ஆன் கார்ஸனின் சில சுருக்கக் குறிப்புகள்

பின்னோக்கி நடப்பது பற்றி சிறு உரை

அம்மா எங்களைப் பின்னோக்கி நடக்கக்கூடாது என்று தடை செய்தாள். இறந்தவர்கள்தான் அப்படி நடப்பார்கள் என்பார். இந்த எண்ணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது? ஒருவேளை மோசமான மொழிபெயர்ப்பிலிருந்து வந்திருக்கலாம். இறந்தவர்கள் பின்னோக்கி நடப்பதில்லை; ஆனால் நம் பின்னால் நடக்கிறார்கள். அவர்களுக்கு நுரையீரல் இல்லை, குரல் கொடுத்துக் கூப்பிடவும் முடியாது. ஆனால் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். அவர்களில் பலர் அன்பினால் பலியானவர்கள்.

நேசிக்கப்படுவதன் மகிழ்ச்சி பற்றி சிறு உரை

நாள்தோறும், கண் விழித்ததும் உன்னை  நினைக்கிறேன்.  பறவைகளின் கூக்குரல்களை ரத்தினங்கள் போல் காற்றில் பதித்திருக்கிறார்கள்.

பிரிஜித் பார்தோ பற்றி சிறு உரை

பிரிஜித் பார்தோ[1] வேட்டையாடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன வேண்டும், ஓர் அடிமையா? தன் பசியைத் தீர்த்துக்கொள்ளவும் அழகான புகைப்படங்களை உருவாக்கவும். அந்த அடிமை யாருடையவன்? அவளுக்குக் கவலையில்லை, அவள் ஒருபோதும் தன்னைக் குறை சொல்லிக் கொள்வதில்லை. எண்ணெய் கொண்டு அந்த அடிமையை மின்னச் செய்வாள். கச்சிதம். லா ஃபோலி[2], என்று தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

திருத்தம் பற்றி சிறு உரை

காஃப்கா தன் கைக்கடிகாரத்தை ஒன்றரை மணி நேரம் முன்னால் வைத்திருக்க விரும்பினார். ஃபெலீஸ்[3] அதைச் சரியான நேரத்துக்குத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருந்தாள். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் மற்றவரை அவர் இருக்கும் விதத்திலேயே நேசிக்கிறோம் என்று தன் நாட்குறிப்பில் எழுதினார். 1912-இல் அவளுடைய தங்கப் பற்கள் அவருக்கு உண்மையிலேயே நரகத்துக்குரிய ஒளிர்வைக் கொண்டிருந்தன என்ற குறிப்பையும் அதனுடன் சேர்த்திருந்தார். ஐந்து ஆண்டுகளாக அவர்கள் திருமணத்தின் விளிம்பில் இருந்தார்கள். அதற்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருந்த காரணங்களை அவர் பட்டியலிட்டார். தன் சொந்த வாழ்க்கையின் தாக்குதலைத் தாங்க முடியாமை சாதகமான காரணங்களில் ஒன்று; இரவு பத்தரை மணிக்கு தன் பெற்றோரின் படுக்கைகளின் மீது விரித்து வைக்கப்பட்டிருந்த இரவாடைகளைக் காண்பது பாதகமான காரணங்களில் ஒன்று. இரத்தக்கசிவு அவரைக் காப்பாற்றியது. நலவிடுதியில் மருத்துவர்கள் பேசக்கூடாது என்று அறிவுறுத்தியபோது, அவர் கண்ணாடியான வாக்கியங்களைத் தரையெங்கும் விட்டுச் சென்றார். அவற்றில் ஒன்று சொல்கிறது: ஃபெலீஸிடம் இன்னும் அளவுக்கு அதிகமான நிர்வாணம் எஞ்சியிருந்தது. ஆரோக்கியமான பற்களா? அவையும் அவற்றின் அளவில் பயங்கரமானவைதான்.

வான் கோக் பற்றி சிறு உரை

நான் குடிப்பதற்கான காரணம் மஞ்சள் வானத்தைப் புரிந்து கொள்வதற்காகத்தான், அந்த அபாரமான மஞ்சள் வானத்தை, என்றார் வான் கோக். உலகத்தைப் பார்த்தபோது, வண்ணங்களைப் பொருட்களுடன் இணைத்து வைத்திருக்கும் ஆணிகளை அவர் கண்டார். அந்த ஆணிகள் வலியில் இருப்பதையும் கண்டார்.

உறக்கக் கற்கள் பற்றி சிறு உரை

கமில் கிளோடெல் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளை ஒரு மனநலக் காப்பகத்தில் கழித்தார், ஏன் என்று வியந்தபடி. (அவரை அங்கு சேர்க்கத் தேவையான) ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்த கவிஞரான தன் சகோதரருக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். என்னைப் பார்க்க வா, நான் இங்கே பைத்தியக்காரப் பெண்களுடன் வாழ்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்; நாட்கள் நீண்டவை, என்கிறார் அவர். அவர் புகைபிடிக்கவில்லை, உலாவச் செல்லவுமில்லை. சிற்பம் செதுக்க மறுத்துவிட்டார். அவர்கள் அவருக்கு உறங்க உதவும் படிகக் கற்களைக் கொடுத்தபோதிலும் — பளிங்கு, கிரானைட், போர்ஃபிரி [4] — அவற்றை உடைத்தார். பிறகு துண்டுகளைச் சேகரித்து, இரவில் சுவர்களுக்கு வெளியே அவற்றைப் புதைத்தார். இரவில்தான் அவரது கைகள் மேன்மேலும் பெரிதாக வளர்ந்தன, கடைசியில் புகைப்படத்தில் அவை அவரது முழங்கால்களின் மீது ஏற்றி வைக்கப்பட்ட வேறொருவரின் உடலின் இரண்டு பாகங்களைப் போல இருக்கின்றன.

நீர்புகா நிலை பற்றி சிறு உரை

ஃபிரான்ஸ் காஃப்கா யூதர். அவருக்கு ஓட்லா என்ற சகோதரி இருந்தார், அவரும் யூதர். ஓட்லா யூதரல்லாத நீதித்துறை அறிஞரான யோசப் டேவிட்டை மணந்துகொண்டார். 1942-இல் நியூரம்பெர்க் சட்டங்கள் போஹீமியா-மொராவியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அமைதியான ஓட்லா, யோசப் டேவிட்டிடம் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று முன்மொழிந்தாள். முதலில் அவர் மறுத்தார். இரவின் உருவங்கள், சொத்துகள், அவர்களுடைய இரண்டு மகள்கள், பகுத்தறிவுடன் அணுக வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றி அவள் பேசினாள். ஆனால், தான் இறக்கப்போகும் இடத்தின் பெயரை அவள் குறிப்பிடவில்லை; ஏனெனில் அந்தச் சொல்லை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆஷ்விட்ஸ், அங்கேதான் 1943 அக்டோபரில் அவள் இறப்பாள். குடியிருப்பை ஒழுங்குபடுத்திய பிறகு, அவள் ஒரு பயணப்பையைத் தயார் செய்தாள். யோசப் டேவிட் அவளுடைய காலணிகளுக்குப் பளபளப்பாகப் பாலிஷ் போட்டார். அவற்றின் மீது ஒரு படி கிரீஸையும் பூசினார். இப்போது அவை நீர்புகாதவை என்றார் அவர்.

மோனாலிசா பற்றி சிறு உரை

ஒவ்வொரு நாளும் அவன் தன் கேள்வியை அவளுக்குள் ஊற்றினான். ஒரு பாத்திரத்திலிருந்து வேறு பாத்திரத்துக்குத் தண்ணீரை ஊற்றுவதைப்போல, அது திருப்பி ஊற்றப்பட்டது. அவன் ஓவியமாகத் தீட்டிக்கொண்டிருந்தது அவனுடைய தாயை என்றோ, காமத்தை என்றோ, வேறு எதையோ சொல்லாதே. தண்ணீர் ஒரு பாத்திரத்திலும், அல்லது வேறொரு பாத்திரத்திலும் இல்லாமல் இருக்கும் ஒரு கணம் உண்டு- என்னவொரு தாகமாக இருந்தது அது, கித்தான் முற்றிலும் வெறுமையாகிவிட்டால் நான் நிறுத்திக்கொள்வேன் என்று அவன் நினைத்தான். ஆனால் பெண்கள் வலிமையானவர்கள். பாத்திரங்களைப் பற்றியும், தண்ணீரைப் பற்றியும், மரண தாகத்தைப் பற்றியும் அவளுக்குத் தெரியும்.

சில்வியா பிளாத் பற்றி சிறு உரை

தொலைக்காட்சியில் அவளுடைய அம்மாவைப் பார்த்தாயா? அவர் எளிய, எரிந்துபோன விஷயங்களைச் சொன்னார். அந்தக் கவிதை மிகச் சிறந்தது என்று நினைத்தேன், ஆனால் அது என்னைக் காயப்படுத்தியது என்றார். காட்டச்சம் என்று அவர் சொல்லவில்லை. காட்டுத்தனமான வெறுப்பு, கடும் காட்டின் கட்டுப்பாடற்ற அழுகை, வெட்டிக் குறை என்று அவர் சொல்லவில்லை. சுயாட்சி என்றார். பாதையின் முடிவு என்றார். நீ எதை வெட்ட வந்தாயோ, அது காற்றின் நடுவே முணுமுணுத்துக்கொண்டிருக்கிறதைச் சொல்லவில்லை.

முழுமையான சேகரிப்பு பற்றி சிறு உரை

சிறுவயதிலிருந்தே, உலகிலுள்ள எல்லா  பொருட்களையும் தன் அலமாரிகளிலும் புத்தக அடுக்குகளிலும் வரிசையாக அடுக்கி, தன்னுடன் வைத்துக்கொள்ள முடியும் என்று அவன் கனவு கண்டான். குறைபாட்டையோ, பெருமறதியையோ, ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போயிருக்கக்கூடும் என்ற சாத்தியத்தையோகூட அவன் மறுத்தான். நீல முக்கோணங்களாக நோவாவிடமிருந்து ஒழுங்கு பெருக்கெடுத்து ஓடியது. அவனுடைய வகைப்பாடுகளின் தூய வெறி அவனைச் சுற்றி எழுந்து, அவனுடைய வாழ்க்கையையே மூழ்கடித்தது. அவற்றை மற்றவர்கள் அலைகள் என்று அழைத்தார்கள், மூழ்கியவர்கள், உலகாக இருந்தவர்கள்.

இருக்கையில் அமர்த்தப்படுவது பற்றி சிறு உரை

இப்போதெல்லாம் அவர் மூன்று பைத்தியக்காரர்களுடன் ஓர் அறையில் நாற்காலியோடு கட்டப்பட்டிருக்கிறார். ஆனால் போர்க்காலத்தில் என் தந்தை விமான வழிகாட்டியாக இருந்தார். உளவாளிகளுக்குப் பொட்டலங்களைப் போடுவதற்காகப் பிரான்ஸின் மீது தாழ்வாகப் பறந்தார் — ஒருமுறை நைலான் காலுறைகள், அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஜெர்மானியர்களுக்கு அவற்றை விளக்குவது கடினம். வோ இஸ்ட் ஸீ?[5] என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டார்கள், ஆனால் அப்பாவுக்கு ஜெர்மன் தெரியாது, அவருடன் இருக்கைகளில் அமர்ந்திருந்த மற்ற மூவரும் இறந்துபோயிருந்தார்கள்.

டாக்டர் டெய்மனின் உடற்கூறியல் பாடம் பற்றி சிறு உரை

அத்தனை கடுமையான குளிர்காலம். ப்ரீஸ்ட்ராட்டில் நடந்து செல்லும்போது, வெயிலிலிருந்து நிழலுக்குள் நுழைந்ததும் அந்த வேறுபாடு தண்ணீரைப் போல மண்டையோட்டின் மீது வழிந்தோடுவதை உணர முடியும். அது 1656-ஆம் ஆண்டின் பஞ்ச குளிர்காலம். அப்போது பிளாக் ஜான், எல்ஸ்ஜே ஓட்ஜே என்ற வேசியுடன் சேர்ந்துகொண்டான்; சிறிது காலம் அவர்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் உறைய வைக்கும் குளிரிருந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள், துணி வணிகர் ஒருவரின் வீட்டில் பிளாக் ஜான் திருடிக்கொண்டிருப்பது கவனிக்கப்பட்டது. அவன் ஓடினான், விழுந்தான், ஒருவனைக் கத்தியால் குத்தினான்; ஜனவரி 27 அன்று தூக்கிலிடப்பட்டான். அதன்பிறகு அவனுக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குளிரான வானிலை, டாக்டர் டெய்மன் பிளாக் ஜானின் உடலை மூன்று நாட்களுக்கு மருத்துவத்தின் உண்மையான பார்வைக்கு உட்படுத்த அனுமதித்தது. எல்ஸ்ஜே எப்போதாவது ரெம்பிராண்ட்டின் ஓவியத்தைப் பார்த்திருப்பாளா என்று வியக்கத் தோன்றுகிறது. அந்த ஓவியம், அவள் காதலித்த திருடனை, மூர்க்கமான முன்பக்கத் துணிப்பில் உருப்படுத்துகிறது,  அவனுடைய தூய உள்ளங்கால்கள் வெட்டித் திறக்கப்பட்ட பெருமூளையை ஏறக்குறையத் தொட்டுவிடுவதுபோல் இருக்கின்றன. பிரச்சினையின் மூலத்தைக் கண்டுபிடிக்க வெட்டுங்கள், இன்னும் ஆழமாக வெட்டுங்கள் என்று டாக்டர் டெய்மன் சொல்கிறார்; தலைமுடியை இருபுறமும் விலக்குவதைப்போல அவர் மூளையை இருபுறமும் பிரிக்கிறார். அதிலிருந்து சோகம் துழாவிக்கொண்டு வெளியே வருகிறது.

விமானம் மேலெழும் உணர்வு பற்றி சிறு உரை

சரி, உனக்குத் தெரியுமா, நான் யோசிக்கிறேன், அது கைகளை உயர்த்திக்கொண்டு, வாங்கிவிடலாம், என்ன ஓர் அருமையான பேரம் என்று கத்திக்கொண்டு என் வாழ்க்கையை நோக்கி ஓடிவரும் காதலாக இருக்கக்கூடும்!

ஆர்க்கிட் மலர்கள் பற்றி சிறு உரை

நாம் சுரங்கங்கள் தோண்டி வாழ்கிறோம், ஏனெனில் உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் நாம். நீ தோண்டும் சுரங்கங்கள் எனக்கு விசித்திரமாக குறிக்கோளற்றவையாகத்  தோன்றும், வேரோடு பிடுங்கப்பட்ட ஆர்க்கிட் மலர்களைப் போல. ஆனால் அவற்றின் நறுமணம் அழிவதில்லை. ஆம்ஹர்ஸ்டிலிருந்து ஒரு சிறுவன் சில நாட்களுக்கு முன்பு ஓடிப்போயிருக்கிறான், அவன் எங்கே போகிறான் என்று கேட்டபோது, வெர்மான்ட் அல்லது ஆசியா என்று பதிலளித்தான் என்று எமிலி டிக்கின்சன் 1883-ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் எழுதுகிறார்.

அடைக்கலம் பற்றி சிறு உரை

மீனின் இதயத்தைக் கொண்டு ஒரு சுவரில் எழுத முடியும், அதற்குக் காரணம் பாஸ்பரஸ். அவர்கள் அதைச் சாப்பிடுகிறார்கள், ஆற்றங்கரையோரமாக அப்படிப்பட்ட குடிசைகள் இருக்கின்றன. உன்னிடம் முடிந்தவரை தவறாக இருப்பதற்காகவே இதை எழுதுகிறேன். நீ வெளியேறும்போது கதவைத் திரும்பப் பொருத்திவிடு என்று அது சொல்கிறது, இப்போது சொல், அது எந்த அளவுக்குத் தவறானது என்று. அது எவ்வளவு நேரம் ஒளிர்கிறது. சொல்.

_______________________

ஆன் கார்ஸன் கனடா நாட்டு எழுத்தாளர், கவிதைகள், கட்டுரைகள் மேலும் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரித்தவர். 2026 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 

பின்குறிப்புகள்:

[அ] இந்தக் குறிப்புகள் யேல் ரிவ்யு என்கிற பத்திரிகையில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவர் நோபெல் பரிசை வென்றபின் 2026 ஆம் ஆண்டில் இலையுதிர் கால இதழில் மீள் பிரசுரம் செய்யப்பட்டது. அந்த மீள் பிரசுரத்திலிருந்து சில பகுதிகளை மொழி பெயர்ப்பாகத் தருகிறோம்.

[1] பிரிஜித் பார்தோ ஒரு ஃப்ரெஞ்சு நடிகை, பாடகி, விளம்பர மாடல் மற்றும் பிராணிகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்தவர். 1934 இல் பிறந்தவர் 1950களில் புகழேணியில் ஏறியவர், சில பத்தாண்டுகளுக்கு யூரோப்பின் ‘கவர்ச்சிக் கன்னியாக’ வலம் வந்தார். பல புகழ் பெற்ற ஃப்ரெஞ்சுக் கலைப்பட இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். 2025 ஆம் ஆண்டு இறந்தார். 

[2] லா ஃபோலி- la folie என்ற ஃப்ரெஞ்சுச் சொற்றொடர். விளைவைப் பாராமல் மேற்கொண்ட ஆபத்தான செயல், அல்லது பித்துப் பிடித்த நடத்தை என்று பொருள் தரும்.

[3] ஃபெலீஸ் பாவர் – ஐந்தாண்டுகள் ஃப்ரான்ஸ் காஃப்காவின் காதலராக இருந்த பெண்.  (ஆகஸ்ட் 1912 -டிசம்பர் 1917) ஐந்தாண்டுகளில் ஒரு முறை மணக்க ஒத்துக் கொண்ட பின் காஃப்கா அதை முறித்துக் கொண்டார். 1917 இல் மறுபடி மணம் புரிய ஒத்துக் கொண்டார்கள், ஆனால் டிசம்பரில் காஃப்கா மறுபடி விலகிக் கொண்டார். 

[4] ஃபோர்பிரி- Porphyry – ஒரு வகைப் படிகக் கல். இதைச் சில காலம் மனநலம் பாதித்தவர்களுக்கு ஆறுதல் தரும் கல் என்ற நம்பிக்கை நிலவியதால் அவர்கள் துன்பமின்றி உறங்குவதற்கும், மனம் ஆறுதல் பெறவும் இந்தக் கற்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டன. 

[5] வொ இஸ்ட் ஸீ- Wo ist see என்ற ஜெர்மன் மொழிச் சொற்றொடர்- ஏரி எங்கே இருக்கிறது என்று பொருள்.


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆன் கார்ஸனின் சில சுருக்கக் குறிப்புகள்”

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.