பணம்!
சிறு வயதில் திரைப்படங்களில்தான் கட்டு கட்டாகப் பணத்தைப் பார்த்திருக்கிறேன். இரும்புப் பெட்டி நிறைய பணத்தை வைத்திருக்கும் பணக்கார அப்பா, அறை முழுவதும் பணத்தை அடுக்கி வைத்திருக்கும் வில்லன் எனப் பார்க்கும் பொழுது யாரிடமேனும் இவ்வளவு பணம் இருக்குமா என்றே என் மனம் நினைக்கும். அப்படித் திரைப்படங்களில் பார்த்தது போல் அறை முழுவதும் பணக்கட்டுகளைப் பார்க்கும் அனுபவம் எனக்குக் கிடைக்கும் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் அது நடந்தது.
பட்டையக் கணக்காளராவதற்காகப் படிக்கும் பொழுது வங்கிகளைத் தணிக்கைச் செய்யப் போகச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அப்பொழுது அங்கிருக்கும் ரொக்கப் பணங்களைக் கணக்குப் பார்க்க வேண்டும். சிறிய கிளைகளில் அவ்வளவு அதிகம் இருக்காது. ஆனால் ஒரு முறை மண்டல அலுவலகம் சென்ற பொழுது ஓர் அறை முழுவதும் அடுக்கப்பட்ட சிலப்பலக் கோடி ரூபாய்களைப் பார்த்து மலைத்தேன். பல வருடங்களுக்குப் பின்னர் வேலை நிமித்தம் நைஜீரியாவில் இருந்த பொழுது செலவுக்கு அமெரிக்க டாலர்களை மாற்றினால் கிடைக்கும் உள்ளூர் பணத்தை உரச்சாக்குகளால் தைக்கப்பட்ட பைகளில் எடுத்து வர வேண்டிய நிலைமையும் இருந்தது. அங்கும் வங்கி ஒன்றின் கருவூலத்திற்குள் நுழையும் பொழுது பழைய நோட்டுகளின் வாசத்தைச் சமாளிக்க முகமூடி எல்லாம் அணிய வேண்டியதாக இருந்தது.
அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பின்னர் இந்தியா வரும் பொழுது முதலில் செய்யும் வேலை வங்கிக்குச் சென்று ரூபாய்களை எடுப்பதுதான் என்றிருந்தது. ஆனால் சமீபகாலமாக அதற்குத் தேவையே இல்லாமல் ஆகிவிட்டது. காரணம் யூபிஐ! பெரிய கடைகள் தொடங்கி தெருவோர வியாபாரிகள், பெட்டிக்கடை, கோயில் உண்டியல், ஏன் சில இடங்களில் பிச்சை எடுப்பவர்களிடம் கூட க்யூஆர் கோட் (QR Code) ஒன்றினை செல்பேசியில் வருடி பணத்தைச் செலுத்தி விட முடிகிறது. கனத்த பர்ஸை சுமக்க வேண்டாம், சில்லறை இருக்கிறதா எனக் கவலைப்பட வேண்டாம். வங்கியில் பணமும் கையில் செல்பேசியும் இருந்தால் போதும் உடனடியாகப் பணத்தைச் செலுத்த முடிகிறது. பணத்தை வாங்குபவர்களின் கணக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் வரவு வைக்கப்படுகிறது.
திரும்ப அமெரிக்க வந்த பின்னர் கை நிறைய கடனட்டைகளை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் பொழுது அலுப்பாக இருக்கிறது. இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை கடனட்டைகளை செல்பேசியில் அடைத்துக் கொண்டு பணம் செலுத்த முடிகிறது. ஆனால் அந்த க்யூஆர் கோட் வசதி எல்லாம் இன்னும் எல்லா இடத்திலும் வரவில்லை. கொஞ்சம் வயதானவர்கள் இன்னமும் காசோலையில் கையெழுத்துப் போட்டு தபாலில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்குப் பணம் அனுப்பினால் என்றைக்குப் போய் சேரும் என்று கேட்பதும் சகஜமாக இருக்கிறது. அத்துறையில்தான் வேலை என்பதால் இதைப் பற்றி எல்லாம் நினைக்கும் பொழுதே ஆயாசமாக இருக்கிறது.
அதற்காக இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் முற்றிலும் மறைந்து விட்டது என்றில்லை. ஆனால் தினசரி விஷயங்களுக்காக கையில் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவுதான். மிகக் குறுகிய காலத்தில் நடந்த இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்று அரசே இதை முன்னெடுத்ததுதான்.
வங்கிக் கணக்குகள் இல்லாத பலருக்கும் வங்கிக் கணக்குகள், ஆதார் (Aadhaar), கைப்பேசி வசதிகள், மலிவான இணைய இணைப்பு, மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவித்த திட்டங்கள் எனப் பலவும் சேர்ந்து இதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. பணமதிப்பிழப்பு (Demonetization) போன்ற சில முயற்சிகள் எளிதாக நடக்கவில்லை. அவற்றால் மக்களுக்குச் சிரமங்களும் ஏற்பட்டன. எதிர்ப்புகளும் இருந்தன. ஆனால் இவையெல்லாம் சேர்ந்து பணப்பரிவர்த்தனைகளை மின்னணு வழிக்குத் தள்ளின என்பதில் சந்தேகமில்லை.
இன்று நாம் கைப்பேசியை எடுத்து சில நொடிகளில் பணம் கொடுத்துவிடுகிறோம். ஆனால் இங்கே வருவதற்குத்தான் பணம் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறது!
கடவுள் உலகைப் படைத்தபோது முதல் நாளில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கட்டளையிட்டார், அப்போது வெளிச்சம் உண்டாயிற்று. ஏழாம் நாள் பணம் பெருகட்டும் என்றார், ஆதாம் ஏவாள் கைகளில் பணம் புரண்டது. விவிலியத்தில் ஆண்டவன் இப்படிப் பணத்தைப் படைத்தார் என்றிருந்தால் இந்தப் பத்திக்கு வேலை இல்லை. ஆனால் பணம் அப்படிப் படைக்கப்படவில்லை.
பணம் இல்லாத உலகத்தை ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்ப்போம்.
என்னிடம் அரிசி இருக்கிறது. உங்களிடம் பால் இருக்கிறது. எனக்குப் பால் வேண்டும். உங்களுக்கு அரிசி வேண்டும். இருவரும் சந்தித்துக்கொண்டால் பிரச்சினை இல்லை. அரிசியைக் கொடுத்து பாலை வாங்கிக்கொள்ளலாம். பண்டங்களை மாற்றிக் கொள்வதால் இம்முறைக்குப் பண்ட மாற்று எனப் பெயர்.
ஆனால் எனக்குப் பால் வேண்டும், உங்களுக்கு அரிசி வேண்டாம் ஆனால் உளுந்து தேவை என்றால்? யாருக்கு அரிசி வேண்டும், யாரிடம் உளுந்து இருக்கிறது என்று தேடிப் பார்த்து பொருட்கள் பல வகையில் கைமாறி உங்களுக்கு உளுந்து கிடைக்க வேண்டும், எனக்குப் பால் கிடைக்க வேண்டும். எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு உளுந்து? எவ்வளவு உளுந்துக்கு எவ்வளவு பால் என்பதெல்லாம் யாருக்குத் தேவை அதிகம் என்பதை வைத்து முடிவு செய்ய வேண்டியதாயிற்று. இப்படிப் பலரும் பண்டங்களை மாற்றிக்கொள்ள ஓரிடத்தில் கூடத் தொடங்கினார்கள். பின்னாளைய சந்தைகளுக்கு இது ஒரு படி.
பண்டங்களை மாற்றிக்கொண்டது மட்டுமல்ல. யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கணக்கு வைத்துக்கொள்வது, கடனாகக் கொடுப்பது போன்ற முறைகளும் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கி விட்டன. அப்படித்தான் பண்டங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு அதன் மதிப்பை இன்னொருவருக்குக் கொடுப்பது என்ற வழக்கமும் வந்தது. ஆடு, மாடு, தானியம், சிப்பி என்று பல பொருட்கள் பணத்தின் வேலையைச் செய்யத் தொடங்கின.
ஆனால் அம்முறையில் பிரச்சினைகள் இருந்தன. மாட்டை எடுத்துக்கொண்டு கடைக்குப் போவது சிரமம். அதைவிட முக்கியமாக ஒரு சிறிய பொருள் வாங்குவதற்கு மாட்டின் சிறு பகுதியைக் கொடுக்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றை எளிதாக எடுத்துச் செல்லலாம். எடை போடலாம். பல அளவுகளில் செய்து தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தலாம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் உலோகத்தை உரசிப் பார்த்து, எடை போட்டு, அதன் தூய்மையைச் சோதித்துக்கொண்டிருக்க முடியுமா? அங்குதான் நாணயம் வருகிறது. அரசோ, அதிகாரம் பெற்ற அமைப்போ ஒரு குறிப்பிட்ட எடையுள்ள உலோகத்துண்டில் தனது முத்திரையைப் பதித்து, இதன் எடையையும் மதிப்பையும் நான் உறுதி செய்கிறேன் என்று சொன்னது.
தமிழில் அதற்குத்தான் எவ்வளவு பொருத்தமான சொல் வைத்திருக்கிறோம் – நாணயம்.
நாணயம் என்றால் காசு. அதே சொல்லுக்கு நேர்மை, நம்பகத்தன்மை என்ற பொருளும் இருக்கிறது. “அவர் நாணயமானவர்” என்று சொன்னால் அவரிடம் நிறையக் காசு இருக்கிறது என்றா பொருள்? அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றல்லவா சொல்கிறோம்.
பணத்தின் அடிப்படையே நம்பிக்கைதானே? என் கையில் இருக்கும் இந்த உலோகத்துண்டை நாளை நீங்கள் இதே மதிப்புக்கு ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் அது வெறும் உலோகத்துண்டுதான்.
இதைச் சொல்லும் பொழுது மனத்தில் ஒரு வெண்பா வந்து விழுந்தது
பண்டங்கள் மாற்றியே பைத்தியம் ஆகாதே
விண்டு கொடுத்திட வேதனையே – நண்பாநீ
பேண எளிதாமே பேசாமல் தானிங்கு
நாணயம் தன்னையே நாடு!
வெள்ளி நாணயங்கள் இருந்தன என்று பார்த்தோமல்லவா? அப்படி முறையாக வடிவமைக்கப்பட்டு, முத்திரையோடு வெளியிடப்பட்ட வெள்ளி நாணயங்களை வடமொழியில் ரூப்ய (Rūpya) என்றழைத்தார்கள். அந்தச் சொல்தான் இன்றைக்கு பல மொழிகள் வழியாக நமது ரூபாயாக நிலைத்திருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்லாது நம்மைச் சுற்றி இருக்கும் பாகிஸ்தான், நேபாள், ஶ்ரீலங்கா, மொரீஷியஸ், செஷல்ஸ், மாலத்தீவுகள், இந்தோனேஷியா எனப் பல நாடுகளின் பணத்தின் பெயர்களும் இதே ரூப்ய என்ற வேரிலிருந்தே வந்திருக்கின்றன.
இன்று என் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தில் ஒரு துளி வெள்ளி இல்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த வெள்ளியின் நினைவை அதன் பெயர் இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறது. இன்னொரு வெள்ளிக் கதையையும் பார்த்து விடலாம். டாலர் என்பதற்கு ஈடாக வெள்ளி என்ற சொல்லும் தமிழில் வழங்கப்படுகிறது. குறிப்பாக சிங்கப்பூரில் ஒரு டாலரை ஒரு வெள்ளி என்று சொல்வது இயல்பான வழக்கு. இன்றைக்கு புலம்பெயர் தமிழர்கள் மற்ற நாடுகளிலும் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது ஏதோ தமிழர்கள் தாங்களாக வைத்துக்கொண்ட பெயர் என்று நினைத்தால் அங்குதான் இன்னொரு ஆச்சரியம்.
டாலர் என்ற சொல்லின் மூதாதை பொஹீமியாவின் (Bohemia) யோஹாகிம்ஸ்தால் (Joachimsthal) பகுதியில் வெள்ளியால் செய்யப்பட்ட யோஹாகிம்ஸ்தாலர் (Joachimsthaler) என்ற நாணயம். நீளமான பெயர் தாலர் (Thaler) ஆகி, டாலர் ஆனது. இன்றைக்கு டாலர் என்று வெறுமனே சொன்னால் அது அமெரிக்க டாலரைத்தான் குறிக்கிறது. ஆனால் அமெரிக்கா பிறப்பதற்கு முன்பே டாலர் பிறந்துவிட்டது என்பதுதான் உண்மை!
பல்வேறு கலாச்சாரங்களில் பல நூற்றாண்டுகளாக உலோக நாணயங்கள் கோலோச்சின. ஆனால் அவற்றால் புதிய சிக்கல்கள் வராமல் இல்லை. அத்தனை நாணயங்களைத் தூக்கிக் கொண்டு போவது சிரமாக இருந்தது. நாணயங்கள் தொலைந்து போயின. கொண்டு போகும் பொழுது கொள்ளையடிக்கப்படுவதும் நடந்தது. நாணயம் இல்லாதவர்கள் கள்ள நாணயங்களை தயாரித்தனர்.
முறைபடுத்தப்பட்ட வங்கிகள் ஒரு கட்டத்தில் தங்கத்தை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு காகிதப் பணத்தை வெளியிடத் தொடங்கின. எடை குறைந்து போனாலும் மற்ற சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருந்தன. ஆனாலும் காகிதப்பணம் இன்றளவும் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னாட்களில் காகிதப் பணத்தின் மதிப்பைத் தங்க இருப்போடு இணைத்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் அரசாங்கங்கள் கைவிட்டன. அவற்றின் மதிப்பைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள சமூகமும் பழகிக் கொண்டது.
இருந்தாலும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குத் தொலைந்து போகாமல் எப்படி பணத்தை அனுப்ப? சில இடங்களில் அதற்குச் சுவாரசியமான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தனர். ரூபாய் நோட்டை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை ஒரு தபாலிலும் இன்னொரு பாதியை வேறொரு தபாலிலும் அனுப்புவார்கள். ஒரு கடிதம் மட்டும் திருடப்பட்டால் கிடைத்த பாதி நோட்டால் பயனில்லை. இப்படி ஒரு வழி முறை இருந்தது.
மெதுவாக இதை எல்லாம் தாண்டி முறைபடுத்தப்பட்ட வழிகள் தோன்றின. உதாரணத்திற்கு வணிகத்தில் தேர்ந்த செட்டியார்கள் பர்மா, மலேயா போன்ற பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்து இருந்தனர். ஓரிடத்தில் பணத்தைக் கொடுத்து அவர்கள் தரும் ஹுண்டி (Hundi) என்ற பத்திரத்தை வாங்கிக் கொண்டு அதை வேறு ஓர் ஊரில் இருக்கும் அவர்களது கிளையில் தந்து அங்கு பணமாக மாற்றிக் கொள்ளும் வழிமுறை இருந்தது. இன்றைக்கு செல்பேசியில் இருந்து வங்கிக் கணக்கிற்குப் பணம் பறக்கும் கலைக்குத் தாத்தர்கள் இந்த வழிமுறைகள்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல காசோலைகள், சங்கேதச் செய்தி வழிப் பரிமாற்றங்கள், கடனட்டைகள், இணைய வழி வங்கிச் சேவைகள் என பணத்தை கைமாற்றும் வழிகள் பல்கிப் பரவி மெருகேறி கொண்டே இருந்தன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திலும் பணத்தின் மதிப்புதான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறியதே தவிர நாணயங்களும் காகிதப் பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணுக்குத் தெரியாமலே போயின. இருந்தாலும் பணத்திற்கான மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கைதான் இவற்றுக்கெல்லாம் அடிப்படை. மீண்டும் சொல்ல வேண்டுமானால், நாணயம்!
ரூபாய்க்கும் வெள்ளிக்கும் விளக்கம் சொல்லிட்டு காசு பணம் துட்டுன்னு தலைப்பில் இருக்கும் மற்றதை எல்லாம் காற்றில் விட்டால் எப்படி? அதுவும் தமிழ்க் காசில் இருந்தான் கேஷ் (Cash) என்ற ஆங்கிலச் சொல்லே வந்தது இல்லையா என்று கேள்வி வரலாம். அதற்கு என் பதில் வடிவேல் பதிலாகத்தான் இருக்கும். காசில் இருந்துதான் கேஷ் வந்தது ஆனா வரலை!
இன்றைய ஆங்கில கேஷ் என்ற சொல்லுக்கு வேர்பிடித்துப் போனோமானால் அது பிரெஞ்சு Caisse, இத்தாலிய Cassa, லத்தீன் Capsa என்று போகும். Capsa என்ற சொல்லின் பொருள் பெட்டி. அது ப்ரெஞ்சிலும் இத்தாலியனிலும் பணப்பெட்டி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு ஆங்கிலத்திற்கு வரும் பொழுது பணத்தைக் குறிக்கும் சொல்லாக மாறிப் போனது. இதுதான் ஆங்கில கேஷின் வரலாறு.
அதற்காகத் தமிழ்க் காசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் ஒரேடியாகச் சொல்லிவிட முடியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது தென்னிந்தியாவில் காசு என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தது. அதை அவர்கள் Cass என்றும் Cash என்றும் குறிப்பிட்டனர். பகோடா (Pagoda), பணம் (Fanam), Cash என்று வெவ்வேறு நாணய மதிப்புகளையும் அவர்களது ஆவணங்களில் பார்க்க முடிகிறது. ஆக ஆங்கிலத்தில் Cash என்ற இன்னொரு சொல் தமிழ்க் காசிலிருந்து உண்மையிலேயே சென்றிருக்கிறது. ஆனால் இன்று பொதுவாகப் பணத்தைக் குறிக்க நாம் பயன்படுத்தும் Cashன் வேர்தான் வேறு.
ஒரே மாதிரி ஒலித்த இரண்டு சொற்கள் வரலாற்றில் சந்தித்து ஒன்றையொன்று குழப்பிவிட்டன. மொழிக்கு இப்படிப்பட்ட விளையாட்டுகள் மிகவும் பிடிக்கும்.
பணம் மற்றொரு பழைய சொல். வடமொழியில் பண (Paṇa) என்பதோடு தொடர்புடையது. பணம் என்பது ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் பெயராகவும் இருந்தது. ஐரோப்பியர்கள் அதை Fanam என்று குறிப்பிட்டனர். அதன் மதிப்புகூட ஊருக்கு ஊர் மாறியிருக்கிறது. ஒரு நாணயத்தின் பெயர் காலப்போக்கில் பொதுப்பெயராகிவிட்டது.
தமிழை விட்டு, வடமொழியை விட்டு இன்னும் தொலைவுக்குப் போனால் நமக்குத் துட்டு கிடைக்கும். ஆமாம், துட்டு என்பது டச்சு மொழியில் இருந்து கிடைத்த சொல். டுயிட் (Duit) என்ற செப்பு நாணயத்தைக் குறிக்கும் சொல் நம் ஊரில் துட்டு ஆனது. டச்சுக்காரர்கள் போய் வருடங்கள் ஆனாலும் துட்டு மட்டும் நம்மிடையே நிரந்தரமாகத் தங்கி விட்டது. துட்டு மட்டுமா தங்கியது? கக்கூஸ், பயாஸ்கோப், காமிரா உள் / காமிரா அறை என்பதில் இருக்கும் காமர் என்று அவர்கள் விட்டுப் போனது நம்மிடையே ஏராளம் உண்டு.
இன்றைக்கும் மலாய் மொழியில் Duit என்ற சொல் பணத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. அவ்வளவு ஏன்? மலேசியாவின் உடனடி எண்மப் பணப்பரிவர்த்தனை முறையின் பெயரே DuitNow தான்! காசே இல்லாத மின்னணுப் பரிவர்த்தனைக்கு அந்தக் காசின் பெயர் இருப்பது நகைமுரண்!
இன்னும் ஒரு சில்லறைச் சமாச்சாரம். ஆனால் என்னைப் பொருத்த வரையில் அது பெரிய விஷயம். புகழ் பெற்ற எழுத்தாளர்கள் முதற்கொண்டு சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றுபவர் வரை சில்லரை எனத் தவறாக எழுதுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம் நக்கீரரைப் போல உம் எழுத்தில் பிழை இருக்கிறது எனப் பிராது சொல்லத்தான் தோன்றுகிறது. சொல்லி இருக்கிறேன். சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும் போல.
சில் என்பது சிறியது. தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்க நமக்குக் கிடைப்பது தேங்காய்ச்சில். அறு என்பது துண்டாதல், பிரித்தல். அறுக்கப்பட்ட துண்டு அறை. பெரிய மதிப்பைச் சிறு மதிப்புகளாகப் பிரித்துக் கிடைப்பது சில்லறை. சில் + அறை = சில்லறை.
அரை என்றால் பாதி. நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் இரண்டு ஐம்பது ரூபாய்த் துண்டுகள் மட்டுமே தரவேண்டும் என்று விதியா இருக்கிறது? அதைப் போய் ஏன் சில்லரை என்று எழுத வேண்டும்? ஆனால் ஒன்று, இன்றையத் தொழில்நுட்பம் இந்தப் பிரச்சினையையே இல்லாமல் செய்துவிடும் போல.
யூபிஐ (Unified Payments Interface) வந்தபிறகு சில்லறை தேடும் அவசியமே இல்லையே. என்ன தொகையாக இருந்தாலும் சரியாக அனுப்பிவிடுகிறோம். சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் என்று கடைக்காரர் சொல்ல வேண்டியதில்லை. நோட்டைக் கொடுத்து சீட்டு வாங்கிவிட்டு நடத்துநரிடம் இருந்து சில்லறை வருமா என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதுவல்லவோ புரட்சி!
இப்படி நாம் எண்மப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவது மின்னணு வடிவப் பணம். அது இன்றைக்கு இருக்கும் பணத்தின் வேறு ஒரு வடிவம். ரூபாயோ டாலரோ வேறு எந்த நாட்டுப் பணமோ, நாணயமாகவும் காகிதமாகவும் புழக்கத்தில் இருப்பது போல மின்னணு வடிவிலும் இருக்கிறது. ட்யூட்நவ், யூபிஐ போன்ற வழிகளில் இந்த மின்னணு வடிவப் பணத்தை நாம் பரிவர்த்தனை செய்கிறோம். அவ்வளவுதான்.
ஆனால் இன்றைக்கு இருக்கும் பிட்காயின் (Bitcoin) போன்ற கிரிப்டோகரன்சிகளின் (Cryptocurrencies) கதை வேறு. அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தோமானால் அது நம்மை வேறெங்கெல்லாமோ இழுத்துச் சென்றுவிடும். அது இப்பொழுது வேண்டாம்.
மதிய வேளை வெயிலில் பேருந்து வரக் காத்திருக்கிறோம். நிறுத்தத்தின் அருகே ஒரு வண்டியில் இளநீர் வியாபாரம். நாமும் அந்த சூட்டுக்கு இதமாக இளநீர் ஒன்றை வாங்கி அருந்துகிறோம். வண்டியில் தொங்கிக் கொண்டிருக்கும் க்யூஆர் கோடை செல்பேசியில் வருடி இளநீருக்கான விலையை நொடியில் செலுத்திவிடுகிறோம். பணம் வந்துவிட்டது என்று கடைக்காரரின் செயலி அவருக்குத் தெரிவித்து விடுகிறது. வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வசதிக்கு என்ன விலை?
விலையா? அத்தனையும் இலவசம் ஐயா என்று பதில் வருமானால் அதில் இலவசம் என்ற என் பெயருக்காக மகிழ்ச்சி அடையலாமே தவிர உண்மை அதுவல்ல. இந்தப் பணப்பரிவர்த்தனைக்குப் பின் வங்கிகள் இருக்கின்றன. கணினி அமைப்புகள் இருக்கின்றன. வலைப்பின்னல்கள் இருக்கின்றன. மோசடிகளைத் தடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. புகார்களைத் தீர்க்கும் வழிமுறைகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது அவற்றை திறம்படச் செய்யக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன.
இவை அனைத்துக்குமான செலவும் இருக்கிறது.
இதுவரை யூபிஐயின் மிகப்பெரிய கவர்ச்சிகளில் ஒன்று வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்கும் பெரும்பாலான பரிவர்த்தனைகளில் நேரடிச் செலவு இல்லாதது. இப்போது அதில் ஒரு மாற்றம் வருகிறது.

அக்டோபர் 15ஆம் தேதி முதல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate, MDR) வர இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் இல்லை. தனிநபர்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் பணத்துக்கும் கட்டணம் இல்லை. வணிகர்கள் வாடிக்கையாளரிடம் நேரடியாக இந்தக் கட்டணத்தை வசூலிக்கவும் கூடாது என்ற விதியும் இருக்கிறது.
வியாபாரிக்கு ஒரு புதிய செலவு வந்தால் அவர் அதைத் தனது லாபத்திலிருந்து ஏற்றுக்கொள்ளலாம். வேறு செலவைக் குறைக்கலாம். அல்லது பொருளின் விலையில் சேர்க்கலாம். உதாரணமாக அமெரிக்க அரசாங்கம் திடீரென விதித்த இறக்குமதி வரிகளை இறக்குமதியாளர் செலுத்துவார். ஆனால் இறுதியில் ஒரு பகுதியேனும் எப்படியோ நுகர்வர் தலையில்தான் விழும். இந்த யூபிஐக்கான கட்டணமும் அப்படி நுகர்வோரிடம் இறுதியில் ஏதோ வகையில் வசூலிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இன்றைக்கு இது பொதுமக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
அப்படியானால் UPI இலவசமாகவே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதில் எளிதானது அல்ல. இதற்கான கட்டமைப்பைப் பராமரிக்கப் பணம் தேவை. அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டால் அது மறைமுகமாக வரி செலுத்துபவர் தருவதாகத்தான் ஆகிறது. வியாபாரி கொடுத்தால் அவர் விலையை அதிகரிக்கலாம் அல்லது அவருக்கான லாபம் குறையலாம். வாடிக்கையாளர் தர வேண்டியது வந்தால் இந்த வசதியே வேண்டாம் என்று அவர் விலகிப் போய் விடலாம்.
ஆனால் இப்படி எல்லாம் கிடுக்கிப்பிடி போட்டால் நம்ம ஆட்கள் சும்மா இருப்பார்களா? கிஸ்தி, திறை, வரி, வட்டி! வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என்று கட்டபொம்மன் வசனத்தை வீராவேசமாகப் பேசிவிட மாட்டார்களா?
இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலேதானேய்யா கட்டணம். தர வேண்டிய பணம் எவ்வளவாக இருந்தால் என்ன? 1,999 ரூபாய்களாகப் பிரித்து அனுப்பிவிட்டால் போச்சு. 10,000 ரூபாய் கொடுக்க வேண்டுமா? 1,999 + 1,999 + 1,999 + 1,999 + 1,999 + 5 என்று ஆறு தவணைகளாகப் பிரித்து விட்டால் முடிந்தது. கட்டணமாவது ஒன்றாவது. இதற்கும் வடிவேலு வசனம்தான். யாரு கிட்ட?
உண்மையிலேயே இப்படி ஒரு செயலி வந்திருக்கிறதா? அது சரியாகச் செயல்படுகிறதா? அதை அரசாங்கம் தடை செய்யுமா என்பதையெல்லாம் இப்பொழுது பேசத் தேவையில்லை. விதிமுறை என்று வந்தால் அதை மீறாமல், அதே சமயம் முடிந்த அளவு வளைத்து தீர்வைக் கண்டுபிடிக்கும் கலை நம்ம ஆட்களுக்கா தெரியாது. இதில் என்ன நகைமுரண் என்றால் ஒரே ஒரு முறை பணம் செலுத்துவதற்குப் பதிலாக ஆறு முறை செலுத்த அந்தக் கட்டமைப்புக்கு அதிக அழுத்தத்தைதான் தரும்.
பொருளுக்கு மாற்றுப் பொருள் எனப் பண்டமாற்று முறையில் தொடங்கினோம். உலோகத்திற்கு மாறினோம். நாணயங்களைப் பயன்படுத்தினோம். நாணயங்களிலிருந்து காகிதப் பணத்திற்கு மாறினோம். அவையும் வேண்டாமென காசோலையாக்கினோம். கடனட்டைகளாக மாற்றினோம். இன்றைக்கு செல்பேசியும் க்யூஆர் கோட் அட்டையும் போதும் என்று வந்து நிற்கிறோம்.
இதற்கான கட்டமைப்புக்குப் பணம் வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்தச் செலவை யார் யார் எவ்வளவு சுமக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வி. வள்ளுவன் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று சொல்வது போல அனைவரும் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டுமோ என்னவோ.
ஆனால் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் பொழுது ஒன்று மட்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்பேசியும் கையுமாக இருக்கும் நுகர்வோரை மீண்டும் பை நிறையப் பணம் கொண்டு செல்ல வைத்துவிடக் கூடாது.
Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
