சென்னை புத்தகக் கண்காட்சி வருகிறது. எந்த நாவலகளை வாங்க வேண்டும்?
என் டாப் 10 விழைப் பட்டியல்: (எந்த வரிசைக்கிரமத்திலும் இல்லை)
அ) சயந்தன் – திசை ஒன்பது
பின் அட்டை:
இருத்தலே உயிரின் இலக்கு. எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு. ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது. ஈழத்தின் வெம்மைக்கும் உக்ரேனின் உறை குளிருக்கும் இடையில் ஓயாது அல்லாடும் வாழ்க்கைச் சித்திரம். の இரண்டு யுத்தங்களுக்கும், இரண்டு காதல்களுக்கும் இடையில் நீளும் பயணம்.
அரவிந்தராஜ் அறிமுகம்
சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப் பாணியில் அகதிகளின் பயணக் கதைகளைக் கூறுவதே திசை ஒன்பது நாவல்.
யுத்தம். அதற்குத் தப்பவோ அல்லது பணம் உழைக்கவோ அகதிகளாகியிருக்கிறார்கள்.
நாவல் முழுவதும் ஒரு எள்ளல் கூட வருகிறது. கதைசொல்லியான இளங்கோ ஒரு எழுத்தாளராக வர ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம் கருணாகரமூர்த்தி, ஜெயமோகன், ஜோர்சா ஓவல், ரஷ்ய எழுத்தாளர்கள் என பலரையும் அவர்களது படைப்புக்களையும் கதைக்குள் கையாண்டிருக்கிறார் சயந்தன். சில வேளைகளில் எள்ளலாகவும். அதுவே அத்தியாயங்களை இணைக்கவும் கதையை கொண்டு செல்லவும் வாய்ப்பாகின்றது.
நாவல் நேர்கோட்டுப் பாங்கற்ற முறையில் (non linear) நகர்கிறது.
யாழ்ப்பாண மனநிலை அதிலும் போலி முற்போக்கு, சாதியம், கணவன் மனைவி உறவுமுறையும் எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கம் போன்றன நகைப்பிற்குள்ளாகின்றன.
நாவலின் பல இடங்கள் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக உக்ரைனின் யுத்தத்திற்காக போராட இணையுமாறான அழைப்பு மற்றும் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்படல் போன்றன ஈழ இறுதி யுத்தத்தை மனதில் எழுப்புகின்றன.
ஆ) சந்திரா தங்கராஜ் – மலையேற்றம்
பின் அட்டை:
- மலையேற்றம்: வன்மத்தின் பதுங்குக்குழி – கனலி
- மலையேற்றம் – சந்திரா தங்கராஜ்: – Saravanan Manickavasagam.
மலைகள் ஒன்றையொன்று பின்னி உயரமாக, கரடுகளாக, திசைமாற்றும் பாதைகளாக சுழன்று இருப்பதைப்போல இந்த நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். மனித மனதின் துரோகங்களும், வெறுப்பும், போட்டியும் பொறாமையும், பழி உணர்ச்சியும் ஆபத்து மிகுந்த பள்ளங்கள் என்பதை நாவல் உணர்த்திச் செல்கிறது. அதில் அன்பும், காதலும் காட்டின் நடுவே ஓடும் நீரோடையாக வாழ்தலின் தரிசனத்தைக் காட்டுகிறது. நிலத்திற்கும், மலைக்கும் மாறி மாறிப் பயணிக்கும் ஒவ்வொரு அத்தியாயமும் மனித வாழ்வின் அலைச்சலையும் அதன் இடர்களையும் அசலாக வெளிப்படுத்துகிறது. கரையேற முடியாத துயர் ஆற்றின் மடியில் தத்தளிப்பவனுக்குக் கிடைக்கின்ற மரத்துண்டு இது. இந்த மலையேற்றத்தின்போது நாம் அடைகின்ற உணர்வை எளிதில் இறக்கி வைக்க முடியாது என்றாலும், அதன் உச்சியில் அமர்ந்திருக்கின்ற ஒன்றுக்காகதான் மனித வாழ்வு எல்லாக் காலத்திலும் வேண்டி நிற்கிறது.
ராஜி பாலசுப்பிரமணியன் அறிமுகம்:
மங்களதேவி மலையேறும் ராசபாண்டியின் கதை – ஏழுவயதில் பிரிந்த தன் அப்பாவுடனான பிளவுபட்ட உறவின் நினைவுகளில் விரிகிறது. பயணத்தில் ராசபாண்டி, தன்னை இழக்கின்றானா, அறிந்துகொள்கிறானா என்பதை நாவல் சித்தரிக்கிறது. நாவலின் கதைக்களம் தேனி மாவட்டச் சூழலில், சரளமான வட்டாரவழக்கில் அமைந்துள்ளது.
காரல் மார்க்ஸ் கணபதி:
சந்திராவிடம் பிரமிப்பூட்டக்கூடிய ஒரு விஷயம், எதையும் அச்சமின்றிப் பார்க்கிற அவரது பண்பு. சகோதரர்களுக்கிடையே நடக்கும் சண்டையை விலக்குவதற்காக இடுப்பில் இருக்கும் குழந்தையோடு உள்ளே புகுந்து மறிக்கிறாள் ஒருத்தி. அவர்கள் ஆயுதங்களோடு மோதிக்கொள்கிறார்கள். சீற்றத்தோடு அவர்களைக் குறுக்கிடும் இவள் இடுப்பிலிருந்து நழுவிப்போன குழந்தையை மறந்து அவர்களது சண்டையைத் தடுக்கிறாள். அவர்களது மூர்க்கத்தில் மிதிபட்டு இறக்கிறது குழந்தை. மேலும் நான்கைந்து பேர் சாகிறார்கள். அதுவொரு நிலம் சார்ந்த சச்சரவு மாத்திரமல்ல. அந்த வன்முறை வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற ஏக்கமும் அதன் உள்ளேயே பொதிந்து கிடக்கிறது. இரண்டு பண்புகளையும் உக்கிரமாகப் பேசுகிறது நாவல். அட்டகாசம்!
இ) ஜி. கார்ல் மார்க்ஸ் – பீச்
பின் அட்டை:
நவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்.
சித்ரா சிவன் அறிமுகம்:
உலகமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியச் சமூகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர்க்க முடியாத அதிகார மையங்களாக உருவெடுத்திருக்கும் சூழலே நாவலின் அடிப்படைப் பின்புலம். பணம் மட்டுமே மைய மதிப்பாக மாறும்போது மனிதர்கள் எவ்வாறு படிப்படியாக ‘சரக்குகளாக’ மாற்றப்படுகிறார்கள் என்பதைக் கதை பேசுகிறது.
பீச் நாவலின் முக்கியமான அழகியல் அதன் சிதறல் தன்மை. வழக்கமான நாவல்களில் காணப்படும் மையக் கதாபாத்திரம், தொடர்ச்சியான கதைச்சரடு, தொடக்கம்,உச்சம்,முடிவு என்ற கட்டமைப்பை எதிர்பார்த்து வாசிக்கத் தொடங்கும் வாசகருக்கு இந்நாவல் வேறொரு வாசிப்பு அனுபவத்தை முன்வைக்கிறது.
‘பீச்’ ஒரு உருவகம்.
‘பீச்’ என்ற தலைப்பும் தனக்குள் பல சாத்தியங்களை வைத்திருக்கிறது. கடற்கரை என்பது நிலமும் கடலும் சந்திக்கும் இடம். நிலம் உறுதியானது; கடல் தொடர்ந்து அசைந்துகொண்டிருப்பது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடமே ‘பீச்’.
அதேபோல் நாவலின் மனிதர்களும் ஒரு நிலையான உலகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கும் புதிய உலகத்திற்கும் இடையில் நிற்கிறார்கள்.
பழைய மதிப்புகள் ஒரு பக்கம்.
புதிய சந்தை மதிப்புகள் இன்னொரு பக்கம்.
தனிமனித விருப்பம் ஒரு பக்கம்.
நிறுவனத்தின் கட்டுப்பாடு இன்னொரு பக்கம்.
சுதந்திரம் ஒரு பக்கம்.
வாழ்வாதார நிர்ப்பந்தம் இன்னொரு பக்கம்.
இந்த இடைநிலையே பீச் நாவலின் உள்ளார்ந்த புனைவெளியாக இருக்கிறது.
ஈ) 1. கிரிசாந் ✍️ தத்வமசி ➕ 2. யதார்த்தன் ✍️தோறை ➕ 3. தர்மு பிரசாத் ✍️ வண்ணச்சீறடி
பின் அட்டை:
- ஒரு தடுப்பும் மூன்று நாவல்களும் – வி. கணேஷ்: யதார்த்தனின் ‘தோறை’, கிரிசாந்தின் ‘தத்வமசி’, மற்றும் தர்மு பிரசாத்தின் ‘வண்ணச்சீறடி’.
- தத்வமசி முன்னுரை : ஒரு தெய்வத்தை எழுப்புதல் – கிரிசாந்
- நாவல் முற்பதிவுக்கு : தத்வமசி
- மூன்று ஈழத்து நாவல்கள். | எழுத்தாளர் ஜெயமோகன்
- யதார்த்தன், தர்மு பிரசாத் மற்றும் கிரிசாந்.
17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற்போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன். அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’.
கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன்நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் துணிச்சலாகக் கேள்வி எழுப்பும் ஒரு காலத்தின் பெருஞ்சித்திரம். அதிகாரத்தின் வாள்முனையில் அடியோடு வீழும் வாழ்விலிருந்து, ஆத்மா தன்விமோசனத்தைக் கண்டடையும் தத்துவப் பயணம் இந்நாவல்.
உ) நர்சிம் – பஃறுளி
பின் அட்டை:
நானறிய, தோழர் லீலாவதியின் படுகொலையைச் சுற்றிப்பின்னப்பட்ட முதல் தமிழ் நாவல் இதுதான். மையக்கதை என்னவோ மாயக்கண்ணன் – கோமதி என்கிற இரு பள்ளி ஆசிரியத் தம்பதிகளின் மணவாழ்க்கைதான் என்றாலும் கதை மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் லீலாவதியின் படுகொலை ஓர் உணர்வாகவும் நினைவாகவும் தொடர்ந்து தாக்கம் செலுத்துவதாக – அவ்வட்டார மக்கள் திரளின் சமூக உளவியலைத் தொந்தரவுக் குள்ளாக்குவதாக நாவல் நெடுகிலும் வந்துகொண்டே இருப்பது எனக்கு மிக முக்கியமானதாகப்படுகிறது.
நாவல் நிகழும் களங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அழகு நாவலின் உணர்வுகளுக்குத் துல்லியமான பின் திரையாக விரிந்துகொண்டே இருப்பது இன்னொரு சிறப்பு.
இது ஓர் அரசியல் நாவல் அல்ல. ஆண்-பெண் உறவு சார்ந்த ஒரு காதல் நவீனம்தான். ஆனால் அரசியலை விலக்கி வைக்க மெனக்கெட்டு முயற்சிக்காத நாவல். அதுவே இந்நாவலின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது.
சுப்பிரமணி இரமேஷ் அறிமுகம்
சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் கோவலன், கண்ணகி மற்றும் மாதவி. அதேபோல மாயக்கண்ணன், கோமதி, மாதவன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் வழியாகத்தான் ‘பஃறுளி’ நாவல் சொல்லப்படுகிறது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலான மண வாழ்க்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியவள் மாதவி. அதேபோன்று மாயக்கண்ணனுக்கும் கோமதிக்கும் இடையில் மன உடைவை உண்டாக்குபவன் மாதவன்.
பி.ஆர்.ராஜமைய்யர், சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா ஆகியோரது படைப்புகளில் மதுரையின் நிலப்பரப்பு முக்கியப் பங்கு வகித்தது. அவர்களுக்குப்பின்மதுரை நில மக்களின் வாழ்க்கையை நர்சிம் கதைகளில்தான் படித்தேன்.
அளவுக்கு அதிகமான அன்பு பெரும் ஆபத்தில்தான் முடியும் என்பதை இந்நாவலும் பகிர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்து, அன்பு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. மாயக்கண்ணன் கோமதிமீது பெருங்காதலுடன் இருக்கிறான். அவள் தனக்கு மட்டுமேயானவள் என்று நினைக்கிறான். இதுவும் ஒருவகையான ஆதிக்கம்தான். எந்த முடிவையும் அவனைக் கேட்டே எடுக்க வேண்டிய சூழல். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியையாக இருக்க ஆசைப்படும் கோமதிக்கு, மாயக்கண்ணனின் அளவுக்கு மீறிய காதல் பெரும் தடையாக இருக்கிறது. அவன் கோமதியை உடைமைப் பொருளாகக் கருதுகிறான். ஒரு கட்டத்தில் கோமதி தன்னை விட்டுச்சென்று விடுவாளோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. பயம் மிகுதியான சந்தேகத்தை வரவழைக்கிறது. இருவருக்கும் இடையில் விரிசல்அதிகரிக்கிறது. கோமதி சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறாள். கணவனுக்கும் பிறருக்குமான எல்லை அவளுக்குத் தெரிந்தே இருக்கிறது.
ஊ) சாந்தா கோவிந்தன் – உதிரிகள்
பின் அட்டை:
நரிக்குறவர்கள் என்று இப்போது அழைக்கப்படுகின்ற சமூகத்தின் வாழ்வு நிலைகளில் பல பகுதிகளை விவரிப்பது உதிரிகள் கதை. அவர்களின் வாய்மொழி செய்திகள். சடங்குகள், வழிபாடுகள். மணஉறவு என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கின்ற பதிவு இது என்று கூறலாம். இந்த நாவலை (கதையை) இன வரைவியல் நாவல் என்னும் வரிசையில் அடக்கலாம். இனவரைவியல் நாவல் என்பதற்கு இது போன்ற மூல வாய்மொழிக் கதைகள் இருப்பதுவும் காரணமாகக் கொள்ளலாம். ஆழமான கள ஆய்வின் மூலம் புனையப்பட்டஇந்தக் கதைமுக்கியமானதுபாராட்டுக்குரியது.
-அ.கா.பெருமாள்
பழங்குடிகள் குறித்து அண்மைக்காலமாக ஏராளமான நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கால மாற்றத்தில் தங்களது கலாசார பண்பாட்டைத் தொலைக்காமலும், கால ஓட்டத்தில் மற்றவர்களுக்கு இணையான ஓட்டத்தைத் தொடங்காமலும் இருக்கும் இனக் குழுக்களில், நரிக்குறவர் இடம் பெற்றிருப்பது எதார்த்த உண்மை.
பெரிய, சிறிய மற்றும் கிராமந்தோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் முதல் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் தங்களது பாரம்பரிய பாசி, ஊசி மணிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நரிக்குறவர்களின் அகம், புறத்தை விளக்கும் தனித்தன்மை நூல் இன்னும் வரவில்லை என்ற ஏக்கத்தை இந்நூல் போக்கும் என நம்பலாம்.
சிறுகதைகளாகவும், அவற்றிற்கிடையேயான தொடர்பால் நாவலாகவும், எதார்த்தத்தைப் பேசுவதால் கள நிலவரத்தை விளக்கும் ஆய்வு நோக்குக் கட்டுரைகளாகவும் இந்த நாவல் திகழ்கிறது.
எ) நிஜந்தன் – பிறழ்
பின் அட்டை:
’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்றவர். எழுத்தாளர் நிஜந்தனின் இளவயது மரணம் தமிழ் இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியது
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம். இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.
– கோபிகிருஷ்ணன்
- அறிமுக விமர்சனம்: நிஜந்தனின் ”பிறழ்” : தூயன்
- பாலா கருப்பசாமி பார்வை: நிஜந்தனின் பிறழ் – நுால் அறிமுகம் – Mayir
- அபிலாஷ் சந்திரன்: நிஜந்தனின் “பிறழ்” – இரு தேகங்களுக்கு… – Abilash Chandran | Facebook
- இரா.இராஜா: பிறழ்: அடையாளச் சிதைவின் சித்திரம்
- குணா கந்தசாமி: பிறழ் – நிஜந்தன் – ஒரு சாட்சியம்
ஏ) ராம் தங்கம் – முதல் நாயகி
பின் அட்டை:
எழுத்தாளர் ராம் தங்கம் (Ram Thangam) அவர்களின் “முதல் நாயகி” என்பது, வரலாறு பேச மறந்த மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஓர் உன்னதமானத் தமிழ் நாவலாகும். ராஜம்மா என்னும் தனிமனுஷியின் துயரக்கதையை மையமாகக் கொண்டுள்ள இக்கதைக்களம், ஒரு பெண்ணின் கனவுகளையும் வாழ்வையும் சாதியும் சமூக மரபுகளும் எவ்வாறெல்லாம் சிதைத்தன என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வரலாறு என்பது வெற்றியாளர்களின் ஆவணம் மட்டுமல்லாமல், அதில் புதைந்து கிடக்கும் விளிம்புநிலை மக்களின் கண்ணீரும் மறைக்கப்பட்ட உண்மைகளுமே பிரதானம் என்பதை ஆழமாகப் பதிவு செய்யும் இந்நூல், மௌனத்தில் கரைந்துபோன ராஜம்மாவின் குரலை எழுத்தின் வலிமையால் வாசகர்களின் உள்ளத்தில் எதிரொலிக்கச் செய்கிறது. அவருக்கு வாழ்நாளில் கிடைக்காமல் போன அங்கீகாரத்தையும் நீதியையும் இலக்கியத்தின் வழியாக மீட்டெடுக்கும் அஞ்சலியாகத் திகழும் இப்புத்தகத்தை, ஆசிரியர் தனது தனித்துவமான எளிய விவரிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான நடை மூலம் மிக நேர்த்தியாகக் கடத்துகிறார்.
சுமி ஹரி அறிமுகம்:
அவர் மலையாளத் திரைஉலகில் முதல் பெண் நடிகை பி.கே.ரோஸி. ஆனால் அவள் வரலாற்றில் வேறொரு விதமாக அறியப்படுகிறாள்,
லாரிக்காரனுடன் ஓடிப்போனவள் என்று.
திரைப்படத்தில் நடித்த பிறகு ரோசி எனப் பெயரிடப்பட்ட பழைய ராஜம்மா. புலையர் இனத்தைச் சார்ந்த பெண். புல்லறிந்து சந்தையில் கொண்டு விற்று வாழ்க்கையை நடத்தும் குடும்பத்தைச் சார்ந்தவள்.
…
அதுவரை ஆண்கள் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நாடகத்தில் முதல் முதலாக காக்காத்தியாக நடிக்கத் தொடங்குகிறாள். பெண் நடிப்பதா என பல எதிர்ப்புகள் வந்த போதும், உழைப்பில் ஆண் பெண் என பேதம் இல்லை, மீறல்களைக் கொண்டதுதானே கலை.. அந்த மீறலை நாம் தொடங்குவோம் என்ற ஆசானின் வாக்கு அனைவரின் ஒப்புதலுக்கும் காரணமாகிறது.இந்த நாடகத்தில் சிவனின் மனைவிகளான. பார்வதியும் கங்கையுமே காக்காத்திகள் அவர்களின் கண்களே நடிப்பில் உயிர் போன்றது.அதற்காக அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்,அந்தக் கால நாடகங்கள் எப்படி நடத்தப்பட்டது, கலைஞர்கள் ஒத்திகை செய்யும் முறை போன்ற அனைத்து தகவல்களையும் தந்திருக்கிறார் ஆசிரியர்.
அன்றைக்குப் புலையர் இன மக்களுக்கு பிராமணர்,நாயர் இவர்களின் முன்னால் நடப்பதற்குக் கூட அனுமதி இல்லை. மேலாடை அணியவோ,தங்கம் வெள்ளி நகைகள் அணியவோ இவர்களுக்கு உரிமை கிடையாது.மகாராஜாவின் வண்டி வருவதைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய அவலம். திரைப்படத்தில் நடித்த அவளுக்கு திரையரங்கில் போய் அமர்ந்து அதை பார்க்க ஒரு இடம் ஒதுக்கப்படவில்லை. காரணம்,அடிமை சாதியைச் சேர்ந்த மக்கள் திரையரங்கிற்குள் செல்ல அனுமதி கிடையாது.இவை அனைத்தையும் மீறி திரைப்படம் திரையிடப்பட்ட பின் அது ராஜம்மாதான் என்பதை அறிந்தவுடன் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.புலையர் இனப் பெண் நடித்து விட்டாள் என்பதைத் தாண்டி,அவள் நாயர் பெண்ணாக எப்படி நடிக்கலாம் என்பதுதான் அவர்களுக்குத் தாங்க முடியாத கோபத்தைத் தருகிறது.
ஐ) 1. சரவணன் சந்திரன் ✍️ ரமலோவ் ➕ 2. கபிலன் வைரமுத்து ✍️ நித்திலன் வாக்குமூலம் ( ஆகோள் – 3)
தமிழில் விவசாயம், நகரமயமாதல், முறைசாராத் தொழில்கள் சார்ந்து, நமக்கு அறிமுகமில்லாத பல்வேறு களங்களை விவரிக்கும்படியான நாவல்கள் வந்திருக்கின்றன. அந்தவிதத்தில் ஒரு புதுமையான களத்தில் வந்திருக்கும் நாவல் இந்த ‘ரமலோவ்’. கடல், அது சார்ந்த மனிதர்களைப் பற்றி விவரிக்கும் நாவலாக இது வந்திருக்கிறது.
சரவணன் சந்திரன் இந்த நாவலில் விவரிக்கும் மனிதர்கள், இதுவரை அறியப்படாத புதுமையான உலகிலிருந்து முகிழ்த்து எழுகிறார்கள். கப்பாய், பாஸ்டோ என இரு கடற்கரை ஊர்கள். அந்த ஊரில் இருக்கிற கடற்கரை மனிதர்கள், அவர்கள் நம்பும் தொன்மங்கள், அதை மீறும் மனிதர்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என இந்த நாவல் முழுக்கவே கடல் சார்ந்த விசாரணைகளை முன்வைக்கிறது.
முற்றிலும் மாய யதார்த்த பாணியில் அமைந்த நாவல்
பின் அட்டை #1:
ரமலோவ்’ தமிழில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத தனித்த மொழியின் பெரும் சாகச நிகழ்வு. கடல் அதனோடு வாழ்பவர்களுக்கு இடையறாத கனவுகளின் பெருவெளி. கடல் தன் குடிமக்களை அவர்களின் உள்ளுணர்வின் வழியே ஆள்கிறது. தொன்மங்களின் மூலம் வழி நடத்துகிறது. அதன் தீராத அற்புதங்களை இந்த நாவல் கவித்துவத்தின் உச்சத்தில் நின்று நிகழ்த்துகிறது. சரவணன் சந்திரனின் ‘ரமலோவ்’ மேஜிக் ரியலிச எழுத்து வகைமையின் ஒரு அசலான படைப்பாக்க முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறது. மிகமிகச் சீரான, துல்லியமான எழுத்து நடையில் அதீதமான புனைவுகளின் எல்லையை எந்தக் குழப்பமும் இல்லாமல் தீண்டுவது பெரும் சவால். பலரும் தோற்ற இடம் அது. சரவணன் அந்தச் சவாலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். கிறிஸ்துவைப்போல ரமலோவ்வின் பிறப்பும் சந்தேகங்களுக்கு உரியதாக இருக்கிறது. அதிலிருந்துதான் அவனது எல்லா அற்புதங்களும் பிறக்கின்றன. எல்லா தொல்மரபு வீரனுக்கும் கிறிஸ்துவின் சாயல் இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
பின் அட்டை #2:
ஏஐ-மயமாக்கப்பட்ட பேருந்துச் சேவையில் நிகழும் குளறுபடியும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்த அதிர்ச்சியுமாகத் தொடங்குகிறது நாவல்.
மேதகு நித்திலனின் மரணம் குறித்த புலன் விசாரணையாக வளர்கிறது நித்திலன் வாக்குமூலம், அதிகார மர்மங்களுக்கு அருகில் ஒரு மெழுகுவத்தி ஏற்ற முனைகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தும் கபிலன் வைரமுத்துவின் ஆகோள் என்ற அறிவியல் புதினத் தொடரில், ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய புதினங்களின் வரிசையில், மூன்றாவது புதினமாக நித்திலன் வாக்குமூலம் பதிவாகிறது.
`ஆகோள்’ – மூன்றாம் பாகம் ‘நித்திலனின் வாக்குமூலம்’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. மூன்றாம் பாகம் என்பதற்காகப் பிற இரண்டு பாகங்களை வாசித்துவிட்டுத்தான் இதை வாசிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த நாவல் பிற பாகங்களில் வரும் சம்பவங்களோடு இணைந்திருந்தாலும், தடையில்லாத தனித்துவமான ஒரு கதையாகத் தொடர்வதால் இதைத் தனி நாவலாகவும் கருத இயலும்.
கால ரயிலில் ஏறிச் சென்று 1924-ம் ஆண்டில் இறங்கி நித்திலன் மரணம் குறித்து விசாரிக்கிறான்.
இதன் பின்னணியில் வரலாற்று நிகழ்வுகளைக் குழப்பமில்லாமல் கலந்து புனைகிறார் கபிலன். உதாரணமாக, வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம், 1930-ல் நடைபெற்ற பசும்பொன் தேவர் நடத்திய மாடுகளும் மனிதர்களும் இல்லாத ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் பதிவாகி…
ஒ) இந்த இடம் நண்பரும் நல்லாசிரியரும் நம்பிக்கை தரும் நாவலாசிரியராக உதிப்பவருக்கும் என ரிசர்வ் செய்யப்படுகிறது.
கொசுறு – ஓ) சி.மோகன் – பால்ய நதி
ஏன் கொசுறு – 2025 வெளியீடு என்பதால்
பின் அட்டை:
தனிமை இருளிலிருந்து மூதாட்டி, கண்ணாடித் தாள் உறையொன்றை மிக நிதானமாகக் கசக்குகிறார்.
அந்த நுண்ணொலிப் பரவசத்தில் புன்னகையுடன் அரைக்கண் மூடி லயிக்கிறார். கேட்டிருந்த சிறுவனோ, ஒலிகளிலிருந்தான வாழ்வின் நதியை காலத்தினூடே நடத்திச் செல்கிறான். நதி விரல்களாகிப் பூத்தொடுக்கிறது: கரை மீறிச் சிதைக்கிறது. அதன் வனைதலின் அபூர்வங்கள் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. மிதக்கும் புதிர்கள் செருகுகின்றன மனதில். பெரியதொரு காலத்தின் சித்திரத்தை சுழல்களில் குறித்துக் காட்டி, ஒவ்வொரு நகர்விலும் ரகசிய கனம் கூட்டி, இறுதியில் துயராகும் நதியை சிறுவன் தானேயான இளைஞனிடம் கையளிக்கிறான். எங்கிருந்தெல்லாமோ அது சாத்தியமாக்கிக் கொண்ட உயிர்ப் பிம்பங்களை வியந்து நோக்குகிறான் இளைஞன். அப்போது மூதாட்டியின் விழிகள்நித்யத்தில் அடைகின்றன. அந்த வெறுமை வெளியெங்கும் மரகதம் அத்தையின் வாசனை நிறைகிறது…
நாவலெனும் அதிமலரின் அரூப மகுடமாகவும்…
– யூமா வாசுகி
சித்திரவீதிக்காரன் அறிமுகம்:
பால்ய நதி வையை போல ஒருபொய்யாக் குலக்கொடி.
ரத்தினம் புல்லட்டைப் பார்க்க காத்திருக்கும் மக்களினூடாக பால்ய நதியில் இறங்கினால் கிருஷ்ணனின் கதையாக பெருக்கெடுக்கிறது.
புல்லட்டில் பகட்டாய் வந்த ரத்தினம் யாருமறியாமல் நள்ளிரவில் தன் பிள்ளைகளோடு ஊரை விட்டு வெளியேறுவதாய் முடிகிறது. காலத்தின் சுழலில் பலரும் வந்து போகிறார்கள்.
தன் நண்பனக்காக நேர்ந்துகொண்டு மொட்டையடிக்கும் சூடாமணியும், நவநாள் விரதமிருக்கும் வயலட் மேரியும், பாசிப்பருப்பும் பொங்கலும் கொண்டுவரும் தங்கமணியும் பால்ய நதியை அனபின் நதியாக்குகிறார்கள்.
கமலாவின் கண்களை போன்ற ஆழம் கொண்ட மரகதத்தின் மறைவு மனதை வதைக்கிறது. வாசித்த வாசிக்க தூத்துக்குடி முத்தாய் “பால்ய நதி” மின்னுகிறது.
கடைசியாக – ஔ) என். ஸ்ரீராம் – இரவோடி
2024 வெளியீடு (வாங்கிவிட்டு வாசிக்காமல் உறங்கும் நூல்களில் படிக்க எடுத்திருப்பது)
பின் அட்டை:
தமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை. எழுத்தும் இல்லை என்ற சங்க மரபைச் சேர்ந்தவை அவரது கதைகள் என்றாலும் நவீன கதைக்கான நுட்பங்களையும் உட்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அழிந்துவரும் கிராம வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டவும் எடுத்துச்சொல்லவும் உதவும் பண்பாட்டு ஆவணங்களே என். ஸ்ரீராமின் கதைகள். தற்போது இரவோடி என்கிற தனித்துவமான நாவலை படைத்திருக்கும் என். ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். – எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்
சுமி ஹரி அறிமுகம்:
தேடல்தான் நாவலை நகர்த்துகிறது. யார், யாரை, எதற்காகத் தேடுகிறார்கள் என்று பல கோணங்களில் கதை விரிகிறது. இரவு வாழ்க்கை நடத்தும் இரவோடிகளான சாமக்கோடங்கிகள் தான் முக்கிய கதாபாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை அப்படியானதற்கான காரணம், ஜக்கம்மாவின் வாக்கிற்குக் கட்டுப்பட்டு,அவள் உத்தரவு தந்தால் மட்டுமே ஒரு ஊருக்குள் நுழைவது, அதை மீறி எதையும் செய்யாமல் இருப்பது,செய்தால் நேரிட வேண்டிய பிரச்சனைகள் தடங்கல்கள், குறி சொல்வதற்கு முன்னால் அவர்கள் தயாராவது, அது மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருப்பது,
தங்களுக்குக் கிடைத்த சாபத்தால் இரவு உறங்காமல் இந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது என பல தகவல்கள் முதல் சில அத்தியாயங்களில் கதை வழியே நமக்கு சொல்லப்படுகிறது. “வீரான்” இந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை உடையவன்.
என் பட்டியலுக்கு சில வழிமுறைகள் வைத்துக் கொண்டேன்.
- சற்றே தெரிந்த பெயர் + அறிமுகமான எழுத்தாளர்
- கடந்த ஆண்டில் வெளியான முழு நீள் புதினம்
- புகழ்பெற்றவர்கள் என்று நான் கருதும் அரங்கம் ரொப்பும் வஸ்தாது எழுத்தாளர்களைத் தவிர்த்து விட்டேன் (அவர்கள் பட்டியலே நீளமானதுதான் – பா.ராகவன் (உரி + சலம்), இமையம் (இப்போது உயிரோடிருக்கிறேன்), பெருமாள் முருகன் (நெடுநேரம்), சாரு நிவேதிதா (தியாகராஜா), எம் கோபாலகிருஷ்ணன் (மனையறம்), ஜெயமோகன் (காவியம்), சு. வேணுகோபால், எஸ். ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், யுவன் சந்திரசேகர் (இரட்டையர்), ஷோபாசக்தி, சல்மா போன்றோர்)
- மொழியாக்கங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கும் இந்தப் பட்டியலில் இடம் கொடுக்கவில்லை.
உங்களின் பட்டியலில் நீங்கள் அவசியம் பரிந்துரைக்கும் சமீபத்திய நாவல் என்ன?
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.






















நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள். என்னுடைய `சொல்லில் வருவது பாதி’ நாவலையும் வாங்கிப் படியுங்கள். சுவாசம் பதிப்பகம்.