இலக்கியத்துக்கான நோபல் பரிசு- 2026 ஆன் கார்சன்

2026-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபோடு உரையாடி,  சமகால இலக்கியத்தில்  புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது துணிச்சலான,  புதுமையான படைப்புலகத்திற்காக நோபல் பரிசு அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. ஆன் கார்சன் செவ்வியல் அறிஞர்(Classisist), கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். கவிதை, உரைநடை, புனைவு, கட்டுரை  என இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும்(genre)  படைப்புகளைத் தந்த கார்சன் இலக்கிய வகைமைகளுக்கிடையே உள்ள மரபான எல்லைக்கோடுகளை நெகிழ்த்தியும், தகர்த்தும் ஒரு புதிய வகைமையை உருவாக்கியுள்ளார். கவிதைக்கான கிரிஃபின், டி.எஸ்.எலியட் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர். ‘Order of Canada’ என்னும் கனடாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதையும் பெற்றவர்.

  கார்சன் ஜூன் 21, 1950 அன்று டொராண்டோவில் மார்கரெட்,  ராபர்ட் கார்சன் இணையரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். மூத்த சகோதரர் மைக்கேல். தந்தை டொராண்டோ-டொமினியன் வங்கியில் பணியாற்றினார். தந்தையின் பணி நிமித்தமாக  ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்டோனி கிரீக், போர்ட் ஹோப் மற்றும் டிம்மின்ஸ் போன்ற சிறிய நகரங்களுக்கு இடையே குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது.

கார்சன் உயர்நிலைப்பள்ளியில்  சொந்த விருப்பத்தின்பேரில் லத்தீன் ஆசிரியரிடம் உணவு இடைவேளைகளில் பண்டைய கிரேக்க மொழியைக் கற்றார்.  பண்டைய கிரேக்க இலக்கியங்கள், தொன்மங்கள், வாழ்வியல் பற்றிய தேடலின் விளைவாக அத்துறைகளில்  அவர் பெற்ற ஆழ்ந்த புரிதல் அவர் படைப்புகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.1970-களில், கார்சன் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கியத்தையும் (Classical literature), ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற செவ்வியல் அறிஞர் கென்னத் டோவரின் கீழ் பண்டைய கிரேக்க மொழியையும் பயின்றார். இளங்கலைப் படிப்பின்போது மில்டன் பற்றிய கட்டாயப்பாடம் ஏற்படுத்திய விலகல் உணர்வால் இரு முறை சில மாதங்கள் இடைநின்று கல்வியைத் தொடர்ந்தார். இந்த இடைவேளைகளில் வரைகலையில் கவனம் செலுத்தினார்.1981-ல் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்காக டொராண்டோ பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். சப்போ (Sappho), பண்டைய கிரேக்க நாவலாசிரியர்கள், பிளேட்டோ ஆகியோரின் படைப்புகளில் காமம் மற்றும் விழைவின்  முக்கோண அமைப்புகள்’ (triangulations of desire) வெளிப்படும் விதத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன், கால்கரி, மிசிகன், மெக் கில்  உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் செவ்வியல், ஒப்பிலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத் துறைகளில் பேராசியராகப் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவின் ஆன் ஆர்பர் நகரில் வசிக்கிறார்.

விழைவு, நிறைவேறாக் காதல், தீவிரமான பிரிவுத்துயர் இவையே கார்சனின் படைப்புகளின் பேசுபொருள்கள். விழைபவர், விழையப்படும் பொருள், இருவருக்கிடையே  உருவமாகவோ அருவமாகவோ உள்ள இடைவெளி இவை மூன்றும் இணைந்த இயங்கியலை ஆராய்ந்த அவரது முனைவர் பட்ட ஆய்வின்  நூலாக்கம்  ‘Eros the Bittersweet: An Essay (1986)’ . கிரேக்கத் தொன்மத்தில் ஈரோஸ்  காமம், விழைவு மற்றும்  கருவளத்துக்கான தெய்வம் (இந்தியத் தொன்மத்தின் மன்மதன் மற்றும் லத்தீன் தொன்மத்தின் Cupid க்கு இணையானது). ஈரோஸ்(விழைவு) ஒரே நேரத்தில் இன்பத்தையும்  வலியையும்  தருவதை  சாஃபோ (Sappho) போன்ற பண்டைய கிரேக்க கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டு விளக்குகிறார். கிரேக்கத் தொன்மங்களுக்காகவும், எமர்சனுடையதைப் போன்றே கவிதை  நடையில் அமைந்த உரைநடைக்காகவும்,  கவிதைத் தன்மைக்காகவும் இந்த நூல் மெல்ல மெல்ல கவனம் பெற்றது.

தொன்மங்களின் மறு உருவாக்கம் அவரது படைப்புகளின் முக்கியமான அம்சம். ‘The Autobiography of Red’, கெய்ரான் (Geyron) என்னும் இறக்கைகளை உடைய சிவப்பு அரக்கனைப் பற்றிய கிரேக்க தொன்மத்தை சமகாலத்துக்கேற்ப மீள் உருவாக்கம் செய்கிறது.  மோகத்தாலும், மன உளைச்சலாலும், அஞராலும் (trauma)  அலைக்கழிக்கப்பட்டு, அதன் ஊடே கலைசார்ந்த விழிப்புணர்வைப் பெறும் பால்புதுமை வாலிபனின் (Queer)  வயதடையும் பயணத்தைக் கூறுகிறது. தொன்மத்தில் சிவப்பு அரக்கனின் ஆடுகள் களவாடப்படுவதுபோல நாவலில் கெய்ரானின் களங்கமின்மையும், அப்பாவித்தனமும் களவாடப்படுகின்றன. 2019-ல் வெளியான ‘Norma Jeane Baker of Troy’  என்ற நூல் யூரிபிடீஸின் (Euripides) காவியத்தில் வரும் ட்ராயின் ஹெலனையும், சமகாலத்தின் மர்லின்  மன்றோவையும் (Norman Jeane) இணைத்து, அதிகாரத்தாலும் காமத்தாலும் போகப் பொருளாகப் பார்க்கப்பட்டு, வேட்டையாடப்பட்ட பேரழகின் இரு வேறு முகங்களாகக் காட்சிப்படுத்துகிறது.

இலக்கியப் பரப்பில் கார்சனின் தளம் தனித்துவமானது.தன்னை ஒரு கவிஞர் என்று அழைத்துக்கொள்ளத் தயங்கும் கார்சன் தனது வாழ்நாள் முழுவதும் வழக்கத்திற்கு மாறான கவிதை வடிவங்களில் எழுதி வந்துள்ளார்.அவரது படைப்புகள் வெளிவந்து சில ஆண்டுகள் கழித்தே உரிய கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. 1980-களின் பிற்பகுதியில், சில அமெரிக்க இலக்கிய இதழ்கள் அவரது படைப்புகளை வெளியிடத் தொடங்கின; ஆனால் கனடிய வெளியீடுகள் அதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. கார்சனுக்கு நாற்பத்திரண்டு வயதாகும் வரை, கனடாவைச் சேர்ந்த ‘பிரிக் புக்ஸ்’ (Brick Books) என்ற சிறிய பதிப்பகம் அவரது முதல் கவிதைத் தொகுப்பான *Short Talks*-ஐ வெளியிடவில்லை.

  1990-களின் மத்தியில் பதிப்பகங்களே அவரைத் தேடி வரத் தொடங்கின. கவிதைகள் மற்றும் கட்டுரைகளின் மூன்று தொகுப்புகள் (Plainwater: Essays and Poetry (1995), ‘Glass, Irony and God’(1995) மற்றும் Men in the Off Hours’ (2000) ) வெளியாகின. இவை தவிர, ‘Economy of the Unlost’ மற்றும் ‘If Not, Winter’ (சாஃபோவின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு) ஆகிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் சார்ந்த நூல்களும் 2002-ல் வெளியிடப்பட்டன.

குகன்ஹெய்ம் ஆய்வுநல்கை(1995), லன்னன் விருது(1996), புஷ்கார்ட் பரிசு(1997), மெக்ஆர்தர் ஆய்வுநல்கை (2000), கிரிஃபின் கவிதைப் பரிசு (2001) எனப் பல விருதுகளும் அங்கீகாரங்களும் அவரைத் தேடி வந்தன. கவிதை கலந்த  உரைநடையில் காமத்தின் கட்டற்ற தன்மையையும், இழப்பின் வலியையும் மணமுறிவின் வழியாகச் சொன்ன The Beauty of the Husband: ‘A Fictional Essay in 29 Tangos,’(2001)  நாவலுக்காக  இங்கிலாந்தின் டி.எஸ். எலியட் கவிதைப் பரிசை (T.S. Eliot Prize for Poetry) வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை கார்சன் பெற்றார்.

1995-ல் வெளியான  ‘Glass, Irony, and God’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற ‘The Glass Essay’ என்ற 32 பக்க நீண்ட கவிதையில் ஆங்கில நாவலாசிரியர் எமிலி ப்ராண்ட்டின் (Emily Brontë) வாழ்க்கை மற்றும் படைப்புகளுடன் தன் சொந்தத் துயரத்தையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டு காதல் முறிவு, துயரம், தனிமை, சொந்த அடையாளம் பற்றிய தேடல், மற்றும் இலக்கியம் பற்றிய விசாரணகளை மேற்கொள்கிறார். நோபல் பரிசு அறிக்கையில் இந்தக் கவிதை தன் கூறுமுறைக்காக பரிசுக் குழுவால் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(Among these is ‘The Glass Essay’ in Glass, Irony, and God (1995), which demonstrates the potential of the long poem where genre boundaries are seen to blur). 

அஃப்ரோடைட் (Aphrodite), பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மதமாற்றக் கொள்கையாளர் மார்குரைட் போரெட் (Marguerite Porete) மற்றும் சிமோன் வெயில் (Simone Weil) ஆகிய மூன்று பெண் ஆளுமைகளை மையமாகக் கொண்டு கார்சன் எழுதிய பேச்சு மொழியாலான இசை நாடகம் (spoken-word opera) ரேண்டம் ஹவுஸ்(Random House) நிறுவனத்தால் ‘Decreation’ என்று தலைப்பில் 2005-ல் வெளியிடப்பட்டது.  

ஆன் கார்சன் சாஃபோ மற்றும் யூரிபிடிஸ் போன்ற கிரேக்க செவ்வியல் எழுத்தாளர்களின் பல அதிகம் அறியப்படாத படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.  மூலத்தின் அனுபவம் சிதையாமல் நவீன கவிதைகளுக்கான நடையில் கூரிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வேர்ச்சொல் (Etymology) ஆய்வே தனது ஆக்கங்களின் தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறார்.பலவகை இலக்கிய வகைமைகளின் இலக்கணங்களுக்கிடையேயான  எல்லைக்கோடுகளை மீறிய  கவிதைகள், கட்டுரைகள், லிப்ரெட்டோக்கள்(ஓபரா, பேலே (Ballet) போன்ற இசை நாடகங்களுக்கான பாடல்கள், வசனங்கள் அடங்கிய உரை) உரைநடை விமர்சனங்கள் மற்றும் கவிதை நாவல்களையும் படைத்துள்ளார். கண்கவர் கலைகள் (Visual Arts), நடனம்,  நாடகக் கலைகளையும் தன் படைப்புகளில் பயன்படுத்துகிறார். ரோமானியக் கவிஞர் கட்டலஸ் (Catullus) தன் சகோதரனின் மரணத்திற்காக எழுதிய புகழ்பெற்ற இரங்கற்பாவை (Elegy 101) மொழியாக்கம் செய்து பல ஆண்டுகளுக்கு முன் நாடு விட்டுச் சென்று டென்மார்க்கில் இறந்த தன் சகோதரனுக்கான அஞ்சலியாக ஒரு பெட்டிக்குள் மடிக்கப்பட்ட காகிதச் சுருள் வடிவில் (Accordion-style book) புகைப்படங்கள், கவிதைகள் மற்றும் கடிதங்களுடன்  ‘Nox’ என்ற நூலாகக் கட்டமைத்தார். மரணமும், இழப்பும் ஏற்படுத்தும் வெற்றிடத்தை இட்டு நிரப்ப முடியாத  மொழியின்  போதாமை  இங்கு வெளிப்படுகிறது. 

இறுக்கமாகப் பின்னப்பட்ட கச்சிதமான எளிமையான நடையால் கார்சனின் தொனியை அடையாளம் கண்டுகொள்ளலாம். தீவிரமான உணர்வுகளையும் அளவற்ற துக்கத்தையும் சொல்லவும் இதே நடையைக் கைகொள்கிறார். கார்சனின் ஒட்டுமொத்த படைப்புலகையும் தொல்மனிதனின் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட்ட வேர்ச் சொற்கள் குறித்த ஆழ்ந்த ஆய்விற்கும் நவீன கவித்துவ வெளிப்பாட்டிற்கும் இடையிலான சங்கமமாகக் கொள்ளலாம். தனது படைப்புகளில் கவிதை, உரைநடை, கட்டுரை, புனைவு போன்ற இலக்கிய வகைமைகளுக்கிடையே இருந்த மரபான எல்லைக்கோடுகளைத் நெகிழ்த்திய கார்சன் கலப்பின  (hybrid) எழுத்துமுறைக்கான முன்னோடியாகிறார்.

My mother forbad us to walk backwards. 

That is how the dead walk, she would say. 

Where did she get this idea? Perhaps from a bad translation. 

The dead, after all, do not walk backwards but they do walk behind us. They have no lungs and cannot call out 

but would love for us to turn around. 

They are victims of love, many of them. 

 இந்தக் கவிதையை அவரது படைப்புகளின் அடிநாதமெனக் கொள்ளலாம். மரபைத் திரும்பி நோக்குவது பின்னோகிச் செல்வதாக ஆகாது. இறந்தவர்களைப்போல மரபும் நமக்குப் பின்னால் ஓசையின்றி நடந்து வருகிறது. பழக்கங்களாக, உளப்பதிவுகளாக அது நம்முடன் இருக்கிறது. திரும்பி ஒருகணம் தன்னை நோக்கவே நம்மைக் கோருகிறது. அழகியல், தத்துவம், வாழ்வியல், மெய்யியல் என அனைத்து தரப்புகளிலிருந்தும் நம் ஆதிப்படிமங்களான தொன்மங்களை  சமகாலம் என்னும் ஆடியில் நோக்குபவையே கார்சனின் படைப்புகள்.  


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “இலக்கியத்துக்கான நோபல் பரிசு- 2026 ஆன் கார்சன்”

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.