அஞ்சலி: சேரன் உருத்திரமூர்த்தி

நவம்பர் 18, 2026, புதன்கிழமை. நீண்ட வேலைநாளையடுத்து உலகப் புகழ்பெற்ற டொராண்டோ மாநகரச் சாலை நெரிசலில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வாகனம் ஓட்டிக் களைத்து வீடு திரும்பிய சில நொடிகளில் நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து இந்தச் செய்தி வந்தது:

Venkat,
Reaching out to share heartbreaking news. Our beloved Cheran anna will be taken off life support later today between 7pm and 8pm. Please pray for a smooth transition.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு செய்வதறியாது, அசைவின்றி உட்கார்ந்து கொண்டிருந்தேன். “சொல்லுங்கோ, வெங்கட்” என்ற கனிவான குரல் ஓய்ந்துபோகவிருக்கிறது. அதனுடன் சேர்ந்து எப்போதும் பூக்கும் முறுவலும் அஸ்தமிக்கும். என்னால் என்ன செய்ய இயலும்?

அடுத்து இரண்டு மணி நேரத்தில் அந்தச் செய்தியும் வந்து சேர்ந்தது; சேரன் இனி இல்லை. ஓய்ந்தது வெறும் நண்பரின் குரலல்ல, அது இந்த நூற்றாண்டின் உன்னத தமிழ்க் கவியின் குரல். வேறெந்த சமகாலத் தமிழ்க் கவிஞரையும்விட அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் எதிரொலித்த குரல். சேரனையும் கடந்து எழுதப்பட்ட வாக்கியங்களாகக் காலத்திற்கும் நிலைத்திருக்கப்போகும் கவிதைகள் அவருடையவை. 

தமிழிலக்கியப் பரப்பில் கவிஞர், நாடக ஆசிரியர், ஓவியர், பத்திரிக்கையாளர், அரசியல் செயற்பாட்டாளர் என்றே சேரன் அறியப்படுகிறார். மானுடவியல் பேராசிரியர், சமூகவியல் ஆய்வாளர் – இது கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு அவர் காட்டிய இன்னொரு முகம். ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்; தொட்டதனைத்திலும் தன் தடத்தை ஆழப்பதித்தவர்.

டொராண்டோ நடுநகர் புத்தகக்கூடமொன்றில் கவிஞர் சேரன். நிழற்படம்: வருண் வெங்கட்ரமணன்.

உருத்திரமூர்த்தி சேரன் 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அளவெட்டி கிராமத்தில் பிறந்தார், அவருக்கு ஐந்து உடன்பிறப்புகள். தந்தை து. உருத்திரமூர்த்தி (1927-71) அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றியவர். மஹாகவி என்று அறியப்பட்ட உருத்திரமூர்த்தி, தமிழ் நவகவிதையின் முன்னோடிகளில் ஒருவர். சமூக அக்கறையும் மனிதநேயமும் தொனிக்கும் சமகால உணர்வுக் கவிதைகளை எழுதியவர். தந்தை மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்களின் வழிகாட்டல் இயல்பாகவே சேரனை இலக்கியத்தின் மீது ஆர்வம் கொள்ளச் செய்தது, 

பதினொரு வயதில் தான் படித்த தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் தன் ஆர்வத்தின் போக்கை முற்றாக மாற்றியதாகக் குறிப்பிட்டார். சென்ற வருடம் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் சேரனை அவர் இல்லத்தில் சந்தித்தபோது காந்தியின் ‘சத்திய சோதனை’ வாசிப்பு, பள்ளி நாட்களில் மாமிச உணவை மறுத்து மரக்கறி மாத்திரம் உண்பவராகத் தன்னை மாற்றியது என்று சொன்னார். வீட்டில் எல்லோருக்கும் ஒரு (பெரிதும் மீன்) உணவும், தனக்கு மட்டும் மரக்கறி உணவு என அம்மா எப்படி இரட்டைச் சமையல் செய்யவேண்டியிருந்தது என்று எங்களிடம் சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாலும், தமிழும் அரசியலுமே அவரை முழுவதும் ஆக்கிரமித்தன. அதற்கான முக்கிய காரணம், 1981-ல் 95,000 புத்தகங்களுடன் யாழ் பொது நூலகம் இலங்கை காவல்துறையினரால் எரியூட்டப்பட்டமை.

சேரனின் முதற்கவிதைகளுள் ஒன்றான ‘நாள்’ அவருக்கு நெருக்கமான காதல், அரசியல் இரண்டையும் ஒருசேரப் பேசுகிறது. 

நாள்

மூங்கில்கள் நெரியும் கரை
மஞ்சளாய் நெளிகிற நதி
அக் கரையருகே நீ…..
எனது புரிதல் நிகழாதென்று
உனக்குத் தெரிந்தும்
உனது மொழியில்
உரத்துச் சொல்கிறாய்.
எனக்கு,
எனது மொழியில் தான்
பேச இயலும்.
உனக்குக் கோபம் வருகிறது
நான் என்ன செய்ய?
மீண்டும் மீண்டும்
உனது மொழியில் கடிதம் எழுதுவாய்,
சிரமம் எடுத்துப்
புரிந்து கொள்வதற்கான
குறைந்த பட்ச நேசமும் அற்றுப் போயிற்று;
இப் போதைக்கு நட்டம் எனக்குத்தான்
எனினும்,
நான் அவற்றை அடுப்பில்
போடுகிறேன்;
கிழித்தே எறிவேன்!
இனி –
அவர்கள், எனது மக்களும்
அதைத்தான் செய்வார்கள்.
காற்று வீசுகையில்
மூங்கில்கள் நெரியும் கரையில்
நெருப்புப் பற்றும்
பிறகு,
உனது வீட்டிற்கும் பரவும்.
(சேரன், வயல் காலாண்டுக் கவிதை இதழ்-1, ஜனவரி 1983)

படிப்பின் பின் Saturday Review என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். 1987-ல் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை அடைந்தபோது சார்ட்டர்டே ரிவ்யூ அலுவலகம் குண்டுவீசித் தாக்கப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்து சென்று தி ஹேஹ் (The Hague) பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஈழம் திரும்பியபோது இந்திய அமைதிப்படை மக்கள் வாழ்வின் போக்கை முற்றாக மாற்றியிருந்தது. அப்போது ‘சரிநிகர்’ என்ற இலக்கிய, அரசியல், சமூகவியல், பத்திரிக்கையைத் துவங்கினார். பின்னர், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட நிலையில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். பத்தாண்டுகள் நடத்தப்பட்ட ‘சரிநிகர்’ நின்றுபோனது. இங்கே யார்க் பல்கலைக்கழகத்தில் மனிதவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து விண்ட்ஸர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரகப் பணியாற்றினார். 

பிரிதல்

கொடி எங்கும் மல்லிகைப்பூ
குளம் எங்கும் அல்லிமொட்டு
வேலி வரிச்சுகள் மேல்
முள்முருக்கு பூத்திருக்கு
பார்த்தபடி நானிருக்க
இப்படித்தான் விரியும் வசந்தம்
என்று சொன்னபடி
நீ போனாய் அன்றைக்கு
இன்றைக்கோ
தந்திமரக் கொப்பில் உடல்சிலுப்பி
இறகுதிர்க்கும் குருவி ஒன்று.
உயரே உலாப்போகும்
மஞ்சு
குளக்கரையில்
நீளக்காலூன்றி ஒரு
கொக்கு
தவமிருக்கு.

சேரனின் கவிதைகளை ஒருசேர வாசிக்கும்போது 1980 தொடங்கி இன்றுவரை ஈழத்தின் வரலாற்றின் துல்லிய குறுக்குவெட்டுத் தோற்றம் தெளிவாகப் புலப்படும். புரட்சிக்கான அறைகூவலும், சமூக நீதிக்கான கரிசனையும் மாத்திரமல்லாது, ஒரு சமூகத்தின் அவல வரலாற்றின் சாட்சியங்களாகவும் அவை நிலைபெறுகின்றன. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘இரண்டாவது சூரிய உதயம்’ 1983-ல் வெளியானது.  தொடர்ந்து இறுதி மூச்சுவரை கவிதைகளை எழுதிக்கொண்டேயிருந்தார்.  

ஒரு பிற்பகலில் ஓராயிரம் எழுதியது

பாவலர் புரிந்து கொள்ளும்படி
எளிதாய் எழுத விரும்புகிறேன்
இடையறாத வலியைப் பற்றி ஒன்று,
இல்லாமல் போன கைகள்
இருப்பதான உணர்வு தரும்
மாயக் கனவுகள் பற்றி ஒன்று
முக்காடு போட்டு மறைத்தாலும்
எப்போதும்
எனக்காக ஒளித்து வைத்திருக்கும்
முடிவற்ற முத்தங்கள் பற்றி
நாவற்பழ முலைக்காம்புகள் பற்றி
ஓராயிரம்.
(சேரன் கவிதைகள், அகழ், பெப்ரவரி 2023)

சேரனின் கவிதைகள் தமிழ்ச் செவ்வியல் மரபின் அடிமானத்தில் கட்டியெழுப்பப்பட்டவை. காதல், பிரிவு, காமம், போர், நிலம் (குறிப்பாகக் கடல்), காலம் உள்ளிட்ட செவ்வியல் கூறுகள் அவரது பெரும்பாலான கவிதைகளில் விரவி வருகின்றன. மறுபுறம் அவர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபின் புதிய கவிதைப் பரப்புக்கான சாத்தியங்களையும் விரித்தெடுத்தார். 

உறைபனி மழை
விளையாட்டுக்குத் துப்பாக்கியை
கையில் வைத்திருந்த பாலகனை
சுட்டுக் கொள்கிறான்
வெள்ளைப் பொலிஸ்காரன்
வெண்பனியில் பரவும் குருதி
அழகான சித்திரமாக மாறுகிறது அவனுக்கு
சேரா
உயிரா? கலையா?
(திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல், காலச்சுவடு பதிப்பகம், 2019)

சேரன் இனவிடுதலைக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தைத் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார்: 

“ஈழத்தமிழ்ப் போராட்டங்களில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட ஒரு அனுபவத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நொந்துபோன ஒரு ஆத்துமாவாகவும், பாதிக்கப்பவர்களென்ற மனோநிலையிலும், கோபத்திலும் மட்டுமே கட்டி எழுப்பப்படுகிற ஒற்றைப்பரிமாணம் கொண்ட ஒரு தேசியம் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் விடுதலை உணர்வையும் மனிதநேயத்தையும் கூறுபோடுகின்ற ஒன்றாகவே வடிவம் பெறும்” 

(‘உயிர்கொல்லும் வார்த்தைகள்’ – கட்டுரைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், 2001)

கனடா பெயர்வுக்குப் பின் கல்விப்புல விசால நோக்கும், அவருக்குச் சாத்தியப்பட்ட நெருக்கமான பன்னாட்டு எழுத்தாளர்கள் தொடர்பும், அவரது பார்வைப் பரப்பை விரித்தன.  டொராண்டோ நகரின் கென்ஸிங்க்டன் சந்தையில் காப்பிக்கடைகளிலும், மதுக்கூடங்களிலும் அவ்வப்போது கூடும் பலஸ்தீனிய, குர்திஷ், வியட்நாமிய, ருவாண்டா, தென்னமெரிக்கக் கவிதைக் குழுக்களில் சேரன் தமிழைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நட்புகள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியின் பொதுமையை அவருக்கு அடையாளம் காட்டியது. தமிழனுக்கெனவே ஒலித்துக்கொண்டிருந்த குரல் உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குமாகத் தனது உணர்வுபூர்வத் தோழமையை உரத்துச் சொல்லத் தொடங்கிற்று: 

ரோஹிங்க்யாவுக்கும் எமக்கும்

பசியில் அழுகின்ற குழந்தைக்கு
ஒரு பிடி சோற்றை (அல்லது ஒரு விசுக்கோத்தை)
உண்ணக் கொடுத்துவிட்டு
அதன் கழுத்தைத் துண்டித்தவனைக் கண்டதுண்டா?
மியன்மாரில், ஈழத்தில், வியட்னாமில், கொங்கோவில்,
காஷ்மீரில், யேமனில், பலஸ்தீனில், எல்சல்வடோரில்…
(அஞர், காலச்சுவடு பதிப்பகம், 2018)

டொராண்டோ நடுகரில் அவருடைய இல்லத்துக்கு அருகிலுள்ள ‘Graffiti Alley-ல் சேரன். Photo by Walter Keller, via Wikimedia Commons, Published under Creative Commons license.



அவருடைய கவிதைகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், சிங்களம், டச்சு, அரபு, ஜெர்மன், வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* * * 

நான் 2001-ல் கனடா புலம்பெயர்ந்தபின் கிடைத்த ஆரம்பகால நட்புகளில் ஒருவர் சேரன். பெரிதும் இலக்கியச் சந்த்திப்புகளில் நிகழும் உரையாடல்களாகவே எங்கள் நட்பு நீடித்தது. இதற்கு பணிநிமித்தமாக சேரன் தொலைவிலிருந்ததும் ஒரு காரணம். கடந்த இரு வருடங்களாக, இலக்கியத் தோட்டத்தின் செயற்பாடுகள் மூலம் எங்களிடையே நெருக்கமான இணைப்பு சாத்தியப்பட்டது, கூடவே தனிப்பட்ட சந்திப்புகளும், உரையாடல்களும்.  இலக்கியத் தோட்டத்தின் செயற்பாடுகளை மேம்படுத்த, விரிவுபடுத்த அவருக்குப் பல ஆசைகள் இருந்தன. சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து நோயுற்றிருந்தார். ஆனாலும் அவருடைய கவிதை மொழியைப்போலவேதான் எங்கள் உரையாடல்களும் – எப்போதும் முடிவில்லா நம்பிக்கையுடன் “அடுத்த கிழமை கதைப்போம்” என்பதாகவே நிறைவுகொள்ளும். இனி அந்த அடுத்த கிழமை இல்லாது போயிற்று. 

மரணம்

காரணம் அற்றது,
நியாயம் அற்றது,
கோட்பாடுகளும் விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே உறைந்து போக
முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில்,
இருளில்,
திசை தெரியாது
மோதி மோதிச் செட்டையடிக்கிற
புறாக்களை,
தாங்கும் வலுவை என்
இதயம் இழந்தது.
இளைய வயதில்
உலகை வெறுத்தா
நிறங்களை உதிர்த்தன,
வண்ணத்துப் பூச்சிகள் ?
புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
சூரிய காந்தியாய்,
நீர் தொடச்
சூரிய இதழ்கள் விரியும்
தாமரைக் கதிராய்,
நட்சத்திரங்களாய்
மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை,
பொய்கைக் கரையில்
அலைகளைப் பார்த்திரு !
(யமன், சேரன் கவிதைகள், படைப்பாளிகள் வட்ட வெளியீடு – 2, 1984)

சேரன் என்ற பெருங்கவியின் வார்த்தைகள் நீண்டகாலம் நிலைத்துத் தமிழர்களின் துயர்களை, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இழப்புகளைச் சொல்லும். அவை உலகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து அதிரச் செய்துகொண்டேயிருக்கும். அவ்வார்த்தைகளின் அடியாழத்தில் நம்பிக்கை தொனிக்கும். ஹோலோகாஸ்ட்டில் பிழைத்த எழுத்தாளர் ப்ரிமோ லெவி (Primo Levi, 1919-1987) “அது நடந்தது; எனவே அது இனியும் நடக்கும், எங்கு வேண்டுமானாலும் நடக்கும்.” என்று சொன்னார். அதே வார்த்தைகளை சேரனின் கவிதைகள் காலத்துக்கும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.