மொழிவடிவத்தையும் ஜப்பானின் ஹெய்யான் வடிவத்தையும் தமிழ்நாட்டின் சங்க இலக்கியத்தையும் ஒப்பு நோக்குகிறது:
| அளவுகோல் | ஜப்பான் (ஹெய்யான்) | சீனா (நுஷூ) | தமிழ்நாடு (சங்கம்) |
| யார் எழுதினார்கள் | அரண்மனைப் பிரபுப் பெண்கள் | கிராமத்து உழவர் பெண்கள் | அரசவை, பொதுமக்கள் இரு தரப்புப் பெண் புலவர்கள் |
| எந்த எழுத்து | கானா, “பெண்களின் கை” | தனி ரகசிய எழுத்து | பொது எழுத்து, ஆண்களோடு அதே மொழி |
| யாருக்காக | அரசவையும் வாசகர்களும் | சபதச் சகோதரிகளுக்கு மட்டும் | அரசர்களும் சமூகமும் |
| என்ன ஆனது | தேசிய இலக்கியத்தின் அடித்தளம் | அருங்காட்சியகப் பொருள் | செவ்வியல் இலக்கியத்தின் பகுதி |
| பெயர் நிலைத்ததா | பெரும்பாலும் இல்லை | பெரும்பாலும் இல்லை | பல பெயர்கள் நிலைத்தன |
ஜப்பானில் ‘ஒன்னா தய்காகு’ (Onna Daigaku) சொன்ன விதிகளையும், சீனாவில் ‘மூன்று கீழ்ப்படிதல்கள்’ என்ற நிர்ணயத்தையும், தமிழில் தொல்காப்பியம் சொன்ன ‘அச்சம், நாணம், மடம்’ என்ற கோட்பாட்டையும் மீறிப் பெண்கள் எழுதினார்கள்.
வேறுபாடு இதுதான்: ஜப்பானியப் பெண்கள் தனி எழுத்தில் எழுதி மையத்தைக் கைப்பற்றினார்கள். சீனப் பெண்கள் தனி எழுத்தில் எழுதி வெளிப்புறத்தில் கவனிக்கப்படாதவர்களாகவே இருந்தார்கள். தமிழ்ப் பெண்கள் ஆண்களின் அதே மொழியில் எழுதி, அதே அவையில் இடம் பிடித்தார்கள். எது சிறந்த வழி என்பதை வரலாறு இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஆதாரங்கள்
- Nyōbō kotoba — Wikipedia
- Raluca Nicolae, An Historical Perspective on Women’s Speech in Japanese — CEEOL
- Miyako Inoue, Vicarious Language — University of California Press
- Nanette Gottlieb, review of Vicarious Language — Project MUSE
- Miyako Inoue, The Listening Subject of Japanese Modernity — University of Washington
- Onna Daigaku — Wikipedia
- C. Andrew Gerstle, Onna daigaku takara-bako — Nichibunken
- Kaibara Ekken — Wikipedia
- Great Learning for Women — Red Circle Authors
- Hiratsuka Raichō — Wikipedia
- Seitō magazine — Japan Times
- In the Beginning, Woman Was the Sun — Bluestocking Society
- Breaking Gendered Expectations in Japanese Lit — World Literature Today
- Rising sun: why Japanese fiction is booming — Prospect
- Japanese women writers gaining recognition — Asia News Network
- The ongoing battle to translate Japan’s leading literary women — Metropolis
- Mieko Kawakami — The Boar
- Sanae Takaichi becomes Japan’s first female PM — NBC
- Sanae Takaichi makes history — bne IntelliNews
- Takaichi and female representation — Women’s Agenda
- Japan Rises One Place in 2026 Gender Gap Ranking — Nippon.com
- Japan Ranks 117th in 2026 — Jiji Press
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
