ஜஸ்டிஸ் சுந்தரின் இறுதித் தீர்ப்பு

“ இங்க ஸ்வீட் கொண்டு வாப்பா” 

இலையில் இருந்த காசி ஹல்வாவை வழித்து சாப்பிட்டு விட்டு, சுந்தர் எதிர்ப் பக்கம் சற்று தள்ளி மடித்துக் கட்டிய காவி வேட்டியும் வெள்ளை சட்டையுமாக பரிமாறிக் கொண்டிருந்தவனை அழைத்தார். அவன் கவனிக்காமல் நகர்ந்து கொண்டிருந்தான். சுந்தர் உரத்துக் கூவினார். 

“ஏய் ஹல்வா”

சுந்தர் கர்னலாக இருந்து ரிடையர் ஆனவர்,உயரமானவர், குரல் இயல்பாகவே அதிகாரமாக ஒலித்தது.

எதிர்ப்பக்கத்திலிருந்து யாரோ அவனுக்கு கை காட்டினார்கள்.

அவன் தயங்கித் திரும்பினான்.  சுந்தரின் முகத்தைப் பார்த்து அவனது சந்தனம் தீற்றிய நெற்றி சற்று சுருங்கியது. 

அருகில் வந்து “ சாரி சார் “ என்று தலையைத் திருப்பிக் காண்பித்தான். அவனுடைய காதில் ஹியரிங் எய்டு, பெரிதாகத் தெரிந்தது.

கலா மெதுவாக “ ஏன் இப்படி கத்தறீங்க, பாவம் அவருக்கு காது சரியா கேட்காது போல.” என்றாள். 

சுந்தர் இலையைக் காண்பித்தார். ஹல்வா இருந்த இடம் நெய்யில் மினுங்கியது.

அவன் அருகில் வந்து அரைக் கரண்டி எடுத்து ஒரு முறை தட்டி விட்டு இலையில் போட்டான். அதற்குள் மொபைலில் அழைப்பு வந்தது. சுந்தர் எடுத்து யார் என்று பார்ப்பதற்குள் அவன் போய் விட்டான், இல்லாவிட்டால் பார்வையிலேயே இன்னும் கேட்டு வாங்கியிருப்பார்.

“ என்ன ரவி, ஏதோ முக்கியமான வேலையில இருக்கும்போதுதான் நீ கூப்பிடுவ.”

“ சார், எங்க இருக்கீங்க ? உடனே மெயின் கேட்டுக்கு வாங்க, இங்க கலாட்டா.”

“நான் கல்யாணத்துக்கு வந்திருக்கேன், உடனே ஊபர் பிடித்து கிளம்பினாலும் இல்லை மைசூர் ரோடு வந்து மெட்ரோ பிடிச்சாலும் கனகபுரா ரோடு வர ஒண்ணேகால் மணி நேரம் ஆகும், என்ன ஆச்சு ?”

“ நம்ம அபார்ட்மென்ட் வாசல் பார்க் கிட்ட யாரோ ஜூஸ் விக்கறாங்க, வாக்கிங் போன  மணிசார் இங்க வந்து விக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு, சில பேர் அவங்களுக்கு சப்போர்ட்டு, கலாட்டா ஆயிட்டிருக்குது.”

“பார்க்குல ஜூஸ் கடையா ?”

“ கடையெல்லாம் ஒண்ணுமில்லை சார், எல்லா பார்க் வாசல்லயும் விக்கறாங்களே , அந்த மாதிரி அருகம்புல்லு, பூசணிக்காய் ஜூஸ் ஃபுட்பாத்தில விக்கறாங்க.”

“ கூட்டமா ?”

“ நிறைய பேர் வாங்கறாங்க சார்.”

“யார் பர்மிஷன் குடுத்தது ? நம்ம அபார்ட்மென்டிலிருந்தே யாராவது ஏற்பாடு செஞ்சிருப்பாங்க.” 

“இல்லை சார், யாரும் அப்படி செஞ்சதா தெரியலை.”

“யாரெல்லாம் இருக்காங்க ?”

கலா என்ன விஷயம் என்பது போல பார்த்தாள்.

“ மணி சார்தான் பெரிசா கத்திக்கிட்டிருக்காரு. அடுத்தது டீ விப்பான், பானிபூரி விப்பான்  ரோடு முழுக்க குப்பை ஆயிடும், டூ வீலர் வந்து நிறுத்துவான், நடக்க இடம் இருக்காது அப்படின்னு சத்தம் போட்டிட்டிருக்காரு. அசோசியேஷன் ப்ரெசிடெண்ட் எங்கன்னு கேட்கறாங்க.”

“இதோ நான் கிளம்பி வரேன்.” ஃபோனை வைத்தார்.

“ என்ன ஆச்சு ? எங்க போகணும் ?”

“ நம்ம அபார்ட்மென்ட் வாசல்ல கலாட்டா, ரவி உடனே வரச் சொன்னான்.”

“அசோசியேஷன் ப்ரெசிடென்ட்டுன்னு நேரம் காலம் இல்லாம கூப்பிடுவாங்க, நாம முகூர்த்தம் முடிஞ்சு சாப்பிட்டு போகலாம்.”

“ இல்லை கலா, நான் உடனே போகணும், இப்படியே விட்டால் விவகாரம் பெரிசாயிடும். நீ இருந்திட்டு வா, நான் கிளம்பறேன்.  நீ யார்கூடவாவது திரும்பி வந்திடு.”

“ரிடையர் ஆயிட்டு நிம்மதியா இல்லாம இதே தொந்தரவு. இன்னொரு  தோசை சாப்பிட்டுட்டு கிளம்புங்க. மத்தியானம் வீட்டுல உங்களுக்கு நேத்து சாம்பார்தான்.”

மினி மசால்தோசை நன்றாகத்தான் இருந்தது, இன்னொன்று சாப்பிடலாம். சுந்தர் சுற்றிலும் பார்த்தார். இரண்டு வரிசை தள்ளி தோசை பரிமாறிக் கோண்டிருந்தார்கள். இங்கிருந்து கூவ முடியாது.

“ எங்க, நம்ம பக்கம் ஒருத்தனும் வர மாட்டான், வந்தாலும் இரண்டாம் தடவை கேட்டால் காது கேட்காத மாதிரி நகர்ந்து போவான்.”

“பாவம், அப்படி சொல்லாதீங்க, அவருக்கு நிஜமாகவே காது கேட்காதுபோல.”

“காது கேட்காதவனெல்லாம் எதுக்கு வேலைக்கு வரான் ?  சாப்பாட்டு பந்தி பார்த்துக்க வேண்டிய மானேஜர் எங்க ? எல்லாம் அவங்க தப்பு.”

“மாண்புமிகு ஜட்ஜ் அவர்களே, உங்களை யாரும் தீர்ப்பு கேட்கவில்லை.”

சிறிய பாட்டிலில் மூடியை இடது கையால் திருகி, தண்ணீர் வழிய திறந்து எடுத்து குடித்தார்.

“ அப்ப நான் எழுந்து போய் அவனைத் தொட்டு ஐயா சாமி கொஞ்சம் கருணை கூர்ந்து ஹல்வா போடுங்கன்னு கேட்கணுமா ?”

கலா “ உங்களுக்கு கொஞ்சம்கூட ..” என்று ஆரம்பிக்க , சுந்தர் வேகமாக நாற்காலியை ஓசைப்படுத்தி எழுந்து விரைப்பாக நடந்து கை கழுவப் போனார்.

ஆட்டோ பிடித்து மைசூர் ரோடு  சேர்ந்து, மெட்ரோ பிடித்து,  மெஜஸ்டிக்கில் க்ரீன் லைனில் மாறி மறுபடியும் ஆட்டோ பிடித்து அபார்ட்மென்ட் வந்து சேர மணி பத்தேகால் ஆகி விட்டது.

சுந்தர் அபார்ட்மென்ட்  கேட் அருகில் வரும்போதே  பார்க் வாசலில் கூட்டத்தைப் பார்த்து விட்டார்.  நிறைய பேர் நின்று கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இறங்கி அருகில் சென்று பார்த்தார். ஜூஸ் விற்பவர் யாரும் காணவில்லை.

“ ஆயியே கர்னல்ஜி, வேணுங்கற சமயத்துல இருக்க மாட்டீங்க.” என்றார் சிவா. அவர்தான் அபார்ட்மென்ட் தேர்தலில் தோற்றவர்.

“ நான் என்ன செக்யூரிட்டியா, கேட்டில இருபத்து நாலு மணி நேரமும் காவல் இருக்க ?”

“ நீங்க இல்லாதபோது ஏதாவது எமர்ஜென்சி நிலைமைக்கு யாராவது அசோசியேஷன்லிருந்து பொறுப்பா இருக்க வேண்டாமா ?”

“ இப்ப என்ன எமர்ஜென்சி ஆச்சு சொல்லுங்க ?”

மணி “ தரையெல்லாம் பாரு, குப்பை, அழுக்கு தண்ணீர்,..நீ ஒரு அரை மணி நேரம் முன்னால வந்திருந்தால் இங்க நூறு பேர் கூட்டம். “ என்றார்.

சுந்தர் “ நாம டவுன் ஹால் மீட்டிங் போட்டா, ஐநூறு அபார்ட்மென்ட் இருக்கற நம்ம காம்ப்ளெக்ஸில முப்பத்தேழு பேர் வருவாங்க.”

 சிவா “ உங்க அசோசியேஷன் மேல அவ்வளவு நம்பிக்கை.” என்று ஆரம்பிக்க,

சுந்தர் “ நீங்க அடுத்த எலக் ஷன்ல நின்னு ஜெயிச்சு ஆயிரம் பேரை வர வையுங்க.” குரலை உயர்த்தினார்.

மணி “ சரி இந்த பிரச்சினைக்கு என்ன செய்யலாம் ?” என்றார்.

உண்ணி கிருஷ்ணன் “இது பப்ளிக் ப்ராபர்டி. இதென்ன நம்ம சொந்த இடமா ? யார் வேணுமானாலும் வரலாம்.” என்றார்.

மணி “ வரலாம், வந்து குப்பை போடக்கூடாது, அடுத்தது பானிபூரி வருவான், சுத்தி அழுக்கு தண்ணீர் கொட்டுவான், பான் போட்டு துப்புவான், பிறகு அது என்னது கொழுக்கட்டை மாதிரி – மோமோ விப்பான், பிறகு ஞாயிற்றுக்கிழமை மீன் கடை வரும், வெட்டி பக்கத்துல போடுவான், அதுக்கு நாலு தெரு நாய் வந்து நிற்கும், பார்க்கில நாம யாரும் காலை வைக்க முடியாது.” என்றார்.

சுந்தர் பார்க் பக்கம் திரும்பிப் பார்த்தார். ஒரு காலத்தில் துருப்பிடித்த சுழலும் இரும்பு கேட், மர வேர்கள் வளர்ந்து பிளந்த நடைபாதைகள், உடைந்த சிமெண்ட் பெஞ்சுகள், அதில் பெரும்பாலும் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள், பியர் பாட்டில்கள் என்று இருந்தது. அப்போது அபார்ட்மென்டிலிருந்து யாரும் அதிகம் போக மாட்டார்கள்.  சுந்தர் ப்ரெசிடெண்ட் ஆன பிறகு  எம் எல் ஏ, கார்ப்பரேடர் எல்லோரிடமும் பேசி, அசோசியேஷன் செலவில் சரி செய்து, மாதாமாதம் செலவழித்து பராமரிப்பும் செய்கிறார்கள்.  பலர் தினமும் நடை போகும் அழகான இடமாக ஆகியிருக்கிறது.  

கர்னல் கூட தினமும் மார்ச்சிங் மாதிரி நடை பழகுவார். எல்லாம் பாழாகி விடும்.

சுந்தர் “ இங்க வந்து விற்றது யாரு ? அவங்க கிட்ட யாராவது பேசினீங்களா ?”

“ மணிதான் செக்யூரிட்டி கிட்ட சொல்லி அவங்களை வேற எங்கயாவது போகச் சொன்னார், அவன் போய் ஹிந்தியில பேசினான், அவளுக்கு புரியவில்லையாம். கூட்டமா எல்லோரும் போய் சண்டை போட்டு, இப்பதான் கிளம்பிப் போனா.”

“  நாகராஜ ராவ் எங்க ? அவரை கன்னடத்துல பேசச் சொல்லியிருக்கலாமே ?”

“ அவர் கோவிச்சுட்டு வர மாட்டேன்னுட்டாரு. இத்தனை வருஷமா பெங்களூரில இருக்கீங்க, கன்னடம் கத்துக்க மாட்டீங்க, ஏதாவது தகராறு ஆனால்மட்டும் நாங்க வேணும், அப்படீன்னு சொல்லிட்டாரு.”

“ அவர் சொல்லுறதும் சரிதானே, அவர் கன்னடா கத்துக் குடுக்கறேன்னு சொன்னபோது எத்தனைபேர் க்லாஸ்ல சேர்ந்தீங்க ?”

“  நீங்க சேர்ந்தீங்களா ?” அரூப் எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.

கர்னல் பதில் சொல்லவில்லை.

“ எனக்கு அவசியமில்லை.”, அழுத்தமாகச் சொன்னார் மணி.

“ஏன் நல்லா பேசுவீங்களா ?,  அப்ப நீங்களே அவ கிட்ட சொல்லி வேற எங்கயாவது போகச் சொல்லியிருக்கலாமே ?”

“ நான் இன்னும் இரண்டு மாசத்துல கோயம்புத்தூரில சீனியர் ஹோம் போயிடப்போறேன், இந்த எழுபத்து ஐந்து வயசுல எனக்கு புதுசா கத்துக்க முடியாது.”

“இதுவரை பெங்களூரில எத்தனை வருஷமா இருக்கீங்க ?”

மணி பதில் சொல்லவில்லை.

“ இரண்டு மாசத்துல இங்கிருந்து போறீங்கன்னா, பார்க் வாசல்ல யார் என்ன வித்தால் உங்களுக்கு என்ன ஆச்சு ?” என்றார் உண்ணி கிருஷ்ணன்.

“ அதற்காக கண் முன்னால் அக்கிரமம் நடந்தா, பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா ?”

சிவா “பாவம் அவ வயித்துப் பிழைப்புக்காக ஏதோ நல்லதா ஒண்ணு செஞ்சா விட மாட்டீங்களே, அவ என்ன அக்கிரமம் செஞ்சா ? காலையில ஆரோக்கியமா குடிக்க மூலிகை ஜூஸ்தானே விக்கறாங்க, சாராயம் இல்லையே ?” என்றார்.

“  நல்லது செஞ்சா செய்யட்டுமே, நம்ம அபார்ட்மென்ட் வாசல்ல வேண்டாம். வேற எங்கயாவது போகட்டும்.”

“ அதாவது மத்தவங்களுக்கு என்ன தொந்தரவு ஆனால் ஆகட்டும், நமக்கு எதுவும் கூடாது.” என்றார் அரூப்.

கர்னல் “ இப்ப என்ன சொல்லறீங்க ? அவ தினமும் ஜூஸ் விக்கட்டுமா ?” என்றார்.

அரூப், “  ஏதாவது இடக்கா பேசுவீங்க, இப்படித்தான் போன மாசம் எங்க ப்ளாக் லிஃப்ட் ஒரு வாரம் வேலை செய்யாமல் போனபோது, பன்னிரெண்டாவது மாடிக்கு படி ஏற முடியலன்னு கம்ப்ளெயிண்ட் குடுத்தால், சர்வீஸ் அக்ரிமென்ட்டில பதினஞ்சு நாள்வரை டைம் இருக்குது, ஏற முடியாதவங்க எல்லாம் எதுக்கு அடுக்குமாடிக்கு வறீங்க அப்படின்னு சொன்னீங்க. உங்க ப்ளாக் லிஃப்ட் ரிப்பேர் ஆன போது இரண்டே நாள்ல சரியாயிடுச்சு. அசோசியேஷன் சரி இல்லை“

கர்னல் “ சரி பார்க் வாசல்ல ஜூஸ்கடைன்னு ஆரம்பிச்சு வழக்கம்போல எங்கயோ போறீங்க, அசோசியேஷன் சரி இல்லைன்னா நீங்க எலக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சு எல்லோருக்கும் தொண்டு செய்ய வேண்டியதுதானே ? “ என்றார் உரத்த குரலில்.

“ இப்படித்தான் சொல்லி வாயடைச்சுருவீங்க, எதுவும் கேள்வி கேட்கக்கூடாது.”

சிவா அதற்குள் “ கர்னல் சுந்தர் , இந்த சாமர்த்தியமான பேச்சு இருக்கட்டும், நாளைக்கு அவ திரும்பி வந்தா என்ன செய்யப் போறோம் ?”

கர்னல் தீர்மானமாக இருந்தார், அவளை அடுத்த நாள் கடை போட விடக்கூடாது. உடனே சொன்னால் இன்னும் தகராறு ஆகும்.

“ நமக்குள்ளயே ஒரே கருத்து இல்லையே, சிலர் கடை போடக்கூடாதுன்னு சொல்லறீங்க, சிலர் பாவம் இருந்துட்டு போகட்டும்ன்னு சொல்லறீங்க, அசோசியேஷன் போர்டுல நாங்க பேசி முடிவு எடுக்கறோம்.”

மணி “ நீங்க மீட்டிங் போட்டு பேசி முடிவு செய்யறதுக்குள்ள இங்க ரெண்டு பக்கமும் வி வி புரம் திண்டி தெரு மாதிரி கடை போட்டுருவாங்க.” என்றார்.

“ என்னைக் கேட்டா, கடை எதுவும் இங்க போடக்கூடாது, ஆனால் நான் சொன்னால் அசோசியேஷன் ப்ரெசிடென்ட் யாரையும் கேட்க மாட்டார், ஆடோக்ராடிக் டெசிஷன், போர்டுல இருக்கறதே வேஸ்ட் அப்படின்னு நீங்கதானே வாட்சப் க்ரூப்பில போட்டீங்க ?”

“இப்ப என்னதான் செய்யலாம் அப்படினு சொல்லறீங்க ?”

“  இத்தனை கலாட்டா ஆனபிறகு நாளைக்கு அவள் வருவாளா ? என்ன ஆகுதுன்னு பார்க்கலாம், நாங்க அசோசியெஷன் போர்டு எல்லோருமே வரோம், இங்கயே பேசி முடிவு எடுப்போம்.”

“அவள்ன்னு சொல்லாதீங்க, அவங்க வயசானவங்க, அறுபது வயசுக்கு மேல இருக்கும்.”

“அப்படியா ? நான் ஏதோ சின்ன வயசுன்னு நெனச்சேன்.” என்றார் சுந்தர்.

“அப்ப நீங்க அவங்களைப் பார்க்கவே இல்லியா ?”

சிவா ஏதோ முணுமுணுத்தார், சிலர் கிளம்பினார்கள்.

இன்னொருவர் “கர்னல், நீங்க இந்த தகராறு ஆரம்பிச்சபோதே இங்க இருந்திருந்தா இவ்வளவு ஆகியிருக்காது, நீங்க ஆர்மி மார்ச்சிங் மாதிரி நடந்து வந்து, உங்க குரலில அதட்டி கூடாதுன்னு சொல்லியிருந்தா, அப்பவே அவங்க பயந்து கடையை மூடியிருப்பாங்க.” என்றார்.

கர்னல் “ அசோசியேஷன் பத்தி வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசுவீங்க, கடைசியில நான் தான் வரணும்.” என்று முடித்தார்.

வீட்டுக்கு வரும்போது சுந்தர் தனியாக “ மணி,  நீங்க சொல்லறது சரிதான்,  ஆனால் பப்ளிக்ல பேசும்போது  ஜாக்கிரதையாக இருக்கணும். நாளைக்கு அவள் திரும்பி வந்தால் வரக்கூடாதுன்னு நல்லதனமா சொல்லி அனுப்பிடலாம். “ என்றார்.

கர்னல் இரவு படுக்கும்போது காலையில் ஏழு மணிக்கு  பார்க் திறப்பதற்கு முன்பே போய் அவளிடம் பேசி அனுப்பி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

காலையில் எழுந்து காபியுடன் செய்தித்தாள் படிக்கும்போது ஆறரை மணிக்கே ரவி அழைத்தார்.

“ கர்னல், வாசல்ல கூட்டம் சேர்ந்துட்டாங்க, நாம இப்பவே போய் ஏதாவது பேசிப்பார்க்கலாம்.” என்றார்.

அசோசியேஷன் போர்டில் இருப்பவர்களை அழைத்துக்கொண்டு எட்டுபேருமாக வாசலுக்கு சென்றார்கள். ஒரு இருபது முப்பது பேர் அதற்குள் கூட்டமாக இருந்தார்கள். சில குரல்கள் பெரிதாகக் கேட்டன.

கழுத்தில் மஞ்சள் சிவப்பு துண்டுடன் ஒரு ஆள்  நாற்காலி மேல் நின்று உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தான். கன்னடத்தில் அவன் பேசுவது கேட்டு சிலர் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.

கையை உயர்த்தி  அபார்ட்மெண்ட்  கட்டடத்தைக் காண்பித்தான் “ பாருங்கள், இது பணக்காரர்கள் சொகுசாக வாழும் அடுக்கு மாளிகை, இவர்கள்  மூன்று வேளை தின்றுவிட்டு உடல் பருமனைக் குறைக்க வந்து காலையில் நடக்கும் இடம் இந்த பார்க்.” நாடகீயமாக திரும்பி பார்க்கைக் காண்பித்தான்.

“ இந்த பார்க்கில், நம்மைப்போன்ற ஏழைகள் உள்ளே வந்தால் செக்யூரிட்டி, போலீஸ் எல்லோரும் சந்தேகமாகப் பார்த்து நம்மை யார் எதற்கு என்ன என்று கேட்பார்கள். பணக்காரர்கள் வந்தால் சல்யூட் அடித்து வரவேற்பார்கள். இதுதான் ஜனநாயகம், எல்லோருக்கும் சம உரிமை.” அவனுடன் வந்திருந்தவர்கள் கை தட்டினார்கள்.

“ஆமாம், இது நாங்க பணம் கொடுத்து மெய்ன்டெய்ன் செய்யற பார்க்.” மணி சொன்னது அவனுக்குக் கேட்டிருக்க முடியாது.

அந்த ஆள் தொடர்ந்தான், “வயிற்றுப் பிழைப்புக்குக்கூட இந்த நாட்டில் ஏழைகளுக்கு இடம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இந்த அக்கிரமத்துக்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்கிறோம்.”

 அவன் கூட வந்திருந்த சிலர் கைகளை உயர்த்தி “போராடுவோம், போராடுவோம் , ஏழைகளுக்காகப் போராடுவோம்” என்று கத்தினார்கள். அருகில் யாராவது போனால் அடித்துத் தள்ளி விடுவார்கள் போல ஆவேசத்துடன் இருந்தார்கள்.

மணி “ கர்னல், என்ன தீர்மானம்  செஞ்சீங்க ?  விட்டால் இப்படிதான் ஆகும். அவங்க கிட்ட கிளம்பிப் போகச் சொல்லிடுங்க.”

கர்னல்“ எல்லாம் கூச்சல் போட்டு முடிக்கட்டும், இப்போது அவன் கிட்ட பேச முடியாது. “ என்று சற்று தள்ளி நின்றார்.

சிவா “ என்ன முடிவு செஞ்சீங்க ?  நேத்து ராத்திரி வரை போர்டு மீட்டிங் எதுவும் நடக்கலைன்னு கேள்விப்பட்டேன். வழக்கம்போல உங்களுடைய சர்வாதிகார முடிவுதானா ?”

“ அப்படி முடிவு செஞ்சா எட்டு பேரும் என் கூட வருவாங்களா ? சும்மா உளறாதீங்க.”

“உங்களுக்கு பயந்து எதிர்த்துப் பேச மாட்டாங்க, உங்க வீரத்தை அதோ அவன் கிட்ட காண்பிங்க, எப்படி  ரவுடிகளை காலி செய்யச் சொல்லப் போறீங்க ?”

“பார்த்துட்டே இருங்க” என்றார் கர்னல் மீசையைத் தடவிக்கொண்டு.

அதற்குள் போர்டு மெம்பர் ஒருவர் “ எங்களை சும்மா நினைக்காதீங்க,  கர்னல் கார்ப்பரேஷன் ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்காரு, அவங்க வந்து இந்த ஜூஸ் எல்லாம் பாதுகாப்பானது இல்லை, அவங்க கிட்ட சர்டிஃபிகேட் வாங்காம விற்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க, மீறி கலாட்டா செஞ்சா தேவைப்படலாம்ன்னு போலீஸ்லயும் சொல்லியிருக்கோம்.”

மணி “ கர்னல், தாங்க்ஸ், இதெல்லாம் சொல்லவேயில்லையே, நான் நேத்து ராத்திரி சரியாகவே தூங்கலை, இப்பதான் நிம்மதியாக இருக்கேன்.”

கர்னல் “ கோயமுத்தூர்ல என்ன ? உங்க மகன் சிங்கப்பூரிலிருந்து திரும்ப வந்துட்டானா ?” என்று கேட்டார்.

“ அவன் எங்க வருவான், பிஆர் கெடச்சு அங்கயேதான் செட்டில் ஆயிட்டான். எங்களுக்குதான் தனியா இருக்க முடியலை, சீனியர் சிட்டிசன் ஹோமுக்கு போகறோம்.”

“அப்படியா ? எந்த ஹோம் ?”

மணி ஒரு பிரபலமான பெயரைச் சொன்னார், “வடவள்ளியிலதான் இருக்கு, நல்ல பசுமை, மருதமலை தெரியும், வெதரும் நல்லா இருக்குது, சூப்பர் சாப்பாடுன்னு சொல்லறாங்க. உங்களுக்கு அந்த ஹோம் தெரியுமா ?”

“தெரியும், அவங்கதானே ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னயே ஆரம்பிச்சவங்க.”

உண்ணி கிருஷ்ணன் “ உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா ? அந்த அம்மா குடும்ப நிலைமை தெரியுமா ? அவங்க ஹஸ்பண்ட் குடிச்சு குடிச்சு சின்ன வயசுலயே செத்துப் போயிட்டான். பார்த்துக்க யாருமே இல்லை, வயசான காலத்துல சாப்பாட்டுக்கு மருந்து வாங்க காசு இல்லைன்னு ஏதோ கவுரவமா, சொந்தமா செய்யலாம்ன்னு வந்திருக்காங்க, அவங்களை விரட்ட வீரமா கெளம்பிட்டீங்க.” என்றார்.

 மணி “ஏன், அவங்களுக்கு பசங்க, உறவினர்கள் யாரும் இல்லையா ?”

“ அவங்களுக்கு ரெண்டு பசங்க, ரெண்டு பேரும் ஏதோ டாக்சி ட்ரைவர், ப்ளம்பர்ன்னு வேலை செய்யறாங்க, ஆனா இப்ப கல்யாணமாகி அவங்க பசங்க கான்வென்ட்ல படிக்கறாங்களாம், நெறய செலவு, இவங்களை கூட வெச்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.”

“இவ்வளவு விவரம் உங்களுக்கு யார் சொன்னது ?”

“எங்க வீட்டுக்கு வர மெய்டுதான் சொன்னா, அவங்களை விரட்டாதீங்க.”

“ பாவம்தான் சேரும்.” என்றார் இதுவரை பேசாமல் இருந்த தினேஷ் சர்மா.

கர்னல் எதுவும் சொல்லவில்லை.

இன்னும் எதிர்ப்பக்கத்தில் நாற்காலிமேல் நின்றவனுடைய பேச்சு நடந்து கொண்டிருந்தது.

மணி கல்னலிடம் “ நீங்களும் கோயம்புத்தூரில சர்வே பண்ணீங்களா ? போகிற மாதிரி ஐடியாவா ?”

“அதெல்லாம் இல்லை, எங்கம்மா அங்கதான் இருக்காங்க, நான் ஆர்மியில எங்கயோ வடக்குல இருந்தபோது, எங்கப்பாவும் இல்லை, தனியா இருக்க முடியாதுன்னு அங்க போயிட்டாங்க.”

“ ஓ அப்படியா, இப்ப நீங்க பெங்களூர் வந்த பிறகு இங்கயே வரலையா ?”

“இல்லை.”

“ அப்ப அடிக்கடி நீங்க கோயமுத்தூர் வருவீங்க, அங்க சந்திக்கலாம்.”

கர்னல் எதுவும் சொல்லாமல் எதிர்ப்பக்கம் பார்த்தார்.

ரவி “அவன் பேச்சை முடிச்சுட்டு இறங்கிட்டான், கூட்டம் கலையுது, வாங்க போய் சொல்லிடலாம்.” என்றார்.

“ ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்திட்டிருக்காரா ?”தரு

“இல்லை கர்னல் , நாம கூப்பிட்டாதான் வரேன்னு சொன்னாரு.”

கர்னல் “ரவி, தண்ணி இருக்குதா, குடிக்க வேணுமே.” என்று கேட்டார்.

தண்ணீர் குடித்து விட்டு, கர்னல்தளர்ந்த நடையில் கிளம்பினார்.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஜஸ்டிஸ் சுந்தரின் இறுதித் தீர்ப்பு”

  1. Enjoyed the story. Relatable. Hvng bn a part of associations as a member as well as just as a resident in mtgs, I find this is a great topic, as it lends itself to hilarious situations and comedies. Picking up this topic for ur story shows ur keen observation!

    What is it to do with Management committees…why do otherwise ‘normal’ folks become autocratic like the colonel in ur story. He is not an aberration he is the norm. Even we hv a colonel such as that in our community.

    Well, many of us chose to live in an apartment but we want to live like we live in independent homes. Sensitivity to Private and public space boundaries doesn’t exist..well portrayed in ur story. Colonel’s body language said it all! That was funny. Thanks for a delightful story

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.